Tuesday, February 09, 2010

அமைதிப்படை தொடக்கமும் நடுக்கமும்

இந்தியா இலங்கையின் உள்ளே நுழைந்த போதும், அதற்கு முன்னாலும் ஊடகத்தில் சொன்ன வாசகம் இது.  

" 72 மணிநேரம் எங்களுக்கு போதும்.  மொத்த பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு அமைதியை நிலைநாட்டி விடுவோம்"

ஆனால் அன்று மொத்த அதிகாரவர்க்கத்தினருக்கும் முன் இருந்த சவாலான நோக்கம் என்ன தெரியுமா?  பத்து லட்சம் என்று பிரபாகரன் தலைக்கு வைத்திருந்த ஜெயவர்த்னே திட்டத்தின்படி ஒன்று மொத்த விடுதலைப்புலிகளையும் நிராயுதபாணியாக ஆக்க வேண்டும்.  மற்றொன்று, குறிப்பாக பிரபாகரனை தனிமைப்படுத்தவேண்டும்.  இத்துடன் ஜெயவர்த்னே உருவாக்கியுள்ள ஒப்பந்தத்தை நிறைவேற்றி இந்தியாவின் பிராந்திய நலனுக்கு எதிர்காலத்தில் எந்தவித பிரச்சனைகளும் வந்து விடக்கூடாது என்ற இந்த நோக்கங்கள் தான் முக்கிய கடமைகளாக இருந்தது.

அமைதிப்படை உள்ளே வந்ததும், ஆரம்பரமாக விழா நடத்தி பரஸ்பர புரிந்துணர்வுகளை உருவாக்குகிறோம், அமைதியை மொத்தமாக நிலைநாட்டுகிறோம் என்பதன் அடிப்படையில் கண்ணாமூச்சி ரே ரே என்பது போல் ஆயுத ஓப்படைப்பு வைபவமும் நடந்து முடிந்தது.  இதற்கிடையில் விடுதலைப்புலிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆயுதங்கள், மற்றும் இந்தியா கொண்டு போயிருந்த ஆயுதங்கள் என்று தரம் வாரியாக தராதரம் இல்லாத குறிப்பாக பிரபாகரனுக்கு எதிர் அணியில் உள்ளவர்களிடம் ஒப்படைத்துக்கொண்டுருக்கும் நிகழ்ச்சியும் கனஜோராக மறுபுறம் நடந்தேறிக்கொண்டுருந்தது.

காத்து இருந்தவர்கள், வாய்ப்பை எதிர்பார்த்து ஆவலுடன் இருந்தவர்கள், மனம் முழுக்க சொல்லமுடியாத வெஞ்சினத்துடன் இருந்தவர்கள் என்று மொத்தமாக குலுக்கல் போடாத குறையாக தேர்ந்தெடுத்து அவர்களை ரா உளவுப்படையின் அடிப்படை சிந்தாந்த அடிப்படையில் உருவாக்கிக் கொண்டுருந்தனர்.  தினவெடுத்த தோள்கள் என்ன செய்யும்?   அது அந்தப்பக்கம்.

ஒப்பந்த ஷரத்துப்படி வடக்கு கிழக்கு மகாணங்கள் உருவாக்கபட்டு, முறைப்படியான மற்ற வேலைகள் தொடங்கப்பட வேண்டும்.  அதற்குப் பிறகு தமிழர்களின் பிரதிநிதிகள் போன்ற சடங்கு சமாச்சாரவேலைகள். இது இந்தப்பக்கம்.

இதற்கு மேலும் உள்ளே இருந்த மற்ற போராளிக்குழுக்கள் உன் பங்கு என் பங்கு எத்தனை? என்று கணக்கீடுகள்.  ரா வின் ஆசிர்வாத வார்த்தைகள் அவர்கள் அத்தனை பேர்களையும் மொத்தமாக மாற்றி இருந்தது.  தொடக்கம் முதல் மற்ற போராளிக்குழுக்களை ஒப்பிடும் போது EPRLF பத்பநாபா சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருந்தார்.  ஆனால் இந்திய அமைதிப்படையும், அதிகாரிகள் உருவாக்கிய புரிந்துணர்வும் அவரையும் இந்த மாயையில் விழும் அளவிற்கு மாற்றினார்கள் என்பது மிகுந்த ஆச்சரியம்.

