Tuesday, February 16, 2021

அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களின் அவல வாழ்க்கை

நான் பள்ளியில் படித்த போது பள்ளியில் அலுவலகம் என்றொரு அமைப்பு இருந்தது. அதில் பலர் பணிபுரிந்தனர்.  நமக்கு ஏதும் தேவையெனில் அவர்களிடம் சென்று பேச வேண்டும்.

ஆசிரியர்களுக்கும் எழுத்தர் துறைக்கும் தொடர்பே இருக்காது.  ஆசிரியர் தன் வகுப்பு முடிந்ததும் ஆசிரியர்கள் அமர்ந்துள்ள அறைக்குச் சென்று விடுவார்.  சில சமயம் அந்த அறைக்குச் செல்லும் சூழலில் அங்கிருந்த அமைப்பைப் பார்த்துள்ளேன். நாற்பது நிமிடம் பாடம் நடத்தி முடிக்கும் போது என்ன மாதிரியான மன ரீதியான தாக்கம் உருவாகும்? 


அவர்கள் தொடர்ந்து சப்தம் போட்டு பாடம் நடத்த நின்று கொண்டே பேசும் போது உருவாகும் சோர்வு என்பது எப்படி இருக்கும் என்பதனை கடந்த சில வருடங்களாகத் தனிப்பட்ட அனுபவங்கள் மூலம் உணர்ந்துள்ளேன்.

இப்போது அரசு பள்ளிக்கூடங்களில் தனியாக எழுத்தருக்கு அலுவலகம் என்பதோ, அது சார்ந்த வேலைகள் என்பதனை முழுமையாகத் தூக்கி விட்டனர்.  இந்த வேலைகளையும் ஆசிரியர்கள் தான் பார்க்கின்றனர்.  அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கு இது சரியாகவே இருக்கும் என்று பலரும் நினைக்கக்கூடும்.

ஆனால் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்று, வாங்கி, பரிசோதித்து, பிரித்து, கொடுத்து, ஆவணப்படுத்தி, சோதித்து, மீண்டும் வாங்காதவர்களை வரவழைத்து, கெஞ்சிக்கூத்தாடி அவர்கள் கையில் ஒப்படைத்து, ஆவணங்களை மீண்டும் ஒரு முறை சோதித்து ஒப்படைத்து, அதனை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து எல்லாமே சரி என்று ஒப்புதல் வாங்கும் பணி எப்படி நடக்கின்றது என்பதனை கடந்த சில வாரங்களாக நேரிடையாகப் பார்த்த போது ஒவ்வொரு ஆசிரியைகள் படும் பாடுகள் சொல்லி மாளாது. எழுத்தில் எழுதவே முடியாது என்பதாகவே உள்ளது.

அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கு இதை விட வேறென்ன வெட்டி முறிக்கிற வேலை? என்று வெளியே இருந்து பார்க்கும் போது அதனை விமர்சனமாகக் கிண்டலுடன் நமக்கு எளிதாகச் சொல்ல முடியும்?  ஆனால் ஒவ்வொரு ஆசிரியைகளும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் இது போன்ற வேலைகளைச் செய்கின்றார்கள் என்பது முற்றிலும் உண்மையாகும்.

எண்ணிக்கை சரியாக இருக்க வேண்டும். சரியான நபர்களுக்குச் சரியான ஆவணங்களுடன் வழங்க வேண்டும். எல்லாவற்றையும் இணையம் வழியே ஏற்ற வேண்டும் என்று ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக இது தொடர்பான வேலை இருந்து கொண்டேயிருக்கிறது. செருப்பு முடிந்தவுடன், மடிக்கணினி அது முடிந்தவுடன் மிதிவண்டி அதற்குப்பிறகு உதவித் தொகை. இப்படியே ஒன்றன்பின் ஒன்றாக வருடம் முழுக்க இது சார்ந்த வேலைகள் ஓர் ஆசிரியையை பாடாய்ப் படுத்தி எடுத்துக் கொண்டேயிருக்கிறது. நம் அரசு ஒரே சமயத்தில் அனைத்தையும் கொடுக்காது. புத்தகங்கள் முதல் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டேயிருக்கும்.

