Corona Update
தமிழகத்தில் சுற்றுலாத்தலங்கள் எங்கே சென்றாலும் அங்குள்ள அனைத்துக் கடைகளிலும் சீனப் பொருட்கள் தான் ஆதிக்கம் செலுத்தும். பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் என்று தொடங்கி தெய்வச் சிலைகள் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் சீனமே.
கிராமங்கள், நகர்ப்புறங்கள் என்ற பாரபட்சமின்றி அனைத்து பேன்சி கடைகளும் சீனத்தின் உதவியால் மட்டுமே இங்கே தொழில் செய்து கொண்டிருக்கின்றார்கள். பேன்சி கடை நண்பர்கள் விழி பிதுங்கிப் போய் நிற்கின்றார்கள்.
தொடர்ந்து செய்திகளைக் கவனித்துக் கொண்டு வந்த போது தமிழகத்தில் சீனப் பொருட்களை மட்டுமே நம்பி இயங்கிக் கொண்டிருந்த வியாபாரிகள் பெரிய பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது. எனக்குத் தெரிந்த சென்னை நபர் மாதம் இரண்டு கண்டெய்னர் என்கிற ரீதியில் வரவழைத்துக் கொண்டிருந்தார். இப்போது ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
பத்து ரூபாய்க்கு வாங்கும் பொருட்களை மனசாட்சியே இன்றி நூறு ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தவர்கள் இப்போது விழிபிதுங்கிப் போய் இருக்கின்றார்கள். இன்னும் ஒரு மாதம் இந்த வைரஸ் பகவான் அருளாசி புரிந்தால் இந்தியா மட்டுமல்ல உலகமே பெரிய பாதிப்பைச் சந்திக்கப் போகின்றது. நாம நல்லாயிருக்கிறதுக்கு அவர்கள் நல்லா இருக்கனுன்னும் வேண்டிக்கத்தான் வேண்டும். மேட் இன் இண்டியா, மேக் இன் இண்டியா எல்லாமே தூத்துக்குடி பக்கம் உள்ள கடல் இருக்கிற திசையில் காத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. எங்கெங்கும் சீன இந்தியா தான் இப்போது இங்கே கோலோச்சிக் கொண்டிருக்கிறது.
திருப்பூர் ஏற்றுமதி தொழில் சீனத்தை நம்பித்தான் உள்ளது. குறிப்பாக ஆடைகளுக்குத் தேவைப்படும் உப பொருட்கள் சந்தையில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். ஆனால் முழுமையாக இல்லை என்பதோடு வட இந்தியர்களும் இதில் இருப்பதால் இதுவரையிலும் பெரிய பாதிப்பு உருவாகவில்லை. ஆனால் விரைவில் உருவாகி விடும் சூழல் உள்ளது.
அங்கே 50 ரூபாய் என்றால் இங்கே 500 ரூபாய். பட்ஜெட் தாங்குமா?
#கொரானாசூனாமி