Sunday, July 11, 2010

நாம் உரமாகிப் போனோமா?

நண்பருக்கு அந்த அழைப்பு வந்த போது மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தார்.  ஏதோ ஒரு பெரிய திமிங்கலம் சிக்கிவிட்டது என்ற நம்பிக்கை.  பல நாடுகளுக்கும் ஆய்த்த ஆடைகளை ஏற்றுமதி செய்து கொண்டுருக்கிறார்.  திருப்பூருக்கு வரும் எந்த நாட்டு இறக்குமதியாளர்களும் இங்குள்ள வேலன் என்ற நட்சத்திர விடுதியில் தங்குவர்.  அங்கிருந்து தான் நண்பருக்கு அழைப்பு வந்தது. 
"ஜெர்மனி நாட்டில் இருந்து உங்களை சந்திக்க ஒருவர் வந்துள்ளார். நாளை காலை பத்து மணிக்கு முகப்பு அறைக்கு வந்து சந்திக்க வாய்ப்பு இருந்தால் உங்கள் சம்மதத்தை தெரிவியுங்கள் "

நண்பருக்கு கசக்கவா செய்யும்.  மறுநாள் காலை அங்கே சென்று காத்திருந்த  போது தலைகீழ் விதிகள் அவரை சிரிக்க வைத்தது.  வந்தவர் ஜெர்மன் நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து கொண்டுருக்கும் ஒரு பேராசிரியை.  55 வயது பெண்மணி.  சமூக ஆர்வலர் அதற்கும் மேலாக இந்த ஆடைத் தொழிலில் புதிதாக பீதியை கிளப்பிக் கொண்டுருக்கும் "உரம் போடாமல் வளர்த்த பஞ்சில் இருந்து உருவாக்கிய ஆடைகள் " என்ற ஆராய்ச்சி கட்டுரையை தயாரித்துக் கொண்டு இருப்பவர்.  இதன் காரணமாக வளர்ந்து கொண்டுருக்கும் நாடுகளில் ஆடைத் தொழிலில் ஈடுபட்டுருக்கும் அத்தனை நகரங்களையும் பார்வையிட்டுக் கொண்டுருப்பவர். சந்தையில் கூவி விற்கும் இந்த முட்டாள் தனத்த்திற்குப் பிறகு உள்ள நதி மூலத்தை காண்பதற்காக ஒவ்வொரு நாடாக பயணம் செய்து கொண்டுருப்பவர். 

எளிமையாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இயற்கை உரங்கள் மூலம் வளர்க்கப்பட்ட செடியில் கிடைத்த பஞ்சும், அதுவே இறுதியாக ஆடையாக உருவாக்கம் அடையும் வரைக்கும் எந்த வித ரசாயன கலவைகள் சேராமல்  சந்தைக்கு வந்தடைய வேண்டும்.   இதைத்தான் விற்பர்கள் பல்வேறு விதமான விளம்பரங்கள் மூலமாகவும் ஜாலக்கு வார்த்தைகள் சொல்லி  விற்றுக்கொண்டு கொள்ளை லாபம் சம்பாரித்துக் கொண்டுருக்கிறார்கள்.  அத்தனையும் டூப்பு........ ஆடைகளில் சாயம் ஏற்றும் போது ஏதோ ஒரு வழியில் செயற்கை சமாச்சாரங்கள் கலந்தே தான் தீரும். ஆனால் இதற்கென்று செய்யப்படும் விளம்பரங்கள்? 

