Monday, February 18, 2013

டாலர் நகரம் - மூன்று மலர்கள்

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் மூன்று விதமான சிறப்பு மலர்
வெளியிடப்பட்டது.  


இந்த முயற்சி சார்ந்த அனுபவங்களை சமயம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்..



முதல் சிறப்பு மலரை காண இங்கே சொடுக்கவும்

(இந்த மலரின் இருவரின் அணிந்துரை, தமிழ்ச்செடி, புதுக்கோட்டை ஞானாலயா குறித்த விபரங்கள், திருப்பூரில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் தாய்த் தமிழ் பள்ளியின் அர்பணிப்பு குறித்த விபரங்கள்,

விழாவிற்கு உதவியவ்ர்கள், திருப்பூர் கோவையில் இருந்து செயல்படும் வலைபதிவு குழுமங்கள், திரட்டிகள் குறித்த விபரங்கள் அடங்கிய பிடிஎஃப் கோப்பாக உள்ளது.)


இரண்டாவது சிறப்பு மலரை காண இங்கே சொடுக்கவும்

தமிழ்மணம் திரட்டியை உருவாக்கிய திரு. காசி ஆறுமுகம் அவர்களின் கட்டுரை. ( தமிழில் எழுதலாம் வாருங்கள். வலையில் பரப்பலாம் பாருங்கள். இவர் இந்த கட்டுரைகளை அவரது தளத்தில் 2004 ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.  சிற்சில மாறுதல்கள் இருந்தாலும் இன்று வரையிலும் இதில் உள்ள பெரும்பான்மையான கருத்துக்கள் பொருத்தமாகவே உள்ளது என்பது தான் இந்த கட்டுரைத் தொகுப்பின் சிறப்பம்சம். 

அனுமதி அளித்த திரு. காசி ஆறுமுகம் அவர்களுக்கு எனது நன்றி.


மூன்றாவது சிறப்பு மலரை காண இங்கே சொடுக்கவும்.

இந்த மலரில் எனது அறிமுக கட்டுரையுடன் ( டாலர் நகரம் (இனி) கண்ணீர் தேசமா? கனவு தேசமா? ) தொடங்குகின்றது. இந்த மலரில் தற்போது ஒரிஸ்ஸாவில் வசித்துக் கொண்டிருக்கும் திரு. சங்கர நாரயணன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையான தற்போது இந்தியாவின் சுற்றுச்சூழல் குறித்த கட்டுரை உள்ளது.  

இத்துடன் 4 தமிழ்மீடியா தளத்தில் நான் எழுதிய காக்க... காக்க...நோக்க..நோக்க என்ற தொடர் கட்டுரையின் சில பகுதிகளை இங்கே வெளியிட்டுள்ளோம்.
ஈரோடு தாமோதர் சந்துரு மற்றும் தமிழ்நாடு பசுமை இயக்க தலைவர் மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள்.

தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள். உங்கள் புரிதலை தெரிய்பபடுத்துங்க.

Sunday, February 17, 2013

டாலர் நகரத்தில் (அசாத்தியமான) தாய்த்தமிழ் பள்ளி மாணவ மாணவியர்கள்

திருப்பூரில் தாய்த்தமிழ் பள்ளியை நடத்திக் கொண்டிருப்பவர் திரு. கு. தங்கராசு அவர்கள்.

வழக்கமான பள்ளிக்கூட பாணியில் இருந்து முற்றிலும் விலகி நமது தாய்மொழியான தமிழ் மொழியில் கல்வி கற்கும் போது உண்டான புரிதலையும், மாணவர்களின் அசாத்தியமான திறமைகளை நான் கண்ட போது இவர்களை டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவின் மூலம் முடிந்தவரைக்கும் வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று மனதில் வைத்திருந்தேன்.