இது அவர்களின் வேலைத்திறனைப் பாதிக்கிறது. வகுப்பு எடுக்க வேண்டியதைத் தள்ளிப் போட வைக்கின்றது. ஆர்வம் இல்லாத அளவுக்கு அவர்களை மாற்றி விடுகின்றது. மாணவிகளுடன் உரையாட முடியாத அவலமும், பாடத்தை முழுமையாகப் புரிந்து நடத்தி ஆர்வத்துடன் முடிக்க வேண்டியதைக் கடனுக்குச் செய்து கடமையைச் செய்து விட்டேன் என்பதாக மாற்றும் போது மாணவிகள் மானப்பாடம் செய்தால் போதும் என்கிற நிலைக்கு வந்து விடுகின்றார்கள்.

மற்றொரு பஞ்சாயத்தில் ஒவ்வொரு ஆசிரியர்களும் முழி பிதுங்கி விழிப்பதை மற்றொரு சம்பவம் மூலம் பார்த்தேன். 

தாழ்த்தப்பட்ட பிரிவில் உள்ள மாணவிகளுக்கும், சிறுபான்மையினர் என்ற பிரிவில் வரக்கூடிய மாணவிகளுக்கும் அரசு சிறப்பு நிதி வழங்குகின்றது. அதாவது அனைத்து இலவசங்களுடன் இது வேறு தனியாகக் கொடுக்கின்றார்கள். இந்த இரண்டு பிரிவில் உள்ள பெற்றோர்களின் குணாதிசயங்களைப் பார்த்த போது, அவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி வாழ்க்கையில் எந்த அளவுக்குக் கவனம் செலுத்துகின்றார்கள் என்பதனை பள்ளியில் பல மாணவிகளிடம் பேசும் போது பலவற்றைப் புரிந்து கொள்ள முடிந்தது. 

இந்தப் பிரிவில் உள்ளவர்களின் அறியாமை, பொருளாதாரச் சூழல், கல்வியறிவு போதாமை, தினக்கூலி அவசரங்கள் என்று எத்தனை காரணங்கள் அடுக்கினாலும் விழிப்புணர்வு என்பது அறவே இல்லை என்பது தான் எதார்த்தம். வாயில் வைத்து, நுழைத்து, குச்சி வைத்துத் தள்ளிவிட்டு, தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்த வேண்டிய நிலையில் தான் ஒவ்வொரு பெற்றோர்களும் இருக்கின்றார்கள்.  இது ஷாக் அடிக்கும் பிரிவு என்பதால் ஆசிரியைகள் பயந்து பயந்து தான் பேசுகின்றார்கள்.

தனியார் நிறுவனங்களில் இதனை விட சக்கையாக பிழிந்து வேலை வாங்குகின்றார்கள்? என்றொரு கேள்வி வரும். உண்மை தான்.  மிதமிஞ்சினால் சந்தணத்தை வேறு எங்கோ கொண்டு போய் தடவுவார்கள் என்ற நடைமுறையைத் தான் நம் மக்கள் அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசுப் பள்ளிக்கூடங்கள், ஆசிரியர்களிடம் நடந்து கொள்கின்றார்கள்.  

வாங்க வேண்டிய தினத்திற்குள் வாங்காமல் இருந்த பெற்றோர் பல வாரம் கழித்து வந்து ஆசிரியையிடம் கேட்ட கேள்வியிது.

"என்னம்மா என்னமோ உங்க கைக்காசைப் போட்டு கொடுக்கிற மாதிரி அலுத்துக்கிறாய்?  அரசாங்கம் எங்களுக்கு இலவசமாகத்தானே கொடுக்குது? உங்களுக்கு என்ன பிரச்சனை? எனக்கு ஆயிரம் வேலையிருக்கும்? நீங்க எடுத்து வைக்க வேண்டியது தானே"? என்றார். 

