Sunday, June 10, 2012

வேகத்தில் செத்து விடு

ஆறாவது படிக்கும் போது கிடைத்த கோடை விடுமுறையின் போது சைக்கிள் கற்றுக் கொண்டதாக ஞாபகம்.  அப்போது உடன் படித்த வகுப்புத் தோழன் அனந்த ராமனிடம் மட்டும் சைக்கிள் இருந்தது. அதுவும் அவன் அப்பா அரசாங்க ஊழியராக இருந்த காரணத்தால் அந்த வண்டியை ஞாயிறு கிழமை சமயத்தில் மெதுவாக நகர்த்தி எடுத்துக் கொண்டு வரச் செய்தோம். அந்த சைக்கிளை வைத்து குரங்கு பெடலை அடித்து அடித்து நாலைந்து நாட்களில் யெ.மு வீட்டுச் சந்தில் நன்றாக ஓட்டக் கற்றுக் கொண்டேன்.  

அந்த சைக்கிள் மூலம் மற்ற சந்துகளுக்கும் பயணம் செய்த போது தொடங்கிய வேகம் படிப்படியாக வளர்ந்து கொண்டே இருந்தது.  குரங்கு பெடலில் இருந்து கை விட்டு ஓட்டும் அளவுக்கு வளர்ந்தது.  பேய் வேகம் போல சந்துகளில் ஓட்டியிருக்கின்றேன்.  அதன் பிறகே வீட்டுக்குள் இருந்த ஒரே சைக்கிளில் ஓட்ட வாய்ப்பு கிடைத்தது. அப்பா இல்லாத சமயங்களில் திருட்டுத்தனமாக ஓட்டிக் கொண்டிருந்தேன். ஆனால் வேகம் மட்டும் குறைந்தபாடில்லை.  

சைக்கிளில் தொடங்கிய பயணம் பைக் வரைக்கும் வந்து நின்ற போது இன்னும் வேகம் அதிகமானது. பைக்கில் உள்ள ஆக்ஸிலேட்டர் என்ற பகுதி முறுக்குவதற்கு மட்டுமே என்று முடிந்தவரைக்கும் புகை பறக்க உயிர் பயமின்றி ஓட்டிக் கொண்டிருந்தேன்.

கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு ஏறக்குறைய 13 வருடங்களுக்குப் பிறகு தான் மனதில் ஒரு நிதானம் வந்தது.  இரண்டு சக்கர வாகன ஆசையும் தீர்ந்தது. கூடவே முதுகு வலியும் நிரந்தரமாக வந்து சேர்ந்தது. 

மூச்சு முட்ட அசந்து போயிருக்கின்றேன்.  ஆனால் பயம் மட்டும் வந்ததே இல்லை.  நல்லவேளையாக பெரிதான எந்த விபத்திலும் மாட்டியதுமில்லை. ஓரே ஒரு முறை சென்னையில் பெரம்பூர் பெராக்ஸ் சாலையில் கொட்டிக்கிடந்த திரவங்களில் திரைப்படங்களில் வருவது போது பல அடி தொலைவு சறுக்கிக் கொண்டே போய் விழுந்தது இன்னமும் நினைவில் உள்ளது.

காலச்சக்கரத்தில் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும் வாய்ப்பு கிடைத்தது.  ஆட்டோ முதல் அத்தனை வண்டிகளையும் ஓட்டியிருக்கின்றேன். ஓட்டும் வண்டியின் ஜாதகம் பற்றி எதுவுமே தெரியாமல் ஈரோடு செல்லும் சாலைகளில் இரவு பகல் பாராமல் பல முறை விரட்டி சென்று இருக்கின்றேன். சொந்தமாக கார் வந்த போதிலும் அந்த வேகம் மட்டும் குறைந்தபாடில்லை.  முக்கிய காரணம் ஓட்டும் வாகனத்தின் உச்ச பட்ச வேகம் என்ன? எப்படி கையாள வேண்டும்? அதன் குதிரைதிறன் வேகம் என்றால் என்ன? அதன் எதிர்விளைவுகள் என்று எதையுமே யோசிக்காமல் உடைந்த சாலைகளில் வேகத்தை குறைக்காமல் கியர் மாற்றாமல் மடையனாக ஓட்டிச் சென்றுள்ளேன்.  பல முறை வண்டிக்குத் தேவையான செலவுகளை அழுது கொண்டே செய்துள்ளேன். 

எண்ணங்கள் மட்டுப்படவில்லை.  மனதில் எந்த மாறுதல்களும் உருவாகவில்லை.

இன்னும் லாரியில் மட்டும் ஏறியதே இல்லை.  மற்றபடி அத்தனை வாகனங்களிலும் ஏறி இறங்கியாகி விட்டது. அந்த அளவுக்கு இந்த நான்கு சக்கர வாகன பைத்தியம் பாடாய் படுத்தியது.  ஒவ்வொருவருக்கும் திருமணத்திற்குப் பிறகு ஒரு பெரிய மாறுதல்கள் உருவாகும் என்பது பொது விதி.  ஆனால் அதிலும் நான் விதிவிலக்காக இருந்துள்ளேன்.  ஆனால் சண்டிக்குதிரையை உலுக்கிப் பிடிக்க வருபவர்கள் தான் குழந்தைகள் என்பதை தான் மெதுவாக கண்டு கொண்டேன். 

