அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா தான் இப்போது தமிழகத்தின் எம்.என். நம்பியார். இந்தச் சமயத்தில் ஒன்று இரண்டு எம்ஜிஆர் இல்லை. எந்தப்பக்கம் பார்த்தாலும் பல நூறு எம்ஜிஆர் கள் முளைத்து உள்ளனர். நேற்று வந்த காளான்கள் முதல் நாளை வரப் போகும் தேர்தலில் தன் முகம் தெரிய வேண்டும் என்பதற்காக இன்ஸ்டண்ட் வியாதியஸ்தர்களும் இதற்குள் அடக்கம்.
சரி நாம் நம்பியார் தவறானவர் என்றே இப்போதே ஒரு முடிவுக்கு வந்து விடுவோம்.
அண்ணா பல்கலைக்கழகம் கடந்த காலத்தில் எப்படிச் செயல்பட்டது?
ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
1. விடைத்தாள் முறைகேடு.
இதன் மதிப்பு உத்தேசமாக 400 கோடி. பரிட்சை எழுதினால் போதும். ஒரு தாளுக்கு 10 000 கொடுத்தால் பாஸ். இது தவிர மறுகூட்டல் என்கிற சமாச்சாரம் தனி. குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்கள் பணம் கொடுத்தால் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று விடலாம். (வெளிச்சத்திற்கு வந்த ஆண்டு 2017) இதற்குத் தலைமை தாங்கிய வீரப்பெண்மணி 2015 முதல் 2017 வரை தேர்வு கட்டுப்பாட்டு உயர் அதிகாரியாக இருந்து முனைவர் (எத்தனை லட்சம் கொடுத்து வாங்கினாரோ?) ஜீவி உமா. மற்றொரு நபர் உறுப்புக்கல்லூரியில் முதல்வராக இருந்த விஜயகுமார். (இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள்). இவர்களுக்குக் கீழ் சில உதவிப் பேராசிரியர்களும் இந்தப் புனிதப் பணியில் ஈடுபட்ட தகவல் தெரிய வந்தது. எத்தனை நூறு கோடிகள் கல்லா கட்டினார்கள். யார் யாருக்குப் பங்கு போனது என்ற தகவல்கள் அப்படியே அமுக்கப்பட்டது.
2. அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் முனைவர் பட்டம் என்று சொல்லப்படும் பிஹெச்டி ஆய்வுப்பட்டம் பெறுவதில் பல நூறு கோடிகள் ஊழல் நடந்தது. 2013 முதல் 2017 வரைக்கும் பல்கலைக்கழக விதிகளுக்கு முரணாக அதிகப்படியான மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஒரு மாணவருக்கு ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரைக்கும் பெறப்பட்டது. உள்ளே நுழைந்தால் போதும். எதற்காகவும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. பட்டம் வந்து விடும். ஒரே கூரையின் கீழ் செயல்படும் தொழிற்சாலை போலக் கூட்டணியினர் அயராது உழைத்து அல்லாக்க தூக்கி மாணவர்களுக்கு மல்லாக்க வியந்து போகும் அளவிற்குப் பட்டத்தை வழங்கினர். இதன் மூலம் வெளிவந்த தொகை 200 கோடி. ஏறக்குறைய 5000 மாணவர்களுக்கு இதே போலப் பட்டம் வழங்கி உள்ளனர் என்று நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறிந்தனர்.
முனைவர் பட்டத்திற்குச் சேரும் போது நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் பழக்கத்தை ராஜாராம் துணைவேந்தராக இருந்த போது 100க்கு 60 மதிப்பெண்கள் என்பதனை மாற்றி 30 மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்று எளிய தமிழ்ப்பிள்ளைகளின் வாழ்வில் ஒளியேற்றினார். விளக்கேற்ற உதவும் எண்ணெணெய் திரி வாங்க அயராமல் பாடுபட்டார் என்பது நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
3. அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்கள் தாங்கள் விரும்பியபடி மருத்துவம் முதல் மற்ற படிப்புக்குச் செல்வது வாடிக்கை. இதில் ஒவ்வொரு வருடமும் 50 முதல் 100 இடங்கள் காலியாக இருக்கும். இதில் பல்கலைக்கழகம் தன்னிச்சையாகப் புதிதாக மாணவர்களைச் சேர்க்க முடியாது. இது உச்ச நீதிமன்ற உத்தரவு. ஆனால் இந்த இடத்தில் விதிகளை மீறி மாணவர்களிடம் பத்து லட்சம் முதல் இருபது லட்சம் வரைக்கும் பணம் வாங்கிக் கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.
