Thursday, July 05, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 7

நேற்று மகளிடம் உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று அவர் வாயில் வந்த வார்த்தை இது. 

"தந்தை பெரியார் அப்படியெல்லாம் பொண்ணுங்க இருக்கனும்ன்னு சொல்லவில்லையே?" என்று சொல்லி பழிப்பு காட்டி விட்டி பள்ளிக்குச் சென்றார். 

அம்மையார் பின்னால் இருந்து கொண்டு போதுமா? "இது தானே நீங்க எதிர்பார்த்து ட்ரைனிங் கொடுத்த லட்சணம்" என்று வாழ்த்துரை வழங்கினார். 

அவரிடம் நான் என்ன கேட்டேன்? அவர் ஏன் இப்படிப் பதில் சொன்னார் என்பது கடைசியில்? 

இவர்களைப் பள்ளிப் புத்தகங்கள் தாண்டி மற்ற புத்தகங்களை வாசிக்க வைக்க வேண்டும் என்பதற்காகக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பல விதங்களில் முயற்சித்துக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்துத் தோல்வி தான். சுருண்டுவிட வில்லை. நான் வாசித்த புத்தகங்கள் மிஞ்சியிருப்பது நூறு 
எண்ணிக்கையிருக்கக்கூடும். 

ஆனால் சீந்த ஆளில்லாமல் இருக்கப் பெற்ற புள்ள பாசத்தோடு அவ்வப்போது எடுத்துப் பார்ப்பதுண்டு. இவர்களிடம் இதப் பாருடா? என்று ஆசை வார்த்தைகள் காட்டுவதுண்டு. ஒருவர் மட்டும் லேசாகப் புரட்டிப் பார்க்கத் துவங்கினார். 

அப்படியே தூக்கி ஓரமாக வைத்து விட்டார். நான் சோர்ந்து போகவில்லை. அப்போது புத்தகக் கண்காட்சியில் வாங்கிய அவர்கள் விரும்பிய புத்தகங்களுடன் குறிப்பிட்ட சில புத்தகங்கள் (குழந்தைகளுக்கென்று எழுதப்பட்ட புத்தகங்கள். உள்ளடக்கம் சரியாக ஆனால் எளிமையாகச் சுருக்கமாக இருக்கும்) மகாபாரதம், இராமாயணம், காந்தி, நேரு, காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார், விடுதலைப் போராட்ட வீரர்களின் தொகுப்பு போன்ற புத்தகங்களையும் வாங்கி வந்திருந்தேன். 

அதுவும் கண்டும் காணாமல் இருந்தது. இவர்களைப் படிக்க வைக்கச் சாப்பாட்டு மேஜையில் இவர்கள் கண் பார்வையில் எப்போதும் படும்படி வைத்திருந்தேன். வாரப்பத்திரிக்கைகள், தினசரி செய்தித்தாள்களை வாசிக்கத் துவங்கியவர் படிப்படியாக இதில் இறங்கினார். 

ஆச்சரியம் என்னவென்றால் அடுத்தச் சில வாரங்களில் இராமயாணம், மகாபாரதம் போன்றவற்றை முடித்து விட்டேன் என்ற போது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. காந்தி, நேரு, காமராஜர் இதில் ஏதாவது ஒன்றை எடுத்து அடுத்துப் படித்துப் பார் என்றேன். 

காமராஜர் குறித்துப் பள்ளிப் பாடங்கள் முதல் பல இடங்களில் படித்த காரணத்தினால் அவரைப் பற்றிய புரிதல் இவர்களுக்கு நன்றாகவே உள்ளது.

தந்தை பெரியார் குறித்து எடுத்துப் படிக்கத் துவங்கினார். இதற்கிடையே பா. ராகவன் எழுதிய டாலர் நகரம் புத்தகத்தை எடுத்துக் கொடுத்தேன். சில வாரங்களில் அதனையும் முடித்து விட்டார். 

