Monday, March 17, 2014

கடற்கரைச் சாலை - பயணக்குறிப்புகள் 4

இந்தப் பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்டதாக இருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆனால் இதுவரையிலும் எழுதிய எந்தப் பதிவிலும் அந்தப் படங்களைப் போடாமல் பொதுவான படங்களை மட்டுமே வைத்து தொடர்ந்து கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் எடுக்கப்பட்ட ஒவ்வொரு படத்திற்குப் பின்னாலும் சுவராசியமான பல சம்பவங்கள் உள்ளது. தேர்ந்தெடுத்த சில படங்களை மட்டும் சில பதிவுகளாகக் கொடுக்கும் எண்ணம். அது குறித்த விபரங்களை சிறிய குறிப்புகளாக எழுத வேண்டும் என்ற நோக்கத்தினால் பயணித்த பாதையில் நான் கவனித்த விசயங்களை முதலில் எழுதி விடலாமென்று தோன்றியது. 

இந்தப் பயணத்தில் ஆசானுக்கு மிகவும் பிடித்த, அவருடன் நெருக்கமான தொடர்பில் இருக்கும் மதுரை காந்தி மியூசியத்திற்குச் செல்லும் வாய்ப்பும் அமைந்தது. 

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை 

தமிழ்நாட்டின் மற்றப் பகுதிகளில் எத்தனை வளர்ச்சிகள் வந்த போதிலும், திடீர் மாற்றங்களினால் அந்த நகரத்தின் சாயலே மாறிய போதிலும் மதுரை நகரம் மட்டும் தன் இயல்பான தோற்றத்தில் தான் இன்னமும் உள்ளது. ஆனால் மதுரை மண்ணுக்கு உண்டான இயல்பான சாப்பாட்டுச் சுவையில் பண ஆசை புகுந்து விட்டதால் உணவக முதலாளிகளின் சேவை மனப்பான்மை எல்லை கடந்து போய்விட்டது. மீன் குழம்பு என்ற பெயரில் சாம்பாருக்கு அண்ணன் போன்ற ஒரு தண்ணீரை இலையில் ஊற்றியவனைப் பார்வையால் எறித்து விட்டு வெளியே வந்தேன். ஒரு பீடாவை வாங்கி மென்று துப்பிய பின்பே அந்தக் கேவலமான சுவையின் தன்மை நாவிலிருந்து அகன்றது. 

பெரும்பாலான பெரிய உணவங்களில் கட்சி கரை வேஷ்டி கட்டிய மகான்களைத் தான் அதிகம் பார்க்க முடிந்தது. கும்பலாக வந்து சாப்பிடுகின்றார்கள். யாரோ ஒருவர் காந்தி தாளை எடுத்துக் கொடுக்கின்றார். ஒவ்வொருவரும் வளர்த்திருக்கும் தொப்பை தொந்தரவு செய்தாலும், போட்டிருக்கும் சட்டை பட்டன்கள் தெறித்து விழுவது போல இருந்த போதிலும் இரண்டு தடவை மீன் குழம்பு, இரண்டு தடவை கறிக் குழம்பும் வாங்கிக் கொண்டு, சோற்றில் கோடு கிழித்துக் கபடி ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். 

"ஏலெய் நானும் ஒரு காலத்தில் இப்படித்தான்யா சாப்பிட்டேன்" என்று பெருமூச்சோடு மனதிற்குள் சொல்லிக் கொண்டு வெளியே வந்தேன். 

முதல் முறையாக மதுரையில் உள்ள காந்தி மியூசியத்தைப் பார்த்த போது மனதிற்குள் இனம் புரியாத வெட்கம் வந்தது. இப்படி ஒரு இடம் இருப்பதும், அதன் தலவரலாற்றைத் தெரிந்து கொண்ட போது ஆச்சரியமாக இருந்தது. அங்கும் மக்கள் அதிக அளவு வந்து போய்க் கொண்டிருப்பதும் எளிய விலையில் ஏராளமான கைவினைப் பொருட்கள் விற்பதும் காந்தீயம் இன்னமும் மக்கள் மனதில் வாழ்கின்றது என்ற நம்பிக்கையை உருவாக்கியது. 

