Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Sunday, March 30, 2014

அன்புள்ள ஆசானுக்கு

அன்புள்ள ஜோதிஜி,   
                                  
வணக்கம்.

நீங்கள் யோகக்கலை மற்றும் ஆசான் திரு கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய படம் (ஆவணப்படம்?) எடுப்பதைப்பற்றி எழுதியிருந்தீர்கள். யோகக்கலை (நீங்கள் எழுதியிருப்பது போல யோகா கலை அல்ல) பற்றிய சில புரிதல்கள் தேவை. இந்தக் கலையை பற்றிய சில அடிப்படை விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். 

யோகம் ஆசனம் ஸ்திரம் சுகம் என்பார்கள்.

எந்த ஒரு யோகாசனம் செய்யும்போதும் – அதாவது ஆசனத்தில் நம் உடல் இருக்கும்போது - நமது நிலை ஸ்திரமாக இருக்கவேண்டும். உறுதியாக நிலை தடுமாறாமல் இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்? நமது உடல் எடையை நமது உறுப்புகளுக்கு சமமாக பிரித்து கொடுக்கத் தெரியவேண்டும். அப்போதுதான் இந்த ஸ்திரத் தன்மை வரும். இந்த ஸ்திரத்தன்மை வந்துவிட்டால் எத்தனை நேரம் வேண்டுமானாலும் ஒரு ஆசனத்தில் இருக்கலாம். உடல் லேசாக இருக்கும்.

நான் ஒரு ஆசனம் செய்யும்போது கால் சறுக்குகிறது; கை நடுங்குகிறது என்றால் என் ஆசிரியை உங்கள் உடல் எடையை நீங்கள் கை கால்களில் சமமாக விநியோகிக்கவில்லை என்பார். இதைப் புரிந்துக்கொண்டு செய்தால் கால் சறுக்காது; கை நடுங்காது. எங்கள் ஆசிரியை வகுப்பு முழுவதும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பார். ஒவ்வொருவரையும் கவனித்து சரி செய்துகொண்டே இருப்பார். 

இரண்டாவதாக எந்த ஒரு ஆசனத்தில் இருந்தாலும் - காலைத் தூக்கி தலைமேல் வைத்தாலும், தலையைக் கீழே வைத்து சிரசாசனம் செய்தாலும் -அது எனக்கும் சுகமாக (comfortable) இருக்கவேண்டும் பார்க்கிறவர்களுக்கும் நான் ஏதோ கஷ்டப்பட்டு செய்வது போலவோ சர்க்கஸ் செய்வது போல இருக்கக்கூடாது. இந்த ஸ்திரம், சுகம் இரண்டும் யோகக்கலைக்கு மிகவும் முக்கியம். 

இதனாலேயே இந்தக் கலையை கற்றுத் தேர்ந்த ஒருவரின் மேற்பார்வையிலேயே செய்ய வேண்டும் என்கிறார்கள். ஆசான் இரண்டு இடங்களில் தானே புத்தகத்தைப்பார்த்து செய்ய ஆரம்பித்ததாகச் சொல்லுகிறார், வீடியோவில். இது தவறான ஒரு செய்தியை பார்ப்பவர்களுக்கு கொடுக்கும். முடிந்தால் இதை எடிட் செய்துவிடுங்கள்.

இன்னொரு விஷயம்: ஆசான் செய்யும் ஆசனங்கள் எல்லாம் பலபல வருடங்களின் இடைவிடா பயிற்சி மூலம் வருவது. இப்படிச் செய்வதற்கான அடிப்படை இரண்டு விஷயங்கள் இருக்கின்றன யோகாவில். முதலாவது நீட்சி (streching) அடுத்து முறுக்குதல் (twisting). எந்த ஒரு ஆசனம் செய்வதற்கும் முன்னால் நமது உடலை தயார் செய்வது மிகவும் முக்கியம். அதற்குத் தான் இந்த நீட்சியும், முறுக்குதலும் தேவை. 

சின்னக்குழந்தைகள் வெகு அனாயாசமாக கால் கட்டை விரலை எடுத்து வாய்க்குள் வைத்துக் கொண்டு விடுவார்கள், அவர்களிடம் இருக்கும் நெகிழ்வுத்தன்மை காரணமாக. நாமும் ஒருகாலத்தில் அப்படித்தான் இருந்தோம். வயதாக ஆக, இந்த நெகிழ்வுத் தன்மை குறைகிறது. யோகாசனம் செய்வதால் இந்த இழந்த நெகிழ்வுத்தன்மையை மெல்ல மெல்ல மீண்டும் பெறலாம். 

நமது உடலுக்கு ஒரு தத்துவம் தான் அதாவது use it or lose it. எந்தவொரு அவயவத்தை நாம் பயன்படுத்தவில்லையோ அதை நாம் இழக்கிறோம். கால் வலிக்கிறது என்று சிலர் நடக்கவே மாட்டார்கள். முழங்கால் வலி என்று கீழே உட்காருவதையே தவிர்த்து விடுவார்கள். சில வருடங்களில் இரண்டுமே முடியாமல் போய்விடுகிறது.

அதேபோல எல்லோருக்கும் எல்லா ஆசனங்களும் செய்ய வராது. இதற்குக் காரணம் அவரவர்களுக்கு இருக்கும் நெகிழ்வுத்தன்மை (flexibility). நமக்கு ஏற்கனவே இருந்த நெகிழ்வுத்தன்மையை யோகாசனங்கள் மீட்டுத் தரும் – விடாமல் பயிற்சி செய்தால் மட்டும். 

ஹோமியோபதி மருந்து போலத்தான் யோகாசனங்களும் – நிதானமாகத்தான் பலன் கிடைக்கும். நிதானமாகத்தான் செய்ய வேண்டும். ஆசனங்களின் கடைசி நிலைக்கு நிதானமாகத்தான் செல்லவேண்டும். அதேபோல வெளியே வருவதும் நிதானமாகத் தான் வர வேண்டும். அதனாலோ என்னவோ நிதானமான எனக்கு இந்தக்கலையும் ஹோமியோபதி மருந்துகளும்  ரொம்பவும் பிடித்திருக்கிறது! இரண்டாலும் பலனும் காண்கிறேன். அவசர யுகத்தில் இந்த நிதானமான யோகக்கலையை நிறைய நபர்கள் கற்க வருகிறார்கள் – சில காலத்திற்குத்தான் பிறகு விட்டுவிடுகிறார்கள். தொடர்ந்து செய்வதன் மூலமே இதன் நன்மையை உணர முடியும். 

இப்போது பவர் யோகா (Power Yoga) என்றெல்லாம் சொல்லுகிறார்கள். உடல் இளைப்பதற்கென்று யோகா என்றெல்லாம் விளம்பரப்படுத்துகிறார்கள். நிறைய காசும் பார்க்கிறார்கள். 

நான் கற்றுக் கொள்ளும் யோகாசனங்கள் திரு BKS ஐயங்கார் அவர்களால் முறைப்படுத்தப்பட்டவை. மைசூரைச் சேர்ந்த திரு ஐயங்காருக்கு இப்போது 96 வயது. பூனாவில் இருக்கிறார். இன்னும் திடமாக வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். திரு ஐயங்காருக்கு வெளிநாட்டிலும் மாணவர்கள் இருக்கிறார்கள். 

நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நெகிழ்வுத்தன்மை வயதாக ஆக குறையும். அப்படிப்பட்டவர்களுக்கு பயன்படுவதற்காக  திரு ஐயங்கார் சில பொருட்களை உபயோகப்படுத்தி செய்யும் ஆசனமுறைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். அவற்றை props (properties) என்று குறிப்பிடலானார். டேப் அல்லது பெல்ட், மரத்தால் ஆன செங்கல், யோகா நாற்காலி. (இன்னும் நிறைய இருக்கிறது) இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் என்னைப் போன்றவர்கள் ஸ்திரமாகவும், சுகமாகவும் ஆசனங்களைச் செய்ய முடியும். இதற்கான சில புகைப்படங்களை இணைக்கிறேன். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு props வைத்துக் கொண்டு யோகாசனம் செய்வோம். எங்கள் ஆசிரியை மிகத் திறமைசாலி. வேறு வேறு விதங்களில் எங்களை யோகாசனம் செய்ய வைத்து வகுப்பை ரொம்பவும் சுவாரஸ்யமாக்கி விடுவார். சில நாட்கள் பிராணாயாமம் மட்டுமே ஒரு மணி நேரம் செய்வோம். 

சின்ன வயதுக்காரர்கள் மட்டுமே செய்யக் கூடிய ஆசனங்களை நாங்களும் (என்னைப்போன்றவர்களும் செய்யக் காரணம் திரு ஐயங்கார் தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளும், நமஸ்காரங்களும் உரித்தாகுக. 

உங்களது ஆவணப்படத்தில் இந்த விஷயங்களை எல்லாம் புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள். 

அன்புடன்,
ரஞ்சனி நாராயணன்


தொடர்புடைய பதிவுகள்








Thursday, February 27, 2014

கனடா கடிதம்

அன்புள்ள ஜோதிஜி,

1973  ஆம் வருடத்திலிருந்து நான் டொரோண்டோவில் வசித்து வருகிறேன். ஜனவரி மாத ஆரம்பத்தில் நான் இந்தப் புத்தகத்தை சென்னையில் வாங்கி, டொராண்டோவிற்குத் திரும்பிய பின் ஒரு மாதத்திற்கு முன் படித்தேன். பெருமாள் முருகன் எழுதிய கங்கணம், தமிழ்மகன் எழுதிய வெட்டுப்புலி ஆகிய புத்தகங்களைப் படித்த உடன் உங்கள் புத்தகத்தை படித்தேன். இதனால், எழுத்தோட்டம், வழங்கிய விதம் இவற்றில் இந்தப் புத்தகங்களுடன் ஒருவிதமான ஒப்பீடு இருப்பதை என்னால் தவிர்ப்பது இயலாது என்று நினைக்கிறேன்.

