Friday, September 16, 2016

(மானம் கெட்ட) காவேரி கலவர எழுத்துக்கள்

அரசாங்கம் மட்டுமே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி விடமுடியாது. அரசாங்கத்தின் வேலை அதுவல்ல. ஆனால் உலகம் முழுக்க இருக்கின்ற சிறு குறு நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் மூலமாகத்தான் இங்கே வேலைகளும் அது சார்ந்த வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. உருவாக்கப்படுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 

ஆனால் இந்த நிறுவனங்களுக்கான அரசு ஆதரவு என்பது எல்லா இடங்களிலும் பூஜ்யம் சதவிகிதம் தான் ஒத்துழைப்பு கிடைக்கின்றது. வரி வசூலிப்பதில் காட்டுகின்ற ஆர்வம், கறார்தனம் நிறுவனங்களின் வளர்ச்சி குறித்த எந்த அக்கறையும் எந்த அரசாங்கங்களும் அதன் சார்பாளர்களும் எடுப்பதில்லை. தனக்கு என்ன லாபம் என்பதில் தான் அவர்களின் கணக்கு தொடங்குகின்றது. 

தற்போது நடந்து கொண்டிருக்கும் அண்டை மாநிலமான கர்நாடகா காவேரி நீர் திறந்த விட்டதன் தொடர்ச்சியாக உருவான மற்றும் உருவாக்கப்பட்ட கலவரத்தினால் பாதிக்கப்பட்டது திருவாளர் அப்பாவி பொதுஜனம் மட்டுமல்ல. வளரத்துடிக்கும், வளர்ந்து கொண்டிருக்கும், மற்றும் வளர்ந்த ஆயிரக்கணக்கான பல தொழில்கள் சார்ந்த நிறுவனங்களும் தான். பாதிப்பு என்பது எழுத்தில் எழுத முடியாதது. 

கடந்த ஒரு வாரமாக பெங்களூர் விமானம் நிலையம் வந்து சேர்ந்த பொருளை எடுத்து வர முடியாமல் எங்கள் நிறுவனம் தவிக்கும் தவிப்பு எழுத்தில் எழுத முடியாதது. நேற்று என் பார்வைக்கு வந்த உடனே நேற்றும் இன்றும் பெங்களூர் சார்ந்த அத்தனை நண்பர்களையும் தொடர்பு கொண்டு பேசிய போது அங்கே உள்ள அத்தனை அரசியல் தந்திரங்களும், இந்தக் கலவரத்தினை உருவாக்கியவர்கள், ஆதாயம் பெறத் துடிப்பவர்கள், ஆதாயம் அடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்ற பல தகவல்களைப் பெற முடிந்தது. 

நான் பணிபுரியும் நிறுவனம் சார்ந்த வேலைகளை விட இன்றைய ஓய்வு தினத்தில் மனதிற்குள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை முழுமையாக எழுதி வைத்தால் மனம் ஆசுவாசம் அடையும் என்பதால் எழுதத் தொடங்கிய போது நண்பர் வில்லவனின் கட்டுரை கண்ணில் பட்டது. அதனையே இங்கு வெளியிட்டுள்ளேன். 

காரணம் காலம் கடந்து நிற்க வேண்டிய கட்டுரையிது. கோபமும், ஆதங்கமும் கலந்து நான் எழுத நினைத்த பல விசயங்களை நாகரிகமாக சுட்டிக்காட்டி உள்ளார்.  உங்கள் விமர்சனத்தின் அடிப்படையில் நான் சேகரித்த தகவல்களை அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.

பெங்களூரில் வசிக்கும் நண்பர்கள் எழுதிய பல பதிவுகளை, எழுத்துக்களை வாசித்த போது எழுத முடியாத பல வார்த்தைகள் தான் மனதில் வந்து போனது. 

வலைபதிவு என்பது வெறும் சுதந்திர ஊடகம் மட்டுமல்ல. உண்மை நிலவரங்களை அப்படியே எவருக்கும் அஞ்சாமல் எழுதியே ஆக வேண்டிய ஒரு அற்புத சாதனம். ஆனால் பல காரணங்களால் குறிப்பாக "சுய பாதுகாப்பு" கருதி அமைதியாய் உள்ளது என்று பொத்தாம் பொதுவாக எழுதாதீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் எழுத்தின் மூலம் அடைந்த புகழே உங்களைக் காவு வாங்கி விடும்.

தண்ணீரில் விளையாடிய நாடுடா இது என்ற இந்த என் பழைய பதிவை படித்துப் பாருங்கள். நம் செய்யும் தவறுகளும், மனம் கூசாமல் செய்யும் அக்கிரம செயல்களும் எந்த அளவிற்கு எதிர்காலத்தை பாதிக்கச் செய்யப் போகின்றது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்?

+++++++++++++==


கர்நாடகாவில் தமிழக வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு இருவகையான எதிர்வினைகளைச் சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது. 

