Wednesday, February 24, 2010

ரத்த ஈழ பூமி

குடியாட்சி என்பதும் குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சார்பாளர்களால் ஆளப்படுவது.  ஆனால் நவீன கால அரசியல் என்பது சேவை மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டது அல்ல. முயற்சிப்பவர்களுக்கும், முன்னேறிக் கொண்டு இருப்பவர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் அது.  உலகமெங்கும் இதே கதை தான்.  திரைக்கதை மட்டும் அங்கங்கே வேறுபடும்.  முடிந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்து திருவாளர் பொதுஜனத்திற்கு ஆதர்ஷணமாய் மாறி விடுகிறார்கள்.  முடியாதவர்கள் முட்டி பெயர்ந்தால் கூட மீண்டும் ஒரு முறை முயற்சிப்போம் என்று விடமுடியா சோகமாய் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். பராவாயில்லை மெதுவாக பார்க்கலாம் என்றால் கூட அவர்களின் பாதையால் அவர்களின் மூச்சும் முடிக்கப்பட்டு முகவரி இல்லாமல் மண்ணுக்குள் புதைந்து விடுகிறார்கள். அடுத்தவர் தொடர்கிறார். இதுவே வாரிசு போர் என்று வந்து மீண்டும் தொடர்கிறது.  ராஜ போதை ஆட்டம் இது.

ஜெயவர்த்னே ஆட்சியில் இருந்தவரைக்கும் அவரது ஐக்கிய தேசிய கட்சியில் எடுப்பும் தொடுப்புமாக இருந்தவர்கள் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த அதுலத் முதலியும் மற்றொரு அமைச்சரான காமினி திச நாயகாவும்.  ஆனால் ஜெயவர்த்னேவுக்குப் பிறகு அவர்களால் பதவிக்கு வர முடியவில்லை என்பதோடு அதுலத் முதலி பிரேமதாசா ஆட்சியின் போது விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்ப்பட்டார். காரணம் அவர் தமிழர்கள் வாழ்வில் கொடுத்த ஒவ்வொரு அடியும் அந்த அளவிற்கு ரசித்து ருசித்த இடியாகத் தான் பார்த்து பார்த்து செய்தார்.  

ஆனால் ஜெயவர்த்னேவுக்குப் பிறகு இவர்களை மீறி பிரேமதாசாவை பதவிக்கு  கொண்டு வருவதற்கு மிகவும் பக்க பலமாக இருந்தவர் ரஞ்சன் விஜயரத்னே.  1989 ஜனவரி 2 அன்று பிரேமதாசா ஆட்சியைத் தொடங்கினார்.  சரியாக முழுமையான 5 வருட பதவிக்காலத்தைக்கூட முழுமையாக அவரால் ஆண்டு அனுபவிக்க முடியவில்லை.  இலங்கை முழுவதும் ரத்தமும் சகதியுமாக மாற்றம் பெற்றது.  இவர் முடிந்து போகும் தருவாயில் இந்தியாவில் ராஜிவ் காந்தி மரணமும் நிகழ்த்தப்பட்டது.  ஏன்?

பிரேமதாசா பதவிக்கு வர காரணமாக இருந்து உழைத்த ரஞ்சன் விஜயரத்னே, அவரே பிறகு பிரேமதாசாவிற்கு எதிரியாக மாறிப் போனார்.  மாறிய அவரை பொறுத்துக்கொள்வது அரசியல் ஞானப்படி தவறு.   வெடிகுண்டு நிரம்பிய சிறிய ரக பேரூந்து மூலம் அவரின் வாழ்க்கை கதை முடித்தும் வைக்கப்பட்டது. ரஞ்சன் விஜய ரத்னேவை கொன்றது விடுதலைப்புலிகள் அல்ல.  பிரேமதாசா அரசாங்கமும் அதை பெரிது படுத்தவில்லை என்பதில் இருந்து எவர் கொன்று இருப்பார்கள் என்பதை நீங்கள் தான் யூகித்துக்கொள்ள வேண்டும். 

