Tuesday, December 15, 2009

பாயும் புலி

"நான் இனி உங்களுக்கு பயன் உள்ளவனாக இருக்கமாட்டேன். என்னை மறந்து விடுங்கள்"  தலைமறைவு கானக வாழ்க்கையின் தன்னை தேடி காட்டுக்குள் வந்த அப்பாவிடம் பிரபாகரன் சொன்ன வாசகம் இது.

தன்னுடைய பள்ளிப் பருவத்திலே(14 வயது) ஒத்த சிந்தனைகள் உடையவர்களை ஒன்று இணைக்க முடிந்த பிரபாகரனுக்கு வெடிப் பொருட்கள் மேல் ஆசையும், அப்போதைய சூழ்நிலையில் கந்தகத் துகள்களை ஒன்று சேர்த்து வெடிக்க வைத்த ஆர்வமும் உள்ளே கனன்று கொண்டு இருந்து இருக்கிறது. காரணம் எப்போது வீட்டை விட்டு நிரந்தரமாக கிளம்ப வேண்டும் என்று தோன்றியதோ அப்போதே தான் இருக்கும் அத்தனை குடும்ப புகைப்படங்களையும் கிழித்து அழித்து இருந்தார்.  எந்த சூழ்நிலையிலும் எந்த இடத்திலும் தன்னைப் பற்றிய தடயங்கள் இருந்து விடக் கூடாது என்ற பழக்கம் இளம் வயதிலேயே இருந்துள்ளது.

குடும்பச் சூழ்நிலைக்கும் தனக்குள் உருவான ரசாயன மாற்றங்களும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டுருந்த போது அறிமுகமானவர்கள் தான் குட்டிமணி தங்கதுரை. பின்னாளில் சிறையில் உன்னுடைய கண்கள் இருந்தால் தானே மலரப்போகும் தமிழீழத்தை பார்க்க முடியும் என்று நோண்டி எடுத்து தரையில் போட்டு சிதைத்த கொடுமையும் நடந்தது.  இவர்கள் 25 பேர் கொண்ட குழுவுடன் தனியாக சிவகுமரன் போல் வேறு ஒரு பாதையில் செயல்பட்டுக் கொண்டுருந்தனர்.  அப்போது பிரபாகரன் இவர்களை அண்ணாந்து பார்க்கும் பருவம்.  அண்ணா என்று அழைத்தவரை அவர்கள் அப்போது அழைத்த தம்பி என்ற பதமே மொத்த இலங்கை வாழ் மக்களின் கடைசி வரையிலும் பிரபாகரனின் செல்லப்பெயர் ஆனது.

சிவகுமரன் தொடங்கி வைத்த ஆயுத பாதையான  சிங்கள இனவாதியான கலாச்சார துறை அமைச்சர்  சோமவீர சந்திரசிறீ (1970) உரும்பிராய் இந்து கல்லூரி நிகழ்ச்சிக்கு வந்த போது அவரது காருக்கு வைத்த குண்டு வெடித்து மயிரிழையில் பலத்த சேதத்துடன் அமைச்சர் தப்பிக்க மொத்தமாக போராடிக் கொண்டுருந்தவர்களுக்கும் அந்த நிகழ்ச்சி தான் முதல் பால பாடம்.

சீறிமாவோ ஆட்சி காலத்தில் புரட்சியில் ஈடுபட்ட ஜனதா விமுக்தி பெரமுணா என்ற சிங்கள கிளர்ச்சியாளர்களின் ஆயுதப்போராட்டங்களும், அவர்கள் சேர்த்து வைத்து இருந்த வெடிப்பொருங்கள் வெடித்து சிதற உண்டான கலவரம் என்பதும், ஆயுதம் தான் இனி முடிவு பாதை என்று யோசித்துக்கொண்டுருந்தவர்களை மொத்தமாக தைரியமுட்டிய நிகழ்ச்சி அது.

ஆயுதம் இருந்தால் அரசாங்கத்தை பயமுறுத்தலாம், திரும்பி பார்க்க வைக்கலாம்.

