Sunday, February 07, 2021

மனிதர்களுடன் உறவாடுவது, உணர்ந்து கொள்வது.....

நான் வசிக்கும் பகுதியில் சற்று பெரிய நான்கு மளிகைக்கடைகள் உள்ளது. நான்கும் அண்ணாச்சி வகையினராக இருந்த காரணத்தால் நான்கு கடைகளிலும் வாங்கிக் கொண்டிருந்தேன். இப்போது நான்கு கடைகள் பக்கமும் செல்வதில்லை.

ஒருவர் பத்துக்கு பத்து அடியில் தொடங்கி ஒரு வருடத்தில் அடுத்த வருடத்தில் அந்த இடம் அருகே உள்ள இடம் என்று வாங்கி மாடி கட்டி செழிப்பாகவே உள்ளார். வீட்டுக்குப் பின்புறம் இருந்த காரணத்தால் அதிகாலையில் ஐந்து மணிக்கே அவர் திறந்து வியாபாரம் செய்யும் அவர் உழைப்புக்குத் தலை வணங்கிச் செல்வேன். 




இரண்டாவது வருடத்தில் காலையில் தொடங்கி நாள் முழுக்க கிறிஸ்துவப் பாடல்களைச் சப்தம் போட்டு ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தார். பேச்சு மாறியது. அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. அப்போதும் கூட்டம் இருந்தது. மதம் மாறிய கிறிஸ்துவ அண்ணாச்சி என்பதனை உணர்ந்த போதிலும் நான் பாகுபாடு எதையும் பார்க்கவில்லை. வாரம் தோறும் விலை மாறிக் கொண்டேயிருந்தது. அடுத்தடுத்த நபர்களும் இப்படித் தான் இருந்தார்கள். நிலைபெறும் வரைக்கும் அவர்களின் பேச்சும் செயல்பாடுகளும், இடத்தைத் தக்க வைத்த பின்பு அவர்களின் வியாபார அணுகுமுறையும் வித்தியாசமாக இருந்த காரணத்தால் உணர்ந்து உள்வாங்கி வெறுத்துப் போய்விட்டேன். 

விலைகளைக்கூட நான் பார்ப்பதில்லை.  பேச்சு, செயல்பாடுகள், வருகின்ற வாடிக்கையாளர்களை அவர்கள் நடத்தும் விதத்தினை அங்கே நின்று கவனிப்பதுண்டு.  அதிகப்படியான உழைப்பின் காரணமாக இருக்கலாம் என்று யோசித்துக் கொண்டதுண்டு. 

அதற்குப் பதிலாக வீட்டுக்கு வந்து கொடுக்கும் ஒரு பாய்க்கு ஆதரவு கொடுக்கும் வண்ணம் கொரோனா தொடங்கிய காலம் தொடங்கி அவரிடம் காய்கறிகள் தினந்தோறும் வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.  இன்று வரையிலும் அவர் பேச்சு செயல்பாடுகள் எந்த மாற்றமும் இல்லை.  விலை அதிகமாக இருந்தால் இந்தக் காய் வாங்காதீர்கள். நாளை வேறு கொண்டு வருகிறேன். நீங்கள் நேற்று சொன்னது அநியாய விலை. வேறு காய் வைத்துச் சமைத்துக் கொள்ளுங்கள் என்பார். அவர் மகள்கள் படிக்க உதவி செய்துள்ளேன். 

மளிகைப் பொருள்களுக்காக அருகே உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் அண்ணாச்சியிடம் சென்று புதுப்பயணம் தொடங்கியது. அவரும் இவர்களைப் போலவே மதம் மாறிய அண்ணாச்சி தான். ஆனால் பாடல்களை ஒலிக்கவிடுவதில்லை. தனிப்பட்ட முறையில் அக்கறை செலுத்தக்கூடியவர்.  கடந்த ஒரு வருடமாக அவரிடம் தான் வாங்கிக் கொண்டிருந்தோம்.  வருடத்தின் தொடக்கத்தில் டைரி, காலண்டர், இன்னும் சில பொருட்கள் வழங்குவார். 

பெண்கள் நலக்கூட்டணிக்கு வெளியே செல்லும் ஆசையின் பொருட்டு உள்ளே சென்று ஷாப்பிங் அனுபவம் பெறவும், சபாநாயகர் தடவித் தடவி பொறுமையாக வாங்கி உள்ளார்ந்த மகிழ்ச்சியில் இருக்கவும் இந்தக் கடை உதவியாகவும் இருந்தது.

