Monday, August 26, 2013

மலட்டுப் பூமியில் பாவத்தின் சாட்சியாய்......

சமீபத்தில் நான் பார்த்த தொலைக்காட்சி விவாதத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி கொண்டு வர நினைக்கும் உணவு பாதுகாப்பு மசோதா குறித்து நாலைந்து பேர்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் ரசாயன உரங்கள் மூலம் நம் நாடு சென்று கொண்டிருக்கும் அழிவுப் பாதையை சுட்டிக்காட்ட மற்றொருவர் முதலில் இயற்கை விவசாயம் குறித்து பேசுவதை நிறுத்த வேண்டும். காரணம் அது எந்த அளவுக்கு பலன் உள்ளது என்பதைப் பற்றியே அறியாமல் அதைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றார். 

மேலும் இந்தியா சுதந்திரம் வாங்கிய போது இருந்த 30 கோடி ஜனத் தொகையானது இன்று 120 கோடிக்கு மேல் தாண்டி அடுத்த 20 ஆண்டுகளில் 140 கோடி மக்கள் என்ற எண்ணிக்கையை தொடும் இந்த நிலையில் இயற்கை விவசாயம் எப்படி இத்தனை பேர்களுக்கு உணவு தர முடியும்? என்றார்.

சரியோ தப்போ இன்றைய மக்கள் தொகை வளர்ச்சிக்குண்டான உணவு இருப்பு நம்மிடம் இருப்பதே மிகப் பெரிய சாதனை என்று முடித்தார்.

சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் இந்தியா சந்தித்த பஞ்சங்களும், பட்டினியும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் சொல்லி மாளாதது. ஆனால் இன்று மிக மலிவானது அரிசியே.

அது விலையில்லா அரிசி என்கிற அளவுக்கு வந்துள்ளது.  

நாம் வாங்கும் விலையுயர்ந்த அரிசியை இந்த கணக்கில் கொண்டு வர வேண்டாம்.  அது நமது சுவை தேடலால் நாம் கொடுக்கும் விலையது.

இயற்கை விவசாயம், இயற்கையான வாழ்க்கை போன்றவற்றை எளிதாக நம்மால் சொல்லிவிட முடியும். ஆனால் வாழ்ந்து பார்க்கும் போது தான் இதன் விளைவுகளைப் பற்றி கொஞ்சமாவது யோசிக்க முடியும்.  

கல்லூரி வரைக்கும் கிராமத்து வாழ்க்கை வந்தவர்களை இப்போது அதே கிராமத்தில் போய் நிரந்தரமாக வாழ முடியுமா? என்றால் அவர்களால் நிச்சயம் முடியாது தான் சொல்வார்கள்.  இரைச்சலும், தூசியும் இயல்பான ஒன்றாக பழகிவிட அமைதி கூட தற்போதைய வாழ்க்கையில் பேரமைதி போல நம்மை பயமுறுத்தும் நிலைக்கு நம் மனம் மாறியுள்ளது.  வசதிகளுக்கு பழகிய உடம்பு கிராமத்து வாழ்க்கையை வெறுக்கும்.

மனிதனின் மூன்று முக்கிய தேவைகளான உணவு என்பது ருசியின் அடிப்படையில், ஆடை  நாகரித்தின் வெளிப்பாடாகவும் மாறியுள்ளது. இருப்பிடம் அவரவர் வசதிகளை காட்டிக் கொள்வதாகவும் மாறியுள்ளது.

ஒவ்வொரு விசயத்தையும் நல்லது கெட்டது என்பதைப் போல நாம் அடையும் வளர்ச்சிக்குப் பின்னாலும் இரண்டு விசயங்கள் உள்ளது. 

இயற்கை மற்றும் செயற்கை. 

ஒரு விதையை இயல்பான நிலையில் வளரவிட்டு பெறும் ஆதாயம் என்பதற்கு குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும். ஆனால் அதையே செயற்கை வழியில் பல வழியில் உருமாற்றம் அடையச் செய்ய முடியும். விதையின் தன்மையை மாற்றுதல், செடியில் கலப்பினத்தை உருவாக்குதல், உருவான மரத்தில் மகசூல் அதிகரிக்க தேவைப்படும் செயற்கை முன்னேற்பாடுகளை உருவாக்குதல் என்று இன்றைய விஞ்ஞான அறிவின் மூலம் மனிதனால் நினைத்ததை சாதித்துக் கொள்ள முடிகின்றது.

இயற்கை என்பது குறிப்பிட்ட சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டது.  எவரும் உருவாக்குவதில்லை. அது இயற்கையாக உருவாவது. பழமோ, காயோ குறிப்பிட்ட மாதம் வருடம் என்று காத்திருந்து பெற வேண்டியது என்ற சூத்திரப்படி காலம் காலமாக அதனை உடைக்காமல் வாழ்ந்த மனித சமூகம் அனுபவித்த பலன் குறைவாக இருந்தாலும் வாழ்ந்த காலம் முழுக்க அதன் பலனை அனுபவித்து வாழ்ந்தனர்.

தான் அனுபவித்து தன் தலைமுறைகளுக்கும் அளித்து மறைந்தனர்.  

ஆனால் விஞ்ஞானத்திற்கு அறநெறிகள் முக்கியமல்ல.  உடனடித்தேவை என்றொரு வார்த்தை தான் விஞ்ஞானத்தை இயக்குகின்றது. முடியாதது இங்கு எதுவுமே இல்லை என்ற விஞ்ஞான அறிவால் எல்லைகளை உடைப்பதும் மேலும் மேலும் முன்னேறிக் கொண்டே இருந்தாலும் இன்று வரைக்கும் இயற்கையை வெல்லும் அறிவை மனிதனால் வளர்த்துக் கொள்ள முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் இயற்கை அழிக்கப்படும் போது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதுவே சமன் செயதும் கொள்கின்றது. இயற்கை என்பது உயர்ந்த மலையெனில் அதில் ஏறுபவர்களும், ஏறிக் கொண்டு இருப்பவர்களும் அவரவருக்கு புரிந்ததை, பார்த்ததை வைத்துக் கொண்டு தான் வென்று விட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இன்னும் அறியாத ஆச்சரியங்கள் ஆயிரமாயிரம்.