எனது குழந்தைகளை தொடக்கத்தில் தமிழ்வழிக் கல்வியில் கற்க முயற்சிகள் எடுத்த போது நான் பட்டபாடுகளை எனது டாலர் நகரம் புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தில் ஆங்கிலவழிக் கல்வியும் அரைலூசு பெற்றோரும் என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். நண்பர் ஒருவர் இந்த புத்தகத்தை ஒரு பெரிய பள்ளிக்கூட தலைமையாசிரியர் அவர்களிடம் கொடுக்கச் சென்ற போது இந்த ஒரு அத்தியாயத்திற்காக ரொம்பவே பயந்தார்.

ஆனால் சிறிய இடைவெளி விட்டு அவரை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்த போது இந்த ஒரு அத்தியாயத்திற்காகவே என்னை கூச்சப்படும் அளவிற்கு பாராட்டித்தள்ளினார்.

இந்த பள்ளி குறித்த விபரங்கள் விழா சிறப்பு மலரில் உள்ளது. ஆனால் இன்னமும் நிதி நிலவரத்தில் மூச்சு வாங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. பலரும் உதவிக்கரம் நீட்டிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். எனது சார்பாக நண்பருடன் சில முயற்சிகளில் இறங்கியுள்ளேன். 

ஏற்கனவே இவர்கள் முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தவரும், தற்போது தமிழ்நாடு அரசின் கைத்தறி துறைக்கு தலைமை பொறுப்பில் இருப்பவருமான திரு. சகாயம் திருப்பூரில் கலந்து கொண்ட உறவோடு தளம் நடத்திய விழாவில் தங்கள் திறமைகள் (ஆடல் பாடல் காட்சிகளின்) மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி திகைக்க வைத்தார்கள் 

டாலர் நகரம் விழாவில் ஏறக்குறைய ஆறு பாடல்கள் (ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இடையே) பாடி வந்திருந்த பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்கள்.  எனது விழா குறித்து பேசியவர்கள் அத்தனை பேர்களும் இந்த மாணவ மாணவியர்களின் திறமைகளை தவறாமல் குறிப்பிட்டு பேசினார்கள்.

இது குறித்த முழுமையான விபரங்களை விரைவில் எழுதுகின்றேன்.  திருப்பூர் தாய்த்தமிழ் மாணவ மாணவியர்களின் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு

திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளியின் வலைதளம் காண இங்கே சொடுக்கவும்

இந்த பள்ளி குறித்த ஆவணப்படம் காண இங்கே சொடுக்கவும்

காணொளி காட்சி அடங்கிய தொகுப்பு விரைவில் வெளியிடுகின்றேன்.











டாலர் நகரம் புத்தக விமர்சனம் - மதுரை சம்பத்


நண்பர் ஜோதி கணேசன் அவர்களின் அனுபவ சிதறல்களின் தொகுப்பான "டாலர் நகரம்" புத்தகத்தின் மீதான விமர்சனத்தை பதிவு செய்வதற்கு முன்பாக இதை எழுத இத்தனை நாட்களா என நண்பரின் அன்பு கலந்த கோபத்தை எதிர்பார்த்து முதலில் வணக்கம் சொல்லி பேச துவங்குவது போல் மன்னிக்கவும் என்ற சொல்லோடு எழுத விழைகிறேன்.

ஒரு பேச்சாளரின் வெற்றி என்பது எதிரே அமர்ந்திருப்பவர்களை கவரும் வண்ணம் தடங்கலின்றி பேசுவதோடு இன்னும் சிறிது பேசமாட்டாரா என்று எண்ணும் வண்ணம் விரைவாக முடிப்பதில் இருக்கிறது.  

அதே போல் ஒரு எழுத்தாளரின் வெற்றி என்பது வாசிக்க துவங்கியவுடன் ஒரு சில அத்தியாயங்களையாவது வாசித்துவிட்டு பின்னர்தான் கீழே வைக்கும் வண்ணம் அந்த புத்தகம் அமைவதுதான்.


