Tuesday, November 17, 2009

தடுமாற்றத்தின் திறவுகோல் மாற்றம்

வாய்ப்புகளைத் தேடி பலர் அலைவதுண்டு.  ஆனால் இயல்பாய் உருவான வாய்ப்புகள் சிலருக்கு வாழ்க்கையின் போக்கையே சிறப்பானதாய் மாற்றிவிடும்.

போர்த்துகீசியர்கள் (கிபி 1505) பயணித்த கப்பல் இந்திய பெருங்கடலில் வந்து கொண்டுருந்த போது (டான் லுரன்கோ டி அல்மெடியா) அடித்த பெருங்காற்று கப்பலை திசை மாற்றி இலங்கையின் தெற்கு பகுதியின் ஓரத்தில் கொண்டு போய் நிறுத்தியது. அவர்களுக்கு இலங்கை என்ற நாடு சென்றடைய வேண்டிய பட்டியலில் இல்லை என்பதும் ஒரு ஆச்சரியம்.

இவர்கள் உள்ளே நுழைந்து போது ஆண்டு கொண்டுருந்த சிங்கள, தமிழ் மன்னர்களுக்குள் இல்லாத ஓற்றுமையை கவனித்தனர்.  கொழும்பு மன்னர் (வீர பராக்கிரமபாஹ)  உடன் லவங்க பட்டைக்கான (உலகத்தில் மிக சிறந்த பூமி ) ஓப்பந்தம் போட்டு வியாபாரத்தை தொடங்கினர்.

மன்னர் அடுத்த நான்கு ஆண்டுகளில் இறந்து விட உருவான வாரிசு சண்டையை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்டு கடலோர பகுதியை தங்களின் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர்.

நிர்வாக வசதிக்காக கொழும்பில் ஒரு கோட்டையை கட்டினர். சிங்கள மன்னர்களின் ஆதிக்கத்தையும் சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டே வந்ததோடு முடிந்த போதெல்லாம் மக்களையும் கிறிஸ்வ மதத்திற்கு மாற நிர்ப்பந்தம் செய்து கொடுமைப்படுத்தினர்.

ஆண்டு கொண்டுருந்த சிங்கள மன்னர்கள் இவர்களிடமிருந்த நவீன ரக ஆயுதங்களைக்கண்டு பயந்து போயிருந்தாலும் மாற்று வழியை எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

தமிழ் மன்னர்கள் ஆண்டு கொண்டுருந்த பரப்பில் இறுதியாக கவனம் செலுத்திய போர்த்துகீசீயர்கள், (1612) வண்ணார்பொன்னை என்ற இடத்தில் கடைசியாக ஆண்டு கொண்டுருந்த  சங்கிலி குமரன் தோற்கடிக்கப்பட்டார். இதில் இருந்து தொடங்கியது தான் இலங்கையில் அந்நியர் ஆட்சியும் தொடர்ந்த அலங்கோலங்களும்,  ஆனால் ஆங்கிலேய ஆட்சி வரைக்கும் வன்னி பகுதியில் குறுநில மன்னராக இருந்த பண்டார வன்னியன் குறித்து பிறகு பார்க்கலாம்.

ஆட்சி புரிந்து போர்த்துகீசீயர்கள் புத்த விகாரங்களைப் போல இந்து கோயில்களையும் முடிந்தவரைக்கும் சிதைத்து தரைமட்டமாக்கினர்.

மீள முடியாமல் வாழ்ந்து கொண்டுருந்த,  சிங்கள தமிழ் மக்கள் மற்றும் மன்னர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்து இருந்த வேறொரு உதவி எதிர்பார்க்காத நேரத்தில் டச்சு நாட்டு படைத்தளபதி (ஜோரிஸ் ஸ்பீல்பெர்க்) கொழும்பு  வந்து இறங்கியதன் மூலமாக நடந்தேறியது.

அடுத்த ஆட்டம் ஆரம்பம்.

