Sunday, July 21, 2013

சாராயத் தமிழன்

வீட்டிலிருந்து அலுவகத்திற்கு செல்லும் போது தினந்தோறும் நான்கு சாராயக்கடைகளைக் கடந்து தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு சாராய கடையிலும் காலை நேரத்திலும் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும்.  பகல் நேரத்தில் குறைந்தபட்சம்  இருபது பேர்களுக்கு குறையாமல் நின்று கொண்டிருப்பார்கள். இரவு நேரங்களில் வரிசை கட்டி நிற்பார்கள்.  

இன்று எவரும் சாராயக்கடை என்று சொல்வதில்லை. டாஸ்மாக் என்ற கௌரவப் பெயரில் அழைக்கின்றனர்.

கள்ளு என்பது சாராயமாக மாறியது. அதுவே கள்ளச்சாராயமாக மாறி காலப்போகில் நல்ல சாரயமாகவும் மாறியது.  தமிழ்நாட்டில் ஆட்சிகள் மாறிய போது ஒவ்வொரு சமயத்திலும் காட்சிகள் மாறிக் கொண்டே வந்தது.

இன்று அதுவும் வழக்கொழிந்து விட்டது.

நெப்போலியன், விஸ்ஓபி, ஓல்டுமங்க் போன்ற பல்வேறு பிராண்டு வகைகளைச் சொல்லித்தான் அழைக்கின்றனர்.  எந்தவொரு இடத்திலும் ஆண்கள் இரண்டு பேர்களாக நின்று பேசிக் கொண்டிருந்தால் பேச்சு தொடங்கிய பத்து நிமிடத்திற்குள் இந்த மது குறித்த பேச்சு அவசியம் வந்து விடும்.

குற்றவுணர்ச்சி இல்லாத சமூக மாற்றத்தில் குதுகலத்தில் ஒன்றாக இந்த மதுக் கொண்டாட்டங்களும் சேர்ந்துள்ளது. 

மதுவென்பது சங்ககாலம் முதல் தமிழர்களின் வரலாற்றில் பிரிக்க முடியாததாக இருந்தாலும்  இலைமறை காயாகத்தான் இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து இன்று தமிழ்நாடு சாராய நாடாக மாறி தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் தள்ளாடாமல் இருக்க இந்த சாராயம் தான் உதவுகின்றது என்ற சப்பைக்கட்டு மூலம் பல்லாயிரக்கணக்கான கோடிகள் புழங்கும் தொழிலாக மாறியுள்ளது.

இன்று தமிழ்நாட்டு தான் மது விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது.

வருடந்தோறும் 45000 கோடிக்கு தமிழர்கள் குடிக்கின்றார்கள் என்று மற்றொரு கணக்கு சொல்கின்றது.  

தமிழ் சமூகத்தின் எதிர்காலம் குறித்த அச்சம் பயமுறுத்துவதாகவே உள்ளது. இது வெறுமனே ஒரு தனிமனிதன் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. சாராயம் குடித்தவனால் பாதிக்கப்பட்ட குடும்பம் முதல் அவனுக்கு காசில்லாத போது அவன் ஈடுபடும் கொலை கொள்ளை வரைக்கும் சமூகத்திற்கு சவாலை தந்து கொண்டிருந்தாலும் உள்ளே சென்றவர்களால் வெளியே வர முடியவில்லை. வெளியே இருப்பவர்களும் உள்ளே செல்வதும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றது.

நான் வாழ்ந்த ஊருக்கு அருகே சாராயம் காய்ச்சி விற்றுத்தான் பிழைக்க வேண்டிய கல்லூர் என்ற ஊர் இருந்தது.  அந்த ஊரின் தொடக்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லை தொடங்கும். எல்லை தொடங்கும் இடம் வரைக்கும் பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டமாக இருந்தது. காவல்துறைக்கு இது மிகப் பெரிய சவாலாக இருந்தது. எங்கள் மாவட்டத்தின் எல்லையிலிருந்து மிகப் பெரிய முந்திரிக்காட்டின் தொடக்கம் இருந்தது. அது ஆயிரக்கணக்கான ஏக்கர் பரந்து விரிந்து அடுத்த மாவட்டத்திற்குள்ளும் சென்று கொண்டிருந்தது. 

விற்பவர்களுக்கும் குடிப்பவர்களுக்கும் இது வசதியாகவே இருந்தது. முந்திரி தோப்புக்குள் இருக்கும் சாராய ஊறல்களை கண்டு அழிப்பதும் அது மீண்டும் வளர்வதும் இயல்பானதாக இருக்க இது இரண்டு மாவட்ட காவல்துறைக்குக்கு பலவிதங்களில் வசதியாகவும், பல சமயங்களில் சவாலாகவும் இருந்தது. இரண்டு பக்கமும் இரவு நேரங்களில் நின்று கொண்டு வசூலிப்பதும், சிக்கியவர்களை கொண்டு செல்வதுமாக பலவற்றையும் பார்த்துக் கொண்டே தான் வளர்ந்தேன்.

சாராய ஊறல் படிப்படியாக வளர்ந்து நான் படித்த பள்ளிக்கருகே இருந்த முந்திரிக்காட்டுக்குள்  வந்து சாராயம் விற்பர்களை பார்த்துள்ளேன்.  அருகே செல்ல பயந்து கொண்டு நண்பர்களுடன் தூர நின்று பார்ப்பதோடு சரி. அருகே சென்றால் எங்களை அடிக்க ஓடி வருவார்கள். குடிப்பவர்களின் ரகளையும், ரகளை செய்பவர்களை வெளுத்து வாங்கும் காட்சிகளை பார்த்தாலும் அடிப்படையில் இரு தரப்பிலும் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. 

ஒரு முறை காவல்துறை அதிகாரியாக இருந்த தேவாரம் உள்ளே புகுந்து வெளுத்து வாங்க அந்த ஊரே கலகலத்து போய்விட்டது.  பெண்கள் மட்டுமல்ல.  குழந்தைகள் வரைக்கும் அள்ளிக் கொண்டு சென்று விட இது போல பலமுறை அதகளமாகியிருந்தாலும் வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் போல இந்த சாராயம் காய்ச்சும் தொழில் மீண்டும் மீண்டும் வளர்ந்து கொண்டேயிருந்தது. 

பெரும்பாலான வீடுகளுக்குள் இந்த ஊறல் ஒரு முறைப்படுத்தப்பட்ட தொழிலாகவே இருந்தது. 

இப்போது அந்த ஊரின் முகம் குட்டி சிங்கப்பூராக மாறி இரண்டாம் தலைமுறை அத்தனை பேர்களும் இன்று மிகப் பெரிய நவீன அரசி ஆலைகளின் உரிமையாளராக மாறியுள்ளனர்.  அதன் பிறகு ஊர்ப்பக்கம் எந்த இடத்திலும் கள்ளச்சாராயம், நல்ல சாராயம் என்று எதுவுமே இல்லை. 

ஆனால் மாறிய தமிழ்நாட்டின் ஆட்சிகளில் இந்த சாராயக் கடைகளுக்கு முறைப்படியான அனுமதி கிடைத்த போது ஊருக்குள் ஒரே ஒரு இடத்தில் கடை ஒன்று இருந்தது. அங்கே குறிப்பிட்ட நேரத்தில் சிலர் சென்று வந்து கொண்டிருந்தனர்.  ஆனால் போவதும் தெரியாது. வருவதும் தெரியாது.

