Showing posts with label விளம்பர உலகம்.. Show all posts
Showing posts with label விளம்பர உலகம்.. Show all posts

Saturday, September 01, 2012

திருட அனுமதிக்கும் விளம்பரங்கள்


"உன் தலையில மூளை இருக்கா இல்லை களிமண் தான் இருக்கா?"

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் நம்மைப் பார்த்து ஏதோவொரு சமயத்தில் கேட்டுருக்ககூடும். 

உண்மையிலேயே களிமண் மண்டைக்குள் இருந்தால் எப்படியிருக்கும்? 

யோசித்துப் பார்த்தால் தற்போது நிஜமாகவே சாத்தியமாகிக் கொண்டுருக்கிறது. யோசிக்க வேண்டிய மூளை வேடிக்கை பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறது. களிமண் தான் உள்ளே இருக்குமோ? என்று நினைக்கும் அளவிற்கு மக்கள் தினந்தோறும் புதுப்புது ஆச்சரியத்தை தந்து கொண்டேயிருக்கிறார்கள். வாழ்க்கைக்கு எது அவசியமானது என்பதைத் தாண்டி எது நமக்கு அந்தஸ்த்தை தரும் என்பதாக தேடித் தேடி பொருட்களை வாங்கி குவித்துக் கொண்டுருக்கின்றார்கள். விருப்பம் என்பது வெறியாக மாறியுள்ளது.  
 வாங்கி குவிக்கும் பொருட்கள் குப்பையாக இருந்தாலும் சரி வாங்கியே ஆக வேண்டும் என்று அடுத்த முறையும் கடைகளுக்கு படையெடுக்கின்றார்கள்.  படையெடுத்து நாடுகளை பிடித்த காலம் மலையேறிவிட்டது. கடைகளை நோக்கி படையெடுப்பது தான் தற்போது நடந்து கொண்டுருக்கிறது. நுகர்வு கலாச்சாரத்தை புரிந்து கொண்டவர்களும் விதவிதமான விளம்பரங்கள் மூலம் நம்மை வரவழைக்க யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள். தரமான பொருட்கள் என்பது மாறி விளம்பரத்தால் வெற்றி என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளோம். .

ஒரு விளம்பரத்தை பார்த்தவுடனே நமக்கு தேவையில்லாத பொருட்கள் கூட தேவையாகி விடுகின்றது. "எதையும் சொல்ற விதமாகச் சொன்னால் வாங்க வந்துவிடுவார்கள்" என்பது மந்திரமாக மாறியுள்ளது. "சொர்க்கத்தில் ப்ளாட் விற்பனை" என்று விளம்பரம் வந்தாலும் முன்பதிவு செய்ய தயாராகவே இருக்கின்றார்கள்..

நம் அடிப்படைத் தேவை தீர்ந்ததும் மாடல் பைத்தியம் பிடிக்கத் துவங்கி விடுகின்றது. மாடல் பைத்தியம் முடிந்ததும் அதிக வசதிகளுக்கு தாவி விடுகின்றோம். ஒவ்வொன்றாக மாற்றும் குணம் இயல்பாக வந்து விடுகின்றது. இந்த குணமே பலரும் கடன் வாங்கி செலவழிப்பது தவறில்லை என்பதில் வந்து முடிகின்றது. கடன் தொல்லையால் குடும்பமே கடைசியில் மண்டையை போட காரணமாகவும் அமைந்து விடுகின்றது. 

பிடித்த நடிகர் சொன்னார்.  விரும்பும் நடிகை போட்டுருப்பது என்று தொடங்கிய இன்று சந்தையில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்குப் பின்னாலும் ஏராளமான நட்சத்திரங்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். வண்ண வண்ண நட்சத்திரங்கள் போல் ஜொலிப்பாய் பேசி, ஆடி, நம்பவைத்து நம்மை வாங்க அழைக்கிறார்கள். அவர்கள் நடிக்க வாங்கிக் கொண்ட காசுக்கு கொஞ்சம் அதிகமாகவே கூவ கூவ கடைகளில் சேரும் கூட்டமும் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது.

