Thursday, June 13, 2013

கூடங்குளம் - இன்னமும் என்ன தான் எதிர்பார்க்கின்றாய்?

கூடங்குளம் அணு உலை சிறந்தது என்றும்,அணு உலைக்கு தன் ஆதரவு என்றும் எழுதிய ஒருவருக்கு நான் எழுதிய மாற்றுக் கருத்து !

வணக்கம்.

கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவான உங்கள் கருத்துக்களை இப்போது தான் நான் படிக்க நேர்ந்தது. மத்திய மாநில அரசுகள் அணு உலைக்கு ஆதரவாக சொல்லும் அதே காரணங்களை அச்சு பிறழாமல் அப்படியே ஒப்பித்து இருப்பதை தாண்டி,அணு உலை குறித்து எந்த அளவுக்கு நீங்கள் படித்தீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை.

ஒருவேளை நீங்கள் அப்படி படித்து இருப்பீர்களானால்,அணு உலை குறித்த ஒரு பரந்து பட்ட பார்வையை, நீங்கள் முன் வைத்து இருப்பீர்கள். நிறை குறைகளை விவாதித்து, அதன் பின்னர் நிறைகளை முன் வைத்து முடிவுரை எழுதுவது தான் ஒரு நியாயமான வாதத்தின் தன்மையாக இருக்க முடியும்.

உங்களோடு சில கருத்துக்களை விவாதிக்க விரும்புகிறேன். 

அணு மின்சாரம் தான் இந்தியாவின் மின் தேவைக்கு ஒரே தீர்வு என்று அரசு சொன்ன அதே தீர்வை நீங்களும் முன் மொழிந்து இருக்கிறீர்கள். அதை நியாயப்படுத்தும் விதமாக அணு உலை கப்பலுக்கு முப்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எரி பொருள் நிரப்பினால் போதும் என்ற உங்களின் ஒற்றை உதாரணமே போதுமானது.

அணு மின்சாரம் ஒன்று தான் இந்தியாவுக்கான தீர்வு என்று சொல்லும் வேளையில் மாற்று வழி மின்சார முறைகளை எல்லாம் இந்தியா முயற்சித்து பார்த்து இருக்கிறதா? உலகில் அணு உலை மின்சாரத்தை கையிலெடுக்காமல் வளர்ந்த நாடுகள் எதுவும் இல்லையா? என்பதையும் நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

இதோ அணு மின்சாரத்தை கையிலெடுக்காத வளர்ந்த நாடுகள் உங்கள் பார்வைக்கு:

1.ஆஸ்திரேலியா
2.ஆஸ்திரியா
3.அயர்லாந்து
4.நியூசிலாந்து
5.இத்தாலி
6.ஸ்பெயின்
7.கிரீஸ்
8.பெரு

ஆச்சர்யமான செய்தி என்னவென்றால் யுரேனியத்தை அதிக அளவில் தன்னகத்தே கொண்டுள்ள ஆஸ்திரேலியாவில் அணு உலைகளே இல்லை என்பது தான். செலவு குறைந்த மின்சாரம், இயற்கையை மாசு படுத்தாத மின்சாரம், எந்த ஆபத்துக்களும் இல்லாத மின்சாரம் என்றால் ஏன் அவர்கள் அணு உலைகளை நிறுவுவதில்லை?

மக்கள் தொகை குறைவு அல்லது அவர்களுக்கான மின்தேவை குறைவு என்றெல்லாம் காரணங்கள் சொல்லலாம். ஆனால் நல்ல பொருள் குறைவான விலையில் கிடைத்தால் யார் தான் முயற்சி செய்ய மாட்டார்கள்.?ஆனாலும் அவர்கள் செய்யவில்லை. காரணம் அணு மின்சாரம் செலவு குறைந்த மின்சாரமும் அல்ல. பாதுகாப்பானதும் அல்ல என்பதே உண்மை.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அணு உலைகளை வைத்திருக்கிறோம் என்று பெருமை பீத்தி கொள்ளும் இந்தியா, இன்றைக்கு மொத்த மின் தேவையில் எத்தனை விழுக்காட்டை தயாரிக்கிறது என்றால் வெறும் 3 விழுக்காடு மின்சாரம் மட்டுமே..

எதற்கெடுத்தாலும் ஜெர்மனியை பாருங்கள், ஜப்பானைப் பாருங்கள் என்று ஒப்பிட தொடங்கும் நாம் ஏன் அணு உலை விடயத்தில் மட்டும் அந்த நாடுகளோடு ஒப்பிட மறுக்கிறோம்.

ஜப்பானின் புகுஷிமா விபத்துக்கு பின்னர் பல்வேறு நாடுகள் தங்கள் அணு உலைகளை 2020 க்குள் கை விட போவதாக வெளிப்படையாய் அறிவித்து விட்டன. பல நாடுகள் மாற்று வழி மின்சார முறைகளை இன்னும் தீவிரப்படுத்த முடிவு செய்து விட்டன. நாம் மட்டும் ஏன் இந்த அணு உலை விபத்துக்களில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்ளவதில்லை.

ஜெர்மானியர்கள்,ஜப்பானியர்களை விட நாம் சிறந்த விஞ்ஞானிகளை கொண்டவர்களா? இல்லாவிட்டால் உலகுக்கே தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்பவர்களா? பிறப்பு முதல் சுடுகாடு வரை ஊழல்கள் செய்யாதவர்களா? எதை வைத்து நம்புவது எல்லாம் பாதுகாப்பானதென்று? தவறுகள் நிகழாதென்று?

புகுஷிமா விபத்தை பார்த்து அணு உலைகளை கை விட முன் வந்த நாடுகள்:

1.பெல்ஜியம்
2.ஜப்பான்
3.டென்மார்க்
4.ஜெர்மனி
5.ஸ்காட்லாந்து
6.ஸ்வீடன்

புகுஷிமா விபத்தை பார்த்தவுடன் ஜெர்மனியின் அதிபர் சொன்ன வார்த்தை 2020 க்குள் எல்லா அணு உலைகளையும் மூட போகிறோம். இதை சாதாரண விடயமாக நாம் பார்க்க இயலாது.காரணம் அணு உலைகள் மூலமாக அதீத பொருள் ஈட்டும் நாடு ஜெர்மனி. உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் அணு உலைகளில் ஜெர்மனியின் சீமன்ஸ் அணு உலைக்கும் முக்கிய பங்கு உண்டு.இது அந்த நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் ஒரு காரணி.

