Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Thursday, March 20, 2014

பயணமும் படங்களும் - செந்தில்நாதன் அரசாங்கம்

தற்போது தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை பலர் "பக்திமான்" என்கிறார்கள். சிலர் "சக்திமான்" என்கிறார்கள். 

ஆனால் ஒரு அரசியல் தலைவருக்கு வன்மும், வக்ரமும், பழிவாங்கும் உணர்ச்சிகளும் மட்டுமே மேலோங்கி இருந்தால் ஒரு தொகுதி எப்படி இருக்கும் என்பதனைக் காண நீங்கள் அவசியம் திருச்செந்தூர் சென்று பார்க்க வேண்டும். காரணம் தற்பொழுது திருச்செந்தூர் தொகுதி திமுக வசம் உள்ளது. முன்பு அதிமுகவில் இருந்து தற்பொழுது திமுகவில் இருக்கும் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 

இந்த ஒரு காரணத்தினால் மட்டுமே ஜெ வின் அடிப்பொடிகள் எளிய தமிழ் மக்களின் கடவுளான செந்தில்நாதன் அரசாங்கத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். ஏறக்குறைய அங்கே இருந்த 20 மணி நேரத்தில் பல பேர்களிடம் கேட்ட போது சொல்லி வைத்தாற் போல இதே குற்றச்சாட்டைத் தான் சொன்னார்கள். 

திருச்செந்தூர் என்ற ஊருக்குள் நுழையும் போது தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த சுகம் முடிந்து போய் விடுகின்றது. கட்டை வண்டிப் பயணம் தொடங்குகின்றது. படு கேவலமான சாலை வசதியும், கண்டு கொள்ளவே படாத அடிப்படை வசதிகளுமாய் அசிங்கமாக உள்ளது. இந்துக்களால் நம்பப்படுகின்ற புண்ணியத் தலத்திற்கு உள்ளே நுழையும் போதே நாம் 50 ஆண்டுகளுக்குப் பின்னால் செல்ல வேண்டிய சூழ்நிலை தான் நமக்கு பரிசாக கிடைக்கின்றது. நாங்கள் சென்றிருந்த போது லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. அதுவே சில மணி நேரம் நீடிக்கச் சாலை மொத்தமும் வயல்வெளி போலவே மாறிவிட்டது. சேறும் சகதியுமாய்க் கால் வைத்து நடக்க முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. ஒரு இடத்தில் மட்டுமல்ல. திருச்செந்தூர் பகுதி முழுக்க அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படவே இல்லை. திட்டமிட்ட புறக்கணிப்பாகவே தெரிகின்றது. 

ஆசான் திரு. கிருஷ்ணன் திருச்செந்தூரில் பிறந்தவர். அவர் தற்பொழுது சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் அவர் எண்ணமும் செயலும் முழுமையாகத் திருச்செந்தூர் என்ற ஊருக்குள் தான் இருக்கின்றது. அவருடன் உரையாடும் போது அதை உணர்ந்து கொண்டேன். அவரின் பூர்வீக வீடு 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. எந்த மாறுதல்களை உள்வாங்காமல் அப்படியே தனது ஒரே அக்காவிடம் ஒப்படைத்துள்ளார். அவரின் வாரிசுகள் தான் இந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். ஓதுவார் குடும்பப் பரம்பபரை என்பதால் தங்களின் பூர்வீகத் தொழிலான இறைவனுக்குப் பூக்கட்டி கொடுத்தல், மற்றும் பூக்கடைக்குத் தேவையான மாலை கட்டி விற்பனை செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

தற்போதுள்ள சாலையில் இருந்து முழங்கால் அளவுக்குக் கீழே செல்லும் அளவுக்கு வீட்டு வாசப்படி அமைந்துள்ளது. ஒரு மழை அடித்தால் வீடு முழுக்கத் தண்ணீரால் நிரம்பி விடும். உள்ளே நுழைந்த போது எனது ஐந்து வயதில் நான் ஊரில் பல இடங்களில் பார்த்த வாழ்க்கை நினைவுகள் வந்து போனது. 

முதல் நாள் மாலை ஆறு மணி அளவில் திருச்செந்தூருக்குள் உள்ளே நுழைந்தோம். மறுநாள் வெளியே கிளம்பி வரும் வரையிலும் கோவில் மற்றும் அதனைச் சார்ந்த பல இடங்களை நிதானமாகப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. அதிகாலை சூரியப் பொழுதின் தன்மையை உணர வேண்டும் என்பதற்காகக் கடற்கரையில் நடந்த போது மிக மிகக் கவனமாகக் காலடி எடுத்து வைக்க வேண்டிய நிலையில் தான் மணல்வெளியெங்கும் மலத்தால் நிரம்பியுள்ளது. காரணம் கேட்ட போது துப்புரவுத் தொழிலாளர்களின் பற்றாக்குறையாம். தலையில் அடித்துக் கொண்டேன்.  ஒரு வேளை ஜெ. வின் ஆஸ்தான ஜோசியர் பணிக்கர் (சோ) சிம்மிடம் ஏதாவது பரிகாரம் செய்யச் சொன்னால் இந்த சூழ்நிலை மாறக்கூடும். 

