Tuesday, December 22, 2009

தீர்க்கதரிசனம்

ஜெயவர்த்னே ஆட்சியில் நடந்த உச்சத்தின் முதல் பகுதி யாழ்பாண நூலக எறிப்பு.  காகிதங்களை கொளுத்தி முடித்த பிறகு அடுத்து மனிதர்கள்.  சமயம் பார்த்துக் கொண்டுருந்தவர் பிரபாகரன் தாக்குதல்களால் இறந்த இராணுவ வீரர்களை இறுதி அஞ்சலி என்ற போர்வையில் வலம்வரச் செய்து வெறீயூட்டும் நிகழ்வும் நடந்தது.  சாதரணமாகவே காத்துக்கொண்டுருந்த அத்தனை சிங்களர்களும், காவல்துறையும் ஆழித்தீயின் கோரத்தாண்டவம் போல் ஆடித்தீர்த்தனர்.
உலகமெங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் பிரபாகரனுக்கு பணமாக பொருளாக ஆதரவுக் கரம் நீட்டியதற்கு பல காரணங்கள்.  அச்சம், மிரட்டல், ஆதரவு, பாசம், வேறு எவரும் இல்லை, வேறு வழியில்லை.  இந்த ஆறு காரணங்களும் ஒன்றாக சேரச்சேர அவருடைய வளர்ச்சி 1978 முதல் 1984க்குள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு வளர்ச்சி பெற்று தனியாக ஆயுதக் கொள் முதல், தனியாக கப்பல் போக்குவரத்து,போன்ற அத்தனை உள்கட்டமைப்பு உள்ள இராணுவ வளர்ச்சியாக படிப்படியாக வளர்ச்சி அடைந்து கொண்டே வந்தது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் அப்போது இருந்த மற்ற இயக்கங்கள் உமா மகேஸ்வரன் PLOTE.  சிறீ சபாரெத்தினம் தலைமையில் TELO. பத்மநாபா தலைமையில் EPRLF. கடைசியாக EROS  என்ற அமைப்பும் லண்டன் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுக்கொண்டுருந்தது. அவவ்போது பிரபாகரனால் நடத்தப்பட்ட தனி மனித தமிழர் படுகொலை என்பது தண்டணை என்பதாக இருந்ததே தவிர சகோதர யுத்தம் என்பதாக மாற்றம் பெறவில்லை.  காரணம் அதுவரைக்கும் இந்தியா உள்ளே நுழையவில்லை.

மற்றவர்களுக்கும் பிரபாகரன் போராளிகளுக்கும் உள்ள வித்யாசம், தாக்குதல்கள் ஒவ்வொன்றும் துல்லியமாக திட்டமிட்டு நடத்தப்பட்டது.  ஆனால் அதன் மொத்த விளைவுகளையும் மக்கள் சந்திக்க நேர்ந்தது. இந்த கருப்பு ஜுலையின் கோரத்தின் கொல்லப்பட்ட தமிழர்களும், இழந்த சொத்துக்களும், அகதிகளாக தப்பி வந்தவர்களும் கணக்கில் அடங்கா.  இது போக இராணுவ பாதுகாப்பு நிறைந்த வெலிக்கடை சிறையில் இருந்த குட்டிமணி தங்கதுரை உள்ளே இருந்தவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களும், கண்ணீர் வரவழைக்கும் கோரச் சுவடுகளும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத ஜுலை மாதமாக ஆனது.

மக்களின் துன்பம் ஒரு வகையில் இந்தியாவின் பார்வையிலும், தமிழ்நாட்டின் பார்வையிலும் பட அது வேறு வகையில் பிரபாகரனுக்கு உதவியாய் இருந்தது.  அதுவே ஆண்டு கொண்டுருந்த எம்.ஜி.ஆர். தமிழீழம் என்ற கனவு அடைய எவ்வளவு செலவாகும்? என்று கேட்கும் அளவிற்கு.  அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர். "தனி நாடு தான் இனி தீர்வு" என்பதை மனப்பூர்வமாக நம்பியவர்.

