Thursday, October 17, 2013

கூடையே கடையாகி


"சாமி பழம் வாங்றீங்களா........."

வீட்டுக்கு வெளியே குரல் கேட்க ஆர்வமாய் எட்டிப்பார்த்தேன். 

"அந்த கிழவிக்கிட்ட ஏதுவும் வாங்காதீங்க. வரவர விலையை அதிகமாக்கிக்கிட்டே போகுது" என்ற மனைவியின் குரலையும் மீறி வேகமாக வாசலை நோக்கிச் சென்றேன்.

பாட்டி வாசலுக்கு வெளியே தலையில் கூடையோடு நின்று கொண்டிருந்தார். காலை வெயில் மெதுவாக ஏறிக்கொண்டிருந்தது.

உள்ளே வாங்க பாட்டி என்றாலும் வரமாட்டார்.  நாம் வாங்குவோம் என்று தெரிந்தால் மட்டுமே கூடையை வாசல்படியில் இறக்கி வைப்பார்.  வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அடுத்த வீட்டை நோக்கி நகர்ந்து விடுவார்.  ஒரு பதில் வார்த்தை இருக்காது.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை வேளையில் தவறாமல் வந்து விடுவார்.  மெலிந்த  ஒல்லியான உடம்பு. பொக்கை வாய் நிறைய வெற்றிலைச் சாறு உதட்டு ஓரம் வழிந்து கொண்டிருக்கும். சுருங்கிய புடவையும் கசங்கிய ஜாக்கெட்டுமாய் கருப்பு நிறத்தில் அவரின் களையான முகம் தனித்து தெரியும்.  காந்தி நகர் முழுக்க சுற்றி வருவதை பார்த்துள்ளேன். தொடக்கத்தில் இவர் மேல் எந்த ஈர்ப்பும் உருவாகவில்லை. 

ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரைக்கும் எத்தனையோ பேர்கள் எங்கள் சந்தில் ஏராளமான பொருட்களை வந்து விற்றுக் கொண்டே தான் இருக்கின்றார்கள். தொடக்கத்தில் காய்கறிகள் மூன்று சக்கர வண்டியில் வந்து தள்ளிக் கொண்டு வந்து விற்றுக் கொண்டிருந்தார்கள். தற்போது டிவிஎஸ் 50 ல் மேலே ஒரு கூடை, பக்கவாட்டில் இரண்டு புறமும் தொங்கிக் கொண்டிருக்கும் சாக்குப் பைகள் மூலம் கொண்டு வந்து ஒரு இடத்தில் நிறுத்தி கத்தி ஒவ்வொருவரையும் வரவழைத்து விடுகின்றனர். 

மீன்களை கொண்டு வருபவர்கள் அங்கேயே அறுத்து  தண்ணீர் வாங்கி சுத்தம் செய்தும் கொடுத்து விடுகின்றனர். சிலர் கீரைகளை மட்டும்.  

மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என்பதையெல்லாம் தாண்டி இது தனிமனித வியாபாரம். இன்று பெரிய நிறுவனங்கள் கடைபிடிக்கும் 'டோர் டெலிவரி'என்பதை நம்மவர்கள் பல நூற்றாண்டுகளாகவே செய்து கொண்டிருக்கின்றார்கள். 

எளிய மனிதர்கள் வாழ இங்கே ஏராளமான தொழில்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. ஏராளமான உழைப்பும் அளவான நம்பிக்கையும் இவர்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது. 

ஒவ்வொருவிதமான சந்தைக்குப் பின்னாலும்   ஓராயிரம் நம்பிக்கைகள். 

கொட்டும் மழை கொளுத்தும் வெயில் எதுவும் இவர்களுக்கு பொருட்டல்ல. அதிகாலையில் குளிருக்கு பயந்து போர்த்திக் கொண்டு படுக்கும் மனிதர்களுக்கு இவர்களின் உழைப்பு தெரியாது. ஆனால் இவர்களிடம் பேரம் பேசி வாங்கும் போது தான் பலரின் சிக்கனம் என்ற பெயரில் ஒளிந்துள்ள சின்னப்புத்தி வெளியே தெரிய வரும்.

