Tuesday, March 13, 2018

மேலும் சில குறிப்புகள் 2

நேற்று மதியம் வீட்டுக்குச் சாப்பிட வந்த போது அம்மையார் பழைய பாடல்களின் தொகுப்பை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். நான் உள்ளே நுழைந்ததைப் பார்த்த போது செய்திக்கு மாற்றட்டுமா? என்று கேட்டார். வேண்டாம் என்று சொல்லிவிட்டுஅவர் பார்த்துக் கொண்டிருந்த பாடலை நானும் சிறிது நேரம் பார்த்தேன். 

எம்.ஜி.ஆர். சிவாஜி தத்துவபாடல்கள். வார்த்தைகள் பசுமரத்தாணி போல உள்ளே பாய்ந்தது. ஆனால் என்னால் தொடர்ந்து கேட்க முடியவில்லை. சிறிது நேரம் ஓய்வு எடுக்கப் படுக்கையில் சாய்ந்த போது கூடத் தொலைக்காட்சியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல்வரிகள் காதுகளை வந்தடைந்து கொண்டேயிருந்தது. 

அப்போது அந்தப் பாடல்களை ஊரில் இருந்த போது கேட்ட காலங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து போனது. 

இதே போலப் பள்ளிப்பருவம் முதல் கல்லூரிப் பருவம் வரைக்கும் என் காதுகளில் ஒலித்த இசைஞானியின் பாடல்களை ஒவ்வொருமுறையும் கேட்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அதைக் காதில் வாங்காமல் கடந்து சென்று விடுவதுண்டு. காரணம் ஒரு பாடல் ஒலிக்கும் போது எனக்குக் கூடவே அப்போதைய நினைவுகள், நல்லது, கெட்டது, சோகம், பிரச்சனைகள் எல்லாமே நினைவுக்கு வந்து நிலைகுலைய வைத்துவிடும். 

டூரிங் டாக்ஸியில் தொடக்கத்தில் எந்தப் பாடலை ஒலிக்கவிடுவார்கள். டிக்கெட் கொடுக்கும் போது எந்தப் பாடல் ஒலிக்கும், டிக்கெட் கொடுத்து முடித்தாகிவிட்டது. படம் போட போகின்றோம் என்பதனை அறிவிக்கும் பொருட்டு ஒரு பாடலைப் போடுவார்கள். அதே போல ஊரில் ஒருவர் சிங்கப்பூரில் சம்பாரித்த சொத்தை வைத்து நவீன திரையரங்கம் கட்டினார். அந்தத் திரையரங்கத்தில் வேறு விதமான பாடல்கள் வரும். 

வீட்டுக்கு அக்காவிடம் ட்டியூன் படிக்க வந்த பெண் மீதி கொண்ட காதல் சமயத்தில் விரும்பிய பாடல்கள், கல்லூரி முடித்து முதல் ஆறு மாதங்கள் ஊரில் சுற்றிக் கொண்டிருந்த போது அப்பாவின் கண்களில் படாமல் சுவர் ஏறி குதித்துப் பின்பக்கமாக உள்ளே நுழையும் போது பக்கத்து டீக்கடையில் ஒலித்த பாடல் என்று ஒவ்வொன்றும் இப்போது கேட்கும் பாடலை நினைவு படுத்திக் கொண்டேயிருக்கும். 

நினைவுகள் சுகமானவை. ஒருவருக்கு நினைவு தான் முழுமையான சொத்து. ஆனால் அளவு கடந்து இருக்கும் போது, அது நிரம்பி வழிந்து பாத்திரத்தில் நிற்காத அளவுக்கு அனுபவங்கள் இருக்கும் போது அது சுமையாகத்தான் இருக்கும். இதன் காரணமாக மறதி வரமாக எனக்குத் தெரிகின்றது. 
இன்று காலையில் இந்தப் பாடலைப் பார்த்துக் கொண்டிருந்த போது இளையராஜா குறித்துப் பல எண்ணங்கள் வந்து போனது. 