இது ஒரு புறம் என்றால் சீமன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் அதிபர் இப்படி சொல்லி இருக்கிறாரே என்று கருத்து கேட்ட பொழுது அவர் சொன்ன பதில்,இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். வியாபார இழப்பு என்றாலும் கூட மக்கள் தான் எங்களுக்கு முக்கியம் என்றார். நம் நாட்டில் அரசு அப்படி ஒரு முடிவு எடுத்தால்(எடுக்காது என்பது வேறு) இந்த தேசத்தை ஆளும் பெருமுதலாளிகளான டாடாவோ, அம்பானியோ சும்மா விட்டு விடுவார்களா? எவன் செத்தால் எனக்கென்ன என்று அரசாங்கத்தை மிரட்டும் போக்கை தான் நாம் பார்க்க இயலும். உலக நாடுகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.

அணு மின்சாரம் தான் ஒரே தீர்வு என்று சொல்லும் இந்தியா மாற்று மின்சார வழிமுறைகளை முயற்சித்து பார்த்திருக்கிறதா? மாற்று மின்சாரத்தின் நிறை குறைகளை முன் வைத்து அதற்கான தீர்வை எட்ட முயற்சித்து இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். காற்றாடி மின்சாரம் மட்டும் விதி விலக்கு.

ஆனால் அணு உலைகளை பயன்படுத்தும் உலக நாடுகள் கூட மாற்று வழி மின்சாரம் மூலமாக ஒரு கணிசமான அளவுக்கு தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. இன்று நேற்றல்ல கடந்த 50 ஆண்டுகளாகவே அவர்கள் இதை தொடர்கிறார்கள். ஆனால் காற்றாடி மின்சாரத்தை தவிர வேறு எந்த மாற்று வழி மின்சாரத்தையும் இந்தியா பெருமளவில் முயற்சிக்கவில்லை.

மாற்று மின்சார வழி முறைகள் என்ன?

1. சூரிய மின்சாரம்
2. காற்றாடி மின்சாரம்
3.கடல் அலை மின்சாரம்
4.உயிரியல் கழிவு மின்சாரம்
5.பூமிக்கடியில் வெப்ப பாறைகளில் இருந்து மின்சாரம்
6. கடைசியாக இதில் சிறுநீர் மின்சாரமும் தற்போது சேர்ந்து இருக்கின்றது.

சூரிய மின்சாரம்:

வருடத்தின் பாதி நாட்கள் மட்டுமே சூரிய ஒளியை பார்க்க கூடிய மேற்கத்திய நாடுகள் கூட, சூரிய ஒளி மின்சாரத்தை கடந்த 50 ஆண்டுகளாக பெருவாரியாக உற்பத்தி செய்து வரும் வேளையில் வருடம் முழுக்க சூரியனை பார்க்கும் நாம் இன்று வரை 50 MW ம்,100 MW மாக தான் சூரிய ஒளி மின்சாரத்தை தயாரித்து கொண்டிருக்கிறோம்.

1. அமெரிக்காவின் நெவடாவில் 1980 இல் 350 MW மின்சாரத்தை ஒரே இடத்தில தயாரிக்கும் மிகப்பெரிய சூரிய ஒளி மின் நிலையத்தை அமெரிக்கர்கள் கட்டி முடித்திருக்கிறார்கள்.

2. இன்று கலிபோர்னியாவில் 968 MW மின்சாரத்தை ஒரே இடத்தில தயாரிக்கும் மிகப்பெரிய சூரிய ஒளி மின் நிலையத்தை கட்டிக்கொண்டும் இருக்கிறார்கள்.

சூரிய மின்சாரம் அதிகம் தயாரிக்கும் நாடுகள் ஒரு பார்வை:

1. ஜேர்மனி 24,875 MW
2.ஸ்பெயின் 4,214 MW
3.ஜப்பான் 4,700 MW
4.இத்தாலி 12,764 MW
5.அமெரிக்கா 4,200 MW
6.செக் குடியரசு 1,960 MW
7.பிரான்ஸ் 2,831 MW
8.சீனா 2,900 MW
9.பெல்ஜியம் 1,812 MW

இந்தியா தயாரிக்கும் சூரிய மின்சார அளவு என்னவென்று தெரியுமா?
வெறும் 300 MW. மேலே சொல்லப்பட்ட சூரிய மின்சார அளவுகள் அந்தந்த நாட்டின் மின்சார தேவையில் 10 விழுக்காடு அளவுக்காவது அவர்கள் தேவையை பூர்த்தி செய்யும் வேளையில்,நாம் கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்ற அளவில் தான் சூரிய மின்சாரத்தை தயாரிக்கிறோம்.

ஏன் நாம் இந்த முயற்சிகளை செய்யவில்லை என்று கேட்பீர்களானால் சொல்லும் காரணங்கள் எல்லாம் சிறு பிள்ளைகள் பள்ளிக்கு வராத போது சாக்கு போக்காக சொல்லும் வயிற்று வலி காரணங்கள் போல தான் இருக்கும்..

இந்த திட்டங்களுக்கு அதிக செலவு ஆகும் என்று சொல்வார்களேயானால் ஊழல்களில் 1 லட்சம் கோடி, 2 லட்சம் கோடி என்று லவட்டுவதை விடவா அதிக செலவு ஆகி விடபோகிறது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

ஜெர்மனி அடுத்த 10 வருடங்களுக்குள் தன் 24 விழுக்காட்டு மின்சாரத்தை சூரியசக்தியிலிருந்து பெற போவதாக அறிவித்திருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாண அதிபர் அடுத்த 5 ஆண்டுகளில் 33 விழுக்காடு மின்சாரத்தை சூரிய ஆற்றலில் இருந்து பெற போவதாக அறிவித்து இருக்கிறார். அவர்களுக்கெல்லாம் சாத்தியம் என்றால் நமக்கு மட்டும் ஏன் சாத்தியமில்லை? 

ஜியோ தெர்மல் மின்சாரம்:

பூமிக்கடியில் இருக்கும் பாறைகளின் வெப்பத்தை கொண்டு தயாரிக்கும் ஜியோ தெர்மல் மின்சாரம் தயாரிக்கும் நாடுகளை இங்கு காணலாம்.