அதாவது பெங்களூர் பாதுகாப்பாக இருக்கிறது எனும் feel good பதிவுகள் அல்லது இந்தக் கன்னடர்களே இப்படித்தான் எனும் பதிவுகள் வெளியாகின்றன. இரண்டும் உண்மை இல்லை எனும் பதிவுகளும் இருக்கின்றன அவையும் தெளிவான கர்நாடக சூழலை காட்டுவதாக இல்லாமல் காவிரியின் வரலாறும் கர்நாடகாவின் வன்முறைகளுக்கான பின்னணி பற்றிய புரிதல் அற்றவைகளாக உள்ளன. 

இதற்கான தீர்வுகள் என வரும் கருத்துக்கள் இன்னும் நகைப்பூட்டுபவையாக இருக்கின்றன. இரண்டு மாநில முதல்வர்களை வைத்துப் பேசுங்கள் என்கிறார் ஸ்டாலின். நதிகளை இணையுங்கள் என்கிறார் நடிகர் சிவகுமார். இன்னொருபுறம் கன்னடனைப் பார்த்து இன உணர்வைக் கற்றுக்கொள் எனப் புலம்பும் தமிழ்த்தேசிய கருத்துக்களும் உலவுகின்றன. 

ஒப்பீட்டளவில் கர்நாடக மக்கள் அதிகம் நட்புணர்வுள்ளவர்கள், சாமானிய கன்னட மக்களிடம் நீங்கள் வெள்ளந்தித்தனமான தோழமையைச் சுலபத்தில் பெற முடியும். பெங்களூர் பேருந்து நடத்துநர்கள் தமிழக நடத்துநர்களைவிட பயணிகளிடம் அதிகம் இணக்கமாக இருப்பதைப் பார்க்கலாம். ஆனாலும் எப்போதும் கர்நாடகா சுலபத்தில் கலவரம் நடக்கச் சாத்தியம் உள்ள இடமாக (எல்லாக் காவிரி வேலைநிறுத்தங்களும் பெங்களூரில் ஒரு மிகையான அச்சத்தைப் பராமரிக்கும்) இருக்கக் காரணம் அந்த மக்களிடம் உள்ள அரசியல் அறிவீனம். 

பலருக்கும் தங்கள் மாநில அமைச்சர்களைக்கூடத் தெரிந்திருக்காது, கொள்கை சார்ந்தெல்லாம் அவர்கள் உரையாடி நான் பார்த்ததில்லை. கட்சியைத் தெரிவு செய்வதே பெருமளவில் சாதி அடிப்படையில்தான் அங்கே நடக்கும். 

//நீங்க எந்தக் கட்சி என்று நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, நாங்க ஒக்கலிகா சாதிக்காரர்கள் சார், பீஜேபிக்குதான் ஓட்டுப்போடுவோம் என்றார் // 

பெருங்கூட்ட உளவியல் மிகவும் பாமரர்களிடம் சுலபமாக வேலைசெய்யும். தமிழகத்தின் மரியாதை தெரிந்த ஊராகக் கருதப்படும் கோவைக் கலவரத்தின்போது கடைகளைச் சூறையாடியது தொழில்முறை ரவுடிகள் மட்டுமல்ல, சாதாரண மக்களும்தான். முஸ்லீம் பெண்கள் நடுவீதியில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகையில் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து ரசித்தவர்கள் இறைச்சி வெட்டுவதைக்கூடப் பார்த்திராத குஜராத் பெண்கள். 

வன்முறை செய்ய தூண்ட முடியாத மக்கள் கூட்டம் என்றொன்று இல்லை, அதற்கான நியாயத்தைக் கற்பிப்பதிலும் பரவலாக வன்முறையை ஆரம்பித்து வைக்கும் அளவுக்கு ஆள்பலத்தை வைத்திருப்பதிலும்தான் இருக்கிறது சூட்சுமம். 

கர்நாடகாவின் இந்தச் சிக்கலான சூழலுக்கு அடிப்படையாக 3 காரணிகளைக் கருதலாம். 

முதலில் மத மற்றும் இன அடிப்படைவாத இயக்கங்களுக்குக் கிடைக்கும் சற்றே பெரிய எண்ணிக்கையிலான ஆள்பலம். வாட்டாள் நாகராஜ் போன்ற தாதாக்கள் தமிழகத்திலும் இருக்கிறார்கள். 

அவர்கள் குரலுக்காக பாதி மாநிலம் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளாது, ஆனால் அது கர்நாடகாவில் நிகழ்கிறது. இரண்டாவது அரசியல் அறிவற்ற மற்றும் அதற்கு வழியற்ற மக்கள். மூன்றாவது இதற்கு எதிர்குரல் எழுப்ப போதுமான அளவில் ஆட்கள் இல்லாத சூழல். இங்கே தமிழ் தேசியவாதிகளில் சிலர் இனவெறியைத் தூண்ட முனையும்போதெல்லாம் வினாடி தாமதமில்லாமல் எதிர்க் குரல்கள் எழுகின்றன. 

கர்நாடகாவில் அது அனேகமாக இருக்காது. ஒருங்கிணைப்பும் முன் தயாரிப்பும் இல்லாமல் தற்போதைய பெங்களூர் கலவரம் சாத்தியமே இல்லை. மூன்றாண்டுகளுக்கு முன்னாள்கூட பெரிய அளவிலான எதிர்ப்பை கர்நாடகா சந்தித்தது, கிட்டத்தட்ட மாண்டியா 12 நாட்கள் முடங்கியது. அப்போதுகூட இத்தகைய கலவரம் நிகழவில்லை. 