எனக்கு இசையறிவு கிடையாது. ஆனால் அதனை உள்வாங்கத் தெரியும். இசைக்கோர்வைகளின் சூட்சமம் தெரியாது. ஆனால் அது எங்கே தொடங்கி எங்கே தொடர்ந்து எங்கே முடிகின்றது? முடியும் போது எந்த இசைக்கருவி மீண்டும் தொடங்க வைக்கின்றது என்பதனை அனுமானிக்கத் தெரியும். பாடல் வரிகளுக்கு இடையே சின்னச் சின்ன வாத்தியக்கருவிகள் செய்யும் மாய ஜால வித்தைகளை உணரத் தெரியும். இதை அனைத்தையும் இசைஞானியிடம் தான் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன். 

பலமுறை பிஜிஎம் என்ற கோர்வைகளைத் தனியாக எடுத்துக் கேட்பதுண்டு. நிச்சயம் கோடியில் ஒருவருக்குத் தான் இந்தத் திறமை வாய்க்கும். இளையராஜா தமிழகத்தில் பிறந்தது நமக்கான பெருமை. 

இளையராஜா குறித்துச் சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய தகவலைக்கூடப் பகிர்ந்திருந்தேன். அது முழுமையான உண்மை தான். கற்பனை உலகத்தில் உலாவுபவர்கள் நிஜவாழ்க்கையில் நிஜமனிதர்களைக் கையாளமுடியாமல் போய்விடுகின்றது. அதற்கு முழு உதாரணமாக இளையராஜாவை எடுத்துக் கொள்ள முடியும் என்று எழுதத் தான் எனக்கும் ஆசை. ஆனால் எதார்த்தம் அதுவல்ல.

என் காதுக்கு வந்த சில தகவல்கள். 

எச். ராஜா மூலம் விஜய் ன் படமான மெர்சல் படம் குறித்து அதன் வெற்றி தோல்வி குறித்து, அதன் தாக்கம் குறித்து இணையதளங்கள், இந்து மதத்தை மட்டும் விமர்சித்து விட்டு மற்ற மதங்களை விமர்சிக்கத் தயங்கும் போராளிக்கூட்டங்களைக் கவனித்துக் கொண்டிருந்த நான் மற்றொரு விசயத்தைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். 

இராம நாராயணன் மகன் யார் யாரிடம் இந்தப் படத்திற்கு நிதி பெற்றுள்ளார்? எப்படி ஹைப் உருவாக்குகின்றார்கள்? யார் பின்புலத்தில் இருக்கின்றார்கள்? யாருக்கு லாபம்? யாருக்கு நட்டம்? என்பதனை கவனித்த போது இரண்டு பேர்கள் அதிகப் பதட்டத்தில் இருந்தார்கள். ஒருவர் உதயநிதி ஸ்டாலின். அவர் அடிப்படையில் வியாபாரி. அவர் மேல் எந்தத் தவறும் இல்லை. நிதி உதவி செய்து உள்ளார். நம்ப முடியாத மீட்டர் வட்டி. அதற்கான பலனைப் பெற்றார். இரண்டாவது நபர் இசைஞானி. அவரும் இந்தப் படத்திற்கு நிதி உதவி செய்துள்ளார். அவருக்குண்டான பலனும் கிடைத்து விட்டது. 

மற்றொரு தகவல். 

இளையராஜாவுக்கு விருது கிடைத்தபிறகு தகுதியானவருக்குக் கிடைத்த மரியாதை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அவர் தகுதியின் மீது எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது என்றே நினைக்கின்றேன். ஆனால் அதற்காகவும் அவர் உழைத்துள்ளார். அவருக்குக் கிடைக்க வேண்டிய உண்மையான மரியாதைக்குக்கூட லாபி வட்டத்திற்குள் நுழைந்து அதற்கான விலையைக் கொடுத்து தான் பெற்றுள்ளார். 

இது சார்ந்த ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது. 