அதுவரைக்கும் யாழ்பாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.  ஆனால் இந்திய அமைதிப்படை உள்ளே வந்ததும் சிங்கள குடியேற்றங்கள் அட்டகாசமாக உருவாகிக் கொண்டுருந்தது.

எல்லா சாலைகளும் ரோம் நோக்கி என்பது போல எல்லா பிரச்சனைகளும் பிரபாகரன் நோக்கி என்ற போதிலும் கூட அவரால் அந்த சூழ்நிலையில் அமைதியாய் இருப்பதை தவிர வேறொன்றும் செய்யும் அளவிற்கு இல்லை.  ஆனால் தொடக்கம் முதலே இந்தியாவிற்கு தெளிவான பார்வை? பிரபாகரன் எந்த காலத்திலும், எப்போதும் நமக்கு சாதகமாக இருக்கமாட்டார்?

அமைதி ஒப்பந்தத்தின்படி ஒவ்வொன்றையும் வரிசைக் கிரமமாக இந்தியா தான் உருவாக்கும்,  நேரிடையாக ஜெயவர்த்னேவுடன் எவரும் பேசக்கூடாது.  இந்தியா உருவாக்கியிருந்த வெளியில் சொல்லாத சட்டம் இது.  வடக்கு கிழக்கு மகாண பிரதிநிதிகள் என்று தேவைப்படும் 12 பேர் அடங்கிய பட்டியலில் பிரபாகரன் கொடுத்த ஏழு பேர்கள் நேரிடையாக ஜெயவர்த்னே கைக்குச் சென்றது.  காரணம் இந்த நேரம் மிக முக்கியம்.  மற்ற போராளிக்குழுக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்பட்சத்தில் எதிர்கால பிரச்சனைகளை உருவாக்கலாம்.  தான் தேர்தலில் நிற்கமாட்டேன் என்று தொடக்கம் முதலே பிரபாகரன் அறிவித்த காரணத்தால், தான் தேர்ந்தெடுக்கும் ஆட்களை சபையில் உருவாக்க வேண்டிய அவசர அவஸ்யங்கள் அவருக்கு.
 இதனைக்கண்ட இந்தியா " இந்தியா இலங்கை ஒப்பந்தத்திற்கு விடுதலைப்புலிகள் குந்தகம் விளைவித்தால் இந்தியா கடும் நடவடிக்கை எடுக்கும்"  என்று மிரட்டலோடு வானொலியில் (2.10.1987)விடுதலைப்புலிகளை திட்டிதீர்த்தது.

வந்தது அமைதியை நிலைநாட்ட.  ஆனால் அமைதியை உருவாக்குவதைவிட , உருவாகாமல் இருக்க என்னன்ன காரண காரியங்கள் தேவையோ அத்தனையும் தொடர்ந்து நடத்திக்கொண்டுருந்தது.

என்ன காரணம்?  பிரபாகரன் ஒரு சக்தி.  இந்தியா மற்றொரு மிகப்பெரிய சக்தி.

ஒரே நோக்கம் இவருக்கு இனி பணிந்து தான் ஆகவேண்டும்.  வேறு வழியில்லை.  அவர்களுக்கு எப்போதும் இந்தியாவிற்கு இலங்கை அடிபணிந்து இருக்க வேண்டும்.  எல்லாம் சரிதான்.

பிரபாகரன் கட்டளையிட்டால் அதிகபட்சம் பத்து நிமிடம்.  முடிவு தெரிந்து விடும்.  ஆனால் இந்தியாவிற்கு?