இந்த அண்ணாச்சி கொரோனா காலத்தில் அள்ளிக்குவித்தார். அதாவது உள்ளே பொருட்கள் இல்லை என்கிற அளவுக்கு ஒரே நாளில் ஒவ்வொரு பொருளும் காணாமல் போய்க் கொண்டேயிருந்தது.  

சில வாரங்களுக்கு முன்பு "என்ன அண்ணாச்சி இந்த வருடம் வாடிக்கையாளர்களுக்குப் புத்தாண்டு பரிசாக என்ன கொடுத்தீர்கள்?" என்று கேட்டேன்.  "கொரானா நட்டம்" என்று சிரித்துக் கொண்டே சொன்ன போது நான் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

அப்போது தான் எதார்த்தமாகக் கேட்டேன். "ஏன் மகனும் மனைவியும் இப்போது அதிகமான காணமுடியவில்லையே?" என்று கேட்ட போது "அவினாசியில் சில மாதங்களுக்கு முன்பு பெரிய கடையாகத் திறந்துள்ளோம்.  கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கே இரண்டு பேர்கள் தேவைப்படுகின்றது" என்றார்.

கடையில் இருபது பெண்களை வேலைக்கு வைத்திருந்தார். இப்போது சிலரை மட்டுமே வைத்திருந்தார்.  வீட்டுக்கு டெலிவரி கொண்டு வந்து கொடுப்பார். இப்போது "பக்கத்தில் தானே வீடு இருக்கிறது. பசங்க இல்லை. இரண்டு தடவையாக எடுத்துக் கொண்டு சென்று விடுங்களேன்" என்று சிரித்துக் கொண்டே சொன்ன போது  மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டு வந்து விட்டேன். 

நான் கடந்த சில வருடங்களாகக் கவனித்த வரையிலும் இஸ்லாமியர்கள் அவர்கள் எப்போதும் போல அவர்கள் பாணியில் இயல்பாகவே இருக்கின்றார்கள். அவர்கள் யாருக்காகவும் அவர்களின் தன்மையை மாற்றிக் கொள்வதில்லை. செருப்பு வாங்கும் கடை முதல் பல கடைகள் இன்னமும் தொடர்பில் இருக்கின்றார்கள்.

ஆனால் நான் உணர்ந்த மற்றொரு ஆச்சரியம் என்னவெனில் இரண்டு தலைமுறைக்கு மேலாக கிறிஸ்துவர்களாக வாழும் நண்பர்கள் அவர்கள் பேச்சில் செயல்பாட்டில் எந்த புதிய வித்தியாசங்களையும் நான் பார்த்ததே இல்லை. கடந்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்குள் பல்வேறு காரணங்களால் மதம் மாறிய கிறிஸ்துவர்கள் படுத்தும் பாடும், அவர்களின் நடவடிக்கைகளும் சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது என்பதும் உண்மை.  

அதுவும் தெருவுக்கொரு பெந்தேகொஸ்தே என்ற அமைப்பு அப்பாவி மக்களைப் படுத்தும் பாடுகளும், கத்தும் கூச்சலும் பயத்தை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.  எந்த அளவுக்கு மனிதர்களின் வாழ்க்கையில் கிறிஸ்துவம் இந்தியாவில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மலர்ச்சியை உருவாக்கியதோ அதே அளவுக்குப் பைத்தியக்காரக்கூட்டத்தை அளவு கடந்து உருவாக்கத் தனிக்கூட்டமே இப்போது செயல்பட்டுக் கொண்டிருப்பது கண்கூடு.

பலவற்றை யோசித்து, வேறு வழியே இல்லாமல், கடந்த சில மாதங்களாக வீட்டில் ஆன்லைன் மூலமாக வாங்குவோம்.  விலைகள் மிகவும் குறைவாக உள்ளது என்று தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்த போது நான் எப்போதும் போல "இவர்கள் வாழ நாம் உதவிக் கொண்டிருக்கின்றோம். பாவம் இல்லையா?" என்று கேட்டுச் சிரித்து வைத்தேன்.  "உங்களை எல்லாம் திருத்தவே முடியாது" என்று சொல்லிவிட்டு பத்திரிக்கையில் வந்த பொருட்கள், அதன் விலை, ஆஃபர், எவ்வளவு மிச்சம் போன்ற கணக்கு வழக்குகளை சபாநாயகம் புள்ளிவிவரமாக எடுத்துரைத்தார்.

அமேசான், பிளிப்கார்டு, ஜியோ என்று வரிசையாக ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு வந்த போது ஒரு முறை மளிகை சாமான்கள் வாங்கும் போது 1400 ரூபாய் வரைக்கும் மிச்சமாவது புரிந்தது.

