Thursday, May 31, 2012

சொம்பு இல்லாத நாட்டாமை


இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறக்கும் நாள் வந்துவிட்டது. வீட்டில் குழந்தைகள் எப்படா பள்ளிக்கூடம் திறக்கும்? என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.  சற்று வளர்ந்து நிற்கும் இவர்களின் மனோபாவங்கள், பேச்சுகள், நடவடிக்கைகளை இந்த முறை சற்று ஊன்றி கவனித்த பொழுது பல விசயங்களை புரிந்து கொள்ள முடிந்தது. இரண்டு வாரங்கள் விடுமுறை இருந்தாலே போதுமானது.  உடனடியாக பள்ளி திறந்தால் பரவாயில்லை என்கிறார்கள்.  காரணம் விடுமுறை சந்தோஷங்களை அவர்களால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.


குறிப்பாக இங்குள்ள புறச்சூழல் இவர்கள் விரும்பும் அளவுக்கு சிறப்பாக இல்லை. வீட்டை விட்டு இறங்கினால் வாகனங்கள் பறக்கும் தெரு.  மரங்கள் எதுவுமே இல்லாத குடியிருப்பு.  இதற்கு மேலாக மண்டையை பிளக்கும் வெயில். திருப்பூருக்குள் சுற்றிப் பார்க்க எந்த இடமும் இல்லை.  தான் தோன்றித் தனமான வாகன ஓட்டுநர்களினால் உருவாகும் போக்குவரத்து நெரிசலைப் பார்த்து நானும் எங்கேயும் அழைத்துச் செல்ல விரும்புவதும் இல்லை. மற்றவர்களைப் போல டாம்பீகத்திற்காக எங்கேயும் செல்வதும் இல்லை.

என்னுடைய பள்ளிக்கூட கோடை விடுமுறை கொண்டாட்ங்கள் இப்போது மனதில் நிழலாடுகிறது.  ஆண்டு இறுதி தேர்வின் கடைசி நாளின் போது, தேர்வு எழுதி முடித்து வீட்டுக்குள் நுழையம் போதே அந்த பைக்கட்டை தூக்கி ஏதோவொரு இடத்தில் தூக்கி எறிவதில் இருந்து தொடங்கும்.  அந்த இரண்டு மாதங்களும் இரவு நேரத்தைத் தவிர வீட்டுக்குள் இருந்ததே இல்லை.  அடிக்கும் வெயில் அத்தனையும் தலையில் தான் இருக்கும்.  அந்த அளவுக்கு ஓடி ஓடித் திரிந்த காலங்களை இன்று குழந்தைகளுக்கு வழங்க முடியவில்லை.  உறவினர் வீடு, பழகியவர் வீடு என்று எந்த இடத்திற்கு அனுப்பினாலும் வெகு விரைவில் இவர்களுக்கு அங்குள்ள சூழ்நிலை அலுத்துப் போய்விடுகின்றது.  ஓரே போருப்பா........ என்கிறார்கள்.  வீட்டுக்கு வந்து விடுகின்றோம் என்று திரும்பி வந்து விடுகின்றார்கள்.

ஆனால் என்னுடைய பள்ளிக்கூட வாழ்க்கையில் போர் என்பது துளிகூட இல்லை.  இருப்பதை வைத்து அனுபவித்தல் என்ற நோக்கத்தில் வாழ்க்கை இருந்தது.  இன்று இவர்களுக்காகவே என்று உருவாக்கிக் கொடுத்த ஒவ்வொரு விசயங்களும் அடுத்த தேடல் என்ற நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறது.  வசதிகளை எதிர்பார்த்து பழகியவர்களால் தங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். இதற்கு மேலாக மாயப்பிசாசு போல் ஆட்டிப் படைக்கும் தொலைக்காட்சி விடுமுறையின் பாதிநாட்களை ஆக்கிரமித்து அந்தப் பக்கம் இந்தப் பக்கம் ஆட அசைய விடாமல் கற்சிலை போல ஒரே இடத்தில் அமர வைத்து விடுகின்றது.

கண்வலி, கழத்துவலி என்று தொடங்கி கடைசியில் மொத்த உடம்பும் சோர்ந்து போய் நிற்கும் சோர்வை அவர்களின் இரவு நேர தூக்கத்தின போது பார்க்க முடிகின்றது.  மூட்டை தூக்கி பிழைப்பு நடத்தும் கூலி வேலை பார்ப்பவர் இரவு நேரத்தின் போது எந்த அளவுக்கு அசந்து தூங்குவாரோ அதைப் போலவே அடித்து போட்டது போல தினமும் தூங்குகிறார்கள். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தூங்குகிறார்கள்.  பகலில் தூங்க வைக்க முடியவில்லை. பள்ளிக்கூடம் இல்லை தானே என்பது போன்ற வீட்டில் உள்ள வக்காலத்து வார்த்தைகள் அவர்களின் தூக்க நேரத்தை தினந்தோறும் அதிகப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. தினசரி செய்ய வேண்டிய அன்றாட கடமைகள் அத்தனையும் தலைகீழாக போய்விட்டது. புரிய வைக்க முடியவில்லை.  புரிந்து கொள்ளும் சூழ்நிலையிலும் அவர்களும் இல்லை.

