Thursday, December 29, 2011

தினந்தோறும் மலரும் பூக்கள் 2011



கடந்து போன வாழ்க்கையில் சென்னையில் ஒரு நள்ளிரவு மட்டும் இந்த ஆங்கில புத்தாண்டு வரவேற்பை மெரினா கடற்கரை கூட்டத்தில் கரைந்து போய் ரசித்தேன். ஆராவாரமும், ஆர்ப்பட்டமும் அள்ளித் தெளித்த கோலமாய் கடற்கரை மணலில் வரவேற்ற தலைகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்கா. 

அந்த கூட்டம் இன்று வரை கண்களுக்குள் நிற்கிறது. கடல் அலையில் கால் நனைத்து மச்சினன் கைபிடித்து வாழ்க்கையை தேடிக் கொண்டிருந்த போது அந்த இரவு இனம் புரியா மகிழ்ச்சியைத் தந்தது.  வாழ்க்கை நகர்ந்தது,

இயல்பான வாழ்க்கையின் சூத்திரங்களின் சூட்சமங்களை கற்றுக் கொள்ளத் தெரியாத வாழ்க்கை திருப்பூருக்கு நகர்த்தியது. 

வாழ்க்கை அதன் உண்மையான அர்த்தங்களை அறிமுகம் செய்ய ஆரவாரங்கள் பின்னுக்குச் சென்று அலையில்லா கடல் போல அமைதியும் வந்தது. ஒவ்வொரு வருடத்தின் கடைசி இரவும் வந்தபடியே தான் இருக்கின்றது.. அதற்கு பிறகு வந்த ஒவ்வொரு வருடமும் ஆழ்ந்த உறக்கத்தின் ஆழத்தை காட்டிக் கொண்டிருக்கும். விடிந்து பார்க்க நேற்றைய பொழுதுகள் மறந்து இன்றைய தேவைகளுக்காக மனம் ஓடத் தொடங்கி விடுகின்றது..
எந்த வருடத்தின் தொடக்கத்திலும் நான் எந்த சபதங்களையும் எடுப்பதில்லை.
காரணம் அதுவொரு சடங்காகத்தான் முடியும்.  மீனவனின் வாழ்க்கைக்கும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கும் பெரிதான வித்யாசங்கள் இல்லை. அங்கே தண்ணீர். இங்கே கண்ணீர்.

அங்கே எல்லைப் பிரச்சனை.  இங்கே அரசாங்கத்தின் கொள்கை பிரச்சனை.

ஆனால் இணையம் என்ற இந்த உலகம் அறிமுகமானதும் என்னுடைய வாழ்க்கை பலவிதங்களிலும் மாறியுள்ளது என்பதை ஒவ்வொரு கணமும் யோசித்து பார்த்துக் கொள்வதுண்டு. 

ஏன் எழுத வந்தோம்? என்பதும் எதற்காக எழுதிக் கொண்டிருக்கிறாய்? என்ற கேள்வியும் சக்களத்தி சண்டையாய் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

நள்ளிரவு தாமதமாக வந்தாலும் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் உருவங்களை விளக்கு போட்டு ரசிக்கும் போது மனதில் வார்த்தைகளாக வந்து மோதும். அப்பா ஏன் இன்னும் வரவில்லை? என்ற கேள்வியை கேட்டவளுக்கு அடுத்தவள் பதில் சொல்ல அவர்களின் இரவு உறக்கத்தின் தொடக்க சண்டைகள் தொடங்கும். 

வீட்டுக்குள் நுழைந்ததும், என்ன நடந்தது? என்று கேட்க எப்போதும் போல மனைவியின் விவரிப்பில் சிறிது புன்னகை என்னுள் எட்டிப் பார்க்கும். ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பெற்ற பொம்மைகள் தள்ளிக்கிடக்க கோட்டோவியமாய் வினோத வடிவில் சுருக்கிக் கொண்டு படுத்துறங்கும் அவர்களின் தூக்கத்தை பார்த்து மனதில் வார்த்தைகள் வந்து வந்து போகும். 

இந்த தலையணை தான் வேண்டும் என்று போராடிப் பெற்ற போராட்டங்கள் அர்த்தமில்லாமல் ஏதோவொரு மூலையில் கிடக்கும். அவர்களின் தலையைச் சுற்றிய போர்வைகள் மூச்சு முட்டுமே என்று நகர்த்த முற்படும் போது அவர்களின் அனிச்சை செயல்கள் நமக்கு ஆச்சரியத்தை வரவழைக்கும். 

அதுவே எழுதத் தூண்டும் காரணியாகவும் பல சமயம் அமைந்து விடும். 

பலசமயம் அதிகாலை விழிப்பு அவஸ்த்தையாய் வந்து விடும். காரணம் அருகில் படுத்தவள் புரண்டு வந்து நெஞ்சுக்குள் புதைந்து விட திரும்ப முடியாத உடம்பில் கோழிக்குஞ்சு சுகத்தை ரசித்துக் கொண்டே எழுந்து விடுவதுண்டு. 

பல சமயம் அலுப்பாக இருக்கும். அவர்களின் கலைந்த ஆடைகளை கவனித்து போர்வையை போர்த்தி விட்டு வெளியே வந்து கதவு திறந்தால் குளிர் காற்று வரவேற்கும். கூடவே பக்கத்து வீட்டு பஜனை சப்தம் காதில் வந்து மோதும். அடிவாங்கி திரும்பி வந்துகொண்டிருக்கும் தமிழர்களைப் பற்றி கவலைப்படாமல் ஐயப்பனை காண வாருங்கள் என்று பாடிக் கொண்டிருப்பவர் இப்போது எங்கே இருப்பார் என்று யோசிக்க வார்த்தைகள் வந்து வந்து மோதும்.
விடியாத பொழுதில் சாலையில் ஆள் அரவமிருக்காது.  பகலில் பணம் துரத்தச் செல்லும் பறவைகள் இப்போது பாதுகாப்பான வீட்டுக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். 

நடமாட்டம் இல்லாத சந்தும், ஆய்த்தப்பணியில் இருக்கும் பறவைகளும் ஏதேதோ கவிதை சொல்லும். புலராத பொழுதுகள் புதிதாய் தெரியும். காணும் காட்சிகளை வார்த்தைகளாக கோர்ப்பதற்குள் பக்கத்து வீட்டு மனிதன் எப்போதும் போல தனது பயணத்தை தொடங்குவார். டாஸ்மாக் கடையை நோக்கி செல்லும் பயணம் அது. 

அவரின் பயணத்தை பார்த்துக் கொண்டே மதுவால் அழிந்தவர்களின் பலரின் வாழ்க்கை நினைவில் வந்து தாக்கும். அழிந்து போன பல கோடி வர்த்தக ஜாம்பவான்களின் கதைகளை நினைக்கச் சொல்லும்.  பள்ளிக்குச் செல்லாமல் பாரம் சுமக்கும் அவரின் மூத்த மகன் முகம் மனதில் வந்து மோதும். . 

உருவமாய், உணர்வாய் கோர்க்க முடியாத எழுத்துக்கள் உள்ளே ஓடிக் கொண்டேயிருக்கும்.   அதிகாலையில் மடிக் கணினி உயிர் பெற உள்ளூரைப் பார்த்த மனம் உலகத்திற்கு தாவும்.  மூகமூடிகளும் மூச்சு முட்டும் விவாதங்களுமாக இணையப் பெருவழியில் படம் காட்டிக் கொண்டு இருப்பவர்களையும் பலசமயம் மனம் இனம் கண்டு கொள்ளும்.

ஏதோவொன்றை தேட, என்ன நடக்கிறது என்பதை அறிய உதவும் இந்த இணைய மேய்ச்சல் எனக்கு ஏராளமான ஆச்சரியத்தை விதைத்துக் கொண்டேயிருக்கிறது. 

எத்தனை மனிதர்கள்? எத்தனை நிறங்கள்? 