மனம் மாறி ஜியோ மார்ட் உள்ளே நுழைந்த போது அவர்கள் எல்லாவற்றையும் ஆங்கிலப் பெயர்களில் கொடுத்து இருப்பது முதல் சவால்.  (அமேசான் தமிழ்ப் பெயர்களையும் சேர்த்துத் தருகின்றார்கள்) வலைதள அமைப்பில் உள்ளே சென்று புரிந்து தெரிந்து கவனமாகத் தேர்ந்தெடுப்பது அடுத்த சவால். விலை ஒப்பீடு செய்து பட்டியலில் கொண்டு வந்து சேர்க்கும் போது மாதம் தோறும் நிச்சயம் உங்களால் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மிச்சப்படுத்த முடியும் என்பது உண்மை. 

நான் கடந்த பத்து மாதங்களாகக் கவனித்த வரையில் கொரோனா என்பது தொற்று நோய் அல்ல. அதற்குப் பதிலாக இதனைச் சாக்காக வைத்துக் கொண்டு மனிதர்களின் மனதில் கொள்ளையடிக்கும் வெறித்தனம் கலந்து அதுவே குணாதிசயமாக மாறியுள்ளதை ஒவ்வொரு துறையிலும் கவனிக்க முடிகின்றது.  நேரிடையாகச் சென்று வாங்கும் போது மனிதர்களுடன் உறவாடுவது, பலவற்றை உணர்ந்து கொள்வது என்ற என் எண்ணம் கடந்த வருடம் முழுமையாக மாறிவிட்டது. 

வாங்கு. கொடு. செல். பேசாதே என்ற பாதையில் மொத்த மனிதக்கூட்டமே இப்போது நகர்ந்து கொண்டிருக்கிறது. பிறகு ஏன் இங்கே செல்ல வேண்டும்? என்ற எண்ணம் உடனே வந்து விடுகின்றது.  இணைய வர்த்தகமும் இந்த முறையில் தானே செயல்படுகின்றது. கூடவே நமக்கு லாபத்தையும் சேர்த்தே தருகின்றது என்ற எண்ணத்தை உருவாக்குகின்றது.

ஒரு வருடம் முழுமையாக அதிகபட்சம் 15,000 ரூபாயை மிச்சப்படுத்த முடியும்.  இவர்கள் மார்கெட் பிடித்த பின்பு மனம் மாறுவார்கள் என்ற கேள்வி வரும்?. வேறு வழியில்லை.  அப்போது வேறொரு புதிய கோணம் உருவாகக்கூடும் என்று நம்ப வேண்டியது தான்.

ஏன் மக்கள் இணைய வர்த்தகத்திற்கு படிப்படியாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு முக்கியக் காரணம் விலை என்றாலும் அது மட்டும் காரணமல்ல என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

7 comments:

Rathnavel Natarajan said...

நான் உணர்ந்த மற்றொரு ஆச்சரியம் என்னவெனில் இரண்டு தலைமுறைக்கு மேலாக கிறிஸ்துவர்களாக வாழும் நண்பர்கள் அவர்கள் பேச்சில் செயல்பாட்டில் எந்த புதிய வித்தியாசங்களையும் நான் பார்த்ததே இல்லை. கடந்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்குள் பல்வேறு காரணங்களால் மதம் மாறிய கிறிஸ்துவர்கள் படுத்தும் பாடும், அவர்களின் நடவடிக்கைகளும் சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது என்பதும் உண்மை. - நிஜம். அனுபவப்பூர்வ உண்மை - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

ஸ்ரீராம். said...

நல்லவேளையாக  எங்கள் அண்ணாச்சி மதம் மாறவில்லை என்பதோடு நான் ஏரியா மாறிச் சென்றபின்னும் அவ்வளவு தொலைவு வந்து நான்தான் உங்களுக்கு மாதாந்திர சாமான்கள் கொடுப்பேன் என்று வீட்டில் வந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அனைத்தையுமே வணிக நோக்கிலேயே பார்த்து தம் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்ற இவர்களைப்போன்ற பலரை நான் எதிர்கொண்டுள்ளேன்.

ஜோதிஜி said...

நன்றி அய்யா.

ஜோதிஜி said...

நல்ல மனிதர்களுக்காகவே இன்னமும் மழை இங்கே பெய்து கொண்டிருக்கிறது ராம்.

ஜோதிஜி said...

நான் இவர்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

Mohamed Yasin said...

அனுபவம் புதுமை...நன்றி.