Sunday, January 24, 2010

ராஜீவ் காந்தி ஈழ ஒப்பந்த தொடக்க ரகஸ்யங்கள்

இந்திரா காந்தியின் அரசியல் பிரவேசம் என்பது ஒவ்வொரு அடியாக திட்டமிட்டு நகர்த்தப்பட்டது.  அரசியல் புத்தகத்தின் ஒரு பக்கத்தையும் வாசித்து காட்டப்பட்டது. நேரு அருகில் வைத்துக்கொண்டு, செல்லும் இடங்களுக்கெல்லாம் அழைத்துக் கொண்டு சென்றும், தலைவர்களை அறிமுகப்படுத்தியும், சாதக பாதக அம்சங்களையும் விவாத பொருளாக கலந்துரையாடல் மூலம் மொத்த அரசியல் ஞானத்தை கற்றுக்கொள்ள வைத்த காரணத்தினால் மட்டுமே அந்த இரும்புத் தலைமையின் கீழ் இருந்த இந்தியா, எத்தனையோ விமர்சனங்களையும் தாண்டியும் அன்றைய சூழ்நிலையில் இந்தியாவின் மரியாதை உலக அரங்கில் சிறப்பாக இருந்தது.

ஆனால் ராஜீவ் காந்தியின் அரசியல் பிரவேசம் என்பது எதிர்பாரத மந்திர மாங்காய் போல் மடியில் விழுந்த ஒன்று. அவருக்கே விருப்பமில்லாத நிலைமையிலும், விரும்பியே ஆகவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிய காலத்தின் கோலம். சஞ்சய் காந்தியின் அகால மரணத்திற்குப் பிறகு அந்த வெற்றிடத்தை நிறைவேற்ற வேண்டிய அவஸ்யத்தை இந்திரா காந்தி உருவாக்க வேண்டிய காலத்தின் கட்டாயம்.  ஒரு தாய் வயிற்றின் இரு துருவங்கங்களான சஞ்சய் மற்றும் ராஜிவ் என்பது எவரும் நிணைத்தே பார்க்க முடியாத குணாதிசியங்கள், நோக்கங்கள், பாதைகள், கொள்கைகள்.

காரணம் சஞ்சய் காந்தியின் ஆளுமை என்பது இந்திரா காந்தியின் தூக்க இரவுகளை துக்க இரவுகளாக மாற்றியது என்றால் அது உண்மையும் கூட.  நாளொரு பொழுதும் பொழுதொரு வண்ணமும் என சஞ்சய் காந்தியின் மரணம் வரைக்கும் அவர் ஒரு புதிர் தான்.  இன்று வரைக்கும் சஞ்சய் காந்தியின் மரணம் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சு தான்.

ராஜிவ் காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது மென்மையான திரைப்பட கதாநாயகன் போல் மகிழ்ச்சி, காதல், பயணம் என்று பிரதமர் மகன் என்பதற்கு அப்பாற்பட்ட தன்னை சராசரி இந்தியக்குடிமகன் என்பதாக எந்த பந்தா பகட்டும் இல்லாத அளவிற்கு தன்னால் மற்றவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாத அளவிற்கு ஒழுங்கு முறையில் அமைக்கப்பட்ட உன்னதமான தினசரி நடவடிக்கைகளால் அமைக்கப்பட்ட ஒன்று.
அரசியலில் திணிக்கப்பட்டவரை ஒழுங்கு படுத்த, உண்மை அரசியல் தந்திரங்களை கற்றுக்கொடுக்க எவரும் இல்லை என்பதே உண்மை.  பிரதமர் மகன் என்றொரு பார்வை மட்டும் அவரை இளவரசனாக கருதத் தொடங்கினார்களோ தவிர, இந்திரா காந்திக்கு கிடைத்த நேருவின் பாடங்களோ, நேரு அறிமுகப்படுத்திய தலைவர்களும், தலைவர்களுக்கு பின்னாலும் என்ற ராஜ தந்திர நடவடிக்கைகள் என்பதெல்லாம் அவருக்கு கிடைக்கவில்லை.

