Wednesday, May 08, 2013

13, பரதேசியின் கதைக்களம்ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் கிழக்கிந்திய நிறுவனம் என்ற பெயரில் உள்ளே வந்த (கிபி 1600/1700) காலத்தில், கிழக்கிந்திய நிறுவனத்தில் கேயன் என்பவர் கவர்னராக இருந்தார்.  

இவர் தான் முதன் முதலாக இங்குள்ளவர்களின் வறுமையை பயன்படுத்தி தங்கள் ஆளுமையில் இருந்த நாடுகளுக்கு கூலியாக அழைத்துச் செல்லும் புனிதப் பணியை தொடக்கத்தில் தொடங்கி வைத்தவர்.  

கிபி 18,19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் தொடர்ச்சியாக 24 பஞ்சங்கள் தாக்கியது.  இதன் காரணமாக அடிப்படை மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.  

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் இந்தியாவை பல்வேறு மன்னர்கள் அங்கங்கே ஆண்டு கொண்டுருந்த போது அவர்கள் மக்களுக்கு போட்ட வரி என்பது விளையும் நிலத்தில் ஆறில் ஒரு பங்கு அல்லது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே.  

ஆனால் பின்னால் வந்த ஆங்கிலேயர்களுக்கு இந்த பஞ்சமென்பது ஒரு பொருட்டே அல்ல. ஆங்கிலேயர்கள் விளையாத நிலத்திற்கும் சேர்த்து வரியை போடத் தொடங்கினார்கள். அந்த வரிகளைக் கட்ட முடியாதவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள எங்கேயாவது பயணப்பட வேண்டிய சூழ்நிலை இயல்பாகவே உருவானது. 

அப்போது தான் புலம் பெயர்ந்த பயணங்கள் அதிகமாகத் தொடங்கியது. உலகமெங்கும் தேவைப்படும் வேலைக்கு கிளம்பத் தொடங்கினார்கள். குறிப்பாக அப்போது தென்னிந்தியாவில் தான் அதிக வெளியேற்றம் நடந்தது. 

ஜாதியால் ஒடுக்கப்பட்டு, அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளுடன் வாழ்ந்து கொண்டுருந்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று மொத்தமாக கூட்டம் கூட்டமாக  தென் ஆப்ரிக்கா, பீஜீத்தீவு, மொரிசியஸ், இலங்கை, மலேசியா,  சிங்கப்பூர், பர்மா, வியட்நாம், என்று தொடங்கி எங்கெங்கு வாய்ப்பு இருக்கிறதோ அங்கேயெல்லாம் பயணப்படத் தொடங்கினார்கள்.  

தென்னிந்தியாவின் கடற்கரை ஓட்டிய கிராமங்களுக்கு அன்றைய காலகட்டத்தில் அருகே தெரிந்த இலங்கைத் தீவு உண்மையிலேயே சொர்க்கத் தீவாகத் தான் தெரிந்திருக்க வேண்டும்.

கண்டி முடியாட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததும் ஆங்கிலேயர்கள் புத்தளத்தில் இருந்து கண்டி வரைக்கும் தோட்டங்களை உருவாக்கிக் கொண்டுருந்தார்கள். கண்டியை தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்த அடுத்த ஐந்து வருடங்களுக்குப் பிறகு (1820) காபி பயிர் செய்வதற்கான பூர்வாங்க வேலையை தொடங்க ஆரம்பித்தனர்.  

தொடக்கத்தில் அவர்களின் முயற்சி வெற்றி அளித்த போதிலும் முழுமையான பலன் கிடைக்கவில்லை. 

பார்னஸ் என்ற ஆங்கிலேயர் பேராதனைப் பூங்காவிற்கு அருகில் கன்னொருவில் என்ற இடத்தில் காபி பயிருக்கென்று ஒரு தோட்டத்தை அமைத்தார்.  