ராஜீவ் காந்தி முதல் கடைசி இராணுவ வீரன் வரைக்கும் மிகப்பெரிய ஜனநாயக வலைபின்னல்.  இயல்பான வலைபின்னல் என்றாலும் பரவாயில்லை.  பிரதமர், பிரதமரின் தனிச் செயலாளர், மற்ற செயலாளர்கள், ராணுவ செயலாளர்கள், தலைமை தளபதி, அயலுறவுக்கொள்கை அதிகாரிகள், பாதுகாப்புத்துறை சம்மந்தப்பட்ட அத்தனை நபர்கள் என்ற நீண்ட தண்டவாளமாக போய்க்கொண்டே இருக்கிறது.  பிரபாகரன் ராஜீவ் காந்தி என்ற இந்த இரண்டு தண்டவாளங்கள் மட்டும் இருந்து இருக்குமேயானால் நிச்சயம் அன்றே ஒரு முடிவுக்கு வந்து இருக்கும்.

ஆனால் இடையில் ஒருவர்?  அவர் தான் ஜே.என்.தீட்சித்.  மொத்த வலைபின்னல்களையும் தனக்குச் சாதமாக மாற்றியதும், இராணுவ அதிகாரிகளின் பின்னால் சொல்லப்பட்ட பேட்டிகள் வாயிலாக நாம் உணரப்போகும் விசயங்களும் எந்த அளவிற்கு ஒரு தனி மனித ஈகோவால் ஒரு இனம் அழிக்கப்பட காரணமாக இருந்ததை தொடரும் போது உங்களுக்கு புரியும்?

ஒரு வகையில் பார்க்கப்போனால் அன்றைய சூழ்நிலையில் இந்தியாவை விட ஜெயவர்த்னேவுடன் அனுசரித்து மொத்த பிரதிநிதிகளை உருவாக்கிவிடலாம் என்ற பிரபாகரன் மனதிற்குள் கொண்டுருந்த நம்பிக்கையும் இந்தியா தவிடுபொடியாக்கிக்கொண்டுந்தது.  ஜெயவர்த்னே மனதில் எத்தனை எதிர்கால திட்டங்கள் இருந்து இருக்குமோ அத்தனை திட்டங்கள் பிரபாகரன் மனதிலும் இருந்து இருக்கத்தான் வேண்டும்.  காரணம் இப்போதைய சூழ்நிலையில் சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்து தொலைத்து விடலாம் என்கிற மனோநிலை.

அமைதி என்கிறார்கள்.  ஆனால் அமைதியைத் தவிர அத்தனை அலங்கோலங்களையும் நடத்திக்கொண்டுருக்கிறார்கள்.  பேசினால், உட்கார்ந்தால், நடந்தால் குற்றம்?  என்ன செய்யவது?  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழி அன்றைய தினத்தில் இந்திய நடவடிக்கைகளில் தான் அதிகம் தெரிகிறது.
சமாதானமா கிலோ என்ன விலை? என்று கேட்டுக் கொண்டுருப்பவர் கையை தூக்கிக்கொண்டு முன் வர ஐயோ நீ கையை தூக்கியதும் தவறு என்பதாக இந்தியாவின் நடவடிக்கைகள்?

இது போன்ற காரண காரியங்களை சுருதி சுத்தமாக நிறைவேற்ற தான் தேர்ந்தெடுத்து வைத்திருந்த PLOTE இயக்கத்தினர். செல்வம் தலைமையில் இருந்த TELO. பத்பநாபா தலைமையில் இருந்தவர்கள், EPRLF போன்றவர்களை மற்றொரு பக்கம் அங்கங்கே களம் இறக்கிக்கொண்டுருந்தார்கள்.

