Monday, February 01, 2010

தூங்காத ரா (RAW) வுகள்

நாம் இப்போது விரைந்து சென்று கொண்டுருக்கிறோம்.  விரைவில் இந்தியா  உருவாக்கிய ஒப்பந்தத்தின்படி இலங்கையில் அமைதியை நிலைநாட்ட என்ற கொள்கையின் படி அமைதிப்படை வீரர்கள் உள்ளே நுழையப் போகிறார்கள்.  இது இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வு.  சம காலத்தில் வெளி வந்த மொத்த பிரபாகரன் குறித்த புத்தகங்கள், விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு விருப்பம் சார்ந்த அத்தனை புத்தகங்களிலும் இந்த நிகழ்வுகளையும் மேம்போக்காகவே எழுதப்ப்பட்டு இருக்கிறது.

சொல்லப்போனால் சென்றார்கள் தோற்றார்கள் என்கிற அளவில்.  இந்த IPKF (INDIAN PEACE KEEPING FORCE) குறித்து உள்ளே நுழைந்தது முதல் வெளியேறியது வரைக்கும் முழுமையான புரிதல்களை நாம் கண்டுணர வேண்டும்.  காரணம் இந்த அத்தியாயங்களுக்குப்பிறகு தொடங்கப்போகும் அடுத்த அத்தியாயம் என்பது ஐபிகேஎப் முதல் ராஜீவ் காந்தி இறப்பு மற்றும் அதன் புலனாய்வு பக்கங்கள் வரைக்கும் உள்வாங்க வேண்டுமென்றால் முதலில் இந்த சுவடுகளையும் நாம் கடந்து செல்ல வேண்டும்.  ஆனால் அதற்கு முன்னால் வேறு சிலவற்றையும் உள்வாங்கிக்கொள்ளுங்கள்.

விடுதலைப்புலிகள் ஏன் சிறப்பானவர்கள்?  மற்றவர்களுக்கும் அவர்களும் என்ன பெரிதான வேறுபாடுகள் என்ன? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்தியாவின் தத்துப்பிள்ளையும், ரா சிறப்பு கவனம் செலுத்திய டெலோ இயக்கத்தைப்பற்றி அப்போது டைம் இதழ் (ஏப்ரல் 3 1989) கூறிய வாசகம் நினைவு கூறத்தக்கது.

" உளவு மற்றும் சீர்குலைவு வேலைகளில் பயிற்சி அளிப்பதற்காக கொண்டு வந்த டெலோ இயக்கத்தில் தெளிவற்ற நபர்களும் என்ன கொள்கை என்ன சித்தாந்தம் என்பதைப் பற்றிய புரிதல்கள் இல்லாமல் நிறைந்துருந்தனர்.  சிறீ சபாரெத்தினம் தலைமைப்பொறுப்பில் செயல்பட்டுருந்தாலும் அப்போதை டெலோ இயக்கம் என்பது ஐந்தாறு சிறு குழுக்கள் போல் தான் ஒழுங்கற்ற இயக்கமாய் இயங்கிக்கொண்டுருந்தனர்.  எந்தவித இலக்கும், நோக்கமும் இல்லாத ரா வுக்கு ஏற்ற, ரா விரும்பிய சிறப்பான கூலிப்படையாக செயல்பட்டுக் கொண்டுருக்கிறது.  இது எங்கள் தனிப்பட்ட கருத்து அல்ல. பயிற்சி கொடுத்துக்கொண்டுருக்கும் இந்திய அதிகாரி கொடுத்த தகவலின் அடிப்படையிலானது"

