Friday, February 22, 2013

வட்டத்திற்குள் சிக்காத மனிதர்கள் 2டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் ஞானாலயா ஆய்வு நூலகம் திரு. கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய உரையின் இரண்டாவது பகுதி.

வட்டத்திற்குள் சிக்காத மனிதர்கள் முதல் பகுதி.


திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்றால் திருக்கோர்ணம் பகுதியில் சாலையின் ஓரத்தில் உள்ள அந்த 200 வருடத்திற்கும் மேம்பட்ட பழமையான கோவிலை பார்த்தபடியே தான் பேரூந்தில் செல்ல வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் இதன் வழியே எத்தனையோ முறைகள் ஊருக்கு இதன் வழியேத்தான் சென்று இருப்பேன். ஆனால் இந்த பழமையான ஆலயத்திற்குப் பின்னால் தான் ஞானாலயா என்றொரு மற்றொரு ஆலயம் இருக்கின்றது என்பதை நான் கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லை.

ஊரிலிருந்து புதுக்கோட்டை என்பது 60 கிலோ மீட்டர் பயணத்தில் உள்ள நகரம்.  உறவினர்கள், சகோதரி வாழும் ஊர் என்று பல வகைகளில் என் வாழ்க்கையோடு ஒன்றினைந்த நகரம். ஆனாலும் நமக்குத் தேவையான விசயங்கள் மட்டுமே அந்தந்த சமயங்களில் அறிமுகமாகின்றது.

நம்மிடம் தேடல் இருந்தால் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொன்றாக அறிமுகம் ஆகியே தீரும் என்பது உண்மை என்பதை ஏற்றுக் கொள்வீர்களா? 

இப்படித்தான் என் வாழ்வில் இன்று வரையிலும் ஒவ்வொன்றாக அறிமுகம் ஆகிக் கொண்டேயிருக்கின்றது.

அருகில் உள்ள கேரளாவை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் நூலகத்திற்கும், புத்தகங்களுக்கும் நம் தமிழர்களிடம் எப்போதுமே ஆதரவு குறைவு தான்.. காரணம் ஒரு புத்தகத்தை படிக்கும் போது படிப்பவர்களை நிச்சயம் சிந்திக்கத் தூண்டும். குறைந்த பட்சம் தான் வாழும் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வைக்கும். ஆனால் நம்மவர்கள் எப்போதும் ஒருவிதமான போதையைத்தான் விரும்புகின்றார்கள். 

அவரவர் சொந்த வாழ்க்கையில் எட்ட முடியாத உயரங்களை தங்கள் கனவின் வழியே, கனவுகளை தந்துகொண்டிருக்கும் ஊடகங்கள் வழியே தான் அதை அடைய விரும்புகின்றார்கள். தானும் அடையாமல், தான் சார்ந்த தலைமுறைகளுக்கும் அடையும் வழிகளை கற்றுத் தராமல் போயும் சேர்ந்து விடுகின்றார்கள். அதிகபட்சம் பொறாமையை மனம் முழுக்க வளர்த்து அதுவே குறிப்பிட்ட காலத்திற்குள் கழிவிரக்கமாக மாற்றி தன்னைச் சுற்றிலும் பரவ விடுகின்றானர். 

உழைக்காமல் எல்லாவற்றையும் பெறுவது எப்படி? என்பதில் கவனமாக இருந்து அதன் வழியே தான் ஒவ்வொருவரும் பயணிக்க விரும்புகின்றார்கள். திரைப்படங்கள் வழியே தங்களை ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கும் நமது சமூக மக்களின் அறிவை எண்ணி வியப்பீர்களா? நொந்து கொள்வீர்களா?.

மனம் தன் வயம் இழந்து விட்டால் மனித ரூபத்தில் மிருகமாகத்தான் வாழ முடியும். அது தான் தற்போது நடந்து கொண்டு இருக்கின்றது. தாங்கள் பார்க்கும் அத்தனை பேர்களும் பொறாமைப்படக்கூடியவர்களாக இருப்பதால் கெடுப்பது எப்படி? என்பதில் தான் கவனம் செல்கின்றது. அது குறித்தே யோசிக்க வைக்கின்றது. 