அடுத்தடுத்து நான் சுட்டிக் காட்டிய பல புத்தகங்கள் படித்தாலும் பெரியாரை அவர் கைவிடவில்லை என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் எதையும் கட்டாயப்படுத்தவில்லை. கடந்த 70 இந்திய, தமிழக அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் சுருக்கத்தைக் கால் பங்காவது 12 வகுப்பு முடிப்பதற்குள் இவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். 

இவர்களின் அடித்தளமும், அடிப்படை எண்ணங்களும் எதிர்கால நோக்கங்களும் எப்படியிருக்க வேண்டும் என்பதனை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே என் எண்ணம். இவர் நல்லவர்? இவர் கெட்டவர்? இது தேவை? இது தேவையில்லை? என்று எதையும் நான் சொல்லவில்லை. 

வாசித்து முடித்த பின்பு உனக்கு இப்போதைய சூழ்நிலையில், எதிர்கால உன் கொள்கைக்கு எது சரியாக இருக்கும் என்று நம்புகின்றாயோ? அதனை நீயே எடுத்துக் கொள் என்று வாய்ப்புகளைக் கொடுத்து இருந்தேன். 

ஆனால் இன்னமும் அண்ணல் அம்பேத்கார் குறித்து முழுமையான புரிதலை உருவாக்க முடியவில்லை. பாடங்களில் அவர் குறித்து முழுமையான விபரங்கள் இல்லை. பெரியார் அளவிற்கு இன்னமும் அவர் இங்கே பரவலாக்கப்படவில்லை. அவரின் பிம்பத்திற்குக் கொடுத்த மரியாதை அவர் கருத்துக்களுக்கு அதைக் கடத்துவதற்கு யாருக்கும் அக்கறையில்லை என்பது தான் இங்கே குறிப்பிட வேண்டிய விசயம். 

புத்தகக்கடையில் நான் பார்த்த அம்பேத்கார் புத்தகங்கள் பெரிய சிலாகிப்பதாக இல்லை. 

முதல் வரியில் நான் மகளிடம் கேட்டது. 

"அப்பா ரொம்ப ஆசைப்படுறேன். நீங்க தாவணி கட்டவேண்டும். இந்த முறை தீபாவளிக்கு மூன்று பேரும் பாவாடை தாவணி கட்டவேண்டும் சரியா? என்று தான் கேட்டேன். பொம்பள புள்ளைங்க பேண்ட் சட்டை போட சொல்லியிருக்காரு பெரியார்" என்றார். 

மருத்துவர் ஷாலினி பேச்சைக் கேட்ட போது எனக்கு என் மகள் ஞாபகம் தான் வந்தது.

Tuesday, July 03, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 6


சென்ற வாரத்தில் காலா படம் பார்த்தோம். 

பிறை இன்று தெரியுமா? தெரியாதா? என்ற குழப்பம் உருவான போது பள்ளி விட்ட விடுமுறை இவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. காலை முதல் திட்டமிட்டு என்னை மாலை வரவழைத்து அழைத்துச் சென்றார்கள். 

மாலை 6.15 க்குப் படம் தொடங்கும். நான் மட்டும் 6.10 க்குத்தான் திரையரங்கத்தின் உள்ளே சென்றேன். அப்போது மொத்தமே 30 பேர்கள் தான் இருந்தார்கள். இடைவேளை விடும் போது பார்க்கலாம் என்று காத்திருந்தேன். ஆனால் கடைசி வரைக்கும் 50 பேர்களைத் தாண்டவில்லை. 

காலா படம் வெளியான தினத்தில் சென்னையில் இருந்தேன். மாலைக்குள் சென்ற வேலை அனைத்தும் முடிந்து விட நண்பர் கையில் மூன்று இலவச சீட்டுக்கள் இருந்தன. அழைத்தார். வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். வீட்டில் அம்மையாரின் அதிகபட்ச ஆசையான ரஜினியின் படத்தை ஒவ்வொரு முறையும் திரையரங்கில் சென்று பார்ப்பது என்ற கொள்கையின் காரணமாக என்பதனை நண்பரிடம் சொன்ன போது சிரித்தார். 