ஓரே காரணம் அப்போது தமிழ்நாட்டு ரா அலுவலகப் பொறுப்பாளராக இருந்த அதிகாரிகள் தமிழர் ரவி என்பவரும் மற்ற அவருக்குத் துணையான மேனன் என்பவரும் இருந்தனர்.  இவர்களுடன் சந்திரஹாசன் மிகுந்த நெருக்கமும் செல்வாக்கு உள்ளவராகவும் இருந்த இந்த ஒரே காரணமே டெலோ மட்டும் தத்துப்பிள்ளையாக ரா சுவீகரித்துக்கொண்டது.  தொடக்கத்தில் ரா நேரிடைப்பார்வையில் இவர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட்ட இடங்கள் மண்டபம், கும்பகோணம், மசூலிப்பட்டிணம்.  இது போக சென்னை சர்வதேச விமான நிலையம் அருகிலும், அண்ணா நகரிலும் சிறிய முகாம் போன்ற அலுவலகம் வாயிலாக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.  தொடக்கப் பயிற்சிகளில் சிறப்பாய் முன்னேறியவர்களை உயர்தர ராணுவப் பயிற்சிக்காக வட நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  இமயமலை அடிவாரத்தில் உள்ள முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  இங்குள்ள " நிறுவனம் 22"  மூலம் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.  இது பக்கத்தில் உள்ள திபெத் ஆட்சி கவிழ்ப்பு, உள் நாட்டு கலவரங்கள் போன்றவற்றுக்கு என்றே உருவாக்கப்பட்ட அமைப்பு.  மேலும் துணை ராணுவ பயிற்சிக்கூடங்கள் மூலமாக காலாட்படை பயிற்சி, பீரங்கி தாக்குதல்கள், எறிகணை, ராக்கெட், கண்ணிவெடிகள்,தகவல் தொடர்பு, வரைபடம் போன்றவற்றுடன் கொரில்லா தாக்குதல்கள் போன்ற போர் தந்திரங்களை பயிற்றுவிக்கப்பட்டன.

பயிற்சி பெற்றவர்களில் 600 பேர்கள் டெலோ இயக்கத்தினர்.  மற்ற போராளிக்குழுவினர் 50 முதல் 100 பேர்கள் என்ற அளவில் இருந்தனர்.  பின்னால் நுழைந்த விடுதலைப்புலிகளில் இரண்டு தலைவர்களும் பயிற்சி பெற்றனர்.  ஒருவர் மாத்தையா மற்றொருவர் கிட்டு.

இந்த இடத்தில் மற்றொரு கொடுமை ரா பிரிவில் இருந்த அதிகாரி உன்னிகிருஷ்ணன் மூலம் ஒவ்வொரு நிகழ்வுகளும் இலங்கைக்கு தகவல்கள் போய்க்கொண்டுருந்ததை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.  புள்ளிவிபரங்கள், பெயர்பட்டியல்கள் போன்ற அத்தனை விபரங்களும் கனஜோராய் சென்று கொண்டுருந்தது..  இந்த அதிகாரி சி.ஐ.ஏ எஜெண்ட் என்று கண்டுபிடிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சி இது.  இவருடைய இந்த சிங்கள பாசத்தை இவரிடம் பணிபுரிந்த டிரைவர் சொன்ன போது மொத்தமாய் சுதாரித்துக்கொண்டு இவரை உளவு பார்க்க ஆரம்பித்தனர்.

காரணம் சமீபகாலத்தில் தூதுக்குழுவாக சென்றவர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அழகிரி சொன்ன ஒரு விசயத்தை கேட்டு ஆச்சரியப்படாதீர்கள்.  " இந்தியாவிடம் இருக்கும் விபரங்களை விட இலங்கையில் அவர்களிடம் இருக்கும் மொத்த விடுதலைப்புலிகள் குறித்த தகவல்கள் மிகுந்த ஆச்சரியம் அளிப்பதாக இருக்கின்றது.  காரணம் தமிழ்நாட்டில் உள்ள ஊர்முதல், சந்து பொந்து வரைக்கும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் பெயர் பட்டியல் முதல் அவர்கள் சார்ந்த அத்தனை விபரங்களும் விரல் நுனியில் வைத்து இருக்கிறார்கள்"