உங்களது வலைப்பதிவுகளை ஒரு வருடத்திற்கு முன் படிக்க ஆரம்பித்தேன். உங்களைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கூர்மையாகக் கவனித்து நீங்கள் எழுதுவது ரொம்பவும் பிடித்திருந்தது. நீங்கள் பார்ப்பதையெல்லாம் தெளிவாகவும் ஒருவித பரிவுணர்வோடும் எழுதுகிறீர்கள். ஒரு முறை உங்களது கடந்தகால நண்பர்கள் சிலரைப் பற்றி எழுதியிருந்தீர்கள்; ஒரு செல்வந்தர் வீட்டுப் பிள்ளை அரசு கொடுக்கும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டது பற்றியும், ஒரு பிராம்மணர் அந்திமக் கிரியைகளுக்கு உதவுவது பற்றியும் படித்து ரொம்பவும் கவரப்பட்டேன். உங்கள் தேவியர்களைப் பற்றி எழுதும் பல பல நிகழ்வுகளையும் படித்து மகிழ்ந்திருக்கிறேன். J  எனக்குத் தெரிந்து யாரும் இதைபோல ஆழ்ந்து எழுதுவதில்லை. நிறைய விஷயங்கள், குறைந்த சொற்களில்!

இந்த புத்தகத்தில் நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று தெரியாமலேயே, ஒரு மிகச் சிறந்த வலைபதிவாளர் ஆக நான் கருதுபவர் எழுதியிருக்கும் புத்தகம் என்று உங்களது எழுத்தின் விசிறியாக வாங்கினேன். வலைபதிவு செய்வதும் புத்தகம் எழுதுவதும் வேறு வேறு விஷயம் என்று நினைக்கிறேன். சர்க்கரை தடவப்பட்ட, புகழுரைகளை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இது போன்றவை உங்களுக்கு ஏற்கனேவே நிறைய கிடைத்திருக்கிறது.

ஒரு வாசகனாக இந்தப் புத்தகத்தை அணுக நினைக்கிறேன். நீங்கள் விஷயங்களை முன்னிலைப்படுத்தும் விதம், தொழில்நுட்பம், தொழில் சார்ந்த மனப்பான்மை, எழுதியதை திருத்துதல், கலை ஆகியவற்றை குறித்த எனது மதிப்புரையை எழுதலாம் என்று நினைக்கிறேன். இதில் உங்களுக்கு ஒன்றும் மாறுபட்ட கருத்து இருக்காது என்று நம்புகிறேன். 

டாலர் நகரம் நீங்கள் எழுதிய தினப் பதிவுகளின் தொகுப்பு என்று நினைக்கிறேன். அதனால் அத்தியாயங்கள் ஒன்றோடொன்று இசைவுப் பொருத்தமற்றவையாக இருக்கின்றன. ஒரு கைதேர்ந்த எடிட்டர் இவற்றை சரி செய்திருந்தால் எல்லா அத்தியாயங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையாக இருந்திருக்கக்கூடும். 

அத்தியாயங்களுக்கிடையே பயணிக்கும்போது பலமுறை தடுமாறினேன். இப்போது நடக்கும் நிகழ்வுக்கும், அடுத்த நிகழ்வுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி. அடுத்த நிகழ்வு எப்போது நடந்தது, உடனேவா? சில நாட்களுக்குப் பிறகா? அல்லது கடந்து போன வாரத்திலா என்ற தடுமாற்றம்.

தேதிகள் குறிப்பிட்டிருக்கலாமோ என்னமோ, சரியாகத் தெரியவில்லை. அத்தியாயங்களில் தேதி குறிப்பிடுவது கட்டுரைக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எழுதி முடித்த பின்தான் சொல்லமுடியும் என்று தோன்றுகிறது. திரும்பவும் சொல்லுகிறேன்: ஒரு நல்ல எடிட்டர் இதையெல்லாம் வியத்தகு வகையில் செய்திருக்கக் முடியும். எடிட்டிங் என்பது ஒரு சிறப்புத்திறமை. சாதாரண எழுத்துக்களைக் கூட ஒரு நல்ல எடிட்டரால் மாபெரும் படைப்பாக மாற்றமுடியும். இப்படி நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். 

ஆனால் ஒரு சாதாரண எடிட்டரால் எழுத்துப் பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் சரிசெய்ய மட்டுமல்ல, இசைவுத் தன்மையையும் கூட்டவும், வழங்குதலை மேன்மைப்படுத்தவும் முடியும். 

புத்தகத்தின் கலையம்சம் பற்றிச் சொல்ல வேண்டுமானால் நிறங்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக அமைந்திருக்கலாம். கருப்பு வெள்ளையில் அமைந்திருந்தால், இன்னும் அருமையாகவும், விலை மலிவாகவும் இருந்திருக்கும். கருப்பு வெள்ளைப் படங்கள் கதையை மிகவும் எடுப்பாகச் சொல்லும்; சின்ன சின்ன விஷயங்கள் கூட பிரமாதமாகத் தெரியும் கருப்பு வெள்ளையில்; காலத்தைக் கடந்து நிற்கும் கருப்பு வெள்ளைப் படங்கள்;  எத்தனை காலமானாலும் மங்காது; காகிதத்தின் இரசாயானங்களை நம்பி இவை இருக்க வேண்டியதில்லை. 

உங்கள் பதிப்பாளரும் இந்த துறையில் புதியவர் என்று தோன்றுகிறது. பதிப்பு என்பது ஒரு சிறப்புத்துறை. வெகு சமீபத்தில் ஒரு பதிவாளர் அனுபவம் மிகுந்த பதிப்பாளர் ஒரு விஷயத்தை முன்னிலை படுத்துவதற்கும், புத்தகத்தை விநியோகிப்பதற்கும், புதிதாக வருபவருக்கும், அல்லது சொந்தமாக வெளியிடுபவருக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை தனது பதிவில் சொல்லியிருந்தார். 

திருப்பூர் பற்றி: எனக்கு திருப்பூரின் மேல் என்றுமே அளவிட முடியாத ஈர்ப்பு உண்டு. இந்த நகரத்தைப் பற்றி நான் முதன்முதலில் கேள்விப்பட்டது : மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத எண்ணிக்கையில் பென்ஸ் கார்களும் BMW கார்களும் ஓடும் இடம் என்று. ஒரு நகரத்திற்கு  என்ன ஒரு ஆச்சரியமான அறிமுகம்! எப்படி நிகழ்ந்தது இது? இதன் செல்வச் செழிப்பிற்கு என்ன காரணம்? செங்கல்பட்டு, சேலம், ஈரோடு போன்ற பழைய, மந்தமான நகரங்களை விட இது எப்படி மாறுபட்டது? எங்கிருந்து இப்படி ஒரு செல்வம் வந்தது?

இதற்குக் காரணமானவர்கள் யார்? நாம் விரும்புகிறோமோ, இல்லையோ நமது சமூகம் ஜாதிகளால் ஆனது. எந்த ஜாதி எத்தனையோ இடர்பாடுகளைக் கடந்து இங்கு தங்கள் பணத்தை முதலீடு செய்தது? அவர்களுக்கு பணம் எங்கிருந்து கிடைத்தது? 

தங்கள் நிலங்களை விற்றா? மூதாதையர்களின் சொத்துக்களிலிருந்தா? அரசிடம் குத்தகை எடுத்தார்களா? இங்கு இருக்கும் தொழிலாளர்கள் யார்? எந்த ஜாதிக்கு இதனால் பயனடைந்தது? முதலாளிகள் தங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்களை வேலைக்கு வைத்தார்களா, அல்லது வேறு ஆட்களையா? பூகோள அமைப்பு எப்படி? இதையெல்லாம் விளக்கும்படியாக சில குடும்பங்களின் கதைகளைச் சொல்லி புத்தகத்திற்கு காரம், சுவை சேர்த்திருக்கலாம்.

மாசுபடுவதைப் பற்றி மிகக் கடுமையாக எழுதியிருக்கிறீர்கள். இது மன்னிக்கமுடியாத குற்றம். இதற்கு முதலாளிகள் மட்டுமல்ல அரசும் குற்றவாளிதான்.  இதற்காக வேண்டுமென்றே அதிகப் பக்கங்கள் செலவழித்து விட்டீர்களோ என்று தோன்றுகிறது. வலைப்பதிவு வாரம் ஒரு முறை  வருவதால் ஒரே விஷயத்தைப் பற்றி நிறையப் பேசுவது சரி. புத்தகத்தில் தொடர்ந்து திரும்பத்திரும்ப படிப்பது அலுப்பாக இருக்கிறது. 

பல நல்ல விஷயங்கள் இந்த தொழிற்துறையினால் வந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் நகரம் இது. பல ஆயிரக்கணக்கான மக்கள் நன்மை பெற்றிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் இங்கு வேலை செய்து, தங்கள் வருமானத்தைச் சேர்த்து வைத்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். 