தன்னை, தன் பதவியை காப்பாற்றிக்கொள்ள ஒரு தலைவன் என்ற மனிதன் எந்த அளவிற்கு செல்ல முடியும் என்பதும், சிங்களர்களின் தனிப்பட்ட குணாதிசியங்கள் என்னவென்பதும் இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்- காரணம் இதே இந்த ரஞ்சன் விஜயரத்னே ஜேவிபி என்ற சிங்கள இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இடது சாரி எண்ணங்கள் கொண்டவர்களால் வழி நடத்தப்பட்ட புரட்சிகர இயக்கத்தை அழித்து ஒழித்து துடைத்தும் எறிந்தனர்.  அரசாங்க கணக்குப்படி குறிப்பிட்ட கால கட்டத்தில் அதில் உள்ள 15000க்கு மேற்பட்டவர்களை சுட்டுக்கொன்றனர்.  சீனாவின் தியாமென் சதுக்கம் போல் தரைமட்டமாக்கி துடைத்து ஒழித்தனர்.  காரணம் இது அரசியல்.  விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போவதில்லை என்ற பழமொழியெல்லாம் வெளியே தான்.  ஆட்சிக்கு வந்தவுடன் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.  மொத்தத்தில் இது தான் அரசியல் தரும் வெறியும் வெற்றியும்.  இந்த ஆடு புலி ஆட்டத்தில் ஜெயிப்பார்கள் மட்டுமே தலைவர்கள்.   கருணை, காருண்யம், மனிதாபிமானம் எல்லாவற்றையும் வீட்டில் இருந்து கிளம்பும் போதே பத்திரமாக பரணில் ஏற்றி வைத்து விட வேண்டும்.  வேண்டுமென்றால் பொதுக்கூட்டத்தில் பேசும் போது இந்த வார்த்தைகளை மட்டும் எடுத்து பேசிக்கொள்ளலாம்?  நடைமுறையில் காத தூரம்.

சிங்களர்களின் தந்தையாக சுதந்திர இலங்கையின் முதல் ஆட்சியில் வந்து அமர்ந்த சேனநாயகாவின் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பண்டாரா நாயகாவைப் போலவே இப்போது ஜெயவர்த்னே என்ற மகா ஆளுமையை முடிவுக்கு வந்து இருக்கிறார். இப்போது சில பழைய விசயங்களை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.  தந்தை செல்வா என்ற செல்வநாயகம் 1949 தமிழரசு குடியரசு கட்சி உருவாக்கி இலங்கை தமிழர்களுக்கு அமைதி வழியில் போராடி உரிமைகளை மீட்டெடுப்போம் என்றவரை அத்தனை சிங்கள தலைவர்களும் ஏமாற்றி உண்டு இல்லை என்று ஆக்கினர்.  சுதந்திரம் பெற்றது முதல் அவர் 1977 இறப்பு வரைக்கும் கால் நூற்றாண்டு காலமாக அவர் பெற்ற அவமானங்கள் மன உளைச்சல்கள் வேறு எந்த தலைவர்களும் பெற்று இருப்பார்களா என்பது சந்தேகமே.  இலங்கை தமிழினமே அவரை போற்றிக் கொண்டாடியது.  பண்டார நாயகா ஆட்சிக்கு வர உள்ளே இருந்த இனவாத கட்சிகளும், இடது சாரி கட்சிகளுமே அப்போதைக்கு போதுமானதாய் இருந்தது.  ஆனால் அதே இடது சாரிகளுடன் முட்டல் மோதல் உருவான போது பண்டாரா நாயகாவின் பார்வைக்கு முதன் முதலாக தென்பட்டவர் தந்தை செல்வாவின் தமிழரசு கட்சி.  இருவரும் கை கோர்த்துக்கொண்டனர்.   உருவானது பண்டா செல்வா ஒப்பந்தம்.  தமிழர்கள் போற்றிக்கொண்டாடினார்கள் விடிவு வந்து விட்டது என்று.  ஆனால்?