கம்பளை (1823) சிங்கபிட்டிய பகுதியில் இராணுவ சேவை செய்து கொண்டுருந்த கேப்டன் ஹென்ரி பர்ட் என்பவர் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 14 குடும்பத் தொழிலாளார்களைப் பயன்படுத்தி காப்பிச் செடி வளர்த்து 600 பவுண்ட சம்பாரித்தார். 

இதன் தாக்கத்தில் உருவானது தான் 1880 வரைக்கும் மலையகம் முழுவதும் காப்பி பயிர் மட்டும் என்ற நிலை உருவானது. 

கரடு முரடான பாறைகளும், மலையின் கற்களை நீக்கி சமதளமாக்கி தோட்டமாக மாற்றி மகத்தான சாதனைகளை உருவாக்கியவர்கள் அத்தனை பேர்களும் கல்வி அறிவு இல்லாத, தங்களின் உழைப்பு ஒன்றினால் மட்டுமே சாதித்துக் காட்டியவர்கள்.  இவர்களின் உழைப்பே, படிப்படியாக இலங்கை என்ற காலணியாதிக்க நாட்டின் பெருத்த வருமானத்திற்கும் காரணமாக அமைந்தது. 

அடிப்படை வசதிகள் கூட இல்லாத எட்டுக்கு பத்து என்ற லயன் வீடுகள் தான் கடைசி கால கட்டத்தில் அவர்கள் பெற்ற பெரும் வசதிகள். இந்த இடத்தில் இருந்து கொண்டு, தங்களையும் அழித்துக்கொண்டு ஆங்கிலேயர்களின் வணிக லாபத்திற்காக தங்கள் வாழ்க்கை தொலைத்தவர்கள் தான் இந்த மலையகத் தமிழர்கள்.  

மலையக தமிழர்களின் வரலாறு என்பது பூர்வாங்கமாக 1824 முதல் தொடங்குகிறது.  தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட 5,000 ஏக்கரில் 10,000 பேர்கள் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பணம் கொழிக்கும் தோட்டமானது வளர்ந்து 1881 வரைக்கும் உயர்ந்த 2,60,000 ஏக்கராக மாற்றம் பெற்றது.  

இந்த தோட்டம் முழுமையும் அப்போது இலங்கையின் உள்ளே இருந்த ஐரோப்பியர்களிடம், மேல் தட்டு வர்க்கத்தினரிடமும் இருந்தது.  

தொடக்கத்தில் ஆங்கிலேயர்களால் 6 ஷில்லிங் என்ற அளவிற்கு தோட்டம் உருவாக்க நினைப்பவர்களுக்கு இடங்கள் விற்க்கப்பட்டது,

நவீன கடல் பயணங்கள் உருவாகாத காலமிது, 

இலங்கைக்கு பயணிக்க வேண்டியவர்கள் இராமேஸ்வரத்திற்கு சென்று தனுஷ்கோடியில் இருந்து  சிறு படகு, வல்லத்தின் மூலமாக தலைமன்னார் துறைமுகத்திற்கு போய் சேர வேண்டும். இறங்கும் இடத்தில் இருந்து பல மைல்கள், பல நாட்கள் நடந்து போய் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடைய வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்றபடி, தோணி, சிறு படகு, கப்பல் என்று மாறி மாறி இவர்களை அழைத்து சென்று கொண்டுருந்தார்கள்.

பாதுகாப்பு இல்லாத காலகட்டத்தில் செல்லும் கப்பல்கள் விபத்துக்குள்ளாவதும், அந்தப் பயணம் பரிதாபமாய் பாதியில் முடிவது அன்றாட நிகழ்ச்சியாக இருந்தது. இந்த கூலி கப்பலை அழைத்துக்கொண்டு சென்ற ஆதிலெட்சுமி என்ற கப்பல் மூழ்கி அதில் பயணித்த அத்தனை பேர்களும் இறந்தனர்.  

