Sunday, December 11, 2011

தட்டு ஏந்தி வரும் கணவான்கள்

1960 ம் ஆண்டு: இந்தியர்களின் வயிற்றுப் பசியைப் போக்க இந்தியா வெளிநாடுகளில் இருந்து வரும் கப்பல்களை எதிர்பார்த்து காத்திருந்தது.

ஆனால் 1990 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. இந்திய விவசாயத்தில் அதிகப்படியான மகசூல் காரணமாக இந்தியாவிலிருந்து அந்நிய நாடுகளுக்கு உணவுப் பொருட்கள் ஏற்றுமதியாகத் தொடங்கியது. ஆனால் இன்றோ விவசாய நாடான இந்தியா, உணவுப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சூழ்நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டு இருக்கிறது.

எங்கே தவறு செய்தோம்?


ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 7.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு விவசாயம் செய்யாமல், தொழிற்சாலைகளாகவும் வீட்டு மனைகளாகவும் மாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றது. கடந்த 40 வருடங்களாக நிலத்தில் போடப்பட்ட செயற்கை ரசாயன உரங்களின் தன்மை இப்போது தான் அதன் வேலையை முழுமையாக காட்டிக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய மலட்டு நிலங்களை வைத்துக் கொண்டு தான் இங்கே பலரும் விவசாயம் என்ற பெயரில் மாரடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நகர்புறங்களுக்குச் சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் மக்களின் மனதில் ஆழமாக பதிய நகரங்களில் சேரிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. திட்டமிடப்படாத நகரங்களில் இன்று மக்கள் தொகை பிதுங்கி வழிகின்றது. இன்று இந்திய மொத்த ஜனத்தொகையில் 30 சதவிகித மக்கள் தங்களின் ஒரு வேளை பசியைக் கூட போக்க முடியாமல் பட்டினியோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் நமக்குத் தேவைப்படும் விதைகளின் அளவு 48 மில்லியன் குவிண்டால் விதைகள். ஆனால் நம்மிடம் ஏறக்குறைய 11 மில்லியன் குவிண்டால் அளவுக்கே கைவசம் இருக்கிறது. மேலதிக தேவைக்கு, தரமான விதைகளுக்குப் பதிலாக போலிகளும் ஊடுருவதால் பற்றாக்குறை அப்படியே வளர்ந்து கொண்டேயிருக்கிறது. கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் பன்னாட்டு நிறுவனங்கள் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விவசாயிகளை சுண்டி இழுக்கின்றது. விவசாயிகளும் வேறு வழி தெரியாமல் அவற்றையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

வினையே இங்கேயிருந்து தான் தொடங்குகின்றது. இதன் பலனைத்தான் இன்று அறுவடை செய்து கொண்டிருக்கின்றோம்.


இந்திய உணவுக்கழகம் என்றொரு அமைப்பு இந்தியாவில் உள்ளது என்பது எத்தனை விவசாயிகளுக்குத் தெரியும்?

இவர்களின் செயல்பாடுகள் மொத்த இந்திய விவசாயத்திற்கும் அல்லவா இருக்க வேண்டும். ஆனால் இவர்களின் பார்வையென்பது ஹரியானா மற்றும் பஞ்சாப்பில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் என்கிற நிலையில் உள்ளது. தென்னிந்தியாவின் பக்கம் இவர்களின் பார்வை திரும்புவதே இல்லை. அரிசி உற்பத்தியில் முன்னிலை வகிக்கும்  

ஆந்திரா,தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா போன்ற மாநிலங்களை இவர்கள் கண்டு கொள்வதே இல்லை.

நம்முடைய மத்திய அரசாங்கமும் கோதுமைக்கு கொடுக்கும் மரியாதையைக் கூட அரிசிக்கு கொடுப்பதில்லை. அரசாங்கம் கொடுக்கும் மதிப்பீட்டுத் தொகையை பார்த்தாலே இந்த ஓரவஞ்சனை பளிச்சென்று தெரியும்..