கடற்கரையில் ஒரு மேடை போல அமைப்பு இருக்க ஒளிப்பதிவாளரிடம் நான் விரும்புவதைச் சொல்லிவிட்டு, ஆசானிடம் உங்கள் விருப்பம் போல ஆசனங்களை வரிசையாகச் செய்து கொண்டு வாருங்கள் என்று ஓரமாக நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன். அதற்குள் பரவலாகக் கூட்டமும் சேர்ந்து விட்டது. அவர்களை ஓரமாக ஒதுங்கி நிற்க வைத்து விட்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில மட்டும் இங்கே.

























தொடர்புடைய பதிவுகள்

ஆசான் பயணக்குறிப்புகள்

பயணமும் படங்களும் - பசியும் ருசியும்


பயணமும் படங்களும் - அரை நிர்வாண பக்கிரி

மதுரை காந்தி அருங்காட்சியம்

மோகன் தாஸ் கரம் சந்த் காந்திக்கு எத்தனையோ சிறப்புகள். அதில் ஒன்று தான் வின்ஸ்டன் சர்ச்சில் கொடுத்த அரை நிர்வாண பக்கிரி என்ற பட்டப் பெயரும் ஒன்று. காரணம் காந்தியடிகள் இங்கிலாந்து மன்னரைச் சந்திக்கச் சென்ற போது அவர் அணிந்திருந்த உடையைப் பார்த்து  சர்ச்சில் அவ்வாறு அழைத்தார். காந்தி தன் உடை அலங்காரத்தை மாற்றிக் கொள்ளத் தூண்டிய சம்பவம் தமிழ்நாட்டில் மதுரையில் தான் நடந்தது. 

1921ம் ஆண்டுக் காந்தி மதுரை வந்த போது ராம்ஜி கல்யாண்ஜி என்பவரது வீட்டில் தங்கினார். அப்போது அவர், ஏழை மக்கள் பலர் உடுத்த சரியான ஆடையின்றிக் குளிரில் வாடுவதையும், கோவணத்துடன் இருந்த ஏழை விவசாயியையும் கண்டார். அன்று இரவே, நாட்டில் இப்படியும் மக்கள் இருக்க, தனக்கு மட்டும் ஏன் இந்த் ஆடம்பரம் என்று தான் உடுத்தியிருந்த ஆடையைத் துறந்து அரை நிர்வாணத்திற்கு மாறினார் மகாத்மா. 

அந்த மகாத்மாவின் மறைவுக்குப் பின்னர், நாட்டின் சில பகுதிகளில் காந்தியடிகளின் அருங்காட்சியகத்தை நிறுவ மத்திய அரசு முடிவு செய்தது. அப்படித் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் ஒன்று மதுரை. 

1957ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால், மதுரையில் ராணி மங்கம்மாளின் அரண்மனை இருந்த இடத்தில் காந்தி மியூசியம் அமைக்கப்பட்டது. 

சுமார் 13 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த மியூசியத்தில் அமைதி பூங்கா என்றொரு இடம் இருக்கிறது. இங்குக் காந்தியின் அஸ்தியில் ஒரு பகுதி வைக்கப்பட்டுள்ளது.இங்கு காந்தியின் வாழ்க்கையை வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டும் அரிய புகைப்படங்கள், அவரின் ரத்தக்கறை தோய்ந்த வேஷ்டி, மூக்குக் கண்ணாடி, அவர் நூற்ற ராட்டை மற்றும் நூல், கைக்குட்டை, செருப்பு, தலையணை, கம்பளி உள்ளிட்ட 14 பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 

அரசு சார்புள்ள குழுவினர் காந்தி அருகாட்சிக் கூடத்தைப் பாதுகாத்துக் கொண்டு வந்தபோதிலும் உள்ளே உள்ள கட்டிடங்களைக் கவனித்த போது பல இடங்களில் கவனிப்பாரற்ற நிலையிலும், வெள்ளை அடித்து எத்தனை வருடங்கள் ஆகி விட்டதோ? என்கிற நிலைமையில் தான் உள்ளது. காந்தியை முன்னிறுத்தும் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளை விடக் காந்தி மேல் உண்மையான மரியாதை கொண்ட பலரின் இடைவிடாத ஒத்துழைப்பால், உழைப்பால் இன்றும் இந்த நினைவு காட்சியம் உயிர்ப்போடு இருந்து வருகின்றது. 

ஆசான் தன் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை மாதந்தோறும் இந்த அருங்காட்சி நிர்வாகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார். தங்கள் வாழ்க்கையைக் காந்தியின் கொள்கையைப் பரப்புவதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பதால் இங்குச் சென்று விட்டு பிறகு திருச்செந்தூர் செல்வோம் என்று கூறியதால் எனக்கு முதல் முறையாக இந்த இடத்தைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. 


