இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசாங்கத்திற்கும் இரண்டு கரங்கள் உண்டு. ஒன்று.
நிர்வாகத்துறை. மற்றொன்று காவல் துறை.
இந்த இரண்டுக்குள் பின்னிப் பிணைந்த நரம்பு மண்டலமென்பது பல்வேறு கிளையாகப் பிரிந்து அதன் மூலமே இங்கே மொத்த அரசு எந்திரமே நடக்கின்றது.
சாதாரணக் கிராமத்தில் வசிக்கும் கிராம நிர்வாக அதிகாரி முதல் தலைமைச் செயலாளர் வரைக்கும் ஒரு பக்கம்.
மற்றொரு புறம் கடைநிலை காவலர் நிலையில் இருந்து அதிகபட்சமாக டி.ஐ.ஜி., ஐ.ஜி. வரைக்கும் நரம்பு மண்டலம் போல ஏராளமான அதிகாரிகள். இதில் பல நிலைகள்.
பல்வேறு பிரிவுகள்.
நமக்கு நம்மை ஆள்வது நாம் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் கடந்த 71 ஆண்டுகளாக நம்மை ஆண்டு கொண்டிருப்பது காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் உள்ள அரசு அதிகாரிகளே. அரசியல்வாதிகள் இவர்களை மிரட்டலாம், அதட்டலாம் அதிகபட்சம் வேறொரு இடத்திற்குத் தூக்கியடிக்கலாம். ஆனால் ஓய்வு பெறும் வயது வரைக்கும் இவர்களை அசைக்கவே ஆட்டவோ முடியாது என்பது தான் எதார்த்தம்.
அதிலும் இந்திய ஆட்சி பணி, இந்திய காவல் பணி போன்ற பதவிக்கு வருபவர்கள் அனைவரும் பாக்கியசாலிகள்.
ஒரு மாவட்டம் சிறப்பாக இருக்க அந்த மாவட்டத்தில் இருக்கும் (குறைந்தபட்சம் ஆறு தொகுதி) சட்ட மன்ற உறுப்பினர்கள், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அதிகபட்சம் என்ன செய்ய முடியுமோ? அதை விட நினைத்த நேரத்தில் எவரையும் கேட்காமல் தன் அதிகார வரம்புக்கு உட்பட அத்தனை நல்ல காரியங்களையும் அந்த மாவட்டத்தில் உள்ள அத்தனை மக்களுக்கும் ஒரு மாவட்ட ஆட்சியரால் செய்ய முடியும்.
துண்டு கஞ்சா விற்பனை வரைக்கும் இந்த மாவட்டத்தில் உள்ள இந்திய காவல் பணியின் மூலம் தலைமை பொறுப்புக்கு வந்தவரால் கட்டுப்படுத்த முடியும்.
அரசியல்வாதிகள் குறுக்கீடுகள், அதிகார துஷ்பிரயோகம், அரசியல்வாதிகளிடம் பணிந்து நின்று தன்னை வளப்படுத்திக் கொண்ட பல அதிகாரிகளைத் தான் நாம் பார்த்து பார்த்து வெறுத்துப் போயுள்ளோம். ஆனால் இந்தக் கூட்டமைக்குள் நூறில் பத்து நல்ல அதிகாரிகள் இருப்பதும், அவர்கள் மூலம் பல நல்ல விசயங்கள் நடந்து கொண்டிருப்பது பொது மக்களின் பார்வைக்கு அவ்வளவு சீக்கிரம் வந்து விடாது என்பதனையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிலரால் விளம்பரங்களுக்குப் பெருமை. பலருக்கு விளம்பரமே சாபமாகவும் போய்விடுவதுண்டு.
