Friday, March 11, 2011

ஜட்ஜ் அய்யா ஜட்டி போடுவாரா?

சமீப காலமாக ஒவ்வொரு நாடுகளிலும் மக்கள் புரட்சி தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இது போன்று வருமா? ஆட்சியாளர்களுக்கு அடிவயிற்றில் சுரக்கும் அமிலம் போல உள்ளே இருந்து கொண்டு தான் இருக்கும்.  காரணம் இன்றைய இணைய வழி தொடர்புகள்.  இணையம் மூலம் புரட்சி உருவாகின்றதோ இல்லையோ அந்தந்த நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் அடக்குமுறை அராஜகங்களை வெகு எளிதாக வெளி உலகத்திற்கு கொண்டு வர முடிகின்றது.


சில நாட்களுக்கு முன் மகளிர் தினத்தில் திருப்பூரிலும் ஒரு அதிசிய புரட்சி நடந்தது. இந்த புரட்சி அடித்தட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்டதல்ல.  முழுக்க முழுக்க சுகவாசிகயாக வாழ்ந்து கொண்டிருந்த சாயப்பட்டறை முதலாளிகளின் மனைவிமார்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் உருவாக்கியதாகும்.

குறிப்பிட்ட சாயப்பட்டறைகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பெணக்ளும் ஒன்று சேர்ந்து திருப்பூர் டவுண்ஹால் என்ற பகுதியில் சாலையில் திடுமென வந்து உட்கார்ந்து விட்டனர். இந்த பகுதி சென்னையில் உள்ள அண்ணாசாலை போலவே முக்கியமான வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். அருகே ரயில் நிலையம் இருப்பதால் பரபரப்புக்கு என்றும் பஞ்சமிருக்காது. அருகே உயர்ந்து செல்லும் மேம்பாலமும் ஒன்று சேர அமைந்து இருந்த காரணத்தால் வந்து போய்க் கொண்டிருக்கும் வாகன வரிசைகள் தடுமாறி நிற்க அதிகாரவர்க்கத்தினர் அணிவகுக்கத் தொடங்கினர். கூட்டத்தில் இருந்த பெண்களிடம் சமாதான பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என்றனர். .

பிரபல சாயப்பட்டறை உரிமையாளரின் மனைவி உருவாக்கிய திட்டத்தின்படி ஏறக்குறைய 24 மணிநேரத்தில் வாய்வழி செய்திகள் பரப்பப்பட்டு முக்கிய சாயப்பட்டறை உரிமையாளர்களின் மனைவிமார்களும் நடுவீதியில் அமர பரபரப்பு தொற்றிக் கொண்டது. நீதிமன்றம் தலையிட்டு திருப்பூரில் உள்ள மொத்த சாயப்பட்டறைகளையும் மூட உத்தரவு பிறபித்த காரணத்தால் கடந்த இரண்டு மாதங்களாக திருப்பூரை நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையை இருள் பரவத் தொடங்கியுள்ளதை எந்த ஆட்சியாளர்களும் கண்டு கொள்ளவில்லை.  காரணம் இது தேர்தல் சமயம் என்பதால் ஊடகங்கள் கூட இந்த பிரச்சனையை துணுக்குச் செய்தியாகவே போட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களில் 35 000 பேர்கள் தங்களுடைய குடும்ப அட்டையை (ரேசன் கார்டு) முகவரி மாற்றிக் கொண்டு நகரத் தொடங்கிவிட்டார்கள்.  மேலும் இரண்டு லட்சம் பேர்கள் முகவரி மாற்றத்திற்காக விண்ணப்பித்துள்ளார்கள்.  கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இதே தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்தவர்களின் வாழ்க்கை இனி எப்படி இருக்கும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி?

இந்த சாயப்பட்டறையைச் சார்ந்த தொழிலில் மூன்று விதமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். தொழிலாளார்களாக, அலுவலக பணியாளர்களாக நிர்வாகத்தில் உயர்பதவியில் இருப்பவர்கள் என்று மூன்று வகையினருக்கும் இனி எந்த தொழிலை கற்றுக் கொண்டு எங்கே செல்ல முடியுமோ? கிராமப் பகுதிகளில் இருந்து வந்து வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞர்கள் இப்போது சாயப்பட்டறை முதலாளிகளிடம் சொல்வது என்ன தெரியுமா?

"எங்களுக்கு வேறு வேலை எதுவும் தெரியாது?  ஊரில் போய் இருக்கவும் முடியாது.  எங்களுக்கு மூன்று வேளை சோறு மட்டும் போடுங்க. பிரச்சனை முடிந்தவுடன் சம்பளம் கொடுங்க" என்கிறார்கள்.

சாயப்பட்டறை முதலாளிகளுக்கு வங்கி ஒரு பக்கம். இது போன்ற தொழிலாளர்களின் நெருக்கடி மறுபக்கம். அரசாங்க சட்டதிட்டத்தின்படி செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கும் பேரிடியாக நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது.