விடுதலைப்புலிகள் இந்தியாவை சார்ந்து இராமல் தனித்தன்மையாக வளர்ந்தது ஒரே நாளில் நடந்த விடவில்லை.  எந்தந்த இயக்கங்களுக்கு வெளிநாட்டில் உள்ளவர்களின் ஆதரவு கிடைத்துக்கொண்டுருந்ததோ அவர்களை கண்டு உணர்ந்தது அவர்களை தங்கள் வழிக்கு கொண்டு வந்து மொத்த நிதி ஆதாரங்களையும் தங்கள் பாதைக்கு வரும் வரைக்கும் ஒவ்வொருவரையும் அங்கங்கே இருப்பவர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டனர்.  இங்கே ஆளுமையை ஒழித்தாகி விட்டது.  கருணாநிதியின் செல்லப்பிள்ளையான டெலோ போல எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் போல் பிரபாகரன் இருந்த மற்றொரு காரணமும் அவர்களின் விரைவான வளர்ச்சிக்கு உதவியது.  அப்போது எம்.ஜி.ஆருக்கு விடுதலைப்புலிகளுக்கு உதவ என்று செயல்பட்ட பல பேர்கள் பின்னால் இருந்தார்கள்.  அதிலும் குறிப்பாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் மகாதேவன் என்ற அதிகாரி அதிகாரப் பூர்வ ராணுவ ஆலோசனை நபராக முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டுருந்தார்.  டெலோ இயக்கம் பெற்ற பயிற்சி போல விடுதலைப்புலிகள் செய்த மற்றொரு காரியம் அப்போதைய தென் ஆற்கடு, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், வீரர்கள் என்று தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சம்பளம் என்ற அடிப்படையில் நியமித்து தனது வீரர்களை அவர்கள் மூலமும் பயிற்சி எடுக்க வைத்தனர்.

1985 ஆண்டில் சென்னையில் வீழ்ச்சி அடைந்த மிண்ணணு சாதனங்கள் விலை என்பது இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட கடத்தல்களின் அடிப்படையில் நடந்த நிகழ்ச்சி.  அது போக அப்போது போதைப் பொருட்களின் கூடாரமாக சென்னை விளங்க பிளாட் இயக்கத்தில் இருந்தவர்கள் புகுந்து விளையாடினர்.  ஒவ்வொன்றும் கோர்த்து மாலையாக மாற்றம் பெற க்யூ பிராஞ்ச் மொத்த விடுதலைப்புலி போராளிகளையும் சென்னையை விட்டு 1986ல் வெளியேற்ற முழுக்கவனம் செலுத்தினர்.

மற்றொரு கொடுமையும் உண்டு.  மொத்த போராளிக்குழு, என்று ஒவ்வொருவரையும் தனித்தனியாக பிரித்து, ஒருவருக்கொருவர் பார்க்காத வரையிலும் புத்திசாலித்தனமாக செயல்பட்ட ரா உளவுத்துறை இவர்களைப் பற்றி மொத்த ஆவணக்கோப்பாக மாற்ற காலதாமதம் செய்த காரணத்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதிகாரவர்க்கத்தினருக்கே குழப்பம் உருவாகி வேறு சில வேண்டாத நிகழ்வுகளும் நடந்தது.  ஒவ்வொரு நாட்டின் உளவுத்துறைக்கும் எதிர் உளவு ( Counter - Intelligence) ரொம்ப முக்கியம்.   தங்களுடைய ஆட்களை சம்மந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பி அவர்கள் மூலம் ஒற்றறிதல்.  ஆனால் இதிலும் கொடுமை.  இவர்களால் அனுப்பப்பட்டவர்கள் யாழ்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலையில் எவர் ஆதிக்கம் பெற்று இருந்தார்களோ அவர்களுடன் சேர்ந்து கொண்டு அவர்கள் கொடுக்கும் "பரிசு" களில் மனம் மயங்கி மொத்தத்தையும் கோட்டை விட்டதும் நடந்தது. இவர்கள் மூலம் திரட்ட முடியாத சமாச்சாரங்களையும் பத்திரிக்கையாளர்கள் மூலம் பெற்று கோப்புகளை நிரப்பினர்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் நிறைவேறப்போகும் இந்த காலகட்டம் வரைக்கும் அலட்சிய மனப்பான்மை உள்ள இந்திய ஆதிக்க வர்க்கத்தின் செயல்பாடுகள் இந்த அளவில் தான் இருந்தனர்.  போராளிகளை வளரவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.  ஆனால் இவர்களே வளர்க்கும் சூழ்நிலையும் உருவானது.  அழித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.  ஆனால் அழிக்க வேண்டும் என்று அனுப்பப்பட்டவர்களே ஆசைப்பட்டு கட்சி மாறியதும் நடந்தது.  கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் அங்கொரு கொடுமை ஜிங்கு ஜிங்ன்னு ஆடின கதை தான்.