பாசாங்கு, படப்டப்பு, வன்முறை, எரிச்சல், ஏமாற்றம், குரோதம், பொதுப்புத்தி என்று துப்பிய எழுத்துக்களை பார்க்க படிக்க அங்கங்கே பயரேகைகளும் உள்ளங்கையில் இருக்கும் ரேகை போலவே படிந்துவிடுகின்றது.  விவாதங்கள் வீபரீதமாகி தனிப்பட்ட நபர்களின் வினோத உருவங்களை உள்வாங்கிக் கொண்டேயிருக்கும். படிக்கும் வார்த்தைகள் நம் மனதின் வலிமையை உணர வைத்துக் கொண்டேயிருக்கிறது.

பால்காரரின் சப்தம் மனைவியின் அன்றாட கடமையை தொடங்கி வைக்கும்.  தேநீரை உறிஞ்சிக் கொண்டே உள்வாங்கும் செய்தித்தாள்களின் சார்புத்தனமான கட்டுரைகள், செய்திகளைப் பார்த்து சலிப்பைத்தந்தாலும் குழந்தைகளின் முழிப்பு கதையில் அடுத்த அத்தியாயம் போல மாறத் தொடங்கும்.  அவர்களின் அவசர ஓட்டத்தின் என் சிந்தனைகள் மாறி அவர்களுடன் நாங்களும் ஓடத் துவங்குகின்றோம். .

அவர்களின் அவசர ஓட்டங்கள் ஒவ்வொன்று ஒவ்வொரு புதுக்கவிதையை தந்து கொண்டு இருக்கும்.  நான் முந்தி, நீ முந்தி என்று குளியறையில் நடக்கும் கூத்தில் உலகத்தில் நாம் ஓட வேண்டிய அவசரத்தை அவர்களின் அவசரம் நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கும். இறுதியில் டார்வின் சொன்ன வலிமையானவர் குளித்துக் கொண்டிருக்க பக்கவாட்டில் அழுகை சத்தம் ஓங்காரமாய் ஒலிக்கும்.

வளர்ந்து கொண்டே இருக்கின்றோம் என்று உணர்த்தும் அவர்களின் துடுக்குத்தன பேச்சுகளில் உள்ளம் மகிழ்ந்தாலும் ஒரு மூலைக்குள் பேசியே நாட்டை ஆள வந்தவர்களின் தற்போதையை வாழ்க்கை நினைவலையில் நீந்தும். 

குளிக்க ஒரு போராட்டம், துவட்ட ஒரு போராட்டம் என்று அடுத்தடுத்து கதைக்களம் மாறிக் கொண்டேயிருக்கும். நடக்கும் பஞசாயத்தில் நான் தான் பலமுறை வாய் பேசதாக மன்மோகனாய் இருக்க வேண்டியதாக உள்ளது. அர்த்தப்பார்வையோடு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டேயிருப்பேன்.

கவனிக்கும் எல்லாவற்றையும் ஒரு கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.  அவசரத்தில் அவர்கள் மாற்றிப் போட்ட ஜட்டிகளின் வினோத வடிவம் வீட்டில் சிரிப்பலையை பரப்புகின்றது. . 

பவுடர் பூச்சு அதிகம் பெற்ற அவர்களின் முகத்தின் வழியே நான் பார்த்த பழைய நாடக அவதாரங்கள் வந்து போகும். பள்ளிக்கருகே வீடென்பதால் இவர்களுக்கு இப்போதெல்லாம் படிப்பதற்கு நேரம் கிடைக்கிறது. ஆனால் படிப்பதை விட்டு பலதையும் பேச சந்தைக்கடை போல உள்ளூர் முதல் உலகம் வரை மிதிபட்டு நசுங்குகின்றது.  

மடிக்கணினியில் இருக்கும் என் பார்வையும், அவர்களின் பேச்சுக்களை நோக்கியிருக்கும் என் காதுகளும் ஒரு கலவையான காலத்தை சுமந்து கொண்டு முன்னும் பின்னும் அலைந்து கொண்டேயிருக்கிறது. நான் செய்து கொண்டிருக்கும் வேலைகள் செக்கு மாட்டுத்தனமாய் மாறிவிடுகின்றது.  

அடங்க மாட்டீங்களா? என்ற சப்தம் சமயலறையில் இருந்து வரும்.  அடங்கி விட்டார்களோ? என்று ஆச்சரியமாய் பார்த்தால் அடுத்து அணுகுண்டாய் மாற்றி அவஸ்த்தையை உருவாக்குவார்கள்..

மாட்டிய சீரூடையில் மாறிப் போன ஷுக்களின் எண்கள் புதுக்கவிதை சொல்லும். கால் ஒரு பக்கம் ஷு ஒரு பக்கம் என்று கோணி நிற்க மூவரின் வாய்களும் சிரித்து நிற்க அவசரத்தில் நிற்கும் மனைவியின் வாயில் வார்த்தைகள் வசைமாறி பொழியத் தொடங்கும். குட்டிகள் உருவாக்கிய குட்டிப் பஞ்சாயத்தில் மீண்டும் நிறுத்தப்படுவேன். கத்திப்பார்த்த மனைவியின் சொல் காற்றில் பறக்க பல சமயம் மாட்டிக் கொண்டிருக்கும் ஷுக்களும் பறக்கத் தொடங்கும்.  

அலுத்துப் போனாலும் மனதில் வார்த்தைகளாக கோர்த்துக் கொண்டேயிருக்கின்றேன்.  ஆழ்மன அழுத்தங்கள் அகன்று விடுகின்றது.  குதுகலமாய் அவர்களின் கொண்டாட்டங்களில் .பங்கெடுத்து அதிகாலையில் பள்ளி நோக்கிய பயணம் தினந்தோறும் தொடங்குகின்றது.


அவர்களின் பயணங்கள் எனக்கு வாழ வேண்டிய அவசிய நம்பிக்கைகளையும் விதைத்தபடியே இருக்கிறது. தெரு முனையில் கொக்குபூ மரம். தொடர்ந்த வீடுகளில் மஞசள் பூக்கள் என்று சாலையில் ஏராளமாய் இறைந்து கிடக்க இவர்களின் இரைச்சல் சப்தத்தில் வழியெங்கும் மலர்வனத்தில் மூன்று பூக்களுடன் நடந்து கொண்டே இருக்கின்றேன்.  

நம்பிக்கை செடிகளை வளர்ப்பதும் முக்கியம். 

உரமிடுவது அதைவிட அவசியம். .

கவனிக்க பழகுங்கள். அவற்றை எழுதாக்க முயற்சித்துப் பாருங்கள். 

அவரவர் வளர்த்துக் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் நாளைய சரித்திரத்தை உருவாகக்கூடும்.
                           
                                                   +++++++++++++++++++++++++                            


அரசியல் பதிவுகளுக்கிடையே தமிழ்மண நட்சத்திர வாரத்தில் புதிய நடையில் எழுதிய ஆசைமரம் என்ற தலைப்பு அதிசயமாய் பக்கவாட்டில் மேலேறி வந்துள்ளது.

அதைப் போன்ற மற்றொரு தலைப்பு எழுத முடியுமா என்று முயற்சித்த தலைப்பு இது.

2011 வருடத்தின் இரண்டாவது நாள் எழுதிய பதிவு. தமிழ்மணம் 100 பதிவுகள் படுத்துக் கொண்டே ஜெயித்தவர். சர்ச்சையான பின்னூட்டங்கள்.


தொடரும் நண்பர்கள் அணைவருக்கும் எங்கள் இல்லத்தின் நன்றி.

Monday, December 26, 2011

வெள்ளைத் தோல் சிந்தனைகள் மாறுமா?

இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நிறுவியவர் என்றழைக்கப்படும் இராபர்ட் கிளைவ் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

குறிப்பாக நமது அரசியல்வாதிகள் அத்தனை பேர்களும் மோசம் என்று கருதிக் கொள்பவர்கள் இராபட் கிளைவ்பற்றி தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.

மேலை நாட்டு வரலாற்றாசிரியர்கள் இவரைப்பற்றி வானாளவ புகழ்ந்து எழுதித் தள்ளியிருக்கிறார்கள். வரலாறு என்பது எப்போதும் ஜெயித்தவர்களை கொண்டாடுவது வாடிக்கை என்றாலும் ஒழிந்திருக்கும் உண்மைகளை ஒரு நாள் வெளியே வரத் தானே செய்யும். .

கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் வர்க்கத்தை தொடங்குவதற்காக 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் முகலாய சக்ரவர்த்தியின் அனுமதியை பெற்றுருந்தது. அப்போது ஆங்கிலேயர்கள் நிறுவியது தான் தற்போது தமிழ்நாட்டு மாநில முதலமைச்சரின் அலுவலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் புனித ஜார்ஜ் கோட்டை. இந்த கோட்டையை அடிப்படையாகக் கொண்டு இப்போது சென்னை என்றழைக்கப்படும் நகரம் வளர்ச்சியடைந்தது. ஏறக்குறைய இந்த கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் மேல்மட்டத்தினர் உலாவும் பகுதியாகவே இருந்தது.


இந்த கோட்டைக்கு சாதாரண எழுத்தராக 1743ம் வருடம் வேலைக்கு வந்தவர் தான் இராபட் கிளைவ். அப்போது இவருடைய வருட சம்பளம் 15 பவுண்ட். ஆனால் இவர் சில வருடங்களிலேயே ஜெனரலாக பிற்காலத்தில் பிரபுவாக (பிலாஸி) தன்னை உயர்த்திக் கொண்டார். இவரைப்பற்றி எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் மிகச் சிறந்த மதிநுட்பமும், இராணுவ திறமையும் மிக்கவர்.

இதன் காரணமாகவே வாழ்வில் உயர்ந்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் ஆழமாக வேறூன்ற உதவினார் என்றே எழுதியிருக்கிறார்கள். ஆனால் இவரிடம் இருந்த ராணுவ பலம் என்பது வெகு சொற்பமே. மேலும் இவருடன் இருந்த முக்கால்வாசிப் பேர்கள் பொறுக்கிகளும், காலிகள், சமூகக் கழிசடைகள் போன்றவர்களும் தான் இருந்தனர்.

முகலாயர்களின் வழிவந்த நிலப்பிரபுத்துவ அரசர்கள் தமக்குள் இடைவிடாது சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். தன்னிடம் இருந்த விசுவாசமான போக்கிரிகளை துணை கொண்டு, இராபர்ட் கிளைவ் தந்திரத்தாலும், வஞ்சகம், சூதுக்களாலும் முறியடித்து படிப்பயாக இங்கே சாம்ராஜ்யத்தை விரிவாக்கினார்.

இந்தியாவின் முதல் தலைமுறை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இன்றைய அரசியல்தலைவர்களின் முன்னோடியாக திகழ்ந்தனர். லஞ்சம், ஊழல், பொறாமை, பேராசை, காட்டுமிராண்டித்தனம், எது குறித்தும் அஞ்சாமை போன்றவற்றை குணாதிசியமாக வைத்து இந்தியாவை முடிந்தவரைக்கும் சூறையாடினர்.

இராபட் கிளைவ் கவர்னராக இருந்த போது மற்றொரு காரியத்திலும் கவனமாக இருந்தார். இந்தியாவின் கல்வி முறை, விவசாய முறையையும் நீண்ட ஆராய்ச்சியாக எடுத்துக் கொண்டு முடிவாக இரண்டு தீர்மானத்திற்கு வந்தார். கல்வியை மெக்காலே என்ற புண்ணியவான் எடுத்துக்கொள்ள இவர் விவசாயத்தில் கை வைத்தார்

கால்நடைகள், மற்றும் பசுக்கள் இந்திய விவசாயத்திற்கு ஆதாரமாக இருப்பதை அழிக்க வேண்டுமென்று கணக்கில் எடுத்துக் கொண்டு 1760 முதல் பசுவதைக்கூடம் நிறுவி நாள்தோறும் கறிக்காக என்ற நோக்கில் 50,000 கால்நடைகளை கொல்லும் புனிதப்பணியை துவங்கினார்.

ஒரு ஆண்டில் மட்டும் கொல்லப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை ஒரு கோடியாகும்.

காரணம் அப்போது இந்தியாவில் இருந்த விவசாயம் நம்முடைய கால்நடைகளின் சாணம், மூத்திரம் இவற்றை அடிப்படையாகக் கொண்டே ஒரு ஏக்கரின் மூலம் 54 குவிண்டால் அரிசியை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. 1910 வரைக்கும் இரவு பகலாக இந்த பசுவதைக் கூடம் இயங்கிக் கொண்டேயிருந்தது. இன்று வரைக்கும் நவீணமாக்கப்பட்டு இந்த தொழில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதன் பலன் இன்று கோடிக்கணக்கான பணத்தை இறக்குமதி ரசாயன உரத்திற்கு கொண்டு போய் கொட்டி மானிய விலையில் உழவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
பழங்கதை பேசாதே என்று எளிதாக பலவற்றை புறந்தள்ளி விடுகின்றோம்.

நமது விவசாயத்தில் இருந்த ஏராளமான சாத்தியக்கூறுகள் இன்று இருந்த சுவடே தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டது.

ஒரு சின்ன உதாரணத்தை பார்த்து விடலாம்.

விதை நெல் கோட்டை என்பது கீழ் தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு நன்றாக தெரிந்த வார்த்தை இது. தங்களுக்கு தேவைப்படும் விதை நெல்லை சேகரிக்கும் முறையைத்தான் இப்படி குறிப்பிடுவார்கள். அறுவடை முடிந்ததும் விதை நெல்லை நன்றாக வெயிலில் காய வைத்து சுத்தமான வைக்கோலைக் கொண்டு பிரி (கயிறு போன்று திரித்து) செய்து அதன் மேல் வைக்கோல் பரப்பி அதில் 18 மரக்கால் (55 கிலோ) விதை நெல்லை வைத்து பந்து போல இறுக்கி சுற்றி வைத்து விடுவார்கள். இதற்கு பெயர் தான் விதை நெல் கோட்டை.

இந்த கோட்டையின் மேல் காற்றுப் புகாதவாறு பசு மாட்டு சாணத்தை பூசி நன்றாக காய்ந்த பிறகு தனியாக ஒரு பகுதியில் அடுக்கி வைத்து விடுவார்கள். இது போன்று செய்வதால் உள்ளே உள்ள நெல் ஒரே தட்பவெப்ப நிலையில் இருக்கும். எந்த பூச்சி புழுவும் அண்டாது. தேவைப்படும் போது இதை தனியாக எடுத்து அப்படியே 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து மூன்று நாட்கள் முட்டம் போட வைத்து அப்படியே நாற்றாங்காலில் தெளிக்க பயிர்கள் ஜம்மென்று பச்சையாய் சிரிக்கும்.

ஆனால் சணல் பைக்கு மாறி ப்ளாஸ்டிக் பைக்கு மாறி இன்று இன்னும் பல நவீன வசதிகளுடன் வந்து விட்டது. இன்று பச்சையாய் பயிர் சிரிக்கவில்லை. விவசாயிகளுக்குத் தான் பயிர் பலன் தருவதற்குள் இரத்தம் சிவப்பாய் வருகின்றது.

இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு சென்று கொண்டிருந்த செல்வம் அங்கே தொழிற்துறையை வெகு சீக்கிரமே முன்னேற்ற உதவியது. இந்தியாவுடன் வர்த்தகம் செய்து கொண்டிருந்த பிரிட்டன் தொழிலதிபர்களுக்கு கிடைத்த அபரிமிதமான லாபத்தைப் போலுள்ள உதாரணத்தை உலக பொருளாதார உறவுகளின் வரலாற்றிலேயே பார்க்க முடியாது.

உலகத்தின் தொழிற்சாலையாக பிரிட்டன் மாறுவதற்கு இராபட் கிளைவ் உதவினார்.


அத்துடன் தனக்காக சேர்த்த சொத்துக்களும் கணக்கில் அடங்காது. நகையாக, பணமாக, பண்ணை வீடுகளாக என்று சேர்த்து குவித்தார். இதையே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் " இந்தியர்கள் தங்களுடைய பாதாள அறைகளிலிருந்த தங்கத்தையும் மாணிக்கங்களை எனக்கு முன்னால் குவியலாகக் கொட்ட அந்த குவியல்களுக்கிடைய நான் உலாவுவதுண்டு " என்று ஆணவமாக பேசினார்.