1. அமெரிக்கா 3086 MW 
2. பிலிப்பைன்ஸ் 1904 MW
3. இந்தோனேசியா 1197MW 
4. மெக்சிகோ 958 MW
5. இத்தாலி 843 MW
6. நியூசிலாந்து 628 MW 
7. ஐஸ்லாந்து 575 MW
8. ஜப்பான் 536 MW

ஜியோ தெர்மல் மின்சாரத்தில் இந்தியா குறித்த தகவலே இல்லை..

காற்றாடி மின்சாரம்:

காற்றாடி மின்சாரம் அதிகம் தயாரிக்கும் நாடுகளையும் அவை தங்கள் நாட்டின் மொத்த மின் தேவையில் எத்தனை விழுக்காட்டை இதன் மூலம் பெறுகிறார்கள் என்பதையும் கீழே காணலாம். 

1.சீனா 62,733 MW (26.3%)
2. அமெரிக்கா 46,919 MW (19.7%)
3. ஜேர்மனி 29,060 MW (12.2 %)
4. ஸ்பெயின் 21,674 MW (9.1 %)
5. இந்தியா 16,084 MW (6.7%)

இவை மட்டுமல்லாமல் கடல் அலை மின்சாரம், இயற்கை எரிவாயுவிலிருந்து மின்சாரம் என்று பல்வேறு மாற்று வழி மின்சாரங்களை உலக நாடுகளில் எல்லாம் பார்க்கும் பொழுது இந்தியா இவை குறித்து கவலைப்பட்டதாகவோ , அக்கறை காட்டியதாகவோ தெரியவில்லை.

அடுத்து அணு உலை மின்சாரத்திற்கு வருவோம்:

அணு உலை மின்சாரம் குறித்து விவாதிக்கும் வேளையில் அதன் அணு கதிர் வீச்சின் பாதிப்புகளையும், அணு உலை விபத்துக்களையும் நாம் மறந்து விட கூடாது.

உலகில் பாதுகாப்பான அணு உலை எதுவும் உண்டா?

உலகில் பாதுகாப்பான அணு உலை என்ற ஒன்றும் கிடையாது.

கூடங்குளம் அணு உலை குறித்த சில டெக்னிகல் விடயங்களை பகிர்ந்து இருந்தீர்கள்.அதவாது சுவரின் தடிமன் 6 மீட்டர் என்றும், தானே இயங்கும் குளிர்விப்பான் இருக்கிறது என்றும், சுனாமி வந்தாலும் தாக்காத அளவுக்கு உயரமான இடத்தில அணு உலை இருப்பதாகவும் குறிப்பட்டு இருந்தீர்கள்.

எல்லா அணு உலைகளுக்கும் இவை பொதுவான விதிகள். உலகில் கட்டப்படும் எல்லா அணு உலைகளும் இது போன்ற பல விதிகளை கொண்டே கட்டப்பட்டு இருக்கும்.

கூடங்குளம் அணு உலை என்பது புத்தம் புது டெக்னாலஜியா?

கூடங்குளம் ஒப்பந்தம் போடப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. மறு ஒப்பந்தம் போடப்பட்டு 15 ஆண்டுகள் ஆகின்றன. அப்படியானால் இது புத்தம் புது டெக்னாலஜி தானா? இதற்கிடைப்பட்ட 25 ஆண்டுகளில் அணு உலை தொழில் நுட்பம் வளரவே இல்லையா? சீமன்ஸ், அரேவா , ஜெனரல் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனங்கள் புது அணு உலைகளை தயாரிக்கவே இல்லையா கடந்த 25 ஆண்டுகளில்?

கூடங்குளம் அணு உலை அமைந்திருக்கும் இடம் நிலநடுக்கம் வராது என்று கூறி இருக்கிறீர்கள். அது மட்டுமல்லாமல் சுனாமி வந்தாலும் தாங்கும் அளவுக்கு திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ளதாக சொல்லி இருக்கிறீர்கள். நம்பக்கூடிய விடயமா இது?

2004 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியர்களுக்கு சுனாமி என்ற ஒன்று தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே! அப்படி ஒரு பேரழிவை நாம் அறிந்து உணர்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே கூடங்குளம் அணு உலை கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.. அப்படியானால் இந்திய விஞ்ஞானிகளும், இந்திய அரசும் சொல்லும் சுனாமியை கணக்கிட்டே நாங்கள் அணு உலை கட்டினோம் என்னும் வாதத்தை நம்புவதற்கு நீங்கள் தயரா?

100 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் கூட கியாரண்டி வாரண்டி கேட்டு வாங்குகிறோம். கூடங்குளம் அணு உலை தான் உலகில் சிறந்த அணு உலை என்று எல்லா சான்றிதழ்களையும் நீங்கள் தான் அளிக்கிறீர்கள். அப்படியானால் இழப்பீடு என்ற வார்த்தை மட்டும் ஏன் இந்திய ரஷ்ய அரசுகளுக்கு கசப்பாக இருக்கிறது?உங்கள் பொருள் மீது நம்பிக்கை இருந்தால் இந்த இழப்பீடு குறித்த விவாதமே நடந்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே.

அப்படியானால் உங்கள் அணு உலை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? அல்லது அணு உலை விபத்துக்கள் நடக்கும் வாய்ப்பை உணர்ந்து நான் பொறுப்பல்ல என்று ஓடி ஒளிந்து கொள்வது தான் உங்கள் திட்டமா?

விபத்தும் அதற்கான இழப்பீடும் என்று சொன்னவுடன் ஞாபகத்துக்கு வருவது போபால் விசவாயு விபத்து. விபத்து நடைபெற்று 25 ஆண்டுகள் கடந்து விட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு என்று ஒரு பைசா கூட இன்று வரை அவர்களுக்கு கிடைக்கவில்லை. இன்று வரை அந்த மண்ணில் அங்கவீனமாக பிறக்கும் குழந்தைகள் தான் அந்த விபத்தின் கொடூரத்துக்கு சாட்சி.

இந்திய விஞ்ஞானிகள் எல்லாம் மிகச்சிறந்தவர்கள் என்றால் ஏன் இந்தியா இன்னும் பிரான்சிலும், ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் இருந்து அணு உலைகளை வாங்க வேண்டும். அணு தொழில் நுட்பத்தில் 50 ஆண்டுகள் அனுபவம் உள்ள இந்தியா ஏன் சொந்தமாக ஒரு அணு உலை தயாரிக்க இயலவில்லை.? வெளிநாடுகளில் இருந்து அணு உலைகளை இறக்குமதி செய்துவிட்டு,என்ன பிரச்சினை என்றாலும் அவனிடமே தொலைபேசியில் உதவி கேட்கும் மகத்தான வேலையை மட்டும் தான் நம் வியத்தகு விஞ்ஞானிகள் செய்வார்கள்.