இதற்கென்று தனியாக உருவாக்கப்பட்ட சந்தைகளும் அதைச் சார்ந்து பல பன்னாட்டு நிறுவனங்களும் இதற்கென்று தனியாக செயல்பட்டுக் கொண்டுருக்கிறது.  மேலைநாடுகளில் உள்ள கலாச்சாரம் என்பது நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது.  தீப்பிடித்த மாதிரி யோகா பின்னால் ஓடுவார்கள். அதற்குப் பிறகு வேறு ஒன்றைத் துரத்திக் கொண்டுருப்பார்கள்.  மொத்தத்தில் அவர்கள் செலவழிக்க ஏதோ ஒன்று தேவையாய் இருக்கும். அதன் ஒரு பகுதி இப்போது இந்த இயற்கை உரம் மூலமாக வளர்க்கப்பட்ட காய்கறிகள் முதல் ஆடைகள் வரைக்கும் சந்தையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கிறது.   இதை அடிப்படையாக வைத்து மேலை நாடுகளில் ஒரு கூட்டம் பல்வேறு விதமாக கூவி அழைத்துக் கொண்டு இருக்கிறது.  
" இயற்கை வழியின் மூலமாக உங்கள் குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்த உத்தரவாதம் அளிக்க " என்று பல விளம்பரங்கள் இப்போது மேலை நாடுகளில் கொடி கட்டி பறந்து கொண்டு இருக்கிறது.  ஆனால் இதற்குப் பின்னால் அத்தனையும் வடிகட்டிய முட்டாள் தனம்.  சிலரின் லாபத்துக்காக பல நாடுகளின் மொத்த வாழ்வாதாரமே பறி போய்க் கொண்டு ருக்கிறது என்பது தான் உண்மை.

நண்பர் அந்த பெண்மணியின் அழைப்பை ஏற்று ஆர்வமாய் சென்றது ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே.  ஜெர்மனியில் இருந்து வந்தவர் நமக்கு ஒப்பந்தம் தர வந்துள்ளார்.  எவர் மூலமாகவோ தொலைபேசியைப் பெற்று நம்மை அழைத்துள்ளார்.  எப்படியும் ஒப்பந்தம் கிடைத்து விடும் என்று எதிர்பார்ப்புடன் சென்றவருக்கு அவர் உரையாடத் தொடங்கிய போதே அத்தனையும் புரிந்து விட்டது.  வருத்தமாக இருந்தாலும் அவருடன் இரண்டு மணி நேரம் பேசி முடித்து அவர் கேட்ட அத்தனை தகவல்களையும் கொடுத்து விட்டு  சோர்வுடன் வெளியே வந்தார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நாம் சில பட்டிக்காட்டு சமாச்சாரங்கள் மூலம் உணர்ந்து கொள்ளமுடியும். 

என்னுடைய ஒவ்வொரு வகுப்பு பள்ளி இறுதி ஆண்டு விடுமுறையின் போது கட்டாயமாக அந்த விடுமுறை முழுவதும் வயலுக்குச் செல்ல வேண்டும்.  கூட்டுக் குடித்தன வாழ்க்கையில் ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு விதமான பணி.  மறுக்க முடியாது.  மறுத்தால் இரண்டு நாள் ஆனாலும் வீட்டுக்குள் நுழைய அனுமதி கிடைக்காது. இது போக அரேபிய நாட்டு தண்டனைகள் படுத்தி எடுத்து விடும். பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முப்பது ஏக்கர் பரப்பளவு உள்ள அந்த வயலில் எனக்குப் பிடித்த இடமே இரண்டு பெரிய கிணறு தான்.  கண்கள் முழுக்க பச்சை யாக மாறி விடுமோ என்கிற அளவிற்கு மொத்த பரப்பளவும் பச்சை பசேல் என்று இருக்கும்.  புத்தகங்கள் எடுத்துப் போனாலும் படிக்க முடியாது.  தொடர்ச்சியான வேலைகள் துரத்திக் கொண்டேயிருக்கும்.