இந்தக் கதைகளையும் உதாரணத்துடன் சொல்லியிருக்கலாம். புதுப்புது மனிதர்கள் இங்கு வந்து, வேலை செய்து பணம் ஈட்டி, திருமணம் ஆகி, இங்கேயே நிலம் வாங்கி குடியேறி இருக்கிறார்கள். இவர்களைப் பற்றியும் சொல்லியிருந்தால் பல அத்தியாயங்கள் வெறும் புள்ளி விவரங்களாக மாறியிருக்காது.

உங்களைப் பற்றி, உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லியிருக்கலாம். உங்கள் வலைப்பதிவுகளைப் படிப்பதால் எனக்கு இவை தெரியும். ஆனால் ஒரு புதியவர் வந்து இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அங்கங்கே இடைவெளி இருப்பதுபோலத் தெரியும். உங்கள் வலைபதிவு வாசகர்களுக்காக இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளீர்களா? பொதுமக்களுக்காக இல்லையா? 

நான் எழுதிக் கொண்டே போகிறேன்.... நான் நினைத்ததைவிடக் கடுமையாக விமரிசித்துவிட்டேனோ? மன்னிக்கவும். இந்தப் புத்தகத்தைப் படித்து சில வாரங்கள் ஆகின்றன. ஒரு விசிறியின் உற்சாகத்துடன் உங்களுடைய வலைப்பதிவுகளை மிக விரும்பிப் படிப்பவன் நான். உங்களுடைய பழைய பதிவுகள் பலவற்றையும் படித்தவன். அதனால் பதிவுகளின் தரத்துடன் உங்கள் புத்தகத்தைப் பற்றிய மதிப்பீட்டை செய்கிறேன்.

நீங்கள் இதை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் கருத்துரை என்பதை எனக்கு முடிந்த அளவில் சிறப்பாகச் செய்ய நினைப்பவன் நான். 

ஒரு புத்தகத்தில் இருப்பதை விட மேலதிகமாகச் சொல்ல முடியும். எல்லாவற்றிலும் தனித்து நிற்பது விஷயத்தை எப்படிச் சொல்லியிருக்கிறீர்கள் என்பதும், தொகுத்து வழங்குதலும் தான்.

எல்லை மீறி இருந்தால் மன்னிக்கவும். ஆனால் நான் சொன்னதில் ஒரு சில நிச்சயம் நீங்கள் அடுத்த புத்தகத்தை வெளியிடும்போது உண்மையாகத் தோன்றும் என்று நினைக்கிறேன்.

இதை ஒரே மூச்சில் எழுதி முடித்துவிட்டேன்; எடிட் செய்யவில்லை. அதனால் எழுத்துப் பிழைகளையும், தெரியாமல் உங்களை நோகச் செய்திருந்தால் அதற்காக மன்னிக்கும்படியும்  கேட்டுக் கொள்ளுகிறேன். டாலர் நகரம் பலர் தங்களது கனவுகளை எப்படியோ நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும் ஒரு நகரத்தைப் பற்றிய உங்கள் புத்தகத்தைப் படித்து முடித்த மூன்று வாரங்களுக்குப் பின் என் மனதின் பிரதிபலிப்பை எழுதியிருக்கிறேன்.

அன்புடன்,
ராஜாமணி

மொழிபெயர்ப்பில் உதவியவர் =  திருமதி ரஞ்சனி நாராயணன் பெங்களூர்

Dear jothiji,

i bought it in chennai early january and read it about a month ago, after coming back to toronto where i have lived since 1973. i read this immediately after reading kanganam by perumal murugan & vettupuli by thamizhmagan. so invariably, i guess, some comparison to those two, in terms of flow and presentation, creeps in this note.

i started reading your blogs about a year ago, and liked them, particularly, for their incisive analysis of events. what you see, you write, clearly and with a sympathy. i still remember one blog which impressed me deeply, about a couple of your friends from the past - one about sons of rich families who misued govt benefits, a brahmin who is helping funeral ceremonies and such. and the numerous anecdotes relating to your deviars :). 

Nobody i know, writes so deeply, and with a conciseness - so much of a story told in so few words! 

so, i bought dollar nagaram as a fan of yours, already pre sold. not knowing what to expect of this book, from whom i considered a superb blogger. blogging regularly, and writing a book, are two different worlds, i think.  i am quite sure you do not want cheesy  sugar coated sycophantic praises, as you probably get enough of that. 

my approach to that, i thought, would be best from an approach of a reader to a book ie its presentation, technicality, professionalism, editting, art and such. hope you dont mind this, as i feel more comfortable with this type of analysis, than a straightford, 'love your story, can't wait for the next' :)

the book dollar nagaram is a compile of daily blogs i think, there is choppy presentation between chapters. a good editor would have smoothened it out, so that there is continuity from one chapter to the next. when i was moving between chapters, many a times i was lost, as to whether the next incident happened immediately, a few days later or weeks past. 

not sure if it would have been good to put dates. or not. one could gauge the effect of dating the chapters only after trying it out. again, maybe good editing would have done wonders. let me explain please - editting is a skillset by itself. a good editor can make an ordinary product into a masterpiece. i have seen that happen. but a normally competent editor, can not only correct typos, grammar, but also improve cohesiveness and presentation.

the art work. the colour could have been better. but what would have been superb (& cheaper) is black/white frames. the b/w pictures tell very effective stories, stand the test of time and do not fade with age and are not mercy to the chemistry of the paper in which it is printed. 

i suspect your publisher is also new to the game. publishing is a very specialized field, and even recently, another great blogger, has mentioned the huge difference an experienced publisher makes in the presentation & distribution of a book, as opposed to a novice or self publishing.

about tiruppur: always been fascinated by it. when i first heard about thirupur, i was told, that there were more benz/bmw per capita, in that town, than elsewhere in india. what an amazing introduction to a town. how did it come about that way? what caused its prosperity? how is it different from chinglepet  or salem or erode, all those ancient towns, stagnant. thiruppur came out of no where to riches. 

and then who are the people who did this. like it or not, we are a society of castes. who are the castes who took the risk and invested their money? where did their original funds come from? from sale of lands? ancestral property? govt contracts? and who are the labourers? again which castes profited? did the owners hire their own or others? and from geographically close by? and such? to reinforce this, some family stories of these folks, and such, would have added spice and flavour.

i felt, that you were very hard on the damaging effects of the pollution. i agree. it was an unforgivable crime. it was not only the owners, but also the government that was guilty. i dont know whether you spent too many pages on it deliberately. when you post it in blogs, a week's blogs on the same subject may be ok. but when it is read continuously, one gets a bit tired of repetition.

.. and many a good things came out of the industry. it brought pride to tamil nadu. lots and lots of people prospered. thousands of girls saved up and got married. these stories too could have been told..with examples. strangers who came, worked, prospered, married/bought farm land, left. would have humanized the somewhat statistical approach seen in many chapters.

a bit more about your family, background, and yourself would have been good. knew all these things from your blog. but for a stranger, there are gaps in the book, as i think it has been published for your blog readers. and not for the general public. no?

i am on a run here...and find that i have been more critical than intended. so sorry if i sound that way. as i said, it has been a few weeks since i read your book. and i do read your blogs with avid interest and fan fervour every time you publish it. and gone through many many of your old ones. so i think, i tend to judge the quality of the blog with the book.

this may not be what you were expecting, but is the best i feel i could do, in terms of feedback. the content of any book is many a times overlaps others. but what is unique is the style presentation and editing. 

please forgive me, if i have trespassed too far. but hopefully, atleast a part of the above, is valid, when you publish your next book. 

the above came to me in one sitting. i have not editted it :) and so apologies for any typo, errors and (unknowingly) any unintended hurts. this is more my reflection, three weeks after reading dollar nagaram, the city where everyone chases their dreams. by hook or by crook.

sincerely

Wednesday, November 21, 2012

அம்மாவுக்கு சும்மா ஒரு கடிதம்


தற்போது தமிழ்நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் மின்வெட்டு மற்றும் மின்சாரத்திற்கு பின்னால் உள்ள அரசியல் நிலவரங்கள். படிக்க  சொடுக்க, 

அதன் பாதிப்பில் உருவானதே இக்கடிதம்.  
                                                                            •••••••••••

மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களுக்கு

நலமாய் தான் இருப்பீர்கள் என்று நம்பும் வாக்காளன் எழுதும் கடிதம்.

ஏறக்குறைய 2000 வார்த்தைகள் உள்ள இந்த கடிதம் படிப்பவர்களுக்கே சற்று சலிப்பை தரக்கூடியது தான். ஆனால் 2000 வருடங்களுக்கும் அப்பாற்பட்ட தமிழர்களின் வரலாறு தாங்கள் ஆட்சி புரியும் இந்த காலகட்டத்தில், ஒவ்வொரு தொழில் வாழ்க்கையில் உள்ள தமிழனின் வாழ்க்கையும் ஒளியிழந்து போய்விட்டதே என்பதன் ஆதங்கமே இந்த கடிதம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

இந்த கடிதம் உங்கள் பார்வைக்கு வருமா? என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் அரசாங்கத்தின் பார்வையென்பது இன்றைய சூழ்நிலையில் இணையத்தின் மேல் அதிகம் இருப்பதென்பது மட்டும் எனக்கு நன்றாகவே தெரிந்தும் இந்த கடிதத்தை அவசர அவசியம் கருதியே எழுதுகின்றேன்.


