7 செப்டம்பர் 2020
இந்தத் தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கனடாவிலிருந்து தமிழரசன் அழைத்து இருந்தார். தோன்றும் போது நேரம் கிடைத்தால் அழைப்பார். இணைய உலகில் சுடுதண்ணி வலைபதிவு தெரியாதவர்கள் மிகவும் குறைவு. தொழில் நுட்பம் சார்ந்த விசயங்களை ஜனரஞ்சகமாக எழுதிப் பல ஆயிரம் வாசகர்களைப் பெற்றவர். அவரும் காரைக்குடியைச் சேர்ந்தவர். தற்போது கனடாவில் ஐடி துறையில் பணிபுரிகின்றார்.
என் எழுத்தின் அதி தீவிர வாசகர். பேசிக் கொண்டிருக்கும் போது மக்கள் இப்போது பேச்சு வடிவத்தைத் தான் அதிகம் விரும்புகின்றார்கள். நீங்கள் முயலலாம் என்றார். கேட்டுக் கொண்டேன். ஆர்வம் உருவாகவில்லை. அவர் கடந்த ஆறு மாதங்களில் இதை ஒவ்வொரு முறை உரையாடல் மூலமும் தெரிவித்துக் கொண்டே வந்தார். அவர் கேட்ட கேட்டுக் கொண்டிருக்கும் பேச்சுக்களையும் குறிப்பிடுவார்.
நான் எப்போதும் யூ டியூப் ல் மிக நீண்ட பேச்சுக்களை மட்டுமே விரும்புவேன். 2018 ஆம் ஆண்டு மட்டும் சுப வீரபாண்டியன் பேச்சுகளை வெறித்தனமாகத் தினமும் பல முறை பல மணி நேரம் கேட்டு இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் அதற்கென நேரம் ஒதுக்கி முழுமையாக உள்வாங்கும் பழக்கம் இருப்பதால் திரைப்படம், நடிகர்கள், கிசுகிசு அரசியல் சமாச்சாரங்களில் என் நேரத்தை வீணாக்குவதில்லை. கற்றுக் கொள்ள வாய்ப்பிருந்தால் கேட்பேன். அதைக் கேட்டு ஆக வேண்டும் என்றால் நள்ளிரவில் கூட வெளியே அமர்ந்து கேட்டு விட்டுத் தூங்குவதுண்டு. ஆனால் கேட்டு முடித்த பின்பு நமக்கு உற்சாகம் உருவாக வேண்டும். எந்தத் துறையாக இருந்தாலும் முழுமையாகக் கேட்பதுண்டு. தமிழரசன் சொன்னவுடன் நான் எழுதிய அரசியல் வரலாறு புத்தக விமர்சனத்தை எளிய மொழியில் பேசினேன். அடுத்தடுத்து இரண்டு வீடியோக்கள் பேசினேன். ஏகப்பட்ட தொந்தரவுகள். இது நமக்குச் சரியாக வராது என்றே நினைத்தேன். எழுதுவது வேறு. இந்தத் துறை வேறு என்பதனை புரிந்து கொண்டேன். நம் வேகத்தை இந்தத் துறை மட்டுப்படுத்தி விடும் என்றே நினைத்துத் தயங்கினேன். தமிழரசன் மீண்டும் ஊக்கப்படுத்திக் கொண்டே வந்தார்.
அதன் பிறகே முகம் காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் வேறு வகையில் இதனைப் பதிவேற்ற முடியும் என்ற எண்ணம் வந்தவுடன் மூத்த மகள் இதற்குள் வந்தார். அவர் அனாயாசமாகக் கையாளத் தொடங்கினார். மாடியில் அமர்ந்து பேசி முடித்து விட்டு அவரிடம் கொடுத்துவிட்டால் அவரே முடித்துக் கொடுக்க பதிவு போலத் தினமும் ஒன்றாகப் பதிவேற்றம் செய்ய முடிந்தது. மூன்று வாரத்திற்குள் 200 பேர்கள் உள்ளே வந்தனர். தினமும் யாரோ சிலர் வந்து கொண்டே இருக்கின்றார்கள். பெரிதாக இருக்கிறது. நீளமாக உள்ளது என்பது போன்ற பல கலவையான விமர்சனங்கள்.
