Friday, December 23, 2011

தற்கொலை தந்தை


காரல் மார்க்ஸ் சொன்ன " நிலமென்பது விவசாயிகளுக்கு ஆண்டவன் கொடுத்த சொத்து அல்ல. அதன் வரப்புகள் விவசாயிகளின் கரங்களிலே பூட்டப்பட்டு இருக்கும் விலங்கு" என்ற கருத்து இன்று வரைக்கும் பொருத்தமாகத்தானே இருக்கு.  

இன்று விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் நம்முடைய அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக ஒவ்வொரு நிலையிலும் துன்பங்களை மட்டும் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய விவசாயத்தைப் பற்றி பேசும் வேறு சில விசயங்களையும் நாம் பார்க்க வேண்டும்.

"இந்தியாவை மானியமும் இலவசமும் தான் கெடுத்து குட்டிச் சுவராக்கிவிட்டது."

"சிறிய அளவில் இருக்கும் விவசாய நிலத்தினால் நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. இதுவே பெரிய நிலங்களாக இருக்கும் போது விவசாயத்தை ஒரு தொழிலாக செய்ய வாய்ப்பு அதிகம்."

"எந்த பயிரில் பணத்துக்கான வாய்ப்போ அதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் நம்முடைய விவசாய முறையில் இந்த புரிதல் இல்லாத காரணத்தினால் அரசாங்கத்தை குறை சொல்வதில் பலன் ஒன்றுமில்லை."

நம்முடைய பொருளாதார அறிஞர்களும், படித்த மேதைகளும் இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா இன்னமும் வளராமல் இருக்க இவைதான் முக்கிய காரணமா?.

ஏன் மானியம்? எதற்காக மானியம்? போன்ற எதையும் நம்மவர்கள் யோசிக் விரும்பதில்லை. 

விவசாயத்தில் ஒரு பெரிய புரட்சியே நடத்திக்கொண்டிருக்கும் மேலை நாடுகளைப் பார்த்தாயா? என்று நம் அரசாங்கமும் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. உண்மைகளை அதன் அருகே சென்று கூட எவரும் பார்க்க விருப்பப்படுவதில்லை என்பது தான் உண்மை.

ஒவ்வொரு வளர்ச்சியடைந்த நாடுகளும் தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு இன்று வரைக்கும் மானியம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும்.

உலக பொருளாதார கொள்கையின்படி மொத்த உள்நாட்டு வளர்ச்சியின் அடிப்படையில் பத்து சதவிகிதம் வரைக்கும் தாரளமாக மானியம் கொடுக்கலாம். உலக நாடுகளே ஒத்துக் கொண்ட கணக்கு இது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் அவர்களின் மொத்த வளர்ச்சியில் விவசாயிகளின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகவே இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 7 லட்சம் மட்டுமே. ஆனால் இதே அமெரிக்காவில் இரண்டாவது உலகப் போருக்கு முன்னால் 3 கோடி விவசாயிகள் இருந்தனர்.

கார்ப்ரேட் பாணியில் விவசாயம் என்று சொல்லியே கார்ப்ரேட் நிறுவனங்கள் கைப்பற்ற இன்று அமெரிக்காவில் விவசாயம் என்பது பணக்காரர்களின் தொழிலாக மாறிப்போனது. அமெரிக்கா கொடுக்கும் மானியமும் இவர்களைப் போன்றவர்களுக்குத் தான் போய்ச் சேருகின்றது. முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அவருடைய ஆட்சி காலத்தில் மட்டும் மானியமாக கொடுத்த தொகையின் அளவு ஒன்னரை லட்சம் கோடி.

உலகத்தின் மொத்த சந்தையும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் இருப்பதால் விலைக்கான உரிமையிலும் கை வைத்து ஒரே கல்லில் பல மாங்காய் என்று செழிப்பாக வளர்ந்து கொண்டிருப்பது விவசாயம் அல்ல இந்த விவசாயப் பணக்காரர்கள். ஒவ்வொரு பொருளும் விலையேற வளரும் நாடுகளுக்கு பேரிடியாக இருக்கிறது.

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் விவசாயத்தை நம்பியே பெரும்பாலானோர் இருப்பதால் மானியத்தொகை என்பது மற்றவர்களுக்கு பூதாகரமாக தெரிகின்றது. ஆனால் இந்தியாவில் விவசாயம் என்ற துறைக்கு வழங்கப்படும் மானியத்தின் அளவு 2.33 சதவிகிதம் மட்டுமே. 

இந்த இடத்தில் மற்றொன்றையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அரசாங்கம் கொடுக்கும் மானியத்தொகை அப்படியே விவசாயிகளுக்கு வந்து விடுகின்றதா?

ஊழலைப்பற்றி சில வார்த்தைகள் இந்த இடத்தில் பேசிவிடலாம்.