இன்று அத்தனையும் மாறியுள்ளது.  

ஊருக்குள் உள்ள கடைத்தெரு முதல் மக்கள் அதிகளவில் புழங்கும் நாலைந்து இடங்களில் இப்போது டாஸ்மாக் கடையுள்ளது.  எந்த கூச்சமும் இன்றி இன்று இயல்பாக போய் வந்து கொண்டிருக்கின்றனர்.

திருப்பூருக்குள் பலதரப்பட்ட தொழிலாளர்களுடன் அதிகளவில் பழகிய காரணத்தினால் இந்த மதுப்பழக்கம் கொண்டவர்களை காண்பதும், அவர்களின் தனிப்பட்ட குணாதிசியங்களை ஆச்சரியமாக பார்த்து பரிதாபப்பட்டதுண்டு.  என்ன பேசினாலும் எதுவும் அவர்களிடம் எடுபடாது என்பதை உணர்ந்து கொள்ள எனக்கு பத்து வருடங்கள் ஆனது.  ஆனால் நாளுக்கு நாள் அவர்கள் குடிக்கும் மதுவின் அளவு மட்டும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும்.

நான் பணிபுரிந்த ஒரு நிறுவனத்தில் தான் அவரைப் பார்த்தேன்.  

ஒவ்வொரு நிறுவனத்திற்குள்ளும் உற்பத்தி சார்ந்த ஒவ்வொரு துறைகளையும் குறிப்பிட்ட ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கும்.  ஆய்த்த ஆடைகள் தைப்பவர்களை இரண்டு விதமாக பிரித்து இருப்பார்கள்.

ஒன்று பவர்டேபிள் மற்றொன்று சிங்கர்.

இந்த இரண்டு துறைகளும் இரண்டு உலகமாக இருக்கும். இதில் சிங்கர் துறையில் இருக்கும் டைலர்கள் தான் அதிகளவில் குடிக்கு அடிமையானவர்களாக இருப்பார்கள். நான் பணிபுரிந்த அந்த நிறுவனத்தில் அவரும் ஒரு சிங்கர் டைலராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

எப்போதும் போல ஒவ்வொருவரும் தைப்பதை பார்த்துக் கொண்டே வந்த போது தான் அவர் எனக்கு அறிமுகம் ஆனார்.  அவர் தைத்துப் போட்ட உடைகளை ஒவ்வொன்றாக பரிசோதித்துக் கொண்டே வந்த போது என்னால் எந்த குறைகளையும் பார்க்க முடியவில்லை.  ஆனால் அவரைப் பார்த்த போது நம்ப முடியாததாக இருந்தது. 

அழுக்குச் சட்டையுடன், சிக்கு படிந்த முடியுடன், கொஞ்சம் நாற்றத்துடன் இருந்த அவரை முதன் முதலாக பார்த்த போது சற்று வித்தியாசமாக எனக்குத் தெரிந்தார்.

எப்போதும் போல அவருடன் உரிமையுடன் பேசத் தொடங்கினேன். ஆனால் அவர் வாயிலிருந்து வார்த்தைகளை புடுங்க வேண்டியதாக இருந்தது.


அங்கே நின்று கொண்டிருந்த ஒப்பந்தக்காரர் என்னை தனியாக அழைத்துச் சென்றார். 

"சார் அவரிடம் எதுவும் கேட்காதீங்க. எது வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்க" என்ற போது எனக்கு சற்று ஆச்சரியமாகவே இருந்தது.   

காரணம் கேட்ட போது "அவனொரு குடிகாரப் பய. ஏதாவது கேட்டால் பாதியிலே போட்டுட்டு ஓடிடுவான்" என்றார். 

"உங்களைப் பற்றி எதுவும் தெரியாமல் ஏதாவது சொல்லிவிடுவார்" என்று பயமுறுத்தினார்.

ஆனால் மனதிற்குள் அவரை குறித்து வைத்திருந்தேன். 

ஏதோவொரு வித்தியாசமான திறமை அவரிடம் இருப்பதாக என் உள் மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது. சில வாரங்களில் ஒரு காலர் சட்டை சாம்பிள் பீஸ் தைத்தே ஆக வேண்டும் என்ற வேலை வந்த போது ஒப்பந்தக்காரரை அழைத்து இரண்டு மணி நேரத்தில் முடித்து தர வேண்டும் என்று சொன்னேன். அவர் தயங்கிக் கொண்டே "நாளை தைத்து தருகின்றேன்"  என்றார். 

அதற்கான காரணத்தை சொன்ன போது தான் நான் மனதில் வைத்திருந்தது சரியானது என்பதை உணர்ந்து கொண்டேன். 

அந்த குடிகார டைலர் இரண்டு நாளாக வராமல் இருந்ததை சொல்லிவிட்டு அவர் வந்த பிறகு தைத்து தருகின்றேன் என்றார். நுறு பேர்கள் தைக்கும் இடத்தில் அந்த ஒருவருக்கு மட்டும் இருந்த முக்கியத்துவத்தை அன்று தான் உணர்ந்து கொண்டேன். 

காலர் சட்டை என்ற ஆய்த்த ஆடையில் கழுத்தில் உள்ள காலரும் முன்பக்கம் வரக்கூடிய பட்டி என்ற அமைப்பும் முக்கியமானது.  இந்த இரண்டும் தான் ஒரு காலர் சட்டை ஆடைக்கு அழகையும் ஒழுங்கான தோற்றத்தையும் கொடுக்கும். இரண்டும் சரியான அளவில் பொருத்தமாக இல்லாவிட்டால் முரண்டு பிடிக்கும் மாமியார் மருமகள் போல திரும்பி நிற்கும். 

ஒழுங்காக அளவின் படி தைக்காவிட்டால் முழு ஆடையும் வீணாகி அது பெட்டிக்கு போகாமல் குப்பையில் சேர வேண்டியதாக இருக்கும். இதற்கென்று உள்ள அனுபவம் வாய்ந்த சிங்கர் டைலர்கள் தைக்கும் போதே அது ஒரே முயற்சியில் சரியான அளவில் வெளியே வரும். ஒரு முறை பிரித்து மீண்டும் தைத்தால் கூட பல்லிளிப்பதை கண்டு பிடித்து விடலாம். 

நான் மேலே சொன்ன குடிகார டைலரின் பெயர் சுப்ரமணி.

வந்தவாசிக்கு அருகே உள்ள கிராமத்தில் பிறந்தவர். இருபது ஆண்டுகளாக திருப்பூரில் வாழ்பவர்.  மனைவி குழந்தைகளை ஊரில் விட்டு விட்டு அவர் மட்டுமே நிறுவனங்கள் கொடுக்கும் அறைகளில் தங்கிக் கொண்டு இந்த சிங்கர் தொழிலில் இருப்பவர்.
சுமார் 3639 கோடி லாபத்தில் தொடங்கிய மது விற்பனை வருவாய் 9 ஆண்டுகளில் 18 ஆயிரம் கோடியை தாண்டிவிட்டது

குடும்ப பிரச்சனைகள் அவருக்கு குடிப்பழக்கத்தை உருவாக்கியது.  அதுவே நாளுக்கு நாள் வளர்ந்த போதிலும் அவரின் தனிப்பட்ட திறமைகள் எதுவும் மங்கவில்லை.அவர் பெயரைச் சொன்னால் எந்த ஒப்பந்தக்காரரும் உடனடியாக அவரைச் சேர்த்துக் கொள்வார்கள். 