இயக்குநர் ரஞ்சித் உடன் நேரிடையாக சந்தித்து பேசியுள்ளேன். திரை உலகில் நான் சந்தித்த மற்றவர்களை ஒப்பிடும் போது ரஞ்சித் எதார்த்தவாதியாக எனக்குத் தெரிந்தார். நான் இந்தத் தளத்தில் இப்படித்தான் இயங்கப் போகின்றேன் என்பதில் தெளிவாகவே இருந்தார். தன் பலத்தையும் பலவீனத்தையும் உணர்ந்தே இருந்தார். 

நெருங்கிய தம்பி ஒருவன் அவர் குழுவில் அவருடன் நெருக்கமான வட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றான். சென்னையில் இருந்த போது அவனுடன் பேசினேன். ஐம்பது சதவிகிதம் மக்கள் கூட (அவருக்கென்று உள்ள ரசிகர் கூட்டம் குறிப்பாகக் குழந்தைகள், விடலைகள்) திரையரங்கம் வரவில்லை. வருகின்ற மாதிரி சூழலும் சாதகமாகத் தெரியவில்லை என்றான். தமிழர்களின் எதிரி என்ற பிம்பம் உருவாக்கப்பட்டு அது ஊதிப் பெருக்கப்பட்டு அது வெற்றியும் அடைந்து விட்டது என்றான். 

ரஜினியின் தோல்வியை விட ரஞ்சித்தின் தோல்வியைக் கொண்டாடத்தான் இங்கே அதிகம் பேர்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள். இப்போது வெளிப்படையாக மொத்த கோடம்பாக்கமும் ரஞ்சித் வைத்துப் படம் எடுக்கக்கூடாது என்பதனை பலர் வெளிப்படையாகவே எழுதத் தொடங்கி உள்ளனர். 

பிராமணியம் குறித்து எப்போதும் எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் இடைநிலை சாதிகளின் ஆதிக்கத்தைப் பற்றிப் பேசுவதில்லை. இதன் இரண்டுக்கும் உள்ள நுண் அரசியலைத் தெரிந்து கொண்டவர்களால் மட்டுமே ரஞ்சித் போன்றவர்கள் தன் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள எந்த அளவுக்குப் பாடுபட வேண்டும் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். 

படம் என்கிற வகையில் பார்த்தால் ரஞ்சித் வென்றுள்ளார். ரஜினியும் வென்றுள்ளார். ரஜினியின் படங்களில் நீண்ட நாளைக்குப் பிறகு நடித்துள்ளார் என்கிற வகையில் மிகவும் சிறப்பாகவே உள்ளது. 

கரணம் தப்பினால் இது பிரச்சாரப் படமாக மாறிவிட வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனையும் தாண்டி வர்த்தரீதியான நிலையில் சரியாகவே தொகுக்கப்பட்டுள்ளது. வசனத்தை ரஞ்சித்துடள் மூன்று பேர்கள் எழுதியுள்ளார்கள். பல இடங்களில் ரஜினி எப்படி இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்தார் என்பதே ஆச்சரியமாக உள்ளது. அந்த அளவுக்கு வசனங்கள் கத்திமுனை போலக் குத்திக் கிழிக்கின்றது. இணை இயக்குநர், துணை இயக்குநர்கள் என்று அதிகமான பேர்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார் ரஞ்சித். 

ரஜினி போலவே நடித்த ஒவ்வொருவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்து கதைக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். முக்கியமாக வில்லனாக வந்த நானா பட்கேர் நடிப்பைப் பார்க்கும் வியப்பாக இருநத்து. வேறு எவரையும் இந்த இடத்தில் இவருக்குப் பதிலாக வைத்து நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். 

