Wednesday, January 05, 2011

பள்ளி முதல் பள்ளியறை வரை

இதுவொரு சுயசரிதை அல்ல. நான் வாழ்ந்து வந்த சூழ்நிலையை அதன் தாக்கத்தை பிரதிபலிக்கச் செய்வதே இதன் நோக்கம். நான் பள்ளியில் நுழைந்தது முதல் என் குழந்தைகளை பள்ளிக்குச் சேர்க்க சென்ற போது முதன் முதலாக அவர்களின் அந்த பள்ளியின் அறையை கண்ட நாள் வரைக்கும் உள்ளதுமான நிகழ்வுகளை எழுதிப் பார்க்க முயற்சிக்கின்றேன். ஏற்கனவே இந்த களத்தை வெட்டிக்காடு ரவி, தெகா போன்ற ஜாம்பவான்கள் தொட்டு இருக்கிறார்கள். இந்த இரண்டு குருமார்களுக்கும் முதல் வணக்கம்.


தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் உண்டு. ஈழத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான வாழ்க்கைமுறை. பழக்க வழக்கங்கள், விருந்தோம்பல் போன்ற சுவராஸ்யமான தகவல்கள் உண்டு. ஒரு மாவட்டத்தின் கலாச்சாரம், மனிதர்கள், அந்த மண்ணும் மண் சார்ந்த நிகழ்வுகளை முடிந்தவரை ஆவணப்படுத்த முயற்சிக்கின்றேன்.

தொடரின் இடையில் வரும் ஜாதிப் பெயர்கள் தேவையில்லை எனில் உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.

சரஸ்வதி வித்யாசாலை.

வித்யாசமான பெயர் மட்டுமல்ல. நான் படித்த இந்த தொடக்கப்பள்ளியின் கட்டிடமும் கலைநுணுக்கமாய் இன்று வரையிலும் இருக்கின்றது. மிக துல்லியமாகத் தெரியாவிட்டாலும் எனக்குத் தெரிந்து இந்த கட்டிடம் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேல் இருக்கலாம். இன்று வரையிலும் ஒரு விரிசல் இல்லை. தற்போது உள்ள நவீன தொழில் நுட்பம் எதுவுமில்லாமல் முட்டைச்சாந்து வைத்து கட்டப்பட்ட கட்டிடமாக இருக்கலாம். செட்டிநாட்டு பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் உழைப்பும் அர்பணிப்பும் இந்த கட்டிடத்திலும் உண்டு.  ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒரு பராம்பரியம் உண்டு. செட்டிநாட்டுப்பகுதியில் வாழ்ந்த ஒவ்வொருவரும் அந்தந்த காலகட்டத்தில் பர்மா, மலேசியா,சிங்கப்பூர் என்று திரை கடலோடி திரவியம் சேர்த்த சொத்துகளாகும். இந்தப் பகுதி முன்பு இராமநாதபுரம் மாவட்டம் என்ற எல்லைக்குள் இருந்தது. பின்பு பசும்பொன் முத்துராமலிங்கம் என்று மாறி தற்போது சிவகங்கை மாவட்டம் என்ற பெயரில் உள்ளது.   இந்த சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாதக பாதகங்களைத் தனியே பார்க்கலாம்.

செட்டிநாட்டுப் பகுதி என்றவுடன் வெறும் செட்டியார்கள் மட்டுமே வாழ்ந்த பகுதி என்று எண்ணிவிட வேண்டாம். எல்லாத்தரப்பினரும் பல்வேறு ஜாதி மூலக்கூறில் வாழ்ந்து கொண்டுருக்கும் பகுதியாகும். இங்குள்ள வீடுகள் ஒவ்வொன்றும் பெரிதாக இருக்கும். வீட்டின் வாசல்படி, நிலைப்படி, என்று தொடங்கி ஒவ்வொரு இடங்களிலும் தச்சு வேலை பார்த்தவர்கள் தங்களின் கலைத்திறமையை காட்டியிருப்பார்கள். உணவை ரசித்து தின்ற கூட்டமும் கலையை கண்ணுக்குள் வைத்து பார்த்த மக்களும், வாழ்ந்த வாழ்க்கை முழுக்க அலட்டிக் கொள்ளாமல் இருந்த அத்தனை பெரியவர்களும் போய் சேர்ந்துவிட்டனர்.

