Showing posts with label குடிப்பழக்கம். Show all posts
Showing posts with label குடிப்பழக்கம். Show all posts

Sunday, July 21, 2013

சாராயத் தமிழன்

வீட்டிலிருந்து அலுவகத்திற்கு செல்லும் போது தினந்தோறும் நான்கு சாராயக்கடைகளைக் கடந்து தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு சாராய கடையிலும் காலை நேரத்திலும் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும்.  பகல் நேரத்தில் குறைந்தபட்சம்  இருபது பேர்களுக்கு குறையாமல் நின்று கொண்டிருப்பார்கள். இரவு நேரங்களில் வரிசை கட்டி நிற்பார்கள்.  

இன்று எவரும் சாராயக்கடை என்று சொல்வதில்லை. டாஸ்மாக் என்ற கௌரவப் பெயரில் அழைக்கின்றனர்.

கள்ளு என்பது சாராயமாக மாறியது. அதுவே கள்ளச்சாராயமாக மாறி காலப்போகில் நல்ல சாரயமாகவும் மாறியது.  தமிழ்நாட்டில் ஆட்சிகள் மாறிய போது ஒவ்வொரு சமயத்திலும் காட்சிகள் மாறிக் கொண்டே வந்தது.

இன்று அதுவும் வழக்கொழிந்து விட்டது.

நெப்போலியன், விஸ்ஓபி, ஓல்டுமங்க் போன்ற பல்வேறு பிராண்டு வகைகளைச் சொல்லித்தான் அழைக்கின்றனர்.  எந்தவொரு இடத்திலும் ஆண்கள் இரண்டு பேர்களாக நின்று பேசிக் கொண்டிருந்தால் பேச்சு தொடங்கிய பத்து நிமிடத்திற்குள் இந்த மது குறித்த பேச்சு அவசியம் வந்து விடும்.

குற்றவுணர்ச்சி இல்லாத சமூக மாற்றத்தில் குதுகலத்தில் ஒன்றாக இந்த மதுக் கொண்டாட்டங்களும் சேர்ந்துள்ளது. 

மதுவென்பது சங்ககாலம் முதல் தமிழர்களின் வரலாற்றில் பிரிக்க முடியாததாக இருந்தாலும்  இலைமறை காயாகத்தான் இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து இன்று தமிழ்நாடு சாராய நாடாக மாறி தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் தள்ளாடாமல் இருக்க இந்த சாராயம் தான் உதவுகின்றது என்ற சப்பைக்கட்டு மூலம் பல்லாயிரக்கணக்கான கோடிகள் புழங்கும் தொழிலாக மாறியுள்ளது.

இன்று தமிழ்நாட்டு தான் மது விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது.

வருடந்தோறும் 45000 கோடிக்கு தமிழர்கள் குடிக்கின்றார்கள் என்று மற்றொரு கணக்கு சொல்கின்றது.  

தமிழ் சமூகத்தின் எதிர்காலம் குறித்த அச்சம் பயமுறுத்துவதாகவே உள்ளது. இது வெறுமனே ஒரு தனிமனிதன் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. சாராயம் குடித்தவனால் பாதிக்கப்பட்ட குடும்பம் முதல் அவனுக்கு காசில்லாத போது அவன் ஈடுபடும் கொலை கொள்ளை வரைக்கும் சமூகத்திற்கு சவாலை தந்து கொண்டிருந்தாலும் உள்ளே சென்றவர்களால் வெளியே வர முடியவில்லை. வெளியே இருப்பவர்களும் உள்ளே செல்வதும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றது.

நான் வாழ்ந்த ஊருக்கு அருகே சாராயம் காய்ச்சி விற்றுத்தான் பிழைக்க வேண்டிய கல்லூர் என்ற ஊர் இருந்தது.  அந்த ஊரின் தொடக்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லை தொடங்கும். எல்லை தொடங்கும் இடம் வரைக்கும் பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டமாக இருந்தது. காவல்துறைக்கு இது மிகப் பெரிய சவாலாக இருந்தது. எங்கள் மாவட்டத்தின் எல்லையிலிருந்து மிகப் பெரிய முந்திரிக்காட்டின் தொடக்கம் இருந்தது. அது ஆயிரக்கணக்கான ஏக்கர் பரந்து விரிந்து அடுத்த மாவட்டத்திற்குள்ளும் சென்று கொண்டிருந்தது. 