ஆச்சரியம் என்னவென்றால் இயக்குநர் ரஞ்சித் க்கு நடிகர்களிடம் கதை சொல்லத் தெரியாது. அவர் தனது திரைக்கதை வடிவத்தை அவர்களிடம் வாசிக்கச் சொல்லி அதன் மூலம் தான் புரியவைப்பாராம். ஆனால் ஒரு இயக்குநராகக் காட்சியமைப்பில் அவர் எந்த அளவுக்கு இந்தப் படத்தில் பணிபுரிந்துள்ளார் என்பதனைப் பார்க்கும் போது நிச்சயமாகத் தமிழகத்தில் கொண்டாடப்பட வேண்டிய கலைஞன் என்பதில் சந்தேகமே இல்லை. 

படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரைக்கும் அதன் தயாரிப்பு சார்ந்த செலவுகளைத் தான் அதிகம் கவனித்துக் கொண்டு வந்தேன். செய்திகளில் வாசித்ததன் மூலம் முதல் இருபது நாட்கள் மட்டும் தாராவியில் எடுத்துள்ளார்கள். மற்ற நாட்கள் அனைத்து இங்கே அரங்கம் அமைத்து தான் எடுத்துள்ளார்கள். காரணம் பெரும்பாலான காட்சிகளில் ஒவ்வொரு ப்ரேமிலும் குறைந்தபட்சம் நூறு தலைகளாவது தெரிகின்றது. இது தவிரக் காலா வின் குடும்பம் ஒரு பெரிய கூட்டுக்குடும்பம். 

படத்தின் செலவு என்பது (ரஜினிகாந்தின் சம்பளம் அறுபது கோடி என்கிறார்கள். இதன் அடிப்படையில் 150 கோடிக்கு விற்பனையாகி இருக்க வேண்டும் என்று கணக்கீடு செய்தார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் விற்ற 51 கோடியே போணியாகவில்லை) நடித்த நடிகர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் தான் பெரிய தொகையாக உள்ளது. உருவாக்கப்பட்ட தாராவி அரங்கம் என்பது அதுவொரு பெரிய செலவு. 

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மட்டுமே பெரிய ஜனத்திரளை வைத்துத் தான் நினைக்கும் அளவிற்குத் தான் நினைத்தபடி எளிதாக விரைவாக வேலை வாங்கக்கூடியவர் என்று பெயர் எடுத்துள்ளார். அவரைப் போலவே இவரும் வென்றுள்ளார். 

கடந்த சில படங்களில் ரஜினிகாந்த் குடும்ப உறுப்பினர்கள் இவரின் ஒவ்வொரு படத்திற்கும் விளம்பரம் மூலம் வரும் வருவாயை நேரிடையாகத் தங்கள் நிர்வாகத்தின் கீழ் எடுத்துக் கொண்டார்கள். காலா மூலம் 50 கோடி ரூபாய் எடுத்துள்ளார்கள். வெளிநாட்டு விற்பனை உரிமையும் பெரிய அளவுக்குப் போணியாகவில்லை. ஈழத் தமிழர்கள் முழுமையாகவே புறக்கணித்து உள்ளதாகத் தெரிகின்றது. 

பாலு மகேந்திரா அறிமுகம் செய்யும் கதாநாயகிகள் மேல் எப்போதும் எனக்குப் பெரிய ஈர்ப்பு உண்டு. ஷோபா, அர்ச்சனா, மௌனிகா தொடங்கி இதில் நடித்துள்ள ஈஸ்வரி ராவ் வரைக்கும். ஒப்பனை தேவைப்படாத அழகி. கடந்த ஏழு வருடங்களாக நடிப்புப் பக்கம் வராமல் குடும்ப வாழ்க்கையில் இருந்த ஈஸ்வரி ராவ் அற்புதமாக ஜொலிக்கின்றார். 