மின்சாரம் இல்லாவிட்டாலும் கூட மற்றொரு டீசல் மூலமாக இயங்கும் பம்பு செட் என இரண்டு பக்கமும் இரண்டு மூலை யிலும் இருந்த காரணத்தால் வயலில் வருடம் முழுக்க ஏதாவது ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கும்.  வயலைச் சுற்றியுள்ள கிராமத்த பசங்களுக்கும், உள்ளே பணிபுரிபவர்களுக்கும் எங்களின் மிகப் பெரிய கிணறு வரப் பிரசாதம்.  கிணற்றுக்கு அருகே உள்ள உதியமரத்தின் கிளைகளில் ஏறி நின்று தொம் தொம் என்று குதித்து ஆழம் வரைக்கும் சென்று விளையாடுவார்கள்.  விதவிதமான அவர் களின் டைவ்களும், பல முயற்சிகளை யையும் நானும், சகோதர்களும் பம்பு செட் தொட்டியில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்போம்.
உடற்பயிற்சி என்பது என்னவென்று தெரியாமலே வாழ்ந்த அவர்களின் உடம்பு சும்மா கிண்ணென்று இருக்கும்.  அவர்கள் வீட்டில் வளர்க்கும் ஒவ்வொரு நாய்களும் அவர்களின் சொன்ன பேச்சை கேட்கும். வயலில் உள்ளே திரியும் எலிகளை நாய்கள் கவ்விப் பிடித்து கொண்டு வர குளித்து முடித்து விட்டு சுடச்சுட சுட்ட இறைச்சியை திங்கும் போது காத தூரம் ஓடிவந்து விடுவோம்.  அவர்களின் நக்கலும் நையாண்டியும் நாள் முழுக்க கோபமாக இருந்தாலும் ரசிக்கக்கூடியதாய் இருக்கும். எங்களுடைய பயமெல்லாம் எந்த சித்தப்பா எப்போது உள்ளே வருவார்கள் என்பதிலேயே குறியாய் இருக்கும்.

அறுவடை முடிந்தவுடன் ஆடுமாடுகள் முதல் வெள்ளாடுகள் வரைக்கும் உள்ளே திரிந்து கொண்டுருக்கும்.  மாட்டுச்சாணி மற்றும் புழுக்கையும் இது போக ஊர் விட்டு ஊராக நகர்ந்து கொண்டு ஆட்டு மந்தைகளை வைத்து இருப்பவர்கள் வயலில் வந்து "கிடாப்பு" வந்து போடுவார்கள்.  அதிகபட்சம் பத்துநாட்கள் அவர்களின் மொத்த ஆடுகளும் உள்ளே மேய்ந்து கொண்டு இருக்கும்.  அடுத்த பயிர் செய்ய ஏற்பாடு நடப்பதற்குள் பல விதமாக அந்த மண்ணுக்கு இயற்கை உரம் சேர்ந்து இருக்கும்.  உழுவதற்கு முன்பு கொளஞ்சி இலைகளைப் போட்டு ஒரு வர உழுதல் என்பது நடக்கும். வயலின் உள்ளே வந்து கொட்டப்படும் இலைதலைகள் அத்தனையும் உரமாக மாற்றப்படும்.  இத்தனை முயற்சிகளுக்குப் பிறகு தான் அடுத்த கட்ட நகர்வு நகரும்.

ஏற்கனவே இழந்து போயிருக்கும் மண் சத்துக்களை மறுபடியும் ஓரளவிற்கு உருவாக்கி நாற்றுப் பருவத்தில் தேவைப்படும் சமயத்தில் மட்டுமே செயற்கை உரங்கள் போடப்படும்.  நான் பார்த்த அதிகபட்ச உரங்கள் பாக்டம்பாஸ், பாலிடால்,மற்றும் யூரியா.  ஒவ்வொன்றும் வயலில் உள்ள அறையில் பூட்டப்பட்டு தயாராக இருக்கும்.  தேவைப்படும் சமயத்தில் மட்டும் சித்தப்பாக்கள் மட்டுமே வந்து எடுத்து ஆட்களிடம் கொடுப்பார்கள்.  ஆனால் இன்று அத்தனையும் மாறிவிட்டது.
இன்று விவசாயத்தில் நான் காண்பது என்ன? ஒவ்வொரு அடிக்கும் ஏதாவது ஒரு உரத்தைப் போட்டு தான் விளைச்சல் நடந்து கொண்டு இருக்கிறது. விளைகின்ற நிலத்தில் நாம் உரம் என்பதை போடாவிட்டால்   மகசூல் என்பது இல்லவே இல்லை என்கிற அளவிற்கு எங்கெங்கு காணிணும் உரமயமாகிவிட்டது. செடி  உருவாக்க,உருவான பயிரை  வளர்க்க, செழிக்க, அதிக மகசூல் அதிகம் தர என்று ஒவ்வொரு அரிசியுமே ஒரு சயனைடு குப்பியாகவே இருக்கிறது.  நான் பார்த்தவரைக்கும் விதை நெல் என்பதற்கு வீட்டுக்குள் ஒரு குதிர் போன்ற மண்ணால் செய்யப்பட்ட 6 அடி உயர குடுவை இருக்கும்.  எப்போதுமே அதில் விதை நெல் நிறைந்து வழிந்து கொண்டுருக்கும்.  அதில் இருந்து தான் அடுத்த கட்ட விளைச்சலுக்கு உண்டான விதை எடுப்பார்கள்.  இப்போது நடந்து கொண்டு இருப்பதைப் போல விதைகளுக்காக எந்த வெளிநாட்டு நிறுவனங் களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற விதைகளை வாங்காமல் அவரவர் மண்ணில் விளைந்த விதையே ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையையும் சிறப்பாக வாழ வைத்துக் கொண்டுருந்தது.