விற்பவர்களுக்கும் குடிப்பவர்களுக்கும் இது வசதியாகவே இருந்தது. முந்திரி தோப்புக்குள் இருக்கும் சாராய ஊறல்களை கண்டு அழிப்பதும் அது மீண்டும் வளர்வதும் இயல்பானதாக இருக்க இது இரண்டு மாவட்ட காவல்துறைக்குக்கு பலவிதங்களில் வசதியாகவும், பல சமயங்களில் சவாலாகவும் இருந்தது. இரண்டு பக்கமும் இரவு நேரங்களில் நின்று கொண்டு வசூலிப்பதும், சிக்கியவர்களை கொண்டு செல்வதுமாக பலவற்றையும் பார்த்துக் கொண்டே தான் வளர்ந்தேன்.

சாராய ஊறல் படிப்படியாக வளர்ந்து நான் படித்த பள்ளிக்கருகே இருந்த முந்திரிக்காட்டுக்குள்  வந்து சாராயம் விற்பர்களை பார்த்துள்ளேன்.  அருகே செல்ல பயந்து கொண்டு நண்பர்களுடன் தூர நின்று பார்ப்பதோடு சரி. அருகே சென்றால் எங்களை அடிக்க ஓடி வருவார்கள். குடிப்பவர்களின் ரகளையும், ரகளை செய்பவர்களை வெளுத்து வாங்கும் காட்சிகளை பார்த்தாலும் அடிப்படையில் இரு தரப்பிலும் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. 

ஒரு முறை காவல்துறை அதிகாரியாக இருந்த தேவாரம் உள்ளே புகுந்து வெளுத்து வாங்க அந்த ஊரே கலகலத்து போய்விட்டது.  பெண்கள் மட்டுமல்ல.  குழந்தைகள் வரைக்கும் அள்ளிக் கொண்டு சென்று விட இது போல பலமுறை அதகளமாகியிருந்தாலும் வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் போல இந்த சாராயம் காய்ச்சும் தொழில் மீண்டும் மீண்டும் வளர்ந்து கொண்டேயிருந்தது. 

பெரும்பாலான வீடுகளுக்குள் இந்த ஊறல் ஒரு முறைப்படுத்தப்பட்ட தொழிலாகவே இருந்தது. 

இப்போது அந்த ஊரின் முகம் குட்டி சிங்கப்பூராக மாறி இரண்டாம் தலைமுறை அத்தனை பேர்களும் இன்று மிகப் பெரிய நவீன அரசி ஆலைகளின் உரிமையாளராக மாறியுள்ளனர்.  அதன் பிறகு ஊர்ப்பக்கம் எந்த இடத்திலும் கள்ளச்சாராயம், நல்ல சாராயம் என்று எதுவுமே இல்லை. 

ஆனால் மாறிய தமிழ்நாட்டின் ஆட்சிகளில் இந்த சாராயக் கடைகளுக்கு முறைப்படியான அனுமதி கிடைத்த போது ஊருக்குள் ஒரே ஒரு இடத்தில் கடை ஒன்று இருந்தது. அங்கே குறிப்பிட்ட நேரத்தில் சிலர் சென்று வந்து கொண்டிருந்தனர்.  ஆனால் போவதும் தெரியாது. வருவதும் தெரியாது.

இன்று அத்தனையும் மாறியுள்ளது.  

ஊருக்குள் உள்ள கடைத்தெரு முதல் மக்கள் அதிகளவில் புழங்கும் நாலைந்து இடங்களில் இப்போது டாஸ்மாக் கடையுள்ளது.  எந்த கூச்சமும் இன்றி இன்று இயல்பாக போய் வந்து கொண்டிருக்கின்றனர்.