நம்முடைய மற்றொரு அமைப்பு இந்திய விவசாய ஆராய்ச்சிக்கழம்,

இவர்கள் நோக்கம் எப்போதும் ஆராய்ச்சிக்கு மட்டுமே. தாங்கள் கண்டுபிடித்த விசயங்களை இந்திய விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதே இல்லை. இவர்கள் இதுவரைக்கும் கண்டுபிடித்த ஒட்டு ரக வீரிய விதைகள் எத்தனை சதவிகிதம் நம்முடைய சந்தைக்கு வந்துள்ளது. 30 வருடங்களுக்கு முன் விவசாயத்தில் நாம் எந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தோமோ அதைத்தான் இன்று வரையிலும் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் நம்முடைய அமைச்சர்களும், அதிகாரிகளும் இந்த தொழில் நுட்பத்தை கற்று வருவதற்காக வெளிநாட்டுக்கு வருடம் தோறும் பறந்து கொண்டே தான் இருக்கிறார்கள். எப்போது விவசாயிகளிடம் வந்து சேருமோ தெரியவில்லை.


மொத்தத்தில் நம்முடைய பாரம்பரிய விவசாய முறை அழிந்து கொண்டிருக்கின்றது. முறைப்படியான விதைகளையும் நாம் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். காரணம் இந்தியாவில் வந்து இறங்கிக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் மரபணு மாற்றப்பட்ட விதைகள் முக்கிய பங்கை வகிக்கின்றது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளின் மூலம் பெறப்படும் மகசூல் என்பது ஒரு தடவைக்கு மட்டுமே விளைச்சலை கொடுக்கும். விளைச்சல் மூலம் வரும் விதைகளை அடுத்த முறை பயன்படுத்த முடியாது.

அடுத்த முறை விதைகள் வேண்டுமானால் அந்தந்த நிறுவனங்களையே நாம் சார்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகள் இந்திய விவசாயத்தை பாடாய் படுத்திக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவின் கூட்டுறவு விவசாய சங்கங்கள் என்பது பெயரளவுக்குத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நம்முடைய விவசாயத்துறை முடங்கிப் போனதற்கு முக்கிய காரணம் அக்கறை இல்லாத அமைச்சர்களும், ஆர்வம் இல்லாத அதிகாரிகளுமாக கூட்டணி சேர்ந்து கொண்டு நமது விவசாயத்தை அழிவுப் பாதையில் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர். இந்த கூட்டணியினர் ஒவ்வொரு வருடமும் இந்தியாவிற்கு உலக வங்கி கொடுக்கும் பல கோடி ரூபாயும் கடைக்கோடி விவசாயி வரை வந்து சேரவிடுவதில்லை.

உதாரணமாக மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா பகுதியில் மழை இல்லாத காரணத்தால் விவசாயம் செய்ய முடியாத விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய உதவித் தொகை அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இதே மகாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் உள்ள திராட்சை விவசாயிகளுக்கு இந்த (கடன் தள்ளுபடி) உதவித் தொகை எளிதாக கிடைக்கின்றது. இதில் உள்ள குளறுபடி என்னவென்றால் திராட்சை தோட்டம் போட்டவர்கள் வைத்திருப்பது வெறுமனே மூன்று ஏக்கர் அத்துடன் ஆழ்குழாய் போன்ற சகல வசதிகளும் அவர்களிடம் உள்ளது.

அரசாங்க கணக்கென்பது இத்தனை ஏக்கர் இருந்தால் இருந்தால் மட்டுமே நிதியுதவி என்ற நோக்கத்தில் இருக்கிறது. இதன் காரணமாக மானிய உதவித் தொகைகள் வசதியான திராட்சை தோட்ட முதலாளிகளுக்குப் போய்ச் சேருகின்றது. இது ஒரு மாநிலத்தில் மட்டுமல்ல. இந்தியா முழுக்க இதே போலத்தான் இருக்கிறது. முறையான மானியத்தொகை தேவையான நபர்களுக்குச் செல்வதே இல்லை. பாதிக்கப்படுபவர்கள் மேன்மேலும் நடுத்தெருவுக்கு வந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

இதைவிட மற்றொரு ஆச்சரியம் நம்முடைய இந்திய அரசாங்கத்தின் அமைச்சகங்களின் செயல்பாடுகளை குறிப்பிட வேண்டும்.