19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா வளர்நது கொண்டிருந்த சூழ்நிலையில் அங்கேயும் ஊழல் நதி போலத்தான் ஓடிக் கொண்டிருந்தது. சீனாவில் மா வோ வுக்கு பின்னால் வந்தவர்கள் முதல் இன்று வரைக்கும் அங்கேயும் ஊழல் பெருக்கெடுத்து வெள்ளம் போல பாய்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த நாடுகளில் ஊழல் செய்பவர்கள் தாங்கள் செய்யும் வேலைக்காக செய்கிறார்கள். அதற்கான உழைப்பையும் கொடுத்து சம்மந்தப்பட்ட துறைகளை, தொழில் அதிபர்களையும் வளர்த்து விடுகிறார்கள். ஏறக்குறைய அரசு எந்திரத்தில் போடப்படும் எண்ணெய் போல.

ஆனால் ஆப்ரிக்கா நாட்டில் நடக்கும் ஊழல் போலத்தான் இந்தியாவில் போய்க் கொண்டிருக்கிறது. மொத்த தொகையையும் விழுங்கி ஏப்பம் விடுவதால் எந்த வேலையும் நடந்தபாடில்லை. நாடும் வளர்ச்சி அடைந்தபாடில்லை. இந்த ஊழல் தான் இந்திய விவசாயத்துறை முதல் மற்ற அத்தனை துறைகளும் வளராமல் போனதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

உலக அளவில் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் மொத்தமும் சேர்ந்து தங்கள் விவசாயிகளுக்கு கொடுக்கும் மொத்த மானியத் தொகையே 19 பில்லியன் டாலர்கள் மட்டுமே. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளின் மானியத் தொகையின் அளவு எவ்வளவு தெரியுமா? 150 பில்லியன் டாலர்கள்.

ஒவ்வொரு முறையும் உலக வங்கி வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளைப் பார்த்து மானியத்தை குறைக்க வேண்டும் என்கிறார்களே?

ஏன்?

அரசாங்கம் கொடுக்கும் மானியத்தை நிறுத்திவிட்டால் விவசாயி இயல்பாகவே விவசாயத்தை விட்டு வெளியே வந்து விடுவான். பிறகென்ன? தேவைப்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களை அபகரிக்க வசதியாகத்தானே இருக்கும். கார்ப்ரேட் பாணியில் விவசாயத்தை தொடங்கி விடுவார்கள். ஒரே சமயத்தில் ஒரு உணவுப் பொருளின் விலையை ஏற்றலாம், இறக்கலாம், பதுக்கலாம். பக்கத்து நாடுகளுக்கு ஏற்றுமதி கூட செய்யலாம்.

இன்னும் கூட கொஞ்சம் உள்ளே நுழைந்து ஒவ்வொரு நாடும் தங்கள் விவசாயிகளுக்கு எந்த அளவு மானியத்தை கொடுக்கின்றார்கள் என்பதை பார்த்து விடலாம்.

இது ஹெக்டேர் நிலத்திற்கு கொடுக்கப்படும் மானியத்தின் அளவு.

அமெரிக்கா 32 டாலர் ஜப்பான் 35 டாலர் சீனா 30 டாலர் தென் ஆப்ரிக்கா 24 டாலர் ஆனால் நம்முடைய இந்தியா விவசாயிகளுக்கு கொடுத்துக் கொண்டிருப்பது வெறுமனே 14 டாலர் மட்டுமே. இது உலக வர்த்தக அமைப்பின் அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட கணக்காகும்.

மற்ற நாடுகளோடு இந்தியா போட்டுள்ள ஒப்பந்தங்களின்படி எண்ணெய் பொருட்களுக்கு பூஜ்ய வரிவிதிப்பு என்பதால் மற்ற நாடுகளில் உள்ள அத்தனை எண்ணெய்களும் இங்கே வந்து இறக்குமதியாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் எண்ணெய் ஆலைகள் பெரும்பாலும் மூடு விழாவை நடத்தி விட்டது.

உள்நாட்டில் உள்ள பதுக்கல் மூலம் சம்பாரிப்பவர்கள் ஒரு பக்கம். உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மறுபக்கம். பயிர் செய்தவனுக்கு என்ன மிஞ்சம்? தரகு வேலையே தரமான வாழ்க்கை என்று மாறியுள்ள உலகத்தில் நீங்கள் என்ன சொன்னாலும் முட்டாளாகத்தான் பார்க்கப்படுவீர்கள்.

