Tuesday, June 24, 2014

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் 4



இந்தப் பதிவின் முந்தைய தொடர்ச்சி 

வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்படுகின்ற, விமர்சனத்துள்ளாகின்ற இரண்டு கட்சிகள், ஒன்று திமுக மற்றொன்று காங்கிரஸ். இதே போல நடந்து முடிந்த தேர்தலில் வலைதளங்களைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு, அதன் நீக்கு போக்குகளை உணர்ந்து தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டவர் பிரதமர் நரேந்திரமோடி. 

நம்பமுடியாத அளவுக்கு ஓட்டு எண்ணிக்கையைப் பெற்ற இரண்டு கட்சிகள், ஒன்று அதிமுக மற்றொன்று பா.ஜ.க.  

இரண்டு கட்சிகளும் பெற்ற வாக்குகள் நூறு சதவிகிதம் அவர்களுக்கான ஆதரவு ஓட்டு அல்ல. மக்கள் மனதில் மாற்று கட்சியின் மேல் உருவான வெறுப்பும், எதிர்ப்பும் சேர்ந்து தான் இவர்களுக்கு இந்த அளவுக்கு அங்கீகாரத்தை கொடுக்க வைத்துள்ளது.

முதலில் காங்கிரஸ் கட்சியைப் பார்த்து விடலாம். 

இன்னமும் வயதானவர்கள் இருக்கும் வீடுகளில் சொல்லக்கூடிய ஒரு வாசகம் இது.

"உங்களுக்கெல்லாம் காங்கிரஸின் மரியாதை எங்கே தெரியப்போகின்றது? அடி உதை பட்டு ரத்தம் சிந்தி இந்த நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி என்று சரிவை நோக்கிச் சென்று மாநிலக் கட்சிகளைத் தலைதூக்கியதோ அன்றே இந்தியாவின் வளர்ச்சியும், கூட்டாட்சி தத்துவமும் கேள்விக்குறியாக மாறிவிட்டது" என்கிறார்கள். 

இன்னும் கொஞ்சம் எதார்த்தவாதியாக உள்ளவர்கள் மறக்காமல் ஒன்றைக் குறிப்பிடுகின்றார்கள். 

"ஒரு வேளை இத்தனை காலம் காங்கிரஸ் மட்டும் ஆட்சியில் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா என்ற நாடே இருந்துருக்காது. மாநில பிரிவினைகள் உச்சத்திற்குச் சென்று இந்நேரம் நாடு துண்டு துண்டாகச் சிதறிப் போயிருக்கும்." 

உண்மை தான். அதற்கு முன்னால் சில விசயங்களைப் பார்த்து விடலாம். 

நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் பதினேழரை லட்சம் வாக்குகள். இதை விடப் பத்து மடங்கு அதிகம் பெற்ற கட்சி அதிமுக. நேற்று முளைத்த தேமுதிக கூட மூன்று லட்சம் வாக்குகள் காங்கிரஸை விட அதிகம் பெற்றுள்ளது. 

ஏன் இந்த படுபாதாள வீழ்ச்சி? 

பொதுமக்கள் பட்ட பாடுகளை விட, ஒரு தொழில்துறையில் சம்மந்தப்பட்ட என்னைப் போன்றவர்களுக்கும், மிகப் பெரிய முதலீடு போட்டவர்களும் கடந்த பத்தாண்டுகளில் பெற்ற மனஉளைச்சல், அவமானங்கள், இழப்புகள் ஏராளமானது. 

இது தவிரத் தமிழர்கள் என்றாலே எட்டிக்காய் போலக் கசந்த கோமகன் வகுத்த வெளியுறவு கொள்கை, தொழில் கொள்கை, என்று எந்தப் பக்கம் பார்த்தாலும் ஏராளமான இழப்புகளை தந்தது. இது தவிர காங்கிரஸ் கட்சியின் மாற்றான் தாய் மனப்பான்மை ஒவ்வொரு தமிழர்களுக்கும் மனதிற்குள் வெறியை உருவாக்கியது. காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு கொள்கையும் தனிப்பட்ட நபர்களின் வளர்ச்சிக்கு உதவியதே தவிர நாட்டின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. 