2006 ஆம் ஆண்டு இந்த பிரச்சனை சூடுபிடிக்கத் தொடங்கிய போது இந்த மனைவிமார்கள் எவரும் தங்கள் கணவர்களுக்கு அறிவுரை எதுவும் சொல்லியிருப்பார்களா என்று தெரியவில்லை.  முதல் நாள் நடுத்தெருவில் உட்கார்ந்து தங்கள் எதிர்ப்பைக் காட்டிய பெண்கள் அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர்களுக்கு தங்களது கோரிக்கைகளை கொடுக்க ஊர்வலமாக வந்த கூட்டத்தில் பாதி பெண்களை காணவில்லை. குளுகுளு வசதியில் வாழ்ந்தவர்களுக்கு கொளுத்தும் உஷ்ணம் அதிகமாக இருந்த காரணத்தால் ஆளைவிட்டால் போதும் என்று பாதிப்பேர்களை காணவில்லை. 

மற்றொரு ஆச்சரியம் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சாயப்பட்டறை சங்கம் மட்டுமல்ல ஏற்றுமதியாளர் சங்கம் முதல் திருப்பூரில் உள்ள மற்ற எந்த துறை சார்ந்த சங்கமும் ஆதரவு கொடுக்கவில்லை.  கலந்து கொள்ளவும் இல்லை.  நடு இரவில் எந்தந்த சாய்ப்பட்டறைகள் ஆற்றில் சாயத்தண்ணீரை கலந்து விடும் போது கூட எவரும் கண்டும் காணாமல் இருக்க "இன்று உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்டாய் "என்று நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது.

ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையும் இல்லை. உண்மையான அக்கறையும் இல்லாத காரணத்தால் காலம் கடந்தும் இந்த தெருமுனைப் போராட்டம் வெறும் கேலிக்குறியாகவே போய்விட்டது. மொத்தத்தில் தவறான சமயத்தில் சரியான விழிப்புணர்வு.


வளம் கொழிக்கும் டாஸ்மார்க்கை அரசாங்கம் எடுத்து நடத்தும்.  ஆனால் இது போன்ற சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசாங்கம் ஆதரவு அளிக்க முன்வருவதில்லை.  காரணம் உள்ளேயிருக்கும் முதலாளிகளுக்கிடையே உள்ள ஆயிரத்தெட்டு அரசியல் நிலைப்பாடுகள் இருப்பதால் எட்டு திசையிலும் 64 குதிரைகள் பூட்டி இந்த பிரச்சனைகள் தொடக்கம் முதல் வெவ்வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறது.  நீதிமன்றம் ஆப்பு சொருகிய பிறகு இனி எந்த ராஜா வந்த ஆப்பை கழட்டப் போகிறாரோ?  அதற்குள் இன்னும் எத்தனை லட்ச குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரப்போகின்றதோ?

அதைத்தான் கூட்டத்தில் பேசிய ஒருவர் இப்படிச் சொன்னார்

"ஜட்ஜ் அய்யா ஜட்டி போடுவாரா?  அந்த தீர்ப்பை எழுதுவதற்கு முன்பு இந்த பிரச்சனையில் தமிழ்நாட்டு அரசாங்கம் என்ன செய்தது என்று பார்த்து எழுதியிருக்கக்கூடாதா? "என்றார்.

இதன் தொடர்பான முந்தைய கட்டுரைகள்

சாயமே இது பொய்யடா

அழுவாச்சி காவியம் கதாநாயகன்

Tuesday, March 08, 2011

கனிமொழி - சுற்றிச் சுழலும் சூறாவளி

"நான் பிறந்த நாள் முதல் இன்று வரைக்கும் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் விமர்சனத்திறகு பஞ்சமில்லை.  அது குறித்து நான் கவலைப்படுவதும் இல்லை. எப்போதும் என் வழியில் நான் முன்னேறிக் கொண்டு தான் இருக்கின்றேன்."

கலைஞர் மு. கருணாநிதி மகள் கனிமொழி சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். காரணம் இன்று முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் ராசா மேல் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் மெகா ஊழலுக்குப் பின்னால் இருப்பவர் கனிமொழி என்று சுட்டிக் காட்டப்படுவதைப் போலவே மற்றொன்றும் நடந்து கொண்டிருக்கிறது. 

இன்று காங்கிரஸ் கேட்கும் அளவற்ற ஆசையுள்ள சீட்டுக்கு முக்கிய காரணம்  ஸ்பெக்ட்ரம் என்ற மெகா ஊழல். இந்த மெகா ஊழலில் திமுக சம்மந்தப்பட்டுள்ளதை வைத்து தான் இன்று காங்கிரஸ் முடிந்தவரைக்கும் மிரட்டிப் பார்க்கலாம் என்று ஐவர் குழுவை வைத்து நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது.  கேட்ட சீட்டைத் தருகிறாயா? இல்லை மகளையும் உள்ளே தள்ளட்டுமா?என்கிற தொனி தான் முக்கியமாக இருக்கிறது.  பாராளுமன்றத்தில் ராஜ்ய சபா உறுப்பினராக உள்ள கனிமொழிக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் என்ன தொடர்பு?