யாருடனும் பேச மாட்டார். மெஷினில் உட்காரந்தால் கருமமே கண்ணாக இருப்பார்.  தீப்பொறி பறப்பது போல தைத்துக் கொண்டேயிருப்பார்.  பீஸ் ரேட்டில் மட்டுமே எப்போதும் வேலை செய்வார்.  காலை எட்டறைக்குத் தொடங்கும் நிறுவனத்தில் எட்டு மணிக்கே வந்து மிஷினில் உட்கார்ந்து முதல் நாள் எடுத்து வைத்துள்ள ஆடைகளை தைக்கத் தொடங்கி விடுவார். 

வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் இரவு ஒரு மணி நேரம் வரைக்கும் சளைக்காமல் உழைக்கக்கூடியவர். பல சமயம் சனிக்கிழமை விடிநைட் என்று சொல்லக்கூடிய ஞாயிறு அதிகாலை வரைக்கும் உழைத்து முடித்து நிச்சயம் அந்த வாரத்து சம்பளமாக ஐந்தாயிரத்துக் குறையாமல் வாங்கிக் கொண்டு செல்வார்.

திங்கள் கிழமை நிறுவனத்திற்கு வர மாட்டார். செவ்வாய்க் கிழமை எப்போதும் போல அவர் அசுர உழைப்பு தொடங்கும். சென்ற வாரம் வாங்கிய பணத்தில் ஐம்பது ரூபாய் கூட அவர் பையில் இருக்காது. குடித்தே அழிப்பாரா? அல்லது குடி வெறியில் கையில் உள்ள பணத்தை தொலைப்பாரா என்று தெரியாது.

எவருக்கும் எந்த பிரச்சனைகளையும் கொடுக்காமல் அவர் உண்டு அவர் வேலை உண்டு இருக்கும் அவருக்கும் ஒப்பந்தக்காரருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும்.

இவரைப் பொறுத்தவரையிலும் ஒரு வேலையைக் கையில் கொடுத்து விட்டால் இடையில் எவரும் தொந்தரவும் செய்யக்கூடாது. தெளிவாக புரிய் வைத்து விட்டு அளவுகளை சொல்லிவிட்டு நகர்ந்து விட வேண்டும். எப்படி இருக்க வேண்டும் என்ற மாதிரி பீஸ் ஒன்றை அவரிடம் கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டால் போதுமானது. எனக்கு புரிந்த காரணத்தால் ஒதுங்கி நின்று விடுவதுண்டு.

ஆனால் ஒப்பந்தக்காரர் இடையிடையே போய் அவரை நோண்டும் வழக்கமுள்ளவர். சட்டென்று இவர் தூக்கியெற்றிந்து விட்டு வெளியே சென்று விடுவார்.  

பலமுறை இதை பார்த்துள்ளேன். 

அவருக்கு சாதகமாக பேசி ஒப்பந்தக்காரரை திட்டும் போது அவர் என்னிடம் எப்போதும் போல சொல்வார். 

"நீங்க அவருக்கு ரொம்ப சப்போர்ட் செய்றீங்க" என்பார்.  

நான் சிரித்துக் கொண்டே "அவர் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது" என்பேன். 

"சார் அவன் ஒரு குடிகாரப் பய. ஏதாவது கெடுத்து வச்சுட்டு போயிடுவான் " என்பார்.  

"அப்படியெல்லாம் நடக்காது" என்று அவருடன் வாதாடுவதுண்டு.

இந்த பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வர ஒப்பந்தக்காரரை அழைத்து "நீங்க இனிமேல் அவர் விசயத்தில் கண்டு கொள்ள வேண்டாம். சாம்பிள் பீஸ் நான் தைத்து வாங்கிக் கொள்கின்றேன்" என்றேன்.

என் கணக்கு தப்பியதே இல்லை.

என் அறைக்கு அழைத்து மாதிரி ஆடையை அவரிடம் காட்டி தைக்க வேண்டிய அளவுகளை தமிழில் பெரிய எழுத்தாக எழுதிக் கொடுத்து விட்டு என் மற்ற வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கும் போது அழகாக தைத்து என் அறைக்கு எடுத்துக் கொண்டு வருவார்.

ஒரு குறையும் சொல்ல முடியாது.

பல சமயம் எனக்கு இவர் மூலம் சிறப்பான அங்கீகாரங்கள் என்னைத் தேடி வந்த காரணத்தால் அவர் மேல் எப்போதும் எனக்கு தனிப்பட்ட அக்கறையுண்டு. 

அது அங்கேயுள்ள பல டைலர்களுக்கு பொறாமையை ஏற்படுத்திய போதும் நான் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதிலலை.

நான் நிறுவனங்கள் மாறி வந்த போது அவரை மறந்தே போனேன். 

ஒப்பந்தக்காரர் மட்டும் என் தொடர்பில் இருந்தார். சென்ற வருடத்தில் ஒரு நாள் மதிய வேளையில் என்னை அழைத்தார். 

"உங்க செல்லபிள்ளை கொங்கு நகர் ஈஎஸ்ஐ ஆஸ்பத்திரி பக்கத்தில் அனாதை பிணமாக கிடக்கின்றார். பார்க்க வர முடியுமா" என்று அழைத்து விபரங்களைச் சொன்ன போது அவசரமாக அங்கே சென்று பார்த்த போது திகைத்துப் போனேன்.

சாலை ஓரத்தில் கிடத்தி வைக்கப்பட்டு இருந்தார். போட்டிருந்த சட்டையும், வேட்டியும் அலங்கோலமாக அழுக்கடைந்து இருந்தது. இரண்டு நாட்கள் ஆகியிருக்கும் போல. அன்று தான் ஒரு போலீஸ்காரர் வந்து கடமையைச் செய்து கொண்டிருந்தார். பல நண்பர்கள் அங்கே நின்று கொண்டிருந்தனர். எவரும் தங்களுக்கு தெரிந்தவர் என்று வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத காரணத்தால் அங்கேயிருந்த போலீஸ்காரர் அனாதை பிணம் என்கிற ரீதியில் அவர் கடமையைச் செய்து கொண்டிருந்தார்.

எனக்கு பல சமயங்களில் மறைமுகமாக உதவியவர் என்கிற ரீதியில் அவருக்கு இந்த சமயத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்ற நண்பரிடம் சொன்ன போது அவர் மறுத்து ஒதுங்கத் தொடங்கினர். 

பிடிவாதமாக அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்த போது அவர் சொந்த ஊர் முகவரி கிடைத்தது. அதில் உள்ள ஒரு பிபி தொலைபேசியின் மூலம் அவர் மனைவியை அழைத்துச் சொன்ன போது "அவன் இப்பவாவது செத்தானே? நாங்க படுற கஷ்டத்தில அங்கே வந்து என்ன செய்யவது? அங்கேயே புதைத்து விடுங்க" என்றார்.

நண்பர் பேசிக் கொண்டிருந்த தொலைபேசியை வாங்கி "அவர் மகளுக்கு பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு சேர்த்து வைத்திருக்கின்றார்.  அதை என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியலை.  என்ன செய்யட்டும்" என்றேன். 

சற்று நேரம் அமைதிக்குப் பிறகு "சரிங்க சனியனை கடைசியாக பார்க்கனும்ன்னு என் தலையில எழுதியிருக்கு. அதை மாத்தவா முடியும். நாளை காலை வருகின்றோம்" என்றார்..