இன்று வளர்ச்சி முன்னேற்றம் என்ற இந்த இரண்டு வார்த்தைகள் மட்டுமே முக்கியமானதாக இருக்கின்றது.

ஆனால் எது வளர்ச்சி? எப்படியான முன்னேற்றம் என்பது குறித்து எவரும் பேசுவதில்லை.  வளர்ச்சிக்கும் வீக்கத்திற்கும் உண்டான வித்தியாசங்களை உணர வாய்ப்பில்லாது ஓடிக் கொண்டேயிருக்கின்றோம்.

தொழில் வளர்ச்சியால் நாம் பெற்ற பலன்களை, அனுபவிக்கும் மகிழ்ச்சியைப் பற்றி பேசும் போது அதன் விளைவுகளைப் பற்றியும் நாம் பேச வேண்டும்.

இன்று இந்திய நாணயத்தின் வீழ்ச்சிக்கு பின்னால் உண்மையான பல காரணங்கள் இருந்தாலும் அதையும் மீறி இன்று ஒரே பாடலை திரும்பத்திரும்ப பாடிக் கொண்டு இருக்கின்றார்கள்.  அதாவது ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.  இறக்குமதியை குறிப்பாக எண்ணெய் சமாச்சாரங்களை குறைக்க வேண்டும் என்பதே. மேலும் நம்முடைய ஏற்றுமதி தான் உலக அரங்கில் இந்தியாவிற்குண்டான மரியாதையை தந்துள்ளது என்கிறார்கள்.

ஏற்றுமதி என்ற வார்த்தை இந்தியாவிற்கு எத்தனை பலனை தந்துள்ளதோ அந்த அளவுக்கு இந்தியாவை கொத்துக்கறியாகவும் மாற்றியுள்ளது.  இந்தியா என்பது மிகச் சிறந்த சந்தை என்ற நிலையை உருவாக்கியவர்களும், இந்தியாவில் உள்ள மனித வளத்தை பயன்படுத்திக் கொள்ள அனைவரும் இங்கே வாருங்கள் என்று அழைப்பு விடுத்தவர்களும் உருவாக்கிய கொள்கைகளினால் அடுத்து வரும் தலைமுறைகள் அனுபவிக்கப் போகும் சிலவற்றைப் பேசலாம்.  

இன்று ஏற்றுமதி இறக்குமதி என்பது இயல்பான வார்த்தையாக மாறியுள்ளது. ஏற்றுமதி என்ற வார்த்தையினால் வளர்ந்த பல தொழில்கள் இருந்தபோதிலும் ஆய்த்த ஆடைகள் மற்றும் தோல் என்ற இருசமாச்சாரங்கள் கொடுத்த வேலைவாய்ப்புகள் மூலம் இந்தியர்கள் பலன் அடைந்ததை விட, நாட்டிற்கு கொடுத்த அந்நியச் செலவாணியை விட இந்த இரண்டு தொழில்கள் மூலம் இன்னும் பத்து தலைமுறைகள் அனுபவிக்கப் போகும் துன்பங்கள் அதிகம்.  

தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள திண்டுக்கல், ஆம்பூர், வாணியம்பாடி, ஈரோடு போன்ற ஊர்களைச் சுற்றிலும் உள்ள நீர் ஆதாரங்களை இனி எந்த நிலையிலும் பழைய நிலைக்கு திரும்ப பெறமுடியாது. இதே போல திருப்பூரும்.

திருப்பூரில் உள்ள ஆய்த்த ஆடைத் தொழில் மூலம் நேரிடையாக மறைமுகமாக லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்புகள் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பதும், மத்திய அரசாங்கத்திற்கு இதுவொரு முக்கியத் லாபமீட்டும் ஊராக இருந்தாலும் இந்த தொழில் மூலம் சமூகம் அடைந்த எதிர்கால சமூகம் அடையப் போகும் துயரங்களை சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

திருப்பூரை நம்பி லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஆய்த்த ஆடைத் தொழில் என்பது சமூகத்திற்கு இரு முனைத் தாக்குதல்களை கடந்த 25 வருடங்களாக நடத்திக் கொண்டு வருகின்றது. 

சாயப்பட்டறைகள் மூலம் நிலமும் நீரும் கெட்டுப் போகின்றது என்பது போன்ற பல சீர்கேட்டுச் சமாச்சாரங்களை போகிற போக்கில் படிக்க பழகி விட்டோம்.  ஆனால் இந்த தொழில் மூலம் நீரும் நிலமும் மாசடைந்து விட்டது என்பதைப் போல மற்றொரு பிரச்சனை வெளியே தெரியாமல் இருக்கின்றது.

பஞ்சு நூலாக மாற நூற்பாலைக்கு செல்கின்றது. அது வேண்டிய துணியாக மாற நிட்டிங் என்ற பின்னலகம் வருகின்றது.  இந்த இரண்டு இடத்திலும் மின்சாரம் மட்டுமே முக்கியத் தேவையாக இருக்கின்றது.

ஆனால் இதற்குப் பிறகு இந்த துணி சாயப்பட்டறைகள், ஸ்டீம் காலண்டரிங்,, காம்பாக்ட்டிங், ட்ரையர் போன்ற பல உப தொழில்கள் முழுமையான துணியாக மாற உதவி புரிகின்றது.

இந்த அத்தனை தொழிலும் சுடுதண்ணீர் தேவை.

