Tuesday, March 29, 2011

நீங்களும் (சட்டமன்ற) வேட்பாளர்தான்?

ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பு மனுத்தாக்கல் குறித்த செய்திகளையும், அந்த வேட்பாளர்களின் புகைப்படங்களையும் பார்த்திருப்போம். குறிப்பிட்ட அந்த வேட்பாளர் சிலருக்கு நண்பராக இருக்கலாம். பலருக்கு பள்ளித் தோழராகவும் கூட இருக்கலாம். ஆனால் கட்சி சார்ந்த வேட்பாளர் என்றவுடன் அவர் வாழ்க்கையில் மாறும் காட்சிகள் ஆச்சரியம் அளிக்கக்கூடியதாக இருக்கும். இதைப் படிக்கும் நீங்க அதிக பட்சம் கிராம நிர்வாக அதிகாரி முதல் தாசில்தார் அலுவலகம் வரைக்கும் போய் நின்று ஏதோவொரு சான்றிதலுக்காக மட்டும் போய் வரிசையில் நின்று இருக்கக்கூடும்.

ஆனால் இது போன்ற அலுவலகங்கள் தான் நம் இந்தியாவில் நடக்கும் தேர்தலுக்கு முக்கிய பங்காற்றிக் கொண்டு இருக்கிறது. வருவாய் கோட்டாட்சியர் அதிகாரி தான் அந்தந்த தாலூகாவின் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவருக்கு தேர்தல் ஆணையம் வழங்கும் அதிகாரம் என்பது ஆச்சரியத்தின் உச்சம். ஒரு வேட்பாளர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வது முதல் அதை இறுதியாக உறுதிப்படுத்துவது வரைக்கும் இங்கு தான் படிப்படியான ஒவ்வொரு நிகழ்வுகளும் நடக்கின்றது.  இந்த வருவாய் கோட்டாட்சியருக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய படைபட்டாளமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இது தவிர ஏனைய மற்ற அரசாங்கத் துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களையும் தேர்தலின் போது நமது அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கின்றது.

இவர்கள் விரும்பாதபோதும் கூட படாய்படுத்தி தேர்தல் வேளையில் பங்கெடுக்க வைத்து விடுகிறார்கள். மொத்தத்தில் மக்களுக்கு தேவைப்படும் சார்பாளர்களை தேர்ந்தெடுக்க ஒரு மிகப் பெரிய அரசு எந்திரம் தேர்தல் முடிவு அறிவிக்கும் வரையிலும் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலின் முடிவு வந்த போதிலும் கூட அத்தனை ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டியதாகவும் இருப்பதால் இதன் முக்கியத்துவம் ஆச்சரியப்படக்கூடியது.

இப்போது வலைபதிவுகளில் எழுதிக்கொண்டிருப்பவர்களின் மனதில் எதிர்காலத்தில் கட்சி சார்ந்து அல்லது சார்பில்லாமல் 2016 அன்று நடக்கப்போகும் (அல்லது அமையப்போகும் கூத்து அரசாங்கம் கவிழ்ந்து இடையில் உருவாகப்போகும்) தேர்தலில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ள விரும்பினால் இந்த கட்டுரை உங்களுக்கு பயன்படக்கூடும்.

உங்களுக்கு தேர்தலில் போட்டியிட ஆசையா? 

நீங்கள் வேட்பாளராக வேண்டுமென்றால் சில ஆவணங்கள் உங்கள் கைவசம் இருக்கிறதா என்பதை இப்போதே சோதித்துப் பார்த்துக் கொள்ளவும்.

வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை (ரேஷன் கார்டு), ஓட்டுநர் உரிமம், பள்ளியில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ், உங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரியிடம் வாங்கியுள்ள சொத்து குறித்த சான்றிதழ், ஒரு வேளை உங்களுக்கு சொத்து இல்லாவிட்டாலும் கூட அதை குறிப்பிட்டு எழுதி வாங்கி வைத்திருக்க வேண்டும்.  உங்களுக்கு நிரந்தராக தொழில் இருந்தால் அது குறித்த தணிக்கையாளர் சான்றிதழ் மற்றும் வருமான வரி கட்டிய விபரங்கள் போன்றவை அவஸ்யம் தேவை.

