Saturday, September 01, 2012

திருட அனுமதிக்கும் விளம்பரங்கள்


"உன் தலையில மூளை இருக்கா இல்லை களிமண் தான் இருக்கா?"

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் நம்மைப் பார்த்து ஏதோவொரு சமயத்தில் கேட்டுருக்ககூடும். 

உண்மையிலேயே களிமண் மண்டைக்குள் இருந்தால் எப்படியிருக்கும்? 

யோசித்துப் பார்த்தால் தற்போது நிஜமாகவே சாத்தியமாகிக் கொண்டுருக்கிறது. யோசிக்க வேண்டிய மூளை வேடிக்கை பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறது. களிமண் தான் உள்ளே இருக்குமோ? என்று நினைக்கும் அளவிற்கு மக்கள் தினந்தோறும் புதுப்புது ஆச்சரியத்தை தந்து கொண்டேயிருக்கிறார்கள். வாழ்க்கைக்கு எது அவசியமானது என்பதைத் தாண்டி எது நமக்கு அந்தஸ்த்தை தரும் என்பதாக தேடித் தேடி பொருட்களை வாங்கி குவித்துக் கொண்டுருக்கின்றார்கள். விருப்பம் என்பது வெறியாக மாறியுள்ளது.  
 வாங்கி குவிக்கும் பொருட்கள் குப்பையாக இருந்தாலும் சரி வாங்கியே ஆக வேண்டும் என்று அடுத்த முறையும் கடைகளுக்கு படையெடுக்கின்றார்கள்.  படையெடுத்து நாடுகளை பிடித்த காலம் மலையேறிவிட்டது. கடைகளை நோக்கி படையெடுப்பது தான் தற்போது நடந்து கொண்டுருக்கிறது. நுகர்வு கலாச்சாரத்தை புரிந்து கொண்டவர்களும் விதவிதமான விளம்பரங்கள் மூலம் நம்மை வரவழைக்க யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள். தரமான பொருட்கள் என்பது மாறி விளம்பரத்தால் வெற்றி என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளோம். .

ஒரு விளம்பரத்தை பார்த்தவுடனே நமக்கு தேவையில்லாத பொருட்கள் கூட தேவையாகி விடுகின்றது. "எதையும் சொல்ற விதமாகச் சொன்னால் வாங்க வந்துவிடுவார்கள்" என்பது மந்திரமாக மாறியுள்ளது. "சொர்க்கத்தில் ப்ளாட் விற்பனை" என்று விளம்பரம் வந்தாலும் முன்பதிவு செய்ய தயாராகவே இருக்கின்றார்கள்..

நம் அடிப்படைத் தேவை தீர்ந்ததும் மாடல் பைத்தியம் பிடிக்கத் துவங்கி விடுகின்றது. மாடல் பைத்தியம் முடிந்ததும் அதிக வசதிகளுக்கு தாவி விடுகின்றோம். ஒவ்வொன்றாக மாற்றும் குணம் இயல்பாக வந்து விடுகின்றது. இந்த குணமே பலரும் கடன் வாங்கி செலவழிப்பது தவறில்லை என்பதில் வந்து முடிகின்றது. கடன் தொல்லையால் குடும்பமே கடைசியில் மண்டையை போட காரணமாகவும் அமைந்து விடுகின்றது. 

பிடித்த நடிகர் சொன்னார்.  விரும்பும் நடிகை போட்டுருப்பது என்று தொடங்கிய இன்று சந்தையில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்குப் பின்னாலும் ஏராளமான நட்சத்திரங்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். வண்ண வண்ண நட்சத்திரங்கள் போல் ஜொலிப்பாய் பேசி, ஆடி, நம்பவைத்து நம்மை வாங்க அழைக்கிறார்கள். அவர்கள் நடிக்க வாங்கிக் கொண்ட காசுக்கு கொஞ்சம் அதிகமாகவே கூவ கூவ கடைகளில் சேரும் கூட்டமும் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது.

இன்று தொலைகாட்சிகள் தொடங்கி வானொலி வரைக்கும் சந்தைக்கடை இரைச்சலாகவே மாறியுள்ளது. விளம்பரம் இல்லையேல் வியாபாரம் இல்லை என்பதால் புதுப்புது விளம்பரங்கள் தினந்தோறும் வந்து குடும்பத்தை நோகடித்துக் கொண்டுருக்கின்றது. ஆசைகளுக்கு எல்லையில்லை. எல்லையில்லா வானத்தைப் போல இங்கு எப்போதும் ஏக்கத்ததுடனே வாழ்ந்து கொண்டுருப்பதாலே எல்லாமே தேவையாய் தெரிகின்றது. குறிப்பிட்ட பொருட்களை வாங்கி வந்த பின்பு தான் "ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை" கணக்காய் ஏமாளியாகின்றோம்.