இன்று இல்லாவிட்டாலும் கூட அவர்களின் நினைவாக ஒவ்வொரு கட்டிடமும் ஓராயிரம் கதைகள் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றது. நான் படித்த சரஸ்வதி வித்யாசாலையில் சுமராக ரசிக்கக்கூடிய அளவில் அங்கங்கே கலையார்வம் மிளிரும். இந்த தொடக்கப்பள்ளியில் யெமு வீதியில் வீடுகளுக்கிடையே இருக்கிறது.

புதிதாக இந்த வீதியில் வந்து செல்பவர்களுக்கு இதுவொரு பள்ளியென்று சட்டென்று தெரியவாய்பில்லை. இப்போது உள்ள பள்ளிகள் போல் முன்புறம் பெரிய திடலோ அடையாளம் சொல்லும் அளவிற்கு எதுவும் இருக்காது. ஒவ்வொரு நேரமும் பள்ளிக்கூடம் முடிந்து வெளியே வரும் மாணவ கூட்டங்களை வைத்து தான் கண்டு கொள்ள முடியும். காந்தி முதல் காஞ்சி பெரியவர் வரைக்கும் உள்ள அத்தனை  பிரபலங்களும் இந்த பள்ளிக்கு வந்துள்ளார்கள். ஆர்ப்பாட்டமில்லாமல் இந்த பள்ளி நிர்வாகம் கடந்து வந்த பாதை வியப்புக்குரியது.

கட்டிடத்தின் உள்ளே நுழையும் போது பெரிய இரும்பாலான வெள்ளி முலாம் போன்று பூசப்பட்ட வண்ணக் கதவு நம்மை வரவேற்கும்.  முக்கியமான விருந்தினர்கள் அழைப்பாளர்களாக வரும் போது மட்டுமே இந்த பெரிய கதவை அகல திறந்து வைப்பார்கள். பள்ளி நாட்களில் அதில் உள்ள சிறிய கேட்டை திறந்து கொண்டு மாணவர்கள் உள்ளே செல்லவேண்டும். இந்த நுழைவு வாயிலிருந்து செங்குத்தான் பார்வையில் நாம் மேலே நோக்கினால் கட்டிடத்தின் மேல்பகுதியில் அரை வட்ட வடிவ அலங்காரச் சுவற்றில் சரஸ்வதி வீணை வாசித்துக் கொண்டுருப்பார்.

அவரைச் சுற்றி பொய்யான் ஒளிவட்டம் இருக்காது. அந்த இடத்தில் பள்ளியின் பெயரை நம்மால் பார்க்கமுடியும்.

இன்று வரையிலும் பள்ளி நிர்வாகம் தனியாரிடம் தான் இருக்கிறது. பள்ளியை கட்டிக் கொடுத்த அந்த புண்ணிய ஆத்மா இன்றும் சொர்க்கத்தில் இருக்கக்கூடும். இன்று வரையிலும் அரசாங்க பங்களிப்போடு தான் நடந்து கொண்டுருக்கிறது. நான் பார்த்தவரைக்கும் எந்த பாரபட்சமும் இல்லாமல் தான் நிர்வாகம் இருந்தது. இன்று பல தலைமுறைகள் மாறி இப்போது பெண்கள் உயர்நிலை பள்ளியாக மாறியுள்ளது. பணிமாறுதல் காரணமாக வந்த ஆசிரியர்கள் முதல் உள்ளேயே பணிபுரிந்து கொண்டுருக்கும் ஆசிரியர்கள் வரைக்கும் ஓய்வு பெறும் வரைக்கும் இருந்திருக்கிறார்கள்.

ஆசிரியர்களுக்கு பெரும்பாலான மாணவர்களின் குடும்ப பின்புலம் அத்துபுடியாக இருக்கும். மிக நெருக்கமான மாணவர்களை ஜாதிப் பெயரைச் சொல்லி, தங்களுக்குப் பிடித்தமான நக்கல் வார்த்தைகளையும் கொண்டு அழைப்பார்கள். இன்றுள்ள பிசிஆர் சட்டமெல்லாம் முப்பது ஆண்டுகளுக்கு முன் இல்லை.