கனிமொழி 1968 ஜனவரி 1 அன்று பிறந்தவர்.  ஜெயலலிதாவைப் போலவே தனது பள்ளிப் படிப்பபை சர்ச் பார்க் ல் படித்தவர்.  வணிகவியல் முதுகலை பட்டம் பெற்றவர். சிவகாசியில் உள்ள பெருந் தொழில் அதிபர் குடும்பத்தில் 1989 ஆம் ஆண்டு அதிபன் போஸ் உடன் திருமணம் நடந்து மிக குறுகிய காலத்தில் விவகாரத்தும் ஆகி இன்று சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அரவிந்தன என்பவரை 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து ஆதித்யா என்ற ஆண் வாரிசுக்கு தாயாகவும் இருப்பவர். தொடக்கத்தில் சென்னையில் தி ஹிந்து பத்திரிக்கையிலும் பணிபுரிந்தவர்.

கருணாநிதியின் மற்ற குழந்தைகளை விட கனிமொழி படிப்பிலும், கலையார்வத்திலும் சூட்டிகையாக இருந்தவர். கலைஞர் மேல் எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் அவரின் மொழி ஆற்றல், இலக்கியத்திறனை மாற்று அணியில் உள்ள தலைவர்களும் புகழ்ந்து பேசுவர். ஆனால் கலைஞரின் வாரிசுகளில் கனிமொழியிடம் மட்டுமே அப்பாவின் திறமை உண்டு. கலைஞரைப் போலவே பத்திரிக்கையாளர். இலக்கிய ஆர்வம் மிக்கவர்.கவிதைகளுடன் வெகுஜன இலக்கிய வட்டாரத்தில் அரசியல் கலப்பில்லாமல் பழகியவர்.

எழுத்தாளர் சுஜாதாவுடன் மின்னம்பலம் இணையத்தில் பணியாற்றியவர். மற்றவர்கள் குற்றஞ்சாட்டும் அளவிற்கு தயாநிதி மாறன் போல ஒரே நாளில் இந்த அரசியல் உலகத்திற்கு வந்தவர் அல்ல. எழுத்துலகம் மூலம் தனது சமூக பங்களிப்பை காட்டியவர். அதன் தொடர்ச்சியாக 2005 ஆம் ஆண்டு கருத்து என்றொரு ( எந்த துறை குறித்தும் எவர் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை பதிய வைக்கக்கூடிய வலைதளம்) அமைப்பை இன்றைய உள்துறை அமைச்சர் மகன் கார்த்தி சிதம்பரம் உடன் சேர்ந்து தொடங்கியவர். ஆனால் இறுதியில் வெற்றி பெறவில்லை. விமர்சனம் அதிகமாக இருந்தாலும் அருள்தந்தை ஜெகத் கஸ்பருடன் சேர்ந்து 2007 முதல் சங்கமம் என்ற அமைப்பை உருவாக்கி தமிழ்நாட்டு நாட்டுப்புற கலைகளுக்கு , கலைஞர்களுக்கு நகர்புறங்களில் உரிய அங்கீகாரம் கொடுக்க வைத்தவர்.

கலையார்வத்தைப் போலவே கலைஞர் 85 என்று தமிழ்நாட்டில் உள்ள சிறுநகரகங்களை அடிப்படையாகக் கொண்டு முதன் முதலாக விருதுநகர் அருகே காரியாபட்டியில் வேலைவாய்ப்பு கண்காட்சியை நடத்தியவர்.  ஆனால் கனிமொழியின் இந்த சமூக அரசியல் அங்கீகாரமென்பது கலைஞரின் மகள் என்கிற ரீதியாக இருந்தாலும் ஸ்டாலின், அழகிரியின் ஆளுமையை மீறி மேலே வருவது லேசுபட்ட காரியமா என்ன?  

கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளின் மற்றொரு பெயர் தர்மாம்பாள். கருணாநிதியுடன் நாடகத்தில் நடித்தவர். நாடார் வகுப்பைச் சேர்ந்தவர். கருணாநிதிக்கு தோழியாகி இறுதியில் துணைவியாக மாறியவர்.  கருணாநிதியின் ஒவ்வொரு கால கட்டத்தின் வளர்ச்சியிலும் வளர்ந்த குடும்பத்தினரைப் போலவே இன்று கனிமொழியும் அரசியலில் வளர்ந்து கொண்டிருபபவர்.