வானத்தில் பறவை மகிழ்ச்சியாய் பறந்து திரிந்து கொண்டுருந்தவரை ஓர் அளவிற்கு மேல் அவரைக் கட்டுப்படுத்தும் துணிச்சல் எவருக்கும் இல்லை.  அரசியல் வானில் நிரந்தரமாய் பறந்து கொண்டுருக்கும் கோட்டான்கள், வல்லூறுகள், கழுகுகள்,பருந்துகள் போன்றவற்றிடமிருந்து காக்கவும் எவருக்கும் துணிச்சலில்லை.  அவரின் பயண விருப்பம் என்பது தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் தானே ஓட்டிக்கொண்டு வந்த ஜீப் மூலம் மக்களை நேரிடையாக சந்திக்கும் பிரதமராய், ஆண்ட மொத்த பிரதமர்களிடம் இருந்து ஒவ்வொரு நடவடிக்கையும் வித்யாசப்பட்டுக் கொண்டேயிருந்தது.

வசீகரம் என்றொரு வார்த்தையின் மொத்த உருவமாய் வாழ்ந்தவரின் பயண ஆசை என்பது இறுதிப் பயணம் வரைக்கும் குறைந்த பாடில்லை.  இளைஞனின் வேகம்.  எண்ணிலடங்கா இந்தியா குறித்த ஆசைகள்.  ஒவ்வொரு நிகழ்விலும் விவேகம் இல்லாத போதிலும் வீரத்தை வேகம் குறைத்த பாடில்லை.  சோனியா காந்தியின் அழுகைக்குரலும், எதிர்ப்பும், விருப்பமின்மையும் அவரை தடைபோட்டு நிறுத்த முடியவில்லை. ஏறக்குறைய பிசி அலெக்ஸாண்டர் "உங்களுக்காக காத்துக்கொண்டுருக்கிறார்கள்" என்று கையை பிடித்து இழுத்துக்கொண்டு செல்லாத குறையாக ராஜ மகுடம் சூட்டப்பட்டது?

"  போகாதே போகாதே என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்" என்பதை ராஜிவ் காந்தியின் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் பார்த்தால் எளிதில் பலருக்கும் பல விசயங்கள் புலப்படும்.  மொத்த இந்தியர்களின் தலைமைப் பொறுப்பு என்பதை அவர் மிக எளிதாக எடுத்துக்கொண்டதும், பழம் தின்று கொட்டை போட்ட மட்டைகளின் தான் தோன்றித்தனம் போல் வாழ ஆசைப்படாத அவரின் வேகம் என்பது வளர்ந்து கொண்டுருந்த மற்ற நாடுகளின் தலைவர்களுக்கு உள்ளே கிலியடித்துக் கொண்டுருந்ததும் இந்த சமயத்தில் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

நிர்வாகி என்பதால் சீட்டை தேய்த்து ஐந்து வருட காலத்தை முடிப்பவர்கள் என்பதையும் மாற்றி இந்தியா முழுவதும் சுற்றி வந்து, காந்தி போல நேரிடையாக மக்களையும், மக்கள் வாழும் இடங்களையும், முன்னேற்றங்களையும், கொண்டு வாழும் மற்ற சூழ்நிலைகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு மொத்த உழுத்துப் போன பழைய நிர்வாகத்திற்கு புதிய அரிதாரம் பூச ஆசைப்பட்டு ஆசைப்பட்டு ஆண்டு காலம் முழுவதும் அமைதியிழந்த வாழ்க்கையை வாழ்ந்தவர் என்றால் ராஜீவ் காந்தியை தவிர எவரையும் உதாரணம் காட்ட தோன்றவில்லை.