// கன்னட டிவி ஒன்றில் பேசிய விவசாய சங்க பிரதிநிதி எங்கள் ஊர் மழையில் அவர்கள் பங்கு கேட்கிறார்கள், தமிழகத்தில் பெய்யும் மழையில் ஒரு சொட்டுகூட நமக்கு வராது… தண்ணீருக்கு ரிவர்ஸ் கியர் கிடையாது என நிறைய சீரியசாக பேசுகிறார். அதே விவாதத்தில் அமர்ந்துகொண்டு நதிநீர் பங்கீட்டு சட்டங்களை விளக்காமல் இருந்தார் ஜெயா வழக்கில் அச்சமின்றி வாதாடிய வழக்கறிஞர் ஆச்சார்யா// 

தமிழகத்திலும் முஸ்லீம்களுக்கு எதிராக வெகுமக்களின் மௌனத்தின் வழியேயான வன்முறை இருந்தது. அதுவே அவர்களுக்கு எதிரான அரச வன்முறையின் ஆதாரமாக இருந்தது. 

இராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் உணவில்லாமல், மருந்தில்லாமல் மடிந்துபோன லட்சக்கணக்கான குழந்தைகளின் மரணத்தின் பின்னால் இருப்பது அமெரிக்கர்களின் மௌனமும்தான். 

குஜராத் கலவரத்தின்போது இந்தியா முழுவதும் இருந்தது அதுதான். இப்போது காஷ்மீர் பெல்லட் குண்டு தாக்குதல்களை இந்தியா அமைதியாய் கடப்பதும் வன்முறையின் passive வடிவம்தான். இவை எல்லா இடங்களிலும் இருக்கிறது, கர்நாடகாவில் வன்முறையைச் செயலில் காட்ட ஒரு கூட்டம் வளர்த்துவிடப்பட்டிருக்கிறது. நமக்கு அது இல்லை அல்லது இன்னும் இல்லை அல்லது போதுமான அளவுக்கு இல்லை, அதற்கு எதிராகச் சிந்திக்கவும் பேசவும் செயல்படவும் நம்மிடம் ஆட்கள் இருக்கிறார்கள், அது அங்கே இல்லை அல்லது போதுமான அளவு இல்லை. 

இந்தக் கலவரத்தின் பலனை முழுமையாக அனுபவிக்கப்போவது பாஜக, தண்ணீர் கொடுக்காதே என உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் எதிர்ப்பது எடியூரப்பாவும் அவர் கட்சியும், விநாயகர் சதுர்த்திக்காகப் பல அடிப்படைவாத இளைஞர்கள் சில நாட்களுக்கு முன்னால்தான் ஒன்றுகூடியிருக்கிறார்கள். 

இப்போது நடந்திருப்பது நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கலவரம். இந்தப் புள்ளிகளை இணைத்தால் உங்களுக்குப் பிரச்சினையின் அடிப்படை புரியும். இதனை எதிர்க்கத் தெரியாத மற்றும் முடியாத மக்களால் ஒட்டுமொத்த மாநிலமும் ஒரு மோசமான அடையாளத்தைச் சுமக்கிறது. (பிரச்சினை ஏதும் இல்லை எனும் பிரிவினர் உயர் மத்தியதர வகுப்பினர், நிலநடுக்கம், பெருவெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைத் தவிர வேறெந்த சிக்கலும் இவர்களைக் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பதில்லை… குறிப்பாக மனிதர்களால் செய்யப்படும் பாதிப்புக்கள்). 

// ஊருக்குள் வரும்போது தமிழில் பேசாதே என தன் தமிழ் நண்பருக்கு எச்சரிக்கை செய்த கன்னட இளைஞர், இருவரும் இணைந்திருக்கும் குழுவில் “ரத்தத்தைக் கொடுப்போம், காவிரியைத் தரமாட்டோம்” எனும் வாசகத்தைப் பகிர்கிறார்// 

தமிழ்த் தேசிய இயக்கங்கள் குறிப்பிடும் கன்னட இன உணர்வு என்பது அங்கிருக்கும் முட்டாள்தனம் மற்றும் பயத்தின் கூட்டு வெளிப்பாடு. உண்மையில் அதனால் கன்னடர்களுக்கு எந்தப் பலனும் கிடையாது. பெங்களுர் மைசூரைத் தவிர்த்து வேறெந்த இடத்திலும் வளர்ச்சி ஏற்படாத மாநிலம் அது. விவசாயிகளுக்காக எனும் பெயரில் ஒரு மாநகரம் அடிக்கடி முடக்கப்படும் மாநிலத்தில்தான் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 

பெங்களூரின் நிலமும் வளமும் ரெட்டிகளாலும் மார்வாடிகளாலும்தான் ஆளப்படுகிறது, கன்னடர்களெல்லாம் அடிமை வேலைக்குத்தான் இங்குப் போட்டியிட்டாக வேண்டும். 