இதைத்தான் நேரு பின்வருமாறு எழுதினார்.

"அது பகற்கொள்ளையே. அவர்கள் "பண மரத்தை" ஆட்டினார்கள். பயங்கரமான பஞ்சங்கள் வங்காளத்தை அழிக்கும் வரை அந்த மரத்தை திரும்பத்திரும்ப ஆட்டினார்கள்."

ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடத்திக் காட்டிய இந்த அரசியல் அயோக்கியனுக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் என்ன பெரிதான வித்யாசம்?

அப்போதும் இப்போதும் எப்போதும் அரசியல் என்பது தந்திரம், சமார்த்தியம், சுயநலம் இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு தான் இயங்குகின்றது. அன்று நம்முடைய வளங்கள் பிரிட்டனுக்கு மட்டுமே சென்றது. இப்போது கருப்பு பணமாக பல நாட்டு வங்கிகளுக்கும் சென்று கொண்டுருக்கிறது.

தற்போது ஸ்விஸ் வங்கியில் மட்டும் இருக்கும் இந்தியர்களிள் பணம் 25 லட்சம் கோடி. மற்ற வங்கிக் கணக்குத் தொகை எத்தனையோ?. .

இந்தியக் கறுப்புப் பணத்தின் அளவு, இந்தியாவின் மொத்தக் கடன் தொகையிலும் அதிகம் என்கிறார்கள்.

                                                ++++++++++++++++++++++++++

தென்னிந்தியாவின் கதை தான் இப்படி என்றால் இந்தியாவின் அதிபர் மாளிகை எப்படி உருவானது?

1910 ஆம் ஆண்டு முதல் 1916 ஆண்டு வரைக்கும் பல்லாயிரக்கணக்கான இந்திய வேலையாட்களை, ஆங்கில கட்டிடக்கலை நிபுணர்களைக் கொண்டு அப்போது வைசிராயாக இருந்த ஹார்டிங் பிரபு தேர்ந்தெடுத்த இடம் எப்படிப்பட்டது தெரியுமா?

14 ஆம் நூற்றாண்டில் கொடூரமான தைமூர் போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் மண்டை ஓடுகளைக் கொண்டு அந்த இடத்தில் ஒரு பிரமீடைக் கட்டியதாக சொல்லப்படுவதுண்டு. இந்த இடத்தில் மொகலாயச் சக்கரவர்த்திகள் சிவப்பு பாறைக் கற்களைக் கொண்டு தங்களுடைய ஆட்சிக்கு நினைவுச் சின்னங்களான செங்கோட்டை, ஜும்மா மசூதியையும் கட்டினார்கள். ஆனால் ஹார்டிங் பிரபுக்கு இது போன்ற வரலாற்று பின்புலம் பற்றி எதுவும் தெரியாமல் நிர்மாணித்த கட்டிடம் தான் இன்று வரைக்கும் இந்தியாவை ஆட்சி செய்ய உதவிக் கொண்டிருக்கின்றது.

சாம்ராஜ்யங்கள் சாம்பலாகிப் போவதும், மீண்டும் வேறொரு வகையில் உயிர்தெழுவதுமான இந்த நிகழ்வுகள் கால வரலாற்றில் வந்து போய்க் கொண்டேதான் இருக்கிறது.

வரலாற்றில் எத்தனையோ பேரரசுகள் வந்து போன சுவடே இல்லாமல் அழிந்தும் போய்விட்டது. பழங்காலத்தில் தோன்றிய வட ஆப்பிரிக்காவில் தோன்றிய பேரரசுகள், மத்திய கிழக்கு ஆசியா, பாரசீகம், கீரிஸ்,ரோம், சிலுவைப் போர்கள், கொலம்பஸ்க்கு பிறகு வந்த ஐரோப்பிய பேரரசுகள் போன்றவற்றின் ஏகாதிப்பத்திய வளர்ச்சியே பெரும்பாலான போர்களுக்கும், உலகில் பசி, பட்டினி, பஞ்சம் போன்றவை உருவாக காரணமாக இருந்தது.

பல்லாயிரக்கணக்கான மக்களின் கலாச்சாரம், பண்பாடுகளையும் காணாமல் போகவும் வைத்தது. உலகில் அமைதியற்ற சமூகங்களை உருவாக்கிய பேரரசுகள் தங்கள் நாடுகளில் அதிக அளவு போதைப் பழக்கத்தையும் மனோ ரீதியான பிரச்சனைகளும் உடைய நாகரிக மனிதர்களையும் தான் வளர்க்க முடிந்துள்ளது.

ஆனால் இன்று வரைக்கும் அமெரிக்கா தனது ஏகாபத்திய வாழ்க்கையை இழந்துவிட தயாராய் இல்லை என்பதை இங்கே குறிப்பிடலாம். பிரிட்டன் வரலாற்றை உற்றுக் கவனித்துப் பாருங்கள்.

எந்த இடத்திலும் ஒரு துளி கூட கருணை, காருண்யம், மனிதாபிமானம் என்பதை மருந்துக்குகூட பார்க்கமுடியாது. வெறிகொண்ட வேங்கை போலத்தான் வேட்டையாடி தங்களை வளர்த்துக் கொண்டே வந்துள்ளார்கள். ஆனால் அமெரிக்காவை ஆண்டவர்கள் இன்று அமெரிக்காவை அண்டிப் பிழைப்பவர்களாக மாறியுள்ளது காலத்தின் கோலம் தானே?

உலக வரலாற்று சரித்திரத்தில் எந்த பேரரசும் நீடித்து இருந்ததாக சரித்திரமே இல்லை. இன்று வியப்பை தந்து கொண்டிருக்கின்ற அமெரிக்காவின் நிலையும் இதுவே. எந்த நாடும், தனி மனிதனும் மற்றவர்களை சுரண்டி நீண்ட காலம் வாழ்ந்ததாக இல்லை.

ஆனால் இந்தியா கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகவும் ஏராளமான பஞ்சம், பசி, பட்டினிகளைத் தாண்டி வந்தபோதிலும் இன்று வரையும் அடிப்படை கட்டுமானம் சிதையாமல் தானே இருக்கிறது? எப்படி?

இந்தியா இப்போது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட உயர்ந்திருக்கிறது. உண்மை தான். முழுமையான கல்வியறிவு தேசம் என்று இல்லாவிட்டாலும் கூட நடுத்தர வர்க்கத்தின் மூளை அறிவு இன்று உலகம் முழுக்க மென்பொருள் துறை முதல் பல்வேறு துறைகளிலும் கொடி கட்டி பறக்கின்றது. இந்தியர்கள் உலகம் முழுக்க பரவ காரணமாகவும் இருக்கிறது.. இதை மற்றொரு வகையில் பார்க்கப் போனால் நவீன அடிமைகளை உருவாக்கி உலகம் முழுக்க அனுப்பிக் கொண்டிருக்கின்றோம்..

இந்தியர்களின் திறமையை உள்நாட்டில் பயன்படுத்த ஆளில்லாத காரணத்தால் எவர் வந்து நம்மை கொத்திக் கொண்டு போகமாட்டாரோ என்று ஏக்கத்தில் தான் ஒவ்வொரு துறையிலும் இருப்பவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நிறுவன வர்க்கமும் அதிகார வர்க்கமும் உருவாக்கும் கூட்டணியின் மூலம் இந்த பரந்த உலகம் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரப்படுகின்றது. மேல்தட்டு மக்களை அவர்களின் வாழ்க்கையை விளம்பரங்களும், ஊடகங்களும் முன்னிறுத்துகின்றது. நடுத்தர வர்க்கத்தையம் அவ்வாறு ஒருவிதமான வாழ்க்கை வாழ் வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது.