இங்கே அப்துல் கலாம் என்ற மகத்தான விஞ்ஞானியை பற்றி சொல்லியே ஆக வேண்டும். குழந்தை மருத்துவம் படித்தவர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? அல்லது நரம்பு மண்டலத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்வார்களா? ஆனால் நம் அப்துல் கலாமுக்கு மட்டும் இவை எல்லாம் சாத்தியப்படும். காரணம் அவர் உலக மேதாவி.

ராக்கட் விஞ்ஞானியான கலாம் அணு உலைக்கு சான்றிதழ் வழங்குகிறார் என்றால் நம்ப முடியுமா? கட்டடம் கட்டும் பொறியாளர் பாலம் குறித்து தான் சான்றிதழ் வழங்கலாமே ஒழிய ஒரு மின்சார துறைக்கு சான்றிதழ் வழங்க முடியாது.ஆனால் இவை எல்லாம் இந்தியாவில் சாத்தியம்.? காரணம் விஞ்ஞானி என்பவர் என்ன சொன்னாலும் அதை நம்புவதற்கு ஒரு கூட்ட மக்கள் தவமிருக்கிறார்கள்,என்பதால் தான் அவரும் சளைக்காமல் சொல்கிறார்.

பொதுவாக அரசு துறையில் வேலை செய்பவர்கள், வேலை செய்தவர்கள், இன்னும் வேலை செய்ய ஆசைப்படுபவர்கள் ஒரு நாளும் அரசாங்கத்தை எதிர்த்து கருத்து சொல்லமாட்டார்கள்.அதிலும் குறிப்பாக விஞ்ஞானிகளாக இருப்பவர்கள் அரசாங்கத்தை சார்ந்தே இருப்பார்கள்.

கலாம் அரசு பதவியில் இருந்து ஒய்வு பெற்றாலும் கூட இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டவர் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.இதை அவர் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார். போட்டி இல்லை என்றால் மட்டுமே நான் குடியரசு தலைவர் பதவிக்கு நிற்பேன் என்று..இப்படி அரசியல் பதவிகளுக்கு ஆசைப்படும் மனிதனிடம் நாம் எந்த நியாயங்களை மக்களுக்காக எதிர் பார்க்க இயலும்?

கலாம் கலாம் என்று கோஷமிடுபவர்களிடம் எனக்கு ஒரு கேள்வி.. குடியரசுத் தலைவராக இருந்த கலாமின் சாதனைகளை யாராவது பட்டியலிட இயலுமா?

ஆனால் இதை எல்லாம் தாண்டி இந்திய அணுசக்தி விஞ்ஞானிகளாக வேலை செய்து ஒய்வு பெற்ற சிலர்அணு உலைக்கு எதிரான கருத்துக்களை பதிந்து இருக்கிறார்கள். பெயர் பட்டியலும் ,காணொளிகளும் வேண்டுமானால் என்னிடம் கேளுங்கள் நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

இங்கு ஈமு கோழியில் நஷ்டம் என்று தெரிந்தாலும் கூட அதை விளம்பரம் செய்பவன் சரத்குமார், சத்யராஜ் என்றால் மூளை மழுங்கி விலை கொடுத்து வாங்கி வீணா போகிற கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதால் பிரபலம் இல்லாதவர்களின் நியாயமான கருத்துக்கள் கூட கவனிப்பாரற்று போய் விடுகிறது..

இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குனர் சாந்தா அம்மையார். அணு உலையினால் எந்த புற்று நோயும் வராது என்று இந்த அம்மையாரே அரசு விளம்பரத்தில் நடித்து இருக்கிறார். ஆனால் அவர் நடத்தும் அடையார் புற்று நோய் மருத்துவமனை இணைய தளத்தில் போய் பார்ப்பீர்கள் என்றால் உண்மை புரிந்து விடும். கதிரியக்கம் புற்று நோய்க்கான முதன்மை காரணம் என்ற செய்தியை நீங்கள் பார்க்க இயலும்.

மொத்தத்தில் இவர்கள் எல்லாம் மனசாட்சியற்றவர்கள். என்ன நிர்பந்தம் என்றாலும் கூட உண்மைக்கு புறம்பாக யார் பேசினாலும் ஏற்க இயலாது.

அரசாங்கத்தின் பொய்களை எல்லாம் இன்னும் உணர வேண்டுமானால் நடைமுறையில் இருக்கும் செயற்கை மின்வெட்டு ஒன்றே போதுமானது. ஆரம்பத்தில் கூடங்குளம் வந்தால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று பேசியவர்கள் அணைத்து போராட்டங்களுக்கு பின்னர் இப்போது சொல்கிறார்கள் என்ன வந்தாலும் இன்னும் ஓராண்டுக்கு மின் பிரச்சினை தீராது என்கிறார்கள். எது உண்மை? எது பொய்?

இப்படிப்பட்ட அரசாங்கத்தையும், உண்மைக்கு புறம்பாக கூடங்குளம் அணு உலை தான் உலக தரம் என்று கூவும் கலாம்,சாந்தா போன்றவர்களின் கூற்றையா நம்ப சொல்கிறீர்கள்?.

உலகில் நடந்த மிகப்பெரிய அணு உலை விபத்துக்கள் என்ன?

உலகம் மூன்று அணு உலை விபத்துக்களை பெரும் விபத்துக்களாக குறிப்பட்டு வைத்துள்ளன.

1.செர்நோபில் அணு உலை விபத்து(ரஷ்யா).
2.மூன்று மெயில் தீவு அணு உலை விபத்து(அமெரிக்கா)
3.புகுஷிமா அணு உலை விபத்து (ஜப்பான்)

செர்நோபில் அணு உலை விபத்து 1986 ஆம் ஆண்டு நடைபெற்றது.

செர்நோபில் அணு உலை விபத்தில் அதிகம் பாதிப்புக்கு உள்ளான ரஷ்யாவிலும்,உக்ரைனிலும்,பெலாரசிலும் 1986 முதல் 2004ஆம் ஆண்டு வரை கதிரியக்க புற்று நோயால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒன்பது லட்சத்து எண்பத்து ஐந்தாயிரம் என்று குறிப்பிட்டு உள்ளார்கள்(நியூயார்க் அகாடமி சயின்ஸ்)

அதே போலவே கிரீன் பீஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் வெளியிட்ட புள்ளி விபரத்தில் கதிரியக்க புற்று நோயால் இறந்தவர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சம் என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.