இவர்கள் உருவாக்கிய கிழக்கு மகாண பகுதியில் நடந்த மொத்த கூத்துகளும், தொடக்கத்தில் இவர்கள் போட்ட வம்புச்சண்டைகளில் அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகளைப் பார்த்து தன்னை தங்களை ஒவ்வொருவரும் உயர்வாக கருதத் தொடங்கினார்கள்.  காரணம் பின்னால் இந்தியா இருந்து கொண்டு கொம்பு சீவிக்கொண்டுருக்கிறது.

விடுதலைப்புலிகளை அழித்து ஒழிக்க உதவிய ஒரே காரணமே தங்களை தமிழ் மக்களின் பிரதிநிதியாக கருதிக்கொண்டு மேலும் தங்கள் புனிதப்பணிகளை தொடங்கினர்.  இதன் உச்சக்கட்டம் அப்போது PLOTE அமைப்பில் இருந்து செயல்பட்டுக்கொண்டுருந்த மாணிக்கதாசனும், எஸ்.காஸ்ட்ரோவும் கொடுத்த அறிக்கை இங்கு குறிப்பிடத்தக்கது.

" விடுதலைப்புலிகள் அமைப்பு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வரவில்லையென்றால் நாங்களே அவர்களை கொன்று அழிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை"

இவர்கள் மூலம் நடந்த சண்டையில் அப்போது ஏறக்குறைய 200 விடுதலைப்புலிகள் இறந்தனர்.  இவர்களிடம் தப்பிக்க ஓடியவர்களை அமைதிப்படை விரட்டி அடித்தது.  தொடர்ச்சியான வன்முறை.  கலவரங்கள், வன்முறைகள்.

தொடக்கத்தில் தொடங்கியது அவர்கள்.  ஆனால் மொத்தத்தையும் இறுதியில் முடித்து வைத்தது பிரபாகரன்.  சூழ்நிலையை உருவாக்கிய அவர்கள்.  ஆனால் சாதகமாக்கிக்கொண்டவர்கள் விடுதலைப்புலிகள்.

இதன் தொடர்ச்சியாக தினந்தோறும் ஒரு மணி நேரம் "அமைதி நிகழ்ச்சி"  என்று வானொலியில் தினந்தோறும் விடுதலைப்புலிகளை இந்தியா திட்டி தீர்த்தது.

பொறுத்து பார்த்த பிரபாகரன் இறுதியாக " இந்தியா தனது உளவுப்படையை வைத்துக்கொண்டு தேவையில்லாத நபர்களை வளர்த்து அவர்களுக்கு அந்தஸ்த்து கொடுத்து எங்கள் வாழ்வுரிமை போராட்டங்களை முடக்க நிணைக்கிறது"  என்றார்.

ஒப்பந்தப்படி செப்டம்பர் 10ந் தேதி பூர்வாங்க வேலைகள் தொடங்கப்பட வேண்டும்.  ஆனால் அதைவிட யாழ்பாணம் அமைதிக்கான சூழ்நிலையில் தற்போது இல்லை என்று ஆட்சி அதிகாரத்தை தான் கைப்பற்றும் நோக்கோடு இந்தியா முயற்சிக்க ஒவ்வொன்றும் கோர்த்து முட்டுச் சந்தில் கொண்டு போய் நிறுத்தியது.

வெறுத்துப்போனவர்களின் திலீபனும் ஒருவர். அவர் உண்ணா நோன்பு போராட்டம் தொடங்கியதும், அதை இலங்கையும் இந்தியாவும் வேடிக்கை பார்த்ததும், இறுதியில் அவர் இறந்த போது இந்தியாவில் இருந்து சென்ற அமைதிப்படையின் தலையில் ஏழரை பகவான் தன்னுடைய முதல் சுற்றை தொடங்கியிருந்தார்?

திலீபன் ஏன் இறந்தார்?