கதிர் அறுவடையாகும் சமயத்தில் தான் மதிய நேர உணவு வயலில் தயார் செய்து கொடுப்பார்கள்.  உழைப்பவர்கள் சாப்பிடும் சாப்பாடு என்பது நடிகர் ராஜ்கிரண் திரைப்படங்களில் சாப்பிடுவது போலவே இருக்கும். ஆனால் சாப்பாட்டைத் தவிர வேறு எந்த கண்ட கருமாந்திரங்களையும் சாப்பிடாமல் வளர்ந்தவர்கள் சாப்பிடும் சாப்பாடு என்பது மூன்று ஆள் சாப்பாட்டை ஒரு ஆள் சாப்பிடுவார்கள். அந்த உடம்புக்கு தினசரி சாப்பாடு என்பதெல்லாம் கஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம்.  இது தான் அவர்களின் பரிபூரண திட்டமிட்ட உணவு.  அவர்கள் உழைப்புக்குத் தேவையான அத்தனை சக்தியும் இந்த சோற்றில் தான் இருந்தது.  அசைவ உணவு என்பது ஏதாவது விசேடம் அல்லது எதிர்பாராத விருந்தாளிகள் வரவு போன்ற சமயங்களில் தான் உள்ளே திரிந்து கொண்டுருக்கும் கோழிகள் குழம்பாக மாறும்.

இன்று உணவு என்றால் நோய் என்று அர்த்தம்.  அந்த அளவிற்கு செயற்கை உரங்கள் போடப்பட்டு நிலமும் பாழாகிவிட்டது.  உண்பவர்கள் உடம்புகளிலும் கண்ட கண்ட ஆச்சரியமான நோய்களும் வந்து கொண்டே இருக்கிறது.

இன்று நாம் விளைவிக்க தேவைப்படும் விதைகள் முதல் அதை வளர்க்க தேவைப்படும் உரங்கள் வரைக்கும் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனம் தான் நேரிடையாகவோ மறைமுகவோ இருக்கிறார்கள்.   வந்து கொட்டப்படும் அத்தனை உரங்களாலும் மண் முழுக்க மலடாகி விட்டது.  உழைத்துப் பார்த்தவர்களும் களைத்துப் போய்விட்டார்கள்.  இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் புகழ் உள் நாட்டுக்குள் ஒரு மாவட்டத்திற்குள் இருந்து அடுத்த மாவட்டத்திற்குள் நகர்வதை விட செயற்கை விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் புகழ் தான் இலங்கை வரைக்கும் பரவி இருக்கிறது. 