இன்று தொலைகாட்சிகள் தொடங்கி வானொலி வரைக்கும் சந்தைக்கடை இரைச்சலாகவே மாறியுள்ளது. விளம்பரம் இல்லையேல் வியாபாரம் இல்லை என்பதால் புதுப்புது விளம்பரங்கள் தினந்தோறும் வந்து குடும்பத்தை நோகடித்துக் கொண்டுருக்கின்றது. ஆசைகளுக்கு எல்லையில்லை. எல்லையில்லா வானத்தைப் போல இங்கு எப்போதும் ஏக்கத்ததுடனே வாழ்ந்து கொண்டுருப்பதாலே எல்லாமே தேவையாய் தெரிகின்றது. குறிப்பிட்ட பொருட்களை வாங்கி வந்த பின்பு தான் "ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை" கணக்காய் ஏமாளியாகின்றோம்.

முக்கால்வாசி விளம்பரங்களை அது வாங்கச் சொல்லும் பொருட்களை தனியாக இருக்கும் போது யோசித்துப் பாருங்கள்.  உங்களின் அவசிய தேவைகளை விட ஆடம்பர தேவைகளை அதிகப்படுத்துவதாக இருக்கும்.  

அரிசிக்கு விளம்பரம் தொடங்கி அலங்கரிக்கப்பட்ட கக்கூஸ் ல் போய் உட்காருங்க வரைக்குமான அத்தனை விளம்பரங்களையும் நாம் பார்த்தே ஆக வேண்டும். எல்லா விதமான விளம்பரங்களும் நம்மை நோக்கி வந்து கொண்டேயிருக்கிறது. புத்தியை அடகு வைத்து விட்டு புதிதாய் வாங்க கற்றுக் கொண்டுருக்கின்றோம். இன்று தடுக்கி விழுந்தால் ஏதோவொரு நெடுந் தொடரில் தான் விழ வேண்டும். எவரும் விதிவிலக்கல்ல. கடந்த பத்தாண்டுகளில் விளம்பரத்தின் வருவாயை பெருக்க உதவிய அத்தனை பெண்களும் இன்னமும் ஆ.......வென்று பார்த்துக் கொண்டே கண்ணீர் சிந்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

ஆனால் நெஞ்சை நக்கி அழவைத்த அத்தனை நடிகர் நடிகைகளும் நகரின் முக்கிய பகுதியில் ஆடம்பர வீடு கட்டி அடுத்தடுத்த மாநிலங்களில் வாங்கிப் போட்டுள்ள சொத்தை பாதுகாக்க பறந்து கொண்டுருக்கிறார்கள். விளம்பர உலகத்திற்கு பெணகளே வரப்பிரசாதம்.  அழகுபடுத்த, மேலும் அழகுபடுத்த, சிவப்பு நிறமாக மாற்ற என்று பெண்களின் சிந்தனைகளை சிறகடிக்க வைப்பதால் கண்டதையும் தடவி தடவி தாவாக்கட்டையில் புண் வந்தது தான் மிச்சமாக இருக்கிறது. இந்த பொருளை தந்தார்கள்? என்று நாம் எந்த நீதிமன்றத்திலும் ஏற முடியாது.  நீதிமான்களும் ஏதோவொன்றை தடவிக் கொண்டுருக்கக்கூடும். 

அடுத்து என்ன வாங்கலாம்?  என்று நீங்கள் யோசிகக வேண்டாம்.  இன்றைய விளம்பரங்களே கற்று தந்து கொண்டுருக்கின்றது.  இப்படித்தான் இன்றைய பெரும்பாலான விளம்பரங்கள் வீட்டின் படுக்கையறை வரைக்கும் வந்து பல்லைக் காட்டி வரவேற்கின்றது.

பணக்காரனுக்கு எப்போதும் கவலையில்லை.  பணத்தை செலவு செய்ய ஏதோவொரு காரணம் வேண்டும். ஏழைகளுக்கு அடுத்த வேளை சோற்றுக்கு ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்.  இடையில் மாட்டிக் கொண்ட திருவாளர் நடுத்தரவர்க்கம் தான் இந்த விளம்பரங்களினால் இருப்பதையும் இழந்து விட்டு கதறுகிறார்கள்.  கறை நல்லது என்பது விளம்பர வாசக்ம். கடன் கெட்டது என்பது எதார்த்தம். . 

தற்போது நாம் பார்த்துக் கொண்டுருக்கும் ஒவ்வொரு விளம்பரங்களும் ஏதோவொரு விதத்தில் நம்மை கவர்வதாக இருக்கிறது. தொலைக்காட்சியில் படங்களைப் பார்ப்பதை விட இடையில் வரும் விளம்பரங்களை பார்க்கவே விரும்புகின்றேன். ஆமாம் ரசிக்க மட்டுமே விரும்புகின்றேன். மிக குறுகிய நேரத்தில் சொல்லப்படும் அந்த விசயத்தை யோசித்தவர்களை பாராட்டத் தோன்றும்.  இன்று விளம்பர உலகம் சக்கைப் போடு போட்டுக் கொண்டுருக்கின்றது. சவாலான வேலை.  ஆனால் சரியான வருமானம். 

