Thursday, August 24, 2023

இந்த வெற்றிக்காக காத்திருந்தோம்.

 சந்திரயான்-3 ($75M)க்கான இந்தியாவின் பட்ஜெட் Interstellar ($165M) திரைப்படத்தை விடக் குறைவு

😯🚀
— feeling happy.
நீட் NEET ஏன் இத்தனை சர்ச்சை?


நீட் என்ற மருத்துவக் கல்லூரிக்கான நுழைவுத் தேர்வினைத் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்காக அரசியல் செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும்.  இந்த நுழைவுத் தேர்வு என்பதனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று அவர்களை அண்டிப்பிழைப்பவர்கள் அறைகூவல் விடுப்பதை எப்போது போலத் தமிழக பொது ஜனம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். மேலும் கடந்த பல ஆண்டுகளாக மாணவர்களைத் தற்கொலை செய்யத் தூண்டும் நிகழ்வுக்குப் பின்னால் எந்தக் கட்சி முன்னிலை வகிக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் இந்தச் சமயத்திலாவது உண்மையான வேறு சில பிரச்சனைகளையும் நாம் பேசியாக வேண்டும்.

1.   மோடி அவர்கள் காங்கிரஸ் ஆட்சியில் மருத்துவ ஆணையத்தை முழுமையாகக் கலைத்தார்.  காரணம் நம்ப முடியாத அளவுக்கு அங்கே இருந்த ஊழல். புதிய செயல் திட்டம் மற்றும் அமைப்பை உருவாக்கினார்.
2.   எப்போதும் போலத் தொடக்கத்தில் பல பிரச்சனைகள். தொடர்ந்து சரிசெய்யப்பட்டு இப்போது ஓரளவுக்கு பரவாயில்லை என்கிற அளவுக்குத் தான் உள்ளது.  முழுமையான குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை. எப்போது தேர்வு தொடங்கும்? எப்போது தேர்வின் முடிவு வரும்? போன்ற எந்தத் தகவல்களையும் ஆணையம் வெளிப்படையாக அறிவிப்பதே இல்லை.  இதன் காரணமாக அந்த மாநில அரசின் உயர்கல்வித்துறை தங்கள் தேர்வு முடிவுகள் மற்றும் அடுத்த கட்ட செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படுவதாகப் பலமுறை மத்திய அரசிடம் தெரிவித்தும் இன்று வரையிலும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவில்லை.
3.    அதாவது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த  தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) ஊழலில் மூழ்கியிருந்தது என்றால் தற்போது இருக்கும் இந்திய மருத்துவக் கழகம் (Medical Council of India) யாருக்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற நோக்கில் செயல்படுவதாகக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
4.   நீட்தேர்வுத் தாள்கள் உருவாக்கும் முறை, திருத்தும் முறை, தேர்வு முடிவினை அறிவிக்கும் முறை எதுவும் சிறப்பு இல்லை என்பதற்குப் பின்னால் நம் கல்வித் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது என்பதனை எடுத்துக் கொள்ளலாம்.
5.   நவீனத் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இந்த கால கட்டத்தில் கணினி வழியே தேர்வு நடத்தும் முறையை ஆணையம் கண்டு கொள்ளத் தயாராக இல்லை.  தேர்வு நடத்தி சில வாரங்களில் அதன் முடிவை வெளியிட எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் அதனை முன்னெடுக்க விரும்பாததற்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்று தெரியவில்லை.  தேர்ச்சி அடையாக மாணவர்களை மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் வாய்ப்பு அளித்து எழுத வைக்க முடியும்.  ஆனால் அடுத்த ஓர் ஆண்டு காத்திருக்கும் சூழல் தான் உருவாகின்றது.