மொத்தத்தில சமூகம் முழுக்க குறைகள் நிறைந்த மனிதர்களாக மாறி விடுகின்றார்கள். மற்றும் குற்றம் என்பது தெரிந்தும் அதையே தான் விரும்புகின்றார்கள்.  குற்றத்தின் வழியே செல்லும் நபர்களையும் ஆதரிக்கவும் செய்கின்றார்கள். தங்களது தலைமுறைக்கும் அதுவே சரியென்று பாடம் நடத்துகின்றார்கள். 

தற்போது தொலைக்காட்சி மக்களை முழுங்கிய நிலையில் இது போன்ற நூலகங்களை எவருக்குத் தெரிந்துருக்கக்கூடும் என்பதை கணக்கில் கொண்டே திருக்கோர்ணம் பகுதியில் முதன் முதலாக நான் பார்த்த பெட்டிக்கடைக்காரரிடம் சந்தேகத்தோடு ஞானாலயா நூலகம் எங்கே இருக்கின்றது? என்று கேட்டேன்.

அவர் வியாபாரத்தின் இடையே தெளிவாக வழிகாட்டினார். மனதிற்குள் ஆச்சரியம் சிறகடித்தது.

அந்த குடியிருப்பு பகுதிகள் அழகான வரிசையான சந்துக்களின் மூலம் கட்டமைப்பு போல உருவாக்கப்பட்டு இருந்தது. இதில் ஒரு பகுதியில் இந்த ஞானாலயா நூலகம் இருந்தது. அந்த பகுதியே அமைதியான இடமாக தெரிந்தது. ஞானாலயா இருந்த கட்டிடத்திற்கு வெளியே தெரிந்த மரங்களுக்கு இடையே கட்டிடத்தின் மேலே பொறிக்கப்பட்டு இருந்த ஞானாலயா என்ற பெயரும் என் பார்வையில் பட்டது. 

அந்த கட்டிடத்தில் இரண்டு நுழைவு வாயில் இருந்தது. முதல் நுழைவு வாயிலின் வழியே நான் நுழைந்த போது திரு. கிருஷ்ணமூரத்தி அவர்கள் என்னை வரவேற்றார்.

இவர் யார்? பின்புலம் என்ன? என்று தெரியாமல் ஆர்வக்கோளாறு காரணமாக பலவிதமான கேள்விகளை மனதில் சுமந்து கொண்டே உள்ளே நுழைந்தேன். 

திருப்பூர் என்ற தொழில் நகரம் எனக்கு கற்றுத் தந்த முதன்மையான பழக்கம் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள். ஒவ்வொன்று குறித்து அச்சம் கலந்த வாழ்க்கையைத்தான் அறிமுகம் செய்து வைத்துள்ளது. அத்தனைக்கும் பின்னாலும் சுயநலமும் பணமும் கலந்து இருக்கின்றது.

ஞானாலயா நூலகம் என்ற வார்த்தையை முதன் முதலாக பல இணைய தளங்கள் அறிமுகப்படுத்தியிருந்த போதிலும், இணைய தளங்கள் வழியே உணர்ந்த மதுரையில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கண்டுணர்ந்து திருப்பூரில் சிவாவுக்கு இது குறித்த அறிமுகத்தை தொடங்கி வைத்தார். சிவா ஒரு வலைதளத்தை உருவாக்கி நண்பர்கள் பலருக்கும் அறிமுகம் செய்யும் நோக்கில் மின் அஞ்சல் வாயிலாக எனக்கும் அனுப்பி வைத்தார்.  அப்போது தான் இந்த ஞானாலயா நூலகம் குறித்த அறிமுகம் எனக்கு கிடைத்தது.

நூலகம் என்றொரு வார்த்தைக்காகவே அது குறித்து அப்போது 4 தமிழ்மீடியா தளத்தில் ஒரு கட்டுரையாக எழுதி அனுப்ப திரு. மலைநாடன் அவர்களும் வெளியிட்டு வைத்தார்.  நானும் என் தளத்தில் அந்த கட்டுரையை மறுபதிப்பாக வெளியிட இப்படித்தான் ஞானாலயா நூலகத்தின் தொடக்கப்புள்ளி என்னுள் தொடங்கியது.    

