Showing posts with label Tiruchendur. Show all posts
Showing posts with label Tiruchendur. Show all posts

Thursday, March 20, 2014

பயணமும் படங்களும் - செந்தில்நாதன் அரசாங்கம்

தற்போது தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை பலர் "பக்திமான்" என்கிறார்கள். சிலர் "சக்திமான்" என்கிறார்கள். 

ஆனால் ஒரு அரசியல் தலைவருக்கு வன்மும், வக்ரமும், பழிவாங்கும் உணர்ச்சிகளும் மட்டுமே மேலோங்கி இருந்தால் ஒரு தொகுதி எப்படி இருக்கும் என்பதனைக் காண நீங்கள் அவசியம் திருச்செந்தூர் சென்று பார்க்க வேண்டும். காரணம் தற்பொழுது திருச்செந்தூர் தொகுதி திமுக வசம் உள்ளது. முன்பு அதிமுகவில் இருந்து தற்பொழுது திமுகவில் இருக்கும் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 

இந்த ஒரு காரணத்தினால் மட்டுமே ஜெ வின் அடிப்பொடிகள் எளிய தமிழ் மக்களின் கடவுளான செந்தில்நாதன் அரசாங்கத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். ஏறக்குறைய அங்கே இருந்த 20 மணி நேரத்தில் பல பேர்களிடம் கேட்ட போது சொல்லி வைத்தாற் போல இதே குற்றச்சாட்டைத் தான் சொன்னார்கள். 

திருச்செந்தூர் என்ற ஊருக்குள் நுழையும் போது தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த சுகம் முடிந்து போய் விடுகின்றது. கட்டை வண்டிப் பயணம் தொடங்குகின்றது. படு கேவலமான சாலை வசதியும், கண்டு கொள்ளவே படாத அடிப்படை வசதிகளுமாய் அசிங்கமாக உள்ளது. இந்துக்களால் நம்பப்படுகின்ற புண்ணியத் தலத்திற்கு உள்ளே நுழையும் போதே நாம் 50 ஆண்டுகளுக்குப் பின்னால் செல்ல வேண்டிய சூழ்நிலை தான் நமக்கு பரிசாக கிடைக்கின்றது. நாங்கள் சென்றிருந்த போது லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. அதுவே சில மணி நேரம் நீடிக்கச் சாலை மொத்தமும் வயல்வெளி போலவே மாறிவிட்டது. சேறும் சகதியுமாய்க் கால் வைத்து நடக்க முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. ஒரு இடத்தில் மட்டுமல்ல. திருச்செந்தூர் பகுதி முழுக்க அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படவே இல்லை. திட்டமிட்ட புறக்கணிப்பாகவே தெரிகின்றது. 

ஆசான் திரு. கிருஷ்ணன் திருச்செந்தூரில் பிறந்தவர். அவர் தற்பொழுது சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் அவர் எண்ணமும் செயலும் முழுமையாகத் திருச்செந்தூர் என்ற ஊருக்குள் தான் இருக்கின்றது. அவருடன் உரையாடும் போது அதை உணர்ந்து கொண்டேன். அவரின் பூர்வீக வீடு 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. எந்த மாறுதல்களை உள்வாங்காமல் அப்படியே தனது ஒரே அக்காவிடம் ஒப்படைத்துள்ளார். அவரின் வாரிசுகள் தான் இந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். ஓதுவார் குடும்பப் பரம்பபரை என்பதால் தங்களின் பூர்வீகத் தொழிலான இறைவனுக்குப் பூக்கட்டி கொடுத்தல், மற்றும் பூக்கடைக்குத் தேவையான மாலை கட்டி விற்பனை செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

தற்போதுள்ள சாலையில் இருந்து முழங்கால் அளவுக்குக் கீழே செல்லும் அளவுக்கு வீட்டு வாசப்படி அமைந்துள்ளது. ஒரு மழை அடித்தால் வீடு முழுக்கத் தண்ணீரால் நிரம்பி விடும். உள்ளே நுழைந்த போது எனது ஐந்து வயதில் நான் ஊரில் பல இடங்களில் பார்த்த வாழ்க்கை நினைவுகள் வந்து போனது. 

முதல் நாள் மாலை ஆறு மணி அளவில் திருச்செந்தூருக்குள் உள்ளே நுழைந்தோம். மறுநாள் வெளியே கிளம்பி வரும் வரையிலும் கோவில் மற்றும் அதனைச் சார்ந்த பல இடங்களை நிதானமாகப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. அதிகாலை சூரியப் பொழுதின் தன்மையை உணர வேண்டும் என்பதற்காகக் கடற்கரையில் நடந்த போது மிக மிகக் கவனமாகக் காலடி எடுத்து வைக்க வேண்டிய நிலையில் தான் மணல்வெளியெங்கும் மலத்தால் நிரம்பியுள்ளது. காரணம் கேட்ட போது துப்புரவுத் தொழிலாளர்களின் பற்றாக்குறையாம். தலையில் அடித்துக் கொண்டேன்.  ஒரு வேளை ஜெ. வின் ஆஸ்தான ஜோசியர் பணிக்கர் (சோ) சிம்மிடம் ஏதாவது பரிகாரம் செய்யச் சொன்னால் இந்த சூழ்நிலை மாறக்கூடும். 

கடற்கரையில் ஒரு மேடை போல அமைப்பு இருக்க ஒளிப்பதிவாளரிடம் நான் விரும்புவதைச் சொல்லிவிட்டு, ஆசானிடம் உங்கள் விருப்பம் போல ஆசனங்களை வரிசையாகச் செய்து கொண்டு வாருங்கள் என்று ஓரமாக நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன். அதற்குள் பரவலாகக் கூட்டமும் சேர்ந்து விட்டது. அவர்களை ஓரமாக ஒதுங்கி நிற்க வைத்து விட்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில மட்டும் இங்கே.

























தொடர்புடைய பதிவுகள்

ஆசான் பயணக்குறிப்புகள்

பயணமும் படங்களும் - பசியும் ருசியும்