மதுரையைப் பற்றிக் குறிப்பிட்ட இடத்தைப் பற்றி நண்பர்கள் பேசத் தொடங்கும் பொழுதே சில மாதங்களுக்கு முன் (அ) சில வருடங்களுக்கு முன் ஒரு பெரிய கலவரம் (அ) கொலை நடந்ததே? இது இந்தப் பகுதியில் இந்த இடத்தில் தான் நடந்தது என்று தங்கள் பேச்சைத் தொடங்குகின்றார்கள்.

தனுஷ்கோடி 

தனுஷ்கோடி பயணத்தை முடித்து விட்டு மீண்டும் மற்றொரு கடற்கரைச் சாலை வழியாக திருவாவாடுதுறை சென்றோம்.  இரவு நேர பயணமாக அமைந்த காரணத்தால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கவனிக்கக்கூடிய வாய்ப்பு அமையாமல் போய்விட்டது.  எனவே தனுஷ்கோடியில் நான் பார்த்த கவனித்த சில விசயங்களைப் பற்றி சொல்லிவிடுகின்றேன். பயணத்தின் மீதி உள்ள சமாச்சாரங்களை புகைப்படங்கள் மூலம் சொல்லிவிட முடியும் என்று நம்புகின்றேன்.


கடந்த ஐந்து வருடங்களில் 200க்கும் மேற்பட்ட சிறிய பெரிய புத்தகங்களை ஒழுங்காகப் படித்தது ஈழம் சார்ந்த வரலாற்றை மட்டுமே என்ற காரணத்தினால் நான் பார்க்காத ஊராக இருந்தாலும் தனுஷ்கோடி குறித்து ஓரளவிற்குத் தெரியும். 

குறிப்பிட்ட இடம் அல்லது பகுதி, நாட்டுக்குச் செல்வதற்கு முன்பு கொஞ்சமாவது தலவரலாறு தெரிந்து இருந்தால் உங்களின் பார்வை கூர்மைப்படும். இல்லாவிட்டால் சென்றும் பிரயோஜனமிருக்காது. 

இதற்கு மேலாக எழுத்தின் வாயிலாகப் படிப்பதற்கும் அந்த இடங்களுக்கே நேரிடையாகச் செல்லும் போது நம்மில் உருவாகும் சிந்தனை மாற்றங்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கும் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும். தனுஷ்கோடி குறித்த என் முழுமையான எண்ணமும் இப்படித்தான் மாறியது. 

தரைப்பாலத்தைக் கடந்து உள்ளே இராமேஸ்வரம் நுழைவதற்கு முன்பே தனுஷ்கோடிக்குச் செல்லும் தார் சாலை பிரிகின்றது. சாலை வசதி மிக அற்புதமாகப் போடப்பட்டுள்ளது. இரண்டு பக்கமும் மரங்கள். உப்புக்காற்று என்பதால் இலைகளில் ஆரோக்கியமற்ற, கம்புகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் மரங்களும், எப்பொழுதோ அடித்து வரப்பட்ட மணல் குவியல்களையும் பார்க்க முடியும். 

பயணத்தூரம் ஏறக்குறைய 20 கிலோ மீட்டர் இருக்கலாம் என்றே நினைக்கின்றேன். ரசிப்பதற்கான விசயங்கள் நிறைய இருந்த போதிலும் அவசர கதியில் செயல்பட வேண்டிய சூழ்நிலையின் காரணத்தினாலும் பலவற்றைச் சரியாக உள்வாங்க முடியவில்லை. எனக்குப் பயணங்களில் கடல் வழி பயணங்களை ரொம்பவே விரும்புவேன். கண்களுக்குத் தெரிந்த வரையிலும் தண்ணீரைத் தவிர வேறு எதுவும் தெரியாத அந்தக் கடல் சொல்லும் பாடங்களை, பயங்களை ரசிப்பதுண்டு. 