கடைசியாக "பிரிட்டிஷ் வெள்ளையர்களிடமிருந்து பெற்ற சுதந்திர நாட்டை அமெரிக்க வெள்ளையிடம் மகிழ்ச்சியாக ஒப்படைப்பதே தனது கடமை" என்று மன்மோகன் மட்டுமல்ல ஒவ்வொருவருமே செயல்பட்டவர்கள். 

இன்று காங்கிரஸ் கட்சியில் அத்தனை பேர்களையும் மக்கள் குப்பை போலவே தூக்கி எறிந்து விட்டனர். 

நான் எனது கடைசி மின் நூலை எழுதி வெளியிட்ட போது பின்வருமாறு எழுதினேன். அது தான் நடந்துள்ளது. 

இன்னும் சில மாதங்களில் தற்போது ஆண்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் தெருவில் கிடக்கும் குப்பையாக மாறப் போகின்றது. இந்தப் பத்தாண்டுகளில் காங்கிரஸ் அரசாங்கம் மக்களுக்காகச் செய்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு செய்த கேடு கேட்ட சமாச்சாரங்களை மக்கள் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. 

இவர்கள் உருவாக்கி உள்ள ஒவ்வொரு பன்னாட்டு ஒப்பந்தங்களின் விளைவை நிச்சயம் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா மொத்தமும் உணரும். குடிக்கத் தண்ணீர் இருக்காது. மீதம் இருக்கும் விவசாயிகள் இந்த நாட்டிற்குப் பாரமாக இருப்பவர்கள் என்கிற நிலைக்கு மாறியிருப்பார்கள். பத்திரிக்கைகள் வாயிலாக வெளியே தெரிந்த மற்றும் தெரியாத விசயங்களைப் பற்றி "வெள்ளை அடிமைகள்" என்ற மின் நூலில் எழுதியுள்ளேன். 

ஆனால் இதனை விட மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்தியாவிற்குள் வர அனுமதி கொடுத்துள்ள திடீர் அமைச்சர் வீரப்ப மொய்லி (ஜெயந்தி நடராஜன் கையில் இருந்த சுற்றுச்சூழல் பொறுப்பு) செய்துள்ள காரியத்தின் பலனை அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு இந்தியனும் உணர முடியும். அதனைப் பற்றி இன்று வெளியான மின் நூலில் பேசியுள்ளேன்

காங்கிரஸ் கட்சியைத் தேர்ந்த நண்பர், மற்றும் வேறு சில கட்சிகளில் இருந்து கொண்டு நெருக்கமான தொடர்பில் இருந்த பல நண்பர்கள் நட்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டனர். காரணம் திரும்பத் திரும்ப உண்மையான விசயங்களை என் பார்வையில் பட்ட கருத்துக்களை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாற்று அரசியல் பார்வை கொண்டவர்களில் குறிப்பிட்ட சிலர் அழைத்து விவாதம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். 

நாம் கொண்ட வாழ்க்கை நெறிமுறைகளும், நாம் பார்க்கும் அரசியல் கட்சிகளின் கொள்கை சார்ந்த பார்வைகளும் வெவ்வேறு என்பதனை படித்தவர்களால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்பது தான் ஆச்சரியமாக உளளது.

அதனால் என்ன? எவரிடமும் அண்டிப்பிழைக்க அவசியமில்லாத வாழ்க்கை வாழ ஆசைப்படுபவர்களும், அப்படி வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையும் மற்றவர்களின் பார்வையில் வித்தியாசமாகத்தானே இருக்கும். 

எந்தத் தொடர் பதிவையும் பாதியில் நிறுத்தியது இல்லை. எந்த அளவுக்கு வேலைப்பளூ இருந்தாலும் என் கடமை என்பது எனக்குத் தெரிந்தவற்றை நான் புரிந்து கொண்டவற்றை என் மொழியில் அப்படியே ஆவணப்படுத்தி விட வேண்டும் என்பதே என் எண்ணம். 

குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியைப் பற்றித் தற்பொழுது வலைதளங்களில் வந்து உலாவி கொண்டிருக்கும் இளைஞர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகச் சுருக்கமாக எழுதி வைக்க விரும்புகினறேன்.  செத்த பாம்பு என்று ஒதுங்கி விடக்கூடாது. உள்ளே புதைத்தாலும் மீண்டும் எழுந்து விடககூடி வாய்ப்புள்ளது?  நரேந்திர மோடியின் ஒரு வருட ஆட்சிக்குப் பிறகே இவரின் தகுதியும் தராதரமும் விவாதிக்க வேண்டிய விசயமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.  காரணம் பாழடைந்த வீட்டை சுத்தம் செய்து மறுபடியும் குடிபுகவே இந்த ஒரு வருடம் ஆகக்கூடும். 

இது தவிர நடந்து கொண்டிருக்கும் ஈராக் பிரச்சனை இந்தியாவையும் தாக்கக்கூடிய ஆபத்துள்ளது.  மோடியின் உறுதியான முடிவைப் பொறுத்து பாகிஸ்தான் நாட்டின் தலைவிதி மாறக்கூடும்.  இது குறித்து விரிவாக விரைவில் பேசுவோம்.

நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு எப்படி இந்தியர்களின் கல்வி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றினார்களோ? அதைப்போல அரசியல் கட்சியும் எப்படி இருக்க வேண்டும் என்று வித்தியாசமான சிந்தனை ஒரு வெள்ளையர் மனதில் தோன்றியது. 

இந்திய சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டன் அரசாங்கத்திலிருந்து ஓய்வு பெற்ற ஐ.சி.எஸ் அதிகாரியான ஆலன் ஆக்கோடவியன் ஹ்யூம் என்பவருடைய சிந்தனையில் உருவான கட்சி (அமைப்பு) தான் இந்தக் காங்கிரஸ் கட்சி. 

சற்று விபரமாக அடுத்தப் பதிவில் பார்ப்போம். 

20 comments:

மகிழ்நிறை said...

எதிரியின் பலம் அறிந்து வீழ்த்த வேண்டும் என்பதற்காக அவர்கள் வரலாறு சொல்ல வருகிறீர்களோ ? அசத்தலான ஆரம்பம் !

தாராபுரத்தான் said...

ஆவலோடு அடுத்தபதிவை எதிர் நோக்கு கிறேன்

ஊரான் said...

காங்கிரைப் பற்றி மிகச் சுருக்கமாக "இப்படியாக இவன் ஒரு பத்து ஆண்டுகாலம் “நாடு வல்லரசாகும்! நாடு வல்லரசாகும்!” என குறி சொல்லிப் பார்த்தான். நாடு வல்லரசு ஆவதற்குப் பதிலாக இவனது மாட்டுக்கு வைக்கோலும் தவிடும் - புண்ணாக்கும் வைத்தவர்கள் மட்டுமே காடுகளையும், கனிம வளங்களையும் கபளீகரம் செய்தார்கள்; ராசாவானார்கள; மாறா வலிமை பெற்றார்கள்.”

குடுகுடுப்பைக்காரனைவிட பூம்பூம் மாட்டுக்காரனே மேல்!
http://hooraan.blogspot.com/2014/06/blog-post_21.html

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் அறிய காத்திருக்கிறேன்...

'பரிவை' சே.குமார் said...

நிறைய அறியத் தந்தீர்கள் அண்ணா...
இன்னும் ஆவலோடு காத்திருக்கிறேன்...

கரந்தை ஜெயக்குமார் said...

அடுத்தப் பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா

எம்.ஞானசேகரன் said...

தமிழ்நாட்டு மக்கள் எப்பவோ தெளிவாகி காங்கிரஸை ஒதுக்கிவைத்து விட்டார்கள். அதனால்தான் அது திராவிட கட்சிகளின் மீது சவாரி செய்து கொண்டிருந்தது. ஆரம்பிச்ச உடனே நிறுத்திட்டீங்களே! அடுத்த பதிவு வரை காத்திருக்கணுமா!?