இந்த காலகட்டத்தில் மேலை நாட்டில் டைட்டானிக் கப்பல் மூழ்கியதும் நடந்தது.  அந்தக் கப்பலுக்கு பின்னாளில் கிடைத்த புகழ் கூட தமிழர்கள் பயணித்த கப்பலுக்கும் கிடைக்கவில்லை.  

இலங்கையை பசுமை பூமியாக மாற்றியவர்களுக்கும் உண்மையான அங்கீகாரம் இறுதி வரைக்கும் கிடைக்காதது அழக் கூட தேம்பில்லாமல் வாழ்ந்தவர்களின் சோக வரலாறு.. 

இந்த மலையகத் தமிழர் என்ற கிளை நதி மூலம் தான் ஆங்கிலேயர்களின் வருமான நதி வெள்ளப் பெருக்கெடுத்து ஓடப் போகிறது.

தலைமன்னாரில் இறங்குபவர்கள் கால்நடையாகவே மலையகம் போய்ச் சேர வேண்டும்.  மலையகம் போய் கண்டி போய்ச் சேர்வதற்கு ஒரு மாதம் கால அவகாசம் கூட ஆகலாம். அப்போது துணை கலெக்ட்ர்  பொறுப்பை வகித்த பிரிப்ஸ் ஏ டம்பளர் தயாரித்த அறிக்கையின்படி 1867 ஆம் ஆண்டு புறப்பட்டவர்களின் எண்ணிக்கை 639 பேர்கள்.

மலையகம் போய்ச் சேர்ந்தவர்கள் 186. மற்றவர்கள் அத்தனை பேர்களும் செல்லும் வழியிலேயே இறந்தனர்.  

போய்ச் சேர்ந்தவர்கள் அங்கு உயிர் பிழைத்து வாழ்வதும் அடுத்த மகத்தான சாதனை. 1841 க்கும் 1846க்கும் இடையிலான ஆறு ஆண்டுகளில் சென்று அடைந்தவர்களில் மொத்தமாக 90 ஆயிரம் பேர்கள் இறந்து போனார்கள்.

உலக நாகரிகம் வளரத் தொடங்கிய மனித நாகரிகம் பின்னால் உருவாக்கிய அடிமை என்றொரு கேவல நாகரிமும் தொடரத் தொடங்கியது. மனிதர்களை அடிமையாக வைத்துக்கொள்ளும் அமெரிக்க நாகரிகமும், கருப்பின மக்களின் அவஸ்த்தைகளும் நாம் படித்த மொத்த சரித்திர பக்கங்களும் உணர்த்தியதாகத் தான் இருக்கிறது.

கருப்பின மக்களை விடுவிக்க அன்றொரு லிங்கன் உருவானார்.  ஆனால் இந்த மலையக மக்களின் வாழ்க்கையின் இறுதி வரைக்கும் உண்மையான அக்கறையுடன் எவருமே வரவில்லை.  

உலகில் கூலி என்ற சொல் அறிமுகமானதே பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட (1833) அடிமை ஒழிப்பு சட்டத்திற்குப் பிறகு தான்.  அதன் பிறகு தான் அடிமை என்ற வார்த்தை மாறி கூலி என்ற சொல் உருவானது.  

வெள்ளை மக்களுக்கு அன்றைய காலகட்டத்தில் இந்தியர்கள் என்பவர்கள் அத்தனை பேர்களுமே கூலிகள் தான்.  

மகாத்மா காந்தி பாரிஸ்டர் பட்டம் வாங்கிய போதும் அவர்கள் அழைத்த பெயர் பாரிஸ்டர் கூலி.  

கப்பலோட்டிய வஉசியின் கப்பலுக்கு கூலி கப்பல் என்று தான் அழைத்தார்கள்.

இலங்கையில் தேயிலைத் தோட்ட உருவாக்கத்திற்காக ஆங்கிலேயர்கள் முன்னேற்பாடுகளை செய்து கொண்டுருந்ததைப் போலவே பக்கத்து மலேசியா தீபகற்பத்தையும் ரப்பர் காடாக மாற்ற முயற்சித்துக் கொண்டுருந்தனர்.  