 நாமும் ஒரு காரணமாகத்தான் இருக்கிறது.  எல்லாமே அவசரம். எப்போதும் அவசரம். வாங்கி உண்ணும் உணவு கூட தொண்டைக்குழிக்குள் இலகுவாக இறங்க வேண்டும். கடித்து திங்கக்கூட நமக்கு இன்று நேரம் இல்லை.  இந்த ஒரு காரணமே இன்றை கோழி உணவில் சக்கைப் போடு போட்டுக் கொண்டுருக்கும் கெண்டகி அமெரிக்க நிறுவனம்.
அப்பனும், பாட்டனும், பூட்டனும் கற்றுக் கொடுத்த இயற்கை விவசாய உணவு முறையை இன்று வெளிநாட்டு மக்கள் மீண்டும் வந்து கற்றுத் தந்து கொண்டு இருக்கிறார்கள்.  நாமும் அவர்கள் விரும்பும் " இயற்கை உரத்தைப் போட்டு உருவாக்கப்பட்ட பொருட்கள் " என்று அவர்கள் விரும்பும்படி நடந்து கொண்டு ஏற்றுமதி செய்ய வேண்டிய சூழ்நிலை.  இந்த இடத்தில் சிரித்து நம்மை நாமே ஆற்றாமைபடுத்திக் கொள்ள வேண்டிய ஒரு சமாச்சாரமும் இருக்கிறது.

வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்படும் விதைகள், அவர்கள் தரும் உரங்கள், அவர்கள் சொல்லிக்கொடுக்கும் வழிமுறைகள் என்று அத்தனையும் நாம் கடைபிடித்தால் கூட இங்கிலாந்து, நெதர்லாந்தில் இருந்து செயல்படும் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் சான்றிதழ்கள் வாங்கினால் இது செல்லுபடி யாகும். பஞ்சுக்கு, நூலுக்கு, சாயம் ஏற்றும் போது, இறுதியாக ஆடைகளுக்கு என்று ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு சோதனை.  ஒவ்வொன்றாக தடை தாண்டிய ஓட்டப்பந்தயம் போல் ஜெயித்து வந்தால் தான் இது இயற்கையில் விளைவிக்கப்பட்ட சமாச்சாரம் என்று அவர்கள் உலகத்திற்கு முரசறிவிப்பார்கள்..  ஒவ்வொரு கட்டத்திலும் மிகப் பெரிய தொகை கொடுத்து அவர்களிடம் நாம் சான்றிதழ் வாங்க வேண்டும். கதை எப்படி போகின்றது பார்த்தீர்களா? இல்லாவிட்டால் போடா போடா புண்ணாக்கு கதை தான். வளர்ந்து கொண்டுருக்கும் நாடுகளில் வாழ்பவர்களின் வாழ்க்கை முழுவதும் உரமாகவே மாறிவிட வளர்ந்த நாடுகள் விளைச்சலை அட்டகாசமாக அறுவடை செய்து கொண்டுருக்கிறார்கள்.

17 comments:

லெமூரியன்... said...

ஹ்ம்ம்...! அருமையான நடைல தேர்ந்த ஒரு இடத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது தொடர்...!
பாதுகாக்க பட்ட விதைநெல்கள் சாமிநாதனால் மிரட்டி பிடுங்கி அளிக்கப்பட்டது என்று கேள்வி....
எல்லாம் நம் கைகளை விட்டு நழுவிக் கொண்டே இருக்கிறது.......
காங்கேயம் காளைகள் இனமே இன்று இல்லை.....!
விதகளுக்கும் இன்று அதே கதிதான்.......! எங்கோ ஒரு மூலையில் கண்டிப்பாக ஒட்டு ரகம் இல்லாத பாரம்பரிய விதை நெல் இருக்கும் என்று மனதில் சின்னதாக ஒரு ஆசை இருந்து கொண்டே இருக்கிறது.....!
எல்லாவற்றையும் அடகுவைத்து பின்பு நமக்கென்று அடையாளமாக எது இருக்கபோகிறதோ???????

Starjan (ஸ்டார்ஜன்) said...

விவசாயத்தை பற்றியும் விவசாயிகளின் வாழ்க்கையை பற்றியும் தெளிவாக அறிந்து கொண்டேன். இது நல்ல அனுபவப்பூர்மான இடுகை. எத்தனை கஷ்டங்கள்.. நாம் இன்று சாதாரணமாக உண்ணும் உணவில் எத்தனைபேர் உழைப்பு அடங்கியிருக்கிறது. அவர்களை யாரும் மதிப்பதில்லை.

இன்னும் நிறைய தகவல்கள் அறிந்துகொள்ள ஆசை.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

மிக நல்ல பகிர்வு .நிறைய பேசப்படவேண்டிய ஒன்று .