பள்ளிக்கூட நாட்களில் அனுபவிக்க முடியாத அத்தனை சுதந்திரங்களையும் ஒவ்வொரு நாளும் முழுமையாக அனுபவிக்கிறார்கள்.  விரும்பிய அத்தனையும் கிடைக்கிறது.  வீட்டுக்குள் அவர்கள் விரும்பாத எந்த நிகழ்வும் நடப்பதும் இல்லை. சம்மர் கோர்ஸ் என்ற எந்த கண்றாவிக்கும் நாங்கள் அனுமதிப்பது இல்லை. 

உனக்கு என்ன வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக் கொள்.  உனக்கு செஸ் ஆட ஆசையா?  அதற்கான பொருட்கள் வாங்கித் தருகின்றேன்.  பக்கத்து வீட்டில் உள்ள அண்ணன் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்த்து நீயே கற்றுக் கொள்.  என்னை அழைக்காதே. எனக்கு அதில் விருப்பமும் இல்லை.  நேரமும் இல்லை.  

இது போலத்தான் ஒவ்வொரு விளையாட்டையும் அவர்களாக தேடித் தேடி கற்றுக் கொள்ள தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கின்றோம். நாம் நுழைந்தாலும் கடைசியில் அவர்களுக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டுமே தவிர அவர்களை ஒரு அளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகி விடுகின்றது. 

மூவருக்கும் நடக்கும் பஞ்சாயத்தில் கடைசியில் வீடே போர்க்களம் ஆகிவிடுகின்றது.  அடுத்தவர்களிடம் அனுப்பும் போது பொட்டிப் பாம்பாய் அடங்கி விடுகிறார்கள்.  தேவையான அனுசரனை வேண்டும்.  அதற்கு மேலாக  உண்மையான உழைப்பின் மூலம் மற்றவர்களை கூர்ந்து கவனிப்பதன் மூலம் பல விசயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்பதை குறிப்பால் உணர வைக்கின்றோம்..  

ஆனாலும்.........

நாம் வாழும் குடும்பச் சூழ்நிலையில் ஓழுக்கச் செயல்பாடுகளை முன்னிறுத்தி அவர்களை ஒரு உருவமாக மாற்ற முயற்சித்தாலும் வெளி உலகம் கொடுக்கும் தாக்கமும், இவர்கள் மற்றவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் செயல்பாட்டின் மூலம், தேவையற்ற பல விசயங்களையும் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இவர்கள் பெறும் தாக்கம் என்பது இறுதியில் நீயும் ரௌத்திரம் பழகு என்பதாகத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. 

பணம் என்ற ஒரு வார்த்தை இங்கே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது.  உடுக்கும் உடை, உண்ணும் உணவு முதல் பேச்சில் காட்ட வேண்டிய டாம்பீகம் வரைக்கும் வளரும் பிஞ்சு மனதில் இந்த சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை தான் விதைத்துக் கொண்டிருக்கிறது.  உள்ளே வெளியே என்று ஒரு ஆடு புலி ஆட்டமாகத்தான் சமகால வாழ்க்கையில் குழந்தைகள் போராடி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தினந்தோறும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களுடன் பழகிய தாக்கத்தில் தனக்கு தானே என்று யோசிக்கத் தொடங்குகிறார்கள். இதுவே குழந்தைகளுக்கு தான் மட்டும் என்ற எண்ணத்தையும் மறைமுகமாக வளர்த்துக் கொண்டிருக்கிறது. சுயநலம் மேலோங்குகின்றது. போட்டி பொறாமை அதிகமாகி விடுகின்றது. தான் செய்வது தான் சரிதான் என்று பேசத் தொடங்கிறார்கள். நவீன தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்வதில் குறையேதும் இல்லை என்ற போதிலும் இவர்களால் உருவாகும் ஒவ்வொரு சவால்களையும் மனைவியால் சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றார்.


எத்தனை முறை ஒற்றுமை குறித்த கதைகள் சொன்னாலும் சுவராசியம் என்ற நோக்கத்தில் கேட்டுக் கொள்கிறார்களே தவிர காலை எழுந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரைக்கும் நடக்கும் வீட்டுக்குள் நடக்கும் பஞ்சாயத்துகளை நான் ஒவ்வொரு வார ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான் பார்க்க வாய்ப்பு கிடைக்கின்றது.  மற்ற ஆறு நாட்களிலும் மனைவி தான் ஆலமரத்தில் சொம்பு இல்லாத நாட்டாமையாக நேரத்திற்கு தகுந்தாற் போல தீர்ப்புகளை மாற்றி மாற்றி சொல்லி சமாளித்து எப்படா பள்ளி திறக்கும்? என்று ஆவலுடன் காத்திருக்கிறார். 