பண்டார நாயகா மரபின் படி தமிழர்.  சிங்களராக மாற்றம் பெற்றவர்.   300 ஆண்டுகளில் அவரது முந்தைய தலைமுறையினர் கொண்டு வந்த கலப்பும், மாறிய மதமுமாய் இறுதியில் இவரை சிங்கள தலைவராக மாற்றம் பெற வைத்துள்ளது என்பதையும் சற்று கவனத்தில் வைத்துக்கொள்ளலாம்.
இருவரும் போட்டுக்கொண்ட பண்டா செல்வம் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து இருக்குமேயானால் அப்போதே மொத்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரவில்லை என்றாலும் ஒரு பாதைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கும்?

ஏன் வெற்றியடையவில்லை. காரணம் புத்த பிக்குகளின் எதிர்ப்பும் அதுவே எல்லை மீறி பண்டார நாயகாவை சுட்டுக்கொன்று தமிழர்களுக்கென்று போடப்பட்ட அந்த ஒப்பந்தமும் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.  அப்போது தான் சிங்களர்களின் இன வாதம் என்பது எந்த அளவிற்கு உச்சமாய் வளர்க்கப்பட்டு வந்துள்ளது என்பதை அணைவரும் உணர்ந்து கொண்டனர்.  ஆனால் இந்த சிங்கள இனவாதத்தை வளர்த்தவர்களில் முக்கியமானவர் பண்டார நாயகாவும்.  அவரே இறுதியில் அதற்கே பலியானர்.

ஆனால் தந்தை செல்வா அப்போதுகூட இதை உணரவில்லை.  அதற்குப் பிறகு வந்த டட்லி சேனநாயகா, சீறீமாவோ பண்டார நாயகா ஒப்பந்தம் வரைக்கும் கை கோர்ப்பதும், காரியம் ஆனதும் தமிழர்களின் ஒப்பந்தத்தை மறந்து விடுவதும், கிழித்து எறிந்து விடுவதும் கண ஜோராக கண்ணாமூச்சி காட்டிக்கொண்டுருந்தனர். 

தந்தை செல்வாவின் கீழ் இருந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் இனியாவது இவர்களை நம்பி ஏமாந்தது போதும் என்ற போதும் கூட எதிர்த்து பேசியவர்களை அமைதியாய் இருங்கள் என்று சொல்லி ஆசுவாசப்படுத்தினாரே தவிர அவர் அப்போது உணர்ந்தாரா என்பது கேள்விக்குறி?  அமைதி வழியே இறுதியில் வெல்லும் என்பதை தீர்மானமாய் நம்பிய செல்வா கடைசியில் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு, செவிப்புலன் கேட்கும் திறன் குறைந்து, கோமா என்ற நிலையிலேயே இறக்கும் தருவாய் வரைக்கும் அவரால் ஒரு அடி கூட முன்னேற்த்தை காட்ட முடியவில்லை.   காலம் அந்த அளவிற்கு அவரின் நம்பிக்கைகளை குலைத்து முழுக்க முழுக்க துரதிஷ்டத்தை மட்டுமே அவருக்கு வாரி வழங்கி இருந்து.  ஒவ்வொருவரும் ஆட்சிக்கு வரும் போது தங்களின் மைனாரிட்டி அரசாங்கத்தை காப்பாற்றிக்கொள்ள தமிழரசு கட்சியை நாடுவதும், விரைவில் இருவருக்கும் ஒப்பந்தம் உருவாக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டுவதும், ஒப்பந்தம் உருவாக்குவதும் அதுவே காரியம் முடிந்ததும் கழட்டி விடுவதும் நடக்கும்.  அவ்வாறு நடக்கும் போதே அந்த உருவான ஒப்பந்த நகல் வெறும் காகிதமாக மாறி இருக்கும். இப்போது பிரேமதாசா ஆட்சியிலும் சில நிகழ்வுகள் நடக்கத் தொடங்கியது.  ஆனால் இப்போது இருப்பவர் தந்தை செல்வாவின் வாரிசு அல்ல.  இவரின் அப்பா மட்டுமே தந்தை செல்வாவை தெய்வமாக பூஜித்தவர்.  இவரோ இலங்கைக்கு வெளியே இருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர்.

