நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாள் இன்னமும் கலங்கலாக என் நினைவில் இருக்கின்றது. கொண்டு போய் சேர்த்தார்கள் என்ற வார்த்தையே தவறு. ஐந்து வயது ஆனதும் அக்காவுடன் அனுப்பி வைத்தார்கள்.
என் பள்ளிக்கூட ஆசிரியர் சீனிவாசன் அப்பா ஒரு முலையில் அமர்ந்திருந்தார். யாரு வீட்டு கொழந்த என்று கேட்டார். அக்கா அப்பாவின் பெயரை சொன்னார். பெரிய இலையில் நெல் பரப்பியிருந்தது. என் கையைப் பிடித்து அந்த நெல்லில் அ போட வைத்து என்னை உள்ளே அனுப்பி வைத்தார்.
சுபம்.
அதன் பிறகு பள்ளி என்ற நதிப்பயணம் தொடங்கியது. வேறெந்த முன்னேற்பாடுகளும் முஸ்தீபுகளும் இல்லை. டவுசர், சட்டை கூட ஒரு மஞ்சள் பை. அதற்குள் ஒரு சிலேட்டு. உடைந்த குச்சி. இதை பல்பம் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் வீட்டில் இரட்டையரை பள்ளியில் சேர்க்கும் வயது வந்த போது ஒரு மாதம் முன்பாகவே அத்தனை முன்னேற்பாடுகளையும் அக்கறையுடன் செய்ய வேண்டியதாக இருந்தது.
பள்ளி திறந்த முதல் நாளில் அனுப்பவில்லை. திருப்பூரில் இருக்கும் சரஸ்வதி கோவிலுக்கு அழைத்துச் சென்றோம். கல்விக்கென்று உருவாக்கப்படுத்தப்பட்ட அந்த தெய்வத்தின் கதையை அவர்களுக்குச் சொன்னோம். அது அப்போதிருந்த மனத்தின் தன்மையில் அக்கறை என்ற பெயரில் தொடங்கிய பயணம் அது. ஆனால் அவர்களைப் பொறுத்த வரையிலும் அதுவொரு ஜாலியான ரவுண்ட் போன சுகம்.
மறுநாள் இருவருக்கும் பள்ளிச்சீருடை அணிவித்து மாட்ட வேண்டிய மற்ற சமாச்சாரங்களையெல்லாம் மாட்டி அலங்கரித்து பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். ப்ரிகேஜி வகுப்பறையில் இரண்டு ஆசிரியைகள் இருந்தார்கள். ஒருவர் வயதானவர். மற்றொருவர் மிக இளமையாக இருந்தார்.
இருவரும் அங்கே செய்து கொண்டிருந்த பணி தான் என்னை அங்கே சிறிதுநேரம் நிறுத்தி வேடிக்கை பார்க்க வைத்தது. காரணம் அங்கே கொண்டு வந்து சேர்த்த எந்த குழந்தைகளும் அடங்குவதாக தெரியவில்லை. ஒரே கத்தல் கதறல். மூக்குச் சளி சிந்தி உள்ளே நடந்த களேபரத்தில் பல கூத்துக்கள் நடந்து கொண்டிருந்தது.
நிச்சயம் நம்மாளுங்க தலை தெறிக்க ஓடி வரப் போகின்றார்கள் என்று காத்திருந்தேன்.
காரணம் வயதான ஆசிரியை வகுப்பறையின் உள்ளே இருந்து கொண்டு அழும் குழந்தைகளை சமாதானம் செய்து கொண்டிருந்தார். மற்றொருவர் இரண்டு கதவில் ஒரு கதவை சார்த்தியபடி அம்மா அப்பாவை அனுப்புவதில் குறியாக இருந்து கொண்டு அடுத்து வரும் குழந்தைகளை உள்ளே அனுப்புவதில் கவனமாக இருந்தார். கதவை கெட்டியாக பிடித்தபடியே நின்று கொண்டிருந்தார். அவரின் சேலை தலைப்பை சில குழந்தைகள் இழுத்தபடி அழுதன. இருவரும் தடுமாறி தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.