திருப்பூருக்குள் பலதரப்பட்ட தொழிலாளர்களுடன் அதிகளவில் பழகிய காரணத்தினால் இந்த மதுப்பழக்கம் கொண்டவர்களை காண்பதும், அவர்களின் தனிப்பட்ட குணாதிசியங்களை ஆச்சரியமாக பார்த்து பரிதாபப்பட்டதுண்டு.  என்ன பேசினாலும் எதுவும் அவர்களிடம் எடுபடாது என்பதை உணர்ந்து கொள்ள எனக்கு பத்து வருடங்கள் ஆனது.  ஆனால் நாளுக்கு நாள் அவர்கள் குடிக்கும் மதுவின் அளவு மட்டும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும்.

நான் பணிபுரிந்த ஒரு நிறுவனத்தில் தான் அவரைப் பார்த்தேன்.  

ஒவ்வொரு நிறுவனத்திற்குள்ளும் உற்பத்தி சார்ந்த ஒவ்வொரு துறைகளையும் குறிப்பிட்ட ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கும்.  ஆய்த்த ஆடைகள் தைப்பவர்களை இரண்டு விதமாக பிரித்து இருப்பார்கள்.

ஒன்று பவர்டேபிள் மற்றொன்று சிங்கர்.

இந்த இரண்டு துறைகளும் இரண்டு உலகமாக இருக்கும். இதில் சிங்கர் துறையில் இருக்கும் டைலர்கள் தான் அதிகளவில் குடிக்கு அடிமையானவர்களாக இருப்பார்கள். நான் பணிபுரிந்த அந்த நிறுவனத்தில் அவரும் ஒரு சிங்கர் டைலராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

எப்போதும் போல ஒவ்வொருவரும் தைப்பதை பார்த்துக் கொண்டே வந்த போது தான் அவர் எனக்கு அறிமுகம் ஆனார்.  அவர் தைத்துப் போட்ட உடைகளை ஒவ்வொன்றாக பரிசோதித்துக் கொண்டே வந்த போது என்னால் எந்த குறைகளையும் பார்க்க முடியவில்லை.  ஆனால் அவரைப் பார்த்த போது நம்ப முடியாததாக இருந்தது. 

அழுக்குச் சட்டையுடன், சிக்கு படிந்த முடியுடன், கொஞ்சம் நாற்றத்துடன் இருந்த அவரை முதன் முதலாக பார்த்த போது சற்று வித்தியாசமாக எனக்குத் தெரிந்தார்.

எப்போதும் போல அவருடன் உரிமையுடன் பேசத் தொடங்கினேன். ஆனால் அவர் வாயிலிருந்து வார்த்தைகளை புடுங்க வேண்டியதாக இருந்தது.


அங்கே நின்று கொண்டிருந்த ஒப்பந்தக்காரர் என்னை தனியாக அழைத்துச் சென்றார். 

"சார் அவரிடம் எதுவும் கேட்காதீங்க. எது வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்க" என்ற போது எனக்கு சற்று ஆச்சரியமாகவே இருந்தது.   

காரணம் கேட்ட போது "அவனொரு குடிகாரப் பய. ஏதாவது கேட்டால் பாதியிலே போட்டுட்டு ஓடிடுவான்" என்றார். 

"உங்களைப் பற்றி எதுவும் தெரியாமல் ஏதாவது சொல்லிவிடுவார்" என்று பயமுறுத்தினார்.

ஆனால் மனதிற்குள் அவரை குறித்து வைத்திருந்தேன். 

ஏதோவொரு வித்தியாசமான திறமை அவரிடம் இருப்பதாக என் உள் மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது. சில வாரங்களில் ஒரு காலர் சட்டை சாம்பிள் பீஸ் தைத்தே ஆக வேண்டும் என்ற வேலை வந்த போது ஒப்பந்தக்காரரை அழைத்து இரண்டு மணி நேரத்தில் முடித்து தர வேண்டும் என்று சொன்னேன். அவர் தயங்கிக் கொண்டே "நாளை தைத்து தருகின்றேன்"  என்றார். 

அதற்கான காரணத்தை சொன்ன போது தான் நான் மனதில் வைத்திருந்தது சரியானது என்பதை உணர்ந்து கொண்டேன். 

அந்த குடிகார டைலர் இரண்டு நாளாக வராமல் இருந்ததை சொல்லிவிட்டு அவர் வந்த பிறகு தைத்து தருகின்றேன் என்றார். நுறு பேர்கள் தைக்கும் இடத்தில் அந்த ஒருவருக்கு மட்டும் இருந்த முக்கியத்துவத்தை அன்று தான் உணர்ந்து கொண்டேன். 