அப்போது ரப்பர் உற்பத்தில் பிரேசில் உலகின் முதன்மையான நாடாக இருந்தது. 

1877 ஆம் ஆண்டு சர் ஹென்ரி விக்ரஹாம் என்ற ஆங்கிலேயர் பிரேசிலிலிருந்து 20 ரப்பர் மரக் கன்றுகளைத் திருட்டுத்தனமாக கொண்டு வந்து மலேசியா பூமியில் நட்டார்.  20 ரப்பர் மரக்கன்றுகள் என்பது சென்ற தமிழர்களின் உழைப்பால் பிற்காலத்தில் மலேசியா முழுக்க ரப்பர் காடாக மாறியது. 

போர்த்துகீசியர்களின் ஆளுமையில் இலங்கை இருந்த போது எப்படி இந்தியாவில் இருந்து வந்த போர்த்துகீசிய படைகள் வந்து உதவியதோ அதே போல் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்த பக்கத்து நாடுகளும் இந்த கூலி பண்டமாற்ற முறையும் தொடங்கி வைக்க நான்கு புறமும் தண்ணீர் என்பது போல ஆங்கிலேயர்களுக்கு நான்கு திசைகளுமே சாதகமாக இருந்தது.. 

ஏன் இலங்கையின் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்தவர்களை தோட்ட வேலைக்கு கொண்டு செல்லவில்லை?

முதலும் முக்கியமான காரணம் அழைத்துச் செல்லப்பட்ட கூலிக்கான சம்பளம் என்பது சில தேங்காய்கள், மரக்கால் அரிசி, தங்கவதற்கு துணியால்,தென்னங்கீற்றால் வேயப்பட்ட கூடாரம்.  

அதுவும் சரிந்த ஏதோ ஒரு மலைக்குன்றுகளின் ஓரத்தில் அமைந்து இருக்கும். தொற்று நோய், விஷக்காய்ச்சல், மர்மநோய்கள்,பூச்சிக்கடிகள் என்று தொடங்கி அத்தனை அவஸ்த்தைகளையும் அவர்களின் அன்றாட வாழ்க்கை எதிர்கொண்டது. 

பிழைத்து உழைத்தவர்கள் பாக்யவான்கள். அப்போது இறந்தவர்கள் புண்ணியவான்கள்.  

இந்த மலையகத்திற்கு நடந்து வரும் போது இறந்தவர்களின் பிணத்தை கூட எடுக்க ஆள் இருக்காது.  

அப்படியே மக்கிப்போய், நடந்து செல்லும் பாதையிலேயே எலும்புக்கூடுகளும், அதுவே மெதுவாக சுண்ணாம்பு போல் மாறி அந்த தடம் மாறியிருப்பதும் கடந்து செல்வபவர்கள் இயல்பாக காணும் காட்சியாக இருந்தது. 

ஆனால் இவர்களை இங்கு கொண்டு வந்து சேர்க்கவும், அதற்குப் பின்னால் இருந்த ஆங்கிலேயர்களின் வலைபின்னல் நிர்வாக அமைப்பும், அதற்கென்று பாடுபட்ட நல்லவர்களுக்கு ஆங்கிலேயர்கள் வைத்திருந்த பெயர் கங்காணிகள்.  

கண் காணிப்பவர்கள் என்பது தான் கங்காணிகள் என்று மாறியது.  

தமிழ்நாட்டில் இருந்து சென்று கங்காணி வேலை பார்த்தவரின் மகன் தான் பின்னாளில் தோட்டத் தோழிலாளர்களின் தலைவராக இருந்த தொண்டைமான்.  