எள், கடலை சாகுபடி செய்யபவர்கள் உரிய விலை கிடைக்காமல் மாற்றுப்பயிறுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். உலக நாடுகளின் வற்புறுத்தலின்படி தானிய வகைகளை திறந்த அனுமதியின் வாயிலாக (Open General License) இறக்குமதி செய்து கொண்டிருப்பதால் உள்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மரியாதை எங்கே கிடைக்கும்? இது ஒரு உணவுப் பொருளின் நிலைமை. இதே போல ஒவ்வொரு பொருளையும் நினைவில் கொண்டு வரவும். காரணம் வேர்களை அழித்து விட்டு நமது அரசாங்க கொள்கைகள் விழுதுகளை தேடிச் சென்று கொண்டு இருக்கிறது.

இதன் காரணமாக சிறு குறு விவசாயிகள் தாக்கு பிடிக்க முடியாமல் கிடைத்த வரைக்கும் லாபம் என்ற நோக்கில் தங்களிடம் உள்ள நிலங்களை விற்று விட்டு நகர்ப்பகுதிகளுக்கு வந்து விடுகின்றனர். திருப்பூர், சிவகாசி, சென்னை என்று உள்ளே வந்து ஏதோவொரு தொழிற்சாலைக்குள் தங்களை பொருத்திக் கொள்கின்றனர்.

நாளுக்கு நாள் ஆட்களின் வரத்து அதிகமாக தொழிலாளர்களின் கூலியும், சம்பளமும் குறையத் தொடங்குகின்றது. நடுத்தரவர்க்கமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் காலப்போக்கில் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் அன்றாட வாழ்க்கையை எப்படி வாழப்போகின்றோம் என்கிற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அடிப்படை விவசாயத்தை கவனிக்காமல் விட்ட அரசாங்கத்தால் எத்தனை ஊர்களில் எத்தனை தொழிற்சாலைகளை கட்டமுடியும்?

தனியார் மூதலீடுகள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எத்தனை முக்கியமோ அது சார்ந்த சட்ட திட்டங்கள் முறைப்படுத்த முடியாத போது ஒவ்வொரு தனியார் நிறுவனங்களின் கொள்கை என்பது முடிந்தவரைக்கும் கொள்ளை என்பதாக மாறிவிடுகின்றது. முதலாளிகளை மட்டுமே ஆதரிக்கும் எந்த அரசும் நீண்ட நாட்களாக இருந்ததாக சரித்திரம் உண்டா? கண் முன்னால் பார்த்துக கொண்டிருக்கும் ஒவ்வொரு நாட்டின் கிளர்ச்சிக்கும் பின்னாலும் இயல்பான வாழ்க்கை கூட வாழ முடியாத லட்சக்கணக்கான மக்களின் கோபம் தான் வெளியே தெரிகின்றது.

இன்று உலகத்தின் மொத்த ஜனத்தொகை 700 மில்லியன் என்கிறார்கள்.

இந்த ஜனத்தொகையில் ஒரு சதவிகித மக்கள் தான் உலகத்தின் உள்ள பெரும்பான்மையான நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்கள். இவர்கள் வைத்ததே சட்டம். அமெரிக்கா போன்ற நாடுகளில் விவசாயம் என்பது ஒரு கார்ப்ரேட் தொழில். ஆனால் இந்தியாவில் இது வாழ்க்கைகான ஆதாரம். இங்குள்ள விவசாயிகளுக்கு வேறு எதுவும் தெரியாது. கலாச்சார பண்பாடுகளுடன் பின்னிப் பிணைந்தே தங்களை வாழ்க்கையை வாழ்ந்த பழகிவிட்ட இந்தியர்களுக்கு தங்கள் நிலங்களை தெய்வமாக வணங்குவதால் அவர்களால் தங்களை வெளி வாழ்க்கையோடு எளிதில் பொருத்திக் கொள்ள முடிவதில்லை.

அரசாங்கம் கூற்றுப்படி இந்திய விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டுமென்றால் நிலங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

இதை முதலில் கணக்கு ரீதியாக பார்த்து விடலாம்.

அமெரிக்காவில் 7 டன் அரிசி உற்பத்தியாகும் அளவில் உள்ள நில அளவில் அதைப் போல அளவுள்ள இந்திய நிலத்தில் 2 டன் அளவுக்கே உற்பத்தியாகின்றது. இதற்கு காரணமாக மேதைகள் சுட்டிக்காட்டுவது அமெரிக்காவில் நிலங்கள் பெரிதாக இருப்பதால் இது சாத்தியமாகின்றது என்கிறார்கள்.

ஆனால் மேம்போக்காக இப்படிச் சொல்லிவிட்டு செல்பவர்கள் இந்த 7 டன் உற்பத்திக்கு அமெரிக்கா அரசாங்கம் எந்த அளவுக்கு மானியம் அளிக்கின்றது என்பதை மறைத்து விடுகிறார்கள்.

ஒரு வேளை அமெரிக்கா கொடுக்கும் மானியத்தைப் போல இந்திய விவசாயிகளிடமும் கொடுத்தால் அதை விட அதிகமாகவே எடுக்க முடியும். நாம் நாட்டின் இப்போதைய பொருளாதார அடிப்படையில் இப்போது இது சாத்தியமாக இருக்குமா? மொத்த கணக்காக பார்க்கப் போனால் அமெரிக்காவில் 1.2 பில்லியன் அமெரிக்கன் டாலர் அளவுக்கு உற்பத்தியாகும் அரிசிக்கு அந்த நாடு கொடுக்கும் மானியத்தின் அளவு எவ்வளவு தெரியுமா?

1.4 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள்.

கூட்டிக் கழித்துப் பாருங்க. லாபமா? நட்டமா? காரணம் அமெரிக்கா நாடு பட்டவர்த்தமான முதலாளித்துவ நாடு. அவர்கள் கார்ப்ரேட் முதலாளிகளுக்கு மட்டும் தானே ஆட்சி நடத்துகிறார்கள்.

ஒரு கிராமத்தில் இருக்கும் 50 விவசாயிகளின் விளைபொருட்களால் சுற்றியுள்ள 10 ஊர்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றது என்பதை ஒரு கணக்காக எடுத்துக் கொள்வோம். இதுவே மொத்த இந்தியாவை கணக்கில் எடுத்துக் கொண்டுப் பார்த்தால் அரசாங்கம் விவசாய பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து கடுமையான சட்டதிட்டஙகளை கொண்டு வரும்பட்சத்தில் ஏன் நம்முடைய விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உருவாகாமல் போய்விடுமா?

இவர்களும் செய்யமாட்டார்கள். இடையில் இருக்கும் தரகு கும்பலும் செய்ய விட மாட்டார்கள். அதற்கு மேலும் உள்ளே வந்து கொண்டிருக்கின்ற பன்னாட்டு நிறுவனங்களும் செய்யவும் விடாது. இது தான் எதார்த்தம். இதன் காரணமாகத்தான் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

இந்திய அரசு தரப்பு தகவலின்படி 1993 முதல் 2006 வரைக்கும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் 1,50,000 பேர்கள். ஆனால் நிச்சயம் உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாகவே இருக்கும்.

தற்கொலை செய்து கொள்ளும் மாநிலத்தில் நம்முடைய செயல்வீரர் சரத்பவார் மாநிலமான மகாராஷ்டிரா முதன்மையான இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற கர்நாடகா மற்றும் ஆந்திரா அடுத்த இடங்களில் வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சத்திஷ்கர், மத்தியப்பிரதேசம் மாநிலங்கள் இந்த இடத்தை பிடிக்கின்றன.

தமிழ்நாடு அந்த அளவுக்கு மோசமான இடத்தை பெறாவிட்டாலும் எதிர்கால நிகழ்வுகள் எங்கே அழைத்துச் செல்லப்போகின்றது எந்த கவலை ஒவ்வொருவர் மனதிலும் இயல்பாகவே வந்து போய்க் கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு வருடத்தின் டிசம்பர் 23 என்பது நமது விவசாயிகள் தினம் என்று நம்முடைய பிரதமர் அறிவித்து இருக்கிறார். அவருக்கு மற்றொரு பெயரும் உண்டு.

இந்திய விவசாயிகளை தற்கொலை செய்ய வைத்துக் கொண்டிருக்கும் தந்தை என்று கூட சொல்லலாம்.

காரணம் இந்தியாவிற்கு வெள்ளைக்காரர்களின் பொருளாதார சிந்தனைகளே மேலானது என்று இன்று நமக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த பொருளாதார மேதை விரும்பும் அந்த தத்துவம் எங்கிருந்து பிறந்தது? இந்தியாவிற்குள் முதன் முதலாக வந்த பிரிட்டிஷ் ஆட்சியில் ஆளுமையாக இருந்த இராபர்ட் கிளைவ் என்ற புனித ஆத்மாவைப் பற்றி பார்த்து விட்டால் போதுமானது. 

இவரைத்தான் மேல் நாட்டு வரலாற்றுசிரியர்கள் " பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை நிறுவியர்" என்று புகழாரம் சூட்டுகிறார்கள்.

காரணம் நம்முடைய இந்தியா எங்கிருந்து பயணத்தை தொடங்கியதோ அங்கே போய் முடிப்பது தானே நல்லது.

அப்போது தான் உங்களுக்கு மேலும் சில விசயங்கள் புரியும்?

இந்திய விவசாயத்துறை குறித்த இந்த பார்வைப் பயணம் அடுத்த பகுதியோடு முடிவடைகின்றது.