சகாயம் சுடுகாடு வரைக்கும் படுத்து எழுந்து வந்த போதிலும் நீதிமன்றம் கூட இன்று வரையிலும் அசைந்து கொடுக்கவில்லை. உமாசங்கர் என்னன்னவோ செய்து பார்த்தார். கடைசியில் பைத்தியக்காரன் பட்டம் கட்டிவிட்டார்கள். இறையன்பு அரசாங்க செலவில் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டே சுய முன்னேற்ற எழுத்தாளராக மாறிவிட்டார். இது போலப் பல அதிகாரிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
அஸ்ரா கர்க் என்ற அதிகாரி திருப்பூருக்கு வந்தார். மணல் லாரிகள் வெள்ளக்கோவில் தாண்டி இந்தப் பக்கம் உள்ள வர முடியவில்லை. நான்கு புறமும் சீல் வைத்தது போல ஆகிவிட்டது. ஊரடங்கும் வேலையில் தான் அவர் தினசரி வேலைத் தொடங்கும். ஒவ்வொருவரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று தெறிக்க ஆரம்பித்தனர். ஏன் மாற்றினார்கள்? எதற்காக மாற்றினார்கள்? என்பது தெரியும் முன்பே வேறொரு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு விட்டார்.
திருப்பூரில் கமிஷனர் அலுவலகம் திறந்த நேற்றோடு மாறிய கமிஷனர் எத்தனை பேர்கள் என்று எண்ணிப் பார்த்தாலும் பட்டியல் நீளமாகத்தான் இருக்கும்.
இப்போது தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் போராட்ட பிரச்சனைகளுக்குப் பிறகு புதிய ஆட்சியர் வந்துள்ளார். ஏற்கனவே இருந்தவரின் வயது 37. அவர் 2009 ஆம் ஆண்டுத் தெலுங்கானா மாநிலத்தில் தேர்ச்சி பெற்று வந்தவர். ஒரு தேர்வு மூலம் பெற்ற சிறப்புகள் அனைத்தும் பொதுமக்களுக்குப் பலன் தராது என்பதற்கு உதாரணமாக இருந்தவர். மிகக்குறுகிய வயதிலே அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர், தொழில் சமூகத்தோடு ஒன்றோடு கலந்து ஒன்றாக மாறி தன் புத்தியில் லத்தியைக் கொண்டு சாத்திக் கொண்டு பக்குவமாக அடுத்த மாவட்டத்திற்குச் சென்று விட்டார். இது போன்ற படித்த கூமுட்டைகளும் அரசியல்வாதிகளை விடக் கொடூரமானவர்களாகவும் இருந்து தொலைத்து விடுகின்றார்கள்.
ஆனால் அரசியல்வாதிகளின் அத்தனை அராஜகங்களையும் பொறுத்து, ஏற்று, வளைந்து , தடுமாறி தட்டுண்டு தனக்கான இடம் அமைந்த பின்பு சோர்ந்து போகாமல், பழைய நினைவுகளில் இருந்து மீண்டு தன்னால் இதையாவது செய்து விட முடியுமா? என்று முயற்சித்தவர்களின் சமீப காலத்தில் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் முக்கியமாகத் தான் தெரிகின்றார்.
இந்தப் பேட்டியைப் பார்த்த போது மனதிற்குள் இலக்கியவாதி, வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களால் மக்களின் இயல்பான உலகத்தையும், அந்த உலகத்திற்குத் தேவைப்படும் விசயங்களையும் செய்ய முடியும் என்று உணர்த்தியது.
இவர் இதில் சொல்லியிருப்பது முக்கியமான ஒன்று.
கஷ்டப்பட்டுப் படித்து முடித்து வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ் ஆவது எளிது. அதன் பிறகு? நாம் தான் நம் வேலையை இஷ்டப்பட்டுச் செய்தால் இருக்கும் சவால்கள் நம் கண்களுக்குத் தெரியாது.
செய்பவர்கள் எத்தனை பேர்கள்?
இப்போது மோடி வேறு இவர்களை நம்பாமல் தனியார் நிறுவனங்களில் இருந்து இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு ஆட்களைப் பொறுக்கிக் கொண்டு வரப் போகின்றேன் என்று பயம் காட்டியுள்ளார்.
இனி வளைய மாட்டார்கள். ஓபிஎஸ் பாணியில் தான் ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரிகளும் இருக்கப் போகின்றார்கள்.
மகள் ஆசைப்படுகின்றார் என்று ஊக்குவித்துக் கொண்டிருந்தேன். இனி ஊக்கு, பின் ஊசி போல எப்படி வளைய வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும்?
8 comments:
ஓபிஎஸ் பாணி...! அப்படிச் சொல்லுங்க...!