தொடர்புடைய பதிவுகள்
















Monday, March 17, 2014

கடற்கரைச் சாலை - பயணக்குறிப்புகள் 4

இந்தப் பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்டதாக இருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆனால் இதுவரையிலும் எழுதிய எந்தப் பதிவிலும் அந்தப் படங்களைப் போடாமல் பொதுவான படங்களை மட்டுமே வைத்து தொடர்ந்து கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் எடுக்கப்பட்ட ஒவ்வொரு படத்திற்குப் பின்னாலும் சுவராசியமான பல சம்பவங்கள் உள்ளது. தேர்ந்தெடுத்த சில படங்களை மட்டும் சில பதிவுகளாகக் கொடுக்கும் எண்ணம். அது குறித்த விபரங்களை சிறிய குறிப்புகளாக எழுத வேண்டும் என்ற நோக்கத்தினால் பயணித்த பாதையில் நான் கவனித்த விசயங்களை முதலில் எழுதி விடலாமென்று தோன்றியது. 

இந்தப் பயணத்தில் ஆசானுக்கு மிகவும் பிடித்த, அவருடன் நெருக்கமான தொடர்பில் இருக்கும் மதுரை காந்தி மியூசியத்திற்குச் செல்லும் வாய்ப்பும் அமைந்தது. 

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை 

தமிழ்நாட்டின் மற்றப் பகுதிகளில் எத்தனை வளர்ச்சிகள் வந்த போதிலும், திடீர் மாற்றங்களினால் அந்த நகரத்தின் சாயலே மாறிய போதிலும் மதுரை நகரம் மட்டும் தன் இயல்பான தோற்றத்தில் தான் இன்னமும் உள்ளது. ஆனால் மதுரை மண்ணுக்கு உண்டான இயல்பான சாப்பாட்டுச் சுவையில் பண ஆசை புகுந்து விட்டதால் உணவக முதலாளிகளின் சேவை மனப்பான்மை எல்லை கடந்து போய்விட்டது. மீன் குழம்பு என்ற பெயரில் சாம்பாருக்கு அண்ணன் போன்ற ஒரு தண்ணீரை இலையில் ஊற்றியவனைப் பார்வையால் எறித்து விட்டு வெளியே வந்தேன். ஒரு பீடாவை வாங்கி மென்று துப்பிய பின்பே அந்தக் கேவலமான சுவையின் தன்மை நாவிலிருந்து அகன்றது. 

பெரும்பாலான பெரிய உணவங்களில் கட்சி கரை வேஷ்டி கட்டிய மகான்களைத் தான் அதிகம் பார்க்க முடிந்தது. கும்பலாக வந்து சாப்பிடுகின்றார்கள். யாரோ ஒருவர் காந்தி தாளை எடுத்துக் கொடுக்கின்றார். ஒவ்வொருவரும் வளர்த்திருக்கும் தொப்பை தொந்தரவு செய்தாலும், போட்டிருக்கும் சட்டை பட்டன்கள் தெறித்து விழுவது போல இருந்த போதிலும் இரண்டு தடவை மீன் குழம்பு, இரண்டு தடவை கறிக் குழம்பும் வாங்கிக் கொண்டு, சோற்றில் கோடு கிழித்துக் கபடி ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். 

"ஏலெய் நானும் ஒரு காலத்தில் இப்படித்தான்யா சாப்பிட்டேன்" என்று பெருமூச்சோடு மனதிற்குள் சொல்லிக் கொண்டு வெளியே வந்தேன். 

முதல் முறையாக மதுரையில் உள்ள காந்தி மியூசியத்தைப் பார்த்த போது மனதிற்குள் இனம் புரியாத வெட்கம் வந்தது. இப்படி ஒரு இடம் இருப்பதும், அதன் தலவரலாற்றைத் தெரிந்து கொண்ட போது ஆச்சரியமாக இருந்தது. அங்கும் மக்கள் அதிக அளவு வந்து போய்க் கொண்டிருப்பதும் எளிய விலையில் ஏராளமான கைவினைப் பொருட்கள் விற்பதும் காந்தீயம் இன்னமும் மக்கள் மனதில் வாழ்கின்றது என்ற நம்பிக்கையை உருவாக்கியது. 

மதுரையைப் பற்றிக் குறிப்பிட்ட இடத்தைப் பற்றி நண்பர்கள் பேசத் தொடங்கும் பொழுதே சில மாதங்களுக்கு முன் (அ) சில வருடங்களுக்கு முன் ஒரு பெரிய கலவரம் (அ) கொலை நடந்ததே? இது இந்தப் பகுதியில் இந்த இடத்தில் தான் நடந்தது என்று தங்கள் பேச்சைத் தொடங்குகின்றார்கள்.

தனுஷ்கோடி 

தனுஷ்கோடி பயணத்தை முடித்து விட்டு மீண்டும் மற்றொரு கடற்கரைச் சாலை வழியாக திருவாவாடுதுறை சென்றோம்.  இரவு நேர பயணமாக அமைந்த காரணத்தால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கவனிக்கக்கூடிய வாய்ப்பு அமையாமல் போய்விட்டது.  எனவே தனுஷ்கோடியில் நான் பார்த்த கவனித்த சில விசயங்களைப் பற்றி சொல்லிவிடுகின்றேன். பயணத்தின் மீதி உள்ள சமாச்சாரங்களை புகைப்படங்கள் மூலம் சொல்லிவிட முடியும் என்று நம்புகின்றேன்.