ஆனால் பாட்டி கொஞ்சம் கெட்டி.  அதற்கு மேல் உசாரான பார்ட்டியும் கூட. வாய் வார்த்தைகள் பட்டாசாக வெடிக்கும்.  தயவு தாட்சணயம் இருக்காது. பலருக்கும் உடனே கோபத்தை வரவழைத்து விடும்.  

"நீங்கெல்லாம் கடையிலே போய் தூசியையும் தராசுல எடை போட்டு வாங்குறவுங்க. நல்லது சொன்னா உங்களுக்கு புரியாது" என்பார்.

ஆனால் எனக்கு அவரின்  வியாபார அணுகுமுறைகளை விட அவரின் அளவு கடந்த நம்பிக்கைகள் தான் அதிக ஆச்சரியத்தை தந்தது. அதுவே தான் அவர் மேல் ஈர்ப்பை உருவாக்கியது. இந்த வார்த்தைகள் என் மனைவிக்கு எப்போதும் எரிச்சலை உருவாக்கும்.

"இப்படி வாய் பேசுனா யார் வாங்குவா?" என்றால் அதற்கும் பதில் உடனே வந்து விழும்.

"மனசுல சுத்தமா இருக்குறவுங்க வார்த்தைகள் எப்போதுமே அப்படித்தான் வரும் சாமி" என்பார். 

 "இல்லை பாட்டி காலம் மாறிக்கிட்டே இருக்கு.  நீங்களும் மாற வேண்டாமா" என்றால் "காலம் மாறினாலும் இன்னமும் வாயில தானே சாப்புடுறோம்" என்று பட்டென்று தெறித்து வரும் வார்த்தைகளைக் கண்டு நான் சிரித்து விடுவேன். 

வாசலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த அவர் தலையில் சுமந்திருக்கும் அந்த கூடை தான் எனக்கு அதிக ஆச்சரியத்தை தரும். 

பெரிய அகன்ற கூடை. அந்த கூடையின் பலத்திற்காக சாணியால் மெழுகப்பட்டு கெட்டியாக மாற்றப்பட்டு இருந்தது. சாணி நன்றாக உலர்ந்திருந்த காரணத்தால் எந்த வாடையும் இருக்கும்.  கூடையின் எந்த பின்னலும் வெளியே தெரியாது.  

மொத்தத்தில் மேலேயிருந்து கீழே போட்டாலும் உள்ளேயிருக்கும் பொருட்கள் சிதறி விழுமே தவிர கூடைக்கு எந்த சேதாரமும் உருவாகாத அளவுக்கு பலமாக இருந்தது.  அதுவே தான் அந்த கூடைக்கு அதிக கனத்தை உருவாக்கியும் இருந்தது.

"கொஞ்சம் இறக்கி வை சாமி" என்றார்.

எனக்கு மூச்சு வாங்கியது. ஏறக்குறைய 25 கிலோ அளவுக்கு உள்ளே பழங்கள் இருந்து.  ஆப்பிள், சப்போட்டா, சோளக்கதிர் என்று ஒவ்வொன்றும் தனித்தனி பைகளில் கட்டப்பட்டு இருந்தது.

கூடையை இறக்கிய எனக்கு மூச்சு பிடிப்பு வந்து விடுமோ? என்று பயமாய் இருக்க, பாட்டி வியர்வையை துடைத்துக் கொண்டு "எதை சாமி எடுத்துக்குறீங்க" என்றார்?

அவர் முகத்தில் எந்த களைப்பும் தெரியவில்லை. கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூட தோன்றாமல் கொண்டு வந்த பழங்களை நம்மை வாங்க வைக்க வேண்டும் என்பதிலேயே அவரின் தொடர்ச்சியான வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டிருந்தன.  

பழங்களை விட அவர் பேச்சைத் தான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

பெரிய கடைகளில் உள்ள பழ விலைகளை விட ஒவ்வொன்றுக்கும் ஐந்து முதல் பத்து ரூபாய் வரைக்கும் அதிகம் வைத்திருந்தார். எனக்கு அவர் விலைகள் பெரிதாக தெரியவில்லை. அவரின் இந்த வயதின் உழைப்பும், அந்த உழைப்பு குறித்த எந்த பெருமிதமும் இல்லாத தன்மையும் தான் அதிக யோசனைகளை உருவாக்கியது.