முக்கால்வாசி விளம்பரங்களை அது வாங்கச் சொல்லும் பொருட்களை தனியாக இருக்கும் போது யோசித்துப் பாருங்கள்.  உங்களின் அவசிய தேவைகளை விட ஆடம்பர தேவைகளை அதிகப்படுத்துவதாக இருக்கும்.  

அரிசிக்கு விளம்பரம் தொடங்கி அலங்கரிக்கப்பட்ட கக்கூஸ் ல் போய் உட்காருங்க வரைக்குமான அத்தனை விளம்பரங்களையும் நாம் பார்த்தே ஆக வேண்டும். எல்லா விதமான விளம்பரங்களும் நம்மை நோக்கி வந்து கொண்டேயிருக்கிறது. புத்தியை அடகு வைத்து விட்டு புதிதாய் வாங்க கற்றுக் கொண்டுருக்கின்றோம். இன்று தடுக்கி விழுந்தால் ஏதோவொரு நெடுந் தொடரில் தான் விழ வேண்டும். எவரும் விதிவிலக்கல்ல. கடந்த பத்தாண்டுகளில் விளம்பரத்தின் வருவாயை பெருக்க உதவிய அத்தனை பெண்களும் இன்னமும் ஆ.......வென்று பார்த்துக் கொண்டே கண்ணீர் சிந்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

ஆனால் நெஞ்சை நக்கி அழவைத்த அத்தனை நடிகர் நடிகைகளும் நகரின் முக்கிய பகுதியில் ஆடம்பர வீடு கட்டி அடுத்தடுத்த மாநிலங்களில் வாங்கிப் போட்டுள்ள சொத்தை பாதுகாக்க பறந்து கொண்டுருக்கிறார்கள். விளம்பர உலகத்திற்கு பெணகளே வரப்பிரசாதம்.  அழகுபடுத்த, மேலும் அழகுபடுத்த, சிவப்பு நிறமாக மாற்ற என்று பெண்களின் சிந்தனைகளை சிறகடிக்க வைப்பதால் கண்டதையும் தடவி தடவி தாவாக்கட்டையில் புண் வந்தது தான் மிச்சமாக இருக்கிறது. இந்த பொருளை தந்தார்கள்? என்று நாம் எந்த நீதிமன்றத்திலும் ஏற முடியாது.  நீதிமான்களும் ஏதோவொன்றை தடவிக் கொண்டுருக்கக்கூடும். 

அடுத்து என்ன வாங்கலாம்?  என்று நீங்கள் யோசிகக வேண்டாம்.  இன்றைய விளம்பரங்களே கற்று தந்து கொண்டுருக்கின்றது.  இப்படித்தான் இன்றைய பெரும்பாலான விளம்பரங்கள் வீட்டின் படுக்கையறை வரைக்கும் வந்து பல்லைக் காட்டி வரவேற்கின்றது.

பணக்காரனுக்கு எப்போதும் கவலையில்லை.  பணத்தை செலவு செய்ய ஏதோவொரு காரணம் வேண்டும். ஏழைகளுக்கு அடுத்த வேளை சோற்றுக்கு ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்.  இடையில் மாட்டிக் கொண்ட திருவாளர் நடுத்தரவர்க்கம் தான் இந்த விளம்பரங்களினால் இருப்பதையும் இழந்து விட்டு கதறுகிறார்கள்.  கறை நல்லது என்பது விளம்பர வாசக்ம். கடன் கெட்டது என்பது எதார்த்தம். . 

தற்போது நாம் பார்த்துக் கொண்டுருக்கும் ஒவ்வொரு விளம்பரங்களும் ஏதோவொரு விதத்தில் நம்மை கவர்வதாக இருக்கிறது. தொலைக்காட்சியில் படங்களைப் பார்ப்பதை விட இடையில் வரும் விளம்பரங்களை பார்க்கவே விரும்புகின்றேன். ஆமாம் ரசிக்க மட்டுமே விரும்புகின்றேன். மிக குறுகிய நேரத்தில் சொல்லப்படும் அந்த விசயத்தை யோசித்தவர்களை பாராட்டத் தோன்றும்.  இன்று விளம்பர உலகம் சக்கைப் போடு போட்டுக் கொண்டுருக்கின்றது. சவாலான வேலை.  ஆனால் சரியான வருமானம். 

ஒரு விளம்பர நிறுவனம் சந்தையில் நிலையான இடத்தைப் பெற்று விட்டால் திரைப்பட பிரபல்யங்கள் கூட இவர்களின் வாசலில் நிற்பர்.  குறுகிய கால அறுவடை என்பதை விட அன்றைய உழைப்புக்கு அப்போதே பலன் என்பதால் பலருக்கும் ஏராளமான வருவாயைத் தந்து கொண்டுருக்கின்றது.

