பணக்காரர்களின் உலகம்
எப்படி இருக்கும் என்று நீங்கள் எப்போதோவது யோசித்து பார்த்ததுண்டா? உங்களைப் போலவே நானும் பத்திரிக்கைகளில் வரும் உலக பணக்காரர்களின் வரிசைகள் முதல், உள்ளூர் பணக்கார்களின் வரிசைகள் வரையிலும்
படித்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.
மற்ற நாடுகளின்
எப்படியோ? ஆனால் இந்தியாவில் பணக்காரர்
ஆக வேண்டுமென்றால் மிகப் பெரிய புத்திசாலிதனமோ, கடுமையான
உழைப்போ தேவையில்லை. ஆனால் நிச்சயம்
சாமர்த்தியம் என்பது அவசியம் தேவை.
குறிப்பாக தரகு வேலை பார்க்கத் தயாராக இருந்தால் எந்த துறையிலும் எளிதாக ஜெயித்து
மேலே வந்து விடலாம்.
நாம் பேசப் போவது
பணக்கார உலகத்தின் அரசியல்,பண
செல்வாக்கைப் பற்றியல்ல. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு இந்த பணம்
கடத்தப்படுத்துவதும், அதை கையாளும் வாரிசுகளின் வாழ்க்கையைப்
பற்றியுமே பேசப்போகின்றோம்.
சாதாரண நடுத்தரவர்க்கத்தினரின்
வாழ்க்கையின் போராட்டத்தை போல இவர்களின் போராட்டங்கள் எது குறித்து இருக்கும்? எப்படி இருக்கும் என்பது போன்ற பல
கேள்விகளை அடிக்கடி எனக்குள் கேட்டுக் கொள்வதுண்டு. அதை இப்போது மிக அருகில்
இருந்து பார்த்துக் கொண்டிருப்பதால் மனதில் இருக்கும் ஆச்சரியங்களை பகிர்ந்து
கொள்கின்றேன்.
திருப்பூரில் நான்
கடந்து வந்த பாதையில் பார்த்த பல முதலாளிகளின் வாரிசுகளை தொடக்கம் முதலே பார்த்துக்
கொண்டிருக்கும் காரணத்தால் பல விசயங்களை உத்தேசமாகத்தான் மனதில் வைத்திருந்தேன். பத்தாண்டுகளுக்கு
முன்பு எனக்கும் முதலாளிகளின் வட்டத்திற்கும் இடையே பல படிகள் இருந்தன, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் அறிந்து
கொள்ளும் முன்பே அடுத்தடுத்து ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் எதையும் மனதில் வைத்துக்
கொள்ள முடியாமல் கடந்து வந்துள்ளேன். ஆனால்
தற்போதுள்ள பதவியின் காரணமாக மங்கலாக பார்த்த பல விசயங்களை என்னால் தெளிவாக புரிந்து
கொள்ள முடிகின்றது.
வியப்பு ஒரு பக்கம். வேதனை மறு பக்கம்.
நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து
வந்த எனக்கு வெளி உலகம் அறிமுகம் ஆனது முதல் இன்று வரை தினந்தோறும் அடுக்கடுக்கான ஆச்சரியங்கள்.
திருப்பு முனைகளை சந்தித்துக் கொண்டே தான் வருகின்றேன். இருந்த போதிலும் பல புதிர்கள்
இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. எதார்த்த வாழ்க்கையின் ஆச்சரியங்களை
வேடிக்கை பார்த்துக கொண்டிருக்கின்றேன்.
இந்தியாவில் உள்ள சொல்லி
மாளமுடியாத ஏற்றத்தாழ்வுகளும் அதை சகித்துக் கொண்டு அதற்கு தகுந்தாற்போல ஒவ்வொரும்
தன்னை மாற்றிக் கொள்ளும் விதமும் என்னை ரொம்பவே ஆச்சரியப்பட வைக்கின்றது. தவறு யார்
மேல்? என்பது போல பல கேள்விகள் எனக்குள்
இருந்தாலும் அதற்கான முழுமையான விடைகள் கிடைத்தபாடில்லை. ஒன்றோடு மற்றொன்று, அதோடு
இன்னோன்று என்று ஒவ்வொரு மனிதர்களின் குறைகளும் நிறைகளும் கண்ணில் தெரிகின்றது. மொத்தத்தில்
உழைக்க விரும்பாதவர்களின் கூட்டம் மட்டும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கின்றது,.
ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில்
கல்லூரி வரைக்கும் ஒரு ஆசையும், வேலைக்கு
வந்த பிறகு மற்றொரு விதமாகவும் தங்களை மாற்றிக் கொள்கின்றனர். வாழ்ந்து முடிக்கும்
போகும் ஏக்கத்தை மட்டும் தங்களின் வாரிசுகளுக்கு கடத்தி விட்டு இறந்தும் போய் விடுகின்றனர்.
பல நடுத்தரவர்க்க இளைஞர் கூட்டத்தின் வாழ்க்கையை பணம் படைத்தவர்களின் வாரிகளின் வாழ்க்கையை
ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருக்கின்றேன். மொத்தத்தில் பணக்காரர்களின் குடும்ப வாழ்க்கையென்பது
வேறுவிதமாகவே உள்ளது.
தொடக்கப்பள்ளி வாழ்க்கையில்
பத்து பைசா ஐஸ்க்கு ஏங்கிய காலமும், பள்ளி இறுதியில் எப்படியாவது ஒரு திரைப்படத்திற்கு போய்விட மாட்டோமா என்ற ஏக்கத்தை
கல்லூரியின் இறுதி ஆண்டில் தான் என்னால் நிறைவேற்ற முடிந்தது. கட்டுப்பாடுகள் ஒரு பக்கம். கடைபிடித்தே ஆக
வேண்டிய கட்டளைகளை மறுபக்கம். இத்தனையும் கடந்து வந்து தான் என்னுடைய இன்றைய வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். தனிப்பட்ட என் வாழ்க்கையில் எந்த குறையும் இல்லாத போதும்
கூட லட்சியங்களை எட்ட முடியாதவர்களின் வாழ்க்கையை மறுபக்கம் பார்க்க வேண்டியதாக உள்ளது.
ஆனால் திருப்பூருக்குள்ளும்
சுற்றியுள்ள பல ஊர்களிலும் பல நிறுவன முதலாளிகளின் வாரிசுகள் படிக்கும் பள்ளி வாழ்க்கையென்பது
வெளிநாட்டு கலாச்சார வாழ்க்கைக்கு சரி சமமாகவே இருக்கிறது. கலாச்சார சிதைவு என்று ஒரு சொல்லில் இதை கொண்டு
வந்தாலும் இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பின்னால் இவர்களுக்காக காத்திருக்கும்
ஒரு நிறுவன சாம்ராஜ்ய சரிவுக்கு காரணமாக அமைந்து
விடுகின்றது என்பது தான் உண்மை. பள்ளிக்கூட
படிப்பறிவு உள்ள ஒருவர் தன் கடுமையான உழைப்பால் 30 வருடங்களாக பாடுபட்டு சேர்த்து உருவாக்கிய
ஒரு ஏற்றுமதி நிறுவன சாம்ராஜ்யத்தை வாரிசுகள் பொறுப்புக்கு வந்த நாலைந்து வருடங்களில்
தலைகீழாக மாற்றி நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிறுவனத்தின் நட்ட கணக்கினால்
வாரிசுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால்
இந்த நிர்வாகத்தை நம்பி நேரிடையாக மறைமுகமாக வாழ்ந்து கொண்டிருககும் அத்தனை குடும்பங்களும்
நடுத்தெருவுக்கு வந்து விடுகின்றது.
பணக்கார வாரிசுகளின் பள்ளி
வாழ்க்கையென்பது வேறு விதமாக உள்ளது. இந்த பள்ளியில் தான் சேர வேண்டும் என்பதிலிருந்து
தொடங்குகின்றது. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொருவிதமான தராதரம். அந்த பள்ளியின் தரம் குறித்த
கவலையை விட சமூக கௌரவம் அல்லது ஸ்டேடஸ் சிம்பல் என்பதாகத்தான் இவர்களின் வாழ்க்கை தொடங்குகின்றது.
நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தங்கள் வாரிசுகளை ஒரு பள்ளியில் சேர்ப்பதற்கு
முன்பும், சேர்த்த பிறகும் மனதில் கொண்டிருக்கும்
கவலைகளை பட்டியலிட முடியாது. கல்வி குறித்த அக்கறை, எதிர்காலம்
குறித்த கவலை, பிள்ளைகள் பெறவேண்டிய மதிப்பெண்களின் அவசியம் போன்ற
எதுவும் பணக்கார வாரிசுகளுக்கு இல்லை என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்...