அரசியல் உலகில் ஆண் அரசியல்வாதிகளுக்கு ஒழுக்கம் முக்கியமில்லை. ஆனால் பெண் என்கிறபோது கிசுகிசுகளுக்கு பஞ்சமிருப்பதில்லை.  அது தான் இன்று ராஜா கனிமொழி தொடர்பு என்கிற வரைக்கும் றெக்கை கட்டி பறக்கின்றது. காரணம் டெல்லி லாபியில் கனிமொழி குறுகிய காலத்தில் உருவாக்கிய தாக்கம்.  பவர் புரோக்கர் நீராடியா மூலம் தயாநிதி மாறனை தவிர்த்து தொலை தொடர்பு அமைச்சகத்திற்கு ராஜாவை கொண்டு வந்து சேர்த்தது முதல் இந்த கனிமொழி கிசுகிசுக்கு பஞ்சமில்லாமல் போக அதுவே இன்று மெகா ஊழல் சமாச்சாரத்தை பின்னுக்கு தள்ளி தனி மனித வக்ர தாக்குதல்கள் அதிகமாகியுள்ளது. கலைஞர் ஜெயலலிதா மேல் வீசிய இது போன்ற அம்புகள் இன்று தன் மகள் மேல் வந்து விழுந்து கொண்டிருப்பதை பார்க்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ராஜாத்தியம்மாளுடன் வாழ்ந்த திருமண வாழ்க்கையை கருணாநிதி தொடக்கத்தில் கருணாநிதி வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அப்பா அரவணைப்பு இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவர் தான் கனிமொழி. இது குறித்து கேள்வி வந்த போது கருணாநிதி அன்றைய சூழ்நிலையில் வேறு விதமாக சொன்னார்.  'என் மகள் கனிமொழியின் தாயார் ராஜாத்தி' என்றார். நடிகை மனோரமா கூட சமீபத்தில் நடந்த ஒரு மேடைக் கூட்டத்தில் இந்த விசயங்களை தெரியப்படுத்திய போது கருணாநிதியும் அதனை வழிமொழிந்தார். . . 

ஆனால் முத்து, ஸ்டாலின், அழகிரி தமிழரசு, செல்வி போன்றவர்களை விட கனிமொழியின் வாழ்க்கை சற்று வித்யாசமானது. ராஜாத்தி அம்மாளுக்கு கிடைத்த துணைவி என்ற மரியாதையும் உருவான வேறுபாடுகளையும் மீறி இன்று கனிமொழி தன்னையும் இந்திய அரசியலில் ஒரு நபராக நிலை நிறுத்திக் கொண்டவர். ஜெயலலிதாவால் நடு இரவில் கருணாநிதியை கைது செய்யப்பட்டு மறுநாள் காலையில் இப்போது இடிக்கப்பட்ட சென்ட்ரல் சிறைவளாகத்தின் முன்புறம் அமர்ந்து இருந்த கருணாநிதியின் புகைப்படம் எல்லா ஊடகத்திலும் வெளிவந்தது நினைவில் இருக்கலாம். 

அன்று கருணாநிதியுடன் அமர்ந்திருந்த கனிமொழி உருவாக்கிக் கொண்ட அரசியல் வெளிச்சம் இன்று வரைக்கும் மேலேறி இப்போது டெல்லி அரசியல் லாபி வரைக்கும் கொண்டு போய் சேர்த்துள்ளது. அதுவும் எதற்காகவும் ஒன்று சேர்ந்து விடாத மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்த்து பெண்களுக்கான 33 சதவிகித மசோதாவை ரகணகளப்படுத்திய ஆணாதிக்கத்திற்கு மத்தியில் தன்னை ஒரு ஆளாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.

கலைஞர் அப்பழுக்கற்றவர் என்று சொன்னால் எப்படி சிரிப்பு வருமோ அதை விட சோனியா காங்கிரஸ் ஆட்சியென்பது உழலற்ற நிர்வாகம் என்று எவராவது சொன்னால் 'கேழ்வரகில் நெய் வடிகின்றது' என்கிற கதையாகத்தான் இருக்கும்.. 

ஒரு வகையில் பெரம்பலூர் ராசா பரிதாபத்துக்குரியவர். எடுத்த தேனில் நகத்தில் ஓட்டியதை நக்கியத்திற்கே திகார் ஜெயில் என்றால் கையில் வாங்கி குடித்தவர்களுக்கும், அண்டாவுக்குள் தலையை விட்டு முகம் ஒட்டி சுவைத்தவர்களுக்கும் சட்டத்தில் என்ன தண்டனை இருக்கும்? 

ஆனால் நம்முடைய இந்தியச் சட்டம் என்பது அரசியல்வாதிகளுக்கு அல்ல. எப்போதும் விசாரணைக் கமிஷன் என்பதே ஒரு விளக்கெண்ணை கமிஷனாகத் தான் இருக்கிறது. இந்திய அரசியலில் ஒவ்வொரு விசாரனை கமிஷனுக்கென்று செலவழித்த தொகையை ஒதுக்கியிருந்தால் கூட இன்று ஆயிரக்கணக்கான கிராமங்கள் அடிப்படை வசதிகளை பெற்று இருக்கக்கூடும்..