கடந்த ஐந்து வருடங்களில் 200க்கும் மேற்பட்ட சிறிய பெரிய புத்தகங்களை ஒழுங்காகப் படித்தது ஈழம் சார்ந்த வரலாற்றை மட்டுமே என்ற காரணத்தினால் நான் பார்க்காத ஊராக இருந்தாலும் தனுஷ்கோடி குறித்து ஓரளவிற்குத் தெரியும். 

குறிப்பிட்ட இடம் அல்லது பகுதி, நாட்டுக்குச் செல்வதற்கு முன்பு கொஞ்சமாவது தலவரலாறு தெரிந்து இருந்தால் உங்களின் பார்வை கூர்மைப்படும். இல்லாவிட்டால் சென்றும் பிரயோஜனமிருக்காது. 

இதற்கு மேலாக எழுத்தின் வாயிலாகப் படிப்பதற்கும் அந்த இடங்களுக்கே நேரிடையாகச் செல்லும் போது நம்மில் உருவாகும் சிந்தனை மாற்றங்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கும் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும். தனுஷ்கோடி குறித்த என் முழுமையான எண்ணமும் இப்படித்தான் மாறியது. 

தரைப்பாலத்தைக் கடந்து உள்ளே இராமேஸ்வரம் நுழைவதற்கு முன்பே தனுஷ்கோடிக்குச் செல்லும் தார் சாலை பிரிகின்றது. சாலை வசதி மிக அற்புதமாகப் போடப்பட்டுள்ளது. இரண்டு பக்கமும் மரங்கள். உப்புக்காற்று என்பதால் இலைகளில் ஆரோக்கியமற்ற, கம்புகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் மரங்களும், எப்பொழுதோ அடித்து வரப்பட்ட மணல் குவியல்களையும் பார்க்க முடியும். 

பயணத்தூரம் ஏறக்குறைய 20 கிலோ மீட்டர் இருக்கலாம் என்றே நினைக்கின்றேன். ரசிப்பதற்கான விசயங்கள் நிறைய இருந்த போதிலும் அவசர கதியில் செயல்பட வேண்டிய சூழ்நிலையின் காரணத்தினாலும் பலவற்றைச் சரியாக உள்வாங்க முடியவில்லை. எனக்குப் பயணங்களில் கடல் வழி பயணங்களை ரொம்பவே விரும்புவேன். கண்களுக்குத் தெரிந்த வரையிலும் தண்ணீரைத் தவிர வேறு எதுவும் தெரியாத அந்தக் கடல் சொல்லும் பாடங்களை, பயங்களை ரசிப்பதுண்டு. 

மேலும் படகு சவாரி என்பது பிடித்தமான ஒன்று. இதை விட முக்கியமானதொன்று. சுடச்சுட சுவையான மீன்கள் வகை வகையாகக் கிடைக்கும். இதை மனதில் வைத்துக் கற்பனைக் கோட்டை கட்டிக் கொண்டு அங்கே சென்ற போது சூழ்நிலை வேறு விதமாக இருந்தது. 

தார் சாலை முடியும் இடத்தில் தனுஷ்கோடி செல்லும் பகுதிக்கு பல "லொக்கடா" வகையான வேன்கள் மூலம் அழைத்துச் செல்கின்றார்கள். அதுவும் வசதியாகப் பத்துப் பேர்கள் உட்கார்ந்து செல்ல வேண்டிய வாகனத்தில் 20 பேர்களைச் சில சமயம் அதற்கு மேலும் ஏற்றித் திணித்துக் கொண்ட பிறகே வண்டியை எடுக்கின்றார்கள். குறைவான நபர்கள் என்றால் வண்டி எடுக்கப்படமாட்டாது. ஒன்றன் பின் ஒன்றாக இதே போல ஒவ்வொரு லொக்கடாவும் தயாராக உள்ளது. 

கூட்டம் சேரச் சேர ஒன்றன் பின் ஒன்றான முறை வைத்து செல்கின்றார்கள். ஒருவருக்கு ரூபாய் இருபது. கிடைத்த சந்தர்ப்பத்தில் ஒட்டுநர் பையனிடம் வண்டி மூலம் வருகின்ற லாப நட்டங்களையும், இந்தத் தொழிலுக்குப் பின்னால் உள்ள சவால்கள், தினந்தோறும் எவருக்கெல்லாம் மாமூல் கொடுக்க வேண்டிய விசயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். பெரும்பாலும் 15 முதல் 22 வயதிற்குள் இருக்கும் இளைஞர்கள் படிப்பை பாதியில் விட்டு மீன் பிடி தொழிலில் இருந்து வெளியே வந்த பின்பு இது போன்ற துறைகளில் இறங்கியுள்ளனர். நிச்சயம் ஒரு நபருக்கு தினசரி ஆயிரம் ரூபாய் வந்து விடும் அளவுக்குச் செழிப்பாகவே உள்ளது. 