மெதுவாக பேச்சைச் தொடங்கினேன்.  ஆனால் வெட்டி வார்த்தைகளை அவர் விரும்பவில்லை என்பதை நறுக்குத் தெறித்தார் போல் வந்து விழும் வார்த்தைகளில் இருந்து உணர முடிந்தது.

நம்பியூரில் இருந்து அதிகாலையில் பேரூந்து வழியே திருப்பூரில் பெரியார் காலணி நிறுத்தத்தில் வந்திறங்கி அவரின் வியாபாரம் தொடங்குகின்றது. சிறிய வீடுகள், பெரிய குடியிருப்புகள் தொடங்கி ஒவ்வொரு சந்து என இந்த பெருஞ்சுமையை சுமந்து கொண்டு வந்தவரின் உழைப்பு எனக்கு ஆச்சரியமல்ல.  

ஆனால் ஓய்வெடுக்கவேண்டிய வயதில் உழைத்து வாழ வேண்டியிருக்கிறதே என்ற அங்கலாய்ப்பு அவரிடம் கொஞ்சம் கூட இல்லை என்பது தான் எனக்கு வியப்பைத் தந்தது.

கூடை நிறைய பழங்கள் இருந்தாலும் எப்போதும் போல இப்படித்தான் தொடங்குவார்.

"கொண்டு வந்த ஆப்பிள் முடிந்து விட்டது.  சப்போட்டா கொஞ்சம் தான் இருக்கு. அடுத்த சந்துக்கு போனா இதுவும் முடிந்து விடும்" என்று சொல்லிக் கொண்டே நாம் வாங்க விரும்புகின்றோமா இல்லையா என்று ஆழம் பார்ப்பதிலே அவரின் குறி இருக்கும்.

நிச்சயம் ஒரு நாளைக்கு அவருக்கு எல்லாச் செலவும் போக இருநூறு ரூபாய் அளவுக்கு கிடைக்கும்.  பாட்டியிடம் எதையும் வாங்காமல் பேசினால் வார்த்தைகளை பிடுங்க முடியாது என்பதற்காக சப்போட்டா பழத்தை எடுத்துக் கொண்டு "உங்க பசங்க என்ன செய்றாங்க?" என்றேன்.

"நம்பியூர்ல மில்லில் வேலைக்கு போறாங்க சாமி" என்றார்.

"அப்புறம் எதுக்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை. வயசான காலத்திலே வீட்லே இருக்க வேண்டியது தானே?" என்றேன்.

"மகன் சாம்பாத்தியம் சாப்பாட்டுக்கு சரியாப் போகுது. பேரனுங்க படிப்புச் செலவை நான்தான் பாத்துக்குறேன்"  என்றார்.

***************

(இந்த பதிவுக்கு இணையத்தில் படம் தேடிக் கொண்டிருந்த போது தலையில் சுமந்து விற்கும் மனிதர்களைப் பற்றி ரெங்கசாமி எழுதிய மின்நூல் கண்ணில் தென்பட்டது.  அவர் எழுதிய தலைப்பையே இதற்கும் வைத்துள்ளேன்.  இந்த புனைவு அல்லது சிறுகதை திருப்பூரில் பத்திரிக்கை துறையில் இருக்கும் நண்பர் திரு மணி அவர்கள் சமீபத்தில் தொடங்கியுள்ள வணக்கம் திருப்பூர் என்ற உள்ளூர் பத்திரிக்கைக்காக எழுதப்பட்டு பிரசுரமானது)


Tuesday, October 15, 2013

வாசித்ததும் (ரொம்பவே) யோசித்ததும்

ஆன்மீகம், கடவுள், பக்தி,நம்பிக்கை,மதம் போன்ற வார்த்தைகள் உயர் அழுத்த மின்சார வகையைச் சார்ந்தது.  தொட்டால் தொடரும், தொடாமல் இருந்தாலும் அலற வைக்கும்.  

நமக்கு விருப்பம் இருக்கின்றதோ இல்லையோ சுற்றியுள்ள சூழ்நிலைகள் நம்மை மாற்றும். உங்கள் கொள்கைகளை உரசும்.  நான் எந்த நம்பிக்கைக்கும் அப்பாற்பட்டவன்.  என்னளவில் உணர்ந்த பாடத்தை, பெற்ற அனுபவங்களே என்னை வழிநடத்துகின்றது என்று உங்களுக்குள் யோசிக்க முடியும்.  ஆனால் வெளியே காட்டிக் கொள்ள முடியாது.  