இந்த புள்ளி விவரங்கள் ஆதாரமற்றவை என்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 என்றும் 50 என்றும் அணு உலைக்கு ஆதரவான பத்திரிக்கைகள் எழுதுகின்றன..

அறிவார்ந்த பெருமக்கள் மிக எதார்த்தமாக சிந்திக்க வேண்டும். சாதாரணமாக நம் ஊர்களில் நடக்கும் பட்டாசு விபத்துக்கும், தீ விபத்துக்கும் சாகும் மக்களின் எண்ணிக்கையே நூற்று கணக்கில் இருக்கும் போது, உலகம் பதிவு செய்திருக்கும் மிக பெரிய அணுவிபத்தான செர்நோபில் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 30 என்று சொன்னால் நம்ப முடியுமா??

மூன்று மைல் தீவு அணு உலை விபத்திற்கு பின்னர் அமெரிக்காவில் எந்த அணு உலைகளும் கட்டப்பட வில்லை(மார்ச் 28,1979) 

புகுஷிமா விபத்தையும் அதன் விளைவுகளையும் நாம் இன்று வரை செய்திகளில் படித்து கொண்டே இருக்கிறோம்.

ஒரு செய்தியை மட்டும் நான் நான் வலியுறுத்த விருபுகிறேன். 

அணு உலை வைத்திருக்கும் வளர்ந்த நாடுகளில் எல்லாம் விபத்துக்கள் நடந்தால் உடனே மக்களை இடப்பெயர்வு செய்வதற்கும், பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் அங்குள்ள ராணுவம் மக்களை மீட்கும் பணியில் மின்னல் வேகத்தில் செயல்படும் என்பதையும் நாம் மறந்து விட இயலாது.

செர்நோபில் மக்களின் அங்கவீன புகைப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்களா என்று எனக்கு தெரியவில்லை. அதை எல்லாம் பாருங்கள். இல்லா விட்டால் அந்த புகைப் படங்களை நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

இங்கே ஒரு தீவிரவாத தாக்குதல் என்றால் கூட இந்திய ராணுவம் பயணிகள் விமானத்திலும், பொது மக்களின் பேருந்திலும் பயணித்து விபத்து பகுதிக்கு வந்து சேர 5 மணி நேரம் ஆகிவிடுகிறது..ஒருவேளை அணு உலை விபத்து நடந்தால்?.

அணு உலை விபத்து நடந்தாலும் நடக்காவிட்டாலும் அன்றாட வாழ்வில் அணுக்கதிர் வீச்சால் வரும் வியாதிகள் பின்வருமாறு.

1.கதிரிக்க புற்று நோய்,
2.அங்கவீனமான குழந்தைகள்
3. இரத்த அணுக்களை சிதைப்பதால் நோய் எதிர்ப்பு தன்மை அற்று போதல்
4. இரத்தம் உறையாத தன்மை
5. வாந்தி மயக்கம் தலைவலி மயக்கம் காய்ச்சல்.
6. உடலை பலவீனப்படுத்தி உயிர் குடிக்கும் தன்மை.
7. சரும வியாதிகள்.

ஒரு அணு உலை விபத்து என்பது அணு குண்டு விபத்தை போல 400 மடங்கு வீரியம் வாய்ந்தது என்று ஆய்வுகள் சொல்கின்றன.

அணு மின்சாரம் செலவு குறைந்த மின்சாரமா?

நிச்சயமாக அல்ல. அணு உலையை கட்டுவதற்கு செலவாகும் தொகையை விட அணு உலையை மூடுவதற்கும், அணு கழிவுகளை பாதுகாப்பதற்கும் ஆகும் செலவு என்பது பல மடங்கு ஆகும்.

அணு உலைகளின் ஆயுட்காலம் என்பது முப்பது முதல் ஐம்பது ஆண்டுகள்.அதன் பின்னர் அதை மூடியாக வேண்டும். அணு மின்சார கழிவுகளை பாதுகாக்க இது வரை சரியான வழிகளை உலகம் கண்டு பிடிக்கவில்லை என்பதே உண்மை. அணுக் கழிவுகளின் அரை ஆயுட்காலம் என்பது முப்பதாயிரம், நாற்பதாயிரம் ஆண்டுகள் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. 50 ஆண்டுகள் வரை பாதுகாக்கும் உத்திகளை தான் உலக நாடுகள் தங்கள் கையில் வைத்திருக்கின்றன.

அடுத்த தலைமுறை குறித்து சிந்திக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு சிதைப்பட்ட இயற்கையை கையளிக்கும் உரிமையை யாரும் நமக்கு கொடுக்கவில்லை.அணு உலை பாதுகாப்பு, அணுக்கழிவு பாதுகாப்பு, அணு உலையை மூடும் விழா என்று எல்லாவற்றையும் கணக்கிட்டு பார்த்தால் அணு உலை மின்சாரம் ஒரு நாளும் செலவு குறைந்த சிக்கன மின்சாரமாக இருக்க இயலாது.

அப்படி அணு உலை மின்சாரம் தான் செலவு குறைந்த மின்சாரம் என்றால் யுரேனியும் அதிகம் கொண்ட நாடுகள் ஏன் நூறு சதவிகிதம் அணு உலை மின்சாரத்தை கையிலெடுக்கவில்லை.?

விபத்துக்கான இழப்பீடும் சேர்த்தால் கண்டிப்பாக இது எந்த வகையிலும் செலவு குறைந்த மின்சாரமாக இருக்க வாய்ப்பில்லை.