டச்சுக்காரர்கள் வளர்த்து பாதுகாத்த மரத்தில் உள்ள ஒவ்வொரு பூக்களும் மலர்ந்து இறுதியில் கனியாக  மொத்த இலங்கை பரப்பளவும் டச்சு நாட்டு ஆளுமைக்குள் வந்த ஆண்டு 1658.  இந்த ஆண்டு தான் இறுதியாக ஆண்டு கொண்டுருந்த தமிழ் மன்னர் ஆட்சியை வீழ்த்த முடிந்தது. அது வரைக்கும் அத்தனை சிங்கள மன்னர்களின் ஆட்சியை மட்டுமே கைப்பற்றி இருந்தனர்.

கழுத்து வலிக்கு அச்சப்பட்ட மக்கள் உருவாகியிருந்த திருகுவலியால் திகைத்துப் போய் வாழ்ந்தனர்.  கத்தோலிக்க மதம் சார்ந்தவர்களைத் தவிர மற்ற அத்தனை மத மக்களுக்கும் அதிக வரியும், கொடுமையான தண்டனைகளுமாய் டச்சுக்காரர்கள் பேயாட்ட ஆட்சி நடத்தினர்.

இந்தியாவில், ஏனைய மற்ற மேலைநாட்டினர் பார்த்துக்கொண்டுருக்கும் "இலங்கை தமிழர்கள் வாழ்வுரிமை பிரச்சனைகள்" என்ற ஊற்றுக்கண் ஒரு பக்கம்.  ஆனால் இந்த மூலத்தில் இருந்து உருவாகி கிளை நதிகளாக பிரிந்த உள்ளே உள்ள நதிகள் இரண்டு.  ஒன்று, இலங்கை பூர்வகுடி தமிழர்கள்.  மற்றொன்று இந்தியாவில் இருந்து தேயிலை தோட்ட வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே வாழ்க்கையை தொடங்கிய தோட்டத் தமிழர்கள்.

இதற்கு பிறகு இதில் இருந்து பிரிவது குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த மக்கள் சார்ந்த மீட்சியும், எழுச்சியும், வீழ்ச்சியும்.

மொத்தத்தில் பல விபரீதங்களையும் உருவாக்கிய இந்த பிரிவினைகள் எங்கிருந்து தொடங்கியது?

இங்கு இதைக் குறிப்பிடக்காரணம் விரைவில் ஆங்கிலேய ஆட்சிக்குள் போகப்போகின்றோம்

தொடக்கத்தில் போர்த்துகீசியர்கள் உள்ளே வந்த போது தொடக்கத்தில் கொழும்பு, பிறகு படையெடுப்புகள் நிகழக்கூடும் என்ற முன் எச்சரிக்கை காரணமாக கண்டியில் நிர்வாக பரிபாலனம் செய்தனர்.

அடுத்து வந்த டச்சுக்காரர்கள் தங்களுடைய நிர்வாக வசதிக்காக மொத்த இலங்கையையும் மூன்றாக பிரித்தார்கள்.  கொழும்பு, யாழ்பாணம், கல்லே.  இதிலும் ஒரு ஆச்சரியம் யாழ்பாணத்திற்கு என்று தனி அந்தஸ்துடன் கூடிய ஆட்சியமைப்பு.  இந்த சமயத்தில்தான் உள்ளே வந்தவர்கள் ஆங்கிலேயர்கள்.

கிழக்கிந்திய கம்பெனி மூலம் வலுவாக இந்தியாவில் காலூன்றியிருந்த பிரிட்டன் ஆட்சியாளர்கள் சமயத்தை எதிர்பார்த்து காத்து இருந்து, கைப்பற்றிய ஆண்டு 1779 ஆம் ஆண்டு.

ஏறக்குறைய இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி (1600) உள்ளே வந்து மூன்றாவது தலைமுறை வாழ்ந்து கொண்டுருந்த காலகட்டம்.