தலைமுடி அலங்காரத்தை பாராட்டுவார் என்று எதிர்பார்த்த சிநேகாவிற்கு (நிஜ) கணவர் சம்பார் வாடையை சிலாகித்து பேசுவது.

நீண்ட நாளாக வராமல் இருந்த பறவையை ரசித்துக் கொண்டுருந்த பெரியவர் பறவை போன்ற வாகனத்தில் ஏறியதும் இளம் பெண்களை டாவடிப்பது.

புதிய சாக்லேட் சுவையை சுவைத்ததும் புதிய உலகத்தை காணும் ஆடவர் கூட்டம். ஸ்பிரைட் குடித்தவுடன் பெண் வண்டியில் வந்து உட்காருவது என்று விதவிதமான ரகங்கள். 

ஜோதிகா சொன்ன பிறகு தான் இங்கு பலரும் இதயம் நல்லெண்ணெய் என்பது மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதை நம்பத் தொடங்கினார். அட விளக்கெண்ய்களா? என்று நாம் பேச முடியாது? ஆனால் அத்தனை அபத்தங்களையும் மீறி இந்த விளம்பங்களை ரசிக்க முடிகின்றது.    ஆனால் ரசிப்புடன் நின்று விட வேண்டும்.

பெப்ஸி விளம்பரத்தில் கோடிக்கணக்கான ரூபாயை பெற்றுக் கொண்டு நடிக்கும் அந்த பிரபல்யத்திடம் கேட்டுப்பாருங்க. தினமும் இந்த பெப்ஸியைத்தான் குடிப்பீங்களா? என்று.  முகத்தை வேறு பக்கம் வைத்துக் கொண்டு சென்று விடுவார்.  சொந்த செலவில் எவராவது சூனியம் வைத்துக் கொள்ள விரும்புவார்களா? பெப்ஸியில் போட்ட இரும்பே கரையும் போது நம்ம குடல் என்னவாகும்?

விளம்பரம் என்பது ஒரு விதமான மாயை. உங்களை மாய உலகில் சஞ்சாரம் செய்ய அழைத்துச் செல்லும் புஷ்பரக விமானம் போன்றது.  ஆனால் கண்விழித்துப் பார்ப்பதற்குள் கனவு என்று தெரிந்துவிடும். பார்பதற்கு அழகாய் இருக்கும் பல விசயங்களை பார்த்துக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அருகே சென்றால் அணுகுண்டு கணக்காய் நம்  பையில் உள்ள பணத்தை காணாமல் போக்கி விடும். .

ஆனால் இன்று உலகமே விளம்பரத்தை வைத்து தான் தான் வாங்க வேண்டிய பொருட்களையே தீர்மானிக்கின்றார்கள். அதிலும் பிராண்ட் என்ற சொல் இன்று மனிதர்களை யோசிக்க விடாமலேயே செய்துவிட்டது.  எத்தனை பொருட்கள் சந்தையில் இருந்தாலும் குறிப்பிட்ட நிறுவனத்தை தாண்டி உங்களால் வேறு எந்த நிறுவனத்தையும் யோசிக்கவே முடியாது.  காரணம் அவர்கள் உழைத்த விளம்பர உழைப்பின் பலன் இது.

நுகர்வோர்களுக்கு ஆழத்தில் பதிய வைத்து விட்டால் காலம் முழுக்க அறுவடை தான்.  அத்தனையும் அனுபவிக்க நினைக்கும் மனிதனுக்கு தோன்றும் குறுக்கு வழிகள் தான் இறுதியில் சிறைச்சாலையில் கொண்டு போய் சேர்க்கின்றது. 

Friday, August 31, 2012

மதமாற்றம் --- விளிம்பு நிலை மனிதர்கள்.


ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறுதல் என்பது எனக்கு ஆச்சரியமாக தெரியவில்லை. அது அவரவர் மகிழ்ச்சி அல்லது விருப்பம் என்பதாக எடுத்துக் கொள்ள முடிகின்றது. ஆனால் வேறொரு மதத்திற்கு மாற்றும் போது என்னவெல்லாம் சொல்லி மாற்றுகின்றார்கள் என்பது தான் கொடுமையாக கொடூரமாக தெரிகின்றது. 

தீவிரவாதத்திற்கு மூளைச்சலவை செய்து உருவாக்குகிறார்கள் என்பதைப் போலத் தான் தற்போது தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டுருக்கின்றது. இங்கே தற்போது நடந்து கொண்டுருக்கும் மதமாற்றங்கள் ஒரு முடிவில்லா குழப்பத்திற்கே கொண்டு சென்று விடுமோ? என்று தோன்றுகின்றது. இன்று அதிக அளவில் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றிக் கொண்டுருக்கிறார்கள். கடைசி புகலிடம் என்பதாக மக்களும் நம்புகிறார்கள்.