ஒரு விளம்பர நிறுவனம் சந்தையில் நிலையான இடத்தைப் பெற்று விட்டால் திரைப்பட பிரபல்யங்கள் கூட இவர்களின் வாசலில் நிற்பர்.  குறுகிய கால அறுவடை என்பதை விட அன்றைய உழைப்புக்கு அப்போதே பலன் என்பதால் பலருக்கும் ஏராளமான வருவாயைத் தந்து கொண்டுருக்கின்றது.

தலைமுடி அலங்காரத்தை பாராட்டுவார் என்று எதிர்பார்த்த சிநேகாவிற்கு (நிஜ) கணவர் சம்பார் வாடையை சிலாகித்து பேசுவது.

நீண்ட நாளாக வராமல் இருந்த பறவையை ரசித்துக் கொண்டுருந்த பெரியவர் பறவை போன்ற வாகனத்தில் ஏறியதும் இளம் பெண்களை டாவடிப்பது.

புதிய சாக்லேட் சுவையை சுவைத்ததும் புதிய உலகத்தை காணும் ஆடவர் கூட்டம். ஸ்பிரைட் குடித்தவுடன் பெண் வண்டியில் வந்து உட்காருவது என்று விதவிதமான ரகங்கள். 

ஜோதிகா சொன்ன பிறகு தான் இங்கு பலரும் இதயம் நல்லெண்ணெய் என்பது மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதை நம்பத் தொடங்கினார். அட விளக்கெண்ய்களா? என்று நாம் பேச முடியாது? ஆனால் அத்தனை அபத்தங்களையும் மீறி இந்த விளம்பங்களை ரசிக்க முடிகின்றது.    ஆனால் ரசிப்புடன் நின்று விட வேண்டும்.

பெப்ஸி விளம்பரத்தில் கோடிக்கணக்கான ரூபாயை பெற்றுக் கொண்டு நடிக்கும் அந்த பிரபல்யத்திடம் கேட்டுப்பாருங்க. தினமும் இந்த பெப்ஸியைத்தான் குடிப்பீங்களா? என்று.  முகத்தை வேறு பக்கம் வைத்துக் கொண்டு சென்று விடுவார்.  சொந்த செலவில் எவராவது சூனியம் வைத்துக் கொள்ள விரும்புவார்களா? பெப்ஸியில் போட்ட இரும்பே கரையும் போது நம்ம குடல் என்னவாகும்?

விளம்பரம் என்பது ஒரு விதமான மாயை. உங்களை மாய உலகில் சஞ்சாரம் செய்ய அழைத்துச் செல்லும் புஷ்பரக விமானம் போன்றது.  ஆனால் கண்விழித்துப் பார்ப்பதற்குள் கனவு என்று தெரிந்துவிடும். பார்பதற்கு அழகாய் இருக்கும் பல விசயங்களை பார்த்துக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அருகே சென்றால் அணுகுண்டு கணக்காய் நம்  பையில் உள்ள பணத்தை காணாமல் போக்கி விடும். .

ஆனால் இன்று உலகமே விளம்பரத்தை வைத்து தான் தான் வாங்க வேண்டிய பொருட்களையே தீர்மானிக்கின்றார்கள். அதிலும் பிராண்ட் என்ற சொல் இன்று மனிதர்களை யோசிக்க விடாமலேயே செய்துவிட்டது.  எத்தனை பொருட்கள் சந்தையில் இருந்தாலும் குறிப்பிட்ட நிறுவனத்தை தாண்டி உங்களால் வேறு எந்த நிறுவனத்தையும் யோசிக்கவே முடியாது.  காரணம் அவர்கள் உழைத்த விளம்பர உழைப்பின் பலன் இது.

நுகர்வோர்களுக்கு ஆழத்தில் பதிய வைத்து விட்டால் காலம் முழுக்க அறுவடை தான்.  அத்தனையும் அனுபவிக்க நினைக்கும் மனிதனுக்கு தோன்றும் குறுக்கு வழிகள் தான் இறுதியில் சிறைச்சாலையில் கொண்டு போய் சேர்க்கின்றது.