நம்முடைய தனிப்பட்ட கொள்கைகள் அனைத்தும் இங்கே சுற்றியுள்ள சமூகத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றது. 

மீறினால் மிதிபடுவீர்கள். கடைசியாக ஒதுக்கப்படுவீர்கள்.  

அதிகமாய் ஆச்சரியப்படுத்திய ஆத்திகம் நாத்திகம் என்பதைப் பற்றி நான் வாசித்த தீக்கதிர் ஆசிரியர் திரு.குமரேசன் எழுதிய கட்டுரை.

••••••••••••••••••
நாம் ஆக்கர் போட்ட காலம் போய் பிள்ளைங்க ஆப்படிக்கின்ற காலமிது

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு திமுக ஆட்சி காட்டிய பாதையை, உருவான மாற்றத்தை, உருவாக்கிய தாக்கத்தை, விளைவுகளை இன்று வரையிலும் விமர்சனப் பார்வையில் பார்க்கும் நாம் ஒரு விசயத்தை மறந்து விடுகின்றோம்.  

கடந்த 50 ஆண்டுகளில் தமிழர்களின் மனோபாவத்தைப் பற்றி எவரும் அதிக அளவில் கவலைப்படுவதில்லை.  மூத்த குடி, முது பெரும் மொழி என்று பெருமை கொண்டாடும் நம் தமிழர்களின் அடிப்படை குணாதிசியத்தை பல முறை யோசித்துப் பார்த்தாலும் எனக்குப் பிடிபடாத விசயத்தை திரு. சமஸ் அவர்கள் மிக எளிதாக பட்டவர்த்தனமாக எழுதிய கட்டுரை.

•••••••••••••••••••
மாநில கட்சியுடன் கூடிய கூட்டணி ஒப்பந்தம்

தற்போது இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் காங்கிரஸ் கூண்டோடு எழ முடியாத அளவுக்கு ஒரு மிகப் பெரிய சரிவை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படும் கோடிக்கணக்கான வாக்காளர்களில் நானும் ஒருவன். 

தற்போது காங்கிரஸ்க்கு மாற்றாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து கடந்த இரண்டு மாத காலமாக இணையம் முழுக்க ஆதரவு எதிர்ப்பு என்கிற ரீதியில் ஏராளமான பரப்புரைகள் கட்டுரைகளாக வந்து கொண்டே இருந்தாலும் எழுதியவரும், வாசித்தவர்களும் ஓட்டு போடும் சமயத்தில் வாக்கு செலுத்துவார்களா? என்றால் உறுதியாகச் சொல்ல முடியும்.  நிச்சயம் வர மாட்டார்கள்.  

விசைப்பலகை வீரர்களாகவே இருப்பார்கள்.  

நரபலி மோடி என்று கூக்குரலிட்டாலும் உருவாகப்போகும் மாற்றத்தை சராசரி குடிமகனாய் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு தான் இருக்கின்றேன். நம் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் உள்ளவர்கள், அவர்களின் கொள்கை ரீதியான, சித்தாந்த ரீதியான வகையில் எழுதிய அத்தனை கட்டுரைகளையும் வாசித்து விடுவதுண்டு.  கொள்கைகள் வெவ்வேறு பாதையாக இருந்தாலும் இன்றுவரையிலும் நட்பில் முரண்பட்டு நின்றதில்லை.

எனக்கு ஒருவரை பிடிக்கின்றது என்பதற்காக  அவரின் துதியை மட்டும் கேட்பதில்லை.

அவர் மேல் வைக்கப்படும் குற்றாச்சாட்டு? அவர் கடந்து வந்த பாதை போன்றவற்றை, ஆட்சிக்கு வந்தால் உருவாகப் போகும் சாதக பாதக அம்சங்கள் போன்ற அனைத்தையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதுண்டு. தோழர் மருதையன் உரையாற்றிய பேச்சின் மூலம் பல வெளிச்சங்கள் கிடைத்தது.