உலகமயமாக்கல், தராளமயமக்கல், பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் எல்லாவிதமான வசதிகளையும் பெறுவதும் பின்னால் உள்ளவர்களை சுரண்டலுக்கு உட்படுத்திக் கொண்டிருப்பதுமே ஆகும்.

இதன் காரணமாகவே எனக்கு என்ன லாபம்? என்ற பேராசை என்பது அடித்தட்டு மக்கள் முதல் அதிகாரவர்க்கம் வரைக்கும் ஊடுருவிப் போனதால் எவரிடம் சேவை மனப்பான்மையை எப்படி எதிர்பார்கக முடியும். மாற்றம் என்பது தனிமனிதனில் இருந்து தொடங்குவது என்பதையே நாம் உணராமல் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இங்கு மதம் முக்கியம். அதற்குள் பிரியும் ஜாதிக்கூறுகள் அதைவிட முக்கியம். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவராக இருந்தாலும் பள்ளர் எவரும் பறையரை திருமணம் செய்ய விரும்பதில்லை. செட்டியார் எவரும் நாடாரை நினைத்துப் பார்ப்பதில்லை. இதைவிட முக்கியம் அவரவரின் கடவுள் நம்பிக்கை.

இந்தியர்களின் பெரும்பாலனோருக்கு இருக்கும் மறுபிறவி நம்பிக்கை ஒன்று தான், நிகழ்கால அவலத்தை பொறுத்துக் கொள்ள வைக்கின்றது. விலங்குகள் போல நின்று கொண்டே மூத்திரம் போய்க்கொண்டிருக்கும் சந்தை கடந்து போய் தெரு முனையில் இருக்கும் கோவில் தரிசனத்தை பயபக்தியுடன் வணங்குவது நம்முடைய பண்பாடு..

ஒழுக்கத்தை விட நமக்கு பயமே முக்கியம். 

அந்த பயம் ஒவ்வொருவர் மனதிலும் இருந்து கொண்டேயிருப்பதால் இவ்வளவு பெரிய நாட்டை மிகக்குறைவான கண்காணிப்பு மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிகின்றது. 

அவரவர் மத நம்பிக்கைகளின் காரணமாகவே மதத்தால், மொழியால், ஜாதியில், குணத்தால் பிரிந்து வாழும் இந்த அகண்ட தேசம் பலவீனமாகாமல் தொடர்ந்து சிறிதளவேனும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ..

                                                                 ++++++++++++++++++++++++++

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்த போது கூட பெரும்பாலன மக்கள் தங்கள் அன்றாட கடமைகளில் தான் கவனமாக இருந்தார்களே தவிர எவர் ஆட்சி செய்கிறார்கள் எவ்வளவு கொள்ளையடிக்கிறார்கள் என்பதைப் பற்றி எந்த அக்கறையும் இருக்கவில்லை. இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் அன்று தங்கள் உழைப்பின் மூலம் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தார்கள். காந்தி அழைத்தவுடன் பாரபட்சம் இல்லாது சத்தியாகிரக போராட்டத்தில் பங்கெடுத்து சுதந்திர பொறியை பற்ற வைத்தார்கள்.

இப்போது தகுதியான தலைவர்கள் எவரும் இல்லாத போதும் அடிப்படை வாழ்வாதாரமே பாதிப்படைய போகின்றது என்றதும் கம்பம் பகுதியில் தன் எழுச்சியாக கேரளவுக்கு எதிர்ப்பை காட்டும் பட்சத்தில் ஒரு லட்ச மக்கள் திரண்டுள்ளார்கள்.

புரட்சி என்பது எப்போது உருவாகும்?.

இன்று வாழ்வாதாரம் பாதிக்கப்போகின்றது என்றதும் லட்சக்கணக்கில் திரளும் மக்கள், நாளை உணவுக்கே பஞ்சம் என்றால் எத்தனை கோடி பேர்கள் இது போன்ற புரட்சியில் இறங்கக்கூடும்?. மாற்றத்தை விரும்புவர்கள் அதிகமாகும் போது இது போன்ற தன்னெழுச்சியான நிகழ்வுகள் நடந்தே தீரும்.

நமது இந்தியாவை அதிக காலம் ஆண்டுள்ள காங்கிரஸ் வந்துள்ள பாதையில் இன்று நாடே திக்குத் தெரியாத பாதையில் போய்க் கொண்டிருக்கின்றது.

ஏன்?

                                                ++++++++++++++++++++++++


1929 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்திஜி நேருவை முன்மொழிந்தார். காந்தி தனக்குப் பதிலாக அந்த பதவிக்கு மிக பொருத்தமானவர் நேரு என்றே தீர்மானமாக நம்பினார். சர்தார் வல்லபாய் படேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் வேறு சில செல்வாக்குள் காங்கிரஸ்கார்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. மூர்க்கத்தனமான போட்டி பொறாமைகளுக்கிடையே நேரு கூட இந்த பதவியை விரும்பவில்லை. காரணம் காங்கிரஸ் கட்சியில் கூட பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு ஒத்து ஊதி காலத்தை ஓட்டிவிடலாம் என்ற மாற்றத்தை விரும்பாதவர்கள் என்ற ஆதிக்கமும் சரிக்கு சரியாக இருந்தது.


இதன் காரணமாகவே காங்கிரஸ் செயற்குழு தலைவராக இருந்த சி.ஆர். தாஸ் பதவி விலகினார். ஆனால் இன்று வரையிலும் இந்தியாவிற்கு மாற்றம் வேண்டும் என்ற எண்ணிக்கை கொண்ட ஆட்சியாளர்கள் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் அத்தனை நோக்கமும் ஏதோவொரு நாட்டின் மூலம் இந்த மாற்றம் இருக்க வேண்டும் என்று எண்ணத்தில் முடிவது தான் நாட்டின் பிரச்சனையின் தொடக்கமாக இருக்கிறது. இப்போது மன்மோகன் சிங் நம்பும் அமெரிக்கா உலகத்திற்கு சொல்ல விரும்பு செய்தியை ஒரே ஒரு உதாரணம் மூலம் நம்மால் சொல்லிவிட முடியும்.

அமெரிக்கா சமீபத்தில் ஈராக்கில் போர் நடத்த 87 பில்லியன் அமெரிக்கன் டாலர் செலவழித்தது. ஆனால் உலகமக்கள் அணைவருக்கும் சுத்தமான நீரும், போதுமான உணவும் மற்ற அடிப்படை வசதிகளும் கல்வியும் அளிக்க இதில் பாதித் தொகையே தேவைப்படும் என்று ஐ.நா சபை மதிப்பிட்டுள்ளது. 

உலகத்திற்கே அமைதியை போதிக்கும் அமெரிக்கா ஏன் இவ்வாறு செய்கின்றது? 

அது தான் அமெரிக்காவிற்கென்றே இருக்கும் அராஜக அரசியல்.

அமெரிக்கா இந்தியாவின் மேல் வைத்துள்ள கழுகுப்பார்வை என்பது இன்று நேற்றல்ல. சுதந்திரம் பெற்று முதல் பிரதமராக இருந்த நேரு காலத்தில் இருந்தே நடைபெறுகின்றது.

உலோகத் தொழில், மின்சார சக்தி உற்பத்தி, இரசாயனம், இயந்திரங்களைக் கட்டுதல், போக்குவரத்து, சுரங்கத் தொழில் போன்ற துறைகளை வளர்க்கப்பட வேண்டும் என்று நேரு கொண்டு வந்த ஐந்தாண்டு திட்டத்தைப் பார்த்து அப்போது டில்லியில் அமெரிக்க தூதராக இருந்த ஹென்ரி ஜே. கிரேடி சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?

"இந்தியாவை தொழில் வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற முயற்சிப்பது அதன் பொருளாதார வளர்ச்சியின் "இயற்கையான போக்கை" அழிப்பதில் கொண்டு போய்விடும்" என்று பயமுறுத்தினார். மேலும் நேரு ஒரு மறைமுக கம்யூனிஸ்ட் என்று தூற்றினார்.