ஒவ்வொரு நகர்புறத்திலும் நடந்து கொண்டுருந்த மதமாற்ற நிகழ்ச்சிகள் இன்று புறநகர் பகுதிகளுக்கு சென்றுவிட்டது.  காரணம் உருவாகும் பிரச்சனைகள் அதிக அளவில் இருப்பதால் ஆட்சியாளர்களும் இந்த கூத்துக்களை கண்டு கொள்ள விரும்புவதில்லை.  மதத்தை தொட்டால் மட்டுமல்ல பேசினாலே ஷாக் அடிக்கும் விசயமல்லவா? அதற்கு மேலும் கேட்டாலும் இருக்கவே இருக்கு தனிநபர் சுதந்திரம் என்று வாயை அடைத்து விடுவார்கள். 

ஆனால் மதம் மாறும் பெரும்பான்மையோர் அததனை பேர்களும் பொருளாதார ரீதியில் விளிம்புநிலை மனிதர்களாகவே இருக்கிறார்கள்.  இவர்களுக்கு கொடுக்கப்படும் வாக்குறுதிகள், வழங்கப்படும் உதவிகள் தான் இந்த மதமாற்றத்தை விரைவு படுத்துகின்றது. தங்களின் அத்தனை பிரச்சனைகளும் கர்த்தர் காத்தருள்வார் என்று செல்பவர்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடுகின்றதா? 

இந்து மதத்தில் இருக்கும் சாதீயத்தால் நாங்கள் மதம் மாறுகின்றோம் என்று கடநத இரண்டு நூற்றாண்டுகளாக இஸ்லாம், கிறிஸ்துவம் வளர்ந்தது.  ஒரு ஊரே மாறும் போது அதன் தாக்கம் என்பது வேறு.  ஒரு தனிப்பட்ட மனிதர்கள் அதுவும் வாழ்வில் நல்ல நிலையில் இருப்பவர்கள் மாறும் போது உருவாகும் பிரச்சனைகள் என்பது வேறு.  சுற்றிலும் உள்ள உறவுகளால் தனிமைப்படுத்தப்பட்டு, எதிர்ப்புகளை மீறி காதலித்து கரை சேர முடியாதவர்களைப் போல பலரின் வாழ்க்கையும் அல்லாடிப் போய்விடுகின்றது.

திருப்பூர், கோவை, மாவட்டங்க்ளில் கடந்த நாலைந்து வருடங்களாக இருந்த இது போன்ற நிகழ்வுகள் இப்போது அதிகம் இல்லை.  காரணம் மதமாற்றிகளின் முக்கிய குறிக்கோளான பொருளாதாரம் சார்ந்த பங்களிப்புகள் இங்கே அந்த அளவுக்கு செல்லுபடியாவதில்லை. 


கிடைத்த வரை லாபம் என்பதாக மாற்றியவர்களை வைத்துக் கொண்டு கூட்டத்தினரை சேர்த்துக் கொண்டுருக்கிறார்கள்.  சேர்ந்தவர்களிடம் வசூலிக்கும் தொகையை வைத்துக் கொண்டு இப்போது வழிபாட்டு தலங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள்.  வெளிநாட்டில் இருந்து வரும் நிதி ஒருபக்கம்.  வசூலிக்கும் நிதி மறுபக்கம்.  ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.  இதற்கு மேலும் வசூலிக்கும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அந்த மதத்தில் கிடைக்கும் அங்கீகாரம் என்பது கடைசியில் அரசியல் தரகராக மாறும் அளவுக்கு கொண்டு போய் சேர்க்கின்றது.  அப்படிச் சென்றவர்கள் தான் இன்றைய மதமார்களும், குருமார்களும், சாமியார்களும்.

திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் உள்ள தனிநபர்கள் தொடங்கிய ஒரு சிறிய ஜெபகூடம் இரண்டு ஆண்டுகளில் மூன்று கோடி செலவு செய்து கட்டும் அளவுக்கு பிரம்மாண்ட அளவுக்கு வளர்ந்துள்ளது. சுற்றியுள்ள பொட்டல்காடுகளை மிக குறைந்த அளவுக்கு வாங்கி, கிறிஸ்வ மதத்திற்கு மாறுபவர்களுக்கு ஐந்து செண்ட் நிலம் இலவசம் என்ற கொள்கை இன்று அந்த பகுதி முழுவதையும் கிறிஸ்துவ பூமியாக மாற உதவியுள்ளது.  வந்து குவிந்து கொண்டுருக்கும் வெளிநாட்டு நிதியென்பது உள்ளூரில் வெறியை உருவாக்க காரணமாக அமைந்து விடுகின்றது.