மது மாது சூது

Saturday, July 20, 2013

(இன்றைய) கல்வி என்றால் கவலை என்று அர்த்தம்

முந்தைய தொடர்ச்சி

"கல்வியே வாழ்வின் கலங்கரை விளக்கம். அது தான் ஒருவருக்கு என்றுமே அழியாத சொத்து."

"கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு."

"கல்வியறிவு இல்லாதவர் கண் இருந்தும் குருடனாவர்."

இது போன்ற எத்தனை பழமொழிகளை கேட்டுருப்போம்.

ஆனால் இன்றைய கல்வியென்பது இரண்டு கட்டத்திற்குள் தான் நிற்கின்றது.

விற்க தயாராக இருப்பவர்கள்.  அதை வாங்க தகுதியிருப்பவர்கள்.

இவர்கள் இருவரையும் தாண்டி மிச்சம் மீதி இருப்பவர்களைப் பற்றித் தான் நாம் பேசப் போகின்றோம்.
.
என் மகன் பக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கின்றான் என்பது பழைய நிலை.

என் மகன் இந்த பள்ளியில் படிக்கின்றான் என்பதே தற்போதைய கல்விச்சூழல்..

இது தவிர இன்னமும் சிறப்பான கல்வியை எந்த பள்ளி தருகின்றது என்ற ஆராய்ச்சியும் ஒவ்வொருவர் மனதிலும் இடைவிடாது ஓடிக்கொண்டே தான் இருக்கின்றது.

தற்போது சிறப்பான கல்வி என்பதற்கு சில குறிப்பிட்ட வரையறை உண்டு என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

பள்ளியின் பெயர் பிரபல்யமாக இருக்க வேண்டும்.

பள்ளியில் தமிழைத் தவிர மற்ற அத்தனை மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பள்ளியின் பாடத்திட்டம் மத்திய அரசாங்கத்தின் பாடத்திட்டமான சிபிஎஸ்சி யில் இருக்க வேண்டும்.

குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து ஓராண்டுக்குள் ஆங்கிலத்தில் பேச கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.

இது போல இன்னமும் பலப்பல.

இங்கு சிறப்பான கல்வி என்பது அறிவின் அடிப்படையில் அல்ல.  அதிகமான மதிப்பெண்கள் வாங்குவது அல்லது வாங்க வைக்க உதவும் கல்விக்கூடங்களுக்குத்தான் இன்று கல்விச் சந்தையில் நல்ல கிராக்கி.

இந்த சிறப்பான கல்விக்காகத் தான் திருவாளர் நடுத்தரவர்க்கம் தங்கள் தகுதிக்கு மீறி தரமில்லாத பள்ளியில் சேர்த்து கையோடு காலையும் சுட்டுக் கொண்டும் புத்தி வராது தடுமாறிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கமும் கல்வியென்பது எங்கள் பொறுப்பல்ல என்று கைகழுவ தயாராகிக் கொண்டிருப்பதால் தனியார் கட்டண கொள்ளைகளை கொள்கை என்ற பெயரில் கண்டும் காணாமல் நகர்ந்து கொண்டேயிருக்கின்றது.

ஆனாலும் மக்களின் மாறியுள்ள மனோபாவத்தின் காரணத்தால் வருடந்தோறும் கல்வி வியாபாரிகள் வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்.

கடந்த இருபது வருடத்திற்கு முன்னால் ஒரு சிறிய  ஓட்டு வீட்டுக்குள் தொடங்கிய கல்விக்கூடங்கள் இன்று பல ஏக்கர் பரப்பளவில் பெரிய நிறுவனமாக வளர்ந்து வருடந்தோறும் கோடிகளை அள்ளி குவிக்க முடிவதால் கேடிகளின் கடைசி அடைக்கலமே இன்று கல்விச் சந்தையாக மாறியுள்ளது.

நம் நாட்டில் கல்வியென்பது தொடக்கத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே என்பதாக இருந்தது. அதற்கு குரு சிஷ்யன் என்று புனிதம் பூசப்பட்டது. அதுவே படிப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறி திண்னைப் பள்ளிக்கூடம் என்கிற ரீதிக்கு வளர ஏராளமான மாற்றங்கள் தேவைப்பட்டது.

கல்வியென்பது பரவலாக்கம் ஆகாத காரணத்தால் பல நூற்றாண்டுகள் இந்தியா என்பது அறியாமை  இருளுக்குள்ளே முழ்கி கிடந்தது. உழைக்க மட்டுமே தெரிந்த மக்களுக்கு பிழைத்துக் கிடப்பதே இந்த வாழ்க்கை என்கிற சூழ்நிலையில் கல்வியென்பது அந்நியமாகவே இருந்தது.

இந்தியா சுதந்திரமடைந்தும் கூட திடீர் மாற்றங்கள் எதுவும் உருவாகவில்லை. இதுவே குறிப்பிட்ட சிறுபான்மையினர் மட்டுமே அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தவும் வசதியாக இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றதும் படிப்படியான மாற்றங்கள் உருவான போதிலும் கல்வி ரீதியான மாற்றங்கள் மட்டும் மந்தகதியிலேயே இருந்தது.

காரணம் ஆண்டு விட்டுச் சென்ற ஆங்கிலேயர்கள் உடலளவில் இந்தியன். உள்ளத்தளவில் ஆங்கிலேயன் என்கிற புதிய தலைமுறைகளை உருவாக்கி வைத்திருந்த காரணத்தால் எந்த மாற்றமும் இங்கே எட்டிப் பார்க்கவில்லை.

தமிழ்நாட்டில் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி தோற்றது. அதன் உண்மையான காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அரசியல் சாயம் பூசப்பட ஆட்சி மாற்றம் உருவான போது தான் இங்கே காமராஜர் என்றொரு தனிமனிதனின் சாதனைகளை சரித்திரம் குறித்துக் கொள்ளத் தொடங்கியது.

பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்த பிறகே கல்வியென்பது அனைவருக்கும் உரியது.  அதுவும் அரசாங்கம் இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டிய ஒன்று என்பதாக மாறியது.  சாதி, மதம் என்ற அறைக்குள் அடைக்கப்பட்டு வைத்திருந்த கல்விக்கு அதற்குப் பிறகே இறகு முளைத்தது.

வாழ்க்கையென்பது ஒரு வட்டம் தானே?

இன்று கல்வியென்பது தொடங்கிய நிலைக்கே வந்து கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட மக்களுக்கே சிறப்பான கல்வியென்றும் மற்றவர்கள் கல்வி என்பது எட்டா கனியாக மாறிக் கொண்டு வருகின்றது.

இன்று இந்தியாவில் கல்வியென்பது விலை மிக்க பொருளாக மாறியுள்ளது.

அதிக அளவில் பணமிருப்பவர்களுக்கு மட்டும் தான் கலங்கரை விளக்கம். அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு மெர்குரிக் விளக்காக மாறுகின்றது. இதுவே படிப்படியாக மாறி கிராமத்தில் வாழும் மாணவனுக்கு சிம்னி விளக்காக மாறுகின்றது.இன்றும் கூட தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் மலைபிரதேசங்களில் வாழ்பவர்களின் குழந்தைகளுக்கு இந்த விளக்கு கூட கிடைக்காமல் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுகளுக்குப் பின்பும் கல்வியறிவு இல்லாத இருட்டில் தான் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

சில காரணங்கள்.

அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கைகள்.  ஆட்சியளார்களின் கல்வி குறித்த அலட்சிய மனப்பான்மை.

மக்களின் மாறிக் கொண்டிருக்கும் மனோபாவங்கள். உருவான தொழில் வளர்ச்சியால் வளர்ந்த நடுத்தர வர்க்கம்.

அரசு பள்ளிகளின்  பணியாற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தாத அரசாங்கத்தின் கொள்கையினால் உருவான வீழ்ச்சி.

அரசு பள்ளிக்கூடங்கள் என்பது அரசாங்கத்தால் கண்டும் காணாமல் இருக்கும் ஒதுக்கப்பட்ட இடங்கள்.

இதனால் எளியவர்களுக்கு கிடைக்கவேண்டிய கல்வியறிவு என்பது இன்று எட்டாக்கனியாக மாறிக் கொண்டு வருகின்றது.

இன்று உலகமென்பது கிராமமாக சுருங்கியிருந்தாலும் இன்றும் இந்தியா என்பது மேலைநாடுகளால் கிராமத்தின் வடிவமாகவே பார்க்கப் படுகின்றது. எந்த மாற்றமும் இங்கே வந்து விடக்கூடாது என்பதில் தான் ஆட்சியாளர்கள் கவனமாக இருக்கின்றார்கள்.  தலையாட்டி மொம்மைகளாக இருக்க வேண்டியவர்கள் தலையை தூக்கி கேள்வியேதும் கேட்டுவிடக்கூடாது என்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர்.

உருவாகக்கூடிய மாற்றங்களும் குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு மட்டுமே போய்ச் சேர்ந்து கொண்டிருப்பதால் இங்கே 90 சதவிகித மக்களுக்கு மழுங்கடிக்கப்பட்ட சிந்தனைகளைத் தான் கல்வி என்ற பெயரில் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். கல்வித்திட்டத்தை இன்று வரையிலும் மாற்ற வேண்டும் என்ற எண்ணமில்லாத ஆட்சியாளர்களால் குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வியை கற்பதிலே நாம்  பெருமையடைகின்றோம்.

உண்மையான கல்விக்கும் நாம் கற்றுக் கொண்டிருக்கும் கல்விக்கும் உண்டான வித்தியாசங்களை பார்த்து விடுவோம்.

கேள்வி மீன் எங்கே வசிக்கின்றது?

பதில்.  மீன் தண்ணீரில் வசிக்கின்றது.

இதுவொரு இயல்பான கேள்வி பதில்.

ஆனால் உண்மையான அறிவை வளர்க்கும் கல்வி எப்படி இருக்க வேண்டும்?

மீன் ஏன் தண்ணீரில் வசிக்கின்றது? என்ற கேள்வி எழுப்பப்படும் போது தான் மீனிற்கு உள்ள உடல் அமைப்பு முதல் அதன் வாழ்வியல் குறித்த அத்தனை விபரங்களையும் ஒரு மாணவனால் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் பள்ளியில் நடத்தப்படும் பாடங்கள் அனைத்தும் கேள்வி பதில் என்கிற ரீதியில் இருப்பதால் அது குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் சிந்தனைகள் சென்று விடாதவாறு இருக்க வைக்கப்படுகின்றது.

உண்மையான அறிவு என்பது தேடுதலில் இருந்தே தொடங்கப் படவேண்டும். ஒரு பதிலில் இருந்து கேட்கப்படும் பல கேள்விகள் மூலமே ஒரு மாணவனின் அறிவு கூர்மையாகின்றது..

ஆனால் இங்கே பதில் என்பது வாங்கும் மதிப்பெண்களுக்காக என்கிற ரீதியில் மாற்றப்பட்ட பிறகு கூர்மை குறித்து கவலைப்படுபவர் யார்?

தொடக்கத்தில் இங்கே கல்வியென்பது ஒரு கனவாக இருந்தது. அது குறித்து கூட யோசிக்கக்கூட எவருக்கும் நேரம் இருக்கவில்லை. உடல் உழைப்பை வைத்து வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக் கொண்டு சென்றுவிட அடுத்து வந்த தலைமுறைகளும் அதன் வழியே நடக்க இருட்டுக்குள் இந்தியாவாக இருந்தது.

அவரவர் நம்பிக்கைகளே  வழி நடத்தியது. ஆனால் இன்று தலைகீழாக மாறியுள்ளது.

கல்வி என்பது இயல்பான ஒன்று. அது வாழ்க்கையின் ஒரு அங்கம். படிக்காதவர்கள் என்றால் அவர்களுக்கு மரியாதையில்லை. கைநாட்டு மக்கள் இன்னமும் அதிக அளவில் உள்ள இந்தியாவில் கல்வி மூலம் வாழ்வில் உயர்ந்து அடுத்த நிலைக்கு நகர்ந்தவர்கள்  கோடிக்கணக்கான பேர்கள் இருந்தாலும்  எந்த மாறுதலும் இங்கே உருவாகவில்லை.

காரணம் தன்னைக் காத்துக் கொள்வதிலேயே ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளை கழிக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்கின்றனர்..

இன்று ஏழை, நடுத்தரவர்க்கம், என்று பாரபட்சமில்லாது தங்களின் குழந்தைகளின் எதிர்கால கனவுக் கோட்டையில் கல்வியைத் தான் அஸ்திவாரமாக கருதுகின்றார்கள்.  தங்களது மகன் மகள் எப்படியும் படித்து முடித்து ஒரு நிலையான வேலையில் அமர்ந்து விட வேண்டும் என்று எண்ணமில்லாத பெற்றோர்களே இன்று இல்லை என்று சொல்லலாம்.

நன்றாக நினைவு வைத்துக் கொள்ளவும்.

ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகள் நல்ல சம்பளம் வரக்கூடிய வேலையில் தான் அமர வேண்டும் என்று நினைக்கின்றார்களே தவிர மறந்தும் கூட ஒரு குறிப்பிட்ட தொழில் சார்ந்த விசயத்தில் ஈடுபட்டு மேலே வர வேண்டும் என்று நினைப்பதில்லை.

காரணம் நமது கல்வி சுயசார்புத் தன்மையை போதிப்பதில்லை.  அண்டி வாழ்வதையும் மடங்கி நிற்பதையும் புத்திசாலியாக கற்பிக்கப்படுகின்றது.

காரணம் கூர்மையில்லாத ஆயுதமென்பது குத்திக் கிழிப்பதில்லை. கற்ற கல்வி பயத்தையும், நம்பிக்கையின்மையை வளர்த்துவிட வாழ்வதற்கு ஒரு வேலை போதும் என்கிற நிலைக்கு இயல்பாகவே தள்ளப்படுகின்றது.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது இருந்த முப்பது கோடி மக்கள் தொகை இன்று 120 கோடியாக மாறியுள்ளது. அதிலும் படிப்படியாக உருவான தொழில் வளர்ச்சியில் இன்று நடுத்தரவர்க்க மக்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

இதுவே வாங்கும் சக்தியை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் எல்லாவற்றையும் வாங்க முடிகின்றது. கூடவே கல்வி என்பதையும் வாங்க வேண்டியதாக மாறிக் கொண்டு வருகின்றது.


இன்னும் கொஞ்சம் அடுத்த பதிவில்...........

பணம் இருப்பவர்களுக்கு (மட்டுமே) அனுமதி

கல்வி பலமான ஆயுதம்

எந்திரன் உருவாக்கும் கல்வி

சமச்சீர் கல்வி வரமா சாபமா?