ஆனால் இந்தியாவில் இருந்த சென்னை மகாண கவர்னர் (ஹோவர்ட் பிரபு) அதிகாரத்தின் கீழ் இருந்த இலங்கை முழுமையாக இங்கிலாந்து மன்னரின் கீழ் வந்த ஆண்டு 1798.  இடையில் எந்த நிர்வாக சீர்சிருத்தத்தையும், முழுமையான நிர்வாகத்தையும் ஆங்கிலேயர்களால் இலங்கையில் செயல்படுத்தவில்லை.

காரணம் அப்போது பீதியை கிளப்பிக்கொண்டுருந்த நெப்போலியன் படையெடுப்புகள்.

சகஜ நிலமைக்கு வந்த ஆங்கிலேயர்கள் ஆளத் தொடங்கினர்.  ஒவ்வொன்றாக மாற்றம் பெறத் தொடங்கியது.  இறுதியில் மொத்த இலங்கைக்கும் உண்டான நிர்வாக சீர்திருத்தங்கள், வடிவங்கள், உருவானதில் இறுதி வடிவம் தான் ஆர்மியென்ஸ் உடன்படிக்கை (1803 ஜனவரி 1)

அன்றே மொத்த இலங்கையில் தமிழர்களின் எல்லைகளாக மிகத்தெளிவாக இலங்கை வரைபடம் (Map) உருவாக்கி வெளியிடப்பட்டது.

வடக்கில் சிலாவ், கிழக்கில் மடவாச்சி,தெற்கில் மடவில்குளம் தொடங்கி திருகோணமலை மட்டக்கிளப்பு மாவட்டம் வரைக்கும்.

தொடக்கத்தில் மன்னர்களின் ஓற்றுமையின்மையால் உள்ளே மட்டும் அடித்துக் கொண்டு மக்கள் செத்துக் கொண்டுருந்தார்கள்.  பெரிதான உருக்குலைத்தல் ஏதுமில்லை.  அடுத்து வந்த போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்களால் மொத்த வாழ்வுரிமையை இழந்து, வழிபாட்டு உரிமையைக்கூட இழந்தது மட்டுமல்லாமல் உள்ளே இருந்த மொத்த வளமும்  கரையேறிக்கொண்டுந்தது.

ஆமாம் ஈழம் என்றால் இலக்கிய தமிழில் "சொர்க்க தேசம்" என்று பொருள் வருகிறது.  சொர்க்கத்தை ஆள வந்தவர்கள் அனுபவித்தோடு மட்டுமல்லாமல் அத்தனை அல்லல்பாடுகளையும் பரிசாக மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.

அன்று உள்ளே இருந்து எடுத்துச் சென்ற செல்வத்தை வைத்து மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர்.  இன்றும் உள்ளே வாழ்பவர்கள் ஒற்றுமையாய், மகிழ்ச்சியாய் வாழ்ந்து விடக்கூடாது என்று வெளியே இருந்து தன்னால அத்தனை "தொண்டுகளையும்" செய்து கொண்டு இருக்கின்றனர்.

பிழைக்க போனவர்களுக்கு என்ன உரிமை வேண்டிக்கிடக்கு?

பொரியல் அவியல் போல் பேச்சுரிமை (மட்டும்) பெற்ற இலங்கைக்கு வெளியே உள்ள அத்தனை மக்களையும் மன்னித்து விடுவோம்?  அவர்களுக்கு பூர்வகுடி  கதையும் தெரியாது.  கதைத்து வாழ்ந்து மொத்த தலைமுறையின் ரணமும் புரியாது.