திருப்பூரில் இன்றைய சூழ்நிலையில் 700க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. இது தவிர இது சார்ந்த உப தொழில்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்கள் தினந்தோறும் செயல்பட வேண்டுமென்றால் சுடுதண்ணீருக்காக பாய்லர் இரவு பகலாக இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த பாய்லர் இயங்க கட்டாயம் விறகு தேவை. 

இந்த விறகை பெற தொடக்கத்தில் காங்கேயத்தில் காடு அழிப்பு வேலை தொடங்கியது.  படிப்படியாக நகர்ந்து கொண்டேயிருந்தது.  திருச்சி சென்று புதுக்கோட்டை வரை வளர்ந்தது. தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டம் சென்றது. அந்த வட்டம் முடிந்து தஞ்சாவூர் மாவட்டம் வரைக்கும் சென்று இன்று மேலும் மொட்டையடிக்க எந்த ஊர் இருக்கின்றது என்கிற அளவுக்கு தேடுதல் வேட்டை நடந்து கொண்டேயிருக்கின்றது.  உத்தேச கணக்காக ஒரு சாயப்பட்டறைக்கு தினந்தோறும் மிகக் குறைந்த அளவான ஒரு டன் என்கிற நிலைக்கு வைத்துக் கொண்டாலும் 700 சாயப்பட்டறைகள், இவற்றிக்கு மாதந்தோறும் தேவைப்படும் விறகின் அளவு என்பதை மனக்கணக்கில் கொண்டு வந்தால் தெரியும்.  இது தவிர உபதொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் விறகு என்கிற நிலையில் திருப்பூருக்குள் மட்டும் ஒரு நாள் வரும் விறகின் அளவு ஒரு லட்சம் டன். 

சாயப்பட்டறை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த போது அரசாங்க ஆதரவோடு பொது சுத்திகரிப்பு நிலையம் உருவானது.  ஏறக்குறைய 15 முதல் 20 வரையான சுத்திகரிப்பு நிலையங்கள் உருவானது. இது போன்ற இடங்களிலும் சாய நீரை சுத்திகரிப்பு செய்ய தேவைப்படும் விறகின் அளவு சொல்லிமாளாது.

திருப்பூரில் சில நிறுவனங்கள் மட்டும் ஆயில் மூலம் செயல்படும் ஹீட்டர் பயன்படுத்துகின்றது.  விறகு தேவைப்படாது.  எந்த நிறுவனமும் இது குறித்து யோசிப்பதே இல்லை. இது குறித்து சட்டங்களும் கண்டு கொள்வதில்லை.

சாயத்தண்ணீர் அணைக்கட்டில் சேர பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்த பிறகு மக்கள் எப்படி விழித்துக் கொண்டார்களோ அதே போல விறகை பயன்படுத்தும் முறைமையை அரசாங்கம் ஆப்படிக்கும் வரையிலும் இந்த அக்கிரமம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கப்போகின்றது.  

இழந்த காடுகள், இழந்த நில ஆதாரங்கள், பயன்படுத்தவே முடியாத நீர் என்று அத்தனையும் ஒன்று சேர்ந்து இன்று திருப்பூரில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு கருக்கலைப்பும், கரு உருவாகத சூழ்நிலையும், ஆண், பெண்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றது.  கேன்சர் என்பது இயல்பான நோயாக மாறியுள்ளது. உப்பு அடர்த்தி அதிகமுள்ள நீரை குடித்து குளித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் தலை முடியைப் போலவே மூளையும் மழுங்கிக் கொண்டே வருகின்றது. தினந்தோறும் இந்த மாவட்டத்தில் பிறக்கும் குழ்ந்தைகளில் ஊனத்தோடு பிறக்கும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

அந்நியச் செலவாணி கொடுத்த ஏற்றுமதியின் முக்கிய பலன் இதுவே.

இந்த இரண்டு தொழில் மட்டுமல்ல.  

ஏற்றுமதி, அந்நியச் செலவாணி என்கிற போர்வையில் உள்ள பெருந் தொழிலுக்குப் பின்னால் உள்ள அத்தனையிலும்  உள்ள முக்கிய லாபங்கள் குறிப்பிட்ட சிலருக்கும், வளர்ந்த நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கும் மட்டுமே போய்ச சேர 90 சதவிகித மக்கள் மூன்று வேலை சாப்பாட்டுக்காக மட்டுமே வாய் மூடி மெளினியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.    

வளர்ந்த நாடுகளில் இயற்கையை வணங்குவதில்லை.கெட்டுப் போகாமல் பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.  ஆனால் இங்கு சட்டங்கள் எப்போது போல இருட்டுக்குள் இருப்பதால் நாம் இருண்ட காலத்திற்கே பயணப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

ஆளத் தொடங்கியது முதல்  மொத்த இந்தியாவையும் இருண்ட காலத்திற்குள் வைத்துக் கொண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உருவாக்கிய சாலை வசதிகள், ரயில் பாதைகள் அனைத்தும் இங்குள்ள செல்வத்தை தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்ல உருவாக்கினார்களே தவிர இந்தியா நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல.

அவர்கள் உருவாக்கிய ஒவ்வொரு திட்டத்திற்கும் பின்னாலும் ஓராயிரம் திருட்டுத்தனங்கள் இருந்தன. விளைந்த தானியங்களை கப்பலேற்றி விட்டு செய்ற்கையாக உருவாக்கிய பஞ்சாத்தால் தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல லட்சம் இந்தியர்கள் மடிந்தனர். சுரண்டப்பட்டு இனி இங்கு எதுவும் இல்லை என்கிற நிலைக்கு வந்த பிறகு தான் இந்த தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது.  

ஏறக்குறைய திருவோடு கையில் ஏந்தும் நிலைமை.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து ஆட்சிக்கு வந்தவர்களுக்கு அன்று இருந்த அவசரத்தில் உருவாக்கிய பசுமைப் புரட்சியின் முழுமையான பலனை இன்று அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். மலட்டுப் பூமியில் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..

இந்த மலட்டுத் தன்மையை மேலும் வளர்க்கவே ஆட்சியாளர்கள் அடிவருடிகளாக மாறி வளர்ந்த நாடுகள் உருவாக்கிய மரபணு விதைகளை இங்கே கொண்டு வந்து அவர்களுக்கு கூலியாக பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர்.

கலப்பின விதைகள் மூலம் நாம் பெறும் பலன் அதிகம் தானே என்று சொல்ல நினைப்பவர்கள் ஒரு சிறிய விதையில் தாங்கள் விரும்பும் லாப நோக்கத்துக்காக ஒரு நாட்டையே மாற்ற முடியும் என்பதற்கும், ஒரு பெரிய நாடு ஒரு தனிப்பட்ட நிறுவனத்தையே சார்ந்து வாழ வேண்டியதாக இருக்கும் என்பதை நம்ம முடியுமா? அதைப்பற்றி தான் பேசப்போகின்றோம்.

அது மரபணு மாற்ற விதைகளுக்குப் பின்னால் உள்ள சர்வதேச நிறுவனங்களின் நிலைப்பாடுகள் உங்களுக்கு தெரியும் போது பல உண்மைகள் புரியும். ..............

அது குறித்து சிலவற்றை அடுத்த பதிவில்................

இந்த தொடரின் முந்தைய பதிவுகள்....



                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             


36 comments:

Unknown said...

உங்கள் கருத்து முழுக்க முழுக்க இடதுசாரிகளின் கருத்தாகவே படுகிறது ,மூலம் அங்கிருந்து தானா ?

நம்பள்கி said...

மிக மிக நல்ல இடுகை! மாலை விரிவாக பிண்ணூட்டம் இடுகிறேன். குடிக்க தண்ணி கூட இனி இறக்குமதி செய்யணும்; அந்த நிலை வரும். அடுத்த உலகப் போர் தண்ணீருக்காகத் தான் !

srinivasan said...

விவசாயிகள் விவசாயம் செய்வதை விட்டு விட்டு, நிலங்களில் கருவேல மரங்களை வளர விட்டு விட்டார்கள் . விறகு மூலம் நல்ல லாபம் பார்க்க திருப்பூருக்கு தான் கொண்டு வருகிறார்கள் !

தி.தமிழ் இளங்கோ said...

இந்தியாவில் இயற்கை விவசாயம் என்பது இப்போது சாத்தியப்படாத ஒன்று. நமது மூத்த பதிவர் பழனி கந்தசாமி அவர்கள் கூட “ இயற்கை விவசாயம் - கூடுதலாக சில சிந்தனைகள் “ என்ற தலைப்பில் இதைப் பற்றி எழுதி இருக்கிறார்.
http://swamysmusings.blogspot.com/2012/10/blog-post_8.html


'பரிவை' சே.குமார் said...

அண்ணா.. அருமையான பகிர்வு.
விறகு குறித்து அறிந்து வியப்புற்றேன். அதுதான் ஊரில் விறகு லாரிலாரியாக வெட்டி திருப்பூர் பக்கம் போகுது என்கிறார்களோ... அது சரி.

தொடருங்கள்... தொடர்கிறோம்...

NSK said...

நல்ல அலசல், பலரை சென்றடைய வேண்டிய பதிவு..
// வளர்ந்த நாடுகளில் இயற்கையை வணங்குவதில்லை.கெட்டுப் போகாமல் பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றார்கள் //

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆழ்ந்த அலசல் . இயற்கை விவசாயம் சாத்தியமா என்பதை சொல்லவில்லையே!

Thekkikattan|தெகா said...

முண்டாசு, நல்ல தரமான பதிவு! வாசிக்கும் பொழுதே காற்றிலும், நிலத்திலும், நீரிலும் எந்தளவிர்கு ’விஷம்’ வளர்ச்சி என்ற பெயரில் ஆழ விதைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.

//சுரண்டப்பட்டு இனி இங்கு எதுவும் இல்லை என்கிற நிலைக்கு வந்த பிறகு தான் இந்த தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது. //

எத்தனை உண்மை. இப்பொழுது நான் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையிலிருந்து சற்றே வட மத்திய மாநிலங்களின் வழியாக பயணித்துக் கொண்டே, அந்த நிலங்களை கண்ணுரும் பொழுது யோசித்த விசயம். இவர்கள் புத்திசாலிகள் இத்தனை பரந்த நிலப்பரைப்பை கொண்டு அத்தனையும் சூரையாடி விடாமல், மக்கள் தொகையையும் மட்டுக்குள் வைத்துக் கொண்டு, இயற்கை வளங்களையும் அப்படியே வைத்து பேணிக் பாதுக்காத்து வருகிறார்கள்.

ஆனால், சுரண்டல் முழுதும் இன்றைய அளவிலும் வெளியிலிருந்துதான். யார் பிழைத்து கிடப்பார்கள் எதிர்காலத்தில்??

kamalakkannan said...

//மனிதனின் மூன்று முக்கிய தேவைகளான உணவு என்பது ருசியின் அடிப்படையில், ஆடை நாகரித்தின் வெளிப்பாடாகவும் மாறியுள்ளது. இருப்பிடம் அவரவர் வசதிகளை காட்டிக் கொள்வதாகவும் மாறியுள்ளது.//

முற்றிலும் உண்மை

அனைவரிடமும் வாங்கி கட்டிக்கொள்ளும் தகவல் தொழில் நிறுவனங்களால் வரும் அன்னியசெலவானி ஆயுத்த ஆடை மற்றும் தோல் ஏற்றுமதி நிறுவனங்களை விட மிக அதிகம் :)

P.S.Narayanan said...

பசுமைப்புரட்சி விவசாயம் சாசுவதமானது (Sustainable) அல்ல. அபரிமிதமான தண்ணீர் தேவைப்படும். பிராமணப் பயிர்களான நெல் கோதுமை ஆகியவற்றை மட்டும் ஊக்குவிப்பது அழிவில் முடிந்து கொண்டிருக்கிறது. பஞ்சாப் நோயிலும் கடனிலும் தண்ணீர் பஞ்சத்திலும் சிக்கி அல்லாடுகின்றது. கொங்குநாடு அந்தத் திசையில் சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலத்தடி நீர் மேலே வந்தாலும் கீழே போனாலும் பேராபத்துக்களை விளைவிக்கும். வயுற்று வலி வரும் போது தெரியும்.

குளிர் காலத்தில் மழை பெய்வதும் வேனில் காலத்தில் பனி பெய்வதும் ஒன்றும் பூச்சாண்டி அல்ல. நிதர்சன உண்மை. மனித இனம் சீக்கிரம் அழிய உத்தரவாதம் அளிப்பவை பசுமைப்புரட்சியும் மரபணுமாற்ற புரட்டும்.

உணவு உற்பத்தியைப் பெருக்க வரவில்லை பசுமைப் புரட்சி. 2ஆம் உலக போர் முடிந்த பின்பு நைட்ரேட் பாஸ்பேட் சல்பேட் வெடி மருந்து கம்பெனிகள் மூடும் நிலைக்கு வந்தன. அவற்றுக்குத் தீனி போடவே பசுமைப் புரட்சி வந்தது. கூடவே வந்தன பல புதிய பூச்சிகள். அவற்றைக் கொல்ல வந்தன பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி சனியன்கள். இவற்றால் நல்ல பக்டீரியாக்களும் அழிந்துகொண்டிருக்கின்றன. மனித - விலங்குகளின் எச்சங்களை மக்க வைக்கும் பேக்டீரியாக்கள் அழிந்தால் நரகலில் நாறிச் சாவோம். தேனீ, மண்புழு, சிட்டுக்குருவி, தவளை, பாம்பு, எலிகள், பல பறவை - விலங்குகள் காணாமல் போய்விட்டன. மனிதன் இதற்கு விதிவிலக்கு அல்ல.

இந்தியாவில் இன்று ஆண்டுக்கு 250 மில்லியன் டன் உணவு தானியம் விளைகிறது. இதை 120 கோடி மக்களுக்கும் சரியாகப் பங்கிட்டால் தினசரி ஒரு நபருக்கு 570 கிராம் கிடைக்கிறது. உலக அளவில் இப்போதைய விளைச்சல் 12 பில்லியன் மக்களுக்கு போதுமானது. பின் ஏன் இந்த விளைச்சலைப் பெருக்குவோம் கூச்சல்! அமெரிக்கர்களுக்கு சாமரம் வீசவே.

இந்த விறகு சமாசாரம் பயங்கரமானது. கேள்விப்பட்டேன். ஈரோட்டில் தினமும் இவை வந்து குவிகின்றன. நமது கண்களை விற்று சித்திரம் வாங்கிக்கொண்டிருக்கிறோம்.

1991க்கு முன்னர் இயற்கை ஆர்வலர்களை முதலாளிகளின் கைக்கூலிகள் என்று பட்டம் சூட்டினர் ஆதிக்கவாதிகள். தாராளமயப்புரட்டு வந்தபின் இவர்களுக்கு பொதுவுடைமை கனவு வாதிகள் (Socialist Dreamers) என்று பட்டம்.

ஐரோப்பிய அமெரிக்க வாழ்க்கை முறை (சோவியத் கூட்டமைப்பு உட்பட) பலபேரைக் கொன்று சிலபேரை வாழ வைக்கும் ஒரு கொடுமை. அதே முறையை கீழ்நாடுகளும் கடைப்பிடித்தால் உலகம் தாங்காது. அந்த முறைக்கு காலனிகள் தேவை. ஏற்கனவே அவர்கள் ஆர்ஜிதம் செய்துவிட்டனர். நீங்கள் எங்கே போவீர்கள் காலனிகள் தேட? (You have to search places & races on the earth to exploit: M K Gandhi)

அதனால்தானோ என்னவோ கலாமிட்டியும் (கலாம் ஐயர்) கஸ்தூரிரங்கனும் நிலாவுக்கு கப்பல் விடுவோம் என்று வான வேடிக்கைகள் காட்டுகின்றனர்.

பழங்குடியினர் தேவைக்கு மேல் மரங்களை வெட்டுவதில்லை. அவர்களின் வீடுகள் மூங்கில் கோரைப்புர்க்களால் கட்டப்படுகின்றன. மூங்கிலும் புல்லும் அபரிமிதமாக ஒவ்வொரு ஆண்டும் வளர்கின்றன. வெட்டியே தீர வேண்டும். வயிற்றுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடுகின்றனர். ஆறுகளை ஓடைகளை அசிங்கப் படுத்துவதில்லை. அன்றைய தேவையையும் அடுத்துவரும் சந்ததிகளைப் பற்றியும் யோசிக்கும் உன்னத நாகரீகம் உடையவர்கள். ஆனால் அடுத்த பத்து தலைமுறைக்கு வேண்டிய சொத்தைத் தேடி அலையும் நாம் அவர்களை காட்டுமிராண்டிகள் என்கிறோம்.

இடதுசாரி வாடை அடிக்கிறது என்று கூறும் நண்பருக்கு எனது பதில்: கடைசி மரம் காணாமல் போனபின்பு கடைசி ஆறு வறண்ட பிறகு கடைசி மீன் செத்தபிறகுதான் நமக்கு உறைக்கும் பணத்தைச் சாப்பிட முடியாதென்பது.

P.S.Narayanan said...

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒரு பொழுதுபோக்கல்ல. இன்றி அமையாதது. உணவும் நீரும் காற்றும் இல்லையேல் வாழமுடியாது.

The rest can wait.

மகாத்மா காந்தி (the little known but one of the greatest environmentalists of the world):

1) ஒரு சிறிய தீவு வசதியாக வாழ்வதற்காக உலகம் முழுவதும் காலனியாக்கப்பட்டது. 30 கோடி (அப்போதைய மக்கட்தொகை) இந்திய மக்களும் அவ்வாறே வாழ விழைந்தால் வெட்டுக்கிளி படையெடுப்புக்குப் பின்னர் உள்ள நிலம்போல ஆகிவிடும் நமது நாடு.

2) நிறைய பணம் ஈட்டுவது, நிறைய சேமிப்பது, நிறைய செலவிடுவது ஆகியவற்றில் இல்லை உங்கள் திறமை. எனக்கு இதற்குமேல் தேவை இல்லை என்ற மனப்பான்மையே உண்மையான திறமை.

3)வாழ்க்கைத் தரத்தை (Standard of Living) உயர்த்துவதைக் காட்டிலும் மேலானது வாழ்க்கையின் தரத்தை (Standard of Life)உயர்த்துவது.

4) இயற்கையை ஒட்டி வாழ். இயற்கையின் மீது ஏறி வாழாதே (Live with the Nature; not on the Nature).

5) இதற்கு சரியான மொழி பெயர்ப்பு கிடைக்கவில்லை. எனவே ஆங்கிலத்திலேயே தருகிறேன்: Live simply so that others will simply live.

நான் செப் 6இல் இருந்து ஒருவாரம் மூர்க்க மையத்தில் உள்ளேன். இயற்கைச் சீரழிவு பற்றி ஒரு வெட்டி மன்றம் போடலாமா!







P.S.Narayanan said...

இயற்கை விவசாயமா செயற்கை விவசாயமா என்பதல்ல பிரச்னை. கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக குறிப்பாக கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் செய்துவரும் கொடுமைகளை சொல்லி மாளாது. நாமும் நமக்குப் பிறகுவரும் சந்ததிகளும் உயிரினங்களும் தாக்குப்பிடிக்குமா என்று சிந்தனை செய்யவேண்டிய விளிம்பில் நிற்கிறோம். Choice is yours.

P.S.Narayanan said...

அவர்கள் ஏன் வணங்கவேண்டும்! நாமிருக்கிரோமே அவர்களுக்கு தலையாரி வெட்டியான் சேவை செய்ய!

Lawrence Summers, the World Bank Chief Economist to his colleagues in a confidential memo in Dec 1991: ''Just between you and me, shouldn't the World Bank be encouraging more migration of the dirty industries to the LDCs (Less Developed Countries). The measurement of the costs of health impairing pollution depends on the foregone earnings from increased morbidity and mortality. From this point of view, a given amount of health-impairing pollution should be done in the country with the lowest cost, which will be the country of the lowest wages. I think the economic logic behind dumping a load of toxic waste in the lowest-waste country is impeccable and we should face up to that''.

திருப்பூர் - கரூர்- ஈரோட்டு சனியனகளுக்கேன்றே எழுதியாகத்தான் கருதுகிறேன். தாயை விற்று தங்கம் தேடும் கபோதிகள்.

ஜோதிஜி said...

உங்களைப் போன்றவர்கள் பதிவு எழுத ஆரம்பித்தால் பல பேர்களுக்கு வாந்தி பேதி வந்து நாண்டுகொண்டு செத்து விடுவார்கள். என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. நிறைய யோசிக்க வைத்த வரிகள். நேரம் ஒதுக்கி வந்தமைக்கு மிக்க நன்றிங்கோ.

ஜோதிஜி said...

5) இதற்கு சரியான மொழி பெயர்ப்பு கிடைக்கவில்லை. எனவே ஆங்கிலத்திலேயே தருகிறேன்: Live simply so that others will simply live.

சிறிய வரியை தெளிவாக மொழி பெயர்க்க வேண்டுமென்றால்

எளிமையாக வாழ். மற்றவர்களும் வாழ முடியும்.

ஜோதிஜி said...

நான் செப் 6இல் இருந்து ஒருவாரம் மூர்க்க மையத்தில் உள்ளேன். இயற்கைச் சீரழிவு பற்றி ஒரு வெட்டி மன்றம் போடலாமா!

வந்ததும் அழையுங்கள். ஞாயிறு என்றால் நிச்சயம் கலந்து கொள்கின்றேன்.

ஜோதிஜி said...

ஒரு வகையில் சுகாதார சீர்கேட்டை உருவாக்காமல் வருகின்ற அந்நியச் செலவாணி. உண்மைதான்.

ஜோதிஜி said...

தெகா

உம்மோட வரிகளை படித்த போது துளசிகோபால் விவரிக்கும் நியூசிலாந்து என்ற நாட்டின் முழுபரிணாமமும் மனதில் வந்து போகின்றது. ஏக்கம் வந்தால் தூக்கம் போய் துக்கம் வந்து விடும்.

இந்தியாவில் எதற்கு எடுத்தாலும் மக்கள் தொகையை உதாரணம் காட்டுகின்றார்கள். ஒரு தொழிற்சாலையில் இருந்து வெளியே வரும் கழிவு நீரை இந்த வகையில் சுத்தம் செய்து வெளியே அனுப்ப வேண்டும் என்று சட்டம் இருக்கின்றது. அதற்கு தனியாக ஒரு துறை இருக்கின்றது. அதற்கென்று நாடு முழுக்க அதிகாரவர்க்கமும் இருக்கின்றது. பறக்கும் படைகள், பறக்காத படைகள் என்று ஏராளமாக இருக்கின்றார்கள். ஆனால் என்ன பிரயோஜனம். பணம் என்ற காகிதத்திற்காக எல்லாமே காற்றில் பறக்கும் போது திறந்து விடுடா மாப்ளே என்று தான் படித்தவர்களும் செய்கின்றார்கள். திறந்து விட்டாலும் பணம் வந்து கேட்கின்றார்கள். முறைப்படி நடந்து கொண்டாலும் பணம் வந்து கேட்கின்றார்கள் என்ற போது முதலாளி எதை தேர்ந்தெடுப்பார்? அது தான் இந்தியா முழுக்க நடந்து கொண்டிருக்கின்றது.

நன்றி ராசா.

ஜோதிஜி said...

அதுவொரு தனியான களம். உங்கள் பார்வைக்கு இந்த இணைப்பு தருகின்றேன்.

http://www.youtube.com/watch?v=9wTVW-pKmT8

ஜோதிஜி said...

பலரை சென்றடைய வேண்டிய பதிவு..

வாங்க என்எஸ்கே.

சேர்கின்றதோ இல்லையோ இது போன்ற விசயங்களைத் தாண்டி வந்து கொண்டு இருக்கின்றேன் என்பதை உணர்ந்து கொள்ளவே இது போன்ற பதிவு. சங்கரநாரயணன் சொன்ன வார்த்தைகளை கவனித்தீர்கள் தானே

கடைசி மரம் காணாமல் போனபின்பு கடைசி ஆறு வறண்ட பிறகு கடைசி மீன் செத்தபிறகுதான் நமக்கு உறைக்கும் பணத்தைச் சாப்பிட முடியாதென்பது.

ஜோதிஜி said...

கருவேல மரத்தை எரிப்பதனால் உருவாகும் மாசு, அந்த சாம்பல் தரும் பாதிப்பு போன்றவற்றை தனியாக எழுத முடியும். விறகில் சில வகைகள் தான் இயல்பான சாம்பலாக மாறும். மற்றவை எல்லாமே சுகாதார சீர்கேட்டை உருவாக்குவதோடு சீக்கு சிரங்கு படை பத்து என்று எல்லாவற்றையும் இங்கே கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. நீங்கள் சொல்வதும் உண்மைதான். கருவேல மரங்களை அப்படியே தனியாக வைத்து எரிப்பதில்லை. மற்ற மரங்களோடு சேர்த்து வைத்து எறிக்கின்றார்கள்.

ஜோதிஜி said...

தமிழ் இளங்கோ

அந்த பதிவில் என் விமர்சனமும் இருக்கின்றதே...........

ஜோதிஜி said...

லாபம் பார்க்க மட்டுமல்ல. உடல் உழைப்புக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக இருப்பதும் ஒரு காரணம்.

ஜோதிஜி said...

பொருட்கள் ஏற்றிச்சொல்லும் கண்டெயினர்கள் திரும்பி வரும் போது அதில் தண்ணீர் கொண்டு வந்து இருப்பது தொடங்கி பல வருடங்கள் ஆகி விட்டது. உங்கள் மேற்கொண்டு விமர்சனத்தை எதிர்பார்க்கின்றேன்.

ஜோதிஜி said...

சாரி என்று ஒரு வார்த்தையில் எழுத மனமில்லை.

நம் நாட்டில் மட்டும் தான் எந்த கருத்தும் ஒரு கட்சி சார்பாக இயக்கம் சார்பாகவே பார்க்கும் பழக்கம் உள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கேரளாவில் ஒரு சட்டி மணல் அள்ளிக் கொண்டு நம் ஊர் பக்கம் வந்து விட முடியாது. கழிவுகளை ஆற்றில் கலந்து விட முடியாது. அவர்களின் குப்பைகள் எல்லைப்புறங்களில் இங்கே வந்து கொண்டு கொட்டுவதும் அதற்காக அந்தந்த பஞ்சாயத்து தலைகள் மாதம் தோறும் குறிப்பிட்ட வாக்கரிசு வாங்கிக் கொண்டு வாழ்வதும் இங்கே தான். இதை இடதுசாரியா வலதுசாரியா?

ஏறக்குறைய கர்நாடகாவில் கூட சட்டம் கடுமையாகத்தான் உள்ளது. அங்கும் பல கட்சிகள் கொள்கைகள். ஆனால் அவர்கள் அடிக்கும் கொள்ளை என்பது இயற்கையை அழிப்பதில் அல்ல.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

வலுவான சிந்தனை

ABUBAKKAR K M said...

வணக்கம் ,
பதிவும், அதன் மீதான விமர்சனங்களும் மிகவும் சிந்திக்கவைக்கும்
வகையில் உள்ளன.நன்றி & பாராட்டுக்கள்.
***********************************
கடைசி மரமும் வெட்டுண்டு ,
கடைசி நதியும் விஷமேறி ,
கடைசி மீனும் பிடிபட -
அப்போதுதான் உறைக்கும் - இனி
பணத்தை சாப்பிட முடியாது என்று !
<><><> இது ஒரு செவ்விந்தியப் பாடலின் கருத்து .

இதத் தவிர இப்போது என்னால் ஒன்றும் கூற இயலவில்லை -
மனம் அவ்வளவு அழுகிறது.
.... >>>> கோ.மீ.அபுபக்கர் ,
கல்லிடக்குறிச்சி - 627416



Unknown said...

ஜோதிஜி சார் ,நாராயணன் சார் ...நல்ல கருத்தை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் அதை இடதுசாரிகள் ,வலது சாரிகள் அல்லது வீட்டிலுள்ள 'சாரி'கள் சொன்னாலும்கூட !

P.S.Narayanan said...