மேலும் படகு சவாரி என்பது பிடித்தமான ஒன்று. இதை விட முக்கியமானதொன்று. சுடச்சுட சுவையான மீன்கள் வகை வகையாகக் கிடைக்கும். இதை மனதில் வைத்துக் கற்பனைக் கோட்டை கட்டிக் கொண்டு அங்கே சென்ற போது சூழ்நிலை வேறு விதமாக இருந்தது. 

தார் சாலை முடியும் இடத்தில் தனுஷ்கோடி செல்லும் பகுதிக்கு பல "லொக்கடா" வகையான வேன்கள் மூலம் அழைத்துச் செல்கின்றார்கள். அதுவும் வசதியாகப் பத்துப் பேர்கள் உட்கார்ந்து செல்ல வேண்டிய வாகனத்தில் 20 பேர்களைச் சில சமயம் அதற்கு மேலும் ஏற்றித் திணித்துக் கொண்ட பிறகே வண்டியை எடுக்கின்றார்கள். குறைவான நபர்கள் என்றால் வண்டி எடுக்கப்படமாட்டாது. ஒன்றன் பின் ஒன்றாக இதே போல ஒவ்வொரு லொக்கடாவும் தயாராக உள்ளது. 

கூட்டம் சேரச் சேர ஒன்றன் பின் ஒன்றான முறை வைத்து செல்கின்றார்கள். ஒருவருக்கு ரூபாய் இருபது. கிடைத்த சந்தர்ப்பத்தில் ஒட்டுநர் பையனிடம் வண்டி மூலம் வருகின்ற லாப நட்டங்களையும், இந்தத் தொழிலுக்குப் பின்னால் உள்ள சவால்கள், தினந்தோறும் எவருக்கெல்லாம் மாமூல் கொடுக்க வேண்டிய விசயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். பெரும்பாலும் 15 முதல் 22 வயதிற்குள் இருக்கும் இளைஞர்கள் படிப்பை பாதியில் விட்டு மீன் பிடி தொழிலில் இருந்து வெளியே வந்த பின்பு இது போன்ற துறைகளில் இறங்கியுள்ளனர். நிச்சயம் ஒரு நபருக்கு தினசரி ஆயிரம் ரூபாய் வந்து விடும் அளவுக்குச் செழிப்பாகவே உள்ளது. 

குடிப்பழக்கம் இல்லாதவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.  ஆனால் அதற்கு வாய்பே இல்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

எந்த இடத்திலும் மீன் பொரித்து விற்பனை செய்யும் நபர்களே இல்லை என்கிற அளவுக்குச் சூழ்நிலைகள் மாறியுள்ளது. காரணம் கேட்டால் விலை கட்டுபிடியாகவில்லை என்கிறார்கள். இது குறித்துச் சற்று விபரமாகப் புகைப்படப் பதிவில் எழுதுகின்றேன். 

நாங்கள் பயணித்த போது மூன்றில் இரண்டு மடங்கு வடநாட்டு மக்கள் தான் இருந்தார்கள். ஓட்டுநர்கள் மற்றும் குறிப்பிட்ட வண்டி சார்ந்து இயங்கும் எந்தப் பையன்களுக்கும் ஹிந்தி தெரியவில்லை. 