ஆனால் நீண்ட பேச்சைப் பலர் கேட்டுள்ளனர். பலரும் மிகுந்த தாக்கத்தையும் நம்பிக்கையும் அளித்துள்ளது என்றனர்.
பத்து நிமிடத்திற்குள் பேசிய பேச்சைக் குறைவான நபர்கள் பேசியுள்ளனர். ஒவ்வொரு பேச்சையும் நூறு பேர்கள் பார்த்துக் கேட்டு விடுகின்றார்கள். நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தகவல் அளிக்கின்றேன். கூகுள் தரும் புள்ளிவிவரங்களின் படி நான் மனதிற்குள் நினைத்து வைத்திருந்த 25 வயதிற்குள் இருப்பவர்கள் அதிகமான (84 சதவிகிதம்) பார்க்கின்றனர். எனக்குப் பத்து நிமிடங்கள். மகளுக்கு 45 நிமிடங்கள். ஒரு காட்சி வடிவப் பேச்சு தயாராகி விடுகின்றது.
வலைபதிவு, இலவச மின்புத்தகம்,அமேசான், யூ டியூப் தளம் என்று மாறிவந்த பயணத்தில் நேற்றைய தினம் முக்கியமான திருப்பு முனையை உருவாக்கப் போகின்றது என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை.
ஃபேஸ்புக் மெசன்ஜர் மூலமாக ஆஸ்திரேலியாவிலிருந்து நண்பர் சுவாமி (Swamy Madike) என்பவர் ஒரு தகவல் தெரிவித்து இருந்தார். அவர் என் வலைபதிவு முதல் இன்று என் ஃபேஸ்புக் வரைக்கும் தொடர்ந்து என் எழுத்தை வாசித்து வரும் நீண்ட கால வாசகர் என்று அறிமுகம் செய்து கொண்டு தொழில் நுட்ப உலகில் இப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் செய்தியோடை Anchor (podCast) குறித்துச் சொல்லி ஏன் அதில் நீங்கள் வெளியிடலாமே என்று கேட்டார். ஏற்கனவே தன்பாலன் இந்தக் கோரிக்கையை வைத்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது. ஆசிரியர் கரந்தையார் வழங்கிக் கொண்டிருப்பதும் என் நினைவிற்கு வந்தது. அவரே அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி எப்படி உருவாக்க வேண்டும் என்று சொல்லிப் புரியவைத்தார்.
மகளிடம் சொல்லி ஆராயச் சொன்னேன். எளிது என்றார். நேற்று காந்தியார் மற்றும் காமராஜர் கொடுத்த ஓய்வில் ஒரு மணி நேரம் ஒதுக்கி இதுவரையிலும் வெளியிட்ட17 பேச்சுகளையும் பதிவேற்றி அவரிடம் தெரிவித்தேன். மிரண்டு விட்டார். இந்த அளவுக்கு விரைவாக செயல்படுவீர்கள் என்று நினைத்தே பார்க்கவில்லை என்றார்.
செப்டம்பர் 2 முதல் இந்தப் பயணம் தொடங்கியுள்ளது. அடுத்து எந்தத் தொழில் நுட்பம்? யார் அறிமுகம் செய்து வைக்கப் போகின்றார்கள்? என்பது தெரியவில்லை. வழிகாட்டிகள் என்னை வழிநடத்துகின்றார்கள். நான் பயணியாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.
தமிழ் இணைய உலகத்திற்கு மிக அதிகப் பங்களிப்பு செய்துள்ள நீச்சல்காரன் என்ற ராஜாராமன் பேட்டியைக் காண உங்களை அழைக்கின்றேன்.
2 comments:
நீச்சல்காரர் போற்றுதலுக்கு
Anchor ற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்
இவரின் சுளகு செய்யும் உதவிகள் மட்டுமே எண்ணிலடங்கா...
Post a Comment