7 comments:

 1. குற்றம் ...நடந்தது என்ன...?? என்பது போல இருக்கு ஜோதிஜி

  ReplyDelete
 2. எனது நண்பர் ஒருவரிடம் ராஜிவ் காந்தி கொலை பற்றி பேசிக்கொண்டு இருந்தபோது அவர் சொன்னர் ராஜிவ் கொலை பற்றி நாஸ்டர்டாம்ஸ் தனது புத்தகத்தில் தெரிவித்து உள்ளார் என்று. புலிகள் பற்றியும் கூறியுள்ளாரம். "royal pilot will killed by armed tribes." அவர் சொன்ன வார்த்தைகள் சரியாக நினைவில்லை.

  ReplyDelete
 3. நாடுகளின் இறமையைப்பெரியநாடாகஇருந்தாலென்ன
  சிறியநாடாகஇருந்தாலென்னமதிக்கவேண்டும்.ஆனால்
  தெற்காசியாவில் தன்னைப்பெரியண்ணன் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியா என்றைகும் மற்ற அண்டைநாடுகளின்இறமையைமதித்துநடக்கவில்லை.
  இந்தியஆட்சியாளர்களுக்கிருந்ததிமிர்தாங்கள்பெரியநாடு தாங்கள் சொல்வதைமற்றநாடுகள்கேட்கவேண்டும்.
  இந்நிலையில் கைலிகட்டிய புலிவீரர்கள் நாட்டுப்பற்று
  டனும் வீரமாகச்செயல் பட்டது பொறுத்துக்கொள்ள
  முடியவில்லை.நான் ஒரு சுருட்டைப்பற்றிமுடிக்கிற
  திற்குள் புலிவீரர்களையும் பிரபாகரனையும்தன்படை சமாதிகட்டிவிடும் என்று திட்சித் கொக்கரித்தான்.
  இந்தியத்தமிழர்மாதிரிக்கோழையாக இருப்பான்கள்
  சுலபமாக ஒழித்துக்கட்டிவிடலாம் என்று அரசியல்
  கத்துக்குட்டியும் மேட்டுக்குடித்திமிரும் கொண்ட ராஜீவ் காந்தியும் கனவுகண்டார்.ஆனால் பிரபாகரன்
  தலைமையில் உள்ளபோராளிகள் இந்திய அரசின்
  துரோகத்தைச்சரியாக இனங்கண்டுகொண்டதால் பல
  மானஎதிர்ப்பைக்காட்டிப்போராடினார்கள்.
  பிரச்சினைகுரியவர்களான ஜே.ஆர் ஜேயவர்த்தனாவு
  ம் பிரபாகரனும் நேரடியாகச்சந்தித்துப்பேசிவிடக்கூடா
  து என்று கருதிய இந்தியா ஒரு தடுப்புச்சுவர் எழுப்பி
  இருந்தது.அவர்கள் இருவரும் பேசியிருந்தால் ஏதோ
  ஒருவகையில் அடிபடைஉரிமைகளுடன் பிரச்சினை
  தீர்ந்திருக்கும் இந்தியாவின் நாட்டாண்மைக்கு இடம்
  இல்லாமல் போயிருக்கும்.இத்தனை அழிவுகளையும்
  தவிர்திருக்கலாம்.ஒரு கட்டத்தில் பிரபாகரனுக்கு ஜே.ஆர் உடன்நேரடியாகப்பேசவிருப்பம்இருந்துள்
  ளது.ஆனால் இந்திய நரியின் சதியால் அது கை
  கூடவில்லை

  ReplyDelete
 4. நன்றி வினோத் தேனம்மை தவேஷ்

  அரசாங்க வேலை, கோப்பு தரும் நம்பிக்கை, பதவியினால் கிடைத்த பகட்டான வாழ்க்கை,ஜனநாயகத்தில் உள்ளே உள்ள புரையோடிப்போன நீக்குபோக்குகள், பணத்திற்கும், பதவிக்கும் அடிபணிந்து தலைவணங்கிய மனிதர்களாகவே பார்த்துப் பழகியிருந்த தீட்சீத் என்ற அதிகாரிக்கு வாழ்க்கை முழுக்க வேறொரு உலகமும், லட்சிய வேட்கை நிறைந்த மனிதர்களும், கொள்கைகளுக்காக தலைவணங்காதவர்களும் இந்த உலகத்தில் உண்டு என்பதை தீட்சித் வாழ்க்கை முழுக்க நிணைக்க வைத்தவர் பிரபாகரன். வெற்றி தோல்வி என்பதை விட இறுதியில் பாவமன்னிப்பு போல தீட்சித் எழுதிய புத்தகங்கள் இதைத்தான் உணர்த்துகிறது.