இந்திரா காந்தி ஆட்சியின் போது இன்றைய சூழ்நிலை போல மொத்த உதிரித் தலைவர்களின் ஆட்டம் குறைவு.  அந்த அளவிற்கு அவரின் ஆளுமை இருந்தது.  ஆனால் ராஜீவ் காந்தியின் ஆட்சியும், அவரைச் சார்ந்து இருந்த அதிகார வர்க்கத்தின் தான் தோன்றித் தனமும், உருவான பிரச்சனைகளும், தொடர்ச்சியாக வந்து கொண்டுருந்த உழல் பட்டியல்களும் என்று ஒவ்வொன்றும் அவரை முட்டுச் சந்தில் நிறுத்த அவருக்கு தன்னை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பாக அமைந்தது தான் இந்த இலங்கை பிரச்சனை.  தமிழர்களின் நலன் என்பதோடு தன்னாலான பங்களிப்பு என்பதையும் காலம் முழுக்க இருக்க வேண்டும் என்பதில் உருவான ஆசை தான் இந்த பாகாசுர பிரச்சனையின் மொத்த நீளம் அகலம் தெரியாமல் சாகச மனப்பான்மையோடு உள்ளே இறங்கத் தூண்டியது.

இப்போது இந்த இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டங்களை ஜே.என். தீட்சித் கையாண்டுகொண்டுருக்கிறார்.  இதுவே முதல் சறுக்கு.  காரணம் விவேகம் அதிகமுள்ள இந்திரா காந்தியின் அருகில் இருந்த தமிழர் ஜீ. பார்த்தசாரதியை புறந்தள்ளி மொத்தமாக ஒதுக்கி விட்டு தீட்சித் கை வண்ணம் எல்லா இடங்களிலும் மிளிர்ந்து கொண்டுருக்கிறது.  மறுபக்கம் இன்றும் இருக்கும் நாராயணன்.  இதில் மற்றொரு ஆச்சரியம் தீட்சித்க்கு ஜெயவர்த்னே குணாதிசியங்கள், அவரின் தான் தோனறித்தனங்கள் என மொத்தமும் தெரிந்து போதிலும் இது ஒட்டை விழுந்த பயணிக்க முடியாத படகு என்ற போதிலும் ஏன் இத்தனை ஆர்வமாய் இருந்தார் என்பது இன்று வரைக்கும் மகத்தான ஆச்சரியம்.  இயல்பாகவே முன் கோபியான தீட்சித் மற்ற அதிகாரிகளைப் போல "நான் சொல்வதை நீ கேள்" என்ற ஒரே மனோபாவமே தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் இருந்தது.
MK நாராயணன் நடவடிக்கைகளைப் பார்த்தால் அன்றும் இன்றும் பயணத்தில் நானும் ஒருவன்.  உன்னுடைய பயத்தை நான் குறித்துக்கொள்கின்றேன்.  ஆனால்,  என்னுடைய பணி என்பதும், நான் இந்தியாவின் எதிர்கால அச்சுறுத்தலுக்கு இன்று நான் பார்க்க வேண்டிய வேலைகளை செய்தே ஆக வேண்டும்.  உன்னுடைய நலன் எத்தனை உனக்கு முக்கியமோ எனக்கு எனக்கு மேலே இருப்பவர்கள் சொல்வதை நான் செய்தே ஆக வேண்டிய நிலைமை.  அது தவறாக இருந்த போதிலும் அது குறித்து எனக்கொன்றும் அக்கறையில்லை.  எப்போதும் "என் கடன் பணி செய்து கிடப்பதே".   இன்றுவரையிலும் அப்படித் தான் இவருடைய செயல்பாடுகள் இருக்கின்றது.

இந்த இடத்தில் மற்றொன்றையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.  ஜே.என்.தீட்சித் எந்த அளவிற்கு செல்வாக்காய் இருந்தார் தெரியுமா?  அப்போது இந்தியா டூடே குறிப்பிட்டுருக்கும் வாசகம் தான் பொருத்தமாய் இருக்கும்.  " ஜே.என். தீட்சித் இப்போது இலங்கையின் வைஸ்ராய் போல் செயல்பட்டுக்கொண்டுருக்கிறார்".  டூரிங்க் கொட்டகையில் பார்த்த எம்.ஜி.ஆர்.  திரைப்படம் நினைவுக்கு வருகிறதா?  கதவுக்கு பின்னால் நிற்கும் நம்பியார் கையில் உள்ள வாளை பார்த்ததும் உணர்ச்சிப் பெருக்கில் " தலைவரே பின்னால் பாவி நம்பியார் நிற்கிறான்" என்று கத்திகூச்சலிட்டு குவித்து வைத்திருக்கும் வெற்றிலை எச்சிலில் கை பட்ட அவஸ்த்தை இருக்குமே?  அந்த அவஸ்த்தையில் தான் அன்றைய ஜெயவர்த்னே இருந்தார்.  இருந்தார் என்பதை விட அவ்வாறு இருக்க வைக்கப்பட்டார்.  எதிர்க்க முடியாது.  எதிர்க்கவும் கூடாது.  இந்த ஜெயவர்த்னே அப்போது கூறிய மற்றொரு வார்த்தையும் குறிப்பிடத்தக்கது.