காலர் சட்டை என்ற ஆய்த்த ஆடையில் கழுத்தில் உள்ள காலரும் முன்பக்கம் வரக்கூடிய பட்டி என்ற அமைப்பும் முக்கியமானது.  இந்த இரண்டும் தான் ஒரு காலர் சட்டை ஆடைக்கு அழகையும் ஒழுங்கான தோற்றத்தையும் கொடுக்கும். இரண்டும் சரியான அளவில் பொருத்தமாக இல்லாவிட்டால் முரண்டு பிடிக்கும் மாமியார் மருமகள் போல திரும்பி நிற்கும். 

ஒழுங்காக அளவின் படி தைக்காவிட்டால் முழு ஆடையும் வீணாகி அது பெட்டிக்கு போகாமல் குப்பையில் சேர வேண்டியதாக இருக்கும். இதற்கென்று உள்ள அனுபவம் வாய்ந்த சிங்கர் டைலர்கள் தைக்கும் போதே அது ஒரே முயற்சியில் சரியான அளவில் வெளியே வரும். ஒரு முறை பிரித்து மீண்டும் தைத்தால் கூட பல்லிளிப்பதை கண்டு பிடித்து விடலாம். 

நான் மேலே சொன்ன குடிகார டைலரின் பெயர் சுப்ரமணி.

வந்தவாசிக்கு அருகே உள்ள கிராமத்தில் பிறந்தவர். இருபது ஆண்டுகளாக திருப்பூரில் வாழ்பவர்.  மனைவி குழந்தைகளை ஊரில் விட்டு விட்டு அவர் மட்டுமே நிறுவனங்கள் கொடுக்கும் அறைகளில் தங்கிக் கொண்டு இந்த சிங்கர் தொழிலில் இருப்பவர்.
சுமார் 3639 கோடி லாபத்தில் தொடங்கிய மது விற்பனை வருவாய் 9 ஆண்டுகளில் 18 ஆயிரம் கோடியை தாண்டிவிட்டது

குடும்ப பிரச்சனைகள் அவருக்கு குடிப்பழக்கத்தை உருவாக்கியது.  அதுவே நாளுக்கு நாள் வளர்ந்த போதிலும் அவரின் தனிப்பட்ட திறமைகள் எதுவும் மங்கவில்லை.அவர் பெயரைச் சொன்னால் எந்த ஒப்பந்தக்காரரும் உடனடியாக அவரைச் சேர்த்துக் கொள்வார்கள். 

யாருடனும் பேச மாட்டார். மெஷினில் உட்காரந்தால் கருமமே கண்ணாக இருப்பார்.  தீப்பொறி பறப்பது போல தைத்துக் கொண்டேயிருப்பார்.  பீஸ் ரேட்டில் மட்டுமே எப்போதும் வேலை செய்வார்.  காலை எட்டறைக்குத் தொடங்கும் நிறுவனத்தில் எட்டு மணிக்கே வந்து மிஷினில் உட்கார்ந்து முதல் நாள் எடுத்து வைத்துள்ள ஆடைகளை தைக்கத் தொடங்கி விடுவார். 

வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் இரவு ஒரு மணி நேரம் வரைக்கும் சளைக்காமல் உழைக்கக்கூடியவர். பல சமயம் சனிக்கிழமை விடிநைட் என்று சொல்லக்கூடிய ஞாயிறு அதிகாலை வரைக்கும் உழைத்து முடித்து நிச்சயம் அந்த வாரத்து சம்பளமாக ஐந்தாயிரத்துக் குறையாமல் வாங்கிக் கொண்டு செல்வார்.

திங்கள் கிழமை நிறுவனத்திற்கு வர மாட்டார். செவ்வாய்க் கிழமை எப்போதும் போல அவர் அசுர உழைப்பு தொடங்கும். சென்ற வாரம் வாங்கிய பணத்தில் ஐம்பது ரூபாய் கூட அவர் பையில் இருக்காது. குடித்தே அழிப்பாரா? அல்லது குடி வெறியில் கையில் உள்ள பணத்தை தொலைப்பாரா என்று தெரியாது.