இது தவிர தேர்தலுக்காகவென்று ஒரு புதிய வங்கி கணக்கு.  இது சேமிப்பு கணக்காகக்கூட இருக்கலாம். வங்கியிடம் கேட்டு நம்முடைய கணக்குக்கான அட்டையை வாங்கி வைத்திருக்க வேண்டும்.  கடைசியாக 20 ரூபாய் மதிப்புள்ள பத்திரத்தில் (நோட்டரி பப்ளிக்) வழக்குரைஞரிடம் உறுதி மொழி சான்றிதழ்..

தேர்தலுக்கான விண்ணப்ப படிவத்தை முதலில் பெற அந்தந்த தாலூகா அலுவலகத்தில் சிறப்பு பிரிவாக உருவாக்கப்பட்டிருக்கும் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஒரு விண்ணப்ப படிவத்தை இலவசமாக தருகிறார்கள். அதில் அனுப்புநர், பெறுநர் (தேர்தல் அதிகாரி) போன்ற சம்பிரதாய வாசகங்களுடன் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். 

உங்கள் பெயர், அப்பா பெயர், தற்போது வசிக்கும் முகவரி, உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் எண், பிரிக்கப்பட்ட தொகுதி என்றால் எந்த பிரிவில் வருகிறது? தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புத்தகத்தின்படி எந்த பக்கத்தில் உங்கள் பெயர் வருகின்றது போன்றவற்றை இந்த விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டு நீங்கள் கையொப்பமிட்டு உள்ளே கொடுக்க வேண்டும். உங்களிடம் வாக்களர் அடையாள அட்டை இருந்து அது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புத்தகத்தில் வராதபட்சத்தில் ஆசையை அடக்கிக் கொண்டு அடுத்த வேளையை பார்க்க போய்விடலாம்.

ஏனப்பா என் பெயர் இதில் வரவில்லை என்று உங்களால் கேட்க முடியாது.  காரணம் இதற்காகத்தான் பல வாய்புக்கள் வழங்கப்படுகின்றது.  அது போன்ற சமயத்தில் அடித்தல், திருத்தல், மற்ற மாற்றங்கள் குறித்து குறிப்பிட்ட அலுவலரிடம் தெரிவித்து முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருக்க வேண்டும்.

முதலில் தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வாங்க உள்ளே நுழையும் போது மூன்று அலுவலர்கள் உங்களை வரவேற்கிறார்கள். ஒருவர் உங்கள் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொண்டு ஒரு குறிப்பேட்டில் குறித்துக் கொண்டு அவர்கள் வைத்திருக்கும் ஆவணங்களை வைத்து சரி பார்த்து அடுத்தவரிடம் கொடுக்கிறார். அவர் நாம் கொடுத்துள்ள விபரங்களை நம்மிடம் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டு நம்மிடம் இருந்து பத்து ரூபாய் கேட்டு வாங்கிக் கொண்டு ரோஸ் கலர் விண்ணப்ப படிவத்தை தருகிறார். 

இது தான் வேட்பாளருக்கான விண்ணப்ப படிவம். 

மூன்றாவது நபர் நாம் கொடுத்த பத்து ரூபாய்க்கு உரிய ரசீதும், அவர் வைத்துள்ள குறிப்பேட்டில் நம்மைப் பற்றி விபரங்களையும் பெற்று எழுதிக் கொண்டு வழியனுப்பி வைக்கிறார்கள்.

முதல் கட்டம் முடிந்தது.

இந்த ரோஸ் கலர் விண்ணப்ப படிவமானது இந்திய தேர்தல் ஆணையத்தின் படிப்படியான கெடுபிடிகளால் சமீபகாலமாகத்தான் உருவாகியிருக்கும் போலிருக்கு.  ஏழு பக்கங்கள் இருக்கிறது.  முதல் வரியே 

தேர்தல் நடத்துவது குறித்த 1961 ஆம் ஆண்டு விதிகளின் 4 வது விதியைக் காண்க.  ( இதுக்கு அப்புறம் எவரும் இதில் கையை வைக்கலையோ?)

இதில் ஒவ்வொரு பகுதியாக பிரித்துள்ளார்கள்.

முதல் பகுதியில் நம்மைப்பற்றி விபரங்கள், முகவரி, வாக்காளர் அடையாள அட்டையின் எண், பிரிவு, பாகம் போன்ற விசயங்கள்.