அது ஒரு கனாக் காலம் said...

பதிவு ரொம்ப அமக்களமா போகுது என்றாலும் .... நண்பன் என்ற முறையில் :-

நான் பார்க்கும், நான் படிக்கும் , நான் கேட்கும் எல்லாருமே இப்போது,
1 ) நாங்கல்லாம் சாதாரண சாப்பாடு தான் சாப்பிட்டோம், டாக்டர் கிட்ட போனதே கிடையாது , இப்போ பாரு குழந்தைகளை ...
2 ) நாங்கல்லாம் வீடு பாடம் ன்னு செய்ததே கிடையாது , இப்போ பாரு எவ்ளோ ஹோம் வொர்க் .
3 ) அப்போல்லாம் எங்ககிட்ட பைசாவே கிடையாது, இப்போ பாரு பசங்களை - கார்ல போகுது , ஹோட்டல்ல சாப்பிடுது ...

4 ) நாங்கெல்லாம் இப்பிடியா டிரஸ் போட்டுகிட்டோம் ... இப்போ பாரு எல்லாமே தெரியுது !!!!
(இந்த வசனங்கள் நானும் சொல்லக்கூடியது !!!!!!)


இந்த கால இளைஞ்சர்களுக்கு பொறுப்பே கிடையாது, கற்று கொள்வதில் ஆர்வமே இல்லை, மரியாதை இல்லை , பொழுது போக்குகளில் தான் ஆர்வம், உழைப்பு இல்லை, முனைப்பு இல்லை - சில நூறு வருடங்களுக்கு முன் அரிஸ்ட்டாட்டில் சொன்னதா ஏதோ ஒரு பதிவல படிச்சேன்.

காலம் மாறுகிறது - வெளிநாட்டுகாரன் ஏமாற்றுகிறான் இதில் எந்தவித சந்தேகமும் இல்லை - அவர்கள் சொல்லி தான் நாம் யோகாவின் பெருமைகளை அறிகிறோம், நம் இசையின் /கலையின் பெருமைகளை அறிகிறோம் - யாரோ நம்மை மழுங்க அடிக்கிறார்கள் - ஆனால் அதற்க்கு இடம் கொடுப்பது நாம் மட்டுமே

ஜோதிஜி said...

லெமூரியன்..........

நமக்கென்று ஒரு அடையாளம் இறுதியில் கிடைக்கும்.
எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இங்கு வாழமுடியும் என்ற திருவளார் சகிப்பாளர் என்ற பட்டம்.

ஸ்டார்ஜன் நட்சத்திர வாழ்த்துகளுடன் உங்கள் நீண்ட நாளுக்குப் பிறகு வந்தமைக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

நண்டு தங்கள் வருகைக்கு நன்றி.

ஜோதிஜி said...

சுந்தர் இதில் அமர்க்களம் என்று எதுவும் இல்லை. இந்த தலைப்பின் அடிநாதமே நீங்கள் சொன்னது போல் அத்தனைக்கும் ஒவ்வொரு தனிமனிதனுமே காரணமாகும். உண்மையும் கூட. அதையும் தான் குறிப்பிட்டுள்ளேன்.

போன வாரத்தில் நண்பர் அழைத்து ஜெர்மனி பெண்மணி குறித்து சொன்ன போது இதில் சொல்லப்படாத பல பன்னாட்டு நிறுவன விசயங்களை கேட்ட போது எந்த அளவிற்கு அவர்கள் தெளிவாக ஒவ்வொன்றையும் உருவாக்குகிறார்கள் என்பதைக் கேட்டு அதிசயத்துப் போனேன்.

ஒரு குறிப்பிட்ட தரச் சான்றிதழுக்கு மட்டும் அவர்கள் வாங்கும் தொகை அமெரிக்க டாலர் 8500./ அதுவே தேர்ச்சி இல்லை என்றால் உற்பத்தியாளர்கள் நிலைமையை யோசித்துப் பாருங்கள்........ இது ஒன்றுக்கு மட்டுமே?