ரஜினி போன்றவர்களை வேலை வாங்குவதே கடினம். சில எல்லைகளைத் தாண்ட முடியாது. ஆனால் ரஞ்சித் தான் விரும்பிய அளவுக்கு ரஜினியை பல எல்லைகளை உடைத்து அவரின் பழைய நடிப்பாற்றலைக் கொண்டு வந்துள்ளார். 

ரஜினியின் தனிப்பட்ட பலவீனங்களைக் கடந்து தமிழகம் அவருக்குக் கொடுத்துள்ள சூப்பர் ஸ்டார் என்ற கௌரவத்தை, கட்சி, மதம், சாதி கடந்து அவருக்கு இருந்த ரசிகர் பட்டாளத்தை அவராகவே கெடுத்துக் கொள்வார் என்று நினைத்தே பார்த்து இருக்க மாட்டார். காலச்சூழல் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக அவர் பேசிய பேச்சு கொட்டிக் கவிழ்த்து விட்டது. கடந்த 30 வருட உழைப்பை சில உளறல்கள், பேச்சுகள் ஒரு பெரிய வணிக லாபத்தை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டது. 

ஆன்மீகத்தை மற்றவர்களை விட இவர் தான் அதிகம் பேசுகின்றார். ஆனால் இவரின் உடல் மொழி பொதுவிடங்களில் அதற்கான தகுதியை, ஆன்மீகம் மூலம் பெறும் அமைதியான சுபாவத்தை இவர் வளர்த்துக் கொள்ளவில்லை என்பதனை அப்பட்டமாக உணர்த்திக் காட்டியது. படத்தில் பேசும் ஏழைப்பங்காளன் வசனத்திற்கும் நிஜவாழ்க்கையில் அப்பட்டமாக எதிராக இருப்பதையும் அவர் அறியாமல் வெளிப்படுத்திய சூழலில் கோமாளி போலவே ஆக்கப்பட்டுள்ளார். 

ரஜினி அடுத்தப் படத்தில் நடிக்க டார்ஜிலிங் சென்று விட்டார். ரஞ்சித் தனது அடுத்த ஹிந்திப்பட வேலையில் இறங்கி விட்டார். நம் மக்கள் இன்னமும் காலா வின் குறியீடுகள் குறித்து எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள். 


Sunday, July 01, 2018

நாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 5

கலைஞர் குறித்து யோசிக்கும் போதெல்லாம் ஒரு ஆச்சரியம் என் மனதில் தோன்றும். 

அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் தன் திறமையால் அல்லது தன்னுடைய சாமர்த்தியதனத்தால் மட்டுமே திமுகவில் தனக்கான இடத்தை அடைந்தார். எம்.ஜி.ஆர் ஆதரவு அந்தச் சமயத்தில் முக்கியமென்றால் கூடத் தன்னிடம் உள்ள உழைப்பு, மொழிப்புலமை, இடைவிடாத கட்சிப்பணி என்று எல்லாவகையிலும் தன்னைத் தகுதியுடையவராகவே வைத்திருந்தார். 

ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் 1970 முதல் 1990 வரைக்கும் கலைஞர் எவரையெல்லாம் ஆதரித்துத் தன் அருகில் வைத்திருந்தாரோ, இவர்கள் எல்லாம் தனக்குக் கடைசி வரைக்கும் ஆதரவாக இருப்பார்கள் என்று கருதியிருந்தாரோ அவர்கள் தான் பின்னாளில் முக்கிய எதிரியாக மாறினார்கள். அப்போது குடும்ப ஆதிக்கம் என்று சொல்ல முடியாது. முரசொலி மாறன் ஒருவர் மட்டும் தான் இருந்தார். 