அதே போல வரும் வட நாட்டு மக்களுக்கும் மொழி குறித்த அக்கறையும் இன்றிச் சமாளிக்க ஒரு சில வார்த்தைகளாவது தெரிந்து இருப்பார்கள் என்று அவர்களது உரையாடல்களைக் கவனித்தேன். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் அத்தனை சிலாக்கியமாக இல்லை. அதே போல வண்டி இளைஞர்களும் ஒரு நபருக்கு இருபது ரூபாய் தொடக்கத்திலே வாங்கி வைத்துக் கொண்டு விடுகின்றார்கள். "வந்தா வா. வராட்டி போ" என்கிற மனோநிலையில் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அடுத்தடுத்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

ஒவ்வொரு இளைஞனும் நல்ல உடல் வலுவும், அசாத்தியமான தைரியசாலிகளாகவும் இருக்கின்றார்கள். காரணம் அவர்கள் ஒட்டும் ஒவ்வொரு வண்டியும் பிணத்தை ஏற்றிச் செல்லும் வண்டி போலவே உள்ளது. டயரும், என்ஜினும் மட்டும் கவனமாகப் பாதுகாக்கப்படுகின்றது. மற்ற அத்தனை பாகங்களும் பயணத்தின் போது காற்றோடு பேசுகின்றது. 

வண்டி எடுத்த முதல் நொடி முதல் அவர்கள் கொண்டு போய் இறக்கி விடும் தனுஷ்கோடியில் உள்ள குறிப்பிட்ட எல்லை வரைக்கும் மணலில் தான் பயணம். நாம் நடந்து சென்றால் கூட அடுத்த அடி எடுத்து வைக்க யோசிக்கும் அளவுக்குத் தண்ணீர் கலந்த மணலும், புதைகுழிகள் போல உள்ள சிக்கல் நிறைந்த பாதையது. கொஞ்சமல்ல நிறையப் பயமாகவே இருந்தது. 

                                                     படம் - வலைத்தமிழ்

ஆனால் ஒட்டுநர் பையன் சர்வசாதாரணமாகக் கையாண்டதைப் பார்த்த போது வண்டியின் பலவீனத்தை விட அவனின் புஜபலாக்கிரமத்தை பாராட்ட வேண்டும் போலத் தோன்றியது. அரை மணி நேர பயணம். மணலும், தண்ணீர் கலந்த மணலும் சுற்றிலும் கடல் நீருமான இந்த உலகத்தைப் பார்த்த போது, தனுஷ்கோடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைப் பார்த்து உரையாடிய போது மனதிற்குள் இப்படித்தான் தோன்றியது. 

"நாம் எவ்வளவு கொடுத்து வைத்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நாம் தான் அதிகமாகத் தினசரி வாழ்க்கையில் அலுத்துக் கொண்டு வாழ்கின்றோம்".

தொடர்புடைய பதிவுகள்28 comments:

 1. // மதுரை மண்ணுக்கு உண்டான இயல்பான சாப்பாட்டுச் சுவையில் பண ஆசை புகுந்து விட்டதால் உணவக முதலாளிகளின் சேவை மனப்பான்மை எல்லை கடந்து போய்விட்டது///

  மிக மிக உண்மை கடந்த முறை நான் மதுரை வந்த போது இதே அனுபவத்தை அடைந்தேன்

  ReplyDelete
  Replies
  1. தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் இப்படித்தான் உள்ளது.

   Delete
 2. முன்பெல்லாம் தமிழ்நாட்டுப் பக்கம் வந்தாலேயே நல்ல உணவு, நல்ல சிற்றுண்டி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போதெல்லாம் ஓட்டல்களைத் 'தேடிப்போய்த்தான்' உட்கார வேண்டியுள்ளது. ஒரு நகரில் ஒரு ஓட்டலோ இரண்டு ஓட்டல்களிலோ மட்டுமே நல்ல சுவையான உணவு. மற்றவற்றிலெல்லாம் ஏதோ ஒன்றை சுகாதாரமற்ற வகையில் பரிமாறிவிட்டுக் காசு பிடுங்கத்தான் பார்க்கிறார்கள். அதிலும் அங்குள்ள குறைகளைச் சுட்டிக்காட்டினால் அவர்களுக்கு வரும் கோபத்தைப் பார்க்கவேண்டுமே!
  அதிலும் நீங்கள் சொல்லியிருப்பதுபோல் 'சாம்பாருக்கு அண்ணன் போன்ற ஒரு தண்ணீரை' எல்லா ஓட்டல்களிலுமே வெவ்வேறு பெயர்களில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். எது பற்றியும் கவலைப்படாமல் எது எப்படியிருந்தாலும் 'சப்புக்கொட்டிச் சாப்பிடும் கூட்டத்தைத்தான்' குறைசொல்ல வேண்டும்.