இதில் தொடர்ச்சியாக மற்றொரு அதி முக்கியமான விசயம் ஒன்று உண்டு.  நம்மை பத்து பேர்கள் பரிந்துரை செய்ய வேண்டும்.  ஒவ்வொருவரின் பெயர், அவரின் வாக்காளர் அடையாள அட்டையின் எண், பாகம், பிரிவு அத்துடன் அவரின் கையொப்பம். 


இரண்டாவது பகுதியில் வேட்பாளர் வயது, நாம் விரும்பும் (மூன்று) சின்னங்களை கேட்டு அதில் குறிப்பிட வேண்டும்)

இந்த பிரிவின் கடைசியாக "தற்போது நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் நான் இரண்டுக்கும் மேற்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளிலிருந்து வேட்பாளராக நியமனம் செய்யப்படவில்லை என்று அவ்வாறு நியமனம் செய்யப்பட மாட்டேன என்றும் மேலும் உறுதியளிக்கின்றேன்" என்றும் முடிவு பெறுகின்றது.

அடுத்த பிரிவில் அற்புதமான பஞ்சாயத்து சமாச்சாரங்கள் நிரம்பி வழிகின்றது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டு, வழக்கு விபரங்கள், அதன் குற்றவியல் குறித்த விபரங்கள் என்று இரண்டு பக்கத்திற்கு விலாவாரியாக விவரிக்கப்பட்டுள்ளது.

கடைசி இரண்டு பக்கங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிக்குரிய பக்கங்களாகும்..  
இந்த வேட்புமனுவை பரிசீலித்து கீழ்கண்டவாறு முடிவு செய்கின்றேன் என்று அவர் இறுதியாக கையொப்பமிட வேண்டும்.

ஏறக்குறைய ஏழு பக்கங்கள். ஒவ்வொரு பக்கத்தின் முன்பின் நிரப்பப்படும் இந்த விண்ணப்பபடிவத்தின் மூலமாகத்தான் நம்மை ஆட்சியப் போகும் ஏழரை பகவான்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் இத்துடன் நமக்கு வழக்குரைஞர் அளிக்கும் 20 ரூபாய் மதிப்புள்ள பத்திர சான்றிதழ் அதி முக்கியமானது. 

இந்த பத்திரம் 16 பக்கங்கள் வருகின்றது. 

இது முழுக்க முழுக்க நம்முடைய சொந்தக்கதை சோகக்கதையை நிரப்பியாக வேண்டும்.

பெயர், முகவரி, வாக்காளர் அடையாள அட்டை குறித்த விபரங்ளுடன், குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், தண்டனை பெற்றிருந்தால், மனு நீதி மன்றத்தில் இருக்கும்பட்சத்தில், வாய்தாவாக இழுத்துக் கொண்டே இருந்தால்...  

விலாவாரியாக ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே செல்கிறது.  (கிட்னி மோசடியில் ஈடுபட்டு வழக்கு மன்றத்தில் இருப்பவரை தங்கபால் தேர்ந்தெடுத்துள்ள வேட்பாளர் குறித்து இப்போது உங்கள் நினைவுக்கு வந்து இருந்தால் நான் பொறுப்பல்ல) 

இத்துடன் நாம் வாங்கியுள்ள சொத்துக்களையும் குறிப்பிட வேண்டும். அசையும் சொத்து, அசையாச் சொத்து, நாம் வைத்திருக்கும் வாகனங்கள், அதன் மதிப்பு, துணைவியார் பணியில் இருந்தால் அவரின் வருமானம் குறித்த விபரங்கள், வீட்டில் உள்ள நகையின் இன்றைய மதிப்பு.........................

நாம் தான் கலைஞர்,ஜெயலலிதா போன்றோர்கள் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள அவர்களின் சொத்து மதிப்பை நாம் பத்திரிக்கைகளில் படித்துக் கொண்டு தானே இருக்கிறோம்(?)

நாம் குறிப்பிட்டுள்ள சொத்தின் அளவைப் பொறுத்து, வருமான வரி சான்றிதழ்கள், பான்கார்டு விபரங்கள், தணிக்கையாளர் சான்றிதழ் போன்றவற்றை தனியாக குறிப்பிட வேண்டும்.  இத்துடன் நாம் தேர்தல் செலவுக்கென்று புதிதாக ஒரு வங்கிக் கணக்கு அது குறித்த விபரங்கள்.