இப்போது தனியார்ப் பள்ளியை நண்பர்கள் எப்போதும் போல ஒப்பிட்டுப் பேசுகின்றார்கள். அங்கு அரசின் நலத்திட்ட உதவிகள் என்ற பஞ்சாயத்து இல்லை. மற்றொரு பூதம் உள்ளது.  பள்ளிக்கூடம் நேரம் முடிந்தவுடன் சிறப்பு வகுப்பு என்று ஒன்று வைக்கின்றார்கள். அதில் திண்பண்டம் கொடுக்கின்றோம் என்று பள்ளிக்கட்டணம் தவிர்த்து அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களிடம் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் தனியாக வசூலிக்கின்றார்கள். பத்து ரூபாய் பெறாத திண்டபண்டம் ஐம்பது ரூபாய் என்றும், கூடுதலாக இரண்டு மணி நேரம் பாடம் நடத்த மாதம் ஐந்நூறு என்று வசூலித்து இந்தத் தொகையில் ஓர் ஆசிரியைக்கு இருநூறு வழங்குகின்றார்கள். அவர் நடத்தியே ஆக வேண்டும். மறுக்க வாய்ப்பில்லை. அதாவது காலை ஒன்பது முதல் மாலை நான்கு மணி வரைக்கும் அவர் சக்கையாகப் பிழியப்பட்டு இருப்பார். கூடுதலாக அவர் குடும்பச் சுமைகள் காத்திருக்கும். அதனையும் மனதிற்குள் வைத்துக் கொண்டு அடுத்த இரண்டு மணி நேரம் மாணவிகளுக்குப் பாடம் நடத்த வேண்டும் அல்லது படிக்க வைக்க வேண்டும். என்ன செய்ய முடியும்?  இருக்கையில் தேமே என்று அமர்ந்திருப்பார். 

கை கால்களைக் கட்டிப் போடாத குறையாக மாணவிகள் பெஞ்ச் மேல் புத்தகத்தை வைத்துக் கொண்டு சோர்வுடன் கண்களால் பேசிக் கொண்டிருப்பார்கள். யாருக்கும் பலன் இல்லை. ஒரு நாளில் 12 மணி நேரம் தொடர்ந்து படித்த மாணவி வீட்டுக்குள் வரும் போது தூக்க கிறக்கமாகவே வந்து சேர்வார். பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு இதன் மூலம் தனியாகக் கிடைக்கும் லாபத் தொகை தான் மிச்சம்.

அரசு மற்றும் தனியார் என்று எதனை எடுத்துப் பார்த்தாலும் இப்போதுள்ள நம் கல்வித்துறையில் மாணவ மாணவியர் சிந்தித்து தன்னை தானே மேம்படுத்திக் கொள்வது என்பது வாய்ப்பே இல்லை என்பதாகத்தான் இங்குள்ள கல்வி சார்ந்த நடைமுறைகள் உள்ளது என்பதாக எனக்குத் தோன்றுகின்றது. 

ஆனால் மற்றொரு விசயத்தில் மாணவிகள் 2050 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்து விட்டார்கள் என்றே தோன்றுகின்றது. 

பத்தாயிரம் ரூபாய்க்கு மேலே உள்ள நவீனரக அலைபேசிகள் வைத்திருக்கும் மாணவிகள் ஏன் இணைய வகுப்பில் கலந்து கொள்வதில்லை? என்ற கேள்விக்கு சில தினங்களுக்கு முன் ஓர் ஆசிரியை சொன்ன பதில் இன்னமும் மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

"அரசாங்கம் மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது" என்று சொல்லியிருக்கிறார்களாம்.

விளம்பரத்திற்குள் மிதக்கும் மனிதர்கள்


6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// ஆனால் மற்றொரு விசயத்தில் மாணவிகள் 2050 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்து விட்டார்கள் என்றே தோன்றுகின்றது. //

மாணவிகள்...