Thursday, July 18, 2013

பணம் இருப்பவர்களுக்கு (மட்டுமே) அனுமதி

வீட்டில் குழந்தைகளுக்கு பள்ளிப் பாடங்களை சொல்லிக் கொடுக்க எனக்கு அனுமதியில்லை. நான் வீட்டில் இருந்தால் குறிப்பிட்ட சந்தேகங்களுக்கு மட்டுமே பேச அனுமதி கிடைக்கும். காரணம் படிப்பதைத் தவிர மற்ற அனைத்தும் பேச தொடங்கி விடுவதால் எப்போதும் 144 தடையுத்தரவு அமலில் இருந்து கொண்டேயிருக்கும். நாம இதுக்கெல்லாம் பயந்தா தொழில் நடத்த முடியுமா பாஸ?

குழந்தைகளுடன் அவர்கள் பாடம் குறித்து பேசும் போதெல்லாம் நான் படித்த பள்ளிக்கூட நினைவுகளுடன் நாம் எப்படி படித்தோம்? என்ற யோசனையும் வந்து போய்க் கொண்டேயிருக்கும்?காரணம் குழந்தைகளின் பாடத் திட்டங்களை பார்க்கும் போதும் வியப்பும் பயமும் ஒன்றாக என்னைத் தாக்குவது போலவே இருக்கும். . 

நாம் படித்த கல்வி எளிமையின் வடிவமா? இல்லை சுமையில்லா பாடமா? போன்றதொரு கேள்வியும் இயல்பாக எழும்.

வீட்டுக்கருகே அருகே இருந்த சரஸ்வதி வித்தியாசாலையில் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை இருந்தது. எட்டாம் வகுப்பு வரையிலும் ஒரே பள்ளியில் படித்த காரணத்தால் எந்த பிரச்சனையும் உருவானதில்லை.  எப்போதும் போல கோவிந்தன் தான் முதல் இடத்தில் இருப்பான். இரண்டாம் இடத்திற்காக நானும் அன்புக்கரசியும் போட்டி போட்டுக் கொண்டிருப்போம். மாறி மாறி வந்து கொண்டிருப்போம்.  எட்டு வரைக்கும் படிப்புக்காக எந்த ஆசிரியரும் எந்த குறையும் சொல்லாத அளவுக்குத்தான் இருந்தேன். 

என் கையெழுத்து நன்றாக இருக்கும் காரணத்தால் அதுவே  வகுப்புத் தலைவன் என்ற பதவியைக் கூட தந்தது. ஆனால் என்ன கற்றுக் கொண்டோம்? எந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம் என்பதை அருகே இருந்த மற்றொரு பள்ளிக்கு ஒன்பதாம் வகுப்புக்குச் சென்ற போது புரிந்து கொள்ள முடிந்தது.  இங்கேயும் ஆறு முதல் 12 வரைக்கும் இருந்தது.  ஆனால் இங்கே ஒன்பதாம் வகுப்பில் தான் நுழைந்தேன்.

இந்த இரண்டு பள்ளிகளும் தனியார் நிர்வாகத்தில் அரசாங்கத்தின நிதியுதவி பெறும் பள்ளி என்கிற நிலையில் இருந்தது. அரசு பள்ளிகள் என்று எதுவும் தனியாக இல்லை. இன்று வரைக்கும் அப்படித்தான் உள்ளது.

பனிரென்டாம் வகுப்பு வரைக்கும் குடும்பத்தினர் எனக்கென்று கல்விகென்று செல்வழித்த தொகை அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும் என்றே நினைக்கின்றேன். இன்று சராசரியாக ஒரு குழந்தைகக்கு வருடத்திற்கு 25000 ரூபாய் செல்வு செய்தால் மட்டுமே சுமாரான பள்ளியில் படிக்க வைக்க முடியும். இருபது வருட இந்திய வளர்ச்சியின் பலன் இதுவே.

ஒன்பதாம் வகுப்பில் உள்ளே நுழைந்த பள்ளியில் முதல் இரண்டு மாதங்கள் முழிக்க வேண்டியதாய் இருந்தது.

அதே பள்ளியில் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் இயல்பானதாகவே இருக்க என்னைப் போன்றவர்களுக்கு சவாலாகவே இருந்தது. பாடம் நடத்திய அத்தனை ஆசிரியர்களும் தேவதூதன் போலவே என் கண்ணுக்குத் தெரிந்தார்கள். முந்தைய பள்ளியில் நடந்த ஆசிரியர் மாணவர்களின் சகஜமான உரையாடல்கள் ஏதும் நிகழாத காரணத்தால் பயமே அடித்தளமாகி படபடப்பே வாழ்க்கையாக மாறத் தொடங்கியது.

ஒன்பதாம் வகுப்பில் முதன் முதலாக நடந்த  பரிட்சையின் முடிவை கையில் வைத்துக் கொண்டு ஆசிரியர் ஒவ்வொருவரையும் அழைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்.  ஏற்கனவே பரிட்சை தாளை கையில் கொடுத்திருந்த காரணத்தால் முடமாகிப் போன ஆங்கிலமும் நொண்டித்த கணக்கும் சேர்ந்து டவுசருக்குள் ஒரு நசநசப்பை உருவாக்கியிருந்தது.  ஆசிரியர் பெயர் சொல்லி அழைத்ததும் முட்டிக் கொண்டிருந்த மூத்திரத்தை அடக்கிக்கொண்டே அவர் கொடுத்த பிரம்படியை வாங்கிக் கொண்டு வந்தமர்ந்தேன்.  

எப்போதும் போல அங்கேயும் கோவிந்தன் முதன் மூன்று இடத்திற்குள் ஒன்றை தக்க வைத்து முன்னேறிக் கொண்டிருந்jதான்.  ஏற்கனவே படித்த பள்ளி பெண்கள் பள்ளியாக மாறியிருந்தது. ஒன்பதாம் வகுப்பு முழுக்க ஒரு சில பரிட்சைகளில் மட்டுமே சிவப்பு கோடு வாங்காமல் தப்பிக்க முடிந்தது. பத்தும் அப்படியே தான் தொடர்ந்தது.  இடைவிடாத முயற்சியில் முன்னேறி இருந்தேன். ஆனால் ஆசிரியர்களின் பார்வையில் நான் பத்தாம் வகுப்பில் தேற மாட்டேன் என்ற பட்டியலில் தான் வைத்திருந்தார்கள்.  அவர்கள் கணிப்பு பொய்யானது.

அவர்கள் ஊட்டி வளர்த்த மாணவர்கள் முடமாகிப் போயிருந்தார்கள். அதிலும் எனக்கு கணக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர் நீ எப்படிடா பாஸானாய்? என்று கேட்டது இன்றும் நினைவில் உள்ளது. காரணம் இரண்டு முறைகள் அவரை எதிர்த்து கையோங்க வீடு வரைக்கும் பஞ்சாயத்து வந்து விட்டது.

இரண்டு வருட அனுபவம் தந்த பாடங்கள் பயத்தைப் போக்க  பதினொன்று பனிரெண்டில் இனி பயமில்லை என்ற தைரியத்தை தந்தது. அங்கிருந்த ஆசிரியர்கள் அத்தனை பேர்களும் பழக்கத்தில் வந்திருந்தார்கள். நானும் பள்ளியில் முக்கியமான ஆளாய் மாறியிருந்தேன். அரட்டைக்கு  தக்க நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். கட்டுப்பாடுகள் கொஞ்சம் குறைந்திருந்தது.