முதன் முதலாக செப்டம்பர் 26 (2012) ஞானாலயா நூலகத்திற்கு சென்றேன். தொழிலுக்கு குடும்பத்திற்கு அப்பாற்பட்டு. முதன் முதலாக ஒரு தனிப்பட்ட விருப்பத்திற்காக ஒரு பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறை. எந்த எதிர்பார்ப்புமின்றி ஒரு ஆர்வத்தின் தூண்டுகோல் காரணமாக ஞானாலயா நூலகத்திற்கு சென்றேன். 

திருப்பூருக்குள் நுழைந்த போது முதல் வருடம் நிறைய புத்தகங்கள் படிக்க வாய்ப்பு கிடைத்தது.  ஆனால் அதற்குப் பிறகு ஏறக்குறைய 15 வருடங்கள் எந்த புத்தகங்களையும் படிக்க வாய்ப்பும் அமையவில்லை. நானும் தேடிச் சென்றதும் இல்லை.

காரணம் மனம் முழுக்க பணம் சார்ந்த எண்ணங்கள் மட்டுமே இருந்தது. மற்றவை எல்லாம் தேவையில்லாததாக எனக்குத் தெரிந்தது. ஆனாலும் நம்மிடம் உள்ள தனிப்பட்ட விருப்பங்களை நாம் அடைககாத்து உள்ளே வைத்திருக்கும்பட்சத்தில் ஏதோவொரு சமயத்தில் அது வெளிப்பட்டே ஆகும். திடீரென்று ஒரு நாள் திருப்பூரில் உள்ள பூங்கா சாலையில் உள்ள நூலகத்தை கண்டேன்.

ஒரு அவசர வேலைக்காக அந்த சாலையின் வழியே  சென்ற போது திருப்பூர் தலைமை நூலகத்தை கண்ட போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பலமுறை இந்த சாலையின் வழியே நான் சென்றபோதிலும் பக்கவாட்டில் இருந்த அந்த நூலகத்தை பார்த்ததே இல்லை. காரணம் மனமும், கண்களும் எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்திற்கான வழிப்பாதை மட்டுமே மனதில் இருக்கும். வேறு எதையும் யோசிக்கக்கூட மனதில் இடம் இருக்காது. திருப்பூருக்குள் இருந்த அந்த நூலகத்தை பார்த்த நாள் இன்னமும் மனதில் நிற்கின்றது.

நான் சென்ற அவசர வேலையை மறந்து விட்டு வண்டியை உள்ளே நிறுத்திவிட்டு ஆர்வத்துடன் உள்ளே சென்றேன்.  உள்ளே ஏராளமான மக்கள் கூட்டமாக இருந்தனர். பலரும் படித்துக் கொண்டு இருந்தனர். எனக்கு வியப்பாக இருந்தது. காரணம் திருப்பூர் பத்து வருடங்களுக்கு முன் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டமிது.  நிற்க கூட நேரமில்லாது ஒவ்வொருவரும் ஓடிக் கொண்டேயிருந்தனர். நானும் எவர் எவருக்கோ உழைத்துக் கொண்டிருந்தேன்.

உள்ளே இருந்தவர்களைப் பார்த்து எப்படி இவர்களுக்கு படிக்க நேரம் கிடைத்தது? என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே அடுத்த ஒரு மாதத்தில் அங்கே சந்தாதாரர் ஆனேன்.  சில புத்தகங்கள் எடுத்து வந்த போதிலும் என்னால் படிக்க முடியவில்லை. காரணம் நள்ளிரவு ஒரு மணிக்கு அறைக்கு திரும்பி வரும் போது தூங்கு என்று உடம்பு உத்தரவிடும் போது மனம் படிப்பதில் ஆர்வம் காட்டாது.

2007க்குப் பிறகு தான் மீண்டும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உருவானது. இதன் பிறகே மீண்டும் புத்தகங்கள் அந்த நூலகத்தில் இருந்து எடுத்து வந்த போதிலும் அத்தனை புத்தகங்களும் தூக்கத்தைத் தான் கொண்டு வந்து சேர்த்தது. 