ஒரு தளத்தில் ராம்ஜியாகூ என்ற நண்பர் விவசாயம் குறித்து எந்த இடுகையிலும் எவரும் எழுதுவது இல்லை என்று உண்மையிலேயே ஆதங்கத்தை பதிவு செய்து இருந்தார். இரண்டையும் யோசித்த காரணமே இந்த பதிவு.

ராம்ஜிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

ஹேமா said...

//" இயற்கை வழியின் மூலமாக உங்கள் குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்த உத்தரவாதம் அளிக்க//

ஜோதிஜி...மயங்க வைகும் இந்த விளம்பரம் ஒரு இதமான கவர்ச்சியாய்த்தானே இருக்கு.

பசுமையா விவசாயமே நடக்குது உங்க பதிவில.நீங்க எழுதுறதை வாசிக்கிற ஆர்வம் எனக்கு.கண்ணும் பசுமையா இருக்கு !

மரா said...

நம்மாழ்வார் நிழற்படத்த போட்டு அவுரு யாருன்னு சொல்லாம விட்டுபோட்டீங்க....பழைய நினைவுகளைக் கிளறும் மற்றுமொரு பதிவு.

ஜோதிஜி said...

ஹேமா பார்த்தீர்களா நீங்களே ஒத்துக் கொண்டீர்கள். சும்மா ஒன்னுமே தெரியாமா எழுதும் போது கோர்த்த இந்த வார்த்தைகளே இத்தனை கவர்ச்சியைத் தருகின்றது என்றால் ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனத்திற்கும் பின்னாலும் உழைத்துக் கொண்டுருக்கும் ஆயிரக்கணக்கான வடிவமைப்பு மற்றும் விளம்பர மக்கள் எந்த அளவிற்கு நம் தலையில் மிளகாய் அரைக்க உழைக்க வேண்டும் (?)

நன்றி மயில்ராவணன். நிச்சயம் எவராவது பின்னூட்டத்தில் கேட்பார்கள் என்று காத்து இருந்தேன். இடுகை எழுத்துக்களைப் போலவே பின்னூட்டத்தையும் தொடர்பவர்கள் பல பேர்கள். புரிந்து கொள்வார்கள். உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.

ஒன்று சேர் said...

அன்பார்ந்த ஜோதிகணேசன்,

பின்னூட்ட நண்பர்கள் சொல்லியது போல் அமர்க்களமாக போய்க்கொண்டிருக்கிறது தொடர் கட்டுரைகள். நாம் காலம் காலமாக கடைப் பிடித்த இயற்கை உரத்தத்துவத்தை இன்று அயலார் வந்து சொல்லித்தர வேண்டியுள்ளது என்பது நிதர்சனமாகிப் போன உண்மை. பலர் ஏற்றுமதி-இறக்குமதி, சாதனையாளராவது எப்படி, நீங்களும் ஏற்றுமதியாளராகலாம் என்றெல்லாம் புத்தகம் போட்டு அதில் ஏற்றுமதிக்கு எங்கே லைசென்ஸ் வாங்க வேண்டும், எந்தப் பொருளையும் ஏற்றுமதி செய்யலாம் என்றெல்லாம் சொல்லிவிட்டு ஆனால் அதில் உள்ள நடைமுறையில் எவ்வளவு அல்லல் பட வேண்டியிருக்கும் என்பதை சொல்ல விட்டுவிடுவார்கள். ஆனால் தங்கள் பதிவுகளில் அல்லல்களை, எதுவும் நினைப்பது போல் எளிதல்ல என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள். சிறிய ஏற்றுமதியாளர்கள் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கியிருக்கையில் போன் வந்து, சென்றமர்ந்து சினிமாப்பட கதை விவாத துவக்கம் போல் ஆனவுடன் அந்த ஏற்றுமதியாளரின் முகம் எவ்வாறு மாறியிருக்கும் என்பதை கூட கற்பனை செய்து பார்க்க வைக்கிறது துவக்க வரிகள். சொல்லும் பொருளை காட்சியாக கண்முன் விரிய வைப்பதுதான் எழுத்தின் வெற்றி. நீங்கள் வயல் வரப்பு காட்சிகைள விவரித்தபோது குறைந்தபட்சம் கமலஹாசன், விஜயகாந்த் நடித்த வயல்காட்சிகளையாவது படிப்பவர்கள் கண்முன் கொண்டுவந்து பார்த்திருப்பார்கள். மான்சான்டோ விதைகளின் அபாயத்தை நேரடியாக சொல்வதோடு இப்படி சுவாரசியமான இடுகைகளின் நடு நடுவே சொல்வதும் பலரை சென்றடையும். - சித்திரகுப்தன்

Thenammai Lakshmanan said...