13 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

ஜோதிஜி! விவசாயிகளுடைய நிலைமை, மானியங்கள் காலத்துக்கு முன்னாலேயே மோசம் தான்! உழுதவன் கணக்குப் பாத்தா உழக்குக் கூட மிஞ்சாது என்பது ஒரு சொலவடை. ஆனால், இந்த மானியங்கள், குறைந்தபட்ச விலை இதெல்லாம் விவசாயிகளைத்தான் சென்றடைகிறதா?

நம்முடைய அரசியல்வாதிகளே பெருந்தன்மையாக ஒப்புக் கொள்வது போல, அரசின் இந்தமாதிரித் திட்டங்களில் பெரும்பகுதி சுற்றிவளைத்து அவர்கள் பாக்கெட்டுக்குத் தான் போகிறது.

http://www.mydigitalfc.com/news/pds-not-working-shift-cash-transfer-world-bank-tells-india-746 இதையும் கொஞ்சம் பார்த்துவிடுங்கள்!

விவசாயி வருடம் முழுதும் உழைத்து உருவாக்குவதை இடைத்தரகர்களே பெரும்பாலும் அறுவடை செய்து கொண்டு போகிறார்கள். உழவர் சந்தைகள் வெறும் விளம்பரமாகத்தான் போயின.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

கொடுமை.

தி.தமிழ் இளங்கோ said...

அடுத்த பகுதியை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

கொக்கரக்கோ..!!! said...

ஜோதிஜி, நல்ல அருமையான, மற்றும் உண்மையான (புள்ளி)விவரங்கள், அடுத்தடுத்து கோர்வையாக கோர்க்கப்பட்டுள்ளன. ஊழலை முற்றிலுமாகக் கூட உடனே ஒழித்துவிட வேண்டும் என்று கோரவில்லை. அதேசமயம், வளர்ந்த அந்த நாடுகள் அளவிற்கு ஊழல் செய்துகொள்ளுங்கள் என்ற மானியமும் கட்டுரை வாயிலாக கொடுக்கப்பட்டிருக்கிறது!

நியாயமான ஆதங்கம் தான். ஆனால் இதெல்லாமே அகில இந்திய அளவில், உலகலாவிய நிலையில் நடைபெறும் அவலங்களை, வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து அங்கலாய்ப்பது போன்ற பெருமூச்சையே வெளியிட வைக்கின்றது.

இந்தக் குறைகளையெல்லாம் களைவதற்கு நாம் யாரிடம் முறையிடுவது? அல்லது இந்தக் குறைகளை களைகின்ற தகுதி வாய்ந்தவர்களை நம் அங்கலாய்ப்புகள் சென்றடையுமா? அப்படியே சென்றடைந்தாலும் அவர்கள் குறைந்தபட்சம் காதிலாவது வாங்கிக் கொள்வார்களா? இப்படி பல கேள்விகள் இதில் அடங்கியுள்ளன.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை நாம் நினைப்பது போல் தான் என்றால், நம்முடைய எழுத்தும், சிந்தனையும், உழைப்பும் விழலுக்கிறைத்த நீர் தானா?!

என்னால், என் தகுதிக்கு எங்கள் ஊரில் உள்ள ஒரு கிராம நிர்வாக அதிகாரியையோ, நகர வருவாய் ஆயவாளரையோ அல்லது இன்னும் ஒரு படி மேலே போய் வட்டாட்சியரையோ, ஒரு தவறை சரி செய்ய நெருக்கடி கொடுக்க இயலும். ஆனால் மாவட்ட ஆட்சியரையோ அல்லது மாநில தலைமைச் செயலரையோ ஒரு தவறை சரி செய்யச் சொல்வதற்கான நேரமோ, பாதுகாப்போ வேறு இத்தியாதிகளோ இல்லை.

ஆனால் நல்லது நடக்க வேண்டி அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் நம்மைப் போன்ற பலர் ஆளுக்கு ஒரு கல்லாக எடுத்து வைப்பதைப் போல, இந்தச் சிறிய அதிகாரிகளுக்கு தவறுகளை திருத்த வேண்டி ஒட்டு மொத்தமாக அழுத்தத்தை கொடுக்கும் போது, இவர்கள் திருந்தியே ஆக வேண்டிய கட்டாயமும், அதனைத் தொடர்ந்து ஏற்படும் அழுத்தங்கள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான அதிகாரிகளைச் சென்றடைந்து, உச்சக்கட்டமாக அரசியல் வாதிகளுக்கான தர நிர்ணயம் தாமாகவே கட்டமைக்கப் படாதா?!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல்! சரியான நேரத்தில் நல்ல பதிவு!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

ப.கந்தசாமி said...

படித்தேன், நொந்தேன்.

K.R.அதியமான் said...