கையொப்பம் இட வேண்டிய அத்தனை இடங்களிலும் கவனமாக பார்த்து கையொப்பமிட்டு விட்டால் முதல் கட்ட தகுதி முடிவுக்கு வந்து விடுகின்றது.


விண்ணப்ப படிவத்திற்கு பத்து ரூபாய், மற்றபடி வழக்குரைஞருக்கு, ஒவ்வொன்றையும் நகல் எடுக்க, அலைச்சலுக்கு தேவைப்படும் பெட்ரோல், வங்கிக் கணக்கு தொடங்க ஆயிரம் ரூபாய் என்று இந்த முதல் பகுதியில் நமக்குத் தேவைப்படும் செலவீனம் மிக அதிகபட்சமாக 1500 ரூபாய்.

அடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பதற்கான நடை முறைகள்........ 

15 comments:

ராஜ நடராஜன் said...

இப்போதைக்கு துண்டு போட்டுட்டு மறுபடியும் வாரேன்:)

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு திரு ஜோதிஜி.
ஒவ்வொரு பதிவுக்கும் நன்கு உழைத்து எழுதுகிறீர்கள்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

தமிழ்மலர் said...

நன்று

Thekkikattan|தெகா said...

எதிர்கால இளைஞ-வேட்பாளர்களுக்கான கையேடு :-)... good work!

ஜீவன்சிவம் said...

அவசியமான தகவல் - முக்கியமாக அரசியல் பதிவு எழுதுபவர்களுக்கு

THOPPITHOPPI said...

//நல்ல பதிவு திரு ஜோதிஜி.
ஒவ்வொரு பதிவுக்கும் நன்கு உழைத்து எழுதுகிறீர்கள்.//

Chitra said...

இந்த பத்திரம் 16 பக்கங்கள் வருகின்றது.

இது முழுக்க முழுக்க நம்முடைய சொந்தக்கதை சோகக்கதையை நிரப்பியாக வேண்டும்.


.......நகைச்சுவை உணர்வுடன், நிறைய தகவல்கள் தொகுத்து தந்து இருக்கீங்க. பகிர்வுக்கு நன்றிங்க. தொடருங்கள்.

சுடுதண்ணி said...

வாழ்த்துக்கள் ஜோதிஜி :)

Valar (வளர்மதி) said...

உங்கள் ஆர்வமும் உழைப்பும் உங்கள் எழுத்தில் பிரதிபலிக்கிறது. நன்றி தொடர்ந்து எழுதுங்கள்.

Unknown said...

எனக்கு தெரியாத தகவல்கள், பகிர்வுக்கு நன்றி சார்...

ரஹீம் கஸ்ஸாலி said...

good info

மாயாவி said...

அருமையான விளக்க கையேடு.... இத்தனை தூரம் நீங்கள் விவரங்கள் சேகரித்து எழுதுகிறீர்கள். தங்கபாலு போன்றோர் சொந்த மனைவிக்கு சூனியம் வைக்கிறார்கள்... எதுக்கும் இதை அவர் மனைவிக்கு அனுப்பி வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

http://thavaru.blogspot.com/ said...

ம்ம்ம்..புரியுதா..

புரியுது அன்பின் ஜோதிஜி.

Unknown said...

வெரி குட் நரி வால்...
ஒரு விஷயத்தை நீளமா சொல்லிக்கிட்டே வந்தா ..
என் பையன் இப்படி தான் சொல்றான்...

ஒன்று சேர் said...

நூற்றுக் கணக்கான திருப்பூர் சாயப்பட்டரை முதலாளிகளுடன் வேட்புமனு தாக்கல் செய்து, அரசியல் உள் அரங்க கூட்டம் கேட்டு, வாக்குறுதி கேட்டு வாபஸ் சில பேர், பல பேர் தாங்கள் சொன்ன பட்டியலில் உள்ள ஏதேனும் ஒன்று விடுபட்டதால் தள்ளுபடி என்று "எடுத்துக் கொண்ட நோக்கம் நிறைவேறியதோ இல்லையோ", ஜோதிஜி வேட்புமனு தாக்கல் செய்து தள்ளுபடி செய்யப்பட்டது இது போன்ற ஒரு அனுபவ தொடர் எழுத பயன்பட்டதே அந்த வகையில் சிறப்புத்தான்.