வளர்ந்த உலக நாடுகளில் எல்லாம் ஒரு விபத்து என்றால் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு உழைக்காமல் சாப்பிடும் அளவுக்கு இழப்பீடு உண்டு.அதை வாங்குவதற்கும் வாழ்வதற்கும் நாம் உயிரோடு இருக்கிறோமா இல்லையா என்பது வேறு விடயம்...ஆனால் சட்டங்கள் அவ்வளவு கடுமையானதாகவும்,உயிர்களின் மதிப்பு மிக உயர்ந்த்தது என்பதை தான் காட்டுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் அணு உலைகள் இருப்பதாக நீங்கள் சொன்னாலும் கூட அணு உலைக்கெதிராக உலக நாடுகளில் நடை பெற்ற போராட்டங்கள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்:

அமெரிக்கா:

**வாஷிங்டன் 1979 மார்ச் அணு உலைக்கேதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 65,000 பேர்

**நியூயார்க் 1979 செப்டம்பர் அணு உலைக்கேதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இரண்டு லட்சம் பேர்

**நியூயார்க் 1982 ஜூன் அணு உலை மற்றும் அணு ஆயுதங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 10 லட்சம் பேர்

**நியூயார்க் 2005 ஆம் ஆண்டு அணு உலை மற்றும் அணு ஆயுதங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 40,000 பேர்

**கலிபோர்னியா 2005 ஆம் ஆண்டு 6 ஆண்டுகளாய் கட்டப்பட்டு வந்த இரண்டு அணு உலைகள், மக்களின் தொடர் போராட்டங்களால் கை விடப்பட்டன.

**1961 ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பனிப்போர் போக்கையும்,அணு கொள்கைகளில் அமெரிக்கா எடுக்க வேண்டிய மாற்றங்களையும், அமெரிக்க வீதிகளில் இறங்கி போராடிய 50,000 பெண்கள் முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.

**சாம் என்ற ஒரு தனி மனிதன் எடுத்த தற்கொலை முயற்சி அமெரிக்காவின் மாண்டேக் அணு உலையை மூட வைத்தது.இத்தனைக்கும் 1500 கோடி ரூபாய்க்கு மேல் அந்த அணு உலைக்காக செலவு செய்யப்பட்டு இருந்தது.

ஐரோப்பாவில் முன்னெடுக்க போராட்டங்கள் சில:

**ஸ்பெயின் 1977 ஆம் ஆண்டு அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 2 லட்சம் பேர்.

**பிரான்ஸ் 1977 ஆம் ஆண்டு அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்  ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் பேர்.

**ஜெர்மனி 1981 ஆம் ஆண்டு அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 1 லட்சம் பேர்.

**ஜெர்மனி 1981 ஆம் ஆண்டு அணு உலை மற்றும் அணு ஆயுதங்களுக்கு எதிரான போராட்டத்தில் பெர்லின் நகரில் கலந்து கொண்டவர்கள் 6 லட்சம் பேர்.

செர்நோபில் விபத்துக்கு பிறகு

**இத்தாலி ரோம் 1986 ஆம் ஆண்டு அணு உலை மற்றும் அணு ஆயுதங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர்.

**ஆஸ்திரேலியாவில் இதே கால கட்டங்களில் அணு ஆயுதங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 3 .5 லட்சம் பேர்.

உலகில் மக்கள் போராட்டங்களால் கைவிடப்பட்ட அணு உலைகள்:

*ப்ளாக் பாக்ஸ் அணு மின் நிலையம் -அமெரிக்கா

*ஷோர் ஹாம் அணு மின் நிலையம் -அமெரிக்கா

*ராஞ்சோ செகோ அணு மின் நிலையம் -அமெரிக்கா

*மாண்டேக் அணு மின் நிலையம் -அமெரிக்கா

*யான்கீ ரோ அணு மின் நிலையம் -அமெரிக்கா

*பட்டான் அணு மின் நிலையம்- பிலிப்பைன்ஸ் *(கூடங்குளத்தை போல முழுவதும் கட்டப்பட்ட பின்னர் மக்கள் போராட்டங்களால் செயல்பட விடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட உலை)*****

குறிப்பாக ஜப்பான் புகுஷிமா விபத்துக்கு பிறகான போராட்டங்கள் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

இந்திய அணு உலை விபத்துக்கள் :

இந்தியாவில் ஏதோ அணு உலை விபத்துக்களே நடக்காதது போல அரசு பாவனை செய்தாலும் கூட பல்வேறு விபத்துக்களும் அதற்கான செலவுகளையும் நாம் இணையத்தில் காண முடிகிறது. பல விபத்துக்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. அணு உலை விபத்துக்களை சரி செய்ய இந்தியா செய்த செலவு தொகை என்ன?

1.கல்பாக்கம் அணு உலை விபத்து (1987) – 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
2.தாராப்பூர் அணு உலை விபத்து (1989) - 78 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
3.தாராப்பூர் அணு உலை விபத்து (1992) – 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
4.பலன்ட்ஷர் அணு உலை விபத்து (1993) - 220 மில்லியன் அமெரிக்க டாலர்
5.கோடா ராஜஸ்தான் அணு உலை விபத்து (1995) – 280 மில்லியன் அமெரிக்க டாலர்
6.கல்பாக்கம் அணு உலை விபத்து (2002) - 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
1 மில்லியன் = 10 லட்சம், 1 டாலர் =50 ரூபாய்

இதை எல்லாம் தாண்டி அணு உலை விதி முறைகளை பின்பற்றி தான் கூடங்குளம் அணு உலை கட்டப்பட்டு இருக்கிறதா?

அணு உலையை சுற்றி இரண்டு 2 கிலோமீட்டர் வரைக்கும் மக்கள் வசிக்க கூடாது, 20 கிலோமீட்டர் தூரத்தில் 2 லட்சம் மக்களுக்கு குறைவாக வசிக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணற்ற விதி முறைகள் இருக்கின்றன. ஆனால் எந்த விதி முறைகளும் பின்பற்றபடவில்லை என்பதே உண்மை.

எனவே அரசாங்கம் சொல்லும் அரை வேக்காட்டு செய்திகளையும், அண்ட புழுகுகளையும் ,ஆகாச புழுகுகளையும் நம்பி கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்றும் இதை விட சிறந்த அணு உலை உலகில் இல்லை என்பது போன்ற வாதங்களை நீங்கள் முன் வைப்பீர்கள் என்றால் உங்களை பார்த்து நகைப்பதை தவிரே வேறென்ன செய்ய ?

தொடர்புடைய பதிவு

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்வின் சாரத்தை படங்கள் சொல்லி விட்டன...!

நன்றி...

Jayakumar Chandrasekaran said...

If Rocket Engineer Abdul Kalam is not qualified to certify the safety of Kudankulam how far are you qualified to say it is unsafe?

Why do all persons agitate against kudankulam only? Why not Udayakumar go to Kalpakkam and agitate there also? Afterall he is not a resident of kudankulam.He resides in Nagerkoil.

There is something more than what you and I know about Kudankulam. It will defenetly come out in public domain after sometime.

தருமி said...