4, 2000 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரைக்கும் 18 ஆண்டுகளில் பொறியியல் தேர்வுகளில் எழுதி வெற்றி பெறாமல் முழுமையாக டிகிரி முடிக்காதவர்கள் (மொத்தம் 50 000 மாணவர்கள்) 2018 பிப்ரவரி மாதம் தேர்வு என்று அறிவிக்கப்பட்டு, (2017 நவம்பர் அறிவிக்கப்பட்டது. இதிலும் மேலே பார்த்த தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா என்பவர் தான் மாட்டிக் கொண்டார்) அதில் எழுதியவர்கள், மறுகூட்டல் மதிப்பீடு என்கிற மாயாஜாலம் நிகழ்த்தப்பட்டு உள்ளது.
இதை விட மற்றொரு கொடுமை ரிசல்ட் வந்த போது பாஸ். மார்க் ஷீட் வந்த போது பெயில். அம்மா மகனுடன் போய்க் கேட்ட போது மறுபடியும் எழுதுங்கள். போய் அவரைப் பாருங்கள் என்ற வழிகாட்டிகள் சொன்னதைக் கேட்டு அந்தம்மா கொந்தளித்து பேட்டி கொடுத்த வசந்த காலமெல்லாம் இந்தப் பல்கலைக்கழக வரலாற்றில் கடந்த ஆண்டுகளில் நடந்துள்ளது.
இதே பல்கலைக்கழகத்தில் ராஜாராம் என்ற மகாத்மா துணைவேந்தராக பணியாற்றிய போது அவர் செய்த பணிகள் அனைத்தும் அகில உலகத்திற்கு வழிகாட்டியாக இருந்தது. எதில் சம்பாதிக்கலாம்? எப்படி சம்பாதிக்கலாம்? என்பதற்கு புதிய வழிகாட்டியாக இருந்தார். ஒரு பேராசிரியர் நியமனத்திற்கு அதிகமில்லை ஜென்டில்மென் ச்சும்மா 40 லட்சம் தான். இவனைத் தூக்கி எறிந்த பின்பு இரண்டு வருடங்கள் துணை வேந்தர் இல்லாமல் தான் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதன் பிறகு தான் எளிய தமிழ்ப் பிள்ளைகள் விரும்பாத நம்பியார் சூரப்பா உள்ளே வருகின்றார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு செமஸ்டருக்கும் 12 லட்சம் மாணவர்கள் பரிட்சை எழுதுகின்றார்கள். இதில் 3 லட்சம் மாணவர்கள் மறுகூட்டல் என்பதற்காக விண்ணப்பம் அளிக்கின்றார்கள். இதில் பாதிப் பேர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒரு மாணவர் 10 000 என்று கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒரு செமஸ்டரில் இந்தக் கோஷ்டிகள் சம்பாதிக்கும் தொகை 40 கோடி. ஆறு செமஸ்டர் என்பதனை கணக்கில் எடுத்துக் கொண்டால் 240 கோடி லம்பாக அடிக்க முடியும் தானே? இது தான் இத்தனை நாளும் நடந்து வந்தது. இதுவும் உத்தேசக் குறைந்தபட்சக் கணக்கு தான்.
ஒரு வீட்டுக்குள் ஓர் அறைக்குள் குப்பை இருந்தால் சுத்தம் செய்ய வாய்ப்புண்டு. வீடே சாக்கடையாக இருந்தால் என்ன செய்ய முடியும்?
(நாகரிகம் கருதி பல விசயங்கள் இதில் நான் எழுதவில்லை)😇
ஏன் இங்கே இத்தனை கற்பழிப்புகள்? | Why so many rapes here?
9 comments:
கல்வியில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ள நிலைமை என்ன?
இதில் தமிழ்நாடு எப்படி உள்ளது?
அதை வைத்து தமிழ் நாட்டின் கல்வித்தரத்தை நாம் நிர்ணயிக்கலாம்.
தென்னிந்தியா எப்படி உள்ளது?
வட இந்தியா எப்படி உள்ளது?
NEET என்ற பெயரில் தமிழ் நாட்டில் உள்ள மருத்துவ இடங்களை மற்ற மாநிலத்திற்கு
தாரைவார்ப்பது.
எதையும் அதாரிடேடிவ்வாக எழுதுவது ஓக்கெவா
என் பார்வையை நான் தானே எழுத முடியும். நீங்கள் உங்கள் பார்வையை எழுதுங்க. இது தானே வழமை.
நீங்கள் பத்து வருடத்திற்கு முன்னால் இருக்குறீங்க. இருந்த பெருமையை இழந்து நாளாகிவிட்டது.
நாகரிகம் கருதி இன்னும் சொல்லமுடியவில்லை...அந்த அளவிற்குத் தரம் போய்விட்டது. வேதனையே.
இவ்வளவு ஊழல்கள் நடந்துள்ளதா?! நம்ப சிரமமாக உள்ளது. அண்ணா பல்கலை கழகத்துக்கென்று இருக்கும்! மதிப்பை நினைக்கும் போது இந்நிகழ்வுகள் வருத்தத்தை அளிக்கிறது.
சிண்டிகேட் உறுப்பினர்களில் சாதிச் சங்கங்கள் நுழைந்த கதைகள் தனி. மற்ற ஊழல்கள் தனி.
Post a Comment