எவருக்கும் எந்த பிரச்சனைகளையும் கொடுக்காமல் அவர் உண்டு அவர் வேலை உண்டு இருக்கும் அவருக்கும் ஒப்பந்தக்காரருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும்.

இவரைப் பொறுத்தவரையிலும் ஒரு வேலையைக் கையில் கொடுத்து விட்டால் இடையில் எவரும் தொந்தரவும் செய்யக்கூடாது. தெளிவாக புரிய் வைத்து விட்டு அளவுகளை சொல்லிவிட்டு நகர்ந்து விட வேண்டும். எப்படி இருக்க வேண்டும் என்ற மாதிரி பீஸ் ஒன்றை அவரிடம் கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டால் போதுமானது. எனக்கு புரிந்த காரணத்தால் ஒதுங்கி நின்று விடுவதுண்டு.

ஆனால் ஒப்பந்தக்காரர் இடையிடையே போய் அவரை நோண்டும் வழக்கமுள்ளவர். சட்டென்று இவர் தூக்கியெற்றிந்து விட்டு வெளியே சென்று விடுவார்.  

பலமுறை இதை பார்த்துள்ளேன். 

அவருக்கு சாதகமாக பேசி ஒப்பந்தக்காரரை திட்டும் போது அவர் என்னிடம் எப்போதும் போல சொல்வார். 

"நீங்க அவருக்கு ரொம்ப சப்போர்ட் செய்றீங்க" என்பார்.  

நான் சிரித்துக் கொண்டே "அவர் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது" என்பேன். 

"சார் அவன் ஒரு குடிகாரப் பய. ஏதாவது கெடுத்து வச்சுட்டு போயிடுவான் " என்பார்.  

"அப்படியெல்லாம் நடக்காது" என்று அவருடன் வாதாடுவதுண்டு.

இந்த பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வர ஒப்பந்தக்காரரை அழைத்து "நீங்க இனிமேல் அவர் விசயத்தில் கண்டு கொள்ள வேண்டாம். சாம்பிள் பீஸ் நான் தைத்து வாங்கிக் கொள்கின்றேன்" என்றேன்.

என் கணக்கு தப்பியதே இல்லை.

என் அறைக்கு அழைத்து மாதிரி ஆடையை அவரிடம் காட்டி தைக்க வேண்டிய அளவுகளை தமிழில் பெரிய எழுத்தாக எழுதிக் கொடுத்து விட்டு என் மற்ற வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கும் போது அழகாக தைத்து என் அறைக்கு எடுத்துக் கொண்டு வருவார்.

ஒரு குறையும் சொல்ல முடியாது.

பல சமயம் எனக்கு இவர் மூலம் சிறப்பான அங்கீகாரங்கள் என்னைத் தேடி வந்த காரணத்தால் அவர் மேல் எப்போதும் எனக்கு தனிப்பட்ட அக்கறையுண்டு. 

அது அங்கேயுள்ள பல டைலர்களுக்கு பொறாமையை ஏற்படுத்திய போதும் நான் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதிலலை.

நான் நிறுவனங்கள் மாறி வந்த போது அவரை மறந்தே போனேன். 

ஒப்பந்தக்காரர் மட்டும் என் தொடர்பில் இருந்தார். சென்ற வருடத்தில் ஒரு நாள் மதிய வேளையில் என்னை அழைத்தார். 

"உங்க செல்லபிள்ளை கொங்கு நகர் ஈஎஸ்ஐ ஆஸ்பத்திரி பக்கத்தில் அனாதை பிணமாக கிடக்கின்றார். பார்க்க வர முடியுமா" என்று அழைத்து விபரங்களைச் சொன்ன போது அவசரமாக அங்கே சென்று பார்த்த போது திகைத்துப் போனேன்.

சாலை ஓரத்தில் கிடத்தி வைக்கப்பட்டு இருந்தார். போட்டிருந்த சட்டையும், வேட்டியும் அலங்கோலமாக அழுக்கடைந்து இருந்தது. இரண்டு நாட்கள் ஆகியிருக்கும் போல. அன்று தான் ஒரு போலீஸ்காரர் வந்து கடமையைச் செய்து கொண்டிருந்தார். பல நண்பர்கள் அங்கே நின்று கொண்டிருந்தனர். எவரும் தங்களுக்கு தெரிந்தவர் என்று வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத காரணத்தால் அங்கேயிருந்த போலீஸ்காரர் அனாதை பிணம் என்கிற ரீதியில் அவர் கடமையைச் செய்து கொண்டிருந்தார்.