இன்று வரையிலும் ஆங்கிலேயர்கள் என்பவர்கள் இந்தியாவில் வந்து இருக்காவிட்டால் நாம் இந்த அளவிற்கு நாகரிகம் பெற்றவர்களாக மாறியிருக்க மாட்டோம் என்ற ஒரு கருத்தைப் போல,அந்த ஆங்கிலேயர்களின் புத்திசாலிதனத்தையும் தங்களுடைய சுரண்டல் மனப்பான்மைக்காக எந்த அளவிற்கு செல்வார்கள் என்பதை உள்ளே நுழைந்து பார்ப்போம்.

அப்போது தமிழ்நாட்டில் உருவாகியிருந்த பஞ்சம், ஆங்கிலேயர்கள் வசூலிக்கும் ரயத்துவாரி வரி கொடுமைகள் என்று வாழ முடியாமல் வாழ்ந்து கொண்டுருந்தவர்களை ஆள்பிடி கூட்டம் அலைந்து திரிந்து இவர்களை பொட்டலம் போல் மாற்றி ஏற்றிக்கொண்டுருந்தது. 

" உங்கள் நல்வாழ்வு இலங்கையில் இருக்கிறது. உணவு உடை, தங்குமிடம், போக்குவரத்துச் செலவு இலவசத்துடன் நல்ல சம்பளம் "  என்று கூவிக்கூவி இந்த கூட்டத்தை கடல் கடக்க வைத்துக்கொண்டுருந்தனர். இதற்கென்று ஏற்கனவே இலங்கை தோட்டங்களில் பணிபுரிந்து ஓரளவிற்கு அனுபவம் உள்ளவர்களை கங்காணிகள் என்று பெயரிட்டு தமிழ் நாடு முழுக்க அனுப்பி வைத்துருந்தனர். 

இவர்கள் தான் அன்றைய ஆள்பிடிகள்.

இதற்கென்று தமிழ்நாடு முழுவதும், செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு,சேலம், கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி,புதுக்கோட்டை, தஞ்சாபூர்,திருநெல்வேலி, இராமநாதபுரம் என்று அத்தனை பகுதிகளிலும் அலுவலகம் திறக்கப்பட்டது. 

இதற்குப் பெயர் எஸ்டேட் மேனேஜ்மென்ட் ஆபிஸ் என்றழைக்கப்பட்டது.  

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அந்தந்த பகுதிகளில் இருக்கும் கிராம முன்சீப், நிர்வாக வருவாய்த்துறை ஆய்வாளர்கள் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  செல்பவர்களின் குடும்ப முழுவிபரங்கள் சேகரிக்கப்பட்டு அந்தந்த பகுதி காவல்துறை ஒத்துழைப்புடன் பெரும்பாலும் ரயில் மூலமாக மண்டபம் முகாமிற்கு கொண்டு வந்து சேர்க்கப்படுவார்கள்.  

மண்டபம் வந்து சேர்பவர்களை தனுஷ்கோடி மார்க்கமாக தலைமன்னாருக்கும், திருநெல்வேலியில் உள்ள வாஞ்சி மணியாச்சியில் உள்ள இடைத்தங்கல் முகாமான தட்டப்பாறையில் இருந்து தூத்துக்குடி வழியாக கொழும்புக்கு, புத்தளம் பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு முன் உருவாக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாமில் இருக்கும் ஆங்கில அதிகாரிகள் வந்தவர்களை பரிசோதித்து, தடுப்பு ஊசிகள் போடப்பட்டு கவனமாக அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு மிஞ்சுபவர்களை மட்டும் அனுப்பி வைத்துக்கொண்டுருந்தனர். 

சொந்த ஊரில் இருந்து ஒவ்வொரு இடமாக மாறி கடைசியாக முகாமிற்கு வருவது வரைக்கும் ஒவ்வொருவரும் ஒரு அடையாள எண் வழங்கப்பட்டு இறுதிவரைக்கும் அந்த மனிதர்கள் உயிரற்ற ஜடமாகத்தான் கருதப்பட்டு நகர்த்திக்கொண்டு வந்தனர். 