" நல்லவேளை இந்தியா வந்து போரிட்டுக் கொண்டுருப்பதால் நீண்ட நாட்களாக கோரிக்கையில் இருந்த அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு கேட்ட 200 கோடியை எங்களால் தொடர்ச்சியான போராட்டத்தினால் கொடுக்க முடியாமல் இருந்தது.  இப்போது மொத்த பொறுப்பையும் இந்தியா ஏற்றுக்கொண்டதால் அந்த தொகையை மிச்சப்படுத்தி அவர்களையும் திருப்திபடுத்தியாகிவிட்டது".  அன்று அவருக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அல்ல.  மொத்த மாங்காய்களும் கஷ்டப்படாமல் கையில் வந்து விழுந்து கொண்டுருந்தது.

பூர்வகுடி, உண்மையான உரிமைகள், நிரந்தர தீர்வு , இருவருக்கும் சாதகமான அம்சம் என்பதெல்லாம் மீறி இந்தியாவின் ஆளுமை எப்போதும் இலங்கையின் மேல் இருக்க வேண்டும்.  பிராந்திய நலன் மட்டுமே முக்கியம்.  போராளிக்குழுக்கள் என்பதும், தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டங்கள் என்பதும் இந்தியாவும், இலங்கையும் பார்த்துக்கொள்ளும் என்பதாகத் தான் இவர்களின் பார்வையில் இன்று வரையிலும் இருக்கின்றது.

திட்ட வரைவு, முன்னேற்பாடுகள், உருவாக்குதல், ஆலோசனைகள், ஒப்பந்த இறுதி வாசகம் என்று ஒவ்வொருபடியாக கடந்து வந்து,  இறுதியில் பிரபாகரனை டெல்லி அசோகா ஐந்து நட்சத்திர உணவு விடுதியின் மேல் தளத்தில் கருப்பு பூணைகள் சூழப்பட்டு, வெளித் தொடர்பு தூண்டிக்கப்பட்டு, பொறியில் சிக்கிய சிங்கம் போல உலாத்திய பிரபாகரன் அப்போது ஆன்டன் பாலசிங்கத்திடம்  சொன்ன வாசகம்.

" அண்ணா, மீண்டும் ஒரு முறை இவர்களின் கூண்டுக்குள் வந்து சிக்கிக்கொண்டேன்"


விடுதலைப்புலிகளின் முறைப்படியான தோற்றம் உருவான 1978க்குப்பிறகு இப்போது உருவாகப்போகும் ராஜீவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் உருவாக தொடக்கத்தில் பேசப்பட்ட பேரங்களும், பிரபாகரன் தீட்சித் வாக்குவாதங்களும், நடு இரவு இரண்டு மணிக்கு ராஜீவ் காந்தி வீட்டில், ராஜீவ் காந்தியுடன் பிரபாகரன் ஆன்டன் பாலசிங்கம், தமிழக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்களின் பேசிய பேச்சுக்களையும், ரகஸ்ய நிகழ்வுகளை அடுத்துப் பார்க்கலாம்?

11 comments:

குழலி / Kuzhali said...

தங்களுடைய இந்த முயற்சி மிக அருமையான ஒன்று, வரலாற்றை தொகுத்தல்....