எனக்கு பல சமயங்களில் மறைமுகமாக உதவியவர் என்கிற ரீதியில் அவருக்கு இந்த சமயத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்ற நண்பரிடம் சொன்ன போது அவர் மறுத்து ஒதுங்கத் தொடங்கினர். 

பிடிவாதமாக அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்த போது அவர் சொந்த ஊர் முகவரி கிடைத்தது. அதில் உள்ள ஒரு பிபி தொலைபேசியின் மூலம் அவர் மனைவியை அழைத்துச் சொன்ன போது "அவன் இப்பவாவது செத்தானே? நாங்க படுற கஷ்டத்தில அங்கே வந்து என்ன செய்யவது? அங்கேயே புதைத்து விடுங்க" என்றார்.

நண்பர் பேசிக் கொண்டிருந்த தொலைபேசியை வாங்கி "அவர் மகளுக்கு பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு சேர்த்து வைத்திருக்கின்றார்.  அதை என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியலை.  என்ன செய்யட்டும்" என்றேன். 

சற்று நேரம் அமைதிக்குப் பிறகு "சரிங்க சனியனை கடைசியாக பார்க்கனும்ன்னு என் தலையில எழுதியிருக்கு. அதை மாத்தவா முடியும். நாளை காலை வருகின்றோம்" என்றார்..

மது மாது சூது

Friday, October 29, 2010

மது மாது சூது

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்களின் வாழ்க்கை சீரழிந்து போய்க் கொண்டுருப்பதற்கு இந்த மூன்றையும் தான் உதாரணம் காட்டுகிறார்கள். ஆனால் இன்று சூது எந்த இடத்திலும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை என்று கொண்டு வந்த பிறகு கிராமங்களைச் சார்ந்த சிறு நகரங்களில் மட்டும் இன்றும் கூட மறைமுகமாக விற்றுக் கொண்டுருக்கிறார்கள். 

தொடக்கத்தில் கிராமப்புறங்களில் கிளப் என்ற அமைப்பை உருவாக்கி பெரிய மனிதர்கள் என்ற கௌரவத்தோடு குஷலாக பணம் வைத்து சீட்டாடிக் கொண்டுருந்தார்கள். இன்று எந்த இடத்திலும் கிளப்புமில்லை.  ஆட்டம் காட்டிய பெரிசுகளுமில்லை.. 


இன்று பெரிய நகரங்களில் கிளப் என்பது மனமகிழ் மன்றமாக மாறி நடுத்தர மக்களின் மகிழ்ச்சியை தொலைத்துக் கொண்டுருக்கிறது. அதுவும் பெயர் மாற்றமாகி காபரே டான்ஸ் என்கிற ரீதியில் வளர்ந்துள்ளது. இதுவே குறிப்பிட்ட விசேடங்களை குறி வைத்து உயர்தர நட்சத்திர விடுதி கல்லா கட்டும் கலாச்சார நடனம் வரைக்குமாய் திமிலோகப்பட்டுக் கொண்டு இருக்கிறது. சிறிய விடுதிகளில் நடந்தால் சட்டத்திற்கு புறம்பான செயல்.  அதுவே உயர்தர விடுதிகளிலும், அரசியல் அதிகாரவர்க்கத்தின் பினாமிகள் நடத்தும் இடங்களில் நடந்தால் பெரிய தலைகள் கூடுமிடமாக விசேஷ அந்தஸ்த்தும் பெற்று விடுகிறது. குறிப்பாக அரசியல் விளையாட்டின் முக்கிய முடிவுகள் எடுக்கும் பவர் புரோக்கர்கள் கூடும் இடமாக இருப்பதால் சீட்டு என்பது மறைமுகமாகவும் விபச்சாரம் முக்கிய இடத்தையும் பிடித்துள்ளது.