அவருக்கு உள்ளரசியல், அக்கப்போர்கள், பஞ்சாயத்துக்கள் எதிலும் ஈடுபாடு கிடையாது என்பதனை விட அவர் கடைசி வரைக்கும் ஒரு டெரர் பார்ட்டியாகத்தான் இருந்தார். வாசிப்பிலும் எழுத்திலும் கலைஞர் ஒரு துருவம் என்றால் இவர் வேறோரு துருவத்தில் உச்சத்தில் இருந்தார். இதன் காரணமாகவே கலைஞருக்கு டெல்லி அரசியலில் தளபதியாகவே கடைசி வரைக்கும் இருந்தார். முக்கியமாக வைகோ பிரிந்த போது உடன் சென்ற பாதிக்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலைஞரின் மனதில் ஆழமான வடுவை உருவாக்கினார்கள். 

அதற்குப் பிறகு உருவான மனமாற்றத்திற்கு இதுவொரு முக்கியக் காரணமாக இருந்தது. எவரையும் நம்பாதே? எவரையும் வளர்க்காதே? என்ற கொள்கையின் அடிப்படையில் அடுத்தடுத்து ஒவ்வொரு செயல்பாடுகளும் உருவானது. இன்று மருத்துவர் ராமதாஸ் எந்த நிலையிலும் தன்னை வலுப்படுத்திக் கொண்டு உள்ளார். அவரின் இன்றைய முக்கிய வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் கலைஞர். இஸ்லாமியர்களை முழுமையாக நம்பினார். ஆனால் கோவை கலவரம் அவர் மனதில் இனம் புரியாத கேள்விகளை உருவாக்கியது. 

உதிரிகட்சிகளைக்கூடத் தோழமையாக மதித்தார். தனக்கு ஆதாயம் என்ற போதிலும் அவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் இதன் மூலம் அரசியல் அரங்கில் பலருக்கும் கிடைத்தது. இந்து மத நம்பிக்கைகளை அவர் கிண்டலடித்தாலும், விமர்சனம் செய்தாலும் திமுக உறுப்பினர்களை, தொண்டர்களை அவர் முழுமையாகக் கட்டாயப்படுத்தினார் என்று சொல்ல முடியாது. கட்சி வேறு. தங்கள் வாழ்வில் கடைபிடிக்கும் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் வேறு என்பதாகத்தான் இன்று வரையிலும் திமுக வின் அடிப்படைத் தொண்டர்கள் கலைஞரின் மதம் சார்ந்த பேச்சுக்களைப் பொருட்படுத்திக் கொண்டதில்லை. 

கட்டுமானம் உடையாமல் இருந்தது. கலைஞர் உருவாக்கிய மனிதர்கள் அனைவரும் அரசியல் களத்தில் தலைவர்களாக மாறினார்கள். திமுக வின் வாக்கு வங்கியில் சேதாரத்தை உருவாக்கினார்கள். அவரவருக்குத் தேவையான வசதிகளை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள எவரும் கலைஞரின் அரசியல் வாழ்வின் ஆணி வேரை அசைத்தது பார்த்தது இல்லை. அப்படிச் செய்த ஒருவர் ப. சிதம்பரம். 

இன்னமும் எனக்கு மங்கலாக நினைவுள்ளது. இந்திரா காந்தி அவர்களிடம் சென்னை விமான நிலையத்தில் கலைஞர் ப. சிதம்பரம் அறிமுகம் செய்து வைத்த புகைப்படம். ஒரு தலை. அதற்குக் கீழே உடம்பு என்ற பெயரில் ஒல்லியான தேகம். முகத்தில் பொருந்தாத கண்ணாடி. செட்டி நாட்டு அரசர் வாரிசு என்ற அடிப்படைத் தகுதி. அதற்கு மேலாக அமெரிக்கா வரைக்கும் சென்று கற்ற கல்வி என்று உள்ளே நுழையும் போதே அடித்தளத்தை வலுவாக வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவர் ப. சிதம்பரம். 