மொத்தத்தில் இவர்களுக்கு
எது குறித்தும் கவலையில்லை. வாகனம், வண்டி, பாக்கெட் மணி, முதன்மையாகவும்,
கல்வியென்பது இரண்டாம் பட்சமாகவும் இருக்கின்றது. இவர்கள் பிஞ்சில் பழுத்த
பழமாக வாழ்க்கையில் அனுபவித்தே ஆக வேண்டிய சந்தோஷங்களை உடனடியாக அனுபவிக்கும் வேகமும்
என்னை ரொம்பவே யோசிக்க வைக்கின்றது. ஒரு பள்ளியில்
ஆறாவது படிக்கும் பையன் கெட் டு கெதர் பார்ட்டீ என்ற பெயரில் ஷாம்பெய்ன் மற்றும் பீர்
போத்தல்களை பயணிக்கும் வாகனத்தில் கொண்டு போய் மொத்தமாக இறக்கி கொண்டாடிய கொண்டாட்டங்களை
பார்த்த போது கனவா நிஜமா என்பது போலவே இருந்தது. இவர்கள் படிக்கும் பள்ளிகளும் வசூலிக்க
வேண்டிய பணத்தில் மட்டும் குறியாக இருப்பதால் மௌன சாட்சியாகவே அங்கீகாரம் கொடுத்து
இவர்களை கெடுத்துக் கொண்டுருக்கிறது.
இவர்கள் தட்டுத்தடுமாறி
பள்ளி இறுதியை தாண்டி விட்டால் போதும். நிச்சயம் ஏதோவொரு ஒரு வெளிநாட்டில் பணம் கட்டி
அல்லது பணம் கொடுத்து ஒரு டிகிரியை வாங்க வைத்து விட்டால் வாரிசுகளின் கல்வி வாழ்க்கை
முடிவுக்கு வந்து விடுகின்றது. நிச்சயம் ஆங்கிலம் பேசமுடியம். இந்த ஒரு தகுதியே போதும்
என்ற நிலையில் இருப்பதால் சமூக, தொழில்
அங்கீகாரத்திற்குள் எளிதாக நுழைந்து விட முடிகின்றது.
நம்மூர் சாதாரண பி.காம்
பட்டப்படிப்புக்கு அமெரிக்காவில் தனது மகனை படித்து வைக்க ஒரு முதலாளி செலவளித்த தொகை
ஒரு கோடி ரூபாய். பையன் இப்போது நிர்வாகத்திற்கு
வந்து விட்டார். திருபபூருக்கு அருகே உள்ள ஒரு பள்ளியில் 12 வருடமும் குடும்ப வாடையே
இல்லாமல் படித்து, குடும்பத்தினர்
விரும்பியபடி வெளிநாட்டிலும் படித்து முடித்து நிர்வாக பொறுப்புக்கு உள்ளே வந்த முதல்
வருடம் நிறுவனம் இழந்த தொகை சுமார் ஆறு கோடி. குடும்ப பாசமும் இல்லை. அப்பா உழைத்த
உழைப்பின் அக்கறையும் தெரியாமல் அடுத்தது எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற ரீதியில் எடுத்த
முடிவுகளால் நிர்வாகம் தள்ளாடிக் கொண்டு மூடுவிழாவை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது.
இதனால் நிர்வாகத்திற்கு பாதிப்பு என்பதை விட நிர்வாகத்தை நம்பிய பல துணை நிறுவனங்கள்
தெருக்கோடிக்கு வந்து பல பேர்கள் கடனுக்கு பயந்து காணாமல் போய்விட்டார்கள்.
ஆனால் நடுத்தர
வர்க்கத்தினரின் வாரிகளின் எண்ணங்கள் உயர்வாக இருக்கலாம். உழைப்பும், நேர்மையும் கூட அதிகமாக இருக்கலாம். ஆனாலும் இவர்கள் அத்தனை பேர்களும் இது போன்ற நிர்வாக
வாசனை தெரியாத கூமுட்டைகளிடம் தங்களை அடகு வைத்துக் கொண்டு வாழ வேண்டியதாக உள்ளது.
இதிலும் சிலர் மட்டும் உடைக்கப்பட வேண்டிய வளையங்களை உடைத்துக் கொண்டு உன்னதமான இடத்தை
நோக்கிய பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.