பிரபாகரனைப் பொறுத்தவரையிலும் செயலில் காட்டாதவர்கள் எவருமே தலைவர்கள் அல்ல.  தந்தை செல்வாவை கண்டும் காணவில்லை என்பதை விட இதில் கருத்து சொல்ல எதுவும் இல்லை என்று இவர்களுடன் சேராமலே தன்னை தனியாக பிரித்துக்கொண்டவர். இவர்கள் கூட்டும் கூட்டம் என்றால் தூரத்தில் இருந்து ஒரு பார்வையாளர் போல் பார்த்து விட்டு பாதியிலேயே பொறுக்க முடியாமல் நகர்ந்தவர். தந்தை செல்வாவிற்கு பிறகு அவரது இடத்துக்கு வந்த அமிர்தலிங்கம் பார்வையில் மட்டுமே பட்டு இருந்தவர். 

அதுவும் தொடக்க காலத்தில் மட்டுமே.  பின்னாளில் அவரும் எதிரியாக மாறிப் போனார். அந்த அளவிற்கு சிங்களர்களின் ஒப்பந்தம் என்றால் பிரபாகரனுக்கு பாகற்காய் கசப்பை விட அதிகமாக இருக்கும்.புரிந்து தொடங்கியவர் பிரபாகரன்.  புரியாமல் இறுதியில் ஏமாந்தவர் பிரேமதாசா. விடுதலைப்புலிகள் பிரேமதாசாவுடன் தொடக்கத்தில் உருவாக்கிய அமைதிக்கான ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வருவதற்குள் மிகத் தெளிவாக தங்களை வளர்த்துக்கொள்ளவும், சூழ்நிலையை காரணம் காட்டியே ஆட்சி அதிகாரத்தை தங்களுக்கு சாதகமாக திசை திருப்பி தங்கள் ஆளுமையை மேம்பட்டதாக மாற்றிக்கொண்டதும் நடந்தேறியது.   அமைதி வழி தான் நாம் இருவரும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற போது அமைதியின் வடிவமாகவே காட்சியளித்தார்கள்.  மாறிய போது அதற்கான தண்டனையும்   கிடைக்கும்படி இருந்தது.

தந்தை செல்வா என்றால் நடந்த துரோகத்தைப் பார்த்துவிட்டு சரி நடப்பது நடக்கட்டும். அமைதி வழியே இறுதியில் வெல்லும் என்று பிரோமதாசாவின் நம்பிக்கைத் துரோகத்தை துடைத்து இருப்பார்.  ஆனால் இப்போது நடைமுறையில் இருப்பது அமைதி மொழியல்ல.  பதிலாக ஆயுத மொழி.  

உருவாக்கிக்கொண்டுருக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் மிகத் தெளிவாக பயன்படுத்திக்கொண்டு முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு படி இறங்கினால் கூட இனி சிங்களர்களின் ஆதிக்கம் நம்மை இடியாகத் தாக்கும் என்பதை பிரபாகரன் மிக் தெளிவாக உணர்ந்து வைத்திருந்தார்.