அரசியல்வாதிகளின் உடல் நலமென்பது அவரவர் இருக்கும் பதவியோடு சம்மந்தப்பட்டது என்பதை நான் அறிவேன். ஆனால் எங்களைப் போன்றவர்கள் நலமாய் இருக்கின்றோம் என்று தாங்கள் நம்புகின்றீர்களா?

நீங்கள் நலமாய் எந்நாளும் வாழவேண்டும் என்று தான் விரும்புகின்றேன். நீங்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள ஜீவராசிகளுமே  நலமாய் வாழ வேண்டும் என்பது தானே தாங்கள் பின்பற்றும் வைணவ மதமே சொல்கின்றது. மதங்கள் எத்தனை சொன்னாலும் பின்பற்ற வேண்டிய மனிதர்களின் மனம் என்பது பொதுவானது தானே. 

ஒவ்வொருவரும் கடைபிடித்தால் தானே வாழ்க்கை என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

ஊடகங்களை அவதூறு வழக்கைச் சொல்லி பயத்தில் வைத்திருப்பது என் நினைவில் வந்தாலும்  இங்கே வெம்பிக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையை தினந்தோறும் நான் பார்த்துக் கொண்டேயிருப்பதால் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதத் தோன்றியது.

தவறில்லை தானே?

எனது கல்லூரி படிப்பின் இறுதி வருடத்தின் கடைசி நாளன்று கல்லூரியின் முந்தைய ஆண்டின் பட்டமளிப்பு விழா நடந்தது. அன்று முன்னாள் அமைச்சர் (திமுக) துரைமுருகன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எங்கள் கல்லூரி முதல்வரும் அவரும் ஒரு வகையில் உறவு கொண்டவர்கள். அவர் நிகழ்ச்சி முடிந்து விடைபெறும் சமயத்தில் எங்கள் முதல்வருடன் பேசிக் கொண்டிருந்த மரத்தடிக்கருகே நானும் நின்று கொண்டிருந்தேன்.. அமைச்சர் துரைமுருகன் விடைபெற்ற போது எங்கள் முதல்வரிடம் சொல்லிச் சென்ற வார்த்தை இன்னமும் என் மனதில் இருக்கிறது.  

"நாளை சட்டமன்றத்தில் முக்கிய நிகழ்வு ஒன்று நடக்கப்போகின்றது" என்றார். அப்போது எனக்கு புரியவில்லை.  பத்திரிக்கையில் பார்த்த போது தான் “பாஞ்சாலி சபதம்”  அரங்கேறியிருந்தiதை புரிந்து கொள்ள முடிந்தது. 

அன்று நடத்தப்பட்டது பயமுறுத்தலா? நாடகமா? பழிவாங்கலா?  இல்லை மிகைப்படுத்தலா? ஆதாயம் தேடிக்கொள்வதற்கான ஆரம்பமா? 

இது போன்ற பல கேள்விகள் அப்போது என் மனதில் வந்து போனாலும் அன்று உங்களுக்கு கிடைத்த முழுபக்க விளம்பரங்களும், தமிழ்நாட்டு மக்களிடம் உருவான தாக்கமும் இன்று வரையிலும் இருக்கத்தான் செய்கின்றது. ஆணாதிக்க உலகில் உங்களின் இன்றைய வளர்ச்சி என்பது  பிரமிப்பாகவே உள்ளது. 

“இந்த உலகில்  வாழ்ந்து காட்டுதலை விட மிகச் சிறந்த பழிவாங்குதல் வேறெதும் இல்லை” என்பதாகத் தான் உங்கள் வாழ்க்கையில் இருந்து நான் கற்றுக் கொண்டேன். ஆனால் பழிவாங்குவது மட்டும் தான் உங்களிடம் முதன்மையாக இருக்கின்றதோ என்று என் எண்ணத்தில் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. 

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த உலகம் நேற்றும் ஆண்களிடம் தான் இருந்தது.  நாளையும் அப்படித்தான் இருக்கும்.

வளர்ந்து விடுவாயா? என்பவர்களுக்கும் நான் வளர்ந்து காட்டுகின்றேன் என்பவர்களுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் இந்த தர்மயுத்தம் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து எனக்குத் தெரியாது.  ஆனால் ஆணாதிக்கம் என்பது தற்போது உடைந்து கொண்டே வருகின்றது என்பது மட்டும் சர்வ நிச்சயம்.

அன்று நீங்கள் என்ன சபதம் எடுத்தீர்களோ? 

ஆனால் நான் உடைத்து வந்து விட்டேன் பார் என்பதான உங்களின் இன்றைய அரசியல் வளர்ச்சியும், வளர்த்துக் கொண்ட ஆளுமையும் எவரும் பாராட்டக்கூடியதாக உள்ளது. ஆனால் உருவானது வளர்ச்சியா இல்லை வீக்கமா  என்பதையும் கணக்கில் வைத்து பார்க்க வேண்டியுள்ளது. 

எம்.ஜி.ஆர் வாள் கொடுத்து உங்களை அரசியல் களத்தில் அங்கீகரித்தார். அறிஞர் அண்ணா அமர்ந்த டெல்லி பாராளுமன்ற இருக்கையில் தாங்கள் அமர்ந்தது வரைக்கும் உங்களின் அரசியல் களமென்பது ஒற்றையடி பாதை தான்.  எம்.ஜி.ஆர் இறந்து அவர் சடலத்திற்கருகே தாங்கள் அமர்ந்து காட்டிய பிடிவாதம் முதல் அன்று உங்களை அவமானப்படுத்திய அத்தனை பேர்களின் அரசியல் முகத்தை  காணாமல் போகச் செய்தது வரைக்கும் உங்கள் பயணம் நீண்டதொரு முள்பாதை. 

நீங்கள் காட்டிய முனைப்பும், முயற்சிகளும் ஒவ்வொரு பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய பாலபாடம். ஆனால் ஆசிரியையாக இருந்து அற்புத பாடத்தை நடத்திக் காட்டூவீர்கள் என்று நம்பிய எங்களுக்கு இன்று அலங்கோல நிர்வாகத்தை அல்லவா காட்டிக் கொண்டு இருக்குறீங்க?.

ஜா அணி ஜெ அணி என்று பிரிந்து இரட்டை இலை சின்னத்தை நீங்கள்  கைப்பற்றியது முதல் தான் உங்கள் தார் சாலை பயணம் தொடங்கியது.  ஆனால் ராஜீவ் காந்தி என்ற மனிதரின் மரணம் தான் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தேசிய நெடுஞ்சாலை பயணத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தியது.

நினைவில் வைத்திருப்பீர்கள் தானே?  

கடந்து வந்த பாதையை அரசியல்வாதிகள் மறந்துவிடுவது இயல்பானது தான்.  அரசியலில் ஏணிகள் கிடைக்காதா என்று அலையும் மனிதர்கள் மத்தியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏணிகளே உங்களைத் தேடி வந்தது தான் உங்களுக்குண்டான ராசி.  உங்களை மகராசி என்றழைத்த தமிழ்நாட்டின் மக்களின் ராசியைத் தான் இனி சுபமங்களம் என்று பாட வைத்துக் கொண்டு இருக்கீறீர்கள்.  

"திருவாரூரில் இருந்து வெறும் மஞ்சள் பையோடு கிளம்பி வந்த தீயசக்தி கருணாநிதி" என்று வயசு வித்தியாசம் கூட பார்க்காமல் ஒவ்வொரு முறையும் முழக்கம் செய்வீர்களே? உங்கள் அகராதியில் அரசியல் எதிரி என்பவர்கள் அழிந்து போகவேண்டியவர்களா? உங்களும் அவருக்கும் என்ன அங்காளி பங்காளிச் சண்டையா?  எத்தனை ஜென்மத்து பகையிது.  நடிப்பா? நாடகமா? இல்லை தாங்கள் தப்பிப்பதற்கான ஒரு வழியா?

அவர் செய்தார். அவர் செய்யவில்லை. அவர் தான் காரணம் 

இந்த மூன்றும் தான் உங்களின் அரசியல் தாரக மந்திரமா?

இது போன்ற கீறல் விழுந்த வார்த்தைகளை இன்னும் எத்தனை நாளைக்குத் தான் சொல்லிக் கொண்டு இருக்கப் போகின்றீர்கள். சிறிய நிறுவனம் கூட தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் ஒவ்வொரு முறையும் காரணங்களைச் சொன்னால் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடுவார்கள். நிறுவனமே இப்படி என்றால் தமிழ்நாட்டின் மொத்த நிர்வாகத்தையும் உங்களிடம் கொடுத்து இருக்கின்றோமே? 

இனி நாங்கள் என்ன செய்ய முடியும்?

கலைஞரை குறித்து தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு மட்டுமல்ல. இந்திய அரசியலுக்கே நன்றாகவே தெரியும். சர்க்காரியா கமிஷன் முதல் இன்றைய அலைக்கறறை ஊழல் வரைக்கும் அவர் அரசியலில் கடந்து வந்த பாதை நீண்ட நெடியது. அவரின் குடும்பபாசத்தைப் பற்றி நீங்களே ஒரு பேட்டியில் கூட சொல்லியிருந்தீர்களே?

நீங்கள் மட்டுமல்ல?  

இன்னும் எத்தனை பேர்கள் தமிழ்நாட்டு அரசியலில் வந்தாலும் கலைஞருடன் அவர் காலம் முடியும் வரைக்கும் எவராலும் போட்டி முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா? 