பொதுவாக விவசாயம் என்பதை நாம் ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம். ஆனால் இதைச் சார்ந்த சுற்றுப்புறம், வனம், பாசனம், நீர்வளம், ஆராய்ச்சி என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அமைச்சகம் இருக்கிறது. தனித்தனியான அமைச்சர்கள் மற்றும் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், செயல்பாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடித்தட்டு விவசாயி நலன் சார்ந்த ஒரு தேசிய கொள்கை உருவாக்குவது அத்தனை எளிதல்ல. இவர்கள் முடிவு எடுத்து முடிப்பதற்குள் அடுத்த வருடம் வந்துவிடும். காலசுழற்சியில் நம்மை விட மேலைநாடுகள் பல் காத மைல்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் நமது அரசாங்க கொள்கைகள் விவசாயிகளிடம் வந்து சேரும் போது அது காலத்திற்கு ஒவ்வாத நிலைக்கும் வந்து விடுகின்றது.

ஆனால் இவர்கள் அத்தனைபேரும் ஒரே ஓரு புள்ளியில் ஒன்று சேர்வார்கள். எப்போது தெரியுமா?

அது பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கும் விசயத்தில் மட்டுமே.

இன்றைய சூழ்நிலையில் சந்தைப் பொருளாதாரம் என்பது உலக அளவில் ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையில் ஒவ்வொரு நாடுகளும் இருக்கிறது. ஆனால் இந்த சந்தைப் பொருளாதாரத்தின் பலன்கள் எதுவும் பாடுபட்டவனுக்கு கிடைப்பதில்லை.

வளர்ச்சி அடைந்த நாடுகளின் ஒவ்வொரு நிர்ப்பந்தங்களும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ திணிக்கப்படுகின்றது

அமெரிக்கா இல்லாவிட்டால் இந்த அளவுக்கு கணினி சார்ந்த திறமைகளை நாம் பயன்படுத்த முடியுமா? ஐரோப்பிய நாடுகள் இல்லாவிட்டால் நமது ஏற்றுமதிக்கு இத்தனை மாரியாதை கிடைத்து இருக்குமா? இன்று உலகளவில் இந்தியா அந்நியச் செலவாணி கையிருப்பு வைத்திருப்பதில் முன்னிலை வகிக்கின்றதே இதற்கு காரணம் உலகத்தோடு ஒத்து வாழ்ந்த காரணத்தினால் தானே? என்று படித்த பொருளாதார மேதைகள் நமக்கு பாடம் நடத்துவதைப் போல அவர்கள் சொல்லாத விசயங்களும் ஏராளம் உண்டு.

முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஒரு அற்புத வசனத்தை சொல்லியிருந்ததை இப்போது நினைத்துப் பார்க்கலாம்.


சீனா மற்றும் இந்தியாவிலும் நடுத்தரவர்க்கத்தின் வாங்கும் திறன் அதிகமாகிவிட்டதால் உலகளவில் உணவுத்தட்டுப்பாடு அதிகமாக உருவாகின்றது என்றார்.

இங்கே தட்டுப்பாடு என்றால் ஏன் அமெரிக்கா தட்டு ஏந்திக் கொண்டு உள்ளே வரவேண்டும்?

பகுதி ஒன்று

பகுதி இரண்டு

8 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சரியா சொன்னீங்க .
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!பின்னூட்டம்,மடல்,பதிவு பற்றாக்குறைக்கு மன்னிக்கவும்.

முனைவர் இரா.குணசீலன் said...

சிந்திக்கும் விதமான பதிவு...

அருமை..

ப.கந்தசாமி said...

நன்றாக அலசியுள்ளீர்கள்.ஆனால் எத்தனை பேர் இதைப் படிப்பார்கள் என்பதை வைத்துத்தான் இந்த பிரச்சினையின் பரிமாணம் எத்தனை பேருக்குப் புரிகிறது என்று கணிக்கலாம்.

Unknown said...

தல ..நம்ம பன்னாட்டு நிறுவன திட்டம் உங்களுக்கு ஒக்யா இல்லையா ?

Anand said...

மிக அருமையான கட்டுரை.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துகள்.

கிரி said...

// மொத்தத்தில் நம்முடைய பாரம்பரிய விவசாய முறை அழிந்து கொண்டிருக்கின்றது//

நீங்கள் கூறுவது சரி தான் ஆனால் இதை எதுவுமே செய்ய முடியாது உண்மை :-(