//Why do all persons agitate against kudankulam only? //

விடிய விடியக் கதை கேட்டுட்டு ... சீதைக்கு ராமன் சித்தப்பான்னது மாதிரி இருக்கு உங்கள் கேள்வி.

நல்ல கட்டுரை. காதிருப்போர் கேட்கட்டும்; ஏனையோர் வழக்கம் போல் இருக்கட்டும். என்ன செய்வது?

//It will defenetly come out in public domain after sometime. //
எப்போது .. கண்கெட்டு சித்திரம் வாங்கிய பின்பா ...?

saidaiazeez.blogspot.in said...

என் மனதில் என்ன படுகிறதுன்னா...
இந்த அணு உலை உற்பத்தியே செய்யாது!

ஏனெனில்,
நம் மாண்புமிகு நாராயணசாமி அவர்கள் எத்தனை பதினைந்து நாட்களாக உற்பத்தி தொடங்கும் என்றார். (கஜினி முகம்மதும் தோற்றார் இவர்முன்) இன்னும் தொடங்கவில்லை.

அரை மணி நேர தகுதிச்சான்று முதல் உலக விஞ்ஞானியின் சான்றுவரை கிடைத்தும், இதுவரைக்கும் உற்பத்தி தொடங்கவில்லை!

144 தடை உத்தரவு போட்டு ஒரு வாரத்தில் உற்பத்தி தொடங்கும் என்றார்கள். இதுவரைக்கும் ஆரம்பிக்கவில்லை.

சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவு பிறப்பித்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டது, இதுவரைக்கும் ஆரம்பிக்கவில்லை.

புலி வாலை பிடித்திருக்கிறோம் என்பது "அவர்"களுக்கு தெரிந்துவிட்டது.
நான் விடப்போகிறேன் என்று கத்துவேன் நீ விட்டுவிடாதே என்று கத்திக்கொண்டேயிறு!
இதுதான் "அவர்"களுக்கும் "இவர்"களுக்கும் உள்ள புரிந்துணர்வு என்று நினைக்கிறேன்.
இல்லையென்றால்

Unknown said...

எந்த நாட்டின் அணு உலை யாகஇருந்தாலும் அணுஉலை ஆபத்தானதே.[அமரிக்க,ருசிய,பிரஞ்சு,பிரிட்டன்,சீனா]அரசே!அனைத்து அணுஉலைகளையும் மூடு.

”தளிர் சுரேஷ்” said...

ஒரு சமயத்தில் அணு உலை மின்சாரத்திற்கு ஆதரவாக நான் இருந்தேன்! அணு உலை பற்றி படிக்க படிக்க அதன் அபாயம் உணர முடிந்தது. விரிவான தெளிவான தகவல்கள்! கூடங்குளம் மூடப்பட்டால் பணம் விரயம் ஆனாலும் மக்கள் பாதுகாப்பு அடைவார்கள் என்பது மகிழ்ச்சியே! நன்றி!

ஊரான் said...

கூடங்குளம் அணு உலை குறித்து மிகத் தெளிவாக, ஆழமாக, விரிவாக எழுதப்பட்ட மிகச் சிறந்த கட்டுரை. முடிந்த வரை இதை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும்.

கூடங்குளம்: 'மம்மி' நாயகன் வருவானா?
http://www.hooraan.blogspot.in/2011/11/blog-post_21.html
புதைக்கப்பட்ட மனிதன் ஒருமுறையோ அல்லது அதிகப்படியாக மூன்று முறையோதான் 'உயிர்த்தெழுவான்'. இது சமய நம்பிக்கை. கூடங்குளத்தில் நியூட்ரான் என்கிற எமனை இன்று வேண்டுமானால் நான்கு சுவற்றுக்குள் அடைத்து வைக்கலாம் அல்லது எமனை அடக்க மாடரேட்டர்களை ஏவலாம். ஆனால் புதைக்கப்ட்ட பிறகு ஒரு முறையல்ல, ஓராயிரம் முறையல்ல, ஒன்று-இரண்டாய்,இரண்டு-நான்காய்,நான்கு-பதினாறாய், பதினாறு-இருநூற்று ஐம்பத்தாறாய்,இருநூற்று ஐம்பத்தாறு-அறுபத்தைந்தாயிரத்து ஐநூற்று முப்பத்தாறாய்.... எனப் பல்கிப் பெருகி கோடி கோடியாய் உயிர்த்தெழப் போகும் நியூட்ரான் எமன்களை விழுங்க அன்று மாடரேட்டர்கள் இருக்கமாட்டார்கள். இத்துக் கொண்டு வரும் சுவற்றின் ஓட்டைகளைக் கிழித்துக் கொண்டு வெளியேறப் போகும் நியூட்ரான் எமன்களை வெட்டி வீச 'மம்மி' நாயகன் வரப்போவதில்லை?

சிவானந்தம் said...

ஜோதிஜி,

முடிவெடுக்கும்போது ஒப்பிடல் என்ற தியரியை கவனிக்க வேண்டும். புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளக் கூடாது என்று சொல்வார்கள். அதேபோல் சிந்திக்கும்போது
நம்மைப் போன்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும். இந்தியா மிகப் பெரிய நாடு. எனவே அவர்களோடு ஒப்பிடுங்கள். மிகப்பெரிய நாடுகள் அனைத்தும் குறைந்தது 20 சதிவிகிததிற்கும் அணு மின்சாரத்தை சார்ந்திருகின்றன. இதுதான் உண்மை.

சமீபத்தில் இணையத்தில் மேயும்போது மேலும் சில நாடுகள் அணு உலை ஆரம்பிக்க போவதாக படித்தேன்.சவூதி அரேபியா, UAE,கஜகஸ்தான் என்று நினைவு. இந்த லிஸ்டில் வியட்நாம், துருக்கி என மேலும் பல நாடுகள் இருக்கின்றன. இது லேட்டஸ்ட் நிலவரம். இவர்களில் சிலருக்கு ஸ்பான்சர் ஜப்பானேதான். உலகம் அப்படி போய்கொண்டிருக்கிறது. எனவே காரணங்கள், தேவைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும். பல விஷயங்களை எதார்த்தமாக அணுகும் நீங்கள் இதை உணராதது ஆச்சர்யம்தான்.