6.   ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள பலவிதமான பாடத்திட்டங்கள் இருப்பதால் நாங்கள் என்சிஆர்டி பாடத்திட்ட அடிப்படையில் ஒரே மாதிரியாக இந்தியா முழுக்க நடத்துகின்றோம் என்பது நகைப்புக்கு உரியதாக இருக்கின்றது.  அரசியல்வாதிகள் அரசியல் செய்வதற்கு இந்த தேர்வினைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.  ஊடகங்களும் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளுக்குப் பல்வேறு ஆதாயத்தின் அடிப்படையில் உறுதுணையாக இருந்து இந்த தேர்வினைக் குறித்துத் தொடர்ந்து மோசமாகச் சித்தரித்து வருவதால் தமிழக மாணவர்கள் தங்கள் தோல்வியைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்யும் மன உளைச்சல் அடைவதற்கும் முக்கிய காரணமாக உள்ளது.  கூடுதலாக அரசியல்வாதிகள் தங்கள் ஆதாயத்திற்காக ஊதிப் பெரிதாக்க துக்ககரமான நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றது.
7.   மாநில அரசு தங்கள் பாடத்திட்டத்தைத் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தான் உருவாக்குவார்கள். ஆட்சிகள் மாறும் போது காட்சிகள் மாறும். எந்த மாநில அரசினையும் மத்திய கல்வித்துறையோ, மருத்துவ துறையோ, மனிதவளத்துறையோ கேள்வி கேட்க முடியாது. மாநில உரிமை என்ற கோட்டுக்குள் வந்து நிற்கும். மீறினால் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்கும்.  ஆனால் நீட் தேர்வினை இரண்டு விதமான பாடத் திட்ட அடிப்படையில் கேள்வித் தாள்களை உருவாக்க முடியும்.  மாணவர்களுக்கு சாய்ஸ்  முக்கியம். 
8.   இப்படி கேள்வித் தாள் உருவாக்க வேண்டிய அவசியத்திற்கான முக்கிய காரணம் என்னவெனில் தமிழக மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடத்தில் எழுதிய தேர்வில் 90 சதவிகிதத்திற்கு மேல் எடுத்து நாங்கள் திறமைசாலிகள் என்று நம்ப வைக்கப்படுகின்றார்கள்.  ஆனால் அவர்களிடம் உள்ள மனப்பாடத்திறமைக்கும் ஆராய்ந்து கற்று அறிந்து அறியும் முறைக்கும் உண்டான வித்தியாசத்தை நம் கல்வித்திட்டம் உருவாக்கவில்லை. 
அதனை இவர்கள் மாற்ற மாட்டார்கள் என்பது தான் எதார்த்தம். அரசியல்வாதிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், பாடத்திட்டத்தை உருவாக்கக்கூடியவர்கள் என்ற இந்த முக்கோண கூட்டணியைப் பற்றிப் பெற்றோர்கள் யாருக்கும் தெரியாது. செயற்கை நுண்ணறிவு குறித்து இந்த வருடம் வரைக்கும் பனிரெண்டாம் வகுப்பு வரைக்கும் எங்கும் இல்லை. இறந்து போன அரசியல்வாதிகளின் அப்டேட் கள் மட்டும் வருடம் வருடம் பாடங்களில் வந்து சேர்கின்றது என்பதனை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் எதைப் படிக்க வேண்டும் என்பதோடு எந்த அளவோடு அவர்கள் நிற்க வேண்டும் என்பதனை யார் தீர்மானிக்கின்றார்கள் என்பது நமக்குத் தெரிந்தது தான்.
9.   மிக முக்கியமான பிரச்சனை என்னவெனில் தனியார் பயிற்சி மையங்கள் அடிக்கும் கொள்ளை என்று ஒரு பக்கம் ஒரு கூட்டம் அலறுகின்றது.  மற்றொரு பக்கம் நீட் வைத்து தனியார் கல்வி வணிக நிறுவனங்கள் 11 மற்றும் 12 வகுப்புகளில் அள்ளிக் கொண்டு இருக்கும் கட்டணக் கொள்ளையை எவரும் மூச்சே விடுவதில்லை. நீட் படித்தாலும் படிக்காவிட்டாலும் தனியார் வணிக கல்வி நிறுவனங்களில் அதற்கான கட்டணத்தைக் கட்டியே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. மொத்தத்தில் ஒரு வருடத்தில் ஒன்னேகால் லட்சம் மாணவர்கள் தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுதுகின்றார்கள் என்றால் இவர்கள் முதல் முறை எழுதுகின்றவர்கள்  தொடங்கி மூன்றாவது முறை எழுதுகின்றவர்கள் என்பது வரைக்கும் பல லட்சம் கோடி நடுத்தர வர்க்கப் பெற்றோர்களின் பணம் சூறையாடப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
10.   இதற்கான மாற்று ஏற்பாடுகள் என்ன செய்ய முடியும்?  இப்போது உள்ள நீட் தேர்வுக்கு  11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களைப் படிக்கவே வேண்டாம் என்பதும், 11 ஆம் வகுப்பு பாடத்தினை நடத்தாமல் நேரிடையாக 12 ஆம் வகுப்பு பாடத்தை நடத்தும் கொடுமையும் நடந்து வந்தது. 11 ஆம் வகுப்புக்கு பரிட்சை என்றதும் அதனை நீக்க வேண்டும் என்று ஒரு பக்கம் போராடத் துவங்கி உள்ளனர்.