ஓசூரில் கட்டிட வேலை செய்யும் மண்டியா பகுதி விவசாயக்குடும்பங்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் சிறு நில உடைமையாளர்கள் என்பதையும் விவசாயம் பொய்த்ததால் இந்த கூலிப்பணிகளுக்கு வந்தவர்கள் என்பதையும் நினைவில் வையுங்கள். 

இவையெல்லாம் நாம் எதிர்மறையாக கர்நாடகாவிடம் இருந்து கற்க வேண்டியவை. 

அரசியல் அறிவீனமும், இன மற்றும் மத அடிப்படைவாதிகளுக்கான கிடைத்திருக்கும் எதிர்ப்பு குறைவான பரப்பும்தான் ஒரு மாநிலத்தை வளரவிடாமல் வைத்திருக்கிறது. சிறு எண்ணிக்கையிலான அராஜகவாதிகளின் செயலைக் கண்டிக்க முடியாத பிற மக்கள் அதற்கான மொத்த அவமானத்தையும் சுமக்கிறார்கள். தமிழகத்தில் உருவாகும் பிள்ளையார் பொறுக்கிகளும் அரசியல் பிரக்ஞையற்ற தலைமுறையும் நமக்கு எச்சரிக்கை கொடுக்கும் அறிகுறிகள். 

இவற்றை ஒழிக்காவிட்டால் கர்நாடகாவின் நிலைதான் நமக்கும். (விவசாயம் அழிந்துபோகவிருக்கும் நிலையிலும் தஞ்சாவூரில் விநாயகன் ஊர்வலம் நடக்கிறது எனும் செய்தியை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்) 

நேர்மறையாகவும் அவர்களிடம் கற்க சில விடயங்கள் இருக்கிறது. 

அங்கே அமைச்சர்களையும், முதல்வரையும்கூட சாதாரண மக்கள் எளிதில் சந்திக்க முடியும். மைசூர் சாலை விரிவாக்கப் பணிகளின்போது நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் “நான் பணம் தருகிறேன், உங்கள் வீட்டை காலி செய்வீர்களா? என அப்போதைய முதல்வர் எடியூரப்பாவிடம் வினவினார் ஒரு விவசாயி (அப்போது விகடனில் இந்தச் செய்தி வெளியானது). 

முதல்வருக்காக மணிக்கணக்கில் சாலையை மூடிவைக்கும் அரச ரவுடியிசத்தை நான் பெங்களூரில் கேள்விப்பட்டதில்லை. இப்போதுகூட பத்திரிக்கையாளர் சந்திப்பில் சித்தராமையா நின்றுகொண்டிருக்கும்போது மாநில உள்துறை அமைச்சர் உட்கார்ந்துகொண்டு “சொந்தமாக” பதில் சொல்கிறார். தமிழகத்தில் மதச்சார்பற்றவராகக் காட்டிக்கொள்வது ஒரு அரசியல்வாதிக்கு எத்தனை அவசியமோ அத்தனை அவசியமானது அங்கே ஒரு அரசியல்வாதி எளிமையானவனாக இருப்பது. 

தமிழகத்தில் சாதிச்சங்கங்கள் வலுவடையவும் கர்நாடகத்தில் இனவாத குழுக்கள் வலுவடையவும் அடிப்படையாக இருப்பது மதவாத இயக்கங்கள். இரு இடங்களிலும் அவை வேறு வேறான வழிகளில் தங்கள் நரவேட்டையை நடத்துகின்றன. மக்களின் அறிவுக்குத்தக்கவாறு அவற்றின் வினைவேகம் மாறுபடுகிறது. இவற்றை எதிர்கொள்ள நாம் இன்னும் தீவிரமான அரசியல் அறிவுள்ள சமூகத்தை அமைக்க உழைக்க வேண்டும். 

நிறைவாகச் சொல்லிக்கொள்ள ஒன்றிருக்கிறது, 

லட்சக்கணக்கான மக்களை அச்சமூட்டி எக்காளமிடும் போலித்தனமான கர்நாடக ஒற்றுமையைவிடக் கருத்து சொல்லவும் பயமின்றி நடமாடவும் எல்லா மக்களையும் எப்போதும் அனுமதிக்கும் தமிழக ஒற்றுமையின்மை மேலானது. இரண்டு தரப்பையும் வெறுக்காமல் இருக்கவும் இரண்டு தரப்பில் இருந்து கற்கவும் நமக்கு ஏராளமான செய்திகள் இருக்கின்றன

Friday, September 02, 2016

சிவகுமார் எனும் மானுடன்


நாம் வாசிக்கும் சில புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதலாம். சில புத்தகங்களுக்கு விமர்சனம் எழுத முடியாமல் நாமே தடுமாறிப் போய் விடக்கூடும். இந்தப் புத்தகத்திற்கு விமர்சனப் பார்வையை எழுதி வைத்து விடலாம் என்று மீண்டும்  வாசிக்கத் தொடங்கியதும் ஏன் நாம் இந்தப் புத்தகம் குறித்து சிவகுமார் அவர்களுக்கு எழுதிய கடிதத்தையே விமர்சனமாக இங்கே தந்து விடலாமே? என்ற எண்ணம் உருவானது. 