வித்யாசமான விஷயம் ஜோதிஜி.. அருமையான பகிர்வு..

பின்னோக்கி said...

organic food என்று உரம் போடாமல் விளைவிக்கப்பட்டவைகளை, சென்னையில் விற்கிறார்கள். சாதாரண (உரம் போட்ட) வைகளை விட, 40 சதவிகித அதிக விலையில். எதை விற்று எதை வாங்குகிறோம் புரியவில்லை :(

Karthick Chidambaram said...

//" இயற்கை உரத்தைப் போட்டு உருவாக்கப்பட்ட பொருட்கள் " என்று அவர்கள் விரும்பும்படி நடந்து கொண்டு ஏற்றுமதி செய்ய வேண்டிய சூழ்நிலை. //

கற்றுக்கொடுக்கும் இனம் இப்போது கற்றுக்கொண்டு உள்ளது. அமெரிக்க மண்ணில் குழந்தைகளுக்கு இயற்கை உரமிட்ட உணவுகள் , பால் உற்பத்தி பொருட்களையே பரிந்துரைக்கின்றனர்.

ஒரு இளம் தகப்பனார் நிறைய சொன்னார்.

ஜோதிஜி said...

சித்ரகுப்தன் உங்கள் நீண்ட விமர்சனத்திற்கு நன்றி...

வாங்க தேனம்மை.......

பின்னோக்கி திருப்பூரில் இயற்கை உரம் போட்ட காய்கறிகள் என்று விற்றுக் கொண்டுருக்கிறார்கள். எந்த இடத்தில் விளைவிக்கப்படுகிறது என்று நெருங்கி கேட்டால் சார் கூட்டமா இருக்கு நாளைக்கு வாங்க என்கிறார்கள். பிழைக்கத் தெரிந்தவர்கள்.......

கார்த்திக் உங்களுக்கு தனிப்பட்ட இடுகை இருந்தால் தெரிவிக்கவும். காரணம் இருக்கிறது.........
உங்கள் தொடர் வாசிப்புக்கு நன்றி.......

Karthick Chidambaram said...

என் இடுக்கையை கண்டறிந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி ஜோதிஜி.

Thekkikattan|தெகா said...

வீட்டிற்குள் நிற்கும் குதிரும் (விதை நெல்), பத்தாயமும் மனதில் வந்து போகிறது. இலை, தழைகள், சேமித்து வைத்திருந்த சாணக் குப்பை வண்டி மாடு வைத்து வயலுக்கு எடுத்து சென்றதும் ஞாபகத்தில் வந்து போகிறது-

எல்லாம் என்னவோ இன்னொரு கிரகத்தில் இப்பொழுது நடந்தது மாதிரியே இருக்கு. அவசரத்தில் எங்கே செல்கிறோம்!

அருமையான பதிவு, ஜி! அறியத் தந்தமைக்கு நன்றி! புக்மார்க் துடைத்தழிக்கப்படும் நெல், தான்ய விதைகள்:GM Pollution!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பதிவு ஜோதிஜி.
\\மேலைநாடுகளில் உள்ள கலாச்சாரம் என்பது நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. தீப்பிடித்த மாதிரி யோகா பின்னால் ஓடுவார்கள். அதற்குப் பிறகு வேறு ஒன்றைத் துரத்திக் கொண்டுருப்பார்கள்.//
நிஜம் தான்.. தப்பு செய்துட்டு அய்யோ தப்புனு தெரிஞ்சு அதை தூக்கிப்போட்டுருவாங்க..நாம அவன் செய்தது தான் சரின்னு ஸ்டைலா அதை ஃபாலோ செய்வோம்..:((