உணர்வு இல்லாதவர்களின் சிந்தனைகள் உண்மையை தேடிப் பார்க்கத் தோன்றாது.   புரிந்துணர்வை ஊடகக்திரையில் புதைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டுருப்பவருக்களுக்கு பங்கர் வாழ்க்கை புரியாது..
எதிர்கால கதாநாயகன் வரிசையில் இருக்கும் இன்றைய சரத் பொன்சேகா தொடக்கத்தில் கனடா ( நவம்பர் 2008) செய்தித்தாளுக்கு சொன்ன " இலங்கை என்பது சிங்களர்களுக்கு மட்டுமே சொந்தமான பூர்வகுடி நாடு.  வாழ வந்தவர்கள் உரிமை கேட்க எந்த உரிமையும் இல்லை.  உரிமைகள் கேட்பதை விட வாழ்க்கையை வாழ முடிந்தால் மகிழ்ச்சி "   என்று சொன்னவர் விரைவில் பொது வேட்பாளர் என்ற மாயையை விதி உருவாக்கினால் கூட்டணி ஓப்பந்தம் போட முண்டி அடிக்கப் போகும் கட்சிகளையையும் களையாய் நிணைவில் வைத்து இருப்போம்?

பதவியை துறக்கும் முன்னே "ஆசிர்வாதம்" வாங்கியவருக்கு என்ன "அருள்" கிடைத்து இருக்கும்.  மஞ்சள் நீராட்டு முடிந்தது.  "மங்களம்" விரைவில் கிட்டும்?

இவர் பதவிக்கு வந்தால் எதிர்காலத்தில் ஒரு சிறப்பு காத்து இருக்கிறது.  கருணாவுக்கு அப்போது புரியும்.  வாழ்க்கை என்பது வட்டமானது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இறுதியில் நடந்த பஞ்சாப் கலவரங்களின் பின்னால் எத்தனையே மனிதர்களின் செயல்பாடுகள் இருந்தாலும் விதி என்ற போர்வையில் ஆறுகளும் நதிகளும் விவசாய பூமியும் இருந்தது.

விதி சிரிப்பாய் சிரித்தது. குடித்து எக்கலித்த இரத்த ஆறு வெள்ளமாய் ஓடியது. கோடு கிழித்த ஆங்கிலேயருக்கு நாடு தெரியாது.  கிழிக்க அவசரப்படுத்திய மவுண்ட் பேட்டன் பிரபுக்கு " என்னை விட்டா போதுண்டா சாமி"

ஆனால் ஜின்னாவுக்கோ "முதல் இரவு மகிழ்ச்சி"

மொத்தத்தில் நேருவுக்கோ "சொம்பில் பால் ஊற்றி எப்போது வழி அனுப்புவோம் ? என்ற ஆற்றாமை.

மொத்தமாய் அன்று ஓடிய இரத்த வாய்க்காலும், இன்று ஓடிய முள்ளி வாய்க்காலும் இதைத்தான் உணர்த்தியது.

உள் வாங்கியவர்களுக்குத் தெரியும். உள்ளே வாழ்ந்தவர்களுக்கும் புரியும்.

ஆனால் இலங்கையிலும் இது போன்ற விதி என்ற போர்வை மறைமுகமாக தொடக்கம் முதல் தொடர்ந்து வந்து கொண்டுருப்பது அத்தனை ஆச்சரியமாய் இருக்கிறது.  காரணம் தமிழனின் மொத்த வாழ்வியலிலும், நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட இந்த விதி என்ற மாயை ஆட்சி செலுத்திக்கொண்டு தான் இருக்கிறது.

 "மெய் வருத்தக் கூலி தரும் "  என்பவர்கள் கீழே உள்ள நிகழ்வுகளுக்குள் நீந்தி வாருங்கள்.

ஆமாம் இலங்கையின் உள்ளே இருந்த வட்டார, பிரதேச, மாகாண வீழ்ச்சி, எழுச்சி, மீட்சி போன்ற பின்னால் உருவான பல காரணங்கள் இயல்பாகவே அந்தந்த சமயத்தில் உள்ளே வந்தவர்களால் அவர்கள் நிர்வாக வசதிக்காக உருவாக்கிய காரணிகள்.