காரணம் கடந்த ஆறு ஆண்டுகளாக என் சுயத்தை என் பலகீனத்தை வெளிப்படையாகப் பல சமயங்களில் எழுத்தாக மாற்றி அனைவரின் பார்வைக்கும் தந்துள்ளேன். இப்போதும் அதையே செய்ய விரும்புகின்றேன். 

முதல் பதிவு எழுதியதும் நண்பர்கள் காட்டிய ஆதரவு ஆச்சரியமானது. வலைப்பதிவு என்பது ஃபேஸ்புக் வந்ததும் காலாவதியாகி விட்டது என்பது பொய் என்றே தெரிகின்றது. ஒவ்வொன்றுக்கும் அதற்குத் தகுந்தாற் போல உயிரோட்டம் கடைசி வரைக்கும் இருக்கக்தான் செய்யும் என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

விமர்சனத்தின் வாயிலாகத் தனி மடல் வாயிலாக ஆதரவு அளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு. 

+++++++++

திரு. சிவகுமார் அவர்களுக்கு வணக்கம். 

நான் இப்போது ஏற்று இருக்கும் தொழில் வாழ்க்கைப் பணியின் காரணமாகக் கடந்த சில நாட்களாக இந்தப் புத்தகத்திற்காக அதிகாலைப்பொழுதை ஒதுக்கி படித்துக் கொண்டு வருகின்றேன். மொத்தமாக ஒரு முறை மேலோட்டமாக உள்வாங்கி விட்டுக் குறிப்பிட்ட சிலர் சொல்லியுள்ள விசயங்களைப் படித்தேன். அதிலும் குறிப்பாக உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பார்வை எப்படியுள்ளது என்பதை அதிக கவனம் செலுத்தினேன். 

"ஒரு மனைவிக்குத்தான் முழுமையாகத் தெரியும். தன்னுடைய கணவர் எந்த அளவுக்கு நல்லவர் அல்லது பலகீனமானவர்". கணவர் சமூகத்தில் எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதற்கு அவர் முழுமையாகத் தகுதியானவரா? என்பதை மனைவிமார்கள் அத்தனை பேர்களும் உணர்ந்தே வைத்திருப்பார்கள். 

சிலர் நேரிடையாக சுட்டிக் காட்டுவார்கள். பலர் "நமக்கேன் வம்பு?" "பேய்க்கு வாக்கப்பட்டாயிற்று. நாம் வாழ்ந்து தான் ஆகனும்" என்று சகிப்புத்தன்மையோடு வாழ்க்கை நடத்துவார்கள். அதனால் புத்தகத்தில் லஷ்மி அம்மா உங்களைப் பற்றி என்ன சொல்லியுள்ளார்கள் என்பதனைத் தான் நேற்று அதிகாலையில் வாசித்தேன். 

கடந்த 25 ஆண்டுகளாக நான் ஆறாவது படிக்கும் காலத்தில் இருந்து இன்று வரையிலும் வார, மாத, தினசரி பத்திரிக்கைகள் அனைத்தையும் வாசிக்கின்றேன். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வாசித்து முடித்துள்ளேன். எழுத்தாளர் என்ற பாத்திரத்தில் உள்ளே நுழைந்து கடந்த ஆறு ஆண்டுகளாக பதினைந்து ஆண்டுகள் ஒருவர் எழுத வேண்டிய விசயங்களை வலைப்பதிவில் எழுதியுள்ளேன். 

புத்தகமாக மின் நூலாக அனைவரின் பார்வைக்கும் சென்றுள்ளேன். ஆனால் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது எனக்குள் உருவான உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. 

காரணம் சிவகுமார் என்ற தனிமனிதனை ஊடகங்கள் வாயிலாகச் சமீபகாலமாக நண்பர் மூலமாக நெருக்கமாகக் கவனித்து வந்தவன் என்ற முறையில் இதில் பல விசயங்கள் என்னை அப்படியே புரட்டிப் போட்டுள்ளது என்றால் அது மிகையில்லை. 

அதிலும் குறிப்பாக லஷ்மியம்மா தன் கணவரைப் பற்றி சொல்லியவற்றை வாசிக்கும் போது என்னால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. 

நான் எழுத்துத்துறையில் இருப்பதால் நடையோட்டம், தவறுகள், குறைந்த அழகியல் போன்ற பலவற்றைக் கவனிக்கும் எனக்கு லஷ்மியம்மா மனதோடு பேசிய விசயங்களை வார்த்தைகளாகச் சொன்னதும் அதை அமுதவன் கச்சிதமாகச் செதுக்கியதும் இந்தப் புத்தகத்தின் முத்தாய்ப்பு என்றால் அது முற்றிலும் உண்மை. 