காரணம் இன்று இந்தியாவில் ஊழல், லஞ்சம் என்பது இன்று வெகுஜன மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இயல்பான விசயமாக மாறிவிட்ட ஒன்று. ஆனால் இன்று பாராளுமன்ற ( ராஜ்ய சபா) உறுப்பினராக இருக்கும் கனிமொழிக்கும் இந்த மெகா ஊழலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?


ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த 206 கோடி ரூபாய் பணம் கலைஞர் டிவிக்கு வந்துள்ளது. கலைஞர் டிவியில் ஷேர் ஹோல்டர் என்கிற விதத்தில் கனிமொழியும் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றவாளியே. கனிமொழிக்கும் இது தெரிந்து இருக்கக்கூடும். ஆனால் கனிமொழி நான் கலைஞர் தொலைக் காட்சியில் பங்குதாரர் இல்லை என்பது போன்று போய்க் கொண்டிருக்கும்  கிளைக்கதை ஒன்று தனியாக இருக்கிறது.

இது சிபிஐ விரிக்கும் வலை. காரணம் சிபிஜ விரித்த வலையில் சிக்கிய முக்கியப் புள்ளி ஷாகீத் பால்வா கொடுத்த ஆதாரத்தை வைத்தே வலை சுருக்கப்படுகின்றது.   இந்தியாவில் உள்ள சிபிஐ என்றால் அதற்கு மற்றொரு பெயர் ஒன்று உண்டு.  அடக்குவது அல்லது முரண்டு பிடிப்பவர்களை வழிக்கு கொண்டு வருவது.  இது தான் முக்கியப்பணி.  இதற்குப் பிறகு மற்ற அவர்களின் பணியெல்லாம் வரும். இந்த சிபிஐ விரித்து வைத்துள்ள வலையில் அடுத்து மாட்ட்ப் போகும் சூழ்நிலையில் இருப்பவர் தான் கனிமொழி. 


கருணாநிதியின் அக்கா மகன் முரசொலி மாறன் தான் திமுகவிற்கு தேவைப்படும் டெல்லி லாபி அரசியலை கரைத்து குடித்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்.  அன்று மாறனுக்கு பக்கபலமாக இருந்தவர் வைகோ. ஆனால் முரசொலி மாறனுக்குப் பிறகு அவர் மகன் தயாநிதி மாறன் கொடுத்த பாடத்தில் கருணாநிதிக்கு இப்போதைய சூழ்நிலையில் கனிமொழியைத் தவிர வேறு யாருமில்லை.

டெல்லிக்கு தேவைப்படும் ஆங்கில மொழியறிவு உள்ள கனிமொழி கூட சகோதரர்களின் விழிகளின் மொழியை பார்த்து தான் மெதுவாக நகர முடிகின்றது. ஸ்டாலின், அழகிரிக்கு கிடைத்த வாய்ப்புகளை விட கனிமொழிக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் குறைவு. ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் சடுகுடு ஆட்டத்தில் கனிமொழியின் அரசியல் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. . 

அண்ணாவிற்குப் பிறகு காங்கிரஸ் ஒவ்வொரு சமயத்திலும் தமிழ்நாட்டில் ஏதேவொரு வண்டியில் இடம் கிடைத்தால் போதுமென்று வாசல்படியில் தொத்திக் கொண்டு தான் வந்தது. இப்போது ஓட்டுநர் இருக்கைக்கு ஆசைப்படுகின்றது. காரணம் சோனியா மகன் ராகுல். 

உத்திர பிரதேசத்தில் மகன் கணக்கு வென்றதைப் போலவே தமிழ்நாட்டிலும் வென்று விடும் என்று சோனியாவும் நம்பிக்கொண்டுருக்கிறார். டெல்லியில் ராகுல் தலைமையில், சிதம்பரம் மேற்பார்வையில் உருவாக்கும் வலையை உடைத்தெறிவது கலைஞருக்கு பெரிய விசயமல்ல.

இப்போது ப. சிதம்பரம் உருவாக்கும் பாதை காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் எதிர்காலத்திற்குத் தேவைப்படும் அஸ்திவாரம் என்பதற்கான அடிப்படை மட்டுமல்ல. ஆந்திரத்தில் சிதம்பரம் விருப்பத்தின் பேரில் ஒரு டம்மியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரண்ரெட்டி முதல் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கோஷ்டிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது வரைக்கும் அத்தனைக்கும் பின்னாலும் ப.சிதம்பரத்திற்கு நீண்ட காலத் திட்டம் இருக்கிறது. மகன் உடையான படைக்கு அஞ்சான் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். காரணம் கருணாநிதி மறைவுக்குப் பிறகு உருவாகப் போகும் வெற்றிடத்திற்கு இப்போதே காங்கிரஸ் தயார் நிலையில் இருப்பதற்கான அறிகுறியே இப்போது நடக்கும் அத்தனைக்கும் ஆசைப்படு.