// ராஜீவ் காந்தியுடன் பிரபாகரன் ஆன்டன் பாலசிங்கம், தமிழக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்களின் பேசிய பேச்சுக்களையும், ரகஸ்ய நிகழ்வுகளை அடுத்துப் பார்க்கலாம்?
//
காத்திருக்கிறோம், தொடக்கத்தில் இருந்தே பண்ருட்டியார் பெயர் இதில் அடிபடுகின்றது ஆனால் அவர்தான் வாயையே திறப்பதில்லை ஏனோ?

M.Thevesh said...

உலகில் எந்தநாட்டிலாவது அரசு ஆழத்தகுதி இல்லாத ஒருவரைப்பிரதமராகத்தேர்ந்தெடுத்தசம்பவம் நடந்தது உண்டா? இந்தியாவை ஆழவதற்குத்
தகுதியானவர் வேறு யாரும் இந்தியாவில்
இல்லையா? இந்தியாவின் ஆழும் உரிமை
நேருகுடும்பத்து முதுசத் சொத்தா அல்லது பிறப்புரிமையா?இந்தியா சுதந்திரம் பெற நேரு குடும்பம் மட்டும் தான் தியாகம் செய்தார்களா?

ஜோதிஜி said...

தங்கள் வருகைக்கு நன்றி குழலி.

எம்.ஜீ.ஆர் என்ற சக்தி தெரியும். அவருக்கு தொடக்க காலத்தில் பிரபாகரனுக்கு ஆன்டன் பாலசிங்கம் போல, எம்.ஜி.ஆருடன் இருந்த புத்திசாலி நடிகர் கோபாலகிருஷ்ணன் அவர்களைப்பற்றி எத்தனை பேர்களுக்குத் தெரியும். மத்திய அரசுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஆங்கில அறிவு ஒன்றினால் அவர் உழைத்த உழைப்பு, காட்டிய விசுவாசமும் நம்பமுடியாத ஒன்று.

பின்னாளில் எம்ஜிஆருடன் வந்த இந்த பண்டு உருட்டி (?) ராமச்சந்திரன் ஏறக்குறைய இதே போல. ஒரே ஒரு வித்யாசம். அது ஸ்விஸ் அக்கௌண்ட் குறித்து உண்மையா நகைச்சுவையா என்று தெரியாமல் உலாவிக்கொண்டுருக்கும் அந்த விசயம் உங்களுக்கு தெரிந்து இருந்தால் நீங்கள் பாக்யசாலி.

அவர் வாயை எப்போதும் எதிலும் திறக்கமாட்டார்? காரணம்? பின்னால் தொடருங்கள்.,

ஜோதிஜி said...

அவசர கதியில் மேம்போக்கான விமர்சனம் தவறு. மோதிலால் நேரு, ஜவர்ஹலால் நேரு, இந்திரா காந்தி வரைக்கும் மொத்த விமர்சனத்திற்கும் இடையே நீங்கள் நம்பித்தான் ஆகும் அளவிற்கு அவர்கள் இழந்த சொத்துக்கள், சிறைவாசம் சம கால தலைவர்களுக்கு சம்மந்தம் இல்லாத ஒன்று.

சந்தர்ப்பம். சூழ்நிலை. அவசரமான அன்றைய தினம். இதற்கு மேல் நம்பிக்கை இருந்தால் விதி.

அன்று முதல் இன்று வரைக்கும் இந்தியாவை ஆண்டு கொண்டுருப்பது இது தான். இடையில் வரும் அத்தனை தலைவர்களும் FLOATING ON SURFACE OF WATER.

பாவிகள் அப்பாவிகள்.

Anonymous said...

{இந்தியாவை ஆழவதற்குத்
தகுதியானவர் வேறு யாரும் இந்தியாவில்
இல்லையா? இந்தியாவின் ஆழும் உரிமை
நேருகுடும்பத்து முதுசத் சொத்தா அல்லது பிறப்புரிமையா?இந்தியா சுதந்திரம் பெற நேரு குடும்பம் மட்டும் தான் தியாகம் செய்தா}

நண்பரே,தமிழை பிழையற்று எழுதக் கற்றுக் கொண்டு பின்னர் நேரு குடும்பத்தைத் திட்டலாம் நீங்கள்...

தமிழ் உதயம் said...