வீட்டில் தினந்தோறும் படிக்க வேண்டும் என்ற கட்டளை இருந்தாலும் என்னளவில் பலசமயம் அது காற்றில் பறக்க விட்டு வேடிக்கைப் பார்த்து அடி வாங்குவது இயல்பானதாக இருந்தது.  ஒவ்வொருவரும் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்க ஏதோவொரு புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒப்பேற்றிவிட்டு படுக்க ஓடிவிடுவதுண்டு.  ஆனாலும் இங்கேயும் ஒரே தாண்டலில் தாண்டி கல்லூரி செல்ல முடிந்தது. படித்த பாடத்தை சொந்தமாக எழுதத் தெரிந்ததும் ஒரு காரணமாக இருந்தது.

ஆனால் கல்லூரி தான் இதயத்தைத் தொட்டதோடு கணக்கற்ற ஆசைகளை நிறைவேற்றவும் உதவியது.  ஜன்னல் மட்டுமல்ல கதவுகளையும் அகலமாக திறந்து வைக்க சுதந்திர காற்றின் சுவாசத்தை அனுபவிக்க முடிந்தது. இதே பள்ளியில் படித்த என்னை விட மிக அதிகமான மதிப்பெண்கள் வாங்கிய ஒவ்வொருவரும் அவரவர் விரும்பிய துறையில் நுழைய எனக்குப் பிடித்த தாவரவியல் துறையில் நுழைந்த போது பலரும் என்னை ஏளனமாக பார்த்தனர்.

ஆனால் முதல் பருவத்தேர்வு முடிந்த போது என்னுடன் வந்த 17 பேர்களும் தலா இரண்டு பாடங்களில் கோடு வாங்கி கும்மி தட்டும் கோஷ்டியில் சேர்ந்திருந்தனர்.  ஊரில் இருந்து சென்றவர்களின் நான் மட்டும் தான் அறுபது சதவிகிதத்திற்கு மேல் வாங்கி அத்தனை பாடங்களிலும் தேர்ச்சி பெற்று இருந்தேன்.  கல்வி ரீதியான எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் இதுவே. அன்று முதல் தான் எனக்குள் இருந்த திறமைகளுக்கு உண்மையான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. மூன்றாண்டுகளும் வெகு இயல்பாக விருப்பத்துடன் படித்த வாழ்க்கையது.

என்னுடன் படித்தவர்கள் அத்தனை பேர்களும் கல்லூரிப் பாடங்கள் அனைத்தும் ஆங்கிலவழிக் கல்வி என்றதும் அலறிக் கொண்டு தான் படித்தார்கள்.  ஆனால் பள்ளியில் படித்த மனப்பாடம் அங்கே வேலைக்கு உதவவில்லை.சொந்தமாக எழுத வேண்டும் என்ற எண்ணமும்  எவருக்கும் தோன்றவில்லை. பள்ளியைப் போலவே கல்லூரியை கருதியிருந்தார்கள். தேர்வு நெருங்கும் சமயத்தில் நெஞ்சில் அடித்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தார்கள்.  மூன்று வருடமும் கண்களை கட்டி காட்டில் விட்டது போல அலைந்தார்கள்.

என்னுடன் படித்தவர்களில் ஒருவன் முதல் பருவத் தேர்வில் மொழிப்பாடமான தமிழிலும் கூட தேர்ச்சியடையவில்லை. அடுத்த பருவம் முதல் அழகாக பிட் எழுதும் கலையை கற்றுக் கொண்டு விட அடித்து பிடித்து இளங்கலையை முடித்து மேற்படிப்புக்கு சென்று அங்கேயும் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்று பார்டர் வீரனாக வெளியே வந்தான்.

மேற்படிப்புகக்குச் சென்ற இன்னும் சில பேர்கள் இப்போது ஆங்கில வழிக் கல்விக்கூடங்களில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுடன் உரையாடும் போது ஒன்று மட்டும் உறுதியாகத் தெரியும்.

அவர்களும் மாறவில்லை. அவர்கள் கற்ற கல்வியும் அவர்களை எந்த விதத்திலும் மாற்றவில்லை?  பாவம் மாணவர்கள் என்று நினைத்துக் கொள்வதுண்டு.

ஆனால் இங்கே இருபதாண்டுக்குள் ஏராளமான மாறுதல்கள் நடந்துள்ளது. கல்வியின் போக்கு மாறியுள்ளது. கற்றுத்தர வேண்டியவர்களின் நேர்மை முதல் அரசாங்கத்தின் கொள்கை வரை அனைத்தும் மாறியுள்ளது.  கல்வியை காசாக்கும் கள்ளப்பணம் நிறைந்தவர்கள் நடத்தும் ஒவ்வொரு பள்ளிக்கூடமும் இருபது ஆண்டுகளுக்கு நம்பமுடியாத அளவுக்கு பல்லாயிரம் கோடி தொழில் நிறுவனம் போல மாறியுள்ளது. மனப்பாடம் செய்வதே மாணவனின் தகுதி என்பதாக மாறியுள்ளது. .  

எனக்கு இன்றைய கல்விச் சூழல் கணக்கற்ற கேள்விகளை தினந்தோறும் எழுப்பிக் கொண்டேயிருக்கின்றது.  

சமச்சீர் கல்வி தேவையற்றது என்கிற நிலைக்கு கல்விக்கூடங்கள் வந்ததை விட (நடுத்தரவர்க்க) பெற்றோர்கள் அதை ஆதரிக்கவும் விரும்பவில்லை.  இது போன்று ஒவ்வொன்றையும் மனதில் நினைத்துக் கொண்டே பல சமயம் ஒதுங்கி நின்று குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி.

தினந்தோறும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நகரும் குழந்தைகளின் பைகளை தூக்கி எறிந்து விடாலாமோ என்று தோன்றுகின்றது.

தாய் மொழி குறித்த அக்கறையில்லை என்பதை விட எந்த மொழி குறித்தும் அடிப்படை புரிதல் இல்லாமல் காசாக்க எது சிறந்ததோ அதுவே வேண்டும் என்கிற நிலைக்கு கல்வி மாறியுள்ளது.  

ஐந்து பாடங்களாக இருந்த கல்வி பத்து பாடங்களாக மாறியுள்ளது.  எதிர்கால வேலை வாய்ப்புக்கு ஆங்கிலமே அருமருந்து என்று நம்பப்பட்டு அதுவே வரம் தரும் மொழியாக மாறிவிட்டது.

அந்நிய மொழி ஒரு பக்கம். அளவு கடந்த பாடத்திட்டங்கள் மறு பக்கம்.  

ஆனால் வீட்டில் என்னை அடக்கி ஒதுக்கி வைதது விட சென்ற ஆண்டு வரைக்கும் குழந்தைகளின் கல்வி குறித்து கண்டும் காணாமல் தான் இருந்தேன்.  

நான் படிக்கும் போது குடும்பத்தினர் உருவாக்கிய கட்டளைகள் தான் என்னை படிக்க வைத்தது.  ஆனால் நாங்கள் வீட்டில் உருவாக்கி வைத்துள்ள சூழ்நிலைகள் தான் கட்டாயப்படுத்த தேவையில்லாது எங்கள் பிள்ளைகளை தினந்தோறும் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.    