கட்டுரைகள் சார்ந்த எனது ஆர்வத்திற்கு எழுதியவர்கள் எவரும் வாசிக்கத் தூண்டும் நடையில் இல்லாததே முக்கிய காரணமாக இருந்தது. அப்போது தான் வெளியே புணம் கொடுத்து புத்தகங்கள் வாங்கும் பழக்கம் உருவானது.  ஒவ்வொரு புத்தகங்களாக அறிமுகம் ஆகத் தொடங்கியது. அப்போது நான் எழுதத் தொடங்கிய காரணத்தால் வாசிக்க வேண்டிய சூழ்நிலை இயல்பாகவே அமைந்தது. வாசிக்க வாசிக்க எழுதுவதற்கு மேலும் இயல்பாக எழுத காரணமாக அமைந்தது.

2007 ல் தொடங்கிய வாசிப்பு அனுபவம் 2012 இறுதியில் இந்த ஞானாலயாவை அறிமுகம் செய்து வைத்தது.  ஏறக்குறைய சிறு சிறு ஓடைகள் ஒன்று சேர்ந்து கடைசியாக கடலுக்குச் செல்லும் ஒரு நீண்ட பயணம் போலவே இந்த அனுபவம் என் மனதிற்குள் தோன்றியது.

என்னை வரவேற்ற திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது துணைவியார் டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்களை சந்தித்து உரையாடிய போது தான் இந்த சமூகத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையை திருப்பி போட வைத்தது.  அன்றைய தினமே எனது மங்கலான் பார்வை தெளிவாக மாறத் தொடங்கியது.

அன்று முதல் இன்று வரையிலும் புத்தகங்கள் என்றால் பாடப்புத்தகம் மட்டுமே என்று சராசரி பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் இங்கே அதிகம்.  நானும் அப்படித்தான் வளர்ந்தேன். அதையும் தாண்டி லட்சத்தில் சில நூறு எண்ணிக்கை உள்ள பெற்றோர்கள் தான் மற்ற புத்தகங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து ஆர்வத்தை தூண்டுகின்றார்கள்.  குறிப்பிடத்தக்க சிலர் மட்டும் இயல்பாகவே இந்த புத்தக வாசிப்பை தங்களது இயல்பான் பழக்கத்தில் ஒன்றாக உருவாக்கிக் கொள்கின்றனர்.  குடும்பத்தினர் தூண்டுகோல் இல்லாதபோதிலும் நானும் என் சகோதரிகளும் பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அத்தனை புத்தகங்களையும் வாசிக்க எங்கள் ஊர் நூலகம் உதவியது.

நூலகம் என்பதற்கு அவரவர் மனதில் ஒருவிதமான உருவகம் இருக்கும். அதைப் போலவே நினைத்துக் கொண்டு இயல்பான பார்வையில் தான் ஞானாலயா நூலகத்திற்குச் சென்றேன். புதுக்கோட்டையின் முனையில் நம்பிக்கை முனை போல திருக்கோர்ணம் பகுதியில் அமைதியான குடியிருப்புகள் மத்தியில் பெரிய இரண்டு வீடுகள் அடங்கியதாக உள்ள இடத்தில் இந்த ஞானாலயா நூலகம் உள்ளது.

கிராமத்து மனிதரின் தேகமும்அணிந்திருந்த கண்ணாடி வழியே ஊடுருவிப்பார்க்கும் அந்த கண்களைப் பார்த்த போது எத்தனை ஆயிரம் புத்தகங்கள் இவர் படித்துருப்பாரோ என்று எண்ணிக் கொண்டு வீட்டின் விஸ்தாரத்தை மனதிற்குள் கணக்கெடுத்துக் கொண்டு முகப்பு பகுதியில் அமர்ந்தேன். காற்றோட்டமான அமைதியான சூழ்நிலை அங்கே நிலவியது.
.
திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் துணைவியாருடன் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த அவர் மகளும் வெளியே வந்து என்னை வரவேற்றார்.

மனதிற்குள் குழப்பமாகவே இருந்தது.  

இயல்புக்கு மாறிய நிலையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சந்தேக கண்ணோடு பார்க்க வேண்டிய தொழிலில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு அங்கே சுத்தமான காற்றை  சுவாசிப்பது போலவே இருந்தது. 

திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர்கள் குடும்பத்தைப் பற்றி எனக்கு முழுமையாக தெரியாது.  ஆர்வக் கோளாறு காரணமாகவே போய் இறங்கினேன் என்பது தான் உண்மை.  அந்த நூலகம் அமைந்திருந்த இடம்அங்கு நிலவிய சூழ்நிலைகுடும்பத்தினர் உரையாடிய உரையாடல் என்று என்னை மெதுமெதுவாக மாற்றியது.

பல வருடங்களுக்குப் பிறகு எனது சொந்த ஊரில் ஏதோவொரு விசேடத்திற்கு போனது போலவே இருந்தது. அரைமணி நேரத்திற்குள் திருமதி டோரா கிருஷ்ணமூரத்தி அவர்களுடன் அரட்டை அடிக்கும் அளவிற்கு மாறியது. வீட்டின் அருகே மற்றொரு கட்டிடம் இருக்க அது தான் நூலகம் என்பதை அறியாமல் மனதிற்குள் வீட்டுக்குள்ளே நூலகம் இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு திரு. கிருஷ்ணமூர்த்தி வாயிலிருந்து மடை திறந்த வெள்ளம் போல வந்து விழுந்து கொண்டிருந்த வார்த்தைகள் மௌனமாக உள் வாங்கிக் கொண்டே அந்த பிரம்பு நாற்காலியில் ஆசிரியருக்குக் கட்டுப்பட்ட மாணவன் போலவே கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது தான் கணவன் மனைவி இருவரும் ஆசிரியர் பணியில் இருந்தவர்கள் என்பது புரிந்தது.

நான் அமர்ந்திருந்த வீட்டின் முகப்பு வாயில் பகுதியில்அங்கிருந்த திண்ணையில் பலவிதமான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.  வார இதழ்கள்குறிப்பாக தனி இதழ்கள் என்று எனக்குப் பிடித்த பல விதமான பத்திரிக்கைகளை பார்த்துக் கொண்டேபுரட்டிக் கொண்டே திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரையாடலை குறுக்கே எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.

பொதுவாக தொழில் வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு பேசுவது பிடிக்காது. பேசினால் அது பணம் சார்ந்ததாக இருக்க வேண்டும். இது எல்லா நிலையிலும் இருக்கும் இன்றைய இயல்பான நடைமுறை. இது நானும் விதிவிலக்கல்ல. மேலும் தேவையற்ற பேச்சு என்பது எனக்கு அறவே பிடிக்காது. 

ஆனால் ஆறாம் வகுப்பு முதல் நான் படித்த புத்தகங்கள்நான் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்த எழுத்தாளர்கள்பத்திரிக்கையாளர்கள் என்று நான் நினைத்துப் பார்த்திராத அத்தனைப் பேர்களைப் பற்றியும் அவரின் உரையாடல் வழியே கேட்டுக் கொண்டேயிருந்த போது ஏதோவொரு வேறு உலகில் பயணித்துக் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றியது.  

வந்த வேலையை மறந்து விட்டு அவர் பேச்சையே கேட்டுக் கொண்டிருந்த போது தான் வாங்க நூலகத்தைப் பார்க்கலாம் என்று அடுத்த கட்டிடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.  அப்போது தான் நூலகம் என்பது தனியாக உள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன்.

தான் வசிக்கும் வீட்டைப் போலவே நூலக கட்டிடத்தை மிக நேர்த்தியாக வடிவமைத்திருந்தார்கள். நூலகத்திற்குள் உள்ளே நுழையும் போதே ஒரு விதமான நறுமணம் என் நாசியைத் தடவிச் சென்றது. மனதிற்குள் வியப்பாக இருந்தது. பத்து புத்தகங்களை ஒரே இடத்தில் அடுக்கி வைத்திருந்தால்அதுவும் வருடந்தோறும் அடைத்து வைத்திருந்தால் ஒரு விதமான வாடை வருவது இயல்பு. ஆனால் இவர்களின் நடைமுறை பாதுகாப்பு சம்மந்தப்பட்ட முதலீட்டின் காரணமாகவும்அது குறித்த விழிப்புணர்வின் காரணமாகவும் அந்த நூலக கட்டிட பகுதியில் ஒரு இடத்தில் கூட முடை நாற்றமோதூசியோ பார்க்க முடியவில்லை.