இவ்வாறு சொன்ன அமெரிக்கா நேருவை தங்கள் ப்க்கம் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று பலவித முயற்சிகளையும் செய்து பார்த்து 1948 ஆம் ஆண்டே அமெரிக்கா வரச்சொல்லி அவருக்கு அழைப்பு விடுத்தது. காலம் கடத்தி ஆனால் உறுதியான நிலைப்பாட்டுடன் அமெரிக்க சென்ற போது (1949 அக்டோபர்) வாஷிங்டன் விமான நிலையத்தில் நேருவை வரவேற்ற அதிபர் ட்ரூமன் பின்வருமாறு கூறினார்.

" உங்கள் நாட்டுக்குப் புதிய பாதையைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டவர்கள் எங்கள் நாட்டைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பது விதியின் முடிவாக இருந்தது. உங்கள் வருகை ஒரு அர்த்தத்தில் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதாக இருக்குமென்று நம்புகின்றேன்."

ஆனால் அமெரிக்கா எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை.

இந்திய சுதந்திரத்தில் எந்த வித கட்டுப்பாடுகளையும் விதிக்க அமெரிக்காவுக்கு எந்த யோக்கியதையும் இல்லை என்று வெற்றி நடை போட்டு இந்தியர்களை நம்பி இந்தியாவை வடிவமைக்கத் தொடங்கினர். ஆனால் அன்று நேரு காங்கிரஸ் தொடங்கிய பயணம் இன்று இத்தாலி காங்கிரஸ் ஆக மாறி, மறுபடியம் அதே அமெரிக்காவின் காலடியின் சமர்ப்பிப்பதில் முடிந்துள்ளது.

இதைத்தான் வாழ்க்கை என்பது ஒரு வட்டம் என்று சொல்கிறார்களோ?....

இங்கே எடுத்து நோக்கப்பட்ட விடயங்கள் எண்ணத்தில், சிந்தனையில், ஏற்றப்பட்டால் இந்தியர்கள் எல்லோர்க்கும் வாழ்வு .

இல்லையேல்.......?



தொடர் பயணத்தில் பங்கெடுத்த உங்களுக்கு என் நன்றி.

4 தமிழ்மீடியாவில் தொடராக வெளிவந்தது. அதன் ஆசிரியர்  வார்த்தைகளில்.........

இவ்வாறான ஒரு தொடர் ஒரு இணைய ஊடகத்தில் வெளிவருவதனால் எவ்விதமான சாதகங்களைத் தோற்றுவிக்க முடியும் என்ற கேள்வி எழுவது நியாயமானதே.   பாதிக்கப்படும் விவசாயிகளில் பலரும் பாமர மக்கள். அவர்களுக்கு இணைய வாசிப்போ இது போன்ற விடயங்களோ சென்றடைந்துவிடுமா..? என்ற கேள்விக்கு இல்லையென்பதே மிகத் தெளிவான பதிலாக இருக்க முடியும்.

அப்படியானால் யாருக்காக இந்த முயற்சிகள்..?

சந்தேகமில்லை. இந்த முயற்சிகள் இணையப் பாவனையில் உள்ள நடுத்தர மற்றும் படித்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே.

ஏகாதிபத்திய சாம்ராஜ்யங்கள் இன்று இந்த நடுத்தரவர்க்கத்தையே குறிவைத்துக் காய் நகர்த்துகின்றன. தாம் சுரண்டப்படுவது தெரியாமலே  நம்பிக்கை மோசம் போய்க் கொண்டிருக்கிறது இந்த நடுத்தர வர்க்கம்.

வெள்ளந்திகளான பாமார மக்கள் பாதிப்புத் தமக்கென உணரும் போது, உணர்வோடு போராடப் புறப்பட்டுவிடுகின்றார்கள். அவ்வாறு புறப்படுபவர்களை ஆட்சியாளர்கள் தீவிரவாதிகளாகவோ, அல்லது வேண்டத்தகாதவர்களாகவோ உருமாற்றிக் காட்டும் போது, அதையே  உண்மையென உச்சுக் கொட்டி ஏற்றுக் கொள்ளும் ஏமாளிகளாக அல்லது எதிர்ப்பதற்கு இயலாதவர்களாக இருப்பவர்கள் இந்த நடுத்தர வர்க்கத்தினர்.

வழங்கப்படும் ஏட்டறிவு, வேலைவாய்ப்பு, அதற்கும் மேலான பொழுது போக்குச் சுவாரசியங்கள் எல்லாமே, இதற்கெனத் திட்டமிட்ட வகையிலேயே காப்ரேட் கடவுளர்களால் படைக்கப்பட்டு, இரட்சிக்கப்படுகிறது நடுத்தரவர்க்கம். அதனால்தான் இவ்வாறான சிந்தனைகள் இணையவழியில் அவர்களிடத்தில் பகிரப்பட வேண்டும், படிக்கப்பட வேண்டும் என்பதை விரும்புகின்றோம்.

எல்லைகள் தாண்டிப் பயணிக்கும் இணையவழியில் இவ்வாறான செய்திகள் எண்ணற்ற பேர்களைச் சென்றடைய வேண்டுமென்பதே எங்கள் விருப்பம். அந்த விருப்பத்தின்படி ஆயிரக்கணக்கான பேர்களை இந்தத் தொடர் சென்றடைந்திருக்கின்றது. அதற்கப்பால் சில முக்கிய நிலைகளிலும் முட்டி மோதியிருக்கிறது என்பதையும் அறிவோம். ஆனால் உள்வாங்கி உணர்ந்து கொண்டோர் ஓராயிரம் பேர்களல்ல ஒரு நூறு பேராக இருந்தாலும், அதுவே  ஆரம்பம்....!

Friday, December 23, 2011

தற்கொலை தந்தை


காரல் மார்க்ஸ் சொன்ன " நிலமென்பது விவசாயிகளுக்கு ஆண்டவன் கொடுத்த சொத்து அல்ல. அதன் வரப்புகள் விவசாயிகளின் கரங்களிலே பூட்டப்பட்டு இருக்கும் விலங்கு" என்ற கருத்து இன்று வரைக்கும் பொருத்தமாகத்தானே இருக்கு.  

இன்று விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் நம்முடைய அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக ஒவ்வொரு நிலையிலும் துன்பங்களை மட்டும் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய விவசாயத்தைப் பற்றி பேசும் வேறு சில விசயங்களையும் நாம் பார்க்க வேண்டும்.

"இந்தியாவை மானியமும் இலவசமும் தான் கெடுத்து குட்டிச் சுவராக்கிவிட்டது."

"சிறிய அளவில் இருக்கும் விவசாய நிலத்தினால் நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. இதுவே பெரிய நிலங்களாக இருக்கும் போது விவசாயத்தை ஒரு தொழிலாக செய்ய வாய்ப்பு அதிகம்."

"எந்த பயிரில் பணத்துக்கான வாய்ப்போ அதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் நம்முடைய விவசாய முறையில் இந்த புரிதல் இல்லாத காரணத்தினால் அரசாங்கத்தை குறை சொல்வதில் பலன் ஒன்றுமில்லை."

நம்முடைய பொருளாதார அறிஞர்களும், படித்த மேதைகளும் இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா இன்னமும் வளராமல் இருக்க இவைதான் முக்கிய காரணமா?.

ஏன் மானியம்? எதற்காக மானியம்? போன்ற எதையும் நம்மவர்கள் யோசிக் விரும்பதில்லை. 

விவசாயத்தில் ஒரு பெரிய புரட்சியே நடத்திக்கொண்டிருக்கும் மேலை நாடுகளைப் பார்த்தாயா? என்று நம் அரசாங்கமும் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. உண்மைகளை அதன் அருகே சென்று கூட எவரும் பார்க்க விருப்பப்படுவதில்லை என்பது தான் உண்மை.

ஒவ்வொரு வளர்ச்சியடைந்த நாடுகளும் தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு இன்று வரைக்கும் மானியம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும்.

உலக பொருளாதார கொள்கையின்படி மொத்த உள்நாட்டு வளர்ச்சியின் அடிப்படையில் பத்து சதவிகிதம் வரைக்கும் தாரளமாக மானியம் கொடுக்கலாம். உலக நாடுகளே ஒத்துக் கொண்ட கணக்கு இது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் அவர்களின் மொத்த வளர்ச்சியில் விவசாயிகளின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகவே இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 7 லட்சம் மட்டுமே. ஆனால் இதே அமெரிக்காவில் இரண்டாவது உலகப் போருக்கு முன்னால் 3 கோடி விவசாயிகள் இருந்தனர்.

கார்ப்ரேட் பாணியில் விவசாயம் என்று சொல்லியே கார்ப்ரேட் நிறுவனங்கள் கைப்பற்ற இன்று அமெரிக்காவில் விவசாயம் என்பது பணக்காரர்களின் தொழிலாக மாறிப்போனது. அமெரிக்கா கொடுக்கும் மானியமும் இவர்களைப் போன்றவர்களுக்குத் தான் போய்ச் சேருகின்றது. முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அவருடைய ஆட்சி காலத்தில் மட்டும் மானியமாக கொடுத்த தொகையின் அளவு ஒன்னரை லட்சம் கோடி.

உலகத்தின் மொத்த சந்தையும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் இருப்பதால் விலைக்கான உரிமையிலும் கை வைத்து ஒரே கல்லில் பல மாங்காய் என்று செழிப்பாக வளர்ந்து கொண்டிருப்பது விவசாயம் அல்ல இந்த விவசாயப் பணக்காரர்கள். ஒவ்வொரு பொருளும் விலையேற வளரும் நாடுகளுக்கு பேரிடியாக இருக்கிறது.

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் விவசாயத்தை நம்பியே பெரும்பாலானோர் இருப்பதால் மானியத்தொகை என்பது மற்றவர்களுக்கு பூதாகரமாக தெரிகின்றது. ஆனால் இந்தியாவில் விவசாயம் என்ற துறைக்கு வழங்கப்படும் மானியத்தின் அளவு 2.33 சதவிகிதம் மட்டுமே. 

இந்த இடத்தில் மற்றொன்றையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அரசாங்கம் கொடுக்கும் மானியத்தொகை அப்படியே விவசாயிகளுக்கு வந்து விடுகின்றதா?

ஊழலைப்பற்றி சில வார்த்தைகள் இந்த இடத்தில் பேசிவிடலாம்.

19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா வளர்நது கொண்டிருந்த சூழ்நிலையில் அங்கேயும் ஊழல் நதி போலத்தான் ஓடிக் கொண்டிருந்தது. சீனாவில் மா வோ வுக்கு பின்னால் வந்தவர்கள் முதல் இன்று வரைக்கும் அங்கேயும் ஊழல் பெருக்கெடுத்து வெள்ளம் போல பாய்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த நாடுகளில் ஊழல் செய்பவர்கள் தாங்கள் செய்யும் வேலைக்காக செய்கிறார்கள். அதற்கான உழைப்பையும் கொடுத்து சம்மந்தப்பட்ட துறைகளை, தொழில் அதிபர்களையும் வளர்த்து விடுகிறார்கள். ஏறக்குறைய அரசு எந்திரத்தில் போடப்படும் எண்ணெய் போல.

ஆனால் ஆப்ரிக்கா நாட்டில் நடக்கும் ஊழல் போலத்தான் இந்தியாவில் போய்க் கொண்டிருக்கிறது. மொத்த தொகையையும் விழுங்கி ஏப்பம் விடுவதால் எந்த வேலையும் நடந்தபாடில்லை. நாடும் வளர்ச்சி அடைந்தபாடில்லை. இந்த ஊழல் தான் இந்திய விவசாயத்துறை முதல் மற்ற அத்தனை துறைகளும் வளராமல் போனதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

உலக அளவில் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் மொத்தமும் சேர்ந்து தங்கள் விவசாயிகளுக்கு கொடுக்கும் மொத்த மானியத் தொகையே 19 பில்லியன் டாலர்கள் மட்டுமே. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளின் மானியத் தொகையின் அளவு எவ்வளவு தெரியுமா? 150 பில்லியன் டாலர்கள்.

ஒவ்வொரு முறையும் உலக வங்கி வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளைப் பார்த்து மானியத்தை குறைக்க வேண்டும் என்கிறார்களே?

ஏன்?

அரசாங்கம் கொடுக்கும் மானியத்தை நிறுத்திவிட்டால் விவசாயி இயல்பாகவே விவசாயத்தை விட்டு வெளியே வந்து விடுவான். பிறகென்ன? தேவைப்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களை அபகரிக்க வசதியாகத்தானே இருக்கும். கார்ப்ரேட் பாணியில் விவசாயத்தை தொடங்கி விடுவார்கள். ஒரே சமயத்தில் ஒரு உணவுப் பொருளின் விலையை ஏற்றலாம், இறக்கலாம், பதுக்கலாம். பக்கத்து நாடுகளுக்கு ஏற்றுமதி கூட செய்யலாம்.

இன்னும் கூட கொஞ்சம் உள்ளே நுழைந்து ஒவ்வொரு நாடும் தங்கள் விவசாயிகளுக்கு எந்த அளவு மானியத்தை கொடுக்கின்றார்கள் என்பதை பார்த்து விடலாம்.

இது ஹெக்டேர் நிலத்திற்கு கொடுக்கப்படும் மானியத்தின் அளவு.

அமெரிக்கா 32 டாலர் ஜப்பான் 35 டாலர் சீனா 30 டாலர் தென் ஆப்ரிக்கா 24 டாலர் ஆனால் நம்முடைய இந்தியா விவசாயிகளுக்கு கொடுத்துக் கொண்டிருப்பது வெறுமனே 14 டாலர் மட்டுமே. இது உலக வர்த்தக அமைப்பின் அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட கணக்காகும்.

மற்ற நாடுகளோடு இந்தியா போட்டுள்ள ஒப்பந்தங்களின்படி எண்ணெய் பொருட்களுக்கு பூஜ்ய வரிவிதிப்பு என்பதால் மற்ற நாடுகளில் உள்ள அத்தனை எண்ணெய்களும் இங்கே வந்து இறக்குமதியாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் எண்ணெய் ஆலைகள் பெரும்பாலும் மூடு விழாவை நடத்தி விட்டது.

உள்நாட்டில் உள்ள பதுக்கல் மூலம் சம்பாரிப்பவர்கள் ஒரு பக்கம். உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மறுபக்கம். பயிர் செய்தவனுக்கு என்ன மிஞ்சம்? தரகு வேலையே தரமான வாழ்க்கை என்று மாறியுள்ள உலகத்தில் நீங்கள் என்ன சொன்னாலும் முட்டாளாகத்தான் பார்க்கப்படுவீர்கள்.

எள், கடலை சாகுபடி செய்யபவர்கள் உரிய விலை கிடைக்காமல் மாற்றுப்பயிறுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். உலக நாடுகளின் வற்புறுத்தலின்படி தானிய வகைகளை திறந்த அனுமதியின் வாயிலாக (Open General License) இறக்குமதி செய்து கொண்டிருப்பதால் உள்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மரியாதை எங்கே கிடைக்கும்? இது ஒரு உணவுப் பொருளின் நிலைமை. இதே போல ஒவ்வொரு பொருளையும் நினைவில் கொண்டு வரவும். காரணம் வேர்களை அழித்து விட்டு நமது அரசாங்க கொள்கைகள் விழுதுகளை தேடிச் சென்று கொண்டு இருக்கிறது.

இதன் காரணமாக சிறு குறு விவசாயிகள் தாக்கு பிடிக்க முடியாமல் கிடைத்த வரைக்கும் லாபம் என்ற நோக்கில் தங்களிடம் உள்ள நிலங்களை விற்று விட்டு நகர்ப்பகுதிகளுக்கு வந்து விடுகின்றனர். திருப்பூர், சிவகாசி, சென்னை என்று உள்ளே வந்து ஏதோவொரு தொழிற்சாலைக்குள் தங்களை பொருத்திக் கொள்கின்றனர்.