ஒவ்வொரு நாட்டின் தூதுக்குழு, வர்த்தக பிரதிநிதிகள் என்று நாம் அன்றாடம் பார்க்கும் படிக்கும் செய்திகளுக்கு முன்னால் பல விசயங்கள் தீர்மானமாய் செயல்படுத்தப்பட்டுருக்கும்.  ஒப்பந்த காட்சிகள் என்பது வெளிப்பார்வைக்கு மட்டும்.  சொல்லப்போனால் அன்று கையெழுத்து போடும் வைபவம் மட்டும் தான் நடந்தேறும்.  இது போலத்தான் இந்த இலங்கையில் நடந்தேறிய ஜெயவர்த்னே ராஜீவ் காந்தி ஒப்பந்தமும்.  இந்த ஒப்பந்தம் என்பது பிரபாகரன் மூலம் நடத்தப்பட்ட பேரங்கள், ஜெயவர்த்னே மூலம் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் என்பதையும் தாண்டி பல நிகழ்வுகள் கண்ணுக்குத் தெரியாமல் நடந்தேறியது.

1987 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக தொடக்கப் பேச்சுவார்த்தைக்கென்று உள்ள குழுவில் இருந்தவர்கள் ஜெயவர்த்னே அமைச்சரவையில் இருந்த காமினி திசநாயகா, பிரபல இலங்கை கொழும்பில் இருந்த தொழில் அதிபர் சி.டி.ஏ.ஸ்காப்டெர் கடைசியாக இந்தியாவின் சார்பாக தி ஹிண்டுவில் அப்போது துணை ஆசிரியராக இருந்த என்.ராம்.  இது எப்படித் தொடங்கியது என்றால் அப்போது காமினி திச நாயகா இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவராகவும் இருக்க புரிந்துணர்வின் அடிப்படையில் இந்திய (அப்போதைய) கிரிக்கெட் வாரிய தலைவர் என்.கே.பி. சால்வே மூலம் இந்திய அரசாங்கத்திடம் செய்திகள் கடத்தப்பட்டது.

இந்த இடத்தில் மற்றொரு விசயம்.  இந்திய இலங்கை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக ஒன்று சேர்ந்து பேசிய ஆண்டு ஜுலை 12 1987.  ஆனால் அதற்கு முன்னால் பல இந்திய ஜவான்களை (ஜுன் 25)  ஐலேண்டு பிரைடு கப்பலில் ஏற்றப்பட்ட நிவாரணப்பொருட்களுடன் ஒன்றாக கலந்து வந்து மறைவிடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.  மற்றொரு கொடுமை வந்தவர்கள் தங்கியிருந்த இடங்களில் செய்த கொடுமைகளும், போட்ட பார்ட்டி கூத்துகளும் அவர்களை அப்பன் இல்ல குதிருக்குள்ளே என்பது போல் வெளியே வெளிப்படையாக காட்டிகொடுத்து விட்டது.