எந்த பிரச்சனையிலும் நிதானமாகவே முடிவு எடுக்கும் கலைஞருக்கு நேற்று (மார்ச் 7) ராஜினாமா செய்ய டெல்லிக்குச் சென்ற அமைச்சர்களுக்கு இன்று வரைக்கும் அமைதி காக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதால் என்னமோ திட்டம் இருக்கு என்பது மட்டும் தெரிகின்றது.  ஆனால் மழைவிட்டாலும் தூவானம் விடாத இன்றைய அரசியல் சூழ்நிலையில் ராகுலின் எதிர்கால தமிழ்நாடு காங்கிரஸ்க்கு உண்டான திட்டங்கள் என்பது இந்த தேர்தல் தான் புரியவைக்கப் போகின்றது?.


காங்கிரஸ் பார்வையில் கருணாதிக்குப் பிறகு திமுக என்பது திசையற்று முட்டிக் கொண்ட கழகமாக மாறிவிட வேண்டும் என்பதில் தான் இன்றைய பிடிவாதம் உருவாகியுள்ளது. அதற்கு முதல் களப்பலி ராசா.

அடுத்த வரிசையில் கனிமொழி.

ஒரு தலித் ராசாவிற்கு கிடைத்த பெருமையை பொறுக்கமுடியாத ஆதிக்க மனப்பான்மையினர் செய்த கொடுமையை பார்த்தாயா உடன்பிறப்பே என்று அரற்றியவர் இப்போது மகளுக்கு உருவாகப்போகும் பிரச்சனைகளுக்கு என்ன வார்த்தைகள் வைத்துள்ளாரோ?  அல்லது எதையெல்லாம் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறாரோ?

Sunday, March 06, 2011

கடிதம் (மட்டும்) எழுதும் கலைஞருக்கு தமிழருவி மணியன் எழுதும் கடிதம்


தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்!

என் பால்ய காலந்தொட்டு உங்கள் அரசியலை நான் பார்த்து வருகிறேன். நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை!

தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப்படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள்.காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப்பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமையாக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்!



ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்திலிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது - உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது!  ஓர் உறையில் இரு வாட்கள் இருக்கலாகாது என்று சிந்தித்த நீங்கள் செயற்குழுவின் ஆதரவைத் திரட்டி, செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே விரட்டி, தனிக்காட்டு ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்ட மகத்துவத்தை யார் மறக்கமுடியும்? 

அரசியல் விளக்கங்களை எழுதவிடாமல் அன்றைய 'இந்திரா தர்பார்’, செய்தித் தணிக்கையைக் கொண்டு வந்தபோது, 'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்ற முல்லைக் கவி பாடல் மூலம் இலக்கியப் போர்வையில் அரசியல் வகுப்பு நடத்திய உங்கள் ஆற்றல் யாருக்கு வரும்? 'மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது’ என்ற மறக்கமுடியாத வசனத்தைப் 'பூம்புகார்’ திரைப்படத்தில் தீட்டிய உங்கள் மனசாட்சி முற்றாக உறங்கிப் போனதுதான் தமிழருக்கு வாய்த்த சாபம்.

'தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில், தமிழ் வீரம் போதித்த அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்ற எனக்கு அந்த உணர்வும் மழுங்கி விடுமேயானால், நடைப்பிணம் நிகர்த்தவனாகி விடுவேன்’ (கலைஞர் கடிதம் தொகுதி - 5) என்றீர்களே,  எந்தெந்த வகையில் நீங்கள் பெரியாரையும், அண்ணாவையும் இன்று பின்பற்றுகிறீர்கள் என்று எங்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா?

'சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா?

ஐந்து கொள்கைகள்தான்.

கடவுள் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டும். காங்கிரஸ் ஒழிய வேண்டும். காந்தி ஒழிய வேண்டும். பார்ப்பான் ஒழிய வேண்டும். 

அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான் (இறுதிப் பேருரை- 19-12-73) என்றார் பெரியார். இந்த 5 கொள்கைகளில், தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில் பயின்ற நீங்கள் இன்று எதைப் பின்பற்றுகிறீர்கள்? மஞ்சள் துண்டு எந்தப் பகுத்தறிவின் அடையாளம்? சாய்​பாபாவை வீட்டில் வரவேற்றுப் பேசியதும், உங்கள் வீட்டார் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை தந்த பாடமா? 

தன்னை வாழ்த்தினால் 'நண்பர்’ என்று புகழ்வதும், விமர்சனம் செய்தால் 'பூணூல்’ என்று எள்ளி நகையாடுவதும் எந்த வகையில் பார்ப்பன எதிர்ப்பு? கஸ்தூரிபாயைத் தன் வழியில் திருப்பியவர் காந்தி.நாகம்மையையும், மணியம்மையையும் தன் மனதின் போக்குக்கேற்ப மாற்றியவர் பெரியார். வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில் கொண்டுவருவேன் என்பது நகைப்​புக்குரியது அல்லவா! பக்திப் பரவ​சத்தில் கோயில் கோயிலாகச் சுற்று​வது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!