11. இப்போது யோசித்துப் பாருங்கள். 11 ஆம் வகுப்பு மதிப்பெண்களில் 25 சதவிகிதம் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களில் 25 சதவிகிதம் நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களில் மீதம் உள்ள 50 சதவிகிதம் என்று மாற்றினால் முழுமையாகப் படித்தே ஆக வேண்டும் என்பது உருவாகும்.  
இரண்டு பக்கமும் மதிப்பெண்கள் இருப்பதால் அவசியமான மாற்றங்கள் உருவாகும். பயிற்சி என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கும் கூட்டத்திடம் இருந்து பாதிக்குப் பாதி தப்பிக்க வாய்ப்புண்டு.  தனியார் கல்வி வணிக நிறுவனங்கள் தங்கள் போக்கினை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு வருவார்கள். மாணவர்கள் கட்டாயம் தங்கள் திறமை எந்த நிலையில் உள்ளது என்பதனை உணர வாய்ப்புண்டு.  பிராக்டிகல் தியரி என்ற மதிப்பெண்கள் போல இப்படி இரண்டு பக்க மதிப்பெண்களை எடுத்தாளும் போது இது மருத்துவ கல்லூரிக்குள் நுழைந்து படிக்கும் முதல் ஆண்டு மாணவர்கள் இப்போது திருதிரு என்று விழிப்பது போல இருக்காது.  காரணம் அவன் இரண்டு வருடப் பாடங்களை நன்றாகப் படித்தவன் என்ற முறையில் அவனால் சமாளிக்க முடியும்.  இப்படி நடப்பதில் யாருக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்?
12.  இறுதியாக நீட் தேர்வினை நடத்தக்கூடிய அமைப்பு இதனைக் கணினி வழியே நடத்தி மனிதர்கள் திருத்த வேண்டிய அவசியம் இல்லாத நிலைக்கு உருவாக்கப்படும் தேர்வு முறைகள் மூலம் விரைவான தரமான அழகான ஒழுங்கான நம்பிக்கையாக மாணவர்களுக்குப் பெற்றோர்களுக்கு இந்த அமைப்பு வழங்க முடியும். 
ஒவ்வொரு வருடமும் பல மாணவர்கள் நான் நன்றாக எழுதினேன் என்று வந்த மதிப்பெண் வைத்துப் புலம்புவதும் அதனைச் சில ஊடகங்கள் பெரிதாக்குவதும் நிற்க வாய்ப்புண்டு.  படிப்படியாக அரசியல்வாதிகள் குரல் அமுங்கிவிட வாய்ப்பு அதிகம் உள்ளது.

No comments: