Sunday, May 26, 2013

மரணம் - உத்தரவின்றி தான் உள்ளே வரும்


ஒவ்வொருவரும் ஏதோவொரு தருணத்தில் காதலிக்கப்பட்டவர்களாக, காதலை புறக்கணித்தவர்களாகவோ இருக்கக்கூடும். 

பதின்ம வயது முதல் பல்லு போன காலம் வரைக்கும் மறக்க மறைக்க முடியாத நிகழ்வாக இந்த காதல் இன்றும் நம்மிடம் இருக்கத்தான் செய்கின்றது.

இந்த காதல் என்ற உணர்வை கடந்து வராதவர்கள் மிக மிக குறைவாகத்தானே இருக்க முடியும்? 

அது ஒரு பக்க காதல், இருபக்க காதல், இழந்த காதல், தோற்ற காதல் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கக்கூடும். 

மொத்தத்தில் குறிப்பாக அவரவர் தங்கள் முதல் காதல் அனுபவத்தினை மறப்பதில்லை.  இறந்து போகும் வரைக்கும் மனதின் உள்ளே ஏதோவொரு மூலையில் அந்த நினைவு வெறும் ஏக்கமாகத்தான் இருக்கத் தான் செய்கின்றது. 

ஆனால் காதலைப் போல எவரேனும் மரணத்தினை கொண்டாடுபவர்கள் உண்டா? 

தாங்கள் முதன் முதலாக பார்த்த மரணத்தினை எவரும் மனதில் வைத்திருப்பாரா?  நான் மரணத்திற்காக காத்திருக்கின்றேன் என்று வாய்விட்டு சொல்பவர்கள் உண்டா?

நமக்கு இந்த மரணம் வராது என்பது போல வாழ்பவர்கள் இங்கே அநேகம்பேர்கள். அது உறுதியானது என்று தெரிந்து போதிலும் நம்மில் பலரும் மறந்து போக நினைக்கும் விசயமாகத்தான் வைத்துள்ளோம். 

இறந்து போனவர்களைப் பார்த்து அழும் எவரும் நாமும் ஒரு நாள் இதே போல மரணித்து விடுவோம் என்று கவலைப்படுவதில்லை.  இது போன்ற  பல வினோதங்களை சுமந்து தான் இந்த வாழ்க்கையை அணைவரும் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நான் பார்த்த மரண நிகழ்வுகள் பலவற்றையும் இன்னமும் ஒவ்வொரு சமயத்திலும் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு.

ஒவ்வொரு மரணத்திற்குப் பின்னாலும் ஓராயிரம் காரணங்கள் இருப்பதில்லை.  

இரண்டே காரணம் தான். 

ஒன்று உடல் நிலை மோசமாகி விட்டது அல்லது விபத்து.  

ஆனால் இதைத்தான் "அவருக்கு விதி முடிந்து விட்டது.போய்ச் சேர்ந்துட்டாரு" என்று எளிதாக பேசி முடித்து அடுத்த பேச்சுக்கு நாம் எளிதாக நகர்ந்து போய்விடுகின்றோம்.

இன்றும் என் நினைவில் உள்ளது. 

நான் பார்த்த அந்த முதல் மரணம் ஒரு மதிய வேளையில் நிகழ்ந்தது.  

ஆனால் அது மரணம் என்பது எனக்குத் தெரியாது.

அது என் தங்கையின் மரணம்.  

நாலைந்து நாட்களாக உடம்பு சரியில்லாமல் இருந்த தங்கையை அம்மா ஒரு ஞாயிற்றுக் கிழமை மதிய வேளையில் மருத்துவரிடம் தூக்கிக் கொண்டு சென்ற போது நானும் அடம்பிடித்து அம்மாவின் பின்னால் போய்க் கொண்டிருந்தேன். சுட்டெறிக்கும் வெயிலின் தாக்கத்திற்காக தோளின் மேல் சாய்வாக வைத்து ஒரு காசித்துண்டை வைத்து போர்த்திருந்தார்.  

அம்மாவின் தோளில் சாய்ந்திருந்த தங்கையின் முகம் மட்டும் பின்னால் வந்து கொண்டிருந்த எனக்குத் தெரிந்தது. தங்கையின் கண்கள் பின்னால் வந்து கொண்டிருந்த எனக்கு நன்றாகவே தெரிந்தது.  சட்டை போடாமல், காலால் தெருப்புழுதியை சரட்டிக் கொண்டே தங்கையின் முகத்தை பார்த்த போது என்னைப் பார்த்து சிரித்த தங்கையின் கண்கள் திடீரென்று மாறியது. 

அந்த நொடிப் பொழுது இன்றும் என் நினைவில் உள்ளது.  

அம்மா அருகே இருந்த மருத்துவமனையை நோக்கி போய்க் கொண்டிருந்தார்.  தங்கையிடம் பழிப்பு காட்டிக் கொண்டே நகர்ந்து கொண்டேயிருந்த போது தான் அவளின் முகம் மாறுவதைக் கண்டேன்.  கண்கள் மேலும் கீழும் வேகமாக நகர்ந்தது. சற்று நேரத்தில் தலை அம்மாவின் மேல் சாய்ந்தது.  

பத்து வயதில் அந்த வித்யாசங்களை உணரத்தெரியாமல் அம்மாவுடன் நானும் மருத்துவமனையில் சென்ற போது அம்மா தங்கையை அங்கேயிருந்த நீண்ட மேஜையில் படுக்க வைத்த போது தான் அம்மாவுக்கு அந்த வித்யாசம் புரிந்தது.  பதறிக்கொண்டே மருத்துவரை அழைத்த போது குழந்தை இறந்து விட்டதம்மா என்ற வார்த்தையை கேட்ட அம்மா ஓ...வென்று அழுத அழுகையைப் பார்த்த எனக்கு அந்த வித்யாசமான சூழ்நிலையின் தாக்கத்தை உணரத் தெரியவில்லை. 

வீட்டுக்கு வந்து அப்பாவுக்கு தகவல் சொல்லி அவரும் வந்த சேர்ந்த போது "ஆனது ஆச்சு... இனி என்ன செய்ய முடியும்" என்று சொல்லிவிட்டு இயல்பான வேலையில் அவர் நகர்ந்த போதிலும் அடுத்த நாள் கூடிய கூட்டமும், வீட்டிற்கு வந்தவர்கள் அழுத அழுகையும் எனக்கு வியப்பாகவே இருந்தது.  தொட்டிலில் தங்கையை படுக்க வைத்து வேங்காவயல் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றார்கள்.

ஊரில் இரண்டு பேருக்கு சண்டை வந்தால் உடனே "நீயெல்லாம் வேங்காவயலுக்கு செல்ற நேரம் வந்துடுச்சுடா........"  என்பார்கள்.  

காரணம் "சீக்கிரம் சாகப்போறே" என்று அர்த்தம்.  

ஊரில் உள்ள முக்கிய வீதிகளைத் தாண்டி கடைத் தெருவின் உள்ளே நுழைந்து, முஸ்லீம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வீதிகளைத் தாண்டிச் சென்றால் வேங்காவயல் என்ற அந்த சிறிய கிராமம் வரும்.  நான் ஊரில் இருந்த போது  அந்த பகுதியில் அதிகபட்சம் 50 குடும்பங்கள் அந்த பகுதியில் வாழ்ந்திருக்ககூடும். 

ஒரு குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் சுடுகாடாக மாற்றப்பட்டு இருந்தது.  என் தாத்தா காலத்தில் இருந்தே இந்துக்களை புதைக்கும் இடம் தான் 

இந்த வேங்காவயல் கிராமத்தில்தான் புதைத்து, எறித்துக் கொண்டிருந்தார்கள்.  கிறிஸ்துவர்கள் விரல் விட்டு எண்ணும் நிலையில் தான் இருந்தார்கள்.  முஸ்லீம்களுக்கென்று தனியாக ஒரு இடம் இருந்தது.

முதன் முதலாக தங்கையின் சடலத்தை சுமந்த தொட்டிலோடு நானும் சுடுகாட்டுக்குச் சென்ற போது தான் அங்கு செய்யப்பட்ட சட்ங்கு சமாச்சரங்கள் தெரியவந்தது.  அதற்குப் பிறகு இன்று வரைக்கும் ஆயிரக்கணக்கான மரணங்களைப் பார்த்து விட்டேன்.  ஏராளமான ஆச்சரியங்களைத் தந்ததே தவிர எதுவும் பெரிய அளவில் அதிர்ச்சியை தந்ததே இல்லை. 

மரணம் பற்றி விபரங்கள் தெரியாத போது வியப்பாக இருந்தது.  முழுமையாக விபரங்கள் புரிந்த போது ஆச்சரியமாக இருக்கிறது.

                                                  +++++++++++++++++++++=

ஊரில் உள்ள நடுவீதியில் யெ.மு சந்து என்பது ரொம்பவே பிரபல்யம்.  

காரணம் யெமு செட்டியார் குடும்பம் என்பது அண்ணாமலை பல்கலைக் கழகம் செட்டியார் குடும்பத்தில் வந்த பங்காளி குடும்பமாக இருந்தது. 

இது தவிர அவர்களின் வீடென்பது ஏறக்குறைய இரண்டு ஏக்கரில் இருக்கும். 

வீட்டின் உள்ளே ஒரு பக்கம் நுழைந்து மற்றொரு பக்கம் வர வேண்டுமென்றால் சந்தின் கடைசி பகுதிக்குத் தான் நம்மை கொண்டு போய் விடும்.  

பர்மா தேக்கும், சிங்கப்பூர் காசும், உலகத்தில் உள்ள அத்தனை கலைநயமும் ஒவ்வொரு இடத்திலும் மிளிரும்.   

ஆனால் அத்தனை பெரிய வீட்டின் பின்புறம் ஆச்சி ஒருவர் தான் இருப்பார்.  மற்ற அத்தனை பேர்களும் சென்னை மற்றும் வெளிநாடுகளில் இருந்தனர். அந்த வீட்டுக்கருகே இருந்த சந்து தான் எங்களுக்கு பல வகையிலும் உதவிக் கொண்டிருந்தது. 

அகலமான சந்தாக இருப்பதால் அத்தனை விளையாட்டுக்கும் உகந்தாக இருந்தது.  

ஆனால் இதை விட அந்த ஆச்சி நாங்க விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்.  திடீரென்று அழைத்து பல விதமான பழங்கள், பலகாரங்கள் கொடுத்து அசரடிப்பார்.  உட்கார்ந்த இடத்தை விட்டு அவரால் நகர முடியாது.  ஏறக்குறைய 120 கிலோ இருப்பார்.  ஏழெட்டு வேலையாட்கள் இவருக்கென்று இருந்தார்கள். அவர்களின் முக்கிய வேலையே இவரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்த மற்றும் அவருக்குத் தேவையான அடிப்படை உதவிகளைச் செய்வதற்கென்றே இருந்தார்கள்.

பெரும்பாலான செட்டியார்களின் வீட்டில் இருந்த வேலைக்காரர்கள் தான் அங்குள்ள அத்தனை வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

எப்போதும் போல அன்று விளையாடச் சென்ற போது அந்த வீட்டின் பின்புறம் அதிக அளவு கூட்டம் இருந்தது.  காரணம் புரியாமல் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது மலம் மூத்திரத்தோடு கலைந்த ஆடைகளோடு படுத்துக் கிடந்த ஆச்சியை அங்கிருந்தவர்கள் நகர்த்த முயற்சித்துக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.  

அவருக்கென்று குழந்தைகளும் இல்லை.  ஒருவரை தத்து எடுத்து வளர்த்து இருந்தனர். அவரும் வெளி நாட்டில் தான் இருந்தார்.  செட்டியாரும் வாழ்வின் முக்கால்வாசி நாட்கள் சென்னை மற்றும் வெளிநாடுகளில் தான் இருந்தார். 

அத்தனை பெரிய வீட்டில் இவர் மட்டும் தான் ரொம்ப காலம் தனியாகத்தான் இருந்தார்.  திரண்ட சொத்துக்கள், அழகான வீடு. ஆனால் எந்த அனுபவ சுகமும் அவருக்கு கிடைத்தது இல்லை.  

வீட்டின் பின்புறம் இருந்த காகிதப் பூ மரம் அருகே உள்ள திண்ணையில் தான் எப்போதும் உட்கார்ந்திருப்பார்.  அருகே ஏராளமான பழங்கள், பலகாரங்கள் என்று அணிவகுத்து தனித்தனியான சட்டியில் இருக்கும்.  சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு முதல் தலை முதல் கால் வரைக்கும் விதவிதமான நோய்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்.  

எங்களுக்கு எடுத்துக் கொடுக்கும் பலகாரத்தை அவருக்கு திரும்ப கொடுத்து நீங்களும் சாப்பிடுங்க ஆச்சி என்று சொன்னால் "எனக்கு ஒத்துக்காதுடா " என்பார்.  

அப்போது ஊரில் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் பிணம் தூக்கிச் செல்ல "சிவ சிவ சொர்க்கரதம்" என்ற பெயரில் ஒரு வண்டி உண்டு.  மற்ற அணைவருக்கும் பாடை வழியேத்தான் பிண ஊர்வலம் செல்லும். முன்பு தாரை தப்பட்டை என்று பிணத்திற்கு முன்னால் ஆட்டம் பாட்டம் என்று களை கட்டும். இன்று அதுவும் வழக்கொழிந்து விட்டது.

சிவ சிவ சொர்க்க ரதத்தை ஒருவர் இழுத்துக் கொண்டு சென்று விட முடியும்.  இறந்து போன ஆச்சியை முறைப்படி பாதுகாக்க இரண்டு நாட்கள் ரொம்பவே சிரமப்பட்டனர்.  

வந்த ஒவ்வொரு பெரிய மனிதர்களும் தூரமாக நின்று கொண்டு வேடிக்கைப் பார்க்க வேலையாட்கள் தான் கழுவி, குளிப்பாட்டி, புது சேலை அணிவித்தனர்.  அதுவும் உத்தேசமாகத் தான் சுற்ற முடிந்தது. 

காரணம் அந்த கனத்த உடம்பு பிணமாக மாறியதும் இன்னும் ஊதிப் பெருக்கத் தொடங்கியிருந்தது. 

பள்ளி விடுமுறை என்பதால் முழு நேரமும் அங்கே தான் இருந்தோம்.  பிணத்தை தூக்கும் போது அடுத்த பிரச்சனை உருவானது.  மூன்று பேர்கள் ஒன்றாக சேர்ந்து தூக்கிய போதும் ரொம்ப சிரமப்பட்டனர்.  ஏற்கனவே இருக்கும் அந்த வண்டியில் ஆச்சியின் அந்த கனத்த உருவத்தை ஏற்ற முடியாத காரணத்தால் தனிப்பட்ட முறையில் பலகை ஒன்றை உடனடியாக செய்து வண்டியில் சிரமப்பட்டு ஏற்றி தள்ளமுடியாமல் தள்ளிக் கொண்டு சென்றனர்.  

பிண  ஊர்வலம் மறையும் வரைக்கும் நானும் என் நண்பர்களும் கண்ணீருடன் பார்த்துக் கொண்டே நின்றோம்.  அவர் காட்டிய அன்பும், கொடுத்த இனிப்பு வகைகளும் என் வாயில் உமிழ்நீராக இருந்தது. எங்களை அறியாமல் வழிந்த கண்ணீர் கூட காரணம் இல்லாமல் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது.

                                                                         ++++++++++++++++

நான் திருப்பூருக்குள் வந்த இரண்டாவது வருடத்தில் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய போது உற்பத்தி துறையில் ஒரு பகுதிக்கு பொறுப்பாளராக எனக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. அதாவது யூனிட் இன்சார்ஜ் என்ற பெயரில் தினந்தோறும் 18 மணி நேரம் உறங்குவதற்கு நேரமில்லாது வதக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  உள்ளே ஒரு ஒப்பந்தக்காரர் இருந்தார். 

அவர் தான் உள்ளே உள்ள உற்பத்தி சார்ந்த அத்தனை நிகழ்வுகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் பொறுப்பாளராக இருந்தார். அவரை மீறி நாம் எதுவும் செய்து விட முடியாது.  செய்யவும் கூடாது.  முதலாளியின் சொந்தகாரர் என்ற நிலையில் இருந்த அவருக்கு நான் வெறுமனே "கணக்குபுள்ள".  

எழுத படிக்கத் தெரியாத அவரின் உயரம் ஏறக்குறைய ஆறரை அடி உயரத்துக்கு மேலிருக்கும்.  அப்போது நான் அவரை அண்ணாந்து தான் பார்த்து பேசுவேன்.  கொடூரமான புத்தியோடு கோணல்புத்திகாரனாகவும் இருந்த காரணத்தால் என்னை தினந்தோறும் விதவிதமான விதங்களில் சித்ரவதை செய்வது அவரது அன்றாட பொழுது போக்குகளில் ஒன்று.  

என்னை மட்டுமல்ல.  உள்ளே பணிபுரியும் எவரையும் நிம்மதியாக பணியாற்ற விடாமல் வார்த்தைகளால் வதைப்பதென்பது அவருக்கு கைவந்த கலை.  சிவத்த தோலுடன் இருக்கும் அவருக்கு உள்ளே பணிபுரியும் அத்தனை பெண்களும் ஏதோவொரு வகையில் "கடன்" பட்டவர்களாகவே இருந்தனர்.  

எவரும் கேள்வி எதுவும் கேட்ட முடியாது.  மடியாதவர்கள் அடுத்த நாள் உள்ளே வரவும் முடியாது. 

ஒவ்வொரு சனிக்கிழமையும் ஐந்து மணிக்கு மேல் எவருக்கும் வேலை மேல் நினைப்பு இருக்காது.  கை கால் உதறத் தொடங்கும். சாராயக்கடையில் போய் நின்றால் தான் அவர்களின் உதறல் நிற்கும். 

இவரும் அப்படித்தான்.  

இடையிடையே அவரின் மனைவியும் உள்ளே வந்து மேற்பார்வை பார்த்துக் கொண்டிருப்பார்.  மனைவி உள்ளே வந்ததும் மட்டையாக மடங்கி விடுவார்.  ஒவ்வொரு பெண்களையும் வசைபாடத் தொடங்கி விடுவார். அந்த வார மொத்த சம்பளத் தொகையை மனைவி தான் வாங்குவார். நிர்வாகத்திடம் இருந்து பெற்ற தொகையை கொடுக்க வேண்டிய தொழிலாளர்களுக்கு கொடுத்து விட்டு, முடிந்தவரை அமுக்க வேண்டியதை அமுக்கிவிட்டு மீதியை அவர் மனைவி பத்திரப்படுத்துவார்.  

அந்த கணக்கு வழக்கெல்லாம் நாம் தான் போட்டு காட்ட வேண்டும்.  படிக்க வாசிக்கத் தெரியாதவனிடம் பட்ட பாடுகள் என்பது எழுத்தில் வடிக்க முடியாது.  

பையில் நிறையும் பணத்தை மனைவி எடுத்துக் கொண்டு கிளம்பி விட தனியாக எடுத்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு அய்யா தனியாக சீட்டியடித்துக் கொண்டே கிளம்பி விடுவார்.  

இது வாரந்தோறும் நடப்பது என்றாலும் எனக்கு எப்படா அறைக்குச் செல்ல விடுவான் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு வேலையையும் முடித்து விட்டு நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டிய சமாச்சாரங்களை கொடுத்து விட்டு எப்போதும் போல அறைக்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த போது அறையில் அருகே படுத்திருந்தவன் வேகமாக என்னை எழுப்பினான்.  

அரைகுறை தூக்க கலக்கத்தோடு அவன் பேசியது பாதி தான் என் காதில் விழுந்தது.

"லோகு பஸ்ஸில் அடிப்பட்டு செத்து விட்டாராம்" என்றான். 

அவன் பேசியது காதில் விழுந்தாலும் மனம் உணர முடியாத நிலையில் அசதி அப்படியே மீண்டும் தூக்கத்திற்கு இழுத்துச் சென்றது.  மறுநாள் எழுந்த போது நிறுவனத்திற்குள் அங்கங்கே கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். ஒன்றும் தெரியாமல் மீண்டும் விசாரித்த போது தான் நேற்று நண்பன் பேசியது என் நினைவுக்கு வந்தது.

திருப்பூரில் தாராபுரம் சாலையின் கடைசிப் பகுதியில் அரசு பொது மருத்துவமனை உள்ளது.

எப்போதும் போல சனிக்கிழமையன்று முழுமையான மப்பில் ராயல் என்பீல்டு புல்லட்டில் வந்த லோகு எதிரே வந்த லாரியில் நேருக்கு நேர் மோத தூக்கி வீசப்பட்டு அந்த அரசு மருத்துவமனை அருகே அரைகுறை உயிரோடு கிடந்துள்ளார்.  

காவல் துறைக்கு பயந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள்  எந்த உதவியும் செய்யாத காரணத்தால் பத்து நிமிடத்திற்குள் லோகு பரலோகம் சென்று விட்டார்.

மறுநாள் நிறுவனத்தில் உள்ள மொத்த நபர்களும் ஒரு வேனில் மருத்துவமனைக்குச் சென்ற போது பிணவறையின் முன் பகுதியில் ஒரு நாற்காலியில் உடம்பை கிடத்தி போர்த்தியிருந்தார்கள். 

காவல் துறையின் அனுமதிக்காக மற்றும் செய்ய வேண்டிய கடமைகளுக்காக உள்ளே கொண்டு போகாமல் வெளியே வைத்திருந்தார்கள். சென்ற பாதிப் பேர்கள் பயந்து கொண்டு பின்வாங்க நான் ஆர்வமாய் முதலாளி பின்னால் சென்று அந்த ரத்தக்கறை படிந்த வெள்ளைத் துணியை நீக்கிய போது லோகுவின் முகத்தைப் பார்த்தேன்.  

முகத்திலிருந்து மார்பு வரை பிய்த்து எறியப்பட்டு சதைக்கோளம் போல உறுப்புகள் இடம் மாறி கோணல் கோலம் போடப்பட்டு இருந்தது. முதலாளியின் உறவினர் என்பதால் அவரின் மெல்லிய குரல் என் காதில் கேட்ட போதும் எவ்வித குற்றவுணர்ச்சியும் தோன்றாமல் அந்த சிதைந்த உருவத்தை பார்த்துக் கொண்டேயிருந்தேன். 

"பாவி குடிக்காதே குடிக்காதே என்று சொல்லியும் அல்ப ஆயுசில் போயிட்டானே" என்று மெல்லிய கேவலுடன் துண்டை வாயில் வைத்துக் கொண்டு வேறு பக்கம் நகர்ந்தார்.  

எனக்கு எந்தவித துக்கமோ, பரிதாப அழுகையோ வரவில்லை.  

அடுத்த நாள் எப்போதும் போல நிறுவனம் இயங்கத் தொடங்கியது. 

ஒரு வாரம் கழித்து அவர் மனைவி வந்தார்.  அந்த வாரம் சனிக்கிழமையன்று என்னிடம் மொத்த கணக்குகளை வாங்கிக் கொண்டு சென்றார்.  நிர்வாகம் கொடுக்க வேண்டிய மொத்த தொகையையும் கொடுத்து அனுப்பியது.

அடுத்த வாரம் என் அறையில் இருந்த நண்பன் சொன்னான்.

லோகுவின் மனைவி உன் யூனிட்ல் இருந்த அந்த சின்னவயசு சிங்கர் டைலரை கூட்டிக் கொண்டு சென்னை சென்று விட்டது என்றான்.   

மீதி அடுத்த பதிவில்....................

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மரணத்தை வரவழைத்து கொள்பவர்கள் தான் இன்றைக்கு அதிகம் என்று தோன்றுகிறது...

ஆடிய ஆட்டம் என்ன...? பேசிய வார்த்தை என்ன...?
தேடிய செல்வம் என்ன...? திரண்டதோர் சுற்றம் என்ன...?
கூடு விட்டு ஆவி போனால்... கூடவே வருவதென்ன?

ஆடும் வரை ஆட்டம்... ஆயிரத்தில் நாட்டம்...
கூடி வரும் கூட்டம்... கொள்ளி வரை வருமா...?

சென்றவனைக் கேட்டால்... "வந்துவிடு" என்பான்...
வந்தவனைக் கேட்டால்... "சென்று விடு" என்பான்...

வீடு வரை உறவு... வீதி வரை மனைவி...
காடு வரை பிள்ளை... கடைசி வரை யாரோ...?

Thekkikattan|தெகா said...

Elei, Mundasu the way you put your sister's death brought tears man... very touchy! of course, the death is very humbling kind. take care man.

தி.தமிழ் இளங்கோ said...

உங்களது இந்த பதிவினில் என்னை கவர்ந்த வரிகள் ... ...

// நமக்கு இந்த மரணம் வராது என்பது போல வாழ்பவர்கள் இங்கே அநேகம்பேர்கள். அது உறுதியானது என்று தெரிந்து போதிலும் நம்மில் பலரும் மறந்து போக நினைக்கும் விசயமாகத்தான் வைத்துள்ளோம். //

// பெரும்பாலான செட்டியார்களின் வீட்டில் இருந்த வேலைக்காரர்கள் தான் அங்குள்ள அத்தனை வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். //

எனது அனுபவம்:
உங்களுக்கு ஒரு கம்பெனியில், முதலாளியின் சொந்தக்காரன் தொந்தரவு கொடுத்ததைப் போன்று, நான் பணிபுரிந்த இடத்தில், ஒரு யூனியன் தலைவர் தொந்தரவு கொடுத்தார். அந்த ஆளை மீறி நிர்வாகம் எதுவும் செய்யாது. அதனால் எல்லோரும் பொறுமையாக இருந்தார்கள். அந்த ஆளை ஒருநாள் காலை, மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்கள். மதியத்திற்குள் மரணம் வந்து விட்டது. போதையில் அழுதவர்களைத் தவிர, அந்த ஆளுக்காக வருத்தப்பட்ட ஊழியர்கள் மிகவும் குறைவு.

எதை எதையோ தீவிரமாக யோசிக்கும் மனிதமனம், மரணம் பின் தொடர்வதை மட்டும் நினைப்பதே இல்லை!


Rathnavel Natarajan said...

வேதனையான பதிவு.