குடிப்பழக்கம் இல்லாதவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.  ஆனால் அதற்கு வாய்பே இல்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

எந்த இடத்திலும் மீன் பொரித்து விற்பனை செய்யும் நபர்களே இல்லை என்கிற அளவுக்குச் சூழ்நிலைகள் மாறியுள்ளது. காரணம் கேட்டால் விலை கட்டுபிடியாகவில்லை என்கிறார்கள். இது குறித்துச் சற்று விபரமாகப் புகைப்படப் பதிவில் எழுதுகின்றேன். 

நாங்கள் பயணித்த போது மூன்றில் இரண்டு மடங்கு வடநாட்டு மக்கள் தான் இருந்தார்கள். ஓட்டுநர்கள் மற்றும் குறிப்பிட்ட வண்டி சார்ந்து இயங்கும் எந்தப் பையன்களுக்கும் ஹிந்தி தெரியவில்லை. 

அதே போல வரும் வட நாட்டு மக்களுக்கும் மொழி குறித்த அக்கறையும் இன்றிச் சமாளிக்க ஒரு சில வார்த்தைகளாவது தெரிந்து இருப்பார்கள் என்று அவர்களது உரையாடல்களைக் கவனித்தேன். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் அத்தனை சிலாக்கியமாக இல்லை. அதே போல வண்டி இளைஞர்களும் ஒரு நபருக்கு இருபது ரூபாய் தொடக்கத்திலே வாங்கி வைத்துக் கொண்டு விடுகின்றார்கள். "வந்தா வா. வராட்டி போ" என்கிற மனோநிலையில் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அடுத்தடுத்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

ஒவ்வொரு இளைஞனும் நல்ல உடல் வலுவும், அசாத்தியமான தைரியசாலிகளாகவும் இருக்கின்றார்கள். காரணம் அவர்கள் ஒட்டும் ஒவ்வொரு வண்டியும் பிணத்தை ஏற்றிச் செல்லும் வண்டி போலவே உள்ளது. டயரும், என்ஜினும் மட்டும் கவனமாகப் பாதுகாக்கப்படுகின்றது. மற்ற அத்தனை பாகங்களும் பயணத்தின் போது காற்றோடு பேசுகின்றது. 

வண்டி எடுத்த முதல் நொடி முதல் அவர்கள் கொண்டு போய் இறக்கி விடும் தனுஷ்கோடியில் உள்ள குறிப்பிட்ட எல்லை வரைக்கும் மணலில் தான் பயணம். நாம் நடந்து சென்றால் கூட அடுத்த அடி எடுத்து வைக்க யோசிக்கும் அளவுக்குத் தண்ணீர் கலந்த மணலும், புதைகுழிகள் போல உள்ள சிக்கல் நிறைந்த பாதையது. கொஞ்சமல்ல நிறையப் பயமாகவே இருந்தது. 

                                                     படம் - வலைத்தமிழ்

ஆனால் ஒட்டுநர் பையன் சர்வசாதாரணமாகக் கையாண்டதைப் பார்த்த போது வண்டியின் பலவீனத்தை விட அவனின் புஜபலாக்கிரமத்தை பாராட்ட வேண்டும் போலத் தோன்றியது. அரை மணி நேர பயணம். மணலும், தண்ணீர் கலந்த மணலும் சுற்றிலும் கடல் நீருமான இந்த உலகத்தைப் பார்த்த போது, தனுஷ்கோடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைப் பார்த்து உரையாடிய போது மனதிற்குள் இப்படித்தான் தோன்றியது. 

"நாம் எவ்வளவு கொடுத்து வைத்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நாம் தான் அதிகமாகத் தினசரி வாழ்க்கையில் அலுத்துக் கொண்டு வாழ்கின்றோம்".

தொடர்புடைய பதிவுகள்



Saturday, March 15, 2014

கடற்கரைச் சாலை - பயணக்குறிப்புகள் 3

இந்தியர்களின் பக்தி மார்க்கத்தில் நிறைய ஆச்சரியங்களைக் கவனிக்க முடியும். காரைக்குடியில் இருந்து நினைத்தால் போய்வரக்கூடிய தொலைவில் உள்ள இராமேஸ்வரத்திற்கு இந்தப் பகுதியில் வாழ்பவர்களில், நான் பார்த்தவரைக்கும் இந்தக் கோவிலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே. ஆனால் இன்று வரையிலும் வடக்கே இருந்து வருபவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். 

அதேபோல உடம்பு ஒத்துழைக்காத பட்சத்திலும் "ஒரு தடவை காசிக்கு போயிட்டு வந்து செத்துடனும்" என்று சொன்னவர்களை அதிகம் பார்த்துள்ளேன். இன்று பிரபல்யமாக இருக்கும் பிள்ளையார்பட்டியை திருப்பூர் வந்த பிறகு யாரோ ஒருவரை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் தான் அந்த ஊரை நான் முழுமையாகப் பார்த்தேன். அது வரையிலும் போகிற போக்கில் அப்படியே கடந்து சென்றது தான். 