அந்த வகையில் ஜோதிஜியின் எழுத்து நடை என்பது நிச்சயமாக வாசிப்பவரை சலிப்படையாமல் தன்னோடு பயணிக்க வைத்திருக்கிறது. 

திருப்பூர் எனது சொந்த ஊர்- காரைக்குடி நான் (பழிவாங்கும்) ஊர்மாற்றமாக மாற்றப்பட்டு பாச்சுலர் வாழ்க்கையில் 2 வருடம் பணிபுரிந்த ஊர்.  

இரண்டு ஊர்களும் அதில் தெரிவித்துள்ள பல இடங்களும் அறிமுகமானவை என்பதால், புத்தக நடையோடு பயணிக்க ஒரு ஈர்ப்பை அளித்தது.

உண்மை சுடும் என்ற போதிலும், யதார்த்தங்களை அப்படியே சொல்வதற்கும் ஒரு துணிவு வேண்டும்.  

இன்றும் வந்தாரை வாழவைத்துக் கொண்டிருக்கிற திருப்பூரில் கால் ஊன்றி வெற்றி பெறுவதற்காக கடந்து வந்த அனுபவங்களை வரிசையாக தொகுத்திருக்கிறார் நண்பர். 

பணம் நிறைய இருந்தும் முறையான திட்டமிடல் இன்மையால் சரிந்து கொண்டிருந்த ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் தாம் பொறுப்பேற்று, தொய்விற்கு காரணமாக இருந்தவர்கள் முதலாளியின் சொந்தங்கள் என்ற போதிலும் அவர்களை அகற்றிவிட்டு லாபத்தை நோக்கி, வெற்றியை நோக்கி இட்டுச் சென்றவுடன் முதலாளியின் மனைவியின் தலையீடு- அதனை தொடர்ந்து தான் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேற நேர்ந்தது - என்பதெல்லாம் இன்றளவிலும் பல உழைப்பாளிகளுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பதுதான்.  

இருப்பினும் அவற்றை எழுத்து வடிவில் காட்சிப் படுத்தியிருந்த விதம் தொழிலாளர்களுக்கு பாடம் கற்றுத் தருவது போல் பல முதலாளிகளையும் தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வைக்கும்.  

நிச்சயமாக அதுதான் இந்த புத்தகத்தின் வெற்றி.

எழுத்தாளர் சிவசங்கரியின் சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்தும் என்ற தலைப்பை முன்னிறுத்தி அரசின் தாராளமயமாக்கல் கொள்கைகள்- பருத்தி மற்றும் நூல்களின் சந்தையை எப்படி புரட்டிப் போட்டுள்ளது என்பதையும் அது உள்ளாடை தொழிலை எப்படி நெருக்கடிக்குள்ளாக்கி யிருக்கிறது என்பதும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.

சாயப்பட்டறைகளின் மீது நீதிமன்ற நெருக்கடி காரணமாக டேப்ரிக்கார்டரில் pause பட்டனை அழுத்தியது போல் தற்காலிகமாக திருப்பூரின் இயக்கங்கள் நின்றுள்ளது என்ற போதிலும், பல்லாண்டு காலமாக முதலாளிகள்- அரசியல்வாதிகள், சாயக் கழிவுகளை வெளியேற்றுவதில், அவற்றை மறுசுழற்சி முறையில் சுத்திகரிப்பு செய்து இரசாயன கடுமையை குறைக்க காண்பித்து வந்த அலட்சிய போக்கே இந்த நிலைக்கு காரணம் என்ற சாடலை சரியாக முன்வைத்துள்ளார்.  