தாசி குலம், தேவரடியார், பொட்டு கட்டுதல் என்று ஒவ்வொரு காலமாற்றத்திலும் மாறி மாறி இன்று அங்கிகரிக்கப்பட்ட விபச்சாரம் என்கிற அளவுக்கு வளர்ந்துள்ளது. நுகர்வோர் கலாச்சாரத்தின் இதுவுமொரு அங்கமாகி விட்டது.  "எதுவும் தவறில்லை"  என்பதாக மாறிவிட்ட சூழ்நிலையில் இன்று காசு இருந்தால் எல்லாமே எளிது என்ற கலாச்சார மாற்றத்தில் வாழ்ந்து கொண்டுருக்கிறோம். ஆனால் தமிழர்களின் வாழ்க்கையில் பொதுப்படையான பெண்கள் பழககமென்பது எப்போதுமே எட்டாக்கனி.

கள்ளக்காதல், முறையற்ற காதல், பொருந்தாக் காதல், உணராத காதல் என்று பிரிந்து இன்று பத்தாவது படிக்கும் மாணவர்கள் கூட இந்த காதலைக்குறித்தே அதிகம் யோசிக்கும் அளவிற்கு வளர்ந்து கொண்டுருக்கிறார்கள். எல்லாவிதமான ஊடகங்களும் தங்களது சேவையை சிறப்பான முறையில் செய்து கொண்டுருக்கிறது. காதலைப்பற்றி தெரியாமலும், கடைசி வரைக்கும் காமத்தையும் புரிந்து கொள்ளா முடியாமலும் பெரும்பாலானவர்கள் தங்கள் காதல் எண்ணங்களை பெருமூச்சில் கரைத்து விடுகிறார்கள். 

சமகாலத்தில் இந்த மாது விவகாரம் பண்டமாற்று முறை போல் இயல்பாக மாறிவிடும் போலிருக்கு. வாழ்க்கையை போராட்டமாக கடனே என்று வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு பெரிதான ஈடுபாடு இல்லாமல் கிடைக்காத வாய்ப்பை நினைத்துக் கொண்டு திரை அரங்க இருட்டுக்குள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் என்றுமே மேல்தட்டு மக்களுக்கு இதுவொரு இயல்பான கலாச்சாரம். 

ஆனால் மூவாயிரம் வருட மூத்த குடி தமிழர்களின் வாழ்க்கையில் எப்போதும் போல இந்த குடி மட்டும் முதல் இடத்தை கெட்டியாக பிடித்து வைத்துக் கொண்டுருக்கிறது.  சோமபானம் என்பதில் தொடங்கி படிப்படியாக ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறு பெயர்களில் மாறி வந்துள்ளது. கள்ளச்சாராயம்,  நல்ல சாராயம் என்று இயற்கையான பெயரில் அழைக்கப்படட இந்த குடிபானத்துக்கு இன்று எத்தனை எத்தனை பெயர்கள்.? 

வெவ்வேறு நிறுவன முத்திரையுடன் அரசாங்க முத்திரையும் சேர்ந்து இன்று ஒரு தலைமுறையையே மறைமுகமாக அழிவுப் பாதையில் கொண்டு போய்க் கொண்டுருக்கிறது. 

அரசியல்வாதிகள் முதல் திடீர் பணக்காரர்கள் வரைக்கும் உள்ள  சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு லாபம் கொழிக்கும் தொழிலாக இருப்பதால் ஆயுத தரகர்களுக்கு அடுத்து இந்த மது தயாரிப்பாளர்கள் தான் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள்.  ஆட்சியை விலைக்கு வாங்குவதும், மாற்றுவதும் என்று ஜனநாயகவாதிகளையும் பணநாயாக மாற்றுபவர்களாக இருக்கிறார்கள். எந்த அரசியல் தலைகளும் இவர்களை பகைத்துக் கொள்வதுமில்லை. 

என் சொந்த ஊருக்கு அருகில் உள்ள சிறிய கிராமத்தில் 20 வருடங்களுக்கு முன்னால் சாராயம் காய்ச்சுவது தான் முக்கிய தொழிலாக இருந்தது.  ஒவ்வொரு குடும்பத்தினரும் இதை குடிசைத் தொழில் போலவே நடத்திக் கொண்டுருந்தார்கள். முன்னால் காவல் துறை அதிகாரி தேவாரம் போட்ட அதிரடி ஆட்டத்தில் அத்தனையும் காணாமல் போய்விட்டது.  