யுத்தம் யுத்தம்... தர்ம யுத்தம்...!
இலக்கியவாதி, வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களால் மக்களின் இயல்பான உலகத்தையும், அந்த உலகத்திற்குத் தேவைப்படும் விசயங்களையும் செய்ய முடியும் என்று உணர்த்தியது.
உண்மை ஐயா
அருமை.
பல அலுவலர்கள், இலக்கியவாதிகளாக மாறுவதாகக் காட்டிக்கொண்டு வெளியுலகிற்கு ஒருவராகவும் தனிப்பட்ட முறையில் ஒருவராகவும் வெவ்வேறு குணங்களில் வாழ்ந்து,தன்னை மேம்படுத்திக்கொண்டு, ஆனால் அதே சமயம் தன்னை நியாயவான் போல வெளிப்படுத்திக்கொண்டு இருப்பதை நான் கண்டுள்ளேன்.
அரசியல்வாதிகளை மீறி அதிகாரிகள் செய்ய முடியும் என்பது தற்போது எளிதல்ல. அப்படி செய்யவேண்டும் என்றால் அவர்களின் இழப்பு கடுமையானதாக இருக்கும்.
அதற்காக அதிகாரிகள் மோசமாக செயல்படாமல் சிலவற்றை தவிர்க்கலாம்.
பலரும் புரட்டி போட்டுவிடலாம் என்று தான் வருகிறார்கள் ஆனால், நடைமுறை எதார்த்தம் வேறு மாதிரி இருப்பதால், சில காலங்களுக்கு பிறகு எவனோ எப்படியோ போங்க என்று அமைதியாகி விடுகிறார்கள்.
ஜம்புலிங்கம் சார் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இங்கே பலர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மாதிரியும் பொதுஇடத்தில் வேறு மாதிரியும் இயங்குகிறார்கள்.
இலக்கியவாதிகள் என்று கடந்த 30 வருடங்களில் இங்கே முன்னிலைப்படுத்தப்பட்டவர்கள் அத்தனை பேர்களும் அரசு ஊழியராக வாழ்ந்தவர்கள். பணிபுரிந்தவர்கள். இவர்கள் எப்படி பணிபுரிந்து இருப்பார்கள் என்பதனை பலமுறை யோசித்து உள்ளேன். திருப்பூரில் அப்படிப்பட்ட ஒருவர் இருந்தார். நீங்க சொல்வது உண்மை தான்.
அதிகாரிகள் நிச்சயம் தன் வரம்புக்குள் பலவற்றைச் செய்ய முடியும். அமைச்சர்கள் எதிர்பார்க்கும் பணம் சார்ந்த விசயங்களில் கூட இரண்டு பக்கமும் பெரிய பாதகம் வராத அளவுக்குக்கூட வாய்ப்புள்ளது. ஆனால் பாதிக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு நீங்க சொன்ன மாதிரி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நமக்கேன் வம்பு? என்று தங்களை சுருக்கிக் கொண்டு விடுகின்றார்கள். மனசாட்சியை வீட்டை விட்டு கிளம்பும்போதே பத்திரமாக பரணில் வைத்து விட்டு வந்து விடுகின்றார்கள் என்பதே நடைமுறை எதார்த்தம்.
அரசு அலுவலர்கள் கட்டாயம் வாசிப்பு பழக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்படியாவது அவர்களின் மன மாறுதல்கள் இங்குள்ள மக்களுக்கு முடிந்தவரைக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
நடந்து கொண்டிருக்கும் ஆட்சி மாறி வேறொரு ஆட்சி வந்து அப்போது அதிகாரம் எதுவும் இல்லாத போது இப்போதுள்ள அமைச்சர்களின் வாழ்க்கையைப் பார்க்க ஆசை. குறிப்பாக இவர்களின் இறுதி காலம் எப்படி இருக்கும்? என்ற எண்ணம் என் மனதில் உண்டு. காரணம் இப்போது ஜெ மற்றும் சசிகலா இவர்கள் செய்த பலவற்றைத் தாண்டி கோடு மேலேறி போய்க் கொண்டேயிருக்கின்றது? எங்கே போய் முடியுமோ? என்று பயமாக உள்ளது,
Post a Comment