மொத்தத்தில் மனிதர்களை தன்னிலை மறக்கும் அளவுக்கு விபரீத பாதையில் கொண்டு போய்க் கொண்டுருக்கின்றது. நாங்கள் மதவெறியர்கள் அல்ல என்று நாடகமாடும் அரசியல்வியாதிகளின் உதவியோடு ஒவ்வொரு ஊரிலும் இன்று மத ஓநாய்கள் வளர்ந்து கொண்டுருக்கின்றது.

உள் மன ஆதங்கம், ஆதரவற்ற நிலைமை, எதிர்பார்த்த விசயங்கள் நடக்காத
போது உண்டான வெறுமை என்று ஒவ்வொன்றாக ஆழ்மனதில் பதிந்து அன்றாட வாழ்க்கையில் சபலத்துடன் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் தான் அதிக அளவுக்கு மதம் மாறுகின்றார்கள். நம்பிய சாமிகள் என்னை காக்க வரவில்லை.  நம்பிக்கையளித்து எங்களை வாழ்விக்க வந்தவர்கள் தான் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதே இன்று மதம் மாறிக் கொண்டுருக்கும் அத்தனை பேர்களின் வாக்குமூலமாக இருக்கிறது. 

இதில் உண்மைகள் இருந்தாலும் மதம் மாறினாலும் அதில் உள்ள உள்பிரிவுகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எங்களை ஒதுக்கினார்கள் என்று சொல்லியவர்கள் அத்தனை பேர்களும் வேறொரு ரூபத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

இந்து மதத்தில் உள்ள சாதிகளை ஒழித்து விட்டால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்து விடும் என்பவர்களிடம் மற்ற மதத்தில் உள்ள பிரிவுகளை எப்படி போக்குவது என்றால் பதில் இருக்காது. காரணம் இங்கே மதம் ஒரு பெரிய பிரச்சனை இல்லை. தன்னிலை உணர விரும்பாத கூட்டம் தான் இப்போது அதிகமாகிக் கொண்டுருக்கிறது. அரசியலுக்கும், மதத்திற்கும் முக்கியத் தேவையே சுயநினைவு இருக்கக்கூடாது.  சுயமாக யோசித்தால் கேள்விகள் வரும்.  கேள்வி என்றால் அதற்கு பதில் ஒன்று தேவையாய் இருக்கும்.  பொய், உண்மை என்பதை எளிதாக கண்டு கொள்ள முடியும். 

தொடக்கம் முதலே இதை நம்பு. இதை மட்டுமே நம்பு என்று சொல்லிக் கொடுத்து விடுவதால் எவராலும் மாற்றுப் பாதையை யோசிக்கக்கூட முடிவதில்லை.  

மதங்கள் காட்டிய பாதைகள் அப்படியே தான் இருக்கிறது. இடையில் வந்தவர்கள் உருவாக்கிய கொள்கைகள் தான் இன்று உலகத்தை வழிநடத்திக் கொண்டுருக்கிறது.

மதங்கள் இருக்கின்ற வரைக்கும் பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருக்காது. 

இதுவொரு மாற்று ஏற்பாடு. ஒன்றை மறக்க மற்றொன்று. அதை மறக்க இன்னோன்று. குறிப்பாக மைனாரிட்டி ஓட்டு வாங்க நினைக்கும் ஒவ்வொரு அரசியல்வியாதிகளுக்கும் சந்தோஷமாகவே இருக்கும்.  மதத்திற்கு ஒரு தலைவன்.  அதில் உள்ள உட்பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தலைவர்கள்.  இறுதியாக மோதவிட்டு அழகு பார்க்கும் போது தேர்தல் காலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.  இன்று இந்தியா முழுக்க இந்த மத கலவரத்தின் தொடக்கங்கள் அங்கங்கே தோன்றிக் கொண்டேயிருக்கிறது.  பாதிக்கப்படுவது தனி நபர்கள் மட்டுமே.  


உறவுகளை இழந்து, தனது அடையாளங்களை மறந்து, தன் மொழியை வெறுத்து இறுதியில் எது தனது பாதை என்பதை உணராமல் யாருடைய ஆதாயத்திற்காக நாம் இறந்தோம் என்பதை அறியாமலே இறந்து போனாலும் இந்த மதம் உலகில் கடைசி மனிதன் இருக்கும் வரைக்கும் அழியப் போவதில்லை.

மாவட்ட ஆட்சியாளர் பொறுப்பில் இருந்தவர் கூட இது போன்ற கூட்டத்திற்கு ஊர் ஊராக செல்லத் துவங்கும் போது கற்ற கல்விக்கும் மனிதனின் உணர்ச்சிக்கும் சம்மந்தம் இல்லை என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது.