பக்கத்தில் உள்ள அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தொடக்க காலத்தில் இந்த பள்ளிக்கூடம் ஒரு பெரிய வரப்பிரசாதம். ஆனால் கிராமத்தில் இருந்து வந்து படித்த பலரும் தினமும் ஏதோவொரு வகையில் பிரம்படி வாங்காமல் போவது அரிதாக இருக்கும்.  முக்கியமாக வீட்டுப்பாடத்தை எழுதி வராதவர்களும், ஒப்பிக்கத் தடுமாறுபவர்களும் சில சமயம் உதையும் சேர்த்து வாங்குவதுண்டு. வயலும் வாழ்வுமாய் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையில் வீட்டுப் பாடங்களுக்கு முக்கியம் குறைவு.  ஆனால் இது போன்ற சூழ்நிலையில் வளர்ந்து, வாழ்ந்து வந்த வலையுலக ஜாம்பவான்கள் பலரும் இதிலிருந்து மீண்டு வந்து இன்று உன்னத நிலைமையை அதிலும் உச்சத்தையும் அடைந்துள்ளார்கள்,

பள்ளியின் உள்ளே நுழைந்ததும் அரைவட்ட வடிவ சிமெண்ட் தளமும் நடுவில் கொடியேற்று மரமும் இருக்கும். வாரத்தின் தொடக்க நாளில் இரண்டு பக்கமும் உள்ள அரைவட்ட வடிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் விரைப்பாக நின்று கொண்டு இருப்பார்கள். கணீரென்று குரல் வளம் உள்ள ஒரு மாணவன் நடுவில் தலைமையாசிரியர் அருகே நின்று கொண்டு அருகில் உள்ள பத்து வீடுகளுக்கு கேட்கும் அளவிற்கு உறுதிமொழி சொல்ல வேண்டும்.

நான் பலமுறை சொல்லியுள்ளேன். இந்தப் பகுதிக்கு மேலே உள்ள திண்டு போன்ற பகுதியில் மற்ற மாணவர்களும் ஏனைய ஆசிரியர்களும் நின்று கொண்டுருப்பார்கள். கொடி வணக்க பாடல் எல்லோரும் சேர்ந்து பாட உடம்பில் உள்ள சோம்பேறித்தனம் நீங்கி புத்துணர்ச்சியாய் அந்த வாரம் தொடங்கும். ஆசிரியர் வராத நாட்களிலும், மற்ற நேரங்களிலும் இந்த நுழைவு பகுதிகளில் அமர்ந்து கொண்டு சப்தம் போட்டு வாய்ப்பாடு சொல்லவேண்டும்.
ஓரோன் ஒன்னு.  ஈரோன் ரெண்டு என்ற மொத்த மாணவர்களின் சப்தமும் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டுருக்கிறது.

கொடிகம்பத்துக்கு ஒரு பக்கவாட்டில் மகிழம்பூ மரம். அதனை ஒட்டிய எல்லைச்சுவற்றின் மேல் பெரிய மணி கட்டி தொங்கவிடப்பட்டுருக்கும்.  இந்த மணி எதற்காக என்று எனக்குத் தெரியாது.  ஆனால் நான் படித்த எட்டு வகுப்புகள் வரைக்கும் அந்த மணியை விடுமுறை நாட்களில் நண்பர்களின் சேர்ந்து அடித்து பார்த்ததோடு சரி.  வேறு எந்த நாளும் அந்த மணி ஒலித்து நான் பார்த்ததில்லை. மகிழம்பூ மரத்திற்கு கீழே இருக்கும் இடத்தில் தான் ஒவ்வொரு தினத்தின் காலை நேரத்திலும் நான் புளியங்கொட்டை வைத்து விளையாடி டவுசர் பைக்குள் சேர்த்த பொக்கிஷம் வகுப்பு முடியும் வரை தொங்கிக் கொண்டுருந்தது. அந்த சலசலப்பு சத்தம் தான் உடன் படித்த பலரின் பொறாமையை உருவாக்கியும் இருக்கிறது.

மகிழம்பூ மரத்தின் எதிர் புறம் ஒரு கேணியும் அதனை ஓட்டிய பின்புற சந்தும் உண்டு. இந்த சந்தின் உள்ளே நுழைந்தால் பள்ளியின் பின்புறத்திற்கு நம்மால் சென்றுவிட முடியும்..  பின்னால் தான் சத்துணவுக்கூடம்.  இதனை ஒட்டி தொடங்குவது தான் விளையாட்டு மைதானம். அதனை தாண்டி பக்கவாட்டுப் பக்கம் வந்தால் பெரிய கால்வாயும் அதனை ஓட்டிய கொக்குமரம் இருந்த மற்றொரு தோட்ட வீட்டின் எல்லைப்புறமும் தொடங்கும்.  வீடு அருகில் இருந்த காரணத்தால் ஒரு நாள் கூட நான் மதிய உணவை சாப்பிடதில்லை.