இந்த இடத்தில் நம்மவர்களின் அடிப்படை மனப்பான்மைகளையும், எப்போதும் "தூரத்துப் பச்சை" மேல் உள்ள ஈர்ப்பும் கவனிக்கக்கூடியது. அடுத்தச் சந்தில் இருக்கும் கோவிலுக்குச் செல்ல மனமில்லாமல் இருப்பவர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு ஜோராக விரதமிருந்து தங்கள் பக்தி சார்ந்த கடமைகளை நிறைவேற்றுவதில் தமிழருக்கு நிகரானவர்களை வேறு எங்குமே காணமுடியாது? 

என்னுடைய குழந்தைப்பருவத்தில் குடும்பத்தினருடன் இராமேஸ்வரத்திற்கு ரயில் மார்க்கமாகச் சென்றது இன்றும் நினைவில் உள்ளது. ரயில் முழுக்கப் பரவியிருந்த கவுச்சி வாடையும், ஒவ்வொரு நிறுத்தங்களிலும் இறங்கி ஏறிக் கொண்டிருந்த மீன்கள் வைத்திருந்த ஓலைப்பாய் போன்றவைகள் கூட இன்றும் நினைவில் வந்து போகின்றது. பயத்தில் அம்மாவின் கைபிடித்துக் கொண்டு கடலை ஆச்சரியமாகப் பயத்தோடு பார்த்த இராமேஸ்வரத்திற்குக் கடந்த நாற்பது வருடங்களில் மொத்தமாக நாலைந்து முறை தான் சென்றுள்ளேன். 

ஒரு முறை கூட இந்த ஊரை நான் முழுமையாக உள்வாங்கியதில்லை. இந்த முறையும் அப்படித்தான் நடந்தது. ஆனால் இந்தப் பயணத்தின் மூலம் முதல் முறையாகத் தனுஷ்கோடி சென்றேன். 

இந்து,கிறிஸ்துவ,இஸ்லாமிய மதம் என்று கொள்கைகள், நோக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் பக்தியை ரசனையோடு அணுகும் நபர்கள் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இருப்பார்கள். 

விரும்பும் கோவிலுக்குச் செல்ல வேண்டும். வணங்க வேண்டும். நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும். திரும்பி வந்து விட வேண்டும். 

அடுத்தப் பிரச்சனை தொடங்கும். அதற்கு உரிய கோவிலை தேர்ந்தெடுத்து அதற்காக விரதம் இருக்க வேண்டியது. இதுவொரு மாயச்சுழல். 

வாழ்க்கையின் கடைசி வரைக்கும் பக்தியின் அர்த்தமும் புரியாமல் மனம் அமைதி பெறும் வழியையும் அடையப்பெறாமல் வாழும் நாள் முழுக்க முனங்கிக் கொண்டே வாழ்ந்து முடிப்பதே நம்மவர்களின் கொள்கையாக உள்ளது. 

இந்தப் பக்தி மார்க்கத்தைப் பற்றி இந்த இடத்தில் லேசாகப் பார்த்து விடலாம், 

"இப்படி இருப்பதற்கு நீ தான் காரணம்" இது பௌத்தம் சொல்லும் தத்துவம். 

"தன்னுடைய கர்மத்தை செய்து இறைவனை அடைவது கர்ம மார்க்கம்" 

"அறிவைப் பயன்படுத்தி இறைவனை அடைவதற்குப் பெயர் ஞான மார்க்கம்

ஆனால் இந்த இரண்டையும் விட எளிய பாமரத்தனமான பக்தி மார்க்கத்தையே தான் மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் விரும்புகின்றார்கள். ஆலயத்திற்குள் சென்று அனைத்தையும் கொட்டி விட்டு விட்டால் போதும் என்று நினைக்கின்றார்கள். 

இதைத்தான் "ஆத்ம திருப்தி" "பூரண மகிழ்ச்சி" என்கிறார்கள். பக்தி மார்க்கத்தைக் கடைபிடிக்கத் தொடங்கிய பிறகு மூட நம்பிக்கைகள் அணிவகுக்கக் தொடங்கியது. 

வலிக்காத சிந்தனைகளில் இருந்து எங்கேயாவது வழி பிறந்து பார்த்து இருக்கின்றீர்களா? ஏன் தமிழர்கள் மற்ற இன மக்களை விடத் தனித்துவமாக இருப்பதன் காரணத்தை இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடியும். 

இராமநாதபுரத்தில் இருந்து பாம்பன் பாலத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த முறை பாம்பன் தரைப் பாலத்தில் சற்று நிதானமாக நின்று கடலையும் பாலத்தையும் ரசிக்க வேண்டும் என்று மனதில் வைத்திருந்தேன். பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நின்று ரசித்தோம். அப்போது பெருமை மிகு இந்தப் பாலத்தின் லட்சணத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. பராமரிப்பு என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் அளவுக்கு ஒவ்வொரு பகுதியும் பயமுறுத்துவதாக இருந்தது. 