  பயணித்த இடங்களில் வெறும் வரலாறு, நினைவுகூறத்தக்க சம்பவங்கள், அந்த இடத்தின் விசேஷங்கள் என்ற விதத்திலேயே எழுதிச்செல்லாமல் நம்மை உண்மையில் பாதிக்கும் உணவு, பயண வசதிகள் போன்றவற்றையும் எவ்விதப் பாசாங்குகளும் இல்லாமல் குறிப்பிட்டுச் செல்வது பாராட்டத்தகுந்தது.

  புகைப்படங்கள் சொல்லப்போகும் கதைகளையும் தெரிந்துகொள்ள ஆவலைத் தூண்டுகிறது கட்டுரைத் தொடர்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிலைப் படித்ததும் ஆச்சரியம். காரணம் நான் இதனைத் தொடர்ந்து வரும் அடுத்த பதிவில் எழுதி வைத்திருந்ததை நீங்க உங்க பாணியில் சொன்னதைப் பார்த்து.

   Delete
 3. புதிய வேலை மற்றும் தொடர் பயணங்களால் தற்போது வலைப்பதிவுகள் படிக்க நேரம் கிடைப்பதில்லை. அவ்வப்போது சற்று ரிலாக்ஸ் செய்யவும், உலக் நடப்புகளை தெரிந்து கொள்ளவும் பேஸ்புக், பிளஸ் பக்கம் மட்டுமே. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் வலைப்பக்கம் வந்து இந்த தொடரை படித்தேன். அருமையான பயணக்குறிப்புகள்... தொடர்ந்து பயணிக்கிறேன்...

  ReplyDelete
 4. தமிழ்நாட்டில் இன்னும் நான் பார்க்க வேண்டிய ஊர்கள் பல உள்ளன. ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி இன்னும் பார்க்காத ஊர்கள். வரும் மே மாதத்தில் முக்கியமான ஒரு காரணத்திற்காக ராமேஸ்வரம் செல்லாம் என்று திட்டம்.

  ReplyDelete
  Replies
  1. அவசரம் இல்லாமல் அமைதியாக மொத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு வரவும்.

   Delete
 5. மதுரை காந்தி மியூசியத்தில் இரத்தத்தில் தோய்ந்த காந்தியின் ஆடைகள் உள்ள இடத்திலும் வந்தவர்களின் அரட்டை சத்தம் அந்த கருப்பு அறையிலும் நம் மனத்தின் வக்கிரத்தை காட்டுகிறது.
  //மீன் குழம்பு என்ற பெயரில் சாம்பாருக்கு அண்ணன் போன்ற ஒரு தண்ணீரை இலையில் ஊற்றியவனை// பாவம் அண்ணே உங்க பொண்டாட்டி!
  //குடிப்பழக்கம் இல்லாதவர்கள் புண்ணியம் செய்தவர்கள். ஆனால் அதற்கு வாய்பே இல்லை // இங்கே சென்னை துறைமுகத்தில் சரக்கு ஏற்றி இறக்கும் வேலை செய்பவர்கள் ஒருநாளுக்கு மூவாயிரத்துக்கும் மேல சம்பாதிக்கின்றனர். மாதத்திற்கு 6 இலக்க வருமானம். IT-துறையினறும் ஈட்டாத கலெக்டருக்கும் கிடைக்காத சம்பளம். ஆனால் என்ன செய்கின்றனர் என்பதுதான் தெரியவில்லை, அவ்வளவு பணத்தையும்?