இலங்கையின் சீதோஷ்ண நிலையின் காரணமாக செல்வதற்கு முன் ஒவ்வொருவருக்கும் ஒரு கம்பிளி, வேஷ்டி, சட்டை, சேலை வழங்கப்படும்.
  
இலங்கையில் எந்த பகுதியில் போய் இறங்குகிறார்களோ, அங்கிருந்து குறிப்பிட்ட தோட்டத்திற்கு நடந்து தான் செல்ல வேண்டும். 

இடையே திருடர்கள், விலங்குகள், வித்யாசமான பருவநிலை, உணவு, நீர் இல்லாமல் வறண்ட நாக்கும், மெலிந்த தேகமுமாய் போய் சேர்பவர்கள் மிகக் குறைவு. உழைக்கத் தொடங்கியவர்கள் இடையில் திரும்பி வர முடியாது.  அதற்கென்று சிறப்பு கட்டுப்பாடுகள்.  அப்படியும் தப்பித்து வர நினைப்பவர்கள் இதற்கென்று வளர்க்கப்படும் நாய்களின் கடிகளில் இருந்து அத்தனை எளிதாக தப்பி வெளியே வந்து விட முடியாது.  

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் ஊரில் இருந்து கிளம்பியது முதல் தோட்டத்திற்கு வந்து சேர்ந்து வரைக்கும், உணவு, பெற்ற உடை, அழைத்து வந்த கங்காணிகளின் கூலி அத்தனையும் இவர்களின் உழைப்பினால் கிடைத்த சம்பளத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட கொடுமையும் நடந்தது.
காபி பயிறுக்கு பிறகு உருவான தேயிலை தோட்டங்களும், இதன் தொடர்பாக அமைக்கப்பட வேண்டிய சாலை மற்றும் புற வசதிகளை ஈடுகட்டும் பொருட்டு இந்தியாவில் இருந்து மேன்மேலும் ஆட்கள் தருவிக்கப்பட்டனர். 

ஆள் கிடைக்காத பட்சத்தில் அங்கங்கே ஆங்கிலேயர்களால் செயற்கையாக பஞ்சத்தை உருவாக்கப்பட்டது.   ஆந்திராவில் (1833/34) குண்டூர் பகுதியில் உருவாக்கப்பட்ட பஞ்சாத்தால் 30 முதல் 50 சதவிகித அடிப்படை மக்கள் இறந்து போனார்கள். 1876 முதல் 78 வரைக்கும் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பகுதியில் 40 லட்ச மக்கள் இந்த பஞ்சத்தால் செத்து மடிந்தனர். 

மலையகத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமானது.

1869 ஆம் ஆண்டு உருவான புதிய நோயினால் (கெமிலியா வெஸ்ரிதா டிறிக்ஸ்) பெருமளவு காபி பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டதால் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பஞ்சடைந்த கண்களுடன் திரும்பி வந்தனர். 

இதன் காரணமாக மாற்று பயிராக தேயிலை உருவாக்கப்பட்டு அதன் மீது கவனம் திரும்பியது.  1867 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ரெய்லர் தெல்தொட்டைக்கு அருகில் லூல் சுந்தர தோட்டத்தில் முதலாவது வர்த்தக ரீதியான தேயிலைத் தோட்டத்தை அமைத்தார். இவர் தான் இன்றைய இலங்கை தேயிலை தோட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

1877 ஆம் ஆண்டுக்குள் 1.46.000 பேர்கள் கொண்டு வந்து குடியமர்த்தப்பட்டனர். 

கேரளாவில் இருந்து சென்ற மலையாளிகள் தோட்டப்பகுதியின் உள்ளே தேநீர் கடை உரிமையாளர்களாகவும், மற்ற மலையாளிகள் சிறு ஆலைகளிலும் பணிபுரிந்தனர்.   மீதம் உள்ள ஆலைகளில் பணிபுரிந்த வர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அங்குள்ள ஏழ்மையான சிங்களர்கள்.  