என் அலுவலக வேலையை மறந்து விட்டு அங்கேயே சற்று நேரம் நின்று அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். பாதிக் குழந்தைகள் கத்திய கத்தல் அந்த மூடிய கதவைத் தாண்டி வெளியே எதிரொலித்தது. கதவின் இடையே தெரிந்த வெளிச்சத்தில் உள்ளே பார்த்தேன்.
ஆனால் நம்ம இரட்டையர்கள் இருவரும் அழவில்லை. ஆனால் அங்கே அழுது கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கண்களில் மட்டும் லேசாக கண்கள் கலங்கியதை தூரத்தில் இருந்து பார்த்த போது புரிந்து கொள்ள முடிந்தது. என் தலையை கதவிடுக்கின் வழியே கண்ட போது கூட அடம் பிடித்து வெளியே வர முயற்சிக்க வில்லை.
எனக்கே சற்று ஆச்சரியமாக இருந்தது.
பெண்னை கட்டிக் கொடுத்து மாப்பிள்ளையோடு அனுப்பும் போது பெற்றோருக்கும் எவ்வித மனோநிலை இருக்குமோ அந்த மனநிலை அப்போது எனக்கும் தோன்றியது. இப்போது நினைத்துப் பார்க்கும் போது சிரிப்பாக வருகின்றது.
முதல் இரண்டு வாரங்கள் நண்பகல் 12 மணி வரைக்கும் என்று சொல்லியிருந்தார்கள். அலுவலக பணியில் மறந்து போய்விடுவோம் என்று அலைபேசியில் அலாரம் வைத்துக் கொண்டு அடிக்காமல் இருந்து விடுமோ என்று அரைமணிக்கு ஒரு தரம் பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாக 11.45க்கு டாண் என்று அந்த வகுப்பறையில் வாசலில் தவம் கிடந்தேன் என்று தான சொல்ல வேண்டும்.
காரணம் இரட்டையரில் ஒருவரின் உடல் நலம் குறித்த அதிக அக்கறையில் அதிகம் கவனம் செலுத்திக் கொண்டிருந்த நாட்கள் அது.
பள்ளி நேரம் முடிந்து. வெளியே வந்தவர்கள் முகத்தில் இருந்த புன்னகையைப் பார்த்த போது தான் எனக்க போன உயிர் திரும்பி வந்தது. பள்ளிக்குள் இருக்கும் அந்த சின்ன பூங்கா பக்கம் அழைத்துச் சென்று ஊஞ்சலில் ஆட விட்டு அன்றைய வகுப்பறை அனுபவம் குறித்து மெதுவாக கேட்டேன். மழலை மொழியில் கூறியது இப்போதும் நினைவில் இருக்கிறது.
நாம தான் அ ஆவன்னா ஏபிசிடி எல்லாமே படிச்சாச்சுல்ல. அதாம்பா சொன்னாங்க என்றார்கள். கொண்டு போயிருந்த மீதியிருந்த திண்பண்டங்களை தின்று கொண்டே வண்டியில் ஏறினார்கள். அன்று தொடங்கிய இலகுவான இவர்களின் கல்வி பயணத்திற்கு நாங்கள் முன்னேற்பாடுகளுக்காக செலவழித்த காலம் ஏறக்குறைய மூன்று மாதங்கள்.
பள்ளியில் கட்டணம் கட்டி உறுதியானதும் பள்ளி குறித்து புரிய வைத்தோம். பள்ளியின் அருமையை விளக்கிச் சொன்னேன். பல படங்கள் அடங்கிய புத்தகங்களை ஆறு மாதமாக வாங்கி புத்தகங்களின் மேல் உள்ள ஆர்வத்தை உருவாக்கினோம். வீட்டில் எழுத கற்றுக் கொடுத்த போது நான் மட்டும் எழுத வைக்க வேண்டாம். நாலு வயதில் எழுத தேவையில்லை. பேச கவனிக்கத் தெரிந்தால் போது என்று அவர்கள் மேல் வலிய எதையும் திணிக்காமல் அவர்கள் போக்குக்கு அனுமதித்தேன்.