இந்திரா காந்தி அவர்களால் அடிக்கல் நாட்டி (1974) ராஜீவ் காந்தி அவர்களால் (1988) அவர்களால் திறக்கப்பட்ட பாலத்திற்குள் நுழைய சுங்கவரி எதுவும் வசூலிக்கவில்லை. அப்போது கீழே தெரிந்த ரயில் பாலத்தை அதன் விஸ்தீரணத்தை ரசிக்க முடிந்தது. பல வரலாற்று நிகழ்வுகள் ஒவ்வொன்றாக மனதில் வந்து போய்க் கொண்டிருந்தது. 

நாங்கள் சென்ற போது (2014 ஜனவரி) நூற்றாண்டு விழா காணப்போகும் (பிப்ரவரி) பாம்பன் ரயில் பாதை விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இந்தியாவில் முதல் முறையாக 2.3 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய இந்த ரயில் பாலத்தை 146 தூண்கள் தாங்கி நிற்கின்றன. 2006 ஆம் ஆண்டு முதல் அகல ரயில் பாதையாக மாற்றம் பெற்ற பின்னரே இதன் உண்மையான பயன்பாடும், பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் தொடங்கியது. 

ராமேஸ்வரம் என்பது வடக்கே உள்ள காசி போலப் புனிதத்தலம் என்கிற ரீதியில் தான் நம் மக்களின் பார்வையும் மதிப்பும் உள்ளது. ஆனால் வாழ்க்கையைத் தேடிச் சென்றவர்களுக்கும், வாழ முடியாமல் திரும்பி வந்தவர்களுக்கும் சரணாலயம் போல இன்று வரை காட்சியளித்துக் கொண்டிருக்கும் அவலத்தின் சாட்சியான இடமும் கூட.

ஆனால் இந்தப் பாலத்தின் வாயிலாக ஈழத்திற்குச் சென்ற, வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களைப் பற்றிப் பாலத்தில் நின்று கொண்டிருந்த அந்த அரை மணி நேரத்தில் அதிக நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். 

எத்தனை லட்சம் குடும்பங்கள் இந்த ரயில் பாதை வழியே தங்கள் வாழ்க்கையைத் தேடி கடந்த ஒரு நூற்றாண்டில் பயணப்பட்டு இருப்பார்கள்? ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியின் போது உருவாக்கிய வசதிகளையும் அதற்குப் பின்னால் உள்ள வஞ்சகம், சூழ்ச்சி, மனிதாபிமானமற்ற செயல்பாடுகளையும் யோசித்த போது கடற்காற்றில் மிதந்து வந்த உப்புத் தன்மையைப் போல மனமெங்கும் இனம் புரியாத பிசுபிசுப்பு உருவானது.




Friday, March 14, 2014

கடற்கரைச் சாலை - பயணக்குறிப்புகள் 2


சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்வதற்குப் பயன்படும் கடற்கரைச் சாலையைப் பற்றித் தெரிந்த அளவுக்குச் செங்கல்பட்டிலிருந்து இராமநாதபுரம் செல்ல பயன்படும் கடற்கரைச் சாலையைப் பற்றி எனக்கு அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருந்தது. அந்தக் குறை இந்தப் பயணத்தின் வாயிலாக நீங்கியது. 

கீழக்கரை, சாயல்குடி, ஏர்வாடி, போன்ற ஊர்கள் பக்கம் பயணித்தது இதுவே முதல் முறை. இதில் ஒரு மகத்தான் ஆச்சரியம் என்னவென்றால் இந்தச் சாலையில் எந்த இடத்திலும் சுங்கவரி தொந்தரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு மேலாக மூச்சு முட்டும் போக்குவரத்து நெரிசலும் இல்லை. நகரமயமாக்கலின் விளைவாக இரண்டு பக்கமும் உருவாகிக் கொண்டிருக்கும் வளர்ச்சி என்ற பெயரில் உள்ள திடீர் நகர்ப்புற வீக்கங்களும் கூட இல்லை. சுகமான பயணம் என்று சொல்வதை இந்தச் சாலையில் பயணித்த போது உணர்ந்து கொண்டேன். 



கடற்கரை ஓரமாக நம் வசதிக்காக உருவாக்கியுள்ள இந்தச் சாலைகளைப் பற்றிப் பேசும் போது நாம் சிலவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்கு ஓரளவுக்கேனும் தெளிவாகத் தெரிந்த இரண்டாயிரம் ஆண்டுக் காலத் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளில் மாறாத ஒரே இனம் மீனவ இனம். பரதவர் என்றழைக்கப்படும் இந்த மக்களின் வாழ்க்கையும், பண்பாடு கலாச்சாரமும் முழுக்க முழுக்கக் கடலில் தொடங்கிக் கடற்கரையோடு முடிந்து போய் விடுகின்றது. காலம் காலமாக அதைத்தாண்டுவதே இல்லை. மீனவனாகப் பிறந்து கடைசி வரையிலும் மீனவனாகவே வாழ்ந்து முடிவதோடு அவனது தலைமுறையும் இதே தொழிலிலே நுழைந்து விடுவதால் வெளியுலக வாழ்க்கைக்கும் அவர்களும் பல காத தூரம். 