அன்று முதல் இன்று வரைக்கும் இந்தியாவில் உள்ள அதிகாரவர்க்கத்தினருக்கு இருக்கும் ஆசைகளும், செய்து கொண்டுருக்கும் செயல்பாடுகளுக்கு சம்மந்தம் என்பதே நீங்கள் காணமுடியாது.  தீர்க்கமான பார்வையோ, தீர்மானமான கொள்கையோ ஏதும் இல்லை.  நோக்கம் தவறாக இருக்கலாம்.  ஆனால் பாதைகள் தெளிவாக இருந்தால் தானே தான் யார் என்பதும் தன்னிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பு எத்தகையது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்திக்காட்ட முடியும்.  இந்த கொடுமை இந்திய அமைதிப்படையிலும் தொடர்ந்தது.  திரும்பி அழைத்துக்கொண்ட போதும் இறுதியில் ராஜீவ் மரணம் வரைக்கும் விடாது கருப்பு போல் தொடர்ந்து கொண்டுருந்தது.  அப்படி என்றால் இப்போது?   இவர்களை முழுமையாக நம்பியிருந்தால் ஏன் சோனியா காந்தி தன் மகளை விட்டு சிறைச்சாலையில் நளினியை சந்திக்க ஏற்பாடு செய்துருப்பாரா? இராஜீவ் காந்தி புலனாய்வில் ஈடுபட்ட ஒரு அதிகாரியை எக்காரணம் கொண்டு இனி என்வீட்டு பக்கம் வராதீர்கள் என்று சொல்லி விரட்டி அடித்து இருப்பாரா?

12 comments:

அண்ணாமலையான் said...

நிறய தகவல்களை கொண்ட பதிவு...

Vadielan R said...

நன்றாக் போகிறது தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

வருக அண்ணாமலையான். பெயரும், பணிபுரியும் பல்கலைகழகம் போல் சிறப்பான சிந்தனைகளுக்கு அதற்கு வந்துள்ள தரமான பின்னோட்டங்களைப் பார்த்து வந்த திகைப்பு மாற இன்னும் நாளாகும்.

ஜோதிஜி said...

வாங்க வடிவேலன். ஆர்வத்திற்கும் அக்கறைக்கும் நன்றி. இந்த ஒரு நீண்ட தூர பயணம். கிட்டத்தட்ட இன்றைய சூழ்நிலையில் இலங்கை என்பது முடிவுக்கே வந்து விட்டது, அதைப்பற்றி பேசுவதே அநாவசியம் என்கிற மனோநிலைக்கு கொண்டு வந்து விட்டதே ஆச்சரியமாய் இருக்கிறது.

தமிழ் உதயம் said...

தான் என்ன செய்கிறோம் என்பதை தெரியாமல் , உணராமல் செய்வதே இந்திய ஆட்சியாளரின் வேலை. பைத்தியக்காரனின் செயலுக்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம். வைகோ சொன்னது போல், மற்ற நாடுகளின் இறையாண்மையை காக்க தன் நாட்டு இறையாண்மையை கேள்விக்குறியாக்குகிறது.

Anonymous said...

இலஙகை பிரச்சன்னை முடிவுக்கு வந்து விட்டது உண்மை. எரிவது இருந்தால் தான் கொதிப்பதும் இருக்கும். எரிவது அணைந்தால் கொதிப்பது நிற்கும்.

இலங்கை பிரச்சன்னை மட்டுமல்ல எந்த பிரச்சனையை பற்றியும் ம்க்கள் தாங்களாக அதுபற்றி அக்கறை பட்டதில்லை. எங்கோ இலங்கையில் பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் மக்களின் துயரங்களுக்காக தங்களாக போராடும் அளவிற்கு நமது மக்கள் இருப்பர்கள் என்றால் இங்கே உள் நாட்டில் யாரும் பசி பிணி வறுமை, திருட்டு , கற்பழிப்பு எதுவும் இல்லாமல் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு இருப்பர்கள் அல்லவா ? இங்கே அகதிகளாக வந்துள்ளவர்கள் இன்றைய நிலையை , அகதி முகாம்களின் நிலையை கவனித்தால் நமக்கும் நமது அரசுக்கும் இலங்கை தமிழர் மிதுள்ள அக்கறை எவ்வளவும் என்று புரியும்.