எந்த புத்தகங்களை வாங்கிக் கொடுத்தாலும் மூன்று நாட்களுக்குள் அது கிழிக்கப்பட்டு கப்பல் போல ஏதோவொன்றை செய்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். அலுவலக வேலை முடித்து வீட்டுக்குள் வரும் போதே வேறொரு புத்தகத்தை வாங்கி வந்து விடுவதுண்டு. பல புத்தகங்கள். ஆனால் ஒவ்வொன்றும் வாய் இருந்தால் கதறியிருக்கும். இரண்டு புத்தகங்கள என்று ஒவ்வொரு செலவும் இரண்டு இரண்டாக செய்ய வேண்டியிருந்தது. கடைசியில் அட்டையில் போட்ட படங்கள் அடங்கிய பாடங்களை வீட்டுக்கு கொண்டு வந்த சேர்த்த போது தான் ஒரு முடிவுக்கு வந்தது. அவர்கள் அதையே வைத்துக் கொண்டு விளையாட்டுப் பொருட்கள் வைத்துக் கொண்டு ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
எங்கள் மூச்சு சீரானது.
நம்முடைய கல்வியின் முக்கியப் பிரச்சனையே இங்கு தான் தொடங்குகின்றது. படங்கள் மூலம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல வளர்ந்த பிறகும் பாடம் நடத்தும் போது அது எளிதாக மூளைக்கு கடத்தப்படுகின்றது. ஆனால் இந்திய கல்வியில் செயல்வழி கல்வியை விட எழுத்து வழிக் கல்விக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
வலிய திணிக்கும் போது வாந்தி பேதியாகிவிடுகிறார்கள். கல்வி என்பது கசப்பு மருந்து போல ஆகிவிடுகின்றது. நன்றாக கவனித்துப் பாருங்கள்.
நாமும் படித்து வந்துள்ளோம். நம்முடைய குழந்தைகளும் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். நம்மில் எத்தனை பேர்கள் பள்ளிக்கூட புத்தகங்களை கதை புத்தகம் போல விருப்பத்துடன் அணுகியிருக்கின்றோம். கடமைக்கு, பயத்துக்கு, கட்டுப்பாட்டுக்கு என்று ஏதோவொரு விதத்தில் தான் ஒவ்வொரு வகுப்பையும் கடந்து வந்துள்ளோம். அதுவே தான் இன்று குழந்தைகள் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கின்றது.
தாய்மொழிக் கல்வி என்பது மாறி அந்நிய மொழி கல்வி என்ற போது இன்னமும் திகட்டல் அதிகமாகி விடுகின்றது.
இந்திய கல்வியில் மட்டுமல்ல கலாச்சாரத்தில் கூட விருப்பங்களை விட திணித்தல் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. மதிப்பெண்களுக்கு உள்ள மரியாதை மனதில் உள்ள கருத்துக்களுக்கு கிடைப்பதில்லை. எதிர்ப்பு சக்தியை இழக்க வைத்துவிட்டு எதிராளிகளோடு போராட வேண்டிய கலையை இங்கே கற்றுக் கொடுக்கின்றார்கள்.
ஒரு பக்கம் முழுக்க பூச்சி பூச்சியாக வெறுமனே எழுத்துக்கள் மட்டுமே இருந்தால் எத்தனை பேர்கள் விரும்பி வாசிப்பார்கள். அதுவே படங்கள் இருக்கும் போது ஆர்வம் இயல்பாக உருவாகின்றது. ஆனால் இங்கே எழுத்துக்கள் மூலம் மட்டுமே அத்தனையும் புகட்டப்படுகின்றது. மூளையில் உள்ள ந்யூரான்களில் விதைக்கப்படும் விதைகளை விட அதில் செலுத்தப்படும் கருத்துக்களை அடைகாப்பது தான் முக்கியம் என்று போதிக்கப்படுகின்றது.