மனிதர்களின் வக்கிரமான உணர்ச்சிகளை மட்டும் தூண்டுவதற்கு இங்கே சிலர் இருக்கிறார்கள்.  ஆனால் தூண்டில் புழுவாகவே பலரும் மாறிக் கொண்டுருக்கிறார்கள். ஓட்டுக்காக உங்கள் உரிமைகளைப் பற்றி பேசிக் கொண்டு வருபவர்களை நன்றாக உற்று கவனித்துப் பாருங்கள். அவர்களின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் அவர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் அத்தனை வசதிகளும் உங்களின் சுய உரிமைகளை இழந்ததானால் வந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

Monday, August 27, 2012

நீயும் பொம்மை நானும் பொம்மை

நன்றி.... தமிழ் பேப்பரில் வெளியான கட்டுரை

ஈமு கோழி விளம்பரங்களுக்கு நடிகர்கள் சிரித்துக் கொண்டே நடித்து நம்பிக்கை கொடுத்தார்கள், நம்பி கையில் வைத்திருந்த காசை கொண்டு போய் கொட்டியவர்கள் மட்டும் சிரிக்க முடியாமலும் வெளியே சொல்ல முடியாமலும் நொந்து கொண்டுருக்கிறார்கள்,  

ஒவ்வொரு முறையும் இது போன்ற பரபரப்பு பத்திரிக்கைகளுக்கு தேவைப்படுகின்றதோ இல்லையோ நமக்கு முக்கியமாக தேவைப்டுகின்றது, பத்திரிக்கைகளுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்,  தொடங்கும் போது விளம்பரத்திற்கான காசு, முடியும் போது பரபரப்பு செய்திகள்,

நம்பியவ்ர்களுக்கு?


ஒன்றை மறக்க மற்றொன்று, அதை மறக்க இன்னொன்று என்று மாறி மாறி நமக்கு ஏதோவொன்று சூடாக தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிறது,  தொடக்கத்தில் திண்டபங்களுக்குத் தான் கொறிக்க சுவைக்க என்று விளம்பரப்படுத்துவார்கள், இப்போது ஊடகங்களுக்கும் தேவையாய் இருக்கிறது,  இது போன்ற செய்திகளை விரும்பத் தொடங்க அதுவே இறுதியில் திணிப்பது போல மாறிவிடுகின்றது, 

வாங்கிவிட்டீர்களா? என்று கத்தி நமது செவிப்பறையை கிழித்து செவிடர்களாய் மாற்றிக் கொண்டுருக்கிறார்கள்,

வலைதளம் முதல் செய்திதாள்கள் வரைக்கும் அத்தனைக்கும் இப்போது லைட் ரீடிங் என்பதே தாரக மந்திரமாக இருக்கிறது,  கடினமான விசயத்தை கொடுத்தால் பக்கத்தை நகர்த்தி சென்று விடுவார்கள் என்று நடிகை கிசுகிசுக்களைப் போட்டு நமக்கு சந்தனம் பூசிக் கொண்டுருக்கிறார்கள்.  அவளின் காண முடியாத மார்பை கனவுகளில் தேடிக் கொண்டுருக்கின்றோம், நமக்கும் அதுவே தான் தேவையாய் இருக்கிறது,  திரை அரங்கத்திற்குள் சென்றால் மூன்று மணி நேரம் கவலைகளை மறக்க என்ற போதை ஊட்டப்படுவதால் படம் எடுப்பவர்கள் என்ன கருத்து கந்தசாமி கணக்காக கைக் காசை செலவழிப்பார்கள் என்றா நம்ப முடியும்,  கலை என்பது பணம் சம்பாரிக்க என்ற பிறகு அங்கு கலைக்கு வேலையில்லை.  சதைக்குத் தான் வேலை.

ஒரு செய்தியை முக்கியத்துவப்படுத்த வேண்டுமானால் நமது பத்திரிக்கைகள் கொடுக்கும் வார்த்தைகளை கவனித்துப் பார்த்தாலே நமக்கு நன்றாக புரியும்,  கிரானைட் ஊழல் என்று சொன்னால் அதில் ஒரு கிக் இருக்காது என்பதால் கிரானைட் மாஃபியா என்று ஏதோவொரு நோய்க்கான ஃபோபியா போலவே புனைக்கதைகளை சுருட்டி சுருட்டி சூறாவளியாக்கி மக்கள் கவனத்தை திசை திருப்பத் தொடங்கி விடுகிறார்கள்.  நாலைந்து வாரமாக அன்றடாட பத்திரிக்கையில் வந்து கொண்டுருக்கும் பி.ஆர்,பி, நிறுவன அதிபர் பழனிச்சாமி கதையும் திடுக் திடுக் என்று மர்மகதைகளைப் போலத்தான் போய்க் கொண்டுருக்கிறது,  இப்போது தான் மக்களுக்கே டாமின் என்றொரு அரசாங்க நிறுவனம் இதற்கென்று இருக்கிறது என்பதே தெரிய வருகின்றது,  