தமிழில் நெகிழ்ந்தேன் என்றொரு வார்த்தையுண்டு. லஷ்மியம்மா சொல்லியவற்றை வாசித்துக் கொண்டிருந்த போது அந்த அதிகாலை வேலையில் என் மனைவி உணவு தயாரித்துக் கொண்டிருக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். என் நடவடிக்கைகளைப் பார்த்து என்ன ஆக்டிங் கொடுக்குறீங்க? என்றார். காரணம் அந்த அளவுக்கு நான் ஆணாதிக்கம் நிறைந்தவன் என்பதும் எதையும் கடுகளவு கூட விட்டுக் கொடுக்காதவன் என்ற குற்றவுணர்ச்சியும் என்னை வாட்டி வதைத்தது. வரிகளை திரும்பத் திரும்ப வாசிக்கும் நான் உள்ளே அந்த வார்த்தைகளுக்குள் இருப்பதாகவே எனக்குத் தெரிந்தது. இனி எப்படி வாழ வேண்டும்? என்ற வைராக்கியத்தை எனக்குள் உருவாக்கியது. 

ஒவ்வொரு கால கட்டத்திலும் நான் எப்படி ஆக வேண்டும் என்பதனை இந்தச் சமூகத்தில் உயிருடன் மற்றும் இறந்து போனவர்களை மானசீகமாக வைத்து என்னைச் செதுக்கி வந்துள்ளேன். அதில் அவர்கள் சமூகத்தில் பிரபலமாக இருப்பார்கள், அல்லது நான் வாழும் வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரண மனிதர்களாகக்கூட இருந்து இருப்பார்கள். பிரபலமாக இருப்பவர்களைப் பற்றி நாம் வைத்துள்ள பிம்பங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாறி விடும். காரணம் அவர்களின் வாழ்க்கை என்பது "சொல்லுக்கும் செயலுக்கும்" உள்ள பெரிய வித்தியாசத்தை எளிதில் கண்டு கொள்ள முடியும். அந்தப் பிம்பம் மறைந்து விடும். 

இதே போல என் வாழ்க்கையில் பலரும் வந்து போயிருக்கின்றார்கள். ஆனால் கடந்த 25 வருடங்களாக சிவகுமார் என்றொரு தனிமனிதனை நடிகராக, ஓவியராக நான் என்றுமே பார்த்தது இல்லை. என் வாழ்க்கைக்குத் தேவையான நான் கற்றுக் கொள்ள வேண்டிய நல்லதொரு குடும்பத் தலைவராகவே பார்த்து வருகின்றேன். எத்தனைப் பெரிய புகழ் வாய்ந்த மனிதராக இருந்தாலும் அவர் குடும்ப வாழ்க்கையில் தோற்றுப் போயிருந்தால் என் பார்வையில் முழுமையான தோல்வி பெற்ற மனிதராகத்தான் பார்க்கின்றேன். அதன் காரணமாகவே என் குடும்ப வாழ்க்கையில் முடிந்த வரைக்கும் என் ஈகோவை அவ்வவ்போது குறைந்து என் குறைகளை தெரியப்படுத்தி மனைவியைச் சமாதானப்படுத்தி விடுகின்றேன். குழந்தைகளிடம் இன்னமும் நெருங்கிப் பழகுகின்றேன். 

இவை அனைத்தும் சிவகுமார் என்ற மனிதரிடம் நான் கற்றுக் கொண்டே விசயங்கள். 

குறிப்பாக சூர்யாவும் கார்த்திக்கும் சொல்லியுள்ள பலவிசயங்களை ஏற்கனவே பல சந்தர்ப்பங்களின் வாயிலாக அறிந்து கொண்டிருந்த போதிலும் அவர்கள் சிவகுமார் என்ற மனிதரை உள்வாங்கி விதம் தான் என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆங்கிலத்தில் உள்ள "மெச்சூரிட்டி" என்ற வார்த்தையை சிவகுமார் என்ற மனிதர் தனது தலைமுறைக்குக் கடத்தியுள்ளார். அவர் சேர்த்துள்ள புகழ், அதிகாரம், அந்தஸ்து, சொத்து, பிரபல்யம் என்ற மாயை போன்ற அத்தனையையும் விட இது தான் சிவகுமார் என்ற மனிதரை இன்னும் அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பேசு பொருளாக வைக்கப் போகின்றது என்பதனை இந்தப் புத்தகத்தின் வாயிலாக உணர்ந்துள்ளேன். 

என் பலம் பலவீனம் எனக்கு நன்றாகவே தெரிகின்றது. இந்தப் புத்தகம் எனக்கு மட்டுமல்ல, என் மூன்று குழந்தைகளுக்கும் என் மனைவிக்கும் கீதை. 

என் பலவீனத்தை சிவகுமார் என்ற மனிதரின் வாழ்க்கை மூலமாக மறைமுகமாக எனக்குச் சுட்டிக்காட்டிய அத்தனை நல் இதயங்களையும் வாழ்த்துகிறேன். காலம் முழுக்க போற்றக்கூடிய பணியை அமுதவன் செய்துள்ளார். அவருக்கும் காலம் முழுக்க சொல்ல வேண்டிய என் குடும்பத்தினரின் அன்பை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன். 

மாறாத பிரியங்களுடன் 

ஜோதிஜி திருப்பூர் 
தேவியர் இல்லம். 

Sunday, August 28, 2016

சினிமாவுக்குப் போகலாம் வாரீகளா?