தொடக்கத்தில் மனித இனம் வேட்டையில் தான் தனது வாழ்க்கையை தொடங்கியது. அப்போது கலாச்சாரம் என்றொரு வார்த்தையே இல்லை. காலப்போக்கில் பொருளாதார வாழ்க்கைக்கு மாறிய போது தான் கலாச்சாரம் என்றொரு வார்த்தையும் இடையில் வந்து சேர்ந்தது.
எல்லாமே மாறத் தொடங்கியது. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு மனித இனம் மாறத் தொடங்கிய போதே அவரவர் விரும்பிய வகையில் சட்டங்கள் வளைக்கப்பட்டது. சட்டமியற்றும் அதிகாரத்தில் இருந்தவர்கள் சூழ்ச்சி வலையை மறைமுகமாக வைத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் உருவாக்கினார்கள். உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் தலைமுறை கடந்தும் பலரால் வெளியே வரமுடியாத அளவுக்கு சமூகத்தின் ஓரத்திற்கே செல்லக் காரணமாக இருந்தது.
அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்டு காரணங்கள் கற்பிக்கப்பட்டது. ஆனால் காலவெள்ளத்தில் ஒவ்வொன்றும் உடைபடவும் தொடங்கியது. வலியவர்கள் பிழைக்க முடியும் என்ற பொது விதி உயிர்பெறத் தொடங்கியது. உலகில் படைக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் மற்றவர்கள் வாழ்க்கையின் நலனுக்கே என்பதாக மாறியது. கருத்துக்கள் அனைத்தும் பகிர்வதற்கே என்று தோன்றிய போது தான் நவீனங்கள் தங்களது வெளிச்சத்தை உலகத்தின் மேல் பாய்ச்சத் தொடங்கியது.
விஞ்ஞானம் வளர்ந்தது. பலவற்றையும் வளர்த்தது.
ஆனால் இன்று நாம் பார்ப்பது என்ன?
வேடவர் சமூகத்தில் தொடங்கிய நமது பயணம் இன்று வேடர்களைப் போலவே நம்மை மாற்றியுள்ளது.தொடக்கத்தில் மனிதன் சிறு புள்ளியாக இருந்தான். வட்டம் தொடங்கியது. தொடங்கிய இடத்திற்கே தற்போது வந்து சேர்ந்துள்ளோம்.
சக மனிதனை, நாடுகளை சுய லாபத்திற்காக வேட்டையாடுதல் தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது. இனம், மதம், மொழி, சாதி என்ற பெயரைக் கொண்டு வேட்டையாடத் தொடங்கி விட்டது. பொறாமை என்பது உள்ளே ஒழித்து வைக்கப்பட்டு அது வன்மமாக மாறியுள்ளது. அதுவே வாழ்க்கை சூத்திரம் என்ற அங்கீகாரத்தை பெற்றும் விட்டது.
சக மனிதனை, நாடுகளை சுய லாபத்திற்காக வேட்டையாடுதல் தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது. இனம், மதம், மொழி, சாதி என்ற பெயரைக் கொண்டு வேட்டையாடத் தொடங்கி விட்டது. பொறாமை என்பது உள்ளே ஒழித்து வைக்கப்பட்டு அது வன்மமாக மாறியுள்ளது. அதுவே வாழ்க்கை சூத்திரம் என்ற அங்கீகாரத்தை பெற்றும் விட்டது.
இறுதியில் இது தான் சமூகத்திற்கான தகுதியாகவும் மாறியுள்ளது.
அப்படியென்றால் இத்தனை காலம் மனித குலம் கடந்து வந்த பாதையில் ஒவ்வொருவரும் கற்ற கல்வி என்ன ஆச்சு?
காரணம் குறிப்பிட்ட மக்களுக்கு கல்வி என்பது ரத்தம் சதை நாளம் நரம்பு என்று அத்தனையிலும் ஊறிப்போய் அதனையே வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்வில் உயரத் தொடங்கினார்கள். கற்ற கல்விக்கும் அப்பாற்பட்டும் சிந்தித்தார்கள். உயர்ந்தார்கள். கல்வி சொன்ன பாதையை மட்டுமே நம்பினார்கள்.