அகதிகட்க்கு ஓட்டுரிமை கேடபது கூட, அவர்கள் ஓட்டுரிமை பொற்றால் அது தம்மால் தான் என்று பிரச்சரம் செய்து , அவர்களின் ஓட்டுகள் தாம் பெற்று பதவி அடையலாம் என்பத்ற்கு தான்.

இலங்கை பிரச்சனையை இதுவரை விளம்பரம் செய்து மக்களை திரட்டி போராடியது இங்குள்ள தலைவர்கள் தான். இனி புலி அமைப்பு இல்லை, மீதம் இருக்கும் சிலரும் எப்போது கைது அல்லது சுடப்படுவோம் என்று பயப்படும் நிலையை கேபி கைது உருவாக்கி விட்டது. அதனால் இனி புலிகளிடம் இருந்து எந்த விதமான பயனும் இனி இல்லை. உள்நாட்டு மக்களவை தேர்தலிலும் இலங்கை தமிழரை காங்கிரஸ் அரசு அழித்தது என்று கூப்பாடு போட்டும் மக்கள் அதை நிராகரித்து விட்டனார். தங்கள் எப்படி வென்றோம் என்றே தெரியாமல் கங்கிரஸ் உள்ளது. தங்களின் என்ன கொள்கைகாக மக்கள் ஒட்டளித்தனர் என்பது அவர்களுக்கே புரியவில்லை.

அதனால் இலங்கை பிரச்சனை இப்பொது வருவாய் தராத பயனற்ற பழைய சரக்கு. எனவே அதற்கு தலைவர்களி விளம்பரம் ஆதரவு போரட்டம் எதுவும் இல்லை. அதனால் இலங்கை பிரச்சனை அவர்களை பொறுத்த அளவில் முடிந்துவிட்டது.

ஆனால் பிரபஞ்சனின்- வானம் வசப்படும், மானுடம் வெல்லும் , போன்ற ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரி குறிப்ப்பை தழுவிய நாவல்கள் அன்றைய இந்திய சமுகத்தை புரிந்து கொள்ள உதவுவது போல் இத்தொடர் இப்பொதும் எதிர்காலதிலும் உள்நாட்டு, சர்வதேச அரசியலை புரிந்துகொள்ள வகை செய்யும் எனவே தங்கள் தொடர்ந்து எழுத்ங்கள்..- vinoth, glomoinc@gmail.com

Sivakumar said...

எங்கிருந்து இவ்வளவு தகவல்கள் கிடைக்கிறதோ....
மிகவும் சுவாரசியமாக செல்கிறது.

//
இவர்களை முழுமையாக நம்பியிருந்தால் ஏன் சோனியா காந்தி தன் மகளை விட்டு சிறைச்சாலையில் நளினியை சந்திக்க ஏற்பாடு செய்துருப்பாரா? இராஜீவ் காந்தி புலனாய்வில் ஈடுபட்ட ஒரு அதிகாரியை எக்காரணம் கொண்டு இனி என்வீட்டு பக்கம் வராதீர்கள் என்று சொல்லி விரட்டி அடித்து இருப்பாரா?
//
இவர்கள் என்றால் யார் ?
எந்த அதிகாரியை சோனியா விரட்டினார் ?

ஜோதிஜி said...

தமிழ் உதயம்

வைகோ மட்டுமல்ல இந்த இலங்கையின் உள்ளே நேரிடையாக, மறைமுகமாக, தங்களுடைய ஆதாயத்திற்காக என்று ஈடுபட்ட, ஈடுபட்டுக்கொண்டுருக்கும் மொத்த தலைவர்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் கவனித்துக்கொண்டே வரும் போது என்ன சொல்வது? எதை எழுதுவது? எப்படி இவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்பது? என்றே குழப்பாக இருக்கிறது.