வலை பதிவில் எல்லோரும் தனக்குத் தெரிந்த வகையில், ஏதோவொரு நடையில் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். டைரிக்குறிப்புகள், அனுபவங்களை, சினிமா விமர்சனங்களை எழுதி வைத்தாலும் சிலரின் எழுத்துக்களை படித்து முடிந்ததும் ஒரு தாக்கத்தை உள்ளுற ஏற்படுத்தும். 

அது போன்ற திறமையுள்ள என் நண்பர் வில்லவன் தமிழருவி மணியன் குறித்து எழுதிய நக்கல் நையாண்டியை படித்த போது இது தான்டா உண்மையான எழுத்தாளனுக்குரிய திறமை என்று எண்ணத் தோன்றிய கட்டுரை..
•••••••••••••••••••••
வரலாறு முக்கியம் அமைச்சரே


தமிழ்நாடு வளர்ந்த மாநிலம் என்பதை தற்போதைய ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் இந்த ஆதாரத்தை வைத்து தான் கணக்கீடு செய்து இருப்பாரோ?

இன்று மதுவகையின் விலைப்பட்டியல் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் மட்டும் செல்ல வேண்டிய இடம்.



தொடர்புடைய பதிவுகள்




Sunday, October 13, 2013

முகநூல் - மலமும் மனமும்

முகநூல் என்பது குப்பைகள் மட்டுமே சேருமிடமாக இருந்தாலும் அபூர்வமாக பலருக்கும் பயன்படக்கூடிய உருப்படியான விசயங்களை எவரோ சிலர் இடைவிடாது எழுதி வைத்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள். ஒவ்வொருமுறையும் கழுவி சுத்தம் செய்து வைத்தாலும் இன்று வரையிலும் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. 

மூகமூடி மனிதர்களும், கொடூரமான எண்ணம் கொண்டவர்களின் பொழுது போக்காக இன்றைய தமிழ் சமூக வலைதளங்கள் மாறிவிட்டது. ஆனாலும் பல நல்ல விசயங்களும் நமக்கு கற்றுத் தரக்கூடியதாக உள்ளது என்பதும் உண்மை.

ஒழுங்கான வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் இது போன்ற தளங்களில் பயணிப்பதில்லை என்றாலும் அவர்களுக்காக என் பார்வையில் பட்ட சில நிலைத் தகவல்களை இங்கே பதிவாக்கி வைக்க நினைக்கின்றேன்.

•••••••

எனது நண்பர் ஒருவர், முகநூலிலும் இருக்கிறார். ஆனால் கருத்துக்களை பதிவிடுவதோ, பின்னூட்டம், விருப்பம் இடுவதோ கிடையாது. மற்றவர் பதிவுகள் அனைத்தையும் படிப்பதோடு சரி. 

அதற்கு அவர் சொன்ன விளக்கம், யோசிக்க வைத்தது:

"உலகில் இரண்டாவது மனிதன் தோன்றிய பிறகு உருவான முதல் விசயம் - விவாதம்! அரசமரம், திண்ணை, டீ கடை... இப்போது சமூக இணைய தளங்கள்.

இதுபோன்ற விவாதங்களால் ஏதேனும் தீர்வு கிடைத்ததும் இல்லை, ஒருவரேனும் "எனது கருத்து தவறு. இப்போது திருத்திக்கொண்டேன்" என்று சொன்னதும் இல்லை. 

காரணம், கிட்டதட்ட எல்லோருமே, தான் மட்டுமே அறிவாளி, மற்ற அனைவரும் முட்டாள்கள் எனவும் நினைத்தே வாதத்தில் ஈடுபடுகிறார்கள். 

தவிர, விவாதத்தில் தனது கருத்து தோற்றால், தானே தோற்றது போல நினைக்கிறார்கள். ஆகவே தோற்கும் நிலையில் இருப்பவர்கள் விதண்டா வாதம் செய்யத் துவங்குகிறார்கள் அல்லது தனிப்பட்ட தாக்குதலை ஆரம்பிக்கிறார்கள்.

இது போன்ற விவாதங்களால் யாருக்கும் பயனில்லை.