முன்பிருந்த இருந்த தியோனேஸ்வரன் தொட்ங்கி இன்று வரைக்கும் உள்ள அதிகாரிகளின் சொத்து பட்டியலைப் பார்த்தாலே சொர்க்கம் என்பது இந்த கனிம வள துறை தான் என்பதை புரிந்து கொள்ள முடியும்,  சில துறைகளின் ஊழல்கள் வெளிப்படையாக மக்களுக்கு தெரியும்,  ஆனால் அரசாங்கத்தில் உள்ள பல துறைகளில் நடந்து கொண்டிருக்கும் ஊழல்கள் இன்று வரைக்கும் பலருக்கும் தெரிய வாய்பில்லாமலே கடந்து போய்க் கொண்டுருக்கிறது, 

அருண்ஷோரி மத்திய அமைச்சராக இருக்கும் போது அலைக்கற்றை ஊழல் என்பது இத்தனை பிரமாண்டமானதாக இருக்கும் என்பதை எவராவது கற்பனை செய்து பார்த்து இருப்பார்களா?  இல்லை தயாநிதி மாறனுக்குத் தான் காமதேனு பசு மேல் நாம் ஏறி உட்கார்ந்து கொண்டுருக்கின்றோம் என்று நம்பியிருப்பாரா?  ராசா தான் கறவை மாடு கணக்காக மாற்றப் போகின்றோம் என்று கனவு கண்டுருப்பாரா?  அமைச்சராக வந்தாலே போதும்?  கற்றுக் கொடுப்பவர்கள் சுற்றியிருக்கும் போது களவு என்பது புத்திசாலிதனத்தின் வெளிப்படாக மாறிவிடுகின்றது, 

இன்று சூறாவளியாக செய்தித் தாள்களில் ஓடிக் கொண்டிருக்கும் கிரானைட் ஊழலைப் பற்றி கலைஞருக்குத் தெரியாதா?  இல்லை இப்போது நடவடிக்கை எடுத்துக் கொண்டுருக்கும் ஜெ, வுக்குத்தான் தெரியாத விசயமா? கடந்த பத்தாண்டு ஆண்டுகளாக இந்த கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்து கொண்டுருக்கும் அத்தனை கிராம மக்களும் அரசாங்கத்திற்கு அனுப்பிய மனுக்களும், நினைவூட்டல் கடிதங்களும் அரசாங்க அதிகாரிகளுக்கு கிடைக்காமல் தபால் துறை ஏதும் சதி செய்து இருக்குமோ?  இல்லை கிராம நிர்வாக அதிகாரி முதல் கோட்டையில் இருக்கும் துறை சார்ந்த அத்தனை கோமகன்களுக்கும் இது குறித்த அக்கறை இல்லாமலா போயிருக்கும்,  ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு விதமான படையல் செய்யும் உலகத்தில் இருக்கும் போது அமைச்சர் முதல் அதிகாரிகள் வரைக்கும் எப்படி கவனிக்க வேண்டும் என்று கூடவா பழனிச்சாமிக்கு தெரியாமலா போயிருக்கும்,

ஒருவர் வளரும் போது குடிசையில் இருந்து கோபுரத்திற்கு உயர்ந்தவர் என்று நான்கு பக்க விளம்பரங்களை வாங்கிக் கொண்டு வாழ்த்தும் அதே பத்திரிக்கைகள் தான் வீழும் போது மாஃபியா உலகத்தில் அவிழும் மர்ம முடிச்சுகள் என்று சிறப்புக்கட்டுரையாக எழுத முடிகின்றது, 

உலகமெங்கும் அரசியல் செய்வதற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதொவொரு பலியாடுகள் தேவையாய் இருக்கிறது,  அதிலும் இந்தியாவில் இந்த பலியாடுகளை நம்பித்தான் அரசியலே நடக்கின்றது, 

திருவிழா காலத்தில் அடிக்கப்படும் கோழி, ஆடுக்களைப் போல ஒவ்வொரு சமயத்திலும் இதற்கென்று குறி பார்த்து காத்துக் கொண்டுருப்பவர்கள் அநேகம் பேர்கள்.  அது அமைச்சராக இருக்கலாம், ஆட்சிக்கு ஜீவநாடியாக உதவிக்கொண்டுருக்கும் அதிகாரியாகக்கூட இருக்கலாம், 