ஆனால் மொத்த தாக்குதல்களையும் அமிர்தலிங்கம் இந்திரா காந்தியிடம் வந்து சொன்ன போது, தனிநாடு என்ற கோரிக்கையை விட சுயாட்சிக்கு ஆதரவு தயார் என்பதாக மாற்றம் பெற்றது.  அமிர்தலிங்கம் மொத்த கதையையும் சொன்ன போதும் கூட வேறு வழியில்லை என்பதாகத் தான் பேச்சுவார்த்தைக்கு அமிர்தலிங்கம் முன்வந்தார். இதன் தொடர்ச்சியாக திம்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.

எம்.ஜி.ஆர் ஒரு பக்கம், கலைஞர் ஒரு பக்கம், பழ, நெடுமாறன் ஒரு பக்கம்.  தமிழ்நாட்டில் கண்டன பேரணிகளும், ஆர்ப்பாட்டமும், கடல் வழியாக நாங்கள் இலங்கைக்குச் செல்கிறோம் என்ற நெடுமாறன் பயணமும் என்று மொத்தமாக தமிழ்நாடு இலங்கை ஆதரவு நெறி கட்டிக்கொண்டுருந்தது.  அப்போது கலைஞர் சொன்ன வாசகம்

" பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசத்தை பிரித்துக் கொடுப்பதைப் போல தமிழர்களுக்கு தமிழீழம் தான் இனி ஒரே தீர்வு"

இந்திரா காந்தியின் சார்பாக அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்மராவ் கொழும்பு சென்றபோதும் கூட ஜெயவர்த்னே அவமானபடுத்தியோடு அசைந்து கொடுப்பதாகவும் இல்லை. இதை பிரபாகரன் கவனித்துக்கொண்டுருந்தாலும் உள் மனம் "சிங்களர்களை தவறாக இந்தியா பார்த்துக்கொண்டுருக்கிறது"  என்பதாக தன்னுடைய பாதையில் மிகக் கவனமாக இருந்தார். அவரின் ஆயுதப்பாதையும் ஒரு பக்கம் வலுவடைந்து கொண்டுருந்தது.

இதே சமயத்தில் விடுதலைப்புலிகளின் மொத்தக் கோட்பாடுகளின் ஒன்றாக திருமணம் செய்து கொள்ளல் கூடாது என்ற கொள்கை பிரபாகரன் மீறும் சூழ்நிலை உருவானது.  காரணம் 1983 கருப்பு ஜுலை கலவரத்தின் காரணமாக பெரதேனியா பல்கலைகழகத்தின் பயின்று வந்த மொத்த தமிழ் மாணவ மாணவியர்களும் எங்களை யாழ்பாண பல்கலைகழகத்திற்கு மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.  காரணம் ஏற்கனவே நடந்த கலவரத்தில் திட்டமிட்டு தமிழ் மாணவ மாணவியர்கள் அத்தனை பேர்களும் தாக்கப்பட்டனர்.  இதன் பொருட்டு மாணவிகள் (  ஜெயா, லலிதா, வினோஜா, மதி என்கிற மதிவதனி) சாகும் வரைக்கும் உண்ணாவிரதம் தொடங்க, பிரபாகரன் பார்வைக்கு வந்த அவர்களை கட்டாயப்படுத்தி தமிழ்நாட்டு அழைத்து வந்தனர்.
அப்போது தமிழ்நாட்டில் இருந்த ஆன்டன் பாலசிங்கத்திடம் "மதிவதினியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக" சொன்ன போது முதலில் யாரும் நம்பும் சூழ்நிலையில் இல்லை. காரணம் ஏற்கனவே உமா மகேஸ்வரன் பிரச்சனை, அது போக போராளிகள் எவரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற பிரபாகரன் உருவாக்கிய வைத்திருந்த கட்டளை, இதன் பொருட்டு உள்ளே போராளிகளாக இருந்தவர்களின் மொத்த அபிலாசைகளும் தனக்குள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் என்று மொத்தமாக ஒரு தர்மசங்கடத்தை உருவாக்கியது.

இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க அம்சம், மதிவதினியிடம் நேரே பேச தயங்கி ஆன்டன் பாலசிங்கம் மூலம் ஒரு புரிந்துணர்வை உருவாக்கியதும், மொத்த போராளிகளிடமும் கலந்து பேச வைத்து அவர்களின் சம்மதத்தையும் பெற்று, பல சங்கடங்களையும் கடந்து சென்னை திருப்போரில் (1984 அக்டோபர் 1).  மதிவதினியின் பெற்றோர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு தேடப்படும் தீவிரவாதியின் மொத்த சாதக பாதக அம்சங்களையும் அவர்கள் அத்தனை பேரையும் வைத்து அலசி ஆராய்ந்துவிட்டு அமைதியாக நடந்தது.
காதல் கல்யாணம் என்பதுடன் ஜாதி மறுப்பு என்கிற நிலையிலும் அமைந்தது.  அதைத் தொடர்ந்து போராளிகள் திருமணம் என்ற வாழ்க்கையும் நடைபெறத் தொடங்கியது.  தாமதம் என்றாலும் வரும் காதலை எவரால் தடை போட முடியும்?

அப்போது சீறீ சபாரெத்தினம் தலைமையில் இயங்கிக்கொண்டுருந்த டெலோ இயக்கம் மட்டும் இயக்கத்தில் பெண்களை இணைத்து இருந்தனர்.  ஒரு பாதிரியார் உத்தரவின்படி பிரபாகரன் அதற்குப் பிறகு படிப்படியாக பெண்களை இயக்கத்தில் சேர்க்க ஆர்வம் காட்டினார்.

முதன் முறையாக இந்த சமயத்தில் அனிதா பிரதாப் என்ற பெண் பத்ரிக்கையாளர் பிரபாகரனை சந்தித்ததும், அவர் மூலம் முன்பே இந்த ஜுலை கருப்பு தினத்தை உலகம் முழுக்க பரப்பியதற்காக அவருக்கு பிரபாகரன் நன்றி சொன்னதும், இயக்கத்தில் உள்ளவர்களின் ஓழுக்க ரீதியான முன்னேற்பாடுகளை பார்த்து அனிதா பிரதாப் வியந்து நின்றதும், அத்துடன் பிரபாகரன் அன்று சொன்ன வாசகம் அவரின் தீர்க்கதரிசனத்தையும் பறைசாற்றியது.

இப்போதைய சூழ்நிலையில் இந்தியா எல்லா உதவிகளையும் உங்களுக்குச் செய்கிறது.  உங்கள் போராளிகளுக்கு பயிற்சி முகாம், தமிழ்நாட்டில் உங்களுக்கு பண உதவி என்று எல்லாபக்கமும் உதவி என்பதை எவ்வாறு கருதுகிறீர்கள் என்று கேட்ட போது பிரபாகரன் சொன்ன பதில்.

”இப்போது எங்களுக்கு இந்தியா செய்கின்ற உதவி எங்கள் சுதந்திரத்திற்காக அல்ல.  அவர்களின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக.  இலங்கையை பயமுறுத்தி வைப்பதற்காக.  இதே இந்த இந்தியாவுடன் நாங்கள் எதிர்காலத்தில் போரிட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்"

காரணம் அன்னை இந்திரா காந்தியின் இறப்பும், மக்கள்தலைவர் எம்.ஜி.ஆர் இறப்பும் இலங்கை வாழ் மக்களின் வாழ்வுரிமை போராட்டத்தில் மிகப் பெரிய பின்னடைவை உருவாக்கியது என்றால் அது மிகை இல்லை.  அதுவே தனிப்பட்ட முறையில் பிரபாகரனின் வளர்ச்சிக்கும், ஆளுமைக்கும் , அவரை மட்டும் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலையில் அதுவரையிலும் நடந்து நிகழ்வுகளில் இருந்து மற்றவர்களைவிட சற்று புத்திசாலித்தனமாய் சுயசார்பு என்ற நிலையையும் எட்டியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2 comments:

geethappriyan said...

அருமையான இடுகையும் படங்களும் தொகுத்து அளித்தமைக்கு நன்றிஜி

அன்புடன் நான் said...

நல்ல புரிந்துணர்வுக் கட்டுரை பகிர்வுக்கு மிக்க நன்றிங்க எம்.ஜி ஆர் மீது மிக மரியாதை மேலிடுகிறது தங்கள் கட்டுரையை படிக்கையில்.