மரபுசார எரிபொருளை பொறுத்தவரை நான் எதார்த்தத்தை நம்புபவன். இந்த விஷயத்தில் இந்தியா துடிப்பாக இல்லை என்று எடுத்துக் கொண்டாலும்,விஞ்சானத்தில் கரை கண்ட நாடுகளே 10 முதல் 20 சதவிகிதம்தான் தயாரிக்க முடிந்தது. இந்தியா அந்த அளவுக்கு உற்பத்தி செய்தாலும் மீதி 80 சதவிகிதத்திற்கு நாம் வழி கண்டாக வேண்டும்.

அணு உலைகளை பொறுத்த வரையில் அது ஆபத்தான ஓன்று என்பதை உணர்ந்தாலும், இதை புறக்கணிப்பதால் விளையும் ஆபத்து இன்னும் மோசமாக இருக்கலாம்.

மேலும் சில புள்ளிவிவரங்களுக்கு பதில் சொல்லலாம்.நேரமில்லை. இதுபற்றி நான் எனது பதிவுகளில் எழுதி இருக்கிறேன். இந்த விஷயத்தில் நாம் இருவரும் வேறு வேறு கோணத்தில் சிந்திப்பதுதான் ஆச்சர்யம்

வவ்வால் said...

ஜோதிஜி,

//ஆச்சர்யமான செய்தி என்னவென்றால் யுரேனியத்தை அதிக அளவில் தன்னகத்தே கொண்டுள்ள ஆஸ்திரேலியாவில் அணு உலைகளே இல்லை என்பது தான். செலவு குறைந்த மின்சாரம், இயற்கையை மாசு படுத்தாத மின்சாரம், எந்த ஆபத்துக்களும் இல்லாத மின்சாரம் என்றால் ஏன் அவர்கள் அணு உலைகளை நிறுவுவதில்லை?

மக்கள் தொகை குறைவு அல்லது அவர்களுக்கான மின்தேவை குறைவு என்றெல்லாம் காரணங்கள் சொல்லலாம். ஆனால் நல்ல பொருள் குறைவான விலையில் கிடைத்தால் யார் தான் முயற்சி செய்ய மாட்டார்கள்.?ஆனாலும் அவர்கள் செய்யவில்லை. காரணம் அணு மின்சாரம் செலவு குறைந்த மின்சாரமும் அல்ல. பாதுகாப்பானதும் அல்ல என்பதே உண்மை.//

நீங்க ஆஸ்திரேலியா பற்றி இப்படி சொல்லி இருக்கீங்க,ஆனால் அவர்களின் தற்போதைய நிலை இப்படி இருக்கு,

//Last year, the government appointed ex-Telstra chief Dr Ziggy Switkowski, a nuclear physicist and now chairman of the Australian Nuclear Science and Technology Organisation (ANSTO), to head an inquiry into nuclear energy. His report, Uranium Mining, Processing and Nuclear Energy – Opportunities for Australia?, recommended that Australia aim to have its first nuclear reactor operational by 2020, and a fleet of 25 reactors by 2050.

In April, the government announced it would start putting regulations in place to see this happen – a move that would mean a third of our electricity needs are met from nuclear power.//

http://www.readersdigest.com.au/australia-nuclear-power

#
இக்கட்டுரையில் சொல்லப்பட்ட பல விடயங்கள் முன்னரே எனது பதிவில் சொல்லி இருக்கிறேன், மேலும் கூடங்குளம் எதிர்ப்பின் பின்னுள்ள அரசியல் குறித்தும் சொல்லி இருப்பேன், நீங்களும் படிச்சிருப்பிங்கனு நினைக்கிறேன்,

தொடர்புடைய நமது பதிவுகள்,

http://vovalpaarvai.blogspot.in/2011/11/blog-post_2722.html

http://vovalpaarvai.blogspot.in/2011/11/blog-post_08.html

http://vovalpaarvai.blogspot.in/2011/10/blog-post.html

ஜோதிஜி said...

நீங்க

தலைவா இம்பூட்டு அறிவு நமக்கேது. நன்றி என்று ஒருவரின் பெயரை போட்டு உள்ளேனே? பாத்தீயளா?

ஆழ அகல உழுவது என்றால் வலையில் எனக்கு தெரிந்து வலையில் 4 பேர்கள் மடடுமே

நீங்க, சர்வாகன், ராஜ நடராஜன் மற்றும் இக்பால் செல்வன்.

ஜோதிஜி said...

பொறியாளர் ஆன்டனி வளன் தனது முகநூலில் எழுதிய கடிதத்தை அவர் அனுமதி கேட்டு வலையில் போட்டு வைத்தேன். இம்பூட்டு அவர் எழுதியும் இன்னமும் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஆஸ்திரேலியா அமெரிக்கா கனடா என்பது யூரேனியம் சார்ந்த எதிர்கால திட்டத்தை இந்தியா படப் போகும் அவஸ்த்தையை இந்தியா விவசாய நாடா தொடரில் கோடிட்டி காட்டியுள்ளேன்.

எம்.ஞானசேகரன் said...

மிகச்சிறப்பான கட்டுரை! இன்னமும் ஆதரிக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். முக்கியமாய் ஆளும் கட்சியில் உள்ளவர்கள் ஏதோ இது செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் மின் பற்றாக்குறையே இருக்காது என்பது போல புழுகிக்கொண்டிருக்கிறார்கள்.

இது பற்றிய எனது பதிவு ஒன்று தங்களின் கண்ணில் பட்டதா இல்லையா என்று தெரியவில்லை?!

இணைப்பு; http://kavipriyanletters.blogspot.com/2013/02/blog-post_14.html

எம்.ஞானசேகரன் said...

எத்தனைதான் விழிப்புணர்விற்கான விளக்கங்கள் கொடுத்தாலும் மக்கள் இன்னமும் உறக்கத்திலிருந்து மீளவே இல்லை. இது நம் பிரச்னை இல்லை என்று விட்டேர்த்தியாகவே இருக்கிறார்கள். எதிர்கால சந்ததிகளை பாதிக்கும் என்கிற பயமோ அச்சமோ இன்றி எப்படி இருக்க முடிகிறது இம் மக்களால்?

கடமையைச் செய், பலனை எதிர்பாராதே! அவ்வளவுதானா?

இது குறித்த எனது பதிவிற்கான இணைப்பு;

http://mgnanasekaran.blogspot.in/2011/11/blog-post_4.html

ஜோதிஜி said...

உங்கள் பதிவில் மால்வே எச்சரிக்கை வருகின்றது. தளத்தை பாருங்க. திறக்கவில்லை.

ஜோதிஜி said...

நன்றி கவிப்ரியன்.