பிரேமதாசாவிற்கு உள்ளே ஓடிக்கொண்டுருந்தது இரண்டு யோசனைகள் என்றால் பிரபாகரனுக்கோ நூறு சிந்தனைகள்.  பிரேமதாசா பிரபாகரன் இருவருமே சிந்தித்த காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இருவரின் மையப்புள்ளி ஒரே இடத்தில் ஆதாரப்புள்ளியாய் வந்து இருவரையும் இணைத்து. அமைதிப்படை வெளியே செல்ல வேண்டும். மற்றவை பிறகு பேசிக்கொள்ளலாம் என்பதே.  கை கோர்த்துக்கொண்டனர்.  விடுதலைப்புலிகளின் வரலாற்றில் கொழும்புவில் உள்ள உயர்தர நட்சத்திர உணவு விடுதி அறிமுகமானதும், அதில் பிரேமதாசா அரசாங்கத்துடன் நடத்துப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் என்று வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் சென்றது.  

ஒப்பந்தத்திற்கு தலைமைப் பொறுப்பு எப்போதும் போல ஆன்டன் பாலசிங்கம்.  இப்போது பிரபாகரன் புகழ் எட்டுத்திக்கும் புகழ் பெற்று பட்டொளி வீசிக்கொண்டுருக்கிறது.  இலங்கை ஆட்சியாளர்கள், இராணுவம் கூட பவ்யமாய் பயமாய் இவர்களை பார்த்த நாட்கள்.  காரணம் பெரிய வல்லரசை வகை தொகையில்லாமல் வாட்டி வதைத்த பொடியன்கள் இப்போதைக்கு மகா பராக்கிரமசாலிகள்.  ஏற்கனவே பல பய நிலையை உருவாக்கி வைத்திருந்த பிரபாகரன் இப்போதைய சூழ்நிலையையும் மிகத் தெளிவாக பயன்படுத்திக்கொண்டார். 

எந்த அளவிற்கு என்றால் அமைதிப்படை வெளியேற்றுவது எங்கள் பொறுப்பு. ஆனால் நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்லி மில்லியன் கணக்காக இலங்கை அரசாங்கத்திடம் இருந்தே பண உதவி பெற்றுக்கொண்டது, ஆயுத கொள்முதல்கள், வெளிநாட்டில் இருந்த பிரபாகரன் மனைவியை குழந்தைகளை இலங்கைக்கு உள்ளே வரவழைத்துக்கொண்டது. தலைமறைவாக இயங்கிக்கொண்டு ஆயுத கொள்முதல் விற்பனர் பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக தைரியமாக விமானநிலையத்தில் பிரபாகரன் குடும்பத்துடன் நடந்து வந்ததும் என்று ஏற்கனவே நடந்தேறிய பல பாதக அம்சங்களை இப்போது தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டுருந்தனர்.

இப்போது கூட பிரேமதாசா பிரபாகரனை நாடுவதற்கும் காரணமாக இருந்தவர் ராஜிவ் காந்தியே.  நீங்களே வெளியே போய் விடுங்கள் என்றதற்கு முடியாது என்பதோடு உள்ளே என்ன பிரச்சனையை உருவாக்கலாம் என்றபடி அலைந்து திரிந்து கொண்டுருந்தனர்.  இது எந்த அளவிற்கு என்றால் பிரேமதாசா இனி நீங்கள் வெளியே வந்தால் எங்கள் இராணுவம் உங்களை சுடத் தொடங்கும் என்பதற்கு உள்ளேயிருந்த இந்திய இராணுவ தளபதி நீங்கள் ஆரம்பித்தால் நாங்கள் மொத்தத்தையும் முடித்து வைப்போம் என்கிற வீர வசனமாய் முற்றிப்போகும் அளவிற்கு வந்து நின்றது.  பிரேமதாசாவிற்கு வேறு வழியில்லை.  சண்டைக்காரன் காலில் வந்து விழ பிரபாகரன் காட்டில் அடை மழை. பிரேமதாசாவுக்கோ இந்தியா இங்கு இதைக் காரணம் காட்டியே டேரா போட்டுருந்தால் இலங்கை என்பது இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறி விடுமோ என்ற அச்சம்.  நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அமிர்தலிங்கம் தோல்வியுற்றுப்போக இப்போது நடந்த மற்றொரு இந்திய மாறுதல் டெல்லியில் விபிசிங் தமிழ்நாட்டில் கலைஞர் மு கருணாநிதி. பிரேமதாசா ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து மாயமாய் மந்திரமாய் வைகோ பிரபாகரனை சென்று சந்தித்ததும் அவருடன் 24 நாட்கள் இருந்து வந்ததும் நடந்தேறியது.