குழந்தைகள் வளர வளர, குடும்பத்தினருடன் வாகனத்தில் வெளியே செல்லும் போது மனம் படும் சொல்லி மாளாது.  எத்தனை பேர்களை கதறடித்தோமோ?  எந்தந்த சமயத்தில் பயங்காட்டினோமோ தெரியவில்லை. அதன் மொத்த அவஸ்த்தைகளையும் இப்போது தான் கண் எதிரே அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன்.  கூடவே நமது சாலைகளின் அவலங்களையும் பயணிப்பவர்களின் புத்திசாலிதனத்தையும் ரொம்பவே யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.

இப்போது ஓட்டிக் கொண்டிருக்கும் வாகனத்தின் சிசி அளவு 2000.  ஆனால் குடும்பத்தினர் உங்களுக்கெல்லாம் பெண்கள் ஓட்டும் ஸ்கூட்டி தான் லாயக்கு என்று கிண்டல் செய்யும் அளவுக்கு மிதி வண்டி வேகத்தில் தான் பயணித்துக் கொண்டிருக்கின்றேன். 


ஒரு வாகனத்தின் முழுமையான குதிரைத்திறன் வேகம் எப்போது தெரிய வருகின்றது என்றால் நாம் கூட்டத்திற்கிடையே ஊர்ந்து செல்ல வேண்டியிருக்கும் சூழ்நிலையில் தான் புரிகின்றது. அந்த சூழ்நிலையில் தான் அந்த வாகனத்தை நாம் எந்த அளவுக்கு கையாளவேண்டும் என்ற புத்திசாலித்தனம் புரிகின்றது.  ஆனால் பாதசாரிகளுக்கு அதை புரியவைக்க முடியாது என்பதையும் உள் மனம் சொல்லத் தான் செய்கின்றது.  எவர் மேலாவது இடித்தால் மகா குற்றம்.  வண்டியை மற்ற வாகனங்களில் இருந்து இடிபடாமல் கர்த்துக் கொள்வதும் அதை விட முக்கியமாக இருக்கிறது.

கோடை விடுமுறைக்கு ஊருக்குச் சென்றவர்களை அழைத்து வரும் பொறுப்பின் காரணமாக சென்றவனுக்கு கூடுதல் பரிசாக கடலூர், பாண்டிச்சேரி வரைக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது.  கடல் அலைகளில் காலை நனைத்தே ஆக வேண்டிய கட்டாய நிர்ப்பந்ததையும் உருவாக்கினார்கள். ஏறக்குறைய ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்த அந்த பயணத்தின் போது சாலை விபத்துகள் இந்தியாவில் ஏன் இந்த அளவுக்கு தினந்தோறும் நடந்து கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டேன்..

சேலத்திற்கு பல முறை நான்கு சக்கர வாகனங்களில் தொழில் நிமித்தமாக சென்றுள்ளேன். ஈரோட்டுககுச் செல்ல வேண்டிய அவசியமில்லாமல் சங்ககிரி வழியாக செல்லும் மாற்றுச் சாலையில் சென்றுள்ள போதும் இயல்பான வேகத்தில் தான் சென்றுள்ளேன். நாலைந்து வருடங்களுக்கு முன்னால் இருந்த சாலை வசதியில் ஒவ்வொருவரும் நிதானமான வேகத்தில் பயணிக்க முடியும். இடையிடையே வரக்கூடிய ஊர்களில் உள்ள கடைத்தெருக்களில் உள்ள கூட்டத்தை தாண்டிச் சென்றால் கொஞ்சம் கூடுதலான வேகத்தில் செல்ல முடியும்.. 

ஆனால் தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வசதிகளின் மூலம் சொல்லி வைத்தாற் போல் நாம் ஓட்டிச் செல்லும் வாகன வேகத்திறன் மூலம் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று விட முடியும், தேசிய நெடுஞ்சாலை வசதிகளின் மூலம் ஒட்டுநர்களுக்கு கிடைத்த வேகம் அலாதியானது. 


ஆனால் இந்த ஆனந்தமான பயணத்திற்கு சமூகம் கொடுத்த விலை துயரமானது. மரங்களே தேவையில்லை என்பது போன்ற சூழ்நிலையை எளிதாக உருவாக்கி விட்டார்கள். கூடவே தேசிய நெடுஞ்சாலை பயணம் என்பது மிக மிக ஆபத்தானது என்பதை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.  குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளில் நீங்கள் பயணித்திருந்தால் உங்கள் உயிர் உங்கள் கைகளில் இல்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

வண்டிகளில் உள்ள விளக்கு வசதிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைக் கூட உணர்ந்து கொள்ள மறுக்கும் ஒரு முட்டாள் சமூகத்தை தாண்டி தான் நீங்கள் உயிருடன் வீட்டுக்கு வர வேண்டும்.  கண்களை கூச வைக்கும் விளக்கை எந்த குற்ற உணர்ச்சியுமின்றி போட்டுக் கொண்டு ஸ்பைடர் மேன் போல பறந்து வருவதைப் பார்த்து பல முறை உலகில் உள்ள அத்தனை சக்தியையும் வேண்டிக் கொண்டு ஒரு ஓரமாக நிறுத்திக் கொண்டதுண்டு. இதன் காரணமாக இரவு நேரத்தில் வாகனங்களில் செல்ல வேண்டிய அவசிய சூழ்நிலை உருவானாலும் அடுத்த நாள் பகலுக்கு அதை மாற்றிவிடுவதுண்டு. 