அதற்கு பதிலாக விவாதத்தை அவரவருக்குள் நடத்தலாம். நீங்கள் எந்த கருத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களோ.. அதற்கு மாற்றுக் கருத்துக் கொண்ட புத்தகங்களைப் படியுங்கள், இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள், காணொளிகளைப் பாருங்கள்.. அவை குறித்த கேள்விகளை உங்களுக்குள் கேளுங்கள்.

இப்படி தனக்குத்தானே நடத்திக்கொள்ளும் விவாதம், நிச்சயம் தெளிவைத் தரும். தவிர, பல புதிய விசயங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.

ஆனால் நம்மில் பலர்... மாற்றுக் கருத்துக்களைச் சொல்லும் புத்தகங்களை மட்டுமல்ல... தங்களுக்கு உடன்பாடான கருத்துகொண்ட புத்தகங்களைக் கூட படிப்பதில்லை. இதை அவர்கள் முன்வைக்கும் வாதங்களே சொல்லிவிடுகிறது.

ஆகவே, உங்களுக்குள்ளேயே விவாதிக்கத்தொடங்குங்கள்!"

சோமு

•••••••••••••••••

இப்போது அதிகமாக விமர்சிக்கப்படுபவர் தமிழருவி மணியன். காரணம் பாஜகவுக்கு ஆதரவான அவரது நிலைப்பாடு. காந்தியவாதியான தமிழருவி மணியனா இப்படி பேசுவது என்று பலர் விமர்சிக்கிறார்கள். அவர் அப்படி பேசுவதில் பெரிய வியப்பில்லை. எந்த காந்தியவாதி இந்துத்வாவின் கொள்கைக்கு எதிராக மதசார்பற்ற ஜனநாயக கொள்கையை கொண்டிருக்க முடியும்? காந்தியே இந்துத்வாவிற்கு ஆதரவான கொள்கையை கொண்டிருந்த போது காந்தியம் மட்டும் எப்படி மதங்களுக்கெதிரான கூறுகளை கொண்டிருக்க முடியும்? 

“நான் வருணாஸ்வருண தர்மத்தை ஆதரிக்கிறேன்; ஆனால் நான் சொல்லும் வருணாஸ்ரம தர்மம் வேறு! நான் இராமனை ஆதரிக்கிறேன்; ஆனால் நான் சொல்லும் இராமன் வேறு!” 

என்று காந்தி புதுப்புது விளக்கங்கள் கொடுத்தாலும் சுற்றி சுற்றி அவரின் கருத்து இந்துத்வாவிற்கு எதிராக இல்லாமல் அதற்குள்ளேயே உழன்றுகொண்டிருந்தது. அதனால் தான் இந்துத்வாவிற்கு எதிராக போராடிய டாக்டர் அம்பேத்கர், காந்திக்கு மிகப்பெரிய எதிரியாக தெரிந்தார்.

தீண்டாமைக்கெதிராக சமபந்தி விருந்தை பற்றி அம்பேத்கர் பேசிய போது அதற்கு காந்தி கொடுத்த பதில், ”உண்ணுவதில் சமமாக உட்கார்ந்து உண்ணவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் மலம் கழிக்கும் போது சமமாக உட்கார ஆசைப்படுகிறார்களா?” என்று எகத்தாளமாக கேட்டவர் தான் மகாத்மா(?)

அப்படிப்பட்ட மகாத்மா (?) காந்தியிலிருந்து வந்தது தான் காந்தியம்; காந்தியம் விண்ணில் இருந்த குதித்த தத்துவம் அல்ல! 

தமிழருவி மணியன் உண்மையான காந்தியவாதி! அதனால் அப்படி பேசுகிறார். மற்ற காந்தியவாதிகளை போல கள்ள மௌனம் காக்காமல் வெளிப்படையாக பேசுகிறார். (But அவருடைய Approch எனக்கு பிடிச்சிருக்கு)

காங்கிரஸ் / காந்தியமும் பாஜகவும் அடிப்படை கொள்கைகளில் ஒன்று என்றால் பிறகு ஏன் இருகட்சிகளுக்கும் போட்டி? 

அது அவர்களின் அரசியல் அதிகாரத்திற்கான போட்டி!

வேந்தன் இல.