ஆனால் கல்வியை அணியும் ஆடை போல, பூசும் பவுடர் போல பயன்படுத்திய அத்தனை பேர்களும் தானும் கற்க முடியாமல் தனக்குப் பினனால் வந்த தலைமுறைக்கும் கற்றுக் கொடுக்காமல் வன்மத்தை விதைத்து வகைதொகையில்லாமல் வன்முறையை அறுவடை செய்யத் தொடங்கினார்கள்.
கல்வியென்பது மனதில் மலர்ச்சியை உருவாக்க கூடியது. சிந்தனைகளை சிறகாக மாற்றக்கூடியது. இங்கே எத்தனை பேர்களுக்கு சிறகு முளைத்தது.? இங்கே பலருக்கும் கற்ற கல்வி எந்த மாறுதல்களையும் தந்துவிடவில்லை என்பது தான் ஒத்துக் கொள்ள வேண்டிய முக்கிய விசயம். வீழ்ச்சியைத் தர்ன் தந்துள்ளது என்ற போது கல்வியை குறை சொல்வீர்களா? கற்றுக் கொடுத்தவர்களை வசை பாடுவீர்களா? யாரை குறை சொல்ல முடியும்.?
கல்வி என்பது பொதுவானது. ஆனால் அதை அணுகும் விதம் தான் இங்கே முக்கியமானது. கடந்த 20 ஆண்டுகளில் நம் நாடு கல்வி ரீதியாக மிக பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை பாராட்டுரை போல சொல்லிக் கொள்கின்றோம்.
ஆனால் தரமென்பது அதலபாதாளத்தில் தானே இருக்கிறது.
காரணம் என்ன?
செயல் முறைக் கல்வி என்பது செயலோடு கலந்தது. அது என்றுமே மறக்க முடியாத அளவில் நம்மை மாற்றி விடக்கூடியது.
நம்மை நமக்கே உணர்த்தக்கூடியது. மற்றவர்களுக்கும் உணர்த்த வைத்து விடும்.
ஒவ்வொரு குழந்தைகளுக்குள் இருக்கும் சக்தியை எதைக் கொண்டு உங்களால் அளக்க முடியும்? . ஆலமரத்தின் வீரியத்தைப் போல தேக்கு மரத்தின் தகுதியைப் போல மாற வேண்டிய குழந்தைகள் எப்படி வளர்கின்றார்கள்?
தற்போதைய கல்வி முறையினால் மொட்டுப் பருவத்திலேயே கருகிப் போய் கனவுகளை மட்டும் விதைத்து அறுவடை செய்ய தயாராக இருக்கின்றோம்.
மனப்பாடமே முதல் தகுதி என்ற வரையறையில் தான் இங்கே சாதனை என்ற வார்த்தையே உருவாக்கப்படுகின்றது. ஆனால் வெறுமனே எழுத்துக்கள் மூலம் கற்றுக் கொடுக்கும் தற்போதைய கல்வியின் பலன் என்ன தெரியுமா?
அரிசி எந்த மரத்தில் வருகின்றது? என்று குழந்தைகள் கேட்கும் அளவிற்கு நாம் வளர்ந்துள்ளோம்.
தொடர்புடைய தலைப்புகள்
மிதிவண்டி வீரமும் சோகமும்
வீட்டு யுத்தமும் விடுபடாத மர்மங்களும்
தொடர்புடைய தலைப்புகள்
மிதிவண்டி வீரமும் சோகமும்
வீட்டு யுத்தமும் விடுபடாத மர்மங்களும்
6 comments:
அருமையான சிந்தனைகள், வருங்காலத்தில் குழந்தைகள் பாடு திட்டாட்டம்தான். மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே!
நல்ல சிந்தனை , நல்ல பதிவு . நன்றி
நல்ல சிந்தனை,மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா நன்றி.
இப்ப உள்ள குழந்தைகள் கெட்டியாகத்தான்இருக்கிறார்கள்.
வாங்க சேகர். நன்றி.
வாங்க தங்கராஜ். மிகக் நன்றி.
Post a Comment