குறிப்பிட்ட மக்கள் மட்டும் குதுகலமாய் வாழ்ந்த வாழ்க்கைக்கும், கும்பிடு போட்டு மட்டும் வாழ வேண்டிய மக்களுக்கும் உண்டான வாழ்க்கை போராட்டங்கள் அது.

தமிழீழ கொள்கைக்கு சற்று பின்னடவைவுகளை பின்னாளில் உருவாக்கிய காரணங்கள் அது?

பிரிவினைவாதத்தை விதைத்து முகம் சுழிக்க வைக்கவோ,....  பலவீனத்தை வெளியே காட்டி இன உணர்வை குலைக்கும் முயற்சியும் அல்ல.  இந்த விளங்க முடியாத காரணங்கள் அத்தனையும் இயல்பாகவே போர்த்துகீசியர்கள் தொடங்கி, டச்சுக்காரர்களால் வளர்க்கப்பட்டு, ஆங்கிலேயர்களால் இறுதிப்படுத்தப்பட்டு, தொடக்கத்தில் வாழ்ந்த சிங்கள தலைவர்கள் கையில் சிக்கி உறுதி வடிவம் கொடுத்த விதியின் விளையாட்டு.

விதி எங்கே இதில் வந்தது என்கிறீர்களா?

இன்று நீங்கள் பார்த்துக்கொண்டுருக்கும் முள்வேலி கொடுமைகள், காட்டிக் கொடுத்த காரணத்தால் கலங்கியிருக்கும் போராட்டத்தை, போர்த்துகீசியர்களுக்கோ, டச்சு, ஆங்கிலேயர்களுக்கே தெரிந்தா தனிப்பட்ட விசேச அதிகாரங்களை யாழ்பாணத்திற்கு உருவாக்கி வளர்த்தார்கள். இது தான் முக்கிய காரணம் என்று மொத்தமாய் தப்பித்துக்கொண்டுருப்பதும்., இன்று இவற்றைத் தானே முன்னிலை படுத்துகிறார்கள்?

தொடக்கத்தில் இரண்டாம் மூன்றாம் தலைமுறை அத்தனை யாழ்பாண மக்களும் படித்து நிறைய அறிவு பெற்ற பண்டிதர்களாக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டுருந்த அத்தனை உயர் பதவிகளையும் அலங்கரிக்க முடிந்தது.

உழைத்த உழைப்பு மட்டுமல்ல.  அவ்வப்போது காலப்போக்கில் உருவாகியிருந்த வசதிகளும் கூட ஒரு காரணமாகத்தான் தெரிகிறது.

இந்த ஒரு விதியின் விளையாட்டால் மட்டுமே வீர மரணங்கள் அதிகமாகவும்,  தொடக்கம் முதல் விலை போன தலைவர்களும், விளங்கிக்கொள்ள முடியாத வெளி மக்களின் அச்சமும் முன்னிலை வகிக்கின்றது.

இறுதியில் முள்ளிவாய்க்கால் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தி விதியின் விளையாட்டில் வீரம் பெரிதா?  விதி பெரிதா? என்று உணர்த்தி மொத்த அப்பாவி மக்களையும் முள்வேலிக்குள் கொண்டு வந்து நிற்கச் செய்தது.

தமிழர்களுக்கு மட்டும் தானா இந்த விதியின் திருவிளையாடல்?

பண்டார நாயகாவை சுட்டுக்கொன்றது "ஆசையை துற" என்ற பெளத்த பிக்கு.

புகலிடம் தேடிப் போனவர் தான் புத்தரும் கூட.

அதனால் அவரின் அத்தனை கொள்கைகளும் இன்று அகதியாய் ஆசையை துறந்து வெட்ட வெளியில் பரவி திரிகிறது. வெடிகுண்டுகளுடன் பிக்குகள் மக்குகளாய் மறைமுக ஆட்சியில் வாழ்ந்து கொண்டுருக்கின்றனர்.