ஓய்வு நேரத்தில் குட்டிமணி குழுவில் பிரபாகரன் சேர்ந்த போதும் பின்னாளில் அவர்களுடன் இணைந்த போதும் மொத்தமாக குரு இல்லாமல் தனக்குத் தானே கற்றுக்கொண்டதும்,  துப்பாக்கி இயக்கத்தின் மொத்த ஆளுமையும் அவரிடம் வந்து இருந்தது.  அதுவே வீட்டில் சேர்த்து வைத்து இருந்த பணம் மூலம் தனியாக ஒரு துப்பாக்கி வாங்கும் அளவிற்கு.

1974 ஆம் ஆண்டு தனித் தமிழ் ஈழம் என்பது தான் இனி தீர்வு என்று போட்டியிட்டு வென்ற தந்தை செல்வா மூலம் கிடைத்த தேர்தல் வெற்றி என்பதும் அப்போது எண்ணங்களில் மட்டும் வாழ்ந்து கொண்டுருந்த அத்தனை இளைஞர்களையும் மேலும் மேலும் உரமூட்டியது.
உருவாக்கும் எண்ணங்கள் தான் வாழ்க்கை.  ஆனால் குடும்ப சூழ்நிலைக்கும் பிரபாகரன் எண்ணங்களுக்கும் துளிகூட சம்மந்தம் இல்லை.  தீர்வு என்பது இந்த தீவுக்குள் கிடைக்க வேண்டுமென்றால் தனி நாடு தான்.

எந்த சந்தேகமும் இல்லை.  தொடக்கம் முதலே ஊறிப்போன அந்த எண்ணமே அவரை நகர்த்தியது.  நடந்து கொண்டுருந்த ஒவ்வொரு ஆயுதப் போராட்டங்களினால் உருவான கிளர்ச்சி அவரை வழி நடத்தியது.  யாழ்பாணத்தில் வந்து சேர்ந்த பேரூந்தை பயணித்தவர்களை மொத்தமாக இறக்கி விட்டு எறித்த போது அது ஒரு முடிவுக்கும் வந்து இருந்தது.  அதுவே ஆல்பர்ட் துரையப்பாவை ஒரே ஒரு தோட்டாவில் சுட்டுக்கொன்ற போது வலிமை உள்ளதாக மாற்றி இருந்தது.

கானக வாழ்க்கை மொத்த அச்சத்தையும் போக்கி இருந்தது.  எப்போதும் சந்தேகம். எவர் மீதும் பாரபட்சம் இல்லாத பார்வை, கொண்ட கொள்கையில் உறுதி, இடையில் வளர்த்துக்கொண்ட குணங்கள் ஒவ்வொன்றும் மிகப் பலமான அஸ்திவாரம் போல் உள்ளே இறுகி விட்டது. தொடக்கத்தில் ஒவ்வொருவருடனும் இணைந்த போதும், உண்டான பிரிவினைகள், எழுந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் தனிமனித வக்ரமும், ஆசையும் இருந்த போதெல்லாம் தன்னுடைய ஒழுக்க பாதையை எவரும் நெருக்க, நெருங்க முடியாத அளவிற்கு தன்னை நிர்மாணம் செய்து இருந்தார்.

தான் சொல்வது சட்டம் என்பது போல் நடந்த போது உருவான பாகப்பிரிவினைகள் போதும் பயம் ஏதும் இல்லாமல் ஒதுங்க முடிந்தவரால் அதே போல் மிக விரையில் புதிய கட்டுமானமும் உருவாக்க முடிந்தது.  ஒதுங்கிப்போனவர்களும், ஒதுக்கியவர்களும் மறைந்தே போனார்கள்.  அவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரபாகரன் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் செய்த ஒவ்வொன்றுக்கும் பொறுமையின் உச்சத்தில் தோட்டா மூலம் பதில் உரைத்தார்.

நண்பன்,  பகைவன் என்றோ பாகுபாடும் இல்லை.  ஆனால் இவனால் ஆபத்து என்றால் உடனடி தீர்வு.  தொடக்கத்தில் பார்த்த செட்டி காவல்துறை உளவாளியாக மாறிய போது கதை முடிக்கப்பட்டது.  அதே போல் உளவாளியாக செயல்பட்டுக்கொண்டுருந்த (நடராஜன்) பெட்ரோல் பங்க் உரிமையாளர் கதையும் முடிக்கப்பட்டது.  ஆல்பர்ட் துரையாப்பா கொலை விசாரனையில் ஈடுபட்டுக்கொண்டுருந்தவர்கள், தமிழ் இளைஞர்களை கிள்ளுக்கிரையாக நினைத்துக்கொண்டுருந்த காவல்துறை அதிகாரி பஸ்தியம் பிள்ளை என்று வரிசையாக கொன்று கொண்டே வந்த எண்ணிக்கை மிக நீளம்.