நாளுக்கு நாள் ஆட்களின் வரத்து அதிகமாக தொழிலாளர்களின் கூலியும், சம்பளமும் குறையத் தொடங்குகின்றது. நடுத்தரவர்க்கமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் காலப்போக்கில் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் அன்றாட வாழ்க்கையை எப்படி வாழப்போகின்றோம் என்கிற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அடிப்படை விவசாயத்தை கவனிக்காமல் விட்ட அரசாங்கத்தால் எத்தனை ஊர்களில் எத்தனை தொழிற்சாலைகளை கட்டமுடியும்?

தனியார் மூதலீடுகள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எத்தனை முக்கியமோ அது சார்ந்த சட்ட திட்டங்கள் முறைப்படுத்த முடியாத போது ஒவ்வொரு தனியார் நிறுவனங்களின் கொள்கை என்பது முடிந்தவரைக்கும் கொள்ளை என்பதாக மாறிவிடுகின்றது. முதலாளிகளை மட்டுமே ஆதரிக்கும் எந்த அரசும் நீண்ட நாட்களாக இருந்ததாக சரித்திரம் உண்டா? கண் முன்னால் பார்த்துக கொண்டிருக்கும் ஒவ்வொரு நாட்டின் கிளர்ச்சிக்கும் பின்னாலும் இயல்பான வாழ்க்கை கூட வாழ முடியாத லட்சக்கணக்கான மக்களின் கோபம் தான் வெளியே தெரிகின்றது.

இன்று உலகத்தின் மொத்த ஜனத்தொகை 700 மில்லியன் என்கிறார்கள்.

இந்த ஜனத்தொகையில் ஒரு சதவிகித மக்கள் தான் உலகத்தின் உள்ள பெரும்பான்மையான நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்கள். இவர்கள் வைத்ததே சட்டம். அமெரிக்கா போன்ற நாடுகளில் விவசாயம் என்பது ஒரு கார்ப்ரேட் தொழில். ஆனால் இந்தியாவில் இது வாழ்க்கைகான ஆதாரம். இங்குள்ள விவசாயிகளுக்கு வேறு எதுவும் தெரியாது. கலாச்சார பண்பாடுகளுடன் பின்னிப் பிணைந்தே தங்களை வாழ்க்கையை வாழ்ந்த பழகிவிட்ட இந்தியர்களுக்கு தங்கள் நிலங்களை தெய்வமாக வணங்குவதால் அவர்களால் தங்களை வெளி வாழ்க்கையோடு எளிதில் பொருத்திக் கொள்ள முடிவதில்லை.

அரசாங்கம் கூற்றுப்படி இந்திய விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டுமென்றால் நிலங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

இதை முதலில் கணக்கு ரீதியாக பார்த்து விடலாம்.

அமெரிக்காவில் 7 டன் அரிசி உற்பத்தியாகும் அளவில் உள்ள நில அளவில் அதைப் போல அளவுள்ள இந்திய நிலத்தில் 2 டன் அளவுக்கே உற்பத்தியாகின்றது. இதற்கு காரணமாக மேதைகள் சுட்டிக்காட்டுவது அமெரிக்காவில் நிலங்கள் பெரிதாக இருப்பதால் இது சாத்தியமாகின்றது என்கிறார்கள்.

ஆனால் மேம்போக்காக இப்படிச் சொல்லிவிட்டு செல்பவர்கள் இந்த 7 டன் உற்பத்திக்கு அமெரிக்கா அரசாங்கம் எந்த அளவுக்கு மானியம் அளிக்கின்றது என்பதை மறைத்து விடுகிறார்கள்.

ஒரு வேளை அமெரிக்கா கொடுக்கும் மானியத்தைப் போல இந்திய விவசாயிகளிடமும் கொடுத்தால் அதை விட அதிகமாகவே எடுக்க முடியும். நாம் நாட்டின் இப்போதைய பொருளாதார அடிப்படையில் இப்போது இது சாத்தியமாக இருக்குமா? மொத்த கணக்காக பார்க்கப் போனால் அமெரிக்காவில் 1.2 பில்லியன் அமெரிக்கன் டாலர் அளவுக்கு உற்பத்தியாகும் அரிசிக்கு அந்த நாடு கொடுக்கும் மானியத்தின் அளவு எவ்வளவு தெரியுமா?

1.4 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள்.

கூட்டிக் கழித்துப் பாருங்க. லாபமா? நட்டமா? காரணம் அமெரிக்கா நாடு பட்டவர்த்தமான முதலாளித்துவ நாடு. அவர்கள் கார்ப்ரேட் முதலாளிகளுக்கு மட்டும் தானே ஆட்சி நடத்துகிறார்கள்.

ஒரு கிராமத்தில் இருக்கும் 50 விவசாயிகளின் விளைபொருட்களால் சுற்றியுள்ள 10 ஊர்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றது என்பதை ஒரு கணக்காக எடுத்துக் கொள்வோம். இதுவே மொத்த இந்தியாவை கணக்கில் எடுத்துக் கொண்டுப் பார்த்தால் அரசாங்கம் விவசாய பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து கடுமையான சட்டதிட்டஙகளை கொண்டு வரும்பட்சத்தில் ஏன் நம்முடைய விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உருவாகாமல் போய்விடுமா?

இவர்களும் செய்யமாட்டார்கள். இடையில் இருக்கும் தரகு கும்பலும் செய்ய விட மாட்டார்கள். அதற்கு மேலும் உள்ளே வந்து கொண்டிருக்கின்ற பன்னாட்டு நிறுவனங்களும் செய்யவும் விடாது. இது தான் எதார்த்தம். இதன் காரணமாகத்தான் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

இந்திய அரசு தரப்பு தகவலின்படி 1993 முதல் 2006 வரைக்கும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் 1,50,000 பேர்கள். ஆனால் நிச்சயம் உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாகவே இருக்கும்.

தற்கொலை செய்து கொள்ளும் மாநிலத்தில் நம்முடைய செயல்வீரர் சரத்பவார் மாநிலமான மகாராஷ்டிரா முதன்மையான இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற கர்நாடகா மற்றும் ஆந்திரா அடுத்த இடங்களில் வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சத்திஷ்கர், மத்தியப்பிரதேசம் மாநிலங்கள் இந்த இடத்தை பிடிக்கின்றன.

தமிழ்நாடு அந்த அளவுக்கு மோசமான இடத்தை பெறாவிட்டாலும் எதிர்கால நிகழ்வுகள் எங்கே அழைத்துச் செல்லப்போகின்றது எந்த கவலை ஒவ்வொருவர் மனதிலும் இயல்பாகவே வந்து போய்க் கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு வருடத்தின் டிசம்பர் 23 என்பது நமது விவசாயிகள் தினம் என்று நம்முடைய பிரதமர் அறிவித்து இருக்கிறார். அவருக்கு மற்றொரு பெயரும் உண்டு.

இந்திய விவசாயிகளை தற்கொலை செய்ய வைத்துக் கொண்டிருக்கும் தந்தை என்று கூட சொல்லலாம்.

காரணம் இந்தியாவிற்கு வெள்ளைக்காரர்களின் பொருளாதார சிந்தனைகளே மேலானது என்று இன்று நமக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த பொருளாதார மேதை விரும்பும் அந்த தத்துவம் எங்கிருந்து பிறந்தது? இந்தியாவிற்குள் முதன் முதலாக வந்த பிரிட்டிஷ் ஆட்சியில் ஆளுமையாக இருந்த இராபர்ட் கிளைவ் என்ற புனித ஆத்மாவைப் பற்றி பார்த்து விட்டால் போதுமானது. 

இவரைத்தான் மேல் நாட்டு வரலாற்றுசிரியர்கள் " பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை நிறுவியர்" என்று புகழாரம் சூட்டுகிறார்கள்.

காரணம் நம்முடைய இந்தியா எங்கிருந்து பயணத்தை தொடங்கியதோ அங்கே போய் முடிப்பது தானே நல்லது.

அப்போது தான் உங்களுக்கு மேலும் சில விசயங்கள் புரியும்?

இந்திய விவசாயத்துறை குறித்த இந்த பார்வைப் பயணம் அடுத்த பகுதியோடு முடிவடைகின்றது.