சைக்கிள் டயர் தொடங்கி, வயிற்றுக்குள் பாட்டிலை வைத்துக் கொண்டு  கடத்துவதை வியப்புடன் பார்த்து இருக்கின்றேன். அதிகாலையில் பல் விளக்காமல் நடந்தே சென்று அடித்து விட்டு உருண்டு கிடந்தவர்கள் எவரும் இன்று உயிருடன் இல்லை. "இவன் சாரயம் குடிக்கிறவன்", "இவன் அப்பா மகா குடிகாரர்".  என்று பெண கொடுக்க மறுத்த. சமூக அமைப்பு இன்று மாறிவிட்டது. 

" மாப்பிள்ளை பார்ட்டியில் மட்டும் குடிப்பார் " என்கிற ரீதியில் மது என்பதை ஒரு கௌரவச் சின்னமாக மாற்றி விட்டனர்.  தொடக்கத்தில் புகைப்பழக்கம் உள்ளவர்கள் ஒளிந்து கொண்டு புகைத்தனர். ஆனால் இன்று?  

லஞ்சம் வாங்காதவர் பிழைக்கத் தெரியாதவன் போலவே குடிப் பழக்கம் இல்லாதவர்கள் அரசியல், வியாபார, சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக தெரிகின்றனர்.  

இன்று அந்த சிறிய கிராமத்திற்குள் மூன்று டாஸ்மார்க் கடைகள் இருக்கின்றது. தினந்தோறும் கூட்டத்திற்கும் பஞ்சமில்லை.  அருகருகே வீடுகள். எவருக்கும் அச்சமில்லை. குடிமகன்களுக்கு தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது குறித்தும் பயமுமில்லை. 


அதே கிராமத்தில் விற்கப்படும் கள் என்பதற்கு இன்றைய சூழ்நிலையில் பெரிதான மரியாதை இல்லை.  தொடக்கத்தில் கள் குடிப்பதை நாட்டு மருந்து போலவே பயன் படுத்திக் கொண்டுருந்தனர். ஆனால் அரசாங்கம் அதற்கும் பெரிய ஆப்பு வைத்து விட்ட காரணத்தால் அத்தனை மரங்களும் அனாதையாய் நிற்கிறது.  வானம் பார்த்த பூமியில் வளரும் மரம் செடிகள் கூட ஏக்கத்துடன் மல்லாந்து பார்க்கும் மனிதர்களைப் போலவே தான் இருக்கின்றது.

ஆனால் இன்று டாஸ்மார்க் என்ற கலாச்சாரம் எங்கெங்கும் வியாபித்து குறிப்பாக நகர்புறங்களில் தொழிலாளர், பணியாளர், முதலாளி என்ற பாரபட்சம் இல்லாமல் பாடைக்கு இந்த உடம்பை கொண்டு போக மறைமுக வழிகாட்டியாய் இருக்கிறது. அரசு அங்கீகாரம், ஆள்வோர்களின் உத்தரவாதம் என்று முறைப்படுத்தப்பட்ட தொழிலாகவே இந்த சாரய வியாபாரம் மாறிவிட்டது, 

வரி கட்ட வேண்டிய மக்கள் கொடுக்கும் டிமிக்கிக்கு பயந்து கொள்ளும் ஒவ்வொரு அரசாங்கமும் இறுதியில் இத்ந குடிமகன்களை நம்பித்தான் தங்கள் கஜானாவை நிரப்புகின்றனர். வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகைகளை எந்த பெரிய தலைகளும் பொருட்படுத்துவதே இல்லை. அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் தவறாமல் வராக்கடனில் கொண்டு போய் நிறுத்தி மறந்து விடுகின்றது. இதனாலேயே இன்று அரசாங்கமே குடிமகன்களுக்கு விரைவில் சொர்க்கத்தை சென்றடையும் வழியையும் காட்டிக் கொண்டுருக்கிறது. ஆனால் ஒவ்வொரு குடிமகன்களின் குடும்பம் மட்டும் நிரந்தர நரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டுருக்கிறது