மீண்டு(ம்) வந்தேன். 

என் எழுத்துலக பயணத்தில் தொடர்பில் இருந்த, தொடர்ந்து என் தனிப்பட்ட தொடர்பில் இருக்கும், இனி தொடரப் போகும் நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

அடுத்த மாதம் செப்டம்பர் 30 அன்று எழுதுவதை நிறுத்தி ஒரு வருடம் முடியப் போகின்றது. மீண்டும் இப்பொழுது எழுதலாம் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. முதல் பதிவு இன்று முதல் தொடங்குகின்றது. இனி தொடர்ந்து எழுதுவேன்.

என் கடந்த கால எழுத்துலக பயணத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் என்பது என் தகுதிக்கு மீறிய விசயமாகும்.  குறிப்பாக ஈழம் வந்தார்கள் வென்றார்கள் என்ற மின் நூல், வெளியிட்ட மின் நூல் தளத்தில் வெளியான அதிகபட்ச தரவிறக்கம் கொண்ட முதல் பத்து புத்தகங்களில் (46.846) ஒன்றாக உள்ளது என்ற மகிழ்ச்சியை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.

இது தவிர வெளியிட்ட ஏனைய ஏழு மின் நூலும் சேர்த்து மொத்தமாக 1,51,298 பேர்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. அத்தனை உள்ளங்களுக்கும் என் நன்றி.


காரணங்கள்  x காரியங்கள் 

சமீபத்தில் நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவர் பேசிய வார்த்தைகள் அடுத்த இரண்டு நாட்கள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. "காலமென்பது இரக்கமற்ற அரக்கன். ஒவ்வொரு சமயத்திலும் சல்லடையில் போட்டு சலித்துக் கொண்டேயிருக்கும். நீ பதரா? இல்லை அரிசியா? என்பதனை நீயே கண்டு கொள்வாய்" என்றார். எழுதியதை நிறுத்திய போது இனி நம்மிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று நினைத்தே எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்தினேன். ஆனால் கடந்த சில மாதங்களாகக் காலம் மற்றொரு புதிய பாதையை உருவாக்கியுள்ளது. அது தான் தமிழ்த் திரைப்பட உலகத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது. 

மாற்றம்  x தக்க வைத்துக் கொள்வது? 

வாசிப்பின் தன்மையும் அளவு கோலும் மாறிக் கொண்டே இருக்கின்றது. கணினி பயன்படுத்தத் தெரிந்தவர்களும், நவீன தொழில் நுட்பத்தைக் கையாளத் தெரிந்தவர்களுக்கும் கூடுதல் அங்கீகாரம் கிடைக்க காரணமாக உள்ளது. வெறும் எழுத்தாளன் என்பதனைத் தாண்டி சமகாலத்தை பிரதிபலிக்கத் தெரிந்தவனுக்கு, வாசிக்க விரும்பும் நடையில், எளிமையுடன் கூடிய சுருக்கத்தைத் தரமுடிந்தவர்களால் மட்டும் எழுத்துலகில் நீடித்து இருக்க முடிகின்றது. நானும் மாறியுள்ளேன். மாற்றத்துடன் பயணிப்போம். 



எழுத்து  x சினிமா 

"எல்லாச் சாலைகளும் ரோம நகரை நோக்கி" என்ற பிரபல வாசகத்தைப் போல துண்டு துக்கடா கவிஞர்கள் முதல் முண்டாசு கட்டும் எழுத்தாளர்களின் இறுதி இலக்கு சினிமா.

ஃபேஸ்புக் மற்றும் சினிமா என்ற இந்த இரண்டு வார்த்தைகளும் நூறு சதவிகித தமிழ் வார்த்தைகளாக மாறிவிட்டது. நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இது தான் உண்மை.

நான் வலைப்பதிவில் எழுதத் தொடங்கிய முதல் நாள் முதல் கடைசி வரையிலும் திரைப்படங்கள் குறித்தோ, முதல் நாள் முதல் விமர்சனம் போன்ற மாயையிலிருந்து விலகியே தான் இருந்தேன். நான் எழுதிய 600 க்கும் மேற்பட்ட பதிவுகளில் நாலைந்து பதிவுகள் மட்டுமே திரைப்படங்கள் சார்ந்த விசயமாக இருந்தது. காரணம் வெறுப்பல்ல. திரைப்படம் என்பது மிகவும் கவனமாக கையாள வேண்டியது. ஆனால் இன்று காசு இருப்பவர்களின் கைப்பாவையாக மாறியுள்ளதால் ரசனை என்பது பின்னுக்குச் சென்று பணம் என்பதே பிரதானமாக மாறியுள்ளது. 



அரசியல் x சினிமா 

இந்த இரண்டு உலகத்திலும் ஊடகங்களில் வரும் செய்திகளை விட வெளியே பகிர முடியாத செய்திகள் தான் அதிகம். கிளுகிளுப்புத்தனமாக விசயங்களில் உள்ள ஆர்வத்தைத் தாண்டி வெளியே வந்து விட்ட காரணத்தால் அது குறித்து எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதினால் மட்டுமே மற்றவர்கள் போல திரைப்படத்தை சிலாக்கியப்படுத்தி எழுதியதில்லை. ஆனால் பள்ளிப்பருவம் முதல் இன்று வரையிலும் நான் வாசித்த வாசிப்புகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் என் ஏற்றத்திற்கு உதவியுள்ளது. இன்று அதிகமாக உதவிக் கொண்டிருக்கின்றது. 