தமிழருவி மணியன் பேச்சு   ஒன்று     இரண்டு

***************

“ஒரு நாட்டின் நூல்களை இயக்கும் அதிகாரத்தை மட்டும் எனக்குத் தாருங்கள்.. அந்த நாட்டின் சட்டங்களை யார் இயற்றினாலும் எனக்குக் கவலை இல்லை” என்று நம்பிக்கையோடு சொன்னார் பெர்னாட்ஷா.

நம் தமிழகத்தின் நூலகங்கள் இன்று இருக்கும் நிலையைப் பற்றி யார் அறிந்தாலும் வேதனைப்படுவார்கள். ஒரு சமுதாயத்தின் வரலாற்றுக் கடமை தனது வழிவழி வந்த பாரம்பரிய மகா அடையாளங்களைக் காப்பாற்றி அடுத்த சந்ததிக்கு ஒப்படைத்தல். தமிழ் தாத்தா உ.வே.சா._விலிருந்து எத்தனையோ அறிஞர்கள் தமிழ்_பாதுகாவலர்கள் தன் உயிரைக்கூட துச்சமென மதித்து சேர்த்த சங்க இலக்கியப் புதையல்கள் கொண்ட சரஸ்வதி_மஹால் நூலகம் ‘மெல்ல சாகிறது’ - 

இது நமது பாரம்பரியத்தின் மைல் கற்களை பாதுகாக்கும் உலகில் எங்குமே காண இயலாத உண்மையான உலக அதிசயங்களில் ஒன்று. இந்தமாதிரி ஒரு அம்சம் இந்நேரம் ஐரோப்பாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ.. ஏன் ஆப்பிரிக்காவிலோ இருந்திருந்தால் உலக அளவிலான சமூக பண்பாட்டு சுற்றுலா மையமாக உலக வரைபடத்தின் புகழேனியின் உச்சத்தில் வைத்துக் கொண்டாடப்பட்டிருக்கும். 

இங்கோ அதன் அன்றாட அலுவல்களுக்கு நிதி இல்லை; புழுதியேறும் மாடங்களையும் அழுக்கேறும் நம் முன்னோர் எழுத்துத் தவங்களையும் பாதுகாத்துப் பராமரிக்க அரசுக்கு அக்கரையும் இல்லை. அங்கே முதுகொடிய உழைக்கும் ஊழியர்களுக்கு அவர்களின் நலனிற்கு எந்த பாதுகாப்பு சட்டமும் இல்லாதது ஒருபுறம் இருக்கட்டும்.. 

அடுத்த மாதம் சம்பளம் வருமா என்பதே கேள்விக்குறியாகி விட்ட அவலத்தை என்ன சொல்ல?

சரஸ்வதி மஹால் அழிந்தால்... நம் வருங்கால சந்ததிக்கு ‘மூத்த குடி....தமிழ்க்குடி’ என சொல்லிக்கொடுக்கும் அதிகாரம் நமக்கு எப்படி இருக்கும்? 

ஏற்கெனவே தமிழைக் கைவிட்டுப் பொருள் சேர்க்கும் வெறியோடு ஒரு சந்ததியை நாம் அயல்மொழி ஆங்கிலத்திடம் முழுமையாய்ப் பறி கொடுத்தது போதாதா. தொலைக்காட்சியில் கோடீஸ்வர நிகழ்ச்சியை எல்லாம் விழுந்து விழுந்து ‘இணைந்து வழங்கும்’ வர்த்தக ஜாம்பவான்களுக்கு சரஸ்வதி மஹால் பற்றி எல்லாம் என்ன அக்கறை இருக்கப்போகிறது. 

பல வருடங்களாக லஞ்சத்தில் திளைத்து நல்ல புத்தகம் எதுவுமே வாங்காமல் புழுதியேறிய பழைய புத்தகக் கடையாக மாறிக் கொண்டிருக்கும் இதர நூலகங்கள்.. அங்கே இருக்கும் புத்தகங்களைக் காப்பாற்ற கடும் தவமாய்க் கடமையாற்றும் நூலகத்துறை அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட பரிசீலிக்க தயாராக இல்லாத வரட்டுத் தலைமை... 

சரி மெல்ல தமிழக ‘நூலகங்கள்’ இனி சாகும் என வேதனையோடு நினைக்கத் தோன்றுகிறது.

புத்தகம் பேசுது

தொடர்புடைய பதிவுகள்