// ஆனால் இதே அமெரிக்காவில் இரண்டாவது உலகப் போருக்கு முன்னால் 3 கோடி விவசாயிகள் இருந்தனர்.///

ஆம். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் படிப்படியாக மக்கள் விவசாயத்தில் இருந்து உற்பத்தி துறைக்கும், பிறகு சேவை துறைக்கும் மாறினார்கள். கம்யூனிச நாடுகளிலும் தான். இதை பற்றி வினவு தளத்தில் இட்ட பின்னூட்டங்கள் :

விவசாயிகள் தற்கொலைக்கு தாரளமயம் மற்றும் தனியார்மயம் காராணமல்ல. அது தான் காரணம் என்றால், இந்தியா முழுவதும், அனைத்து வகை பயிர்களை பயிரிடும் அனைத்து வகை விவசாயிகளிகளும் தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் மராத்தவாட மற்றும் கிழக்கு ஆந்திர பகுதியை சேர்ந்த பருத்து விவசாயிகள் மட்டும் தான் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தமிழகத்தில் அப்படி இல்லை. மேலும் இங்கு பி.டி காட்டன் சேலம் மற்றும் உடுமலை பகுதிகளில் தொடர்ந்து வெற்றிகரமாக பயிரிடப்படுகிறது.

இந்திய விவசாயம் இன்னும் முழு முதலாளித்துவ பாணிக்கு மாறவில்லை. (வட அமெரிக்கா, அய்ரோப்பா போல்). மாற அனுமதிக்கப்படவில்லை. துண்டுதுண்டாக நிலகங்கள் சிதறி, உற்பத்தியில் நவீனத்துவம் அறிமுகமில்லாமல், போதிய முதலீடுகள் இல்லாமல் தேங்கி உள்ளதான் தான் பல சிக்கல்கள். ஆனால் இந்திய ஜவுளி துறையில் கடந்த 30 ஆண்டுகளில் பெரும் மாற்றங்கள். இவை பற்றி எனது இரு பதிவுகள் :

உணவும், உடையும்
http://nellikkani.blogspot.com/2011/07/blog-post.html

விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்
http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_21.html

ஜோ,

கரும்பு விவசாயம் இன்னும் கார்பரேட் பாணிக்கு மாறவில்லை. அனுமதியும் இல்லை. காபி, டீ மற்று ரப்பர் தோட்டங்கள் மட்டும் தான் அப்படி உள்ளன. ஆரம்பத்தில் இருந்து தான். மற்ற பயிர்கள் போல் இவைகளுக்கு நில உச்ச வரம்பு சட்டம் கொண்டு வந்திருந்தால், கதை கந்தலாகியிருக்கும். உற்பத்தி செலவு கட்டுபடியாகியிருக்காது. திவால் தான்.

1947 முதல் இதே பாணியில் இந்தியாவில் செய்திருக்க வேண்டும். அதாவது நில உச்ச வரம்பு சட்டங்களை கொண்டு வராமல், கார்ப்பரேட் பண்ணைகளுக்கு அனுமதி அளித்திருக்க வேண்டும். அதே சமயம் உற்பத்தி துறைய லைசென்ஸ் ராஜ்ஜியம், கட்டுபாடுகள், அய்ந்தாண்டு திட்டங்கள் மற்றும் உச்சப்ப்ட்ச வரிகள் என்று முற்றாக முடக்காமல் இருந்திருக்க வேண்டும். அப்ப தான் படிப்படியாக பெரு வாரியான மக்கள் விவசாயத்தில் இருந்து உற்பத்தி துறைக்கும் பின்பு சேவை துறைக்கும் இயல்பாக மாறுயிருப்பார்கள். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இப்படி தான் நூறாண்டுகளில் இயல்பாக நடந்தது. நாம் சொதப்பிவிட்டோம். சோவியத் ரஸ்ஸ்ஸியாவிலும் இப்படி தான் மாற்றம் உருவாகியது. (வழியில் பல லச்சம் மக்களை போட்டு தள்ளியது வேறு விசியம்). ஆனால் அங்கும் கூட்டு பண்ணைகளின் minimum size பல ஆயிரம் ஏக்கர்கள் தான். அது தான் நவீன பாணி உற்பத்தி முறை. இந்தியா போல் 1 ஏக்கர் ‘பண்னைகள்’ லச்சகணக்கில் அங்கும் உருவாகியிருந்தல் உருப்பட முடியாது.

K.R.அதியமான் said...