அண்ணே ... தெளிவு ஆரம்பம்....! @வாழ்க நலம் ...!

ரா.சிவானந்தம் said...

உண்மையில் அரசு ஆசிரியர்களுக்கு இப்படி ஒரு தலைவலியா, இதெல்லாம் எனக்கு புதுசு.

இருந்தாலும் நான் எல்லாவற்றையும் லாஜிக் என்ற அடிப்படையில்தான் பார்ப்பேன். ஒருவனுக்கு வேலை மிக கடுமையாக இருக்கிறது என்றால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து இந்த வேலை வேண்டாம் என தூக்கி எறிவான். அப்படி எதுவும் இங்கு நடப்பதில்லை.

வேலை கிடைப்பது சிரமம், குடும்பம் இருக்கிறது, என்று சொல்வார்கள். பிரச்சினை என்னவென்றால், எருமை மாட்டுக்கான சம்பளம் வாங்கிக்கிறேன் ஆனா கழுதைக்கான வேலையை மட்டும் தான் நான் செய்வேன் என்பதுதான்.

தற்போது இவர்கள் வாங்கும் சம்பளத்தில் இன்னொரு ஆசிரியரை நியமித்து சம்பளத்தையும் வேலையும் சரிபாதியா பிரிச்சுடுங்க. பிரச்சினை தீர்ந்துவிடும். ஒத்துகிறங்களான்னு கேளுங்க.

ஜோதிஜி said...

உங்கள் விமர்சனம் பார்த்து உண்மையிலேயே மிரண்டு போய்விட்டேன். இப்படி யோசிக்கவே இல்லை. உங்கள் விருப்பத்தை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஆசிரியர்கள் மட்டுமல்ல. எந்தத் துறையில் இருப்பவர்களும் முடியாது என்று தான் சொல்வார்கள். ஆசை அளவில்லாதது. மற்றொரு விசயம். 2000க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், 2010க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் சம்பளம் என்பது மிகவும் குறைவு. அதிகபட்சம் 50 000 அளவுக்குத் தான் வருகின்றது. அதாவது மூப்பு அடிப்படையில். பென்சன் போன்ற எந்த வசதிகளும் இல்லை. இது தவிர ஒப்பந்த அடிப்படையில் பலரையும் சேர்த்து உள்ளனர். அதாவது சேரும் போது எங்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்த மாட்டோம் என்று எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். பல ரூபங்கள். பல பாதைகள். பல பிரச்சனைகள். இதன் காரணமாக நீங்கள் எதிர்பார்த்த விசயங்கள் நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை.

நரசிம்மன் said...

வருடத்தில் 365 நாட்களுக்கு வெறும் 220 நாட்கள் மட்டுமே உத்தேசமாக வேலை பார்க்கிறார்கள் அதிகாரப்பூர்வமாக மீதி உள்ள நாட்களில் பாதி நாட்களை இந்தமாதிரி பணிகளுக்கு ஒதுக்கலாம் மற்றபடி அவர்கள் வாங்கும் சம்பளத்தில் நான்கில் ஒரு பகுதி வேறு ஒரு நபருக்கு சம்பளத்தை கொடுத்து ஒரு சில மாதங்களுக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம்

நரசிம்மன் said...

பலதுறைகளில் அதிகாரப்பூர்வமற்ற நபர்களை அரசாங்க ஊழியர்கள் நியமித்து வாழ்வாங்கு வாழ்கிறார்கள் இதை கல்வித்துறையில் முன்னுதாரணமாக வைத்துக்கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் ஒரு வருடத்திற்கு ஒரு மாணவனை வைத்து காலம் ஓட்ட வேண்டும் மற்ற துறைகளில் இன்று ஒருவர் வருவார் நாளை மற்றொரு வருவார் அதன் வித்தியாசம்

ஜோதிஜி said...

கல்வித்துறை, பொதுசுகாதாரத்துறை இரண்டிலும் விரைவான சீர்திருத்தங்கள் தேவை.