திருப்பூருக்குள் பயணிக்கும் போது 40 கிலோ மீட்டர் வேகத்திலும் ஊருக்குச் செல்லும் போது அதிகபட்சம் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் ஓட்டும் வழக்கத்தை கொண்டுள்ள எனக்கு தேசிய நெடுஞசாலையில் செல்லும் வண்டிகளின் வேகத்தைப் பார்த்தால் மனதில் கிலியடிக்கின்றது.  உத்தேசமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பறக்கின்றார்கள். டெயோட்டா காரில் நண்பர் திருப்பூரில் இருந்து சென்னைக்கு ஆறு மணி நேரத்தில் சென்றடைந்தாக சொன்ன போது ரயிலின் வேகத்தை ஒப்பிட்டுக் கொண்டேன். 

தற்போதைய தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநர்களுக்கு அற்புதமான வசதிகள் இருக்கிறது.  இந்த வசதிகளுக்காகவே வரி என்ற பெயரில் கொள்ளை ரூபத்தில் வசூலிக்கிறார்கள்.  ஆனால் சாலைகளின் இடையே விபத்து எதுவும் நடந்தால் நிச்சயம் உங்கள் ஜாதகத்தை தான் நம்பிக் கொள்ள வேண்டும்.

அருகில் மருத்துவமனை எங்கே உள்ளது? அந்த மருத்துவமனைக்கு உங்களை யார் கொண்டு போய் சோர்ப்பார்கள்?  எப்போது சேர்ப்பார்கள் என்பதெல்லாம் படைத்தவனுக்கே தெரியும்? எந்த இடங்களிலும் எந்த வசதியும் இல்லை.  நாம் தான் நம் உயிருக்கு உத்திரவாதம்.  ஆனால் எவரும் அதை உணர்ந்ததாகவே தெரியவில்லை. குறிப்பிட்ட இடங்களைப் பற்றி அறிவிப்பாக விளக்கும் தெளிவான வசதிகள் இன்னமும் மேம்படுத்த வேண்டும்.  கொஞ்சம் அசந்தாலும் வேறு பாதையில் நாம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

நாம் ஓட்டும் வண்டியில் வேக முள் நூறைத் தொடும் போது குடும்பம் நினைவில் வந்து போகின்றது.  காரணம் தேசிய நெடுஞ்சாலையாக இருந்த போதிலும் எப்போது என்ன நடக்கும் என்பதே புரிந்து கொள்ள முடியவில்லை.  திடீரென்று ஒரு வாகனத்தில் குறுக்கில் இருந்து ஒருவர் வருகின்றார்.  அதைத் தாண்டி சென்றால் முன்னால் சென்று கொண்டிருப்பவர் திரும்பப் போகின்றேன் என்ற சமிக்ஞை இல்லாமல் சர்ரென்று திரும்புகின்றார். 

வியர்த்து விடுகின்றது.   

ஏற்கனவே ஈரோடு செல்லும் பாதைகளில் இருந்த மிச்சம் மீதி மரங்களைப் பார்த்த எனக்கு தற்போது எங்கு பார்த்தாலும் பொட்டைக்காடுகளாகத் தெரிகின்றது.  நான் பயணித்து வந்த ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுகளிலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மரங்களே இல்லை என்கிற அளவுக்கு நாம் முன்னேறிக் கொண்டிருக்கின்றோம். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகம்.  வாகனத்தில் உள்ள குளிர்சாதன வசதியை பயன்படுத்த விரும்பாத எனக்கு அடிக்கும் வெக்கையில் மயக்கமே வந்து விடுகின்றது. நாம் சொந்த விருப்பங்களை குடும்பத்தினர் மீதி திணிக்க முடியாத சூழ்நிலையில் அடிக்கும் வெக்கை காற்றில் குழந்தைகளில் மூச்சு முட்டி மயக்கம் போடும் நிலைக்கு வந்து விடுகின்றார்கள். மரங்களை மட்டும் இழக்கவில்லை.  வசதிகளுக்காக மனிதத்தையும் இழந்து தற்கால வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..  

வெளிநாடுகளில் முறைப்படியான ஓட்டுநர்கள், உரிமங்கள், அது தொடர்பான சட்டங்கள், குற்றச்செயல்களுக்கு உரிய தண்டனை என்ற சூழ்நிலை எதுவும் இந்தியாவில் இல்லை.  எதுவும் எப்போதும் நடக்கலாம் என்ற சூழ்நிலையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலை விபத்தில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திருப்பூருக்குள் துணை நிறுவனங்கள் முதல் சுமாரான நிறுவனங்கள் வரைக்கும் சுமாரான சம்பளம் என்பதை மனதில் வைத்துக் கொண்டே ஓட்டுநர்களை தேர்ந்தெடுக்கின்றார்கள். இவர்களைத்தான் தங்களது அத்தனை வாகனங்களுக்கும் ஓட்டுநர்களாக வைத்திருக்கின்றார்கள். இவர்கள் அத்தனை பேர்களும் தென் மாவட்டத்தில் உள்ள வண்டிகளில் கிலி (கீளீனர்) யாக வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சந்தர்ப்ப வசதிகளை பயன்படுத்திக்கொண்டு ஓட்டுநர்களாக அவதாரம் எடுத்தவர்கள்.

இவர்கள் தான் திருப்பூர் மக்களின் அன்றாட வாழ்க்கையை கிலியடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற மொத்த நாட்டிலும் ஓட்டுநர்களின் தரம் இருக்கின்றது. அரசாங்கத்தின் ஒவ்வொரு சட்டமும் ஒரு குறிப்பிட்ட துறைக்கு தனிப்பட்ட முறையில் லஞ்சத்தை உருவாக்க காரணமாக இருக்கிறதே தவிர உருப்படியான முடிவு கொண்டு வருவதாக இல்லை. 

இதைப் போலவே தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் 70 சதவிகித விபத்துக்கள் மனிதர்களின் அவசரத்தினால் மட்டுமே நடக்கின்றது. முக்கிய காரணம் நாம் அவரை முந்திக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உருவாகின்றது.  பின்னால் வந்து கொண்டிருப்பவர்கள் எந்த அடிப்படைக் காரணமும் இல்லாமல் முந்திச் செல்ல முற்படும் போது தான் உருவாகின்றது. எதிரே வரும் வண்டியின் அதிகபட்ச வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இரண்டு வாகன்த்தில் உள்ளவர்களும் பரலோகத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.  கூடவே அருகே வரும் வண்டியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பரிசும் கிடைத்து விடுகின்றது.  நாம் முறைப்படி சாலை விதிகளை கடைபிடித்துச் சென்றாலும் நாம் சரியாக வீடு வந்து சேர முடியுமா? என்பது நிச்சயமற்ற நிலையில் தான் பயணிக்க வேண்டியிருக்கிறது. 
இது தவிர பாயிண்ட் டூ பாயிண்ட் என்று சாலைகளில் பறக்கும் தனியார் பேரூந்துகள் என்ற பெயரில் எமதர்ம ராஜாக்கள் பலரையும் படாய் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நம் வாகன்த்திற்கு பின்னால் வரும் போது இவர்கள் அடிக்கும் அலார சப்தம் என்பது உங்கள் இதயம் பலவீனமாக இருந்தால் நிச்சயம் மாரடைப்பில் இறந்து விடுவீர்கள். 

நாரசாரமான சங்கேத மொழி போல தொடர்ச்சியாக அடித்துக் கொண்டே வருவார்கள். உங்களை காப்பாற்றிக் கொள்ள கோபப்படாமல் ஒதுங்கியே ஆக வேண்டும்.

ஒரு வாரத்திற்கு முன்பு கோவை தேசிய நெடுஞ்சாலையில் தெக்கலூர் அருகே சாலையை கடக்க முற்பட்ட பள்ளிக்குழந்தை ஒன்று எதிரே வந்த லாரியின் வேகத்தைப் பார்த்து முடிவெடுக்க முடியாமல் நடு சாலையில் அப்படியே நின்று விட்டது.  கூட வந்த மற்ற குழந்தைகள் ஓடி விட்டார்கள்.  வந்த லாரியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத ஓட்டுநர் குழந்தையின் மேல் ஏற்றி நூறடி தாண்டி தான் அவரால் நிறுத்த முடிந்தது.  கண் எதிரே கண்ட எனக்கு அந்த குழந்தையின் சிதைந்த உறுப்புகள் துடித்த துடிப்புகளில் என்து இதயமே நின்று அழுகை என்னை அறியாமல் வந்து விட்டது.  

அந்த குழந்தையின் பெற்றோர்கள் காலையில் எப்படி அனுப்பியிருப்பார்கள்? இந்த செய்தி குடும்பத்தினருக்கு தெரியுமோ? தெரியாதோ? எத்தனை மணிக்கு தகவல் சொன்னார்கள்?  அவர்களுக்கு இந்த குழந்தை ஒன்று மட்டும் தானா?  பல கேள்விகள் என் மனதில் வீட்டுக்கு வந்து சேரும் வரைக்கும் ஓடிக் கொண்டேயிருந்தது.  உருவான கை கால் நடுக்கத்தில் வாகனத்தைக் கூட சரியாக கையாள முடியவில்லை. நிச்சயம் அந்த விபத்தை உருவாக்கிய ஓட்டுநருக்கு இந்திய தண்டனைச் சட்டங்கள் எந்த பெரிய பிரச்சனைகளையும் அவர் வாழ்க்கையில் உருவாக்கி விடாது. இன்னும் நாலைந்து மாதங்களில் அவர் இது போல எத்தனை விபத்துக்களை உருவாக்குவாரோ?

இதில் ஆச்சரியப்படக்கூடிய ஒரே ஒரு சமாச்சாரம் என்ன தெரியுமா?  

ஒருவர் தான் பயணிக்கும் பாதையில் பார்க்கும் எந்த கோர விபத்தும் அவரை எந்த நிலையிலும் பாதித்ததாக தெரியவில்லை.  அவர்களின் வேகமும் குறைந்ததாக தெரியவில்லை.  

எந்த வாகனத்தில் சென்றாலும், நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை அமைந்தாலும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான். 

நமது மனம் எதைக்கண்டும் கோபப்படாமல் நிதானமாக இருந்தே ஆக வேண்டும். எந்த சேதாரமும் இல்லாமல் வீட்டுக்கு வந்தே ஆக வேண்டும்  மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கின்றேன் என்ற நினைத்துக் கொண்டு நடு சாலையில் அவர்களுட்ன் மல்லுக்கட்டி நிற்பதைக் காட்டிலும் எப்படி சரியாக சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை நாம் கடைபிடித்து அமைதியாக வந்து விட்டாலே போதுமானது. 

அந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் நம் உயிர் நம் கையில்.

காரணம் இது காந்தி தேசம்.  நாம் தான் நமக்குத் தேவையான அளவுக்கு சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

33 comments:

Rathnavel Natarajan said...

சாலைப் பயணம் என்றாலே பதறுகிறது. யாருக்கும் அக்கறை இல்லை.
இந்த பதிவை எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மிக்க நன்றி.

Ravichandran Somu said...

சாலை விதிகளைப்பற்றி கவலைப்படாமல் தறிகெட்டு ஒட்டும் ஓட்டுனர்கள்...ஒழுக்கம் இல்லா இந்தியாவின் மற்றுமொரு வெளிப்பாடு :(((

ராஜ நடராஜன் said...

வாகன சீட்டில் உட்கார்ந்தவுடன் ஒரு கெத்து வந்து விடுவதும் துரத்தி முன்னேறு என்பதும் உலகளாவிய மனநிலையா என்று மேற்கத்திய நாடுகளில் பயணம் செல்பவர்கள் சொன்னால் பரவாயில்லை.

நானே விரும்பினாலும் எனது வாகனம் மெதுவாக போகமாட்டேன் போ என்ற வேகவண்டி.ஆனாலும் சாலை விதிகளை மதிக்கவேண்டுமென்று நினைத்தாலும் கூட அரபிகளுக்கு பொறுமை இருப்பதில்லை.இடது புறமிருந்து வலது புறம் போகிறேன் என்று சிக்னல் கொடுத்து விட்டு அடுத்த ட்ராக்கில் பின்னால் யாராவது வருகிறார்களா என்று பார்க்கும் கண நிமிடங்களில் கீ.கீ என்று சத்தமிட்டு கண்ணாடிக் கதவுக்குள் திட்டிவிட்டே போகும் கலாச்சார காவலர்கள் நிறைய பேர்.

ஒற்றை வழிப்பாதையில் ஓவர் டேக் எடுக்க மாட்டேன்.அப்படியும் பின்புறத்தில் முட்டும் படி வரும் புத்திசாலிகள் நிறைய பேர்.

துவக்கத்தில் வாகனம் ஓட்டுவது பிரமிப்பு.பழகிப்போனவுடன் வாகனம் ஓட்டுவது அவஸ்தை.

நீண்ட நெடுஞ்சாலைகள்,போன மாதம் சந்தைக்கு வந்த கார் வைத்திருப்பவே ஆக்ஸிடெண்ட் செய்யும் போது ஜனத்தொகைக்கு ஒவ்வாத குறுகிய சாலைகள்,நெருக்கடி,சாலை குணநலன்கள் இல்லாத சுதந்திரத்தில் விபத்துக்கள் இன்னும் அதிகமே.

Avargal Unmaigal said...

/////லாரியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத ஓட்டுநர் குழந்தையின் மேல் ஏற்றி நூறடி தாண்டி தான் அவரால் நிறுத்த முடிந்தது. கண் எதிரே கண்ட எனக்கு அந்த குழந்தையின் சிதைந்த உறுப்புகள் துடித்த துடிப்புகளில் என்து இதயமே நின்று அழுகை என்னை அறியாமல் வந்து விட்டது. ///


உங்கள் பதிவை படித்து கொண்டு வந்த எனக்கு மேலே உள்ள வரிகளை படித்ததும் எனது இதயத்திலும் ஒரு வலி போன்ற உணர்வு தோன்றியது நண்பரே...

இந்த மாதிரியான ஒட்டுனர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மனிதர்களின் உயிர்மீது எப்போதும் அக்கறைகிடையாது

வெங்கட் said...

'லாரியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத ஓட்டுநர் குழந்தையின் மேல் ஏற்றி நூறடி தாண்டி தான் அவரால் நிறுத்த முடிந்தது. கண் எதிரே கண்ட எனக்கு அந்த குழந்தையின் சிதைந்த உறுப்புகள் துடித்த துடிப்புகளில் என்து இதயமே நின்று அழுகை என்னை அறியாமல் வந்து விட்டது.' - படிக்கும் போதே மனம் பதைபதைக்கிறது! நம் நாட்டில் போக்குவரத்து விதிகள் பெயருக்குத்தான் உள்ளன! தொலைகாட்சிகளில் விழிப்புணர்வு விளம்பரங்கள் நிச்சயம் தேவை!

Anonymous said...

மிக மிக நீளமான , அவசியமான, அருமையான பதிவு. பகிர்விற்கு நன்றி!
http://atchaya-krishnalaya.blogspot.com

Unknown said...

உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.காந்திநகரில் தண்ணீர் லாரி பள்ளி குழந்தைகள் மீது ஏறிச் சென்று விபத்து நடந்து கலவரம் நடந்து சில உயிர்கள் துப்பாக்கி சூட்டிலும், விபத்திலும் பலியானது மறக்கமுடியாத வடுவாக இருக்கின்றது, ஆனாலும் மாநகராட்சி சார்பாக ஓடும் தண்ணீர் லாரியைப் பார்த்தால் பயமாக இருக்கின்றது! நம்து அரசின் லட்சனம்..மாநாகராட்சியின் நிர்வாகம் கேள்விகுறியாக இருக்கின்றது...நான் அந்த விபத்தைக் கண்டபிறகு வேகத்தைக் குறைத்துக் கொண்டேன்!

arul said...

nice awareness post

அனைவருக்கும் அன்பு  said...

அனுபவம் பேசுகிறது ...............
அலச்சியம் செய்யாமல் கேட்க துணிகிறது......

மரணத்தின் பயம் கவ்விகொண்டதால் ........

விழிப்புணர்வு பதிவு அருமை ........வாழ்த்துக்கள் உங்கள் பயணம் சிறக்க

Anonymous said...

Man born with selfishness but certain people's
selfishness is unpardonable.M.Baraneetharan.

திண்டுக்கல் தனபாலன் said...

"நல்ல விழிப்புணர்வு பதிவு ! நன்றி நண்பரே !

Unknown said...

நாம என்னதான் ஸ்லோவா கரெக்டா போனாலும் பின்னாடி வரவந்தான் முடிவு பண்ணுவான், நாம பத்திரமா வீட்டுக்கு போகனும் வேண்டாமாங்கறத, சரியா சார்? எல்லாரும் சாலை விதிகளை சரியா கடைபிடித்தால் ஒழிய ஒன்னும் நடக்காது, ஆனா அதை அமுல்படுத்த வேண்டிய காவல்துறைய கவனிச்சிட்டா எல்லாம் நடக்கும் இங்க, உங்கள மாதிரியே கமெண்டு போடறனா சார்?

Thoduvanam said...

மிகத் தேவையான அருமையான பதிவு.பகிர்வு.

geethappriyan said...

அருமை நண்பர் ஜோதிஜி,
மிக அவசியமான பதிவு,என் வேகம் டூவீலரில் 40 தான்,அதற்கு மேல் போக விருப்பமும் இல்லை,மைலேஜும் தருவதில்லை,உதிரி பாகமும் சீக்கிரம் மாற்ற வேண்டி வரும்.ஒரு வாரமாக வண்டியில் ஹாரன் வேலை செய்யவில்லை,அதனால் என்ன என்னால் ஆன ஒரு நன்மை என்று ப்ரேக்கை ஹார்ப்பாக்கி வைத்துக்கொண்டேன்.ஹாரன் அடிக்காமல் வண்டி ஓட்ட பழகிக்கொண்டேன்,கடந்த சுமார் 10 வருடமாக சுற்றுப்புறத்தை நாய்ஸ் பொல்யூட் செய்துள்ளேன் என நினைத்து வருந்தினேன்.

தாராபுரத்தான் said...

நாங்களு்ம உங்களோடு சேர்்நது பயண்ம வந்த மாதிரி இரு்ககுங்கோ..

ஜோதிஜி said...

தாராபுரத்தான் நீங்க சொன்ன மாதிரி தான் நம்ம இரவு வானம் சுரேஷ் ம் சொன்னார்.

கீதப்பிரியன் ரொம்ப நாளைக்குப் பிறகு... வாங்க.. வாங்க. வண்டியில் பெரும்பாலும் ஹாரன்சப்தம் இல்லாமலேயே ஓட்டப் பழகி விட்டேன். ஆரம்பம் முதலே... காரணம் நம்ம வேகம் அப்படி?

வணக்கம் காளிதாஸ். மிக்க நன்றி.

வாங்க தனபாலன்.

பரணிதரன்... நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. அநியாய சாவுகள் இப்படித்தான் சாலையில் நடக்கின்றது.

வாங்க சரளா? சுரேஷ் உங்கள் தமிழ் மொழி ஆராய்ச்சி மற்றும் ஆர்வத்தை சொல்லியுள்ளார். பேச வேண்டும் உங்களோடு.

நன்றி அருள்.

ஜோதிஜி said...

வீடு சுரேஷ்குமார்.

அருகே இருந்து கொண்டு அந்த சோக நிகழ்வை மறக்க முடியுமா? மன்னிக்கவும். நிச்சயம் விரைவில் உங்களை சந்திக்கின்றேன். அலைபேசியில் அதிகம் பேசமுடியவில்லை.

வாங்க அட்சயா.

அவர்கள் உண்மைகள்

உண்மை தான் வெங்கட்... இதை எழுதும் போதே மிகுந்த பிரயாசைப்பட்டு எழுதும் படி தான் இருந்தது.

ராஜ நடராஜன்

துவக்கத்தில் வாகனம் ஓட்டுவது பிரமிப்பு.பழகிப்போனவுடன் வாகனம் ஓட்டுவது அவஸ்தை............ அப்பட்டமான உண்மை. என் எண்ணமும் தற்போது இதே.. இதே.

ரவி நீங்க எழுதிய ப்ள்ஸ் படித்தே போது இந்த அனுபவத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். இந்த கட்டுரை உங்களுக்கு சமர்ப்பணம். ஓழுக்கம் என்பது கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் 90 சதவிகித ஓட்டுநர்கள்... மக்களைப் பற்றி சொல்லவா வேண்டும்?

அய்யா ரத்னவேல் உங்கள் முதல் வருகைக்கும் தொடர் வாசிப்புக்கும் என் நன்றி.

துளசி கோபால் said...

சாலை விதிகள் என்று ஒரு சமாச்சாரம் இன்தியாவில் இருக்கா என்ன?

வீடு விட்டு வெளியே போகும் நபர்கள் சேதாரமில்லாமல் வீடு திரும்புவது அவர்கள் விதி முடியாததால்தான்!

ஸ்பீட் கில்ஸ் Speed Kills.

அருமையான பதிவு ஜோதிஜி. இனிய பாராட்டுகள்.

தருமி said...

பயமா இருக்கு ...

Unknown said...

ஜி இதில் ஒரு சின்ன காமேடி இருக்கு கவனிச்சு இருக்கீங்களா ?

இப்படி அட்வைஸ் பண்ணுறவங்க.. அத படிச்சு ஆமான்னு சொல்லுறவங்க யாருக்கும் இந்த அட்வைஸ் தேவை இல்ல...

அட்வைஸ் தேவைபடுறவங்க இத மாதிரி விஷயத்த படிக்கிறதோ கேட்கிறதோ இல்லை....

ஓஷொ சொல்லுற மாதிரி.. உயிர் ஆபத்து ..ரிஸ்க்.. எதிரில் ..வரும்போது சிலருக்கு தியான நிலை உடல் கடந்த நிலை , மனமற்ற நிலை ..உடலுறவின் உச்ச நிலை போன்ற நிலை ஏற்படுகின்றது...

அதற்காக அவங்க அப்படி தான் ஓட்டுவாங்க... ஆபத்து அவங்களுக்கும் தான் எதிரில் இருப்பவங்களுக்கும் தான்...


எனவே. இந்த மாத்ரி ரிஸ்கு ரஸ்கு.. ஆசாமிகளை திருத்த..... ......

...
..
..
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஒண்ணுமே.. செய்ய முடியாது....
இவங்க வாகனம் நமக்கு எதிரில் வரமால இருக்க வேண்டும்னு எம தர்ம ராஜவை வேண்ட மட்டும் தான் முடியும்...

Unknown said...

இன்னொறு சமாச்சாரம் ஜி சொல்ல எனக்கு இரண்டாவது மகன் பிறந்து இருக்கான்.
...


உங்கள மாதிரி பெண் பிள்ளைக்கு அப்பாவக எனக்கு கொடுப்பினை இல்ல போல...

Unknown said...

இதில் இன்னமொறு விஷயம்...

அவனுக்கு செவ்வாய் லக்னத்தில் இருக்கிற ஆசாமி...
அதகாக பட்டது இவனும் ரிஸ்கு ரஸ்கு ஆசாமி..

Robert said...

வண்டிகளில் உள்ள விளக்கு வசதிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைக் கூட உணர்ந்து கொள்ள மறுக்கும் ஒரு முட்டாள் சமூகத்தை தாண்டி தான் நீங்கள் உயிருடன் வீட்டுக்கு வர வேண்டும்.//

நானும் அனுபவித்த,அனுபவிக்கிற அவஸ்தை...

தமிழ் அஞ்சல் said...

வாகன பயணமே வாழ்க்கை என்றான பிறகு.. வேகம் மனதோடு ஒட்டிக்கொண்டு விட்டது..சாலைகளின் மீதான ஆளுமை அதிகமானதால் துளியும் பயமில்லை..சராசரியாக ஆண்டுக்கு 4 முறை கையை, காலை உடைத்து கொள்வதே வழக்கம்.,140 கி.மீ வரை வேகமாக வாகனம் ஓட்டிமணிக்கு 70 கி.மீ. தூரம் டூ வீலரில் கடக்கிறேன் என்ற பெருமையை தகர்த்து.,முறையாக வாகன ஓட்டும் பயிற்சியும், 10 வருட சாலை அனுபவமும் இருந்த போதும் வேகத்தின் அபாயம் தெரிய வைத்த கட்டுரை.. எல்லா மனிதனும் இப்படித்தான்..

தமிழ் அஞ்சல் said...

சாலை விதிகளை கற்றுக்கொடுக்காமல்,. அதற்கான வாய்ப்பையும் அளிக்காமல் அரசே எல்.எல்.ஆர். முதல் அனைத்து தேர்வுகளையும் தேர்ச்சி பெற செய்த ஓட்டுனர் உரிமங்களை அள்ளி வழங்குவதும் ஒரு காரணம்.. இந்த ஆண்டு போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் இத்தனை லட்சம் பேருக்கு லைசன்ஸ் வழங்கப்பட்டு உள்ளது என்று அவர்கள் அறிவிக்கும் போது.. இவ்வளவு பேரை அப்பாவியாக சாலைகளில் சாக அனுப்புகிறார்கள் என்றே நினைக்க தோன்றுகிறது..

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் மிக அதிக எண்ணிக்கையில் விரையும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் செய்தித்தாள்களைப் படிக்கவே பயமாக இருக்கும் அளவுக்கு விபத்துகள் ஏற்படும். பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கிக் கொள்வதும், அவர்கள் செல்லும் வாகனங்களால் அந்தந்த சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்வதும், கொடுமையாக இருக்கும்... இதை உணர்ந்து வேறு மாதங்களுக்கு இந்த பக்தர்கள் தங்கள் நேர்த்தி விரதக் கடமைகளை மாற்றிக்கொள்ள மாட்டார்களா என்று ஆதங்கமாக இருக்கும்... தங்கள் உயிரை விட, மற்றவர்களின் உயிரைவிடவா எந்தவொரு சாமியும் பெரியது?