  ReplyDelete
 5. பாராளுமன்றத்தில் முது பெரும் அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞருமான ராம்ஜேத்மலானி கேட்ட கேள்விக்கு ராஜீவ் காந்தி இப்படி பதில் சொன்னார்,"குரைக்கிற ஒவ்வொரு நாய்க்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று. கடைசி வரை ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டாகவே இருந்திருக்கிறது. அது அவரின் உயிரையும் வாங்கி விட்டது.

  ReplyDelete
 6. இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் ஜெயவர்த்னேவுக்கு அடுத்தபடியாக இன்று ராஜபக்ஷேக்கு இத்தனை வெற்றி மேல் வெற்றி வர என்ன காரணம்? அவர் உருவாக்கிய சகோதரர்களின் கூட்டணி. ஒருவர் பாதுகாப்புக்கு (கோத்தபய) உள்ளே, ஒருவர் வெளியே (பசில்)ஆதரவு திரட்ட. இந்திரா காந்திக்கு நேரு மூலம் கிடைத்த பாடமும் அறிவும் அமைந்ததை விட அவருக்கு கிடைத்த நரசிம்மராவ்,பார்த்தசாரதி போன்ற கண்களுக்கு தெரியாத விவேக படைகள். ஆனால் ராஜீவ் காந்தி விரும்பிய அத்தனை ஆசைகளும் எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பம் சார்ந்த அத்தனையும் நிராசையாகப் போய்விட்டது. அதனால் தான் திருபாய் அம்பானி கூட ராஜீவ் காந்தி தன்னை வெறுக்கத் தொடங்கி விட்டார் என்றதும் உங்கள் அம்மா கொடுத்ததை உங்களிடம் கொடுக்க வந்துள்ளேன் என்று எளிதாக தூண்டில் போட்டு அவரால் காரியம் சாதிக்க முடிந்து கரை சேரவும் முடிந்தது. இறக்கும் வரையிலும், அவர் நம்பியவர்கள் அநேகம். அவரை தவறான வழியில் பயன்படுத்தி மேலே சென்றவர்களும் அநேகம். அவரே ஒரு அளவிற்கு மன உளைச்சலின் உச்சகட்டத்தில் ஓய்வுக்காக மாலத்தீவில் இருந்த போது நடிகர் அமிதாப்பச்சனிடம் சொன்ன வாசகம் இது.

  எத்தனை பேர்களைத் தான் வெறுத்துக்கொண்டு இந்த உலகில் வாழ்ந்து விடமுடியும்.

  ரோஜாவின் ராஜா நேரு என்கிறார்கள். ஆனால் இந்தியாவிற்கு சரியான, ஆனால் இந்தியா போன்ற சரியில்லாமல் வாழ்ந்த மேல்தட்டு வர்க்கத்தினரை தவறாக புரிந்து கொண்டு கடைசி வரைக்கும் தன்னை மாற்றிக்கொள்ளாமலே வாழ்ந்த இந்த ராஜீவ் காந்தி தான் உண்மையிலே மென்மையான ரோஜாவுக்கு ஒப்பிடவேண்டும். காலம் முழுமையாக அவரை முள்ளாக மாற்றிவிட்டது என்பதை விட மாறும் சூழ்நிலையில் சுற்றி இருந்தவர்கள் உருவாக்கி விட்டார்கள். அதை உணரவாய்ப்பு இல்லாமலே பலியாகிப்போனது தான் உச்சத்தின் சொச்சம்.

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.