ஆனால் கோதுமையை அளக்க, மூட்டையை நகர்த்துபவர்களுக்கு உதவ என்று வகுப்புறைக்குச் செல்லாமல் சட்டி முட்டி பாத்திரங்களுடன் உருண்டு புரண்டது உண்டு. அதிகபட்சம் மூட்டையிலிருந்து எடுத்து சாப்பிடும் அந்த கோதுமையே எனக்கு போதுமானதாக இருந்தது. பின்புறம் உள்ள சமையல் பகுதியில் வெந்த கோதுமையை சுவைத்து பார்த்ததும், சூடு பொறுக்காமல் கதறியதும் இப்போது நினைவுக்கு வருகின்றது.

முதல் வகுப்புக்கு உள்ளே அழைத்துச் சென்றதை நினைவிடுக்கில் இருந்து மீட்ப்போமா? அது மறந்து போன இறந்தகாலம். ஆனால் அதுதான் இன்றைய வாழ்க்கையின் அஸ்திவாரம்.

23 comments:

ஜோதிஜி said...

தமிழ்மணம் 2010 விருதுக்காக கலந்து கொண்ட தேவியர் இல்லத்தின் மூன்று தலைப்புகளும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. மூன்றாவது கட்டத்திற்கு நகர்த்த உதவிய அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றி.

உமர் | Umar said...

அடுத்ததும் தொடரா?

தொடருங்க... தொடருங்க.!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நீங்க சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து கொண்டேன்.

அந்த ஊரைப் பற்றி ஒவ்வொரு நுட்பமான விசயங்களையும் பதிவு செய்யுங்கள்.

உங்கள் பள்ளியை கண் முன்னே நிறுத்து ஆரம்பித்துள்ளீர்கள். தொடருங்கள்.

உமர் | Umar said...

வெட்டிக்காடு தொடர்ந்து வாசிச்சாச்சு. ஆனா தெக்கிக்காடு வாசிக்கலையே.

புதையல தோண்டி எடுத்து படிச்சிர வேண்டியதுதான்.

Anand said...

சிவகங்கை மாவட்டத்தில் எந்த ஊர் அது?

சி.பி.செந்தில்குமார் said...

sweet remembarance arraising while studying this post sir

Unknown said...

ஜோதிஜி சாரோட ஆட்டோகிராப் நல்லா இருக்குங்க சார் :-)

திருநாவுக்கரசு பழனிசாமி said...

இனிமையான நினைவுகள்..தொடருங்கள்

shanmugavel said...

மனங்கவர்ந்த பதிவு.விருதுக்கு வாழ்த்துக்கள்.

ஹேமா said...

வாழ்த்துகள் ஜோதிஜி....ஒரு முடிவோடதான் இருக்கீங்க.இருங்க.வீட்ல 4 தேவியர்கள் என்ன செய்றாங்கன்னே தெரில !

http://rajavani.blogspot.com/ said...

மனசுல இருக்குற வேகம் முகத்தில் தெரியவில்லை.
ரொம்பவும் தன்னடக்கம் தோன்றுகிறீர்கள் அன்பின் ஜோதிஜி.

தேவியர் மூவரில் இளையவர் உங்களை உண்டு இல்லை என்று பண்ணிவிடுபவர். நடுவர் அமைதி மூத்தவர் கூர்மை செயல்திறன் அன்பின் ஜோதிஜி.

தங்களுடைய புகைப்படத்தையும் தேவியர் மூவரின் புகைப்படத்தையும் பார்த்ததின் விளைவு மேற்சொன்ன கருத்து.

தங்களுடன் சேர்ந்து பயணிக்கிறேன் அன்பின் ஜோதிஜி.

அமுதா கிருஷ்ணா said...

அசத்தலான ஆரம்பம்.

எஸ்.கே said...

நான் ஒன்னாவது சேருவதற்காக எங்கப்பா என்னை பள்ளியில் விட்டுச் சென்றபோது பயங்கரமாக அழுதேனாம். எனக்கும் லேசாக ஞாபகம் உள்ளது!