தமிழர்களின் வாழ்வியலில் மரியாதையின் பொருட்டு திரு என்ற அடைமொழி இட்டு அழைப்பதுண்டு.  அவன் வாழ்வில் தடுமாறி கீழே விழும் போது "மலை போன்றவன்" என்று கலங்குவதும் உண்டு.  ஆனால் வந்து வணங்கியவர்

”அருள் கிடைத்தது.  தீர்வும் கிடைத்தது"

என்று பொன்னும் பணத்தால் அபிசேகம் செய்தவருக்கு, சக்தி பரிசளித்த "பொன்" மூலமே உன் வாழ்க்கை புண்ணாகப் போகிறது? என்பதை உணர்ந்து இருப்பாரா?

120 கோடி மக்களின் நிதி ஆதாரத்தை அக்கறையுடன் பாதுகாக்க வேண்டியவர் அவசரமாய் அக்கறையாய் அக்கரைக்குச் செல்கிறார்.  ஒரு முறை காவல் துறை பதிவேட்டில் பெயர் பதிந்து விட்டால் காலம் முழுக்க அவஸ்த்தை வாழ்க்கை தான்.  உணர்ந்தவர்கள் உள்வாங்கியவர்கள் இப்போது சொல்ல மாட்டார்கள்.

பதவி பல் இளித்து வெளியே தள்ளும் போது வரும் புத்தகமாக?
 "அச்சப்பட வைக்கும் ஆதரித்த ரகஸ்யங்கள்"

ஆனால் அந்த காவியங்களை படிக்க வாய்த்தவர்கள் இழந்த வாய்க்கால் நிலங்களை விட்டு வாழ்வாதரத்தை இறக்குமதியான சீன அரிசி உண்டு நகர் மயமாக்கலில் தொலைந்தும் போயிருப்பார்கள்.

ஆட்டத்தின் சதுரங்க காய்கள் விழும்., இனிமேலாவது " கூர்மையாக புத்தியை செலுத்து" என்பதற்காக.  இதைப்பற்றி புரியாதவர்கள் குறித்து என்ன அச்சம் ?

நம்பிக்கையின் தொடக்கம் இது. ஒவ்வொரு தடுமாற்றமும் மாற்றத்தின் திறவுகோலாகத்தான் உலகம் முழுக்க இருந்து வருகிறது.

இமைகளுக்குள் கசிந்த மௌனமும் கலங்கடித்த வாசகமும்:

" உங்களோட மகன் இறந்து விட்டான் என்று சொல்ல வந்த எங்கள் நான்கு பேர்களையும் ஆசை தீர மட்டும் அடித்துக் கொல்லுங்கோ. ஆனால் எங்கள் நான்கு பேர்களின் மரணத்தையும் சொல்ல வேறொரு நான்கு பேர்கள் இதே போல் எங்கள் தாய் தந்தையிடம் போய் நிற்பார்கள்.  நாளையா? அடுத்த வாரமா? அடுத்த மாதமா?  எங்களுக்குத் தெரியாது அம்மா.  உடலுக்கு சாவு வந்தால் இந்த உடல் மண்ணுக்குத்தான் போகும். இதே உடம்புக்கு போராட்டத்தில் சாவு வந்தால்? "

9 comments:

geethappriyan said...

//விதி சிரிப்பாய் சிரித்தது. குடித்து எக்கலித்த இரத்த ஆறு வெள்ளமாய் ஓடியது. கோடு கிழித்த ஆங்கிலேயருக்கு நாடு தெரியாது. கிழிக்க அவசரப்படுத்திய மவுண்ட் பேட்டன் பிரபுக்கு " என்னை விட்டா போதுண்டா சாமி"//
good one.

Anouther very good post from you, voted in tamilish and tamilmanam,

vasu balaji said...

விரிவான தகவலும், எதிர்பார்ப்புடனும் கூடிய இடுகை? எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. நாளை?

Thenammai Lakshmanan said...