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல ஆய்வு! விளக்கங்களுடன் பல செய்திகள்....இன்னும் அறிய ஆவல்!

அது சரி தாங்கள் மதுரைத் தமிழனின் வலையில் அதாங்க...தொடர் பதிவில் கேள்விகளுக்குள் சிக்க வில்லையா? வாருங்களேன் பதில்களுடன்! தங்கள் பதில்களை அறிய மிகவும் ஆர்வமுடன் இருக்கின்றோம்! அறிவு பூர்வமான பதில்களாக இருக்குமே என்றுதான்.......

Rathnavel Natarajan said...

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் 4 = திரு ஜோதிஜி அவர்களின் அருமையான அரசியல் பதிவு/ அலசல்.
எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள். நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி.

srinivasan said...

அரசியிலில் ஆதாயம் தேடாத எந்த கட்சியும் இல்லை.சிலர் அள்ளி எடுப்பதில் கிள்ளி கூட போடா மாட்டார்கள்.அந்தந்த கட்சி உறுப்பினர்கள் கழுதையை நிறுத்தினாலும் அந்த கட்சிக்கு தான் வாக்கு அளிப்பர் .சாமானிய மக்கள் தான் எந்த கட்சி என்று நிர்ணயம் செய்கிறார்கள்.அனைவரும் கட்டாயம் வாக்கு அளிக்க வேண்டும் என்று சட்டம் வந்தால் நிலைமை இன்னும் மேம்படும்.
அடுத்தடுத்த ஊழல்கள் தான் காங்கிரசின் அடி.அது நடைபெற்ற பிறகும் கூட சரியான நடவடிக்கைகள் எடுக்காமல் மூடி மறைப்பதை தான் காங்கிரஸ் செய்தது.ஆனால் சொல்வது காமராஜர் ஆட்சி அமைப்போம் எப்ப ?

ஜோதிஜி said...

இந்த பாராளுமன்றத் தேர்தலுக்காக திமுக வசூலித்த பணம் அடுத்து வருகின்ற சட்டமன்றத்திற்கு என்று தூங்க வேண்டிய இடத்தில் அந்தப்பணம் தூங்கிக் கொண்டிருக்கின்றது. வசூலித்தவர்களும், தேர்தலில் நின்றவர்களும் பாவம். கட்டாய வாக்களிப்பது என்பது என்றைக்கு வருகின்றதோ அன்று தான் இந்திய ஜனநாயகத்திற்கு பாதி உயிர் வரும். வருகைக்கு நன்றி சீனிவான்.

ஜோதிஜி said...

நன்றி அய்யா.

ஜோதிஜி said...

இந்த பதிலைக் கண்டவுடன் என் கடமையென அதைக்கருதி எழுதி வெளியிட்டு உள்ளேன். உங்கள் கருத்தறிய ஆவல்.

ஜோதிஜி said...

தொடரும் உங்கள் வாசிப்புக்கு, உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி கவிப்ரியன்.

ஜோதிஜி said...

வருகைக்கு மிக்க நன்றி.

ஜோதிஜி said...

வாங்க குமார். மிக்க நன்றி.

ஜோதிஜி said...

நன்றி தனபாலன்.

ஜோதிஜி said...

எழுத்துப் பயணத்தில் குறிப்பிடத்தக்க உயரத்திற்கு வளர்ந்தமைக்கு என் வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

அய்யா நலமா? வருகைக்கு நன்றி.

ஜோதிஜி said...

நீங்க சொன்னது உண்மை தான். காங்கிரஸ் என்ற கட்சியில் பலமே (அன்று முதல் இன்று வரை) கூட்டணி சேராமல், சேர்ந்தாலும் நீடிக்காமல் இருப்பது போன்ற பலமற்ற எதிர்க்கட்சிகளால் மட்டுமே இந்தியாவில் காங்கிரஸ் கட்சி இன்னமும் உயிர்பிழைத்துள்ளது.