ஜோதி,

மேலும் உங்களுக்கு புரியர பாசைல சொல்றேன் :

திருபூரில் 800 தையல் மிசின்கள் கொண்ட பெரிய நிறுவனங்களும் உள்ளன. சிறு நிறுவனங்களும் உள்ளன. தையல் மிசின்களே இல்லாத ஏழை தொழிலாளர்களும் உள்ளனர். அதானால், ‘சமப்படுத்துவதற்காக’ ஒரு ‘தையல் மிசின் உச்சவரம்பு சட்டம்’ கொண்டு வந்து, யாரும் 5 தையல் மிசின்களுக்கு மேல் வைத்திருக்க கூடாது என்று தடை செய்து, ‘உபரி’ தையல் மிசின்களை கையகப்படுத்தி, இல்லாதவர்களுக்கு ஆளுக்கு 5 தையல் மிசின் அளித்திருந்தால் என்ன ஆகியிருகும். முக்கியமாக 50 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்திருந்தால், பின்னலாடை தொழில் என்ன ஆகியிருக்கும் ? உற்பத்தி செலவு, உற்பத்தி திறன் என்ன ஆகியிருக்கும் ? மேலும் இவர்களுக்கு வங்கி மற்றும் டிக் நிறுவன கடன்கள் கிடைக்க வாய்ப்பில்லாமல், கந்து வட்டி அல்லது தனியார்களுடம் மூன்று ரூபாய் வட்டிக்கு வாங்கி தொழில் செய்யம் நிலை ஏற்பட்டிருந்தால் என்ன ஆகியிருப்பார்கள் ?

இந்திய விவசாயத்திலும் ஏறக்குறைய இதே நிலை தான்.

K.R.அதியமான் said...

மேலும் பார்க்கவும் :

Maharashtra vs. Gujarat on cotton and farmer suicide

http://ajayshahblog.blogspot.com/2007/02/maharashtra-vs-gujarat-on-cotton-and.html

K.R.அதியமான் said...

Sanjeev Nayyar has a fascinating piece in Business Standard comparing and contrasting Gujarat and Maharashtra on cotton. There appears to be a significant incidence of suicide amongst cotton farmers in Maharashtra, but not in Gujarat. Why?

Both states accounted for roughly the same proportion of the country's production in 1991-92 (Gujarat was 12.7 per cent and Maharashtra was 10.5 per cent). While Maharashtra's share has increased only marginally in the period since, to 14.8 per cent in 2005-06, Gujarat's share is up three times, to 36.5 per cent; Maharashtra's area under cotton has grown just marginally, Gujarat's has nearly doubled; and Gujarat's yield is more than three times that of Maharashtra.

What went wrong is a classic story of how sops do little but bankrupt the exchequer and, at the same time, make the beneficiary so weak, he/she becomes uncompetitive. In 1971, when nationalisation was the flavour, Maharashtra launched the Cotton Monopoly Scheme (CMS) with the avowed aim to capture the whole economic value for the farmer, from growing cotton to selling finished cloth. It proposed to do this by helping farmers get a fair price for their produce, make available unadulterated cotton to consumers at reasonable prices, produce textiles and distribute bonus (profit on operations) to farmers. Therefore, the CMS allowed politicians to control the states cotton industry.

...

Under the scheme, cotton could be procured only by the state-owned Maharashtra State Co-operative Cotton Growers Marketing Federation Ltd (MSC). Farmers were to be given a bonus for the cotton they sold, but cotton produced in the state had to be pressed within the state only. On the face of it a good thing, this had four consequences.

K.R.அதியமான் said...

One, since each cotton procurement area was managed by a grader, this functionary became a big power centre, extracting bribes from farmers according to one ex-MSC official, graders commanded the highest dowry in their villages! Second, since the state had to procure the cotton, and bribes had to be paid to the grader, there was no real incentive to produce better cotton. Third, as the state had financial difficulties sustaining over-payments to farmers, the payments were delayed and, a few years ago, just stopped. Four, since till 1999-00, private sector units had to obtain a license to set up ginning and processing, entrepreneurs began setting up units in border towns in adjoining states, such as Burhanpur in Madhya Pradesh cotton began to be sent out of the state illegally and value addition took place outside the state.

...

In neighbouring Gujarat, in contrast, a combination of factors ensured production increased. First, unlike Maharashtra, Gujarat didn't waste money on monopoly procurement and chose to invest it in creating irrigation. Over 40 per cent of cultivable land in Gujarat is irrigated as compared to just 3 per cent in Maharashtra. Also water levels across the state have gone up due to large-scale rain water harvesting by the construction of thousands of check dams. Instead of the Rs 6,000 crore or so that were wasted on CMS, the Maharashtra government could instead have constructed 100 Kolhapur-type Bandhara dam (medium type dam) at a cost of Rs 60 crore each this would have irrigated 25 lakh acres or 33 per cent of area under cotton cultivation. Indeed, in 1999-2000, both NABARD and the ministry of agriculture contributed Rs 100 crore each to create a Watershed Development Fund across the country of the corpus of Rs 579 crore, only Rs 30 crore has been disbursed.