இந்திய அமைதிப்படை உள்ளே இருந்த போது எவ்வாறு பிரபாகரன் தன்னுடைய ஆளுமையை வளர்த்துக்கொண்டாரோ அதே போல் வெளியேறாமல் முரண்டு பிடிக்கும் போது மறைமுகமாக அவருக்கு பிரேமதாசா உதவும் அளவிற்கு காரணமாக இருந்ததும் இந்திய அமைதிப்படையே.  

பிரேமதாசாவின் முதல் பகுதி முழுவதும் இந்தியாவை விரட்ட விடுதலைப்புலிகளை சார்ந்து இருக்க காலம் உருவாக்கி வைத்தது.  இரண்டாவது பகுதி முழுவதும் உள்ளே இருந்த ரஞ்சன் விஜயரத்னேவால் எடுக்கப்பட்ட முடிவுகள் தவறாகவும் மாறிவிட இவரும் தப்பிப் பிழைக்க முடியாத சூழ்நிலையில் கொண்டு போய் நிறுத்தியது.

9 comments:

அன்புடன் நான் said...

தமிழீழ அரசியல் அலசல்... அபாரம்... தொடருங்க வாழ்த்துக்கள்.

சுடுதண்ணி said...

மங்கலா தெரிஞ்சதெல்லாம் தெள்ளத்தெளிவாகத் தெரிய வைக்கிறீர்கள். மிக்க நன்றி :).

Thenammai Lakshmanan said...

//தன்னை, தன் பதவியை காப்பாற்றிக்கொள்ள ஒரு தலைவன் என்ற மனிதன் எந்த அளவிற்கு செல்ல முடியும் என்பதும், சிங்களர்களின் தனிப்பட்ட குணாதிசியங்கள் என்னவென்பதும் இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்-//

அரசியல் சூதாட்டத்தில் எந்தக் காய்கள் அப்போது வெட்டுப்படும் என்பது தெரிவதில்லை ஜோதிஜி

நினைவுகளுடன் -நிகே- said...

தொடருங்க வாழ்த்துக்கள்.

M.Thevesh said...