திரை  x  படம் 

வாழ்க்கை முழுக்க ஒவ்வொருவருக்கும் ஒரு திரை தேவைப்படுகின்றது. தங்கள் பலவீனங்களை மறைந்துக் கொள்ள ஒவ்வொருவரும் அவருக்கான திரைகளை உருவாக்கி வைத்துக் கொள்கின்றார்கள். நான் பணியாற்றும் ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அவர்களின் வாழ்நாள் லட்சியமான திரைப்பட தயாரிப்பாளர் என்ற நிலையைக் கடந்த ஒரு வருடத்தில் அடைந்துள்ளார். அதற்காக சில வருடங்கள் முன் முடிவுகளை எடுத்து, அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைக்காகக் காத்திருந்து இப்போது சரியான இடத்தை அடைந்துள்ளார். "மாயை" என்று சொல்லப்படும் இந்தத் திரைப்பட உலகத்தை எந்த "மயக்கத்திற்கும்" மயங்காதவர் நிச்சயம் வெல்வார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

காரணம் கடந்த 25 வருடங்களாக ஊடகங்களை உள்வாங்கியவன் என்ற முறையில் நான் கற்று வைத்துள்ள வித்தைகளை அவருக்குப் பின்புலமாக நின்று கொண்டு அவருக்குத் தேவையான அனைத்து விசயங்களைச் செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். இது குறித்த பல தகவல்களை என் அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுகின்றேன். 

அங்கீகாரம்  x புகழ்

புகழ் என்பதனை வெளிச்சத்தோடு ஒப்பிட்டுப் பேசுகின்றார்கள். மயங்காதவர்கள் யாருமில்லை என்கிறார்கள். சுயம் இழந்து போய்விடுவோம் என்ற கவலைகள் உருவாவது இயல்பே. ஆனால் ஆணி வேர் என்பதனை எவரும் நினைவில் வைத்திருப்பதில்லை. அடிபட்டு மிதிபட்டு உள்ளே உள்ள ரணங்கள் அப்படியே தங்கிப் போய் இருக்க எத்தனைப் புகழ் மாலைகள் கழுத்தில் வந்து விழுந்தாலும் இது காய்ந்து போய் விடக்கூடும் என்பதனை உணராதவர்கள் மட்டுமே வெளிச்சத்தை விரும்புகின்றார்கள் என்று அர்த்தம், 

திரைப்பட உலகம் மாயை அல்ல. தொடர்ந்து வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டே இருப்பதால் நம்ப வைக்கப்படும் ஒரு வினோத உலகம். இது தான் சிலருக்குச் சுண்டி இழுக்கக்கூடிய விசயமாக உள்ளது. என்னைப் பொருத்தவரையிலும் முரண்பாடுகள் நிறைய உள்ள உலகத்தை அருகே நின்று கவனிக்கும் வாய்ப்பாகவே இதனைப் பார்க்கின்றேன்.


ஆனால் என் விருப்பமான தொழில் என்பது கடைசி வரைக்கும் ஏற்றுமதி(ஆடைத் தொழில்) மட்டுமே. திரைப்படம் சார்ந்த பணிகள் என்பது ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே.

என்னைச் செதுக்கிய புத்தகம்

ஒவ்வொரு சமயத்திலும் யாரோ ஒருவர் என் மாற்றத்திற்குக் காரணமாக இருந்துள்ளார்கள். அதே போல ஒரு புத்தகம் என் சிந்தனை மாற்றத்திற்குக் காரணமாக இருந்ததுள்ளது. இப்போது என்னை அதிகம் பாதிப்புக்குள்ளாக்கிய புத்தகம் எழுத்தாளர் அமுதவன் எழுதிய சிவகுமார் எனும் மானிடன். இந்தப் புத்தகத்தைப் பற்றி தனிப்பதிவாக எழுதுகிறேன்.


இந்தப் புத்தகத்தை இன்னமும் முழுமையாகப் படித்து முடிக்கவில்லை. படித்தவற்றையே திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருக்கின்றேன். பல அத்தியாயங்களை எளிதில் கடக்க முடியவில்லை. என் ஆன்மாவோடு பேசுவது போல அமுதவனின் எழுத்து நடை உள்ளது.

இரட்டையரில் மூத்தவர் வாசிப்பு பழக்கத்தின் அடுத்த கட்டத்திற்கு வந்து விட்ட காரணத்தால் அவரும் 100 பக்கங்களுக்கு மேல் வாசித்துள்ளார். அப்பாவை இது போல் கொண்டாடுவாயா? என்று கேட்ட போது சிவகுமார் போல வாழ்ந்து காட்டுவீர்களா? அப்படியென்றால் அமுதவன் மாமா போல எழுத முடியுமா? என்று யோசிப்பேன் என்று சொல்லியுள்ளார்.