எப்போதும் இசைஞானிக்கும் பத்திரிக்கையாளர்களும் ஏழாம் பொருத்தம். அவர்கள் குண்டக்க மண்டக்கக் கேள்வி கேட்பார்கள். இவரோ தத்துவ ஞானத்தைப் பாடமாகப் புகட்டுவார். அவர்கள் டர் ஆகி வேறு பாதையில் வண்டியைத் திருப்புவார்கள். இது எப்போதும் நான் பார்த்துக் கொண்டிருப்பது தான். நான் கூடப் பத்திரிக்கையாளர் மேல் தான் தவறு தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 

விருது கிடைப்பதற்கு முன் சில மாதங்களுக்கு முன் தேசிய தொலைக்காட்சி (தனியார்) சேனல் நிர்வாகம் இளையராஜாவைத் தொடர்பு கொண்டு பேட்டி எடுக்க ஒப்புதல் பெற்றது. அந்தப் பேட்டி பல பிரபலங்களை எல்லாத் துறைகளில் இருந்து தேர்ந்தெடுத்துத் தோட்டத்தில் அல்லது வெளியிடங்களில் நடந்து கொண்டே இயல்பாக உரையாடிக் கொண்டே செல்வது என்கிற ரீதியில் இருக்கும். இது தொடர்ந்து நடந்து வருகின்றது. 
ஒப்புதல் பெற்ற தினத்தில் பேட்டி எடுக்கும் குழுவினர் வந்த பிறகு முக்கியமான நபர் இருவரையும் விருந்தளித்து அவர்களிடம் இந்தப் பேட்டி வேண்டாம் என்று ஞானி காரணக் காரியங்களை விளக்கி உள்ளார். 

காரணம் அவர்கள் எப்படிக் கேள்வி கேட்பார்கள்? என்று இவர் நன்றாகவே உணர்ந்தவர். தப்பிக்க முடியாது. அவர்கள் மத்திய அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற்றவர்கள். மிரட்ட முடியாது. அடிபணிந்து தான் போக முடியும். அன்பாகவே பேசி வழியனுப்பி வைத்து விட்டார். யாரை மிரட்ட முடியும் என்பதனையும் யாரிடம் அடிபணிந்து போக வேண்டும் என்ற கலையையும் இசைஞானி தெளிவாகவே கற்று வைத்துள்ளார். 

அவரின் வாழ்நிலை, சூழ்நிலையில் வைத்துப் பார்த்தால் இது எனக்குச் சரியாகவே படுகின்றது? 

அப்புறம் ஏன் ஈரவெங்காயம் தத்துவ விசாரம்? 

இரட்டை வாழ்க்கை வாழ்வது எளிதல்ல. அதுவும் ஆன்மீகம் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு ஜல்லியடிப்பது எல்லாம் தற்போது காலத்தில் நடைமுறைக்கு ஒவ்வொது. எப்படியும் பல்லிளிக்க வைத்து விடும். இயல்பாக வாழ முடியாதவர்கள் மட்டும் தான் அந்தப் போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு வாழ முடியும். 

காரணம் இசைஞானி என்ற பட்டம் கலைஞர் காரைக்குடியில் வைத்துதான் கொடுத்தார். நிகழ்ச்சி நடப்பதற்கு முன் மதியம் முதல் அந்தப் பெரிய செட்டியார் வீட்டில் தமிழ்நாட்டில் உள்ள முக்கியப் பிரபல்யங்கள் அனைவரும் கூடியிருந்தனர். அந்தக்கூட்டத்தில் ஒரு பல்கலைகழகத் துணைவேந்தரும் இருந்தார். ஜமாபந்தி ஒன்று கூடும் போது ஆர்வக்கோளாரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசுவது இயல்பு தான். 

அன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரியாத்தனமாக இசைஞானியிடம் பழைய பாடல் வரிகளைச் சுட்டிக் காட்டி வேறு சில தகவல்களைச் சொல்லி (அவர் தமிழ் ஆர்வலர்) பேச இசைஞானி அவரைப் பிலுபிலு வென்று பிடித்து உலுக்கி விட்டார். 