ஆனால் காலமாற்றத்தை உள்வாங்கிக் கொள்ளாமல், மாறிப்போன நவீன வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல் தங்களின் பராம்பரிய பழக்கவழக்கங்கள், தொழில் முறைகள் என்று வளர்ந்த மீனவர்களின் வாழ்க்கை கடந்த முப்பது ஆண்டுகளில் மிகப் பெரிய சிக்கலில் மாட்டி விழி பிதுங்கிப் போய் உள்ளனர். 

ஒரு பக்கம் "எல்லை தாண்டாதே" என்கிறார்கள். மறுபுறம் "இந்தப் பகுதியில் சாலைகள் வருகின்றது காலி செய்து கொடுத்து விடு" என்று துரத்தி அடிக்கப்படுகின்றார்கள். இரண்டு பக்கமும் சிக்கி எலிப்பொறிக்குள் மாட்டியவர்கள் போல அன்றாட வாழ்க்கையைக் கூட வாழ முடியாத அளவுக்கு உள்நாட்டுக்குள் அகதி போலவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

மீனவர்களின் கையில் இருந்த கடல் சார்ந்த தொழில்கள் இன்றைய சூழ்நிலையில் காசிருப்பவர்களின் கைக்கு மாறிக் கொண்டேயிருக்கின்றது. இன்று மீன்பிடி தொழிலில் என்பது சர்வதேச நிறுவனங்களின் கைப்பிடிக்குள் அடக்கமான வலை போல மாறியுள்ள காரணத்தால் ஒவ்வொரு மீனவ குடும்பமும் வறுமை என்ற வலைக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர். இந்தச் சாலையில் பயணிக்கும் போது இது சம்மந்தபட்ட பல மாறுதல்களை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. 

சென்னை முதல் கன்னியாகுமரி வரைக்கும் உள்ள மீனவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அவர்களின் பலம் நமக்கு ஆச்சரியத்தை அளிக்கும். ஆனால் இந்த மீனவர்களிடம் உள்ள பிரிவினைகளை யோசித்துப் பார்த்தால் எப்படி இவர்களுக்கு அவஸ்த்தைகள் உருவாகின்றது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். 

இதன் காரணமாகவே இன்று வரையிலும் இந்த இன மக்களில் இருந்து ஒரு தலைமைப்பண்பு உள்ள எவரும் உருவாகவே இல்லை. இதுவே ஒவ்வொரு சமயத்திலும் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைபிடித்துக் கொண்டு வரும் தமிழ்நாட்டின் இரண்டு கழகக் கட்சிகளுக்கும் மத்தி மீன் சுவையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அறிக்கை வாயிலாக லாவணிக் கச்சேரி நடத்த வசதியாகவும் உள்ளது. 

பாம்பன் பாலம் 

பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியிலிருந்து இராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா என்ற பெயரில் அழைத்துக் கொண்டு வந்தனர். அப்போது (1984) தற்போதுள்ள பாம்பன் பாலத்தின் தொடக்க வேலைகள் நடந்து கொண்டிருந்தது. கடலுக்குள் படிப்படியாக ஒவ்வொரு தூண்களுக்குக் கீழே உள்ள (பீம்களும்) அமைப்புகளின் வேலைகளும் நடந்து கொண்டிருந்தது. இயற்பியல் ஆசிரியர் நாராயணன் படகில் வைத்து அழைத்துக் கொண்டு அந்தத் தூண்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றார். அந்தப் பீம் பகுதியில் ஏறி அது எப்படிக் கட்டப்படுகின்றது என்பதை விளக்கினார். இயற்பியல் விதி, கடல் அரிப்பு, தாங்கும் திறன், எதிர்காலப் பயன்பாடுகள் என்று என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். 

ஆனால் எனக்கோ எங்கே மீன் சுட்டு விற்கின்றார்கள்? என்பதே ஒரே தேடுதலாக இருந்தது. பக்கதில் இருப்பவனிடம் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருந்தேன். அவன் ஓரளவுக்கு மேல் தாங்க முடியாமல் "சார் இவனுக்கு மீன் பொறிக்கும் இடம் தெரியனுமாம்? அப்படியே ப்ரெஷ்ஷா கிடைக்குமாம். அதை முதலில் போய்ப் பார்த்து விடலாம்" என்று சொல்ல இருவருக்கும் அடுத்தடுத்து பளார் பளார் என்று அறை விழுந்தது. அப்படி அடிவாங்கிய ஏதோவொரு பீம் பகுதியுடன் இணைக்கப்பட்ட அந்தப் பாலத்தின் மேல் 30 வருடங்களுக்குப் பிறகு இப்போது நின்று கொண்டிருக்கின்றேன். 

பயணிப்போம்...........

தொடர்புடைய பதிவுகள்