தினந்தோறும் குழந்தைகள் அவர்களின் அன்றாட படித்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் என்ன மாதிரியான பாடங்களை படிக்கின்றார்கள்?எதைக்குறித்து இவர்களுக்கு ஆசிரியர்கள் புரியவைக்கின்றார்கள்? என்பதை உணர்ந்து கொள்ள அவர்களின் பல புத்தகங்களை எடுத்து சில மணி நேரங்கள் படிப்பதுண்டு.  

பல சமயம் எனக்கு தலை சுற்றிப் போகின்றது. 

இன்றைய ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டம் என்பது ஏறக்குறைய கல்லூரி பாடத் திட்டத்திற்கு சமமாகவே உள்ளது. வீட்டில் கேள்வி பதிலை படிக்க வைத்து ஒப்பிக்க என்றொரு போராட்டம் தொடங்கும்.  

ஜாலியன் வாலாபாக் படுகொலையை பார்ப்பது போலவே இருக்கும்.  முட்டல் மோதல் அதிகமாகி இடைவிடாத விவாதங்கள் ஓடிக்கொண்டேயிருக்கும். ஆனால் படிப்படியான பழக்கத்தின் வாயிலாக இதுவொரு இயல்பான கடமையாக இன்று மாறியுள்ளது. 

"எனக்கு சொந்தமாக எழுத முடிகின்றது. ஆனால் மதிப்பெண்கள் போட மாட்றாங்கப்பா............"

"மிஸ்க்கு உச்சரிக்கவே தெரியலப்பா.  வருஷத்துக்கு ஒரு மிஸ்ஸா வந்துகிட்டே இருங்கப்பா..............."

"சுத்த போருப்பா..... உள்ளே பேசவே விடமாட்றாங்கப்பா.........."

"ஸ்மார்ட் போர்டு வச்சுருக்காங்க. ஆனால் அதுவொரு பந்தாவுக்காக வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் அதில் பாடம் நடத்துறாங்கப்பா...."

"ஒரு பீரியட்க்குள்ள நடத்தி விட்டு அதை அழித்து விட்டு போயிடுறாங்க.... என்னால தொடர்ந்து முழுமையா எழுத முடியல......"

இதே போல தினந்தோறும் ஏதோவொரு குற்றச்சாட்டு வந்து விழுந்து கொண்டேயிருக்கும். .

கடந்த இரண்டு வருடமாக என்னுடைய முக்கிய பணியாக பள்ளியில் ஆசிரியர் யார்? அவரைப்பற்றிய பின்புலம் என்ன? என்று கேட்டு படிக்க உட்காரும் போது அவர்களை பேச வைப்பதுண்டு.  காரணம் எந்திரமாக படிக்க உட்காருபவர்களுக்கு ஒரு ஆர்வத்தைத் தூண்டும் பொருட்டு பல கேள்விகள் கேட்டு அவர்கள் பார்த்த உணர்ந்த அத்தனை பள்ளிக்கூட சம்பவங்களும் ஒவ்வொன்றாக வார்த்தைகளாக அவர்களிடமிருந்து வந்து விழுந்து கொண்டே இருக்கும். 

வாரத்தில் மூன்று நாட்களாகவது ஒரு விஷயம் மட்டும் தவறாமல் வந்து விழும்.  

"மிஸ்க்கு தெளிவா புரிய வைக்க தெரியலைப்பா" என்பார்கள்.

கொடுக்கும் நாலாயிரம் சம்பளத்திற்கு அப்படிப்பட்ட ஆட்கள் தான் கிடைப்பார்கள் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வதுண்டு. 

பல சமயம் இது போன்ற தகுதியற்ற ஆசிரியர்களை வைத்திருக்கும் பள்ளிக்கூடத்தினால் அடிப்படை அறிவுகளை மாணவர்களுக்கு எப்படி புகட்ட முடியும்? என்று நினைத்துக் கொண்டே பாடங்களுக்கு வெளியே உள்ள பல விசயங்களை அவர்களுடன் கலந்துரையாடுவதுண்டு.  

அவர்கள் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், ஆசைகள், விருப்பங்கள் என்று ஒவ்வொன்றாக வந்து விழுந்து கொண்டேயிருக்கும்.

இப்போது வீட்டுக்குள் இருந்து ஒரு குரல் வரும்.

"இவளுக அடிக்கிற அரட்டைகளை மிஸ் கேட்டுக்கிட்டு இருந்தா அரைப்பரிட்சைக்குள் அவங்களால எப்படி பாடத்திட்டத்தை முடிக்க முடியும்? " என்பார்.

ஆனாலும் விடாமல் அவர்களை பேசவைப்பதுண்டு.

சமூகம் குறித்த அவர்களின் பார்வைகளை கவனமாக உள்வாங்கிக் கொள்வதுண்டு.  என் கருத்துக்களை எந்த இடத்திலும் சொல்வதில்லை. இந்தியா குறித்து முழுமையாக இவர்களுக்கு என்ன தெரியப் போகின்றது என்று நினைத்துக் கொண்டு வீட்டில் உள்ள உலக வரைபடம், இந்திய வரைபடம், தமிழ்நாட்டின் வரைபடத்தை வைத்துக் கொண்டு பாடம் நடத்த தொடங்கிய போது அப்பா இதெல்லாம் போன வருஷமே படித்தாகி விட்டது. இந்த வருடம் நாங்கள் படிப்பது இதைப் பற்றி என்று புத்தகத்தை காட்டிய போது  குழப்பாகவே இருந்தது.

மேற்கொண்டு அது குறித்து பேச அவர்களின் எல்லை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் நிறுத்தப்பட்டு இருப்பதை உணர்ந்து அமைதியாகி விடுவதுண்டு.

செயல்வழி திட்டத்தை ஆதரிக்காத நமது கல்விச்சூழல் எதிர்காலத்திற்கு எந்த மாதிரியான மனிதர்களை உருவாக்கப் போகின்றது என்பதே என் கேள்வியாக இருக்கின்றது.  

படிப்பறிவற்ற பெற்றோர்களின் குழந்தைகள் ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் போது உருவாகும் பிரச்சனைகளை தினந்தோறும் பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன். பள்ளியிலிருந்து வெளியே வரும் மாணவரால் ஒரு சமூகம் முழுக்க தாக்கத்தையும் உருவாக்க முடிகின்றது. பலசமயம் தேவையற்ற விசயங்களையும் உருவாக்க அது பலரையும் தாக்குகின்றது.

வெளிநாட்டில் வேலை. வெள்ளைக்காரன் போல உத்தியோகம் என்ற கேரட் வாயில் கட்டப்பட்டு கண்களில் சேனம் கட்டப்பட்டு பந்தயத்தில் ஓட வைக்கப்படுகின்றது.

தற்போதைய கல்வியின் பாடத்திட்டங்கள் ஆச்சரியமளித்தாலும் கற்றுக் கொடுப்பவர்களின் தரத்தினை நினைத்து தான் கவலைப்பட வேண்டியதாக உள்ளது. 

காரணம் இங்கே பண வசதியிருப்பவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி என்றறொரு நிலையை அடைந்து பல வருடங்கள் ஆகி விட்டது.

ஆனால் இந்த கல்வி நம் குழந்தைகளுக்கு தகுதியான வாழ்க்கையைத் தருமா? என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியவில்லை.

இது குறித்து தொடர்ந்து பேசுவோம்..............

கல்வி கற்க காசு. காசு சம்பாரிக்கவே கல்வி