ஆதங்கத்துடன்,

சிவா,
தெற்கு சூடான்,
ஆஃப்ரிக்கா...
nirmalshiva1968@gmail.com

ஜோதிஜி said...

சிவா நலமா? பழைய பதிவுகள் இப்பத்தான் படிக்கிறீங்களா?

Unknown said...

நல்ல நலத்துடன் இருக்கிறேன் தோழர்...

நிறைய வேலைப் பொறுப்புக்களின் மத்தியில் தங்களுடைய பதிவுகளைப் படித்து வருகிறேன்.

அன்புடன்,

சிவா

Unknown said...

06.09.2013 தேதியிட்ட ஃப்ரன்ட்லைனில் இன்று படித்த ஒரு கட்டுரை “Deaths on the Road” - இதில் வேகமாக வண்டி ஓட்டுதல், குடிபோதையில் வண்டி ஓட்டுதல், ஹெல்மெட் அணியாதது, சீட் பெல்ட் அணியாதது, மற்றும் செல்ஃபோன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டுவது இவற்றை சாலை விபத்துக்களின் முக்கியக் காரணிகளாக விவரித்திருக்கிறார்கள்...கூடுதல் விபரங்களுக்கு இணைப்பைப் பாருங்கள்...

http://www.frontline.in/other/data-card/deaths-on-the-road/article5041257.ece?homepage=true

praveenc85 said...

அருமையான பதிவு!

நலம்விரும்பி said...

வாகன பயணங்கள் நேரத்தைக் குறைக்கிறது; அதிவேக பயணம் கட்டுப்பாட்டை இழக்கச்செய்து வாழ்வையே சூறையாடுகிறது - பாவம்! அவர்களை நம்பிய குடும்பங்கள்தாம்.. என்றுணரப் போகிறார்களோ தெரியவில்லை?!.. எனது குறை அரசாங்கத்தின் மீது தான்.. வாகன உற்பத்திக்கு வெளிநாடு கம்பெனிகளுக்கு இடமளித்து, 'நம்மவர்களுக்கு வேலைவாய்ப்பு' என்பதால் சலுகையளித்து, நகர விற்பனையகங்களில் விற்பதற்கு அங்கீகாரமளித்து, காக்கி முதல் வெள்ளையுடைக்கு சொந்தமானவர்கள் அனைவரும் கையூட்டுகள் பெற்று, தடையில்லா கட்டுப்பாடற்ற உற்பத்திக்கும் அனுமதியளித்து வந்தால்...
பெருகும் வாகனங்களுக்கு ஏற்ற தரமான போக்குவரத்து சாலைகள் இல்லாததால் விபத்துகளும் உயிரிழப்புகளும் பெருகாமல் வேறென்ன பெறுகும்? இந்திய அரசாங்கம் இனியாவது மக்கள் நலனைக் கருத்திற்கொள்ளுமா?
ஹெல்மெட்டை விட தரமான சாலைகளும், நேர்மையான சாலை விதிகளும், அதைவிட வாகன தொழிற்சாலைகளுக்கான கடுமையான உற்பத்தி கட்டுப்பாடுகளுமேயாகும்..

- சாலை விபத்தொன்றில் உடன் சகோதரனை இழந்த ஆதங்கத்தில் செய்யும் பதிவிது..

நலம்விரும்பி said...

வாகன பயணங்கள் நேரத்தைக் குறைக்கிறது; அதிவேக பயணம் கட்டுப்பாட்டை இழக்கச்செய்து வாழ்வையே சூறையாடுகிறது - பாவம்! அவர்களை நம்பிய குடும்பங்கள்தாம்.. என்றுணரப் போகிறார்களோ தெரியவில்லை?!.. எனது குறை அரசாங்கத்தின் மீது தான்.. வாகன உற்பத்திக்கு வெளிநாடு கம்பெனிகளுக்கு இடமளித்து, 'நம்மவர்களுக்கு வேலைவாய்ப்பு' என்பதால் சலுகையளித்து, நகர விற்பனையகங்களில் விற்பதற்கு அங்கீகாரமளித்து, காக்கி முதல் வெள்ளையுடைக்கு சொந்தமானவர்கள் அனைவரும் கையூட்டுகள் பெற்று, தடையில்லா கட்டுப்பாடற்ற உற்பத்திக்கும் அனுமதியளித்து வந்தால்...
பெருகும் வாகனங்களுக்கு ஏற்ற தரமான போக்குவரத்து சாலைகள் இல்லாததால் விபத்துகளும் உயிரிழப்புகளும் பெருகாமல் வேறென்ன பெறுகும்? இந்திய அரசாங்கம் இனியாவது மக்கள் நலனைக் கருத்திற்கொள்ளுமா?
ஹெல்மெட்டை விட தரமான சாலைகளும், நேர்மையான சாலை விதிகளும், அதைவிட வாகன தொழிற்சாலைகளுக்கான கடுமையான உற்பத்தி கட்டுப்பாடுகளுமேயாகும்..

- சாலை விபத்தொன்றில் உடன் சகோதரனை இழந்த ஆதங்கத்தில் செய்யும் பதிவிது..