நீங்கள் அரசியலை புத்தகத்தில் தான் படித்திருப்பீர்கள்.  அவர் ஒவ்வொரு காலகட்டத்திலும் களத்தில் நின்று கற்றுத் தெளிந்தவர்.  அவர் ஒரு காட்டு மரம்   ஒரே ஒரு வாக்கியத்தில் தமிழ்நாட்டை கொந்தளிக்கவும் செய்வார். வேறொரு வார்த்தையில் ஊடகம் திரித்து எழுதி விட்டது என்பதாகவும் பேசுவார். 

குறைகளுடன் இருக்கும் அவரை அவர் குடும்பம் ஏற்றுக் கொண்டதைப் போல அவருக்காக, அவரை  நம்பியும் லட்சக்கணக்கான தொண்டர்களும், பொது ஜனமும் அவர் வார்த்தைகளை வேத வாக்காக ஏற்றுக் கொண்டு அவர் தான் எங்கள் தலைவர் என்று தான் வாழ்கிறார்கள்.  உங்களால் அவரை என்ன செயது விட முடியும்?   நட்ட நடு ராத்திரியில் அவரை கைது செய்தீர்கள்? என்ன நடந்தது?

அவர் ஊழல்வாதி என்றால் இப்போது கர்நாடக நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டு இருக்கின்றீர்களே?  ஒரு வழக்கை எப்படியெல்லாம் இழுத்தடிக்க வேண்டும் என்ற வித்தையை எதிர்கால வக்கீல்கள் உங்களின் தற்போதைய அனுபவத்தை பாடமாக படித்துக் கொள்ள முடியும்.

அரசியல் என்பது ஒரு முதலீடு செய்யும் தொழில் போன்றது என்பதை தற்போது மக்களும் எதார்த்த சினிமாவை போலவே ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டார்கள் என்பது உங்களும் தெரியும் தானே?

முதல் முறை நீங்கள் ஆட்சிக்கு வர .காரணம் அமரர் ராஜீவ் காந்தி. இந்த முறை வந்ததற்கு காரணம் கலைஞர் மு. கருணாநிதி. ஒவ்வொரு முறையும்  நல்லது செய்வார்கள்  என்ற நம்பிக்கையில் எவரும் ஓட்டுப் போடுவதில்லை. இவர் மீண்டும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே மட்டுமே மாற்றத்தை எதிர்பார்த்து தங்கள் ஒட்டுக்களை  குத்துகிறார்கள்.

ஆனால் இந்த முறை ஆட்சிக்கு வந்த தாங்கள் தமிழ்நாட்டின் மக்கள் முகத்தில் தொடர்ச்சியாக குத்திக் கொண்டேயிருக்கிறீர்களே இது நியாயமா?

இந்த முறை உங்கள் கட்சி ஜெயித்து வந்த போது திருப்பூர் தொழில் வளர்ச்சியில் தாங்கள் காட்டிய அக்கறை என்னை வியப்பில் ஆழ்த்தியது. எதிர்கால நம்பிக்கையை அதிகப்படுத்தியது.

பதவியேற்பு விழா நடப்பதற்கு முன்பே உங்களின் வேகம் என்னை திகைக்க வைத்தது.  திருப்பூரில் காட்டிய உங்கள் அக்கறை தமிழ்நாடு முழுக்க இருக்கும் என்று நம்பினேன். கடந்த கால அனுபவங்கள் உங்களை மாற்றியுள்ளது என்பதை மனதார நம்பினேன்.

ஆனால் நான் வைத்திருந்த நம்பிக்கையின் கை இழந்து அம்பி என்னை எப்போதும் நம்பாதே என்று தாங்கள் சொல்வது போல் இருக்கின்றது.  முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உதவியாளர் பொன்ராஜ் உங்கள் அருகே இருப்பதாகவும், கற்று அறிந்த பல அறிஞர் பெருமக்கள் உங்களுக்கு உதவுகிறார்கள், திட்டங்கள் விரைவாக தீட்டப்படுவதாகவும், தகவல்கள் வந்தன.  ஆனால் தெளிய வைத்து தொடர்ச்சியாக அடித்துக் கொண்டுருப்பது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

நம்பமுடியாத அளவுக்கு தமிழ்நாட்டின் வளர்சசி செங்குத்தாக ஏறிவிடும் என்றும் ஊடகங்கள் செய்திகளை பரப்பின.  வராது வந்த மாமணியோ என்று யோசித்தேன். உண்மைதான் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி செங்குத்தாகத்தான் ஏறியுள்ளது. இன்னும் நாலடி எடுத்து வைத்தால் கருட புராண காட்சிகளை பார்த்து விடலாம். 


இன்று இருட்டுக்குள் இருந்து தொழில் துறையினர் அழுது கொண்டு வாழும் இந்த வாழ்க்கையின் விசும்பல்கள் உங்கள் போயஸ் தோட்டத்திற்கு எட்டுமா? மிக குறுகிய காலத்திற்குள் தமிழ்நாட்டை இருண்ட உலகமாக மாற்றிய பெருமை உங்களையே சேரும். பதவியேற்றது முதல் பணிகளை தொடங்கி இருந்தால் கூட இன்று பாதி கிணறு தாண்டியுள்ளோம் என்று நம்பிக்கையில் காத்திருக்க முடியும். வடிவேல் சொன்ன கிணறே காணவில்லை என்பது போலத்தான் இருக்கிறது.

எத்தனை அதிகாரிகளின் மாற்றங்கள்?

எத்தனை அமைச்சர்களின் மாற்றங்கள்?

ஆனால் என்ன உருப்படியான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தான் இன்று வரையிலும் புரியாமல் மர்மமாக இருக்கின்றது.


ஒரு அதிகாரி சீட்டில் உட்காரும் போதே இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பதவி? என்று யோசிக்கும் போது அவருக்கு என்ன தான் செய்யத் தோன்றும்?நாள் காட்டி தாளை கிழித்து மதிய சாப்பாட்டுக்கு காத்திருக்கத் தான் தோன்றும்.

அமைச்சர்கள் என்பவர்கள் தலையாட்டி பொம்மையா? இல்லை உங்கள் முன்னால் தலையை மட்டும் காட்ட வேண்டியவர்களா?  சட்டமன்றத்தில் உங்களைத் தவிர வேறு எவருமே பேசக்கூடாது என்பது போன்ற சட்டதிட்டங்கள் போடப்பட்டுள்ளதா? அப்புறம் எதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள்? 

அதென்ன உங்கள் முன்னால் பொத்தென்று விழுபவர்கள், பம்மிக் கொண்டு இருப்பவர்கள், பயத்தோடு பார்ப்பவர்கள் என்று மிகப் பெரிய அடிமை பட்டாளத்தை உருவாக்கி வைத்து இருக்கின்றீர்களே? இவர்களுக்கு ஏதும் பயிற்சி பட்டறை இருக்கின்றதா? உலக மகா நடிகனான சிவாஜி கணேசனையும் மிஞ்சி விடுவார்கள் போல.

யார் எந்த துறையில் இருக்கின்றார்கள் என்றே தமிழகத்திற்கு தெரியுமா? என்று யோசிக்கத் தோன்றுகின்றது.

பம்மிக் கொண்டுருப்பவர்களும், உங்களை வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா அம்மம்மா என்று என்று அழைப்பவர்களும் தான் அமைச்சர்கள் என்றால் தமிழ்நாடு முழுக்க அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடலையே மாநில கீதமாக அறிவித்து தினந்தோறும் பள்ளிக்குழந்தைகளை பாடவைத்து வகுப்புகளை தொடங்கச் சொல்லாமே?

எளிய மனிதர் காமராஜரை உங்களுக்குத் தெரியும் தானே? 

உங்களைப்போல கான்வென்ட் படிப்பு படித்தவர் அல்ல. பக்கா கிராமத்தான் என்பார்களே? அது போன்ற தோற்றம் தான்.

இன்று மூன்று வெள்ளூடைய மாற்றிக் கொண்டு வரும் அரசியல் தலைவரல்ல.

என்னவெல்லாம் இந்த தமிழ்நாட்டுக்குத் தேவை என்று பார்த்து பார்த்து செய்த பலனைத் தான் அவருக்குப் பினனால் வந்த திராவிட கட்சிகள் அனுபவித்தன.

உங்கள் தலைவர் எம்.ஜி.ஆரை இன்று வரையிலும் படித்தவர்கள் ஒரு தலைவராகக்கூட ஏற்றுக் கொள்ள தயாராயில்லை.  

ஆனால் அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட, கிராமத்து மக்கள் அத்தனை பேர்களும் அவரைத் தவிர வேறு எவரையுமே தலைவராக ஏற்றுக் கொள்ளவே விரும்பவில்லை என்ற உண்மை உங்களுக்குப் புரியுமா?

காமராஜர் தமிழ்நாடு முழுமையாக முன்னேற என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தார்.  அதையே சுயநலமின்றி செய்தும் காட்டினார். ஆனால் எம்.ஜி.ஆர் இய்லபான சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையில் அரசாங்க கொள்கைகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் மட்டும் அதிக கவனமாக இருந்தார் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?. 

மக்களுக்குத் தேவையான அடிப்படை விசயங்களை எப்போதும் சிறப்பாகவே வைத்திருந்தார். அதனால் அல்லல்படுவோருக்கு ரட்சகராகத் தெரிந்தார். எம்.ஜி.ஆர் கலைஞர் அளவுக்கு மிகப் பெரிய புத்திசாலி இல்லை தான்.  கலைஞரின் தந்திரம் மறைமுகமானது. ஆனால் எம்.ஜி.ஆரின் பார்வை அவரது உதவிக் கரங்களைப் போலவே வெளிப்படையானது. இது அரசியலை கவனிக்கும் அத்தனை பேர்களுக்குமே தெரிந்த உண்மை தானே..