யார் செய்தது சரி... யார் செய்தது சரியில்லை... என்கிற விவாதம் ஒரு பக்கம். அரசியல் ஆதாயம், இதிலும் பணம் பார்க்கும் வியாபாரிகள் ஒரு பக்கம். இரு வித மோதல்களினால், செய்ய வேண்டிய கடமைகளும், பார்க்க வேண்டிய நியாயங்களும் செத்து கொண்டிருக்கிறது. நேரு குடும்பம் குறித்து மூன்று கருத்து சொல்ல விரும்புகிறேன். நேரு என்கிற ஆளுமையாலும் சீனாவிடம் நம் பிரதேசங்களை இழக்காமல் இருக்க முடியவில்லை. இந்திராவால் கச்சத்தீவை இழந்தோம். ஒரு பிடி மண் கூட புலிகளுக்கு சொந்தமாகி விடக்கூடாது என்பதற்காக தான் அவ்வளவு பெரிய யுத்தம். ஆனால் எந்த உயிர் பலி இல்லாமலே கச்சத்தீவை அவர்களால் அடைய முடிந்தது. இன்றைய காஷ்மீர் சிக்கலுக்கு ராஜிவ் மிகப் பெரிய காரணம். நாட்டை நான்காவது தலைமுறையும் ஆள நேர்ந்தால்?

ஜோதிஜி said...

நன்றி தமிழ் உதயம்.

பின்னோக்கி said...

அட பண்ருட்டி போட்டோ.. அதிசயம்.. காத்திருக்கிறேன்.

ஜோதிஜி said...

பண்ருட்டி பலாப்பழம் இன்னும் தந்து கொண்டுருக்கிறார்?

ttpian said...

nobody will forgive&forget India's dirty role against tamil community?
is there any tamil people in the world who will speak beatiful tamil like tamilelam people?

யாசவி said...

//மொத்த இந்தியர்களின் தலைமைப் பொறுப்பு என்பதை அவர் மிக எளிதாக எடுத்துக்கொண்டதும், பழம் தின்று கொட்டை போட்ட மட்டைகளின் தான் தோன்றித்தனம் போல் வாழ ஆசைப்படாத அவரின் வேகம் என்பது வளர்ந்து கொண்டுருந்த மற்ற நாடுகளின் தலைவர்களுக்கு உள்ளே கிலியடித்துக் கொண்டுருந்ததும் இந்த சமயத்தில் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.//

?? இது தேவையா?


//MK நாராயணன் நடவடிக்கைகளைப் பார்த்தால் அன்றும் இன்றும் பயணத்தில் நானும் ஒருவன். உன்னுடைய பயத்தை நான் குறித்துக்கொள்கின்றேன். ஆனால், என்னுடைய பணி என்பதும், நான் இந்தியாவின் எதிர்கால அச்சுறுத்தலுக்கு இன்று நான் பார்க்க வேண்டிய வேலைகளை செய்தே ஆக வேண்டும். உன்னுடைய நலன் எத்தனை உனக்கு முக்கியமோ எனக்கு எனக்கு மேலே இருப்பவர்கள் சொல்வதை நான் செய்தே ஆக வேண்டிய நிலைமை. அது தவறாக இருந்த போதிலும் அது குறித்து எனக்கொன்றும் அக்கறையில்லை. எப்போதும் "என் கடன் பணி செய்து கிடப்பதே". இன்றுவரையிலும் அப்படித் தான் இவருடைய செயல்பாடுகள் இருக்கின்றது.//

இவ்வளவு மென்மையான விமர்சனமா?

//ஜே.என்.தீட்சித் எந்த அளவிற்கு செல்வாக்காய் இருந்தார் தெரியுமா? அப்போது இந்தியா டூடே குறிப்பிட்டுருக்கும் வாசகம் தான் பொருத்தமாய் இருக்கும். " ஜே.என். தீட்சித் இப்போது இலங்கையின் வைஸ்ராய் போல் செயல்பட்டுக்கொண்டுருக்கிறார்"//

சத்தியமான வார்த்தைகள்


தொடருங்கள்... காத்திருக்கிறோம்