அண்ணா இறுதி நாள் வரை காங்​கிரஸை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை எதிர்க்க வில்லை. ஆனால், நீங்கள் இரண்டு நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்கவில்லையே; '

என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல, வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும், அப்​போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும்  அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்​கொண்டிருப்பேன். மரணப் படுக்​கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்​டிருக்​கும். அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை. 'அண்ணா! அண்ணா!’ என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புகள் இறுதியாக அடங்​கும்’ (கலைஞர் கடிதம் தொகுதி - 5) என்று சொன்ன நீங்கள் அண்ணா எதிர்த்த காங்கிர​ஸின் உறவுக்காக ஏங்கி நின்றதும், நிற்பதும் நியாயந்தானா கலைஞரே?

'சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக வெட்டிக் கடலில் எறிவது போன்ற எந்தக் கொடுமையையும், கொண்ட கொள்கைகளுக்காகத் தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக எடுத்துக்கொண்டுள்ள சூளுரை’ என்று சொன்ன கலைஞரே... உங்களால் ஈழத் தமிழருக்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம்கூட இருக்க இயலவில்லையே? எதையுமே நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள். உணர்வுததும்பப் பேசுகிறீர்கள்... ஆனால் எழுத்துக்கும் பேச்சுக்கும் எதிராகவே நடக்கிறீர்கள். அது ஏன்?

'முந்திரா ஊழல் 

முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிந்த விவகாரம். அமீர்சந்த் பியாரிலால் விவகாரம், அதிலே சிக்கிக் கொண்டு தவித்த தவிப்பு, இதெல்லாம் ஈரேழு பதினாலு உலகமும் சிரிப்பாய்ச் சிரித்ததை யாரும் மறந்து விடவில்லை’ என்றும் 'காங்கிரஸ் மாளிகை பாழடைந்த மண்டபமாகி விட்டது. அதிலே வெளவால்​கள் குடியேறத்தான் செய்யும்’ என்றும் (கலைஞர் கடிதம், தொகுதி -
1) 1968-69-களில் உடன்பிறப்புகளிடம் கடிதங்கள் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பைக் கடுமையாக விதைத்து​விட்டு, 1971 தேர்தலில் அதே காங்கிரஸைக் கட்டித் தழுவியபடி களத்தில் நின்றீர்களே... அந்த நட்புக்குச் செலுத்திய நன்றிதான் கழகத்தின் மீது காங்கிரஸ் பொழிந்த புகழு​ரைகள்(!).

நீங்கள் பதவிப் பல்லக்கில் பவனி வருவதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் தோள் கொடுத்தால் காங்கிரஸ் சமதர்மம் இனிக்கும். சுமப்பதை விட்டுவிட்டு,அவர்களும் உங்களோடு சேர்ந்து பல்லக்கில் சவாரி செய்ய நினைத்தால் காங்கிரஸின் ஆதிக்கம் கசக்கும்.

 'சமத்துவம் இன்மையே... உனக்குப் பெயர்தான் இந்து மதமா?’ என்று கேட்டார் அண்ணல் அம்பேத்கர்.

'சுயநலமே...உனக்குப் பெயர்தான் தி.மு.கழ​கமா?’ என்று கேட்கத் தோன்றுகிறது கலை​ஞரே! 'பதவிகளுக்காக, பவிசுகளுக்காக, அந்தஸ்துகளுக்காக, அதிகாரங்களுக்காக இந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கிற இழி செயலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற ஒரு சாதாரணத் தொண்டன்கூடத் தயாராக இல்லை’ (முரசொலி 7-7-1981) என்று வீர முழக்கமிட்டவர் நீங்கள். ஆனால், ஈழம் எரிந்தபோது,நம் இனம் கரிந்தபோது களத்துக்கு வராமல் பாசறையிலேயே பதுங்கிவிட்டது ஏன் கலைஞரே? 'தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி’ என்று பரவசம் பொங்கப் புகழ்மாலை சூட்டிய நீங்கள், வீரத்தின் விளைநிலம் பிரபாகரனை ஈன்ற பார்வதி அன்னையை மனிதநேயமின்றி விமான நிலையத்தில் பாதம் பதிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்​பிய இந்திய அரசின் வன்கொடுமைக்கு எதிர்ப்புக்​குரல் எழுப்பாதது ஏன் கலைஞரே? 

பதவி நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள சோனியா காந்தி என்னும் 'சொக்கத் தங்கத்தின்’ கருணைப் பார்வைக்கு இவ்வளவு தூரம் முதுகு வளைந்திருக்க வேண்டுமா முத்தமிழறிஞரே!

கலைஞரே... கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இரண்டு முறை மட்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டீர்கள். பிரபாகரன் சடலம் என்று ஒரு சடலத்தை ஊடகங்கள் ஓயாமல் காட்டிக் கொண்டிருந்த போது, உலகத் தமிழர்கள் செய்வதறியாது சோகம் கனக்க விழிநீர் வெள்ளமாய்ப் பெருக்கிய போது, தள்ளு வண்டி​யில் அமர்ந்தபடி சோனியாவிடம் உங்கள் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் அமைச்சர் பதவி கேட்டு அலைக்கழிந்தீர்கள். அதற்குப் பின்பு ஆயிரம் பிரச்னைகள் தமிழகத்தில் அரங்​கேறின. ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை அன்றாடம் மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டனர்.