ஆனால் புத்திசாலிகளால் மட்டும் தான் ஆள முடியுமா? என்பதை உடைத்துக் காட்டி எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் வரையிலும் கலைஞரால் கூட எழ முடியவில்லையே?  எனக்கு போடும் ஓட்டு அவருக்கு ஒப்படைக்க என்று கெஞ்சும் அளவுக்குத் தானே கொண்டு வந்து நிறுத்தியது. இதனால் அவரை மக்கள் தலைவர் என்று அழைக்கின்றார்கள்..

உங்களுக்கு கலைஞரைப் போல குடும்ப பாரங்கள் இல்லை. அழுத்தங்கள் இல்லை. பாசப் போராட்டத்தில் மதியிழக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. தொடக்கம் முதலே நீங்கள் தங்க ஸ்பூன் வாழ்க்கை வாழ்ந்தவர் தான். ஆசைக்கே ஆசைபடும் அளவுக்கு உங்களின் அழகும், அறிவும் குறித்து அனைவரும் அறிந்ததே.

ஆனால் ஆட்சி புரியத் தெரியவேண்டுமே? ஆட்சியினால் மக்களுக்கு பலன் சென்றடைய வேண்டுமே? கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் முதல் முறை ஆட்சிபுரிந்த அந்த ஐந்தாண்டுகளே போதுமானதே? 

முதல்முறை ஆட்சிக்கு வந்த போது உங்களைப் பார்க்க வந்தவர்கள், வரவழைக்கப்பட்டவர்கள், வந்தே ஆக வேண்டும் என்று கட்டளையிட்டு கோட்டைக்கு, வீட்டுக்கு வந்தவர்கள் அத்தனை பேர்களும் நனைந்த ப்ளாஷ் மழையை நானும் பத்திரிக்கையில் படித்துள்ளேன். கலைஞரும், எம்.ஜி.ஆரும் திரைப்படத்துறையில் இருந்து வந்தவர்கள் தான்.

ஆனால் அரசியலுக்கு வந்தவுடன் அது வேறு இது வேறு எளிதாக புரிந்து கொண்டார்கள். ஆனால் நீங்களோ எல்லாமே ஒன்று தான் மக்களுக்கு இன்று வரையிலும் உணர்த்திக் கொண்டே இருக்கிறீர்கள? 

சில மாதங்களுக்கு முன்பு உங்கள் ஆட்சியின் ஓராண்டு ஆட்சியின் நூறாண்டு சாதனை என்று மிகப்பெரிய செலவு செய்து இந்தியா முழுக்க தெரிவிக்கச் செய்தீர்கள்.  மிகச் சரியாகத்தான் செய்து இருக்கீங்க.  கடந்த ஓராண்டு காலத்தில் வாழ்ந்த அத்தனை தமிழ்நாட்டின் மக்களின் வாழ்வாதாரத்தை அடுத்த 99 ஆண்டுகள் வந்தாலும் மீட்டெடுக்க முடியாத அளவுக்கு செய்தது உங்களின் சாதனை தானே.?

விலைவாசி உயர்வு.  அதற்கு மத்திய அரசாங்கமே  காரணம்.
பால்விலை உயர்வு.  கலைஞர் செய்த தவறு. 
பேரூந்து கட்டணம் உயர்வு. கலைஞர் செய்த தவறு. 
மின்சாரப் பற்றாக்குறை. அதுவும் கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றாமல் வைத்திருக்கும்  திட்டங்கள் 

இதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கின்றீர்களே? நடிகர் வடிவேலிடம் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றீர்களோ?என்று சந்தேகமாக இருக்கின்றது. 


ஆனால் மதுக்கடைகளை கலைஞர் தானே அறிமுகப்படுத்தினார்.   அதையும் உங்கள் பாணியில் மூடுவிழா நடத்திவிட வேண்டியது தானே?

ஏனிந்த ஓரவஞ்சகம்?

வாழ முடியாதவர்களின் வாழ்க்கையில் இந்த மது அரக்கனும் நுழைந்து பெண்களின் வாழ்க்கையில் இருக்கும் கொஞ்ச மகிழ்ச்சியையும் பறித்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா? பெண்ணுக்குத் தானே மற்றொரு பெண்ணின் துயரம் புரியும்?

குறைந்தபட்சம் இந்த மின் துறையிலாவது போடப்பட்ட அதிகாரிகளை மாற்றாமல் அவரை நம்பி பொறுப்பை கொடுத்து இருப்பீர்களா? எவரையாவது சுதந்திரமாக செயலபட அனுமதித்து இருப்பீர்களா? கொள்கை ரீதியான மாற்றுக் கருத்து இருந்தால் உங்களுடன்  உரையாடும் தைரியத்தை உங்கள் அதிகாரவர்க்கம் பெற்று இருக்கின்றதா என்று தனிமையில் இருக்கும் போது  யோசித்துப் பாருங்கள்.  

காரணம் நீங்கள் வாழும் வாழ்க்கை, நீங்கள் எடுக்கும் முடிவுகள் அத்தனையும் தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியவை. 

யோசித்து இருப்பீர்களா?

உங்களுக்குத் தான் குட்டிக்கதை சொல்வது தான் ரொம்ப பிடிக்குமே?  நானும் ஒரு கதை உங்களுக்குச் சொல்கின்றேன்.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம். திடீரென்று மக்களுக்கு ஒரு உத்தரவு போட்டாராம். ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து விளைச்சல் முடிந்த பிறகு ஒரு மூட்டை அரிசி கொண்டு வந்து கொடுத்து விட்டு அரண்மனையில் இருந்து ஒரு மூட்டை நெல் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தாராம். மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் மீற முடியாமல் தவித்தார்களாம். . ஆனால் ராஜா சாகும் தருவாயில் மகனை அழைத்து மக்கள் என்னை நல்ல ராஜா என்று சொல்ல வேண்டும் என்று விரும்பினாராம். 

நீங்க கவலைப்படாதீங்க மன்னா. நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று இளவரசன் சொன்னாராம்.  மன்னரும் இறந்து விட்டாராம்.  பட்டத்துக்கு வந்த இளவரசன் மக்களுக்கு ஒரு உத்தரவு போட்டானாம். ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு மூட்டை அரிசி கொண்டு வந்து கொடுத்து விட்டு அரண்மனையில் இருந்து ஒரு மூட்டை உமி வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்றாராம்.  அப்போது மக்கள் ராஜாவே பரவாயில்லை போலும் என்றார்களாம்.

தற்போதைய உங்களின் ஆட்சியும் இப்படித்தான் இருக்கிறது முதல்வரே.

ஒரு ஆட்சிக்கு வருபவர்களிடம் இந்த மக்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள்? 

ரேஷன் பொருட்கள், பொது சுகாதாரம், கல்வி, போக்குவரத்து வசதிகள், தொடர்ச்சியான பராமரிப்பு. கண்டிப்பான சட்டம் ஒழுங்கு.

ஆனால் தற்போது எப்படி இருக்கின்றது.

முக்கியமான சட்டம் ஒழுங்கே இன்று மக்களுக்கு சவாலாக இருக்கிறது.

கலைஞர் கொண்டு வந்தது என்பதற்காகவே அற்புத திட்டமான சமச்சீர் கல்வியை தற்கொலையே செய்ய வைத்து விட்டீர்கள். தாங்கள் அமைத்த குழுவில் இடம் பெற்ற ஆட்களைப் பார்த்த பொழுதே நீங்கள் ஒரு படுபயங்கர மேதை என்பதை புரிந்து கொண்டேன்.  

வெளியுலகத்திற்கு அதிகம் தெரியாமல் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ள நூலகத்தை பத்திரிக்கையில் படித்து இருக்கின்றேன். நீங்களே ஒரு (ஆங்கில) புத்தக வாசிப்பு பிரியர் என்பதையும் புரிந்துள்ளேன். ஆனால் சென்ற ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த அண்ணா நூலககட்டிடத்தில் தாங்கள் காட்டிய பரிவும் பாசமும் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்குமே மறக்க மாட்டார்கள். உங்கள் தீர்க்கதரிசனமென்பது திடுக்கிடவைப்பது என்ற அர்த்தம் தானோ?

ஈழம் முதல் இன்றைய கூடங்குளம் வரைக்கும் உங்களின் கொள்கை என்ன என்பதை தமிழ்நாட்டில் உள்ள சின்ன குழந்தைக்கு கூட தெரியுமே? அரசியலில் அந்தர் பல்டி என்பது உங்களுக்கு பிடித்த வார்த்தையா? :மூவரின் தூக்குத் தண்டனை குறித்து நீங்கள் சொன்ன எனக்கு அதிகாரம் இல்லை என்பதன் பின்னால் உள்ள அர்த்தத்தை விபரம் தெரிந்தவர்கள் மட்டும் தங்களுக்குள் நகைத்துக் கொண்டது உங்களுக்குத் தெரியுமா?

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் நேரிடையாக, மறைமுகமாக தமிழ்நாட்டு மக்களிடம் உருவாக்கிய தாக்கங்கள், உருவான மறுமலர்ச்சி போன்றவை குறித்து உங்களால் புரிந்து கொள்ள முடியுமா? 