தோட்டத் தொழிளாலர் களில் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை  மட்டும் 1951 ஆம் கணக்குப்படி 6,25,000 பேர்கள்.

தோட்டத்தில் பணி புரிந்தவர்கள் ஒரு தோட்டத்தில் இருந்து மற்றொரு தோட்டத்திற்கு செல்ல முடியாது.  அவர்கள் வேலை முடிந்ததும் அவர்களின் குடியிருப்புக்குள் தான் முடங்கிக்கொள்ள வேண்டும்.  

பக்கத்து தோட்டத்திற்குள் செல்ல வேண்டுமென்றால் கூட அனுமதி சீட்டு வாங்கித் தான் செல்ல வேண்டும்.  பெரும்பாலும் அனுமதி அளிக்கப்படாது. தீவுக்குள் தீவாக முடக்கப்பட்டனர்.  உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த மற்ற மக்களுக்கும் இவர்களுக்கும் தொடக்கம் முதலே எந்த தொடர்பும் இல்லாத அளவிற்கு மிகத் தெளிவாக முதலாளி துரைமார்களால் உருவாக்கப்பட்டது.  இவர்கள் சிந்திக்கத் தொடங்கினால், சூழ்நிலையும் மாறிவிடும் அல்லவா?  

இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரைக்கும் உருவான மந்தமான பொருளாதாரம், விலை போகாத தேயிலை என்று தோன்றிய அத்தனை பிரச்சனைகளும் இறுதியில் அரை வயிறு கஞ்சி குடித்துக் கொண்டுருந்த இவர்களின் வாழ்க்கையைத் தான் வந்து தாக்கியது.

அந்த சமயத்தில் இவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். ஒவ்வொரு சமயத்திலும் இந்த உள்ளே வெளியே ஆட்டம் நடந்து கொண்டே இருந்தது.  கூலிகளை ஏற்றுமதி இறக்குமதி போல் கையாண்டு கொண்டுருந்தார்கள்.

இவர்களைத் தான் பின்னாளில் இந்தியத் தமிழர்கள் என்றும், மேலும் பல்வேறு அடைமொழிப் பெயர்களுடன் அழைத்தனர் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த பூர்வகுடி தமிழர்கள், 


தொடக்க அத்தியாயங்கள்
3 comments:

VOICE OF INDIAN said...

அருமையான விளக்கத்துடன் கூடிய கட்டுரை அனைவரும் அறியச் செய்திடல் நன்று இருப்பினும் இதை திரைப்படமாக காட்ட முடிந்தால் வளரும் இளைய சமுதாயம் பயன் பெரும் வாழ்த்துக்கள் நண்பரே

தகவலுக்காக இதை உங்கள் பின்னூட்டத்தில் இடுகின்றேன்

மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார்; மின்சார ஒழுங்கு முறை ஆணைத்தில் கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்
அலுவலர்களின் திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாகவும் நடைபெறும் ஊழல் காரணமாகவும் 2006 ஆம் ஆண்டு முதல் நஷ்டத்தில் மின்வாரியம். மக்களுக்கு மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வு எல்லை மீறிய மின்வாரிய ஊழல் எதற்கும் துணிந்த அதிகாரிகள், கண்காணிக்கத் தவறும் ஆணையம் கண்டிக்கத் தவறும் அரசு மின் கட்டண உயர்வால் மக்கள் அவதி இந்நிலை என்று மாறும்? இதயம் பலவீனமுடையோர் இரத்தக் கொதிப்பு உள்ளவர்களும் படிக்க வேண்டாம் அதனால் உங்களுக்கு பாதிப்பு வரலாம் உண்மை அப்படி.
மேலும் படிக்க » http://vitrustu.blogspot.in/

ஜோதிஜி said...

வருகின்றேன்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. உங்கள் கடுமையான உழைப்பு. நன்றி.