9 comments:

 1. இரண்டு மாதம் மட்டுமே இரவு வீட்டுக்கு செல்வதா!எமக்கெல்லாம் வருடம் முழுவதுமே அதுதான் பொழப்பு:)

  வருத்தப்பட்டுக்கொள்ள வேண்டாம்!இங்கேயும் கோழிக்கூட்டு வாழ்க்கையே!

  ReplyDelete
 2. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

  ReplyDelete
 3. கஷ்டம்தான் சார், இரண்டு மாசத்துக்கே இப்படின்னா வருசம் முழுக்க குழந்தைகளை சமாளிக்கும் டீச்சர்களை என்னசொல்வது?

  என்னாதான் பண்ணினாலும் தான் என்பது வந்தேதான் ஆகும், ஒற்றுமையா இருக்காங்களா? சந்தோசம் அவ்வளவுதான் ஃபிரியா விடுங்க சார்

  ReplyDelete
 4. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. நல்ல பதிவு !
  வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 6. // மற்றவர்களைப் போல டாம்பீகத்திற்காக எங்கேயும் செல்வதும் இல்லை.//

  ஜோதிஜி டாம்பீகத்திற்க்காக இல்லை என்றாலும் அவர்களின் மாறுதல்களுக்காக அழைத்துச் செல்லலாம். அதிக செலவு பிடிக்கும் இடங்களில்லாமல் அழைத்து செல்வது அவர்களுக்கும் சந்தோசத்தை அளிக்கும்.

  //ஓரே போருப்பா........ என்கிறார்கள்.//

  இது ரொம்ப உண்மை :-) குழந்தைகளாக இருக்கும் வரை பிரச்சனை இல்லை கொஞ்சம் வளர்ந்து விட்டால் விடுமுறை நாட்களில் அவர்களை திருப்தி படுத்துவது என்பது ரொம்ப சிரமம். என்னோட அக்கா பையன் எங்க வீட்டிக்கு வந்தால் இதே தான் சொல்லுவான்.. என் அம்மா என்னுடன் பேசும் போது இரண்டு நாள் தான் இருக்கிறான் போர் அடிக்குதுன்னு சொல்றான்னு சொல்வாங்க :-) அவனுக்கு விளையாட ஆள் இல்லை. அதை விட முக்கியமா வீடியோ கேம்ஸ் இல்லை.. டிவி சரியாக தெரிவதில்லை. இது போதாதா!

  //தினசரி செய்ய வேண்டிய அன்றாட கடமைகள் அத்தனையும் தலைகீழாக போய்விட்டது. புரிய வைக்க முடியவில்லை. புரிந்து கொள்ளும் சூழ்நிலையிலும் அவர்களும் இல்லை.//

  ஜோதிஜி அனைத்து நேரங்களிலும் கடமைகளை பின் பற்ற வேண்டும் என்பது எதிர்பார்ப்பது என்பதில் உடன்பாடில்லை. சலுகை காட்டலாம். பள்ளி திறந்தால் மறுபடியும் இயந்திர வாழ்கை தானே.

  இதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன்.. என்னுடைய அக்கா விடுமுறையில் வீடு வந்தால் ஒரு வேலையும் செய்ய மாட்டார்கள் பெரும்பாலான நேரங்கள் தூக்கத்தில் தான் இருக்கும் காரணம் அங்கே ஓய்வே இல்லாத வேலை. இதை உணர்ந்து என் அம்மாவும் அவர்களை எந்த தொந்திரவும் செய்ய மாட்டார்கள். காலையில் எழுப்பவே மாட்டார்கள் அவர்களாக எழுந்தால் தான் உண்டு. பெரியவர்களுக்கே இப்படி இருக்கும் போது குழந்தைகள் பாவம் தானே!.

  //இவர்கள் மற்றவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் செயல்பாட்டின் மூலம், தேவையற்ற பல விசயங்களையும் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.//

  இது மறுக்க முடியாத உண்மை ஆனால் தவிர்க்க முடியாததும் கூட. நாம் தான் கூறி புரிய வைக்க வேண்டும்.

  ReplyDelete
 7. ஹஹஹஹ. நாட்டாமை பொறுப்பினை அம்மாக்களின் மடியில் கட்டிவிட்டு தப்பித்துக்கொள்ளும் அப்பாக்களாகவே இருந்து விடுவதில் நாம் அனைவரும் ‘ஒரே ரத்தம்’.

  ReplyDelete
 8. சத்ரியன்

  ரத்தம் ஒரே நிறம் என்பது இதுதானோ?

  கிரி

  உங்கள் அக்கா கதை போல இங்கேயும் உண்டு. வீட்டுக்கு வீடு வாசப்படி தான் போலிருக்கு.

  வாங்க தனபாலன். ரத்னவேல் நடராஜன்.

  வாங்க சுரேஷ். இன்னும் சில நாட்கள் தான். அது வரை தாக்குப் பிடிக்க வேண்டும்.

  ராஜநடராஜன்

  உள்ளூர் என்றால் சற்று ஆறுதல் கிடைக்கும். ஆனால் வெளிநாடு என்றால் இன்னும் பிரச்சனைகள் உண்டு. உண்மை தான்.

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.