வாழ்வில் பள்ளிக்காலங்கள் மறக்கமுடியாதவை! இனிமையானவை!

தமிழ் உதயம் said...

கிராமம் சார்ந்த பள்ளி என்பதால் இத்தனை வருணனை... இத்தனை அனுபவம், இத்தனை பகிர்வு... ஆட்டோவில் போய் ஆட்டோவில் வந்திறங்கும் குழந்தைகளுக்கு கிடைக்காத அழகான வாழ்க்கை இது.

Thekkikattan|தெகா said...

ஆஹா! அடுத்து டவுசர் பாண்டீ நாளுக்கு போயாச்சா ;-)

என்ன இருந்தாலும் நான் எழுதியிருந்ததிலே இவ்வளவு நுணுக்கம் கலக்கவில்லை. நீங்க சுற்றுப்புறச் சூழலையிம், மண், செங்கல் முதற்கொண்டு எல்லாவற்றையிம் ஆட்டையில சேர்த்துக்குவீங்க... இந்த மாதிரியான நினைவோடைன்னா அது தனியா அடிச்சுத்தான் ஆடணும்.

நீங்க கலக்குங்க... என்னது மதிய உணவுக் கூடத்தில வெறும் கோதுமை சாப்பிட்டதோட அவ்வளவுதானா? சமைச்சதை அந்த வாசத்தோட அதன் மேலே சர்க்கரையைத் தூவி பசங்களோட ‘பகிர்ந்துண்டு பல்லூயிர்...” பாடிட்டு சாப்பிட்ட அனுபவம் மிஸ்ஸிங்கா ... :D

Chitra said...

அருமையான தொடர்.

தமிழ்மணத்துக்கு பாராட்டுக்கள்!

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!

Bibiliobibuli said...

அடடா இது உங்க "பள்ளிக்கூட இதிகாசமா"!! கட்டடங்களும் உங்கள் பதிவில் கதை சொல்லும் போலிருக்கிறது. தொடருங்கள்...

நீங்க கோதுமை சாப்பிட்டா வளந்தீங்க. அப்போ நீங்க ஒரு "கோதுமை Boy" ன்னு சொல்லுங்க :))

arasan said...

பகிர்வுக்கு மிக்க நன்றிங்க

தாராபுரத்தான் said...

ஆவலோடு எதிர்பார்க்கும்...உங்கள் சுனாபானா

ஜோதிஜி said...

வாங்க வாங்க சுனாபானா. அட பேரே நல்லாத்தான் இருக்கு அய்யா. நன்றி அரசன். ரதி பள்ளிக்கூட இதிகாசம். பெயரே நல்லாயிருக்கே. கோதுமை பையனே இல்லையோ கொஞ்சம் நிறமாத்தான் இருந்தேன். வாழ்த்துகள் சித்ரா.

ஜோதிஜி said...

தெகா........ நீங்க சொன்ன ஒரு விசயத்தை மறந்து விட்டேன் என்ற ஆதங்கத்தை உருவாக்கி விட்டுட்டீங்க.
நன்றி தமிழ்உதயம். நீங்கள் சொன்னது உண்மைதான்.
எஸ்கே உங்கள் விமர்சனம் மூலம் பழைய சம்பவங்கள் மனதில் வந்து போகின்றது. வாங்க அமுதா கிருஷ்ணன்.

தவறு ரொம்பவே பயமுறுத்துரீங்க..... என்னமோ நடக்குது மர்மம் போல் சொல்றீங்க.

ஜோதிஜி said...

ஹேமா ராசாத்திகளுக்கு எப்போதும் பிரச்சனையில்லை. ராசாவுக்கும் ராணிக்கும் தான் (?)

நன்றி சண்முகவேல். திருநாவுக்கரசு. சுரேஷ், செந்தில்,

செந்தில்வேலன் உங்கள் விமர்சனத்தை கண்டபிறகு என்னுடைய உழைப்பு அதிகம் தேவை என்பதை உணர்ந்து கொண்டேன்.

கும்மியாரே எனக்கு கொடுத்த வாக்கு மறக்கமாட்டீர்கள்தானே?

Jaleela Kamal said...

நல்ல விளக்கவுரை.
வாழ்த்துக்கள்