  ReplyDelete
  Replies
  1. வந்துள்ள ஒரு வரியை இருவரும் சேர்ந்து படித்தோம். எனக்கு பயங்கர ஆச்சரியம். அவருக்கோ உண்மை தெரிஞ்சுடுச்சே என்ற மகிழ்ச்சி.

   Delete
 6. புகைப்பட பதிவுக்கு ஆவலாக உள்ளேன்.

  ReplyDelete
 7. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் உணவக முதலாளிகளும் தமிழ் வளர்க்கிறார்கள் ,உணவகம் என்பதற்கு பதிலாய் மெஸ் என்று பெயர் மாற்றி !

  ReplyDelete
 8. பீடாவாவது நன்றாக இருந்ததா...? புகைப்பட கதைகளை காண ஆவலுடன் தொடர்ந்து பயணிக்கிறேன்...

  ReplyDelete
 9. அஞ்சாறு வருசம் முன்னேயே மதுரையில் பண ஆசை அதிகரித்துவிட்டது! நானும் உணர்ந்திருக்கிறேன்! தனுஷ்கோடி தகவல்கள் சிறப்பு! மேலும் அறிய ஆவலுடன் உள்ளேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. எல்லாஇடங்களிலும் கலக்குறீங்க

   Delete
 10. பயணமும் பதிவு செய்தலும் அருமை. நன்றி

  ReplyDelete
  Replies
  1. அப்பாடியா.......... மனசு வந்து விட்டது போலிருக்கே. மலைநாடன் இப்படித்தான் எழுதுவார்.

   Delete
 11. தனுஷ்கோடிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் சென்று வந்தேன். தங்களின் பதிவைப் படிக்கப் படிக்க, நினைவலைகள் பின்னோக்கிப் பயணித்தன. நன்றி ஐயா

  ReplyDelete
 12. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தொடர் வாசிப்புக்கு நன்றிங்க

   Delete
 13. // "ஏலெய் நானும் ஒரு காலத்தில் இப்படித்தான்யா சாப்பிட்டேன்" //

  // எந்த இடத்திலும் மீன் பொறித்து விற்பனை செய்யும் நபர்களே இல்லை என்கிற அளவுக்குச் சூழ்நிலைகள் மாறியுள்ளது //

  பொறித்து > பொரித்து (சரி)

  நீங்கள் மட்டுமல்ல எல்லோரும் இப்படி சாப்பிட்டவர்கள்தான். அப்போதைய மீன்குழம்பு ருசி இப்போது வராது. (காரணம் இன்றைய கிரைண்டர் ) இப்போது உப்பை அள்ளி போட்டு விடுகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. அவசியம் இது போன்ற பிழைகளை சுட்டிக்காட்ட வேண்டுகின்றேன்.

   நாம் எப்போதும் குறை சொல்லிக் கொண்டேயிருக்கின்றோமே? என்று சில வாரங்களுக்கு முன் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து வாங்கி வந்த மீன் குழம்புக்காக சமைத்துப் பார்த்தேன். (வீட்டில் எப்போதும் சைவம்). அமிர்தம் போல சமைக்க முடிந்தது. அர்ப்பணிப்பும் பொறுமையும் தான் முக்கியம்.

   Delete
 14. காந்தி மியுசியம் பற்றி இன்னும் சிறிது எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அடுத்த பதிவுகள் எழுதும் பொது எங்காவது இணக்க பாருங்கள். இது வரை மிக மிக அருமையாக உள்ளது. திருவா வடுதுறை பற்றி முழுதும் அறிய ஆவல்.

  ReplyDelete
  Replies
  1. எழுதி முடித்து விட்டேன். உங்கள் கருத்தறிய ஆவல் பரமசிவம்.

   Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.