நடிகர் சிவகுமார், வைகோ, முரசொலிமாறன் தொடங்கி அத்தனை பேர்களுக்கும் தர்மசங்கடமாகிவிட்டது. தயவு தாட்சண்யம் இல்லாமல், கொஞ்சம் கூட யோசிக்காமல் துணைவேந்தரை இசைஞானி துவைத்து எடுத்து விட்டார். அவர் முகம் வாடிவிட்டது. அப்புறம் துணைவேந்தரை சமாதானப்படுத்தி வேறு பக்கம் நகர்த்தி விட்டனர். 

அந்தக் கூட்டத்தில் அவர்களுடன் இருந்த நண்பர் சில மாதங்களுக்கு இளையராஜாவுக்கு விருது கிடைத்த போது இந்தத் தகவலையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். 

ஆழ்ந்த திறமையும், புலமையும் கொண்டவர்களின் மனம் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது என்பது எந்த அளவுக்கு உண்மையோ? அந்த மனதிற்குள் இருக்கும் அடிப்படை வக்கிரம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு சிறிதளவாவது கிடைத்த அனுபவங்கள் வாயிலாக மாறும் என்பதே சமூக விதி சொல்லும் பாடம். 

ஆனால் இசைஞானி விசயத்தில் நான் இன்று வரையிலும் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் எப்போதும் எனக்குண்டு.

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுருக்கமாக "அகம்பாவம்" விடவில்லை... (?)

திவாண்ணா said...

மனம் கட்டுப்பாடு இல்லாமல் உணர்சசி வசப்படுவதால்தான் கலைஞர்கள் கலைஞர்களாக இருக்கிறார்களோ?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சிலருக்குத்தான் மாறும். பலருக்கு மாறுவதில்லை.

'பரிவை' சே.குமார் said...

மிகவும் அருமையான பகிர்வு அண்ணா...
ராஜாவின் இசை எல்லா இடத்திலும் ராஜ்ஜியம் பண்ணும்.
ஆனால் அவரோ இசை தவிர மற்ற இடத்தில் ராஜ்ஜியம் பண்ண முடியாத மனிதர் காரணம் தானே என்ற அகங்காரம்.

Amudhavan said...

காரைக்குடியில் திரு பழ கருப்பையா வீட்டில் நடைபெற்ற அந்த நிகழ்வின்போது நானும் உடனிருந்தேன். நீங்கள் சொல்வதில் ஒரு சிறு பிசகு. இ.ரா அந்தப் பல்கலைக் கழகத் துணைவேந்தரைத் துவைத்து எடுத்த நேரத்தில் வேறு பல பெரிய பிரபலங்கள்தாம் அங்கே இருந்தனர். வைகோ, முரசொலி மாறன் போன்றவர்கள் அந்த இடத்தில் இல்லை. அவர்கள் மாலை ஐந்து மணி சுமாருக்கு கலைஞருடன் ஒன்றாக வந்தனர். சம்பவம் நடைபெற்ற நேரத்தில் சிவகுமார், தமிழண்ணல்,பஞ்சு அருணாசலம்,ப.சிதம்பரம் அவர்களின் அண்ணன் லட்சுமணன் போன்றோர்தாம் உடனிருந்தனர்.

ஜோதிஜி said...

நன்றி. நான் எழுதியது சரி தான் என்று மெய்பித்தமைக்கு.

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

அறியாச் செய்திகளை அறிந்தேன் ஐயா
நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

பழைய திரைப்படப் பாடல்கள் ஒவ்வொன்றும் அவரவர் இளமைக்கால நினைவுகளை மீட்டெடுக்கும் வல்லமை உள்ளவை. அந்தக் கால இலங்கை வானொலி ஒலி பரப்பிய பழைய பாடல்களை மறக்க முடியுமா?

சுவையான செய்திகள் அடங்கிய தொகுப்பு. நன்றி. தொடர்கின்றேன்.

SENTHIL KUMARAN said...

நன்று