என் வாழ்நாளில் இதுவரையிலும் பெரிய பளிங்கு மாளிகைகளை பார்த்தது இல்லை. அதிகபட்சம் செட்டிநாடு பகுதியில் உள்ள விஸ்தாரமான கலை அம்சம் மிக்க செட்டி நாட்டு வீடுகளைத்தான் பார்த்து இருக்கின்றேன்.  ஆனால் தான் வசிக்கும் வீட்டைப் போல திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உருவாக்கிய ஞானாலயா ஏறக்குறைய ஒரு பளிங்கு மாளிகை போலவே இருந்தது.

ஒவ்வொரு புத்தகத்தையும் நேர்த்தியாக பாதுகாக்கப்பட்ட முதல் நூலகம் இதுவாகத் தான் இருக்கும். 

இதை வார்த்தைகளில் படிக்க உங்களுக்கு எளிதாக இருக்கும். நூறு வருடங்களுக்கு முன் வெளிவந்த அத்தனை விதமான ஆவணங்கள் போல உள்ள தாள்கள் பைண்ட் செய்யப்பட்டு, தினந்தோறும் தூசி அடையாமல் அதற்கென்று ஆள் நியமித்து, வருகின்றவர்கள் மனம் கோணாமல் அவர்கள் கேட்பதை எடுத்துக் கொடுத்து மீண்டும் அதே இடத்தில் வைத்து பாதுகாப்பது என்பது ஆயிரம் கோடி சொத்துக்களை காக்க எப்படி ஒரு தொழில் அதிபர் தூக்கம் துறந்து தினந்தோறும் உழைத்துக் கொண்டு இருக்கின்றாரோ அந்த பணியில் தான் திரு. கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர் ஈடுபட்டுக் கொண்டுருக்கின்றார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.

தனிமனிதர்கள் இந்த சமூகத்தை தாண்டி எதுவும் செய்து விட முடியாது என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்தால் அதை அழித்து விடலாம். அதற்காக நாம் காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் திரு. கிருஷ்ணமூர்த்தி.

ஞானாலயா  பயணம் தொடரும்.

6 comments:

நிகழ்காலத்தில்... said...

ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உழைப்பை எண்ணிப்பார்க்கவெ மலைப்பாக இருக்கிறது. இத்துடன் நாம் ஒதுங்கிவிடக்கூடாது. நூலகம் பராமரிக்க மாதம்தோறும் ஆகும் செலவினை தன் சொந்த பணத்திலிருந்துதான் இன்றளவும் செலவு செய்துவருகிறார்.

இந்த நூலகத்தின் சிறப்பே முழுவடிவிலான முதல்பதிப்பு நூல்கள்தான்..எல்லோருக்கும் இச் செய்தியை கொண்டு சேர்ப்போம்.

மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் ஜோதிஜி

இராஜராஜேஸ்வரி said...

ஞானாலயா பயணம் வியக்கவைக்கிறது ..

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் பெட்டிக்கடைக்காரரிடம் சந்தேகத்தோடு ஞானாலயா நூலகம் எங்கே இருக்கின்றது ? என்று கேட்பதற்கு முன்னே உள்ளவற்றை பற்றி எழுத ஆரம்பித்தால் உங்கள் பதிவை விட அதிக நீளமாக வரும் என்பதால், தங்களோடு பயணப்பட்டு, முதலில் அறிந்து தெரிந்து புரிந்து கொள்வதே நல்லது என்று இதோடு முடித்துக் கொள்கிறேன்... வாழ்த்துக்கள்... நன்றி...

ஜோதிஜி said...

சிரித்து விட்டேன். நீங்கள் சொல்வதும் உண்மை தான். அந்த பகுதியை ரொம்பவே ரசித் தேன். அந்த அளவுக்கு அந்த குடியிருப்பு ரம்யமாய் இருந்தது.

ஜோதிஜி said...

சென்று வந்து ஆறு மாதத்திற்கு மேல் ஆனால் நேற்று சென்றது போல மனம் வியந்து போகின்றது.

ஜோதிஜி said...

இந்த நூலகத்தை அறிமுகம் செய்து வைத்த உங்களுக்குத்தான் என் நன்றியைச் சொல்ல வேண்டும் சிவா.