//உணர்வு இல்லாதவர்களின் சிந்தனைகள் உண்மையை தேடிப் பார்க்கத் தோன்றாது. புரிந்துணர்வை ஊடகக்திரையில் புதைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டுருப்பவருக்களுக்கு பங்கர் வாழ்க்கை புரியாது..//

உண்மை ஜோதிஜி உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் உண்மை
நீங்கள் சரித்திரம் படித்தவரா

இவ்வளவு புள்ளி விவரங்களோடு எழுதுகிறீர்களே

தமிழ் உதயம் said...

தகவல்களை தேடி பிடித்து திரட்டி தருகிறீர்கள். நன்றி. தகவல்களாக மட்டும் இல்லாமல் ஒரு ஆய்வாகவும் உள்ளது பயனுள்ளதாக உள்ளது.

ஜோதிஜி said...

நீங்கள் சரித்திரம் படித்தவரா >

தேனம்மை சிரித்து விட்டேன்.

விஞ்ஞானம் படித்து மெய்ஞானம்(போட்ட ஆட்டமெல்லாம் போதுண்டா சாமி) உணர்ந்து மனிதர்களை படிக்கும் போது வருவது என்னவாக இருக்கும் ?

ஜோதிஜி said...

தகவல்களாக மட்டும் இல்லாமல் ஒரு ஆய்வாகவும் உள்ளது பயனுள்ளதாக உள்ளது.

ஹேமா என்ற சூறைக்காற்று வரவில்லை என்றவுடன் சப் பென்று ஆகி விட்டது நண்பா?

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி 20 தலைப்புகள் படித்து முடித்தவுடன் ஹேமாவுடன் பேச வேண்டும்.

எழுதி முடித்து தவறு பார்க்க திரும்பி படிக்கும் போதே இனம் புரியாத ஆற்றாமையாக இருக்கிறதே வலியுடன் வாழ்ந்தவர்களுக்கு எப்படி இருக்கும்?

கலைஞர் அறிக்கை படித்தீர்களா?

ஜோதிஜி said...

கார்த்திக்கேயன் என்ற சகோதரனுக்கு நன்றி

விரிவான தகவலும், எதிர்பார்ப்புடனும் கூடிய இடுகை? எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. நாளை?

ஆமாம் நாளை?

தமிழ் உதயம் said...

கலைஞர் அறிக்கை படித்தீர்களா? ஈழம் குறித்து கருணாநிதி எந்த அறிக்கை விட்டாலும் நான் படிப்பதில்லை நண்பரே... தன் தவறுகளை மறைக்க அல்லது நியாயப்படுத்த அவர் எதையாவது சொல்லி கொண்டு இருப்பார். இன்னும் போராளிகளை பற்றி தான் பேசிக்கொண்டு இருக்கிறாரே ஒழிய ஈழமக்களை பற்றி பேசவோ, சிந்திக்கவோ மறுக்கிறார். புலிகள் செய்தது சரியா, தவறா என்று பேச வேண்டிய நேரம் இதுவல்ல. இப்போது மக்களை பற்றி தான் பேச வேண்டும். மேலும் புலிகள் செய்தது சரியா, தவறா என்பதை காலம் தான் தீர்மானிக்கவேண்டும. கருணாநிதியல்ல. ஈழப்பிரச்சனையை வைத்து 80களில் அவர் ஆடாத ஆட்டம்மா... தனக்கு கைகொடுக்காத எந்த விஷயத்தையும் அவர் துச்சமாகவே பார்ப்பார். ஈழப் போராட்டத்தையும் அவர் அவ்விதமாக தான் பார்த்து இருப்பார். அப்படிப்பட்ட மனிதரின் அறிக்கையை வாசிப்பது- வெந்த எம் மனசை நாமே வேலால் கீறிக் கொள்வது போல...
கருணாநிதி சிறந்த அரசியல்வாதி என்று எல்லோருக்கும் தெரியும்... சிறந்த மனிதாபிமானியா... யாருக்கு தெரியும்.

ஜோதிஜி said...

மனிதாபிமானியா... யாருக்கு தெரியும்.