பிரேமதாசாவின் பயம் நியாயமானதே.இந்தியப்படை
ஈழமண்ணில் அமைதிகாக்கும்படை என்று நுளைந்த
போதே பல சர்வதேசப்பத்திரிகைகள் இந்தப்படை
அமைதிப்படைபோல்தெரியவில்லை.அமைதிப்படைக்
கு இவ்வளவு தொகையான போர்த்தளபாடங்கள் தேவை இல்லை இவ்வளவு தொகையான் படை அவசியமில்லை.நாடுபிடிக்கும் படைக்குரிய போர்த்தளபாடங்களுடனும் அதிகஎண்ணிக்கையிலான
போர் வீரர்களுடனும் காணப்படுகிறார்கள் என்று விமர்சனம் எழுதியிருந்தார்கள்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி இந்தியப்படைகளை வெளியேறும்படி கேட்ட போது வெளியேற மாட்டோம் என்று அடம்பிடித்தபோதேஅமைதிப்படை
என்ற முகமூடிகளன்று விழுந்துவிட்டது.
ஆகமொத்தத்தில் அயல் நாட்டை ஆக்கிரமிக்கும் படை என்பது தெட்டத்தெளிவாகியது. இந்தக்கொலை
காரப் படையை வெளியேற்ற மண்ணின் மைந்தர்கள்
ஒன்றுசேர்ந்தது விவேகனானமுடிவே. இங்கேதான் பிரபாகரனின் இராஜ தந்திரம் வெளிப்பட்டது.
இலங்கை வாழ் மக்கள் அதாவது பூமிபுத்திரர்கள்
ஈழத்தமிழனும் சிங்களச்சிங்களவனுமே.அவர்கள்
தமக்கிடையில் அடிபடலாம் சண்டைபிடிக்கலாம்.
ஆனால் நாடுபிடிக்கத்துடிக்கும் அயல்நாட்டானுக்கு
அந்த மண்ணில் கால் பதிக்க எந்தவித அருகதை
யும் இல்லை என்பதைநிலைநிறுத்தினார்கள்.
அழைக்கப்படாமல் அடாத்தாகவந்த ஆக்கிரமித்த
கொலைகாரப்படை அவமானத்துடன் வெளியேறியது.
இலங்கை மக்கள் மகிழ்ச்சியும் நிம்மதியும்
அடைந்தார்கள்.பிரபாகனோ அவர் படையோ என்றும்
இந்தியப்படையை வரும்படி அழைக்கவில்லை.
பங்களாதேஷ், இலங்கை,பூட்டான்,நேபாளம்,
பாகிஸ்தான் ஆகிய இந்த நாடுகள் எவையுமே
இந்தியப்படை தங்கள் நாட்டினுள் நுழைவதை விரும்பவில்லை, வரவேற்கவில்லை.நுழையவிட்
டால் தங்கள் நாடு ஆக்கிரமிக்கப்படும் தங்கள் நாட்
டை இழந்துவிடுவோம் எனப்பயப்படுகிறார்கள்.இந்தி
யாவைச்சுற்றியுள்ள நாடுகளில் இப்படியான மரியா
தைதான் இந்தியாவுக்கு இருக்கிறது.இந்தியன் யாரா
வது இதில் பெருமை கொள்ளமுடியுமா?

கிட்டுவின் மருமோ(மக)ன் said...

சிங்கள கூட்டத்தை மக்களாக கருதி ,தேர்வு வைத்திருக்கிறான் எம்தலைவன்
அவர்கள் மக்களா அல்லது மாக்களா ?
என்பதை அவர்களது நண்பர்களையும் / முதாலளிகளியும் /மதநம்பிக்கைகளையும் மற்றும் உற்றார் உறவினர்களையும் கேட்டுவிட்டு நிருபிக்கவேண்டும் .
இந்த காலகட்டத்தில் சிங்களத்திற்கு தேர்வு காலம்

அவர்கள் மக்களாக தேர்வானால் மிச்சப்படுவர்
மாக்களானால் மண்ணாவார்
மிச்சமும் மண்ணும் அவரவர் நெஞ்சிற்க்கே(நெஞ்சிறுந்தால்!!!)

இந்த தேர்வை வழக்கம்போல் குள்ளநரி ,டிராகன் மற்றும் வல்லூறு
நடத்துமா ,,,,,,,,,,,,,,,, நடத்ததான் விடுமா ???

ஜோதிஜி said...

நன்றி கருணாகரசு, சுடுதண்ணி, தேனம்மை

ஜோதிஜி said...

பெருமை சிறுமை என்பது இந்தியாவில் எதுமே இல்லை. அடிப்படை மக்களுக்கும் நாட்டுக்கும் இடைவெளி அதிகம். தன்னுடைய வாழ்க்கை காப்பாற்றிக்கொண்டு வாழ்ந்து முடித்து விட வேண்டும். வாழ்ந்து விட்டால் அவனால் நாட்டுக்கு பிரயோஜனமோ இல்லையோ ஓட்டு வாங்கிக்கொண்டு தங்களை வளர்த்துக்கொள்பவர்களுக்கு என்றும் பல தலைமுறைகளுக்கும் சிறப்பு?

ஜோதிஜி said...

முதல் வருகைக்கு நன்றி கிட்டு

மறுக்க முடியாது உங்கள் கருத்துக்களை.