பிடிபட்டவர்களை சிங்கள ஆட்சியாளர்கள் படுத்தும் பாடும், அதனால் தொடக்கம் முதலே ஒவ்வொருவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவஸ்யம் என்பதையும் தன்னுடைய மொழியில் பிரபாகரன் சொன்ன போது எவரும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை.  தான் எவரையும் நம்புவது இல்லை என்பதை உறுதிபடுத்தும் பொருட்டு அப்போது நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவருக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது.

"தான் கொண்ட கொள்கை ஏதும் தவறானது இல்லை" என்பது போல் ஒவ்வொன்றும் உணர்த்திக்கொண்டே இருந்து அதுவே கடைசி வரைக்கும் பாடம் போல் ஆகிவிட்டது.  போராடுகிறோம் என்று வந்தவர்கள் போராட்டத்தை தவிர மற்ற அத்தனையும் செய்து கொண்டுருந்தது ஒரு பக்கம். நீ போராடினால் என்னுடைய பதிலடி இப்படித்தான் இருக்கும் என்று சிங்கள ஆட்சியளார்கள் கொடுத்த மரண அடி மறுபக்கம்.  ஒவ்வொரு அடியும் இடிபோல் இறங்கிக்கொண்டேயிருக்க சினம் கொண்ட புலியின் சீற்றமும் சீறிப்பாய்ந்து கொண்டே இருந்தது.

வலிமை உடையவர்கள் நடத்திய போராட்டங்களும் வலிமைய பெற்றவர்கள் சார்பாக நடத்தப்பட்ட போராட்டங்களுக்கும் இடையே படிப்படியாக மொத்த தமிழர்களின் வாழ்வாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக சூறையாடப்பட்டது.

கலவரங்கள் தொடர்வது என்பது சிங்களர்களைப் பொறுத்தவரையில் அனுமதிக்கப்பட்ட சட்டபூர்வமான கொலை, கொள்ளை, கற்பழிப்பு.  ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையிலும் பதவிக்கான பசை.

தூண்டுதல் நடக்கும்.  தூண்டப்பட்டவர்களால் நடத்தப்படும் எந்த செயல்பாடுகளுக்கும் ஒரு வரைமுறையோ இருக்காது.  பாலியல் துன்புறுத்துதல் என்பது பால் அருந்துவது போல அவர்களுக்கு காலப்போக்கில் மாற்றம் பெற்றதாக ஆகிவிட்டது.   அவர்களுக்கு ஒரே நோக்கம் கொலை, கொள்ளை.  ஆனால் உள்ளே தமிழீழத்திற்கு போராடுகிறோம் என்று இருப்பவர்களின் ஒரே நோக்கம் தலைமைப்பதவி.  தான் என்கிற நோக்கம்.

உள்ளே ஒன்றாக இருப்பவர்களும் போட்டி பூசலில் மாட்டிக்கொள்வது வரைக்கும் ஊன்றி கவனித்த காரணத்தால் மற்றவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போதும் தன்னுடைய இருப்பை மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருக்க செய்ய முடிந்தது.  நிலையில்லாத இருப்பிடம், தன்னுடைய மனதுக்குக்கூட தெரியாத ரகஸ்யமாய் தன்னை வைத்துக்கொண்ட பழக்கவழக்கங்களும் ஆட்சியாளர்கள் கையில் கடைசி வரையிலும் சிக்க வைக்க முடியவில்லை.

அதேபோல் பிரபாகரன் , இயக்க வளர்ச்சிக்காக புத்தூர்(1975) வங்கியை மிக எளிதாக கொள்ளையடித்து சென்றதைப்பார்த்து , ஈரோஸ் என்ற இயக்கம் லண்டனில் போட்டியாக தொடங்கியதைப்போல அங்கிருந்து பிரிந்தவர்களான முத்துக்குமாரசாமி, வரதராஜப்பெருமாள் உருவாக்கிய இயக்கமான ELO (Eealam Liberation Organisations)  புலாவி கூட்டுறவு வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டு பிடிபட்டனர்.  பிரியும் இயக்கங்கள் பெயர் கூட இல்லாமல் நாளடைவில் மறையத் தொடங்கியது.