Our environment is badly damaged due to three major reasons: 1) Chemical agriculture 2) Hazardous industrial wastes 3) Unchecked urbanisation. While Our population has increased by 4 times in the last 100 yrs, pollution has increased by 400 times. Population growth is not responsible for mass poverty or pollution. Rather poverty is responsible for population growth.

P.S.Narayanan said...

''அல்லது வீட்டிலுள்ள 'சாரி'கள் சொன்னாலும்கூட!''
ஆணாதிக்கம் கொப்பளிக்கிறது. சாரிகள் படித்தால் சட்டினி ஆகிவிடுவீர்கள்.

P.S.Narayanan said...

Marx was an environmentalist. Not the present commies. They object fiercely to MNCs' pollution; less fiercely to native corporates' pollution. Absolutely no problem with the horrendous pollution by state run industries or Tirupur-like genocides. They have no problem with Kudankulam radiation becoz it is proletariat-friendly. Jaitapur radiation is bad because it is capitalist-friendly. Shame on these guys.

ஜோதிஜி said...

ஆணாதிக்கம் கொப்பளிக்கிறது. சாரிகள் படித்தால் சட்டினி ஆகிவிடுவீர்கள்.

நீங்கள் வேற? தற்போதைக்கு பெயருக்குப் பின்னால் இந்த ஜீ என்ற வார்த்தை போட்டு இருந்தாலே பலருக்கும் கண்கள் உறுத்தத் தொடங்கி அவனா நீ? என்று கேட்கத் துவங்கி விடுகின்றார்கள். பகவான்ஜீ என்று பெயரை பார்த்தவுடன் எனக்கு நீங்க ஜோதிஜி என்று போடுகின்றீர்களே? மதவாத கட்சியை சேர்ந்தவரா என்று இங்கே சிலர் கேட்டது எனக்கு நினைவுக்கு வந்தது.

நன்றி பகவான்ஜி

ஜோதிஜி said...

வாங்க அபுபக்கர். நம் தலைமுறைகள் அழப் போகின்றது.

ஜோதிஜி said...

நன்றி கிருஷ்ணா

தி.தமிழ் இளங்கோ said...

ஜோதிஜி அவர்களின் பதிலைப் படித்தவுடன், மீண்டும் அய்யா திரு பழனி கந்தசாமி அவர்களது பதிவிற்குச் சென்று படித்தேன். இங்கே அங்கே நீங்கள் சொன்ன உங்களது கருத்துரையினை மீண்டும் தருவது சரி என்று நினைக்கிறேன்.

ஜோதிஜி திருப்பூர்புதன், 10 அக்டோபர், 2012 9:18:00 AM IST
இது போன்ற விசயங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. மாற்றம் என்றுமே மாறாதது. நிச்சயம் வட்டம் ஒரு நாள் முடிவுக்கு வந்தே தீரும். அப்போதுள்ள மக்கள் இதன் அருமையை உணர்வார்கள். இங்கு எல்லோருமே மாற்றம் என்பது அடுத்தவர் வாழ்வின் மூலம் காணப்து. நாம் கடைபிடிக்க வேண்டியது இல்லை என்பதை உறுதியாகவே நம்புகிறார்கள்.

பக்கத்து சந்தில் கடை வைத்திருப்பவர் செல்லும் போது புலம்புவார்கள். குறைவான விலையில் தரமான பொருட்களை கொடுக்கின்றேன். ஆனால் என் கடையில் ஆடம்பரம் எதுவும் செய்வதில்லை. குறிப்பாக கீரை வகைகள், வெளியே கிடைக்காத அத்தனை சத்தான காய்கறிகளை தோட்டத்தில் பேசி வாங்கி வந்து விற்றாலும் மக்கள் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சென்று அவன் போடும் தூசி தும்பட்டை போன்றதுக்கும் காசு கொடுத்த வாங்கவே விரும்புகிறார்கள் என்கிறார்.

என்ன சொல்வீர்கள்? இயற்கை செயற்கை என்று பாரபட்சம் இல்லை. அது நாகரிகமாக நவீனமாக ஃபேஷனாக சென்றவுடன் எடுத்து போட்டுக் கொண்டு வரும் அளவுக்கு இருக்க வேண்டும். மொத்தத்தில் எதுவும் அழகாக இருக்க வேண்டும். அது ஆரோக்கியத்தின் அடிப்படையா என்பது போன்ற விசயங்கள் அநாவசியம்.

இது தான் தற்போதைய மக்களின் வாழ்க்கை. வீட்டுக்கு வயதானவர்கள் தலையில் சுமந்து கொண்டு விற்கும் பல பொருட்கள் கடையை விட ஐந்து ரூபாய் அதிகமாகத்தான் இருக்குது. கோபம் இருந்தாலும் அவர்களின் வயது உழைப்புக்கு மரியாதை கொடுக்க இந்த இழப்பை தாங்கிக் கொள்வதுண்டு. புன்செய் புளியம்பட்டியில் இருந்து ஒரு அம்மா பருப்பு வகைகளை அத்தனையும் மாதம் ஒரு முறை ஒவ்வொரு வீடாக கொண்டு வந்து கொடுப்பார். பணம் கூட அடுத்த மாதம் வந்து வாங்கிக் கொள்வார். ஆனால் மக்கள் காரில் சென்று கடையில் போய் வாங்கி விட்டு வந்தால் தான் நான் ஷாப்பிங்க போயிட்டு வந்தேன் என்று கதையளக்கும் போது சொல்ல முடியும்.

வருத்தப்பட எதுவுமில்லை. எல்லாமே வேடிக்கை. இது தான் தற்போதைய உலக வாடிக்கை.

நாம் தனியாக சிந்திப்போம். மற்றபடி அனைத்தையும் ரசிப்போம்.
தூங்கிய அனுபவம் நல்ல நகைச்சுவை!

vishwa said...

நல்ல பதிவு, Agree with P.S.N.