மாவட்ட ஆட்சியர் சகாயத்தை மாற்றியவர்கள் தான் அவர் அனுப்பிய கோப்பின் நகலை படிக்கவே பல மாதங்கள் ஆகியுள்ளது,  காரணம் தேவையைப் பொறுத்தே அதிகாரங்கள் பிரயோகிக்கப்படுகின்றது,  அவசரங்கள் கருதி அரசியலில் எதுவும் செய்யப்படுவதில்லை,  அவசியங்கள் கருதியே இங்கு ஒவ்வொன்று நடைபெறுகின்றது,  காரணம் ஜனநாயகத்திற்கு நாம் கொடுக்கும் விலையென்பது இதுவே தான்,

ஊழல் என்றறொரு வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போன உலகில் மீண்டும் மீண்டும் இதில் ஊழல் அதில் ஊழல் என்று சொல்லும் போது படிப்பவர்களும் துணுக்கு செய்திகளைப் போல படித்து விட்டு நகர்ந்து போய் விடுகின்றனர்,  மறுநாளும் படிக்கும் போது எரிச்சல் தான் உருவாகின்றது,  காரணம் படிப்பவர்களும், பார்ப்பவர்களும் நமக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்ற ஏக்கத்தில் இருப்பவர்களாக இருப்பதால் மூச்சடைக்கும் ஊழல் என்பது கூட இன்று எளிதாக மாறிவிட்டது, நல்லொழுக்கம் என்ற வார்த்தை என்பதே நாற்றம் பிடித்த வார்த்தையாக சமூகம் பார்க்கத் தொடங்கிய போதே நல்ல விசயங்கள் என்பது நம்மைச்சுற்றி அரிதாகத்தான் நடக்கும், நான்காயிரம் அதிகாரிகள் இருக்கும் இடத்தில் நாலு அதிகாரிகள் செய்யும் செயலால் சிலருக்கும் இன்னமும் தர்ம புண்ணியத்தின் மேல் நம்பிக்கை வருகின்றது, 

நாம் தான் வாழ்வில் பாதி நாட்கள் ஏக்கத்திலும், மீதி நாட்கள் எரிச்சலிலுமாய் கழிக்கும் போது இறுதியில் நமக்கு மிஞ்சப்போவது கழிவிரக்கம் மட்டுமே,  நுகர்வு கலாச்சாரம் என்பது நுகத்தடி பூட்டப்பட்ட மாடுகள் போல ஒரே நேர்கோட்டில் போய்க் கொண்டுருக்கிறது,  நமக்கு எது தேவை என்பதை விட மற்றவர்கள் பார்வையில் நாம் சிறப்பாக தெரிய எதுவெல்லாம் தேவை என்பதாக கலாச்சாரம் மாறியுள்ளதால் நமக்கே நமக்கான தேவைகளை புரிந்து கொள்ள முடியவில்லை,  ஃபேஷன் என்ற வார்த்தையை நாம் நோண்டிப்பார்த்தால் நம் பணத்தின் தேவையை அதிகப்படுத்தும் அசிங்கம் என்பதை யோசிப்பதே இல்லை, அவர்கள் முன்னால் நாம் கௌரவமாக தெரிய வேண்டாமா? என்று யோசித்து யோசித்து கடைசியில் கடன் என்ற பெயரில் பிச்சை எடுக்கும் அளவுக்குப் போய் கடனாளியாக மாறி இங்கு பாதிப் பேர்களின் வாழ்க்கை தெருவுக்கு கொண்டு வந்து விடுகின்றது,

தற்போது அதிகாரியாய் இருப்பவன் சம்பளத்திற்கு மேல் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ் ஆசைப்படுபவன்,  அவனை சரிக்கட்ட நினைப்பவன் கருப்பு பணத்தை கட்டிக் கொண்டு தூக்கம் மறந்து தவிப்பவன், 

பணம் என்பது காகிதம் என்பதை மறந்து உலகில் உள்ள அத்தனை கவலைகளையும் போக்கவல்லது என்பதாக நினைத்துக் கொண்டவர்கள் இருக்கும் உலகில் எதை இயல்பாக பேசினாலும் இளிச்சவாயன் பட்டமே மிஞ்சும், அளவான பணத்தைப் பெற்றவன் அவனை அவனே ஆள முடியும்,  அளவுக்கு மிஞ்சிய பணத்தைப் பெற்றவன் பணமே அவனை ஆளத் தொடங்கும்,  பணம் ஆளத் தொடங்கும் போது தான் மர்மக் கதையில் வரும் திடுக்கிடும் திருப்பங்களும் நம் வாழ்வில் நடக்கத் தொடங்குகின்றது, இருப்பதை வைத்து சிறப்பாக வாழ்வோம் என்று எண்ணிக் கொள்பவர்கள் வாழ்க்கை முழுக்க பொம்மையாய் காட்சிகளை கண்டு நகர்ந்து விடுவது உத்தமம்,

டாலர் நகரம் இரண்டாவது அத்தியாயம்,