இலங்கைத் தமிழர்களின் நலன் மட்டுமே முக்கியம் என்றால் இவர்கள் அத்தனை பேர்களும் தங்களுடைய அரசியல் காழ்புணர்ச்சியை மறந்து மற்ற மாநில தலைவர்கள் போல் ஏன் ஒன்றுபட மாட்டேன் என்கிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியை துரத்திக்கொண்டே இருக்கின்றேன்.

அவர்களின் விடியலை விட இவர்களைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைப் பற்றி புரிந்து கொள்ள இறைவா இவர்களின் வாழ்க்கை முடிவதற்குள்ளாவது உணர்த்துவாயா?

ஜோதிஜி said...

வினோத்

நீங்கள் மின் அஞ்சலில் ஏன் புதிய பதிவு இல்லை என்று கேட்ட போது எப்போதும் போல தொடர்ந்து வாசித்துக்கொண்டுருப்பவர் என்று எண்ணினேன். ஆனால் உங்கள் விமர்சனத்தை, அர்த்தம் பொதிந்த உங்கள் விமர்சனப் பார்வையை படித்து முடித்ததும் இந்த அளவிற்கு ஒரு ஆளுமை உள்ளவர் தரும் ஊக்குவிப்பு என்பது மகத்தானது.

வணக்கமும் நன்றியும்.

ஜோதிஜி said...

சிவகுமார்

வருக. நன்றி.

சராசரியாய் இந்த வரலாற்றை பார்த்துக்கொண்டுருப்பவர்களுக்கும், நோக்கிக்கொண்டுருப்பவர்களும் நான் எழுதிக்கொண்டுருப்பது உப்பு சப்பில்லாதது. இது போன்ற விசயங்கள் தேவையா? என்று எண்ணத்தை உருவாக்குவது. வளர்ந்த நாகரிகம் என்று கருதிக்கொண்டு வாழும் இப்போதை மொத்த மானிடமும், ஆளுமைக்கும் பின்னால் என்னதான் இருக்கிறது என்று பார்த்தீர்களேயானால் நீக்க முடியாத அழுக்கும் கறைகளும் தான் இருக்கிறது.

சிலவற்றை நம்மால் போக்க முடியாது. ஆனால் யோசித்துப் பார்க்கலாம். சிலரை யோசிக்க வைக்க முயற்சிக்கலாம். மற்றபடி வினோத் சொன்ன விமர்சனம் தான் தொடக்கம் முதல் இந்த தொடரை தொடங்கும் போது எடுத்துக்கொண்ட சபதம்.

வலை உலகம் என்பதால் பல வருடங்கள் கழித்து வந்தும் கூட இதில் உள்ள சில விசயங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். ஜனரஞ்சக வாசிப்பு என்பதற்கும், ஜனங்கள் அறியாத நிகழ்வுகளை வாசிக்க வைக்க வேண்டும் என்பதற்கும் உண்டான வித்யாசத்தை சற்று அதிக உழைப்பின் மூலம் சாத்யப்படுத்திக்கொண்டுருக்கின்றேன்.

நன்றி நண்பரே.

Thenammai Lakshmanan said...

ஜோதிஜி எனக்கு வருத்தம் ஏதும் இல்லை
உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறேன்

//எப்போதும் போல தொடர்ந்து வாசித்துக்கொண்டுருப்பவர் என்று எண்ணினேன். ஆனால் உங்கள் விமர்சனத்தை, அர்த்தம் பொதிந்த உங்கள் விமர்சனப் பார்வையை படித்து முடித்ததும் இந்த அளவிற்கு ஒரு ஆளுமை உள்ளவர் தரும் ஊக்குவிப்பு என்பது மகத்தானது.//

உங்கள் வார்த்தைகளிலே நான் எண்ணிய பதிலும் அமைந்துவிட்டது நன்றி ஜோதிஜி

ஜோதிஜி said...

ஆமுக நிரந்தர பொது செயலாளரின் நன்றி.