தந்தை செல்வாவிற்கு பிறகு அமிர்தலிங்கம் பொறுப்புக்கு வந்த போது ஆயுத இளைஞர்களின் வன்முறை என்பது அவரே நினைத்துப் பார்க்க முடியாத இடத்துக்கு வந்து சேர்ந்து இருந்தது. அடக்க முடியாது என்ற நிலைமையில் ஒரு கட்டத்தில் அவரே சற்று அமைதியாய் செயல்படலாமே என்கின்ற அளவிற்கு?

தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு பதிலடி என்று சிங்கள ஆட்சியாளர்கள் கொடுத்த மரண அடி என்பது அப்பாவிகளை மட்டுமல்ல அறிவார்ந்த தமிழ் பெரியவர்களையும் சிறையில் தள்ளும் கொடுமையும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

சிங்கள சிறை என்பது செய்த தவறுக்கு கொடுக்க வேண்டிய தண்டனைக்கான இடம் என்பதைவிட மொத்த சிங்கள அதிகாரிகளின் வக்ர எண்ண வடிகால் போலத்தான் இருக்கிறது.  அம்மணமாக நிற்க வைத்தல் என்று தொடங்கிய வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கு புத்தி பேதலித்தவர்களால் ஒரு அளவிற்கு மேல் செயல்படாத நிலைமை என்கிற அளவிற்கு மிகக் கொடூரமாக இருந்தது. சிங்கள மந்தப்புத்தியும், குறுக்குவழி கல்வியும், மறக்கப்பட்ட புத்த போதனைகளும் போதை மனம் கொண்டவர்களால் ஆயுதப் பாதை என்பது நீண்டு கொண்டே இருக்க உதவியது.  இன்றுவரையிலும்?

பிரபாகரனிடம் இருந்து பிரிந்தவர்கள், சர்வாதிகாரி என்று திட்டித்தீர்த்தவர்கள், அவரின் எதிர்மறை குணாதிசியங்களை பக்கம் பக்கம் எழுதியவர்கள் என்று அத்தனை பேர்களும் ஒரு சேர சொல்வது பிரபாகரன் என்றொரு தனி மனிதன் இல்லை என்றால் போராட்டம் தொடக்கம் ஆன நிலையில் இருந்த போது இருந்த இலங்கை பாதுகாப்பு பட்ஜெட் அடுத்த 30 ஆண்டுகளில் (1970/2000) மக்கள் நல்வாழ்க்கைக்கு கூட ஒதுக்கமுடியாமல் மொத்த வரவுகளையும் ராணுவத்திற்கு ஒதுக்க வேண்டிய அளவிற்கு அச்சப்படுத்தும் அளவிற்கு வளர்ந்தமையைத் தான் ஒவ்வொருவரும் குறிப்பிடுகிறார்கள். இது பிரபாகரன் என்றறொரு தனி மனித உழைப்பு என்பதை மறக்காமல் குறிப்பிடுகிறார்கள்.

அழுந்த அழுத்த வெடித்து சிதறும் ரசாயன குண்டுகள் போல உண்மையான தீர்வைத் தவிர சிங்கள ஆட்சியாளர்கள் அத்தனையும் செய்தார்கள்.  காரணம் சீறிமாவோ ஆட்சி மாறி ஜெயவர்த்தனே வந்த போது பிரபாகரன் வலிமையும் கூடியிருந்தது. அப்போது தொடர்ச்சியாக நடந்த கலவரத்தின் விளைவாக உலகப்புகழ் பெற்ற யாழ்பாண (ஒரு லட்சம் தமிழ் புத்தகங்கள்) நூலகம் எறிக்கப்பட்ட போது மொத்த தமிழ் மக்களையும் ஆயுதப்பாதை தேர்ந்தெடுத்தவர்களை சரிதான் என்று சொல்லும் அளவிற்கு ஒன்றிணைத்தது.

3 comments:

geethappriyan said...

பல அறிய தகவல்கள் கொண்ட இடுகை,ஓட்டுக்கள் போட்டாச்சு

புலவன் புலிகேசி said...

வழமை போல் நல் விளக்கங்கள்

சரவணன். ச said...

நல்ல தகவல் தலைவர் பற்றி.