திருப்பூரில் உள்ளாடை தொழிலில் இருப்பவர்களைப் பொறுத்தவரை அந்த நகரினிலேயே சாயமேற்றல் நடைபெற்றால்தான் தொழில் தடங்கலின்றி தொடரும் என்கிற சுயநலம் இயல்பாக மேலோங்கி நிற்கும்.  ஆனால் மாறாக ஜோதிஜி அந்த தொழிலை வழிநடத்தும் பணியில் இருந்த போதும் சமூக அக்கறை மேலோங்கி விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரங்களின் பாதிப்பை வெளிப்படுத்தியிருக்கும் உணர்வு நிச்சயமாக பாராட்டுக்குரியதே.

திருப்பூரில் 80களில் 90களில் தொழிற்சங்க இயக்கங்கள் பலவற்றை நான் கண்டிருக்கிறேன்.  முறைசார்ந்த தொழில், முறை சாரா தொழில் எதுவாக இருப்பினும் உரிமைக்கு குரல் எழுப்புவது என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.  

அவற்றைப்பற்றி ஜோதிஜி ஒன்றும் எழுதவில்லையே என்பது எனக்கு சற்று குறையாக தெரிந்தது.

மேலும் தொழிலை சார்ந்த, நகரை சார்ந்த தொடர் கட்டுரைக்கு நடுவே குழந்தைகளை ஆங்கில பள்ளிகள் கையாண்ட விதம் பற்றி எழுதியிருந்தது இந்த கட்டுரை தொடரில் சற்று ஒட்டாமல் இருக்கிறதோ என முதலில் எனக்கு தோன்றியது.  

ஆனால் ஒவ்வொருவர் வாழ்விலும் தொழிலாளியாக, சிறு முதலாளியாக, அரசு மற்றும் அரசுத் துறை பணியாளராக யாராக இருப்பினும், அவர்களின் ஓட்டம் என்பது குழந்தைகளுக்கு நல்ல கல்வி பயிற்றுவித்து அவர்களை தன்னை விட மேம்படுத்த வேண்டும் என்பதுதான் வாழ்க்கை ஓட்டத்தில் அனைவரின் முக்கிய குறிக்கோள் ஆகும்.  

அந்த வகையில் தாய் மொழிக்கல்வியின் அவசியம் குறித்து, அவற்றை பயன்படுத்தும் போது ஏற்படும் உறவுகளின் நெருக்கம் குறித்து, இன்று பலர் ஆங்கில கல்விக்கு சென்று பெற்றவர்களும் குழந்தைகளும் பிரிந்து நின்று மின்னஞ்சல் தொடர்போடு நின்றுவிடுவதையும் பளிச்சென்று சுட்டிக்காண்பித்திருப்பதால், அது இந்த வாழ்க்கையோடு இணைந்த தொடரில் அவசியமான ஒன்றே என நிறைவாக இருந்தது.

மொத்தத்தில்

                                                          நம்பி கை வைத்து
                                                      நாணயமாய் நடந்து
                                       உண்மையாய் உழைத்தால்
                                உயர்வும் வெற்றியும் நிச்சயம்

என்பதை இந்த அனுபவ தொடர் நிறைவாக சொல்லியிருக்கிறது.  

பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை மட்டுமே வெளியிட்டு சந்தைப்படுத்துகிற பிரசுரங்கள் பலவற்றின் நடுவே துணிவோடு இதை பிரசுரமாக கொணர முடிவெடுத்த திரு மலைநாடன், 4தமிழ்மீடியா குழுமத்திற்கு கண்டிப்பாக பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். 

சிறப்பான புத்தக வடிவமைப்பு, தேவையான புகைப்படங்கள் ஆகியவை நன்றாக இருந்தது.  நண்பர் ஜோதி கணேசனின் எழுத்துக்கள் இன்னும் பல வெளிவர வாழ்த்துக்களுடன்

தோழமையுள்ள
ஸ்ரீ.சம்பத்
மதுரை.

டாலர் நகரம் மற்ற புத்தக விமர்சனங்கள்.

(தமிழ்மணம் திரட்டியை உருவாக்கியவர்.)



டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் வெட்டிக்காடு ரவி பேசிய