காமராஜரை பலமுறை பிரதமர் பதவி தேடி வந்தது.  ஆனால் இன்று உங்கள் கனவே அதுவாக இருப்பதால் முடிந்த வரைக்கும் முய்ற்சிப்போம் என்று நீங்களும் முன்னேறிக் கொண்டே இருக்கீங்க. உங்கள் ஆசை நிறைவேற என்னுடைய வாழ்த்துகள். உங்கள் நண்பர் குஜராத் மோடியைப் போல முதலில் மாநில மக்களின் அன்பை பெற முயற்சியாவது செய்யுங்க. 

ஆனால் பாதிக்கப்பட்டு அழுது கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் கண்ணீரில் தான் நீங்கள் நடந்தபடி தான்  பிரதமர் பதவியை நோக்கி போய் கொண்டுருக்கீங்க என்பதையும் உங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் முதல்வரே.

கலைஞர் கொண்டு வந்த மற்றொரு அற்புதமான திட்டமான உழவர் சந்தையின் இன்றைய நிலைதான் என்ன? 

தமிழ்நாட்டை விவசாயிகளின் மாநிலமாக மாற்றுவேன் என்று சூளுரைத்தீர்களே? ஒரு விவசாயின் கண்ணீரை அறிய ஏழையாக பிறக்க வேண்டியதில்லை.  அவர்களின் வாழ்க்கையை ஒரு நாள் வாழ்ந்து பார்த்தாலே போதுமானது. 


உங்களுக்கென்ன? 

தடையற்ற மின்சாரம். நினைத்தால் கொடை நாடு.  அலுத்துப் போனால் பையனூர் பங்களா,  இதற்கு மேலும் இருக்கவே இருக்கும் சாமி,  பூதங்கள், ஆச்சாரங்கள், அனுஷ்டானங்கள், யாக வேள்விகள்.

ஆனால் தற்போது தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவருமே தங்கள் வாழ்க்கையை தீயின் மேல் நின்று கொண்டு வாழ்வது போலத்தான்  வாழ்ந்து  கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் கருகல் வாடை எப்போது உங்களுக்கு புரியும் என்பதே தெரியவில்லை.

சேலத்துக்கருகே ஒரு நெசவாளார்கள் வாழும் கிராமத்தில் வீட்டுக்கு வீடு கருப்புக் கொடி கட்டி வைத்து தீபாவளி பண்டிகையை புறக்கணித்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்திருந்தால் உங்களுக்கு உண்மையான மக்களின் அவலம் புரியும்.

“என் மகன் மற்ற பசங்க வெடிக்கின்ற பட்டாசு பார்த்து என்னிடம் வந்து அழுகின்றான்.  நான் என்ன செய்ய முடியும்?. இந்த மின் தடையில் வேலை செய்றதே மூணு நேரம் சாப்பிட போதல” என்றார்.  

கொண்டாட வேண்டிய என் பண்டிகையில் துக்கம் வந்து சூழ்ந்து விட்டது.  இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் என்னைப் போன்றவர்களின் கதியும் இப்படி வந்து விடுமோ என்று தான் யோசித்துக் கொண்டுருக்கின்றேன். .

ஒரே ஒரு முறை எம்.ஜி.ஆருக்கு அவரின் திரைப்பட வளர்ச்சிக்கு உதவிய பாடல் வரிகளை ஒரு தொகுப்பாக உருவாக்கி கோட்டைக்கு வரும் போது பயணிக்கும் காரில் கேட்டு வாருங்கள்.  மக்களின் நலத்தை மட்டுமே பிரதிபலித்த அந்த பாடல் வரிகளைத் தவிர வேறு ஏதும் தேவையா?

ஏன் அவரை ஏழை மக்கள் இன்றும் கொண்டாடுகின்றார்கள்?  என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர் உருவாக்கிய இரட்டை இலையே இன்றும் உங்களின் அரசியல் வாழ்க்கையை வாழ் வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதன் அர்த்தத்தை உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இங்கே படித்தவர்களுக்கும், பதவியில் இருப்பவர்களுக்கும் எது குறித்த அக்கறையும் இல்லை.  நடுத்தர வர்க்கத்திற்கோ தங்கள் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளவே நேரம் போதவில்லை. எங்கே போய் சிந்திப்பது? ஆனால் படிக்காத, பாமர, கிராமத்து ஜனங்களுக்கு எந்த செய்திகளும் முழுமையாக போய்ச் சேர்ந்துவிடுவதில்லை. நாளுக்கு நாள் சமூகத்தில் இந்த மக்கள் ஒதுங்கி போய்க் கொண்டேயிருப்பதாவது தெரியுமா?

மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் அவர்களே, இது உங்களுக்கு என்னுடைய அறிவுரைக்கடிதம் அல்ல.

எங்கள் வாழ்க்கைபாடுகளை தினந்தோறும் அறியும் போது. அழிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உருவான கடிதம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் பட்சத்தில் எனக்கு மகிழ்ச்சியே.

காரணம் இந்த உலகில் வாழ முடியாதவர்கள் விடுகின்ற கண்ணீர் இறுதியில் ஒரு சாம்ராஜ்யத்தையே மாற்ற வல்லது என்பதையும் தாங்கள் படித்த வரலாற்று புத்தகங்கள் சொல்லியிருக்குமே?இதை எப்போதும் தாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

வாழ்க நலமுடன் 

இப்படிக்கு

(வாக்கு மட்டுமே போடத் தெரிந்த) வாக்காளன்


ஈழம் தொடர் எழுதிய போது கலைஞருக்கு எழுதிய கடிதம்

Sunday, March 06, 2011

கடிதம் (மட்டும்) எழுதும் கலைஞருக்கு தமிழருவி மணியன் எழுதும் கடிதம்


தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்!

என் பால்ய காலந்தொட்டு உங்கள் அரசியலை நான் பார்த்து வருகிறேன். நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை!

தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப்படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள்.காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப்பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமையாக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்!



ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்திலிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது - உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது!  ஓர் உறையில் இரு வாட்கள் இருக்கலாகாது என்று சிந்தித்த நீங்கள் செயற்குழுவின் ஆதரவைத் திரட்டி, செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே விரட்டி, தனிக்காட்டு ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்ட மகத்துவத்தை யார் மறக்கமுடியும்? 

அரசியல் விளக்கங்களை எழுதவிடாமல் அன்றைய 'இந்திரா தர்பார்’, செய்தித் தணிக்கையைக் கொண்டு வந்தபோது, 'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்ற முல்லைக் கவி பாடல் மூலம் இலக்கியப் போர்வையில் அரசியல் வகுப்பு நடத்திய உங்கள் ஆற்றல் யாருக்கு வரும்? 'மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது’ என்ற மறக்கமுடியாத வசனத்தைப் 'பூம்புகார்’ திரைப்படத்தில் தீட்டிய உங்கள் மனசாட்சி முற்றாக உறங்கிப் போனதுதான் தமிழருக்கு வாய்த்த சாபம்.

'தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில், தமிழ் வீரம் போதித்த அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்ற எனக்கு அந்த உணர்வும் மழுங்கி விடுமேயானால், நடைப்பிணம் நிகர்த்தவனாகி விடுவேன்’ (கலைஞர் கடிதம் தொகுதி - 5) என்றீர்களே,  எந்தெந்த வகையில் நீங்கள் பெரியாரையும், அண்ணாவையும் இன்று பின்பற்றுகிறீர்கள் என்று எங்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா?

'சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா?

ஐந்து கொள்கைகள்தான்.

கடவுள் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டும். காங்கிரஸ் ஒழிய வேண்டும். காந்தி ஒழிய வேண்டும். பார்ப்பான் ஒழிய வேண்டும். 

அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான் (இறுதிப் பேருரை- 19-12-73) என்றார் பெரியார். இந்த 5 கொள்கைகளில், தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில் பயின்ற நீங்கள் இன்று எதைப் பின்பற்றுகிறீர்கள்? மஞ்சள் துண்டு எந்தப் பகுத்தறிவின் அடையாளம்? சாய்​பாபாவை வீட்டில் வரவேற்றுப் பேசியதும், உங்கள் வீட்டார் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை தந்த பாடமா? 

தன்னை வாழ்த்தினால் 'நண்பர்’ என்று புகழ்வதும், விமர்சனம் செய்தால் 'பூணூல்’ என்று எள்ளி நகையாடுவதும் எந்த வகையில் பார்ப்பன எதிர்ப்பு? கஸ்தூரிபாயைத் தன் வழியில் திருப்பியவர் காந்தி.நாகம்மையையும், மணியம்மையையும் தன் மனதின் போக்குக்கேற்ப மாற்றியவர் பெரியார். வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில் கொண்டுவருவேன் என்பது நகைப்​புக்குரியது அல்லவா! பக்திப் பரவ​சத்தில் கோயில் கோயிலாகச் சுற்று​வது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!

அண்ணா இறுதி நாள் வரை காங்​கிரஸை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை எதிர்க்க வில்லை. ஆனால், நீங்கள் இரண்டு நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்கவில்லையே; '

என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல, வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும், அப்​போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும்  அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்​கொண்டிருப்பேன். மரணப் படுக்​கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்​டிருக்​கும். அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை. 'அண்ணா! அண்ணா!’ என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புகள் இறுதியாக அடங்​கும்’ (கலைஞர் கடிதம் தொகுதி - 5) என்று சொன்ன நீங்கள் அண்ணா எதிர்த்த காங்கிர​ஸின் உறவுக்காக ஏங்கி நின்றதும், நிற்பதும் நியாயந்தானா கலைஞரே?

'சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக வெட்டிக் கடலில் எறிவது போன்ற எந்தக் கொடுமையையும், கொண்ட கொள்கைகளுக்காகத் தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக எடுத்துக்கொண்டுள்ள சூளுரை’ என்று சொன்ன கலைஞரே... உங்களால் ஈழத் தமிழருக்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம்கூட இருக்க இயலவில்லையே? எதையுமே நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள். உணர்வுததும்பப் பேசுகிறீர்கள்... ஆனால் எழுத்துக்கும் பேச்சுக்கும் எதிராகவே நடக்கிறீர்கள். அது ஏன்?

'முந்திரா ஊழல் 

முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிந்த விவகாரம். அமீர்சந்த் பியாரிலால் விவகாரம், அதிலே சிக்கிக் கொண்டு தவித்த தவிப்பு, இதெல்லாம் ஈரேழு பதினாலு உலகமும் சிரிப்பாய்ச் சிரித்ததை யாரும் மறந்து விடவில்லை’ என்றும் 'காங்கிரஸ் மாளிகை பாழடைந்த மண்டபமாகி விட்டது. அதிலே வெளவால்​கள் குடியேறத்தான் செய்யும்’ என்றும் (கலைஞர் கடிதம், தொகுதி -
1) 1968-69-களில் உடன்பிறப்புகளிடம் கடிதங்கள் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பைக் கடுமையாக விதைத்து​விட்டு, 1971 தேர்தலில் அதே காங்கிரஸைக் கட்டித் தழுவியபடி களத்தில் நின்றீர்களே... அந்த நட்புக்குச் செலுத்திய நன்றிதான் கழகத்தின் மீது காங்கிரஸ் பொழிந்த புகழு​ரைகள்(!).

நீங்கள் பதவிப் பல்லக்கில் பவனி வருவதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் தோள் கொடுத்தால் காங்கிரஸ் சமதர்மம் இனிக்கும். சுமப்பதை விட்டுவிட்டு,அவர்களும் உங்களோடு சேர்ந்து பல்லக்கில் சவாரி செய்ய நினைத்தால் காங்கிரஸின் ஆதிக்கம் கசக்கும்.

 'சமத்துவம் இன்மையே... உனக்குப் பெயர்தான் இந்து மதமா?’ என்று கேட்டார் அண்ணல் அம்பேத்கர்.

'சுயநலமே...உனக்குப் பெயர்தான் தி.மு.கழ​கமா?’ என்று கேட்கத் தோன்றுகிறது கலை​ஞரே! 'பதவிகளுக்காக, பவிசுகளுக்காக, அந்தஸ்துகளுக்காக, அதிகாரங்களுக்காக இந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கிற இழி செயலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற ஒரு சாதாரணத் தொண்டன்கூடத் தயாராக இல்லை’ (முரசொலி 7-7-1981) என்று வீர முழக்கமிட்டவர் நீங்கள். ஆனால், ஈழம் எரிந்தபோது,நம் இனம் கரிந்தபோது களத்துக்கு வராமல் பாசறையிலேயே பதுங்கிவிட்டது ஏன் கலைஞரே? 'தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி’ என்று பரவசம் பொங்கப் புகழ்மாலை சூட்டிய நீங்கள், வீரத்தின் விளைநிலம் பிரபாகரனை ஈன்ற பார்வதி அன்னையை மனிதநேயமின்றி விமான நிலையத்தில் பாதம் பதிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்​பிய இந்திய அரசின் வன்கொடுமைக்கு எதிர்ப்புக்​குரல் எழுப்பாதது ஏன் கலைஞரே? 

பதவி நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள சோனியா காந்தி என்னும் 'சொக்கத் தங்கத்தின்’ கருணைப் பார்வைக்கு இவ்வளவு தூரம் முதுகு வளைந்திருக்க வேண்டுமா முத்தமிழறிஞரே!

கலைஞரே... கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இரண்டு முறை மட்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டீர்கள். பிரபாகரன் சடலம் என்று ஒரு சடலத்தை ஊடகங்கள் ஓயாமல் காட்டிக் கொண்டிருந்த போது, உலகத் தமிழர்கள் செய்வதறியாது சோகம் கனக்க விழிநீர் வெள்ளமாய்ப் பெருக்கிய போது, தள்ளு வண்டி​யில் அமர்ந்தபடி சோனியாவிடம் உங்கள் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் அமைச்சர் பதவி கேட்டு அலைக்கழிந்தீர்கள். அதற்குப் பின்பு ஆயிரம் பிரச்னைகள் தமிழகத்தில் அரங்​கேறின. ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை அன்றாடம் மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டனர்.

இன்று வரை 400- க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் கைநோக மன்மோகன்சிங் அரசுக்குக் கடிதம் எழுதிக் கடமை​யாற்றினீர்கள். இப்போது இரண்டாவது முறை​யாக முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் போர்வையில் புதுடெல்லி சென்று ஆ.ராசாவைக் காக்கவும், காங்கிரஸ் கூட்டணி நிலைக்கவும் அரும்பாடு பட்டீர்கள். உங்கள் கொள்கைப் பிடிப்பு, நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் சிலிர்க்கச் செய்கிறது கலைஞரே!

''எந்தப் பதவியானாலும், எந்த மட்டத்திலா​னாலும் அதனைத் தேடிப்போய் நெருக்கடி கொடுத்துப் பெற முனையும்போதோ, அல்லது பெற்றுவிட்ட பிறகோ, உன்னைப் பற்றி உனக்கே ஒரு வெறுப்பு தோன்றும், உனக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, நாட்டுக்குத் தோன்றும்’ (கலைஞர் கடிதம் - தொகுதி 1) என்று உடன்பிறப்புக்கு எவ்வளவு தெளிவாக 9-11-68-ல் நீங்கள் கடிதம் தீட்டியிருக்கிறீர்கள்! அவ்வளவும் சத்திய வார்த்தைகள். இன்று உங்களைப் பற்றி நாட்டுக்கு அப்படித்தான் தோன்றி​விட்டது.

'வாண்டையார், வடபாதி மங்கலத்தார், நெடும்பலத்தார், குன்னியூரார், மூப்பனார், மன்றாடியார், பேட்டையார், பெரும்பண்ணையார், செட்டி நாட்டார், சிவகங்கை சீமையார்’ என்று அண்ணா அன்று மேடைதோறும் காங்கிரஸில் இருந்த பணக்காரர்களைப் பட்டியலிட்டார்; சென்னையில் 1951 டிசம்பரில் நடை​பெற்ற தி.மு.க. முதல் மாநில மாநாட்​டில், 'தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கழகம்தான்’ என்று பிரகடனம் செய்தார். நீங்களும் பல்வேறு தருணங்களில் 'நானும் ஒரு கம்யூ​னிஸ்ட்’ என்று 'நகைச்சுவை’ ததும்பப் பேசியிருக்கிறீர்கள். 



இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குபேரபுரியின் வாரிசுகளாக விண்ணிலும் மண்ணிலும் வலம் வருகின்றனர். இந்த ரசவாத மாற்றம் எப்படி நிகழ்ந்தது கலைஞரே! நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபாதை மனிதர்களாக இருந்த உங்கள் அமைச்சர்களும், தானைத் தளகர்த்தர்களும் தமிழகத்து அம்பானி​களாய் உருமாறிய ரகசியத்தை உருக்​குலைந்து நிற்கும் எந்தமிழர் அனைவருக்கும் நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் இலவசங் களுக்கே இடமிருக்காது கலைஞரே!

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா சிக்கிச் சிறைப்பட்டதும், சி.பி.ஐ. கரங்கள் கலைஞர் தொலைக்காட்சி வரை விரிந்ததும் உங்கள் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருந்த ஆரிய - திராவிட அம்பெடுத்து வீசி விட்டீர்கள்.

காமராஜரின் வேட்பாளராக சஞ்சீவரெட்டியும், இந்திராவின் வேட்​பாளராக வி.வி.கிரியும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்றபோது நீங்கள் வி.வி.கிரியைத்தானே வெற்றி பெறச் செய்தீர்கள். இந்திராவும், கிரியும் உங்கள் வார்த்தையில் ஆரியர்; காமராஜரும், சஞ்சீவரெட்டியும் திராவிடர். அப்போது எங்கே போனது

உங்கள் இனமான உணர்வு? 'இராமன் இரு பேச்சாளன் இல்லை’ என்பான் வான்மீகி.இரு பேச்சு இல்லாமல் நீங்கள் இல்லை என்பதுதானே உண்மை கலைஞரே!

ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன சாதித்​தீர்கள்? மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான கண்ணப்பன், செல்வ​கணபதி இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி போன்​றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல் ஆரோக்கியம் காத்தீர்களா? 

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா? நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? 'உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்?’ என்று கேட்டார் அண்ணா... அதையே உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா?

ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில் நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை? தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்க​ளுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா? 



நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் 'திருமங்கலம் ஃபார்முலா’வை நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். 

எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது.பொறுத்திருந்து பாருங்கள்!

இப்படிக்கு,

ஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த,

தமிழருவி மணியன்

நன்றி ... பகிர்ந்து கொண்ட தமிழ் கனல்