Gujarat also created its own brand, Shanker6, and entrepreneurial farmers took faster to using Bt cotton to reduce costs. While around 40 per cent of Maharashtra's cotton farmers use Bt seeds, according to industry sources, around 80 per cent of the area cultivated in Gujarat is with Bt cotton. According to an IIM Ahmedabad study, this increases yields in irrigated areas by 35 per cent in Gujarat (48 per cent in Maharashtra) and profits by as much as 75 per cent in Gujarat (58 per cent in Maharashtra) Gujarati farmers sell a better variety of Bt cotton and are able to realise a higher price as well. The same study took a sample across Maharashtra, Gujarat and Andhra and found a 24 per cent reduction in pesticide cost. It found that the Gujarati farmer spends Rs 4,649 per hectare on fertilizer versus Rs 7,116 in Maharashtra (with respect to Bt cotton).

There are other critical areas like rural credit where the government needs to act since it is clear the current system is not working (the accumulated losses of all co-operative banks till 2002-03 was Rs 9,277 crore). The state would do well to take lessons from the Cotton Corporation of India (CCI), which is the equivalent of Maharashtras MSC.

CCI administers the Cotton Technology Mission. As part of the mission it provides ginning and processing units a subsidy of 25 per cent of their modernisation cost (upto a maximum of Rs 12.5 lakh). It also conducts demonstrations on production technology whereby it demonstrates to farmers how cotton should be cultivated on one acre plots and holds farmer field schools and kisan melas. It has started contract farming in Vidharbha. An informal association of farmers represented by select farmers sign a tripartite MoU with CCI and the textile mill. While various structures exist, the general model is that the mill provides farmers with inputs, conducts demonstrations and agrees to buy produce at a premium of 5-10 per cent of prevailing market price. This way the farmer focuses on production and quality, and the mill is assured of pure unmixed cotton.

கிரி said...

//தமிழ்நாடு அந்த அளவுக்கு மோசமான இடத்தை பெறாவிட்டாலும் எதிர்கால நிகழ்வுகள் எங்கே அழைத்துச் செல்லப்போகின்றது எந்த கவலை ஒவ்வொருவர் மனதிலும் இயல்பாகவே வந்து போய்க் கொண்டிருக்கின்றது.//

அவங்க மாநில மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது நாம் ஏறக்குறைய சமமாகத் தான் இருப்போம் என்று நினைக்கிறேன்.

கடந்த பதிவில் கூற நினைத்தது மறந்து விட்டேன்.. நீங்கள் குறிப்பிட்டு இருந்த மக்களை சோம்பேறியாக்கும் வேலை திட்டம்.. என்னோட மனைவியின் தாத்தா இதை நான் கடந்த முறை சென்ற போது கூறி இருந்தார் அதாவது தினமும் 200 ருபாய் கொடுக்கிறார்களாம் அதனால் அவர்கள் மற்ற வேலைகளுக்கு செல்வதே இல்லையாம்..இதில் வேலையும் இல்லை.. சும்மா உட்கார்ந்து கதை அடித்துக்கொண்டு இருப்பதாக கூறினார்.

இதில் அவர் போன்றவர்களுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்ற சுயநலம் இருந்தாலும் அரசு பணம் அநியாயமாக வீணாகி கொண்டு இருக்கிறது உண்மை தான். சும்மாவே பணம் வரும் போது யாருக்கு தான் வேலை செய்ய மனம் வரும்.. இதோட பல இலவச அறிவிப்புகள்.


இது பதிவிற்கு சம்பந்தம் இல்லாதது.. :-) இப்படி ஓரடியா சரசரன்னு பதிவு போட்டுட்டீங்க.. ஒன்றை படித்து முடிக்கிறதுக்குள்ள அடுத்த பதிவு என்று வேகமாக வந்து விட்டது. சீரான இடைவெளியில் வெளியிட்டீர்கள் என்றால் படிக்க எளிதாக இருக்கும். உங்க பதிவு வேற ரொம்ப பெரிதாக இருக்கும் :-) சும்மா டெம்ப்ளேட் கமெண்ட் போடவும் விருப்பம் இல்லை.

ஜோதிஜி said...

இல்லை கிரி. இதுவொரு ஆவண காப்பகம் போல. உடனடியாக இதை வந்து படிப்பார்கள் என்று எதிர்பார்ப்பு என்னிடம் இல்லை. என் ஓய்வு நேரத்தில் செய்தால் மட்டுமே சாத்தியம்.

அதியமான உங்கள் அக்கறைக்கு நன்றி.

கொக்கரக்கோ

நிச்சயம் என்னளவில் என்ன மாறுதல்களை உருவாக்க வாய்ப்பு இருக்கிறதோ அதை செய்து கொண்டே இருக்கின்றேன். சமயம் வரும் போது வலையில் சொல்கின்றேன். நன்றி.

நன்றி கிருஷ்ணமூர்த்தி.

பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும் நன்றி.