இன்று வரை 400- க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் கைநோக மன்மோகன்சிங் அரசுக்குக் கடிதம் எழுதிக் கடமை​யாற்றினீர்கள். இப்போது இரண்டாவது முறை​யாக முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் போர்வையில் புதுடெல்லி சென்று ஆ.ராசாவைக் காக்கவும், காங்கிரஸ் கூட்டணி நிலைக்கவும் அரும்பாடு பட்டீர்கள். உங்கள் கொள்கைப் பிடிப்பு, நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் சிலிர்க்கச் செய்கிறது கலைஞரே!

''எந்தப் பதவியானாலும், எந்த மட்டத்திலா​னாலும் அதனைத் தேடிப்போய் நெருக்கடி கொடுத்துப் பெற முனையும்போதோ, அல்லது பெற்றுவிட்ட பிறகோ, உன்னைப் பற்றி உனக்கே ஒரு வெறுப்பு தோன்றும், உனக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, நாட்டுக்குத் தோன்றும்’ (கலைஞர் கடிதம் - தொகுதி 1) என்று உடன்பிறப்புக்கு எவ்வளவு தெளிவாக 9-11-68-ல் நீங்கள் கடிதம் தீட்டியிருக்கிறீர்கள்! அவ்வளவும் சத்திய வார்த்தைகள். இன்று உங்களைப் பற்றி நாட்டுக்கு அப்படித்தான் தோன்றி​விட்டது.

'வாண்டையார், வடபாதி மங்கலத்தார், நெடும்பலத்தார், குன்னியூரார், மூப்பனார், மன்றாடியார், பேட்டையார், பெரும்பண்ணையார், செட்டி நாட்டார், சிவகங்கை சீமையார்’ என்று அண்ணா அன்று மேடைதோறும் காங்கிரஸில் இருந்த பணக்காரர்களைப் பட்டியலிட்டார்; சென்னையில் 1951 டிசம்பரில் நடை​பெற்ற தி.மு.க. முதல் மாநில மாநாட்​டில், 'தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கழகம்தான்’ என்று பிரகடனம் செய்தார். நீங்களும் பல்வேறு தருணங்களில் 'நானும் ஒரு கம்யூ​னிஸ்ட்’ என்று 'நகைச்சுவை’ ததும்பப் பேசியிருக்கிறீர்கள். 



இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குபேரபுரியின் வாரிசுகளாக விண்ணிலும் மண்ணிலும் வலம் வருகின்றனர். இந்த ரசவாத மாற்றம் எப்படி நிகழ்ந்தது கலைஞரே! நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபாதை மனிதர்களாக இருந்த உங்கள் அமைச்சர்களும், தானைத் தளகர்த்தர்களும் தமிழகத்து அம்பானி​களாய் உருமாறிய ரகசியத்தை உருக்​குலைந்து நிற்கும் எந்தமிழர் அனைவருக்கும் நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் இலவசங் களுக்கே இடமிருக்காது கலைஞரே!

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா சிக்கிச் சிறைப்பட்டதும், சி.பி.ஐ. கரங்கள் கலைஞர் தொலைக்காட்சி வரை விரிந்ததும் உங்கள் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருந்த ஆரிய - திராவிட அம்பெடுத்து வீசி விட்டீர்கள்.

காமராஜரின் வேட்பாளராக சஞ்சீவரெட்டியும், இந்திராவின் வேட்​பாளராக வி.வி.கிரியும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்றபோது நீங்கள் வி.வி.கிரியைத்தானே வெற்றி பெறச் செய்தீர்கள். இந்திராவும், கிரியும் உங்கள் வார்த்தையில் ஆரியர்; காமராஜரும், சஞ்சீவரெட்டியும் திராவிடர். அப்போது எங்கே போனது

உங்கள் இனமான உணர்வு? 'இராமன் இரு பேச்சாளன் இல்லை’ என்பான் வான்மீகி.இரு பேச்சு இல்லாமல் நீங்கள் இல்லை என்பதுதானே உண்மை கலைஞரே!

ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன சாதித்​தீர்கள்? மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான கண்ணப்பன், செல்வ​கணபதி இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி போன்​றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல் ஆரோக்கியம் காத்தீர்களா? 

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா? நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? 'உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்?’ என்று கேட்டார் அண்ணா... அதையே உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா?

ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில் நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை? தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்க​ளுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா? 



நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் 'திருமங்கலம் ஃபார்முலா’வை நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். 

எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது.பொறுத்திருந்து பாருங்கள்!

இப்படிக்கு,

ஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த,

தமிழருவி மணியன்

நன்றி ... பகிர்ந்து கொண்ட தமிழ் கனல்