ராஜீவ் காந்தி அரசியல் களத்தில் உள்ள வந்த போது ப. சிதம்பரம் தனது தாயக்கட்டை உருட்டத் தொடங்கினார். மொழி பெயர்ப்பு என்ற அறிவின் மூலம் ஆட்டம் சாதகமாகவே போகத் தொடங்கியது. இறுதியில் தமிழர்கள் நினைத்துப் பார்க்க முடியாத இந்தியாவின் உள்துறை, நிதித்துறை என்று பிரதமருக்கு அடுத்த நிலை வரைக்கும் அவரால் பயணிக்க முடிந்தது. 

மற்ற அரசியல்வாதிகளைப் பற்றிப் பத்திரிக்கைகளில் படித்ததை வைத்தே எழுத முடிந்த எனக்கு இவரைப் பற்றி உள்ளும் புறமும் ஊருக்கு இருந்த காரணத்தால், மற்ற காரணங்களின் அடிப்படையில் பார்க்க வாய்ப்பு கிடைத்து. 

இவரை நம்பி வளர்ந்தவர்கள் இதுவரையிலும் யாருமே இல்லை. இவர் வளர்த்தவர்கள் யாரும் இல்லை. ஒரு வகையில் பார்க்கப் போனால் இவரும் முரசொலி மாறன் போலத்தான். கூர்மதி கொண்டவர்களுக்கு அவர்களின் அறிவே எதிரியாக இருக்கும். 

ஒரே ஒரு முறை மட்டும் ஆச்சரியப்படத்தக்க வகையில் முன்னாள் அமைச்சரும் காலம் சென்ற தமிழக முதலமைச்சர் பக்தவச்சலம் பேத்தியுமான ஜெயந்தி நடராஜன் அவர்களுடன் கொண்ட ஊடல் அது சார்ந்த பல விவகாரங்கள் மட்டும் அம்பலத்திற்கு வந்து அது குடும்ப வாழ்க்கையில் புயலைக் கிளப்பியது. அது தவிர வேறு எந்தச் சிக்கல்களிடம் இவர் சிக்கிக் கொள்ளாமல் வந்ததே ஆச்சரியமானது. 

நண்பர் அடிக்கடி சொல்வர். 

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் எத்தனையோ ஆடிட்டர்கள் இருக்கின்றார்கள். ஒரு தடவைக்குப் பத்து லட்சம் வாங்கக்கூடிய வக்கீல்கள் இருக்கின்றார்கள். எங்கே யாரையாவது இவர் இதுவரையிலும் செய்த ஊழல்களைக் கண்டு பிடிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்? அது தான் அவரின் திறமை என்பார். 

கடந்த 40 வருடமாக இராமநாதபுரம் மாவட்டமாக இருந்த போதிலும் சரி, பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டமாக இருந்த போதிலும் சரி, இன்று சிவகங்கை மாவட்டமாக மாறி இருக்கும் இப்போதைய சூழல் வரைக்கும் மாவட்டம் முழுக்கத் திருமணம் ஆகாத இளம் பெண் போலச் சோகத்தில் தான் இருக்கின்றது. நாசகார ஆலைகள் இல்லை. மாநில அரசின் முயற்சியின் காணமாக வந்த சாலைகள் தான் தற்போது போக்குவரத்தினை எளிதாக மாற்றியுள்ளது. 

எப்போதும் வருவார். அங்கங்கே ஏடிஎம் களை திறந்து வைப்பார். போய் விடுவார். கடைசித் தேர்தலில் ராஜகண்ணப்பன் நினைத்திருந்தால் இவரை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பார். என்ன காரணமோ ஜெயலலிதா சொன்ன காரணத்தினால் வென்று மேலே சென்றார். 

இப்போது கூடச் சாலையில் நடந்தால் கூட நாற்பது பேர்கள் கூட இவரைப் பார்க்க, இவரிடம் பேச தொகுதிக்குள் ஆட்கள் இல்லை. ஆனால் உடம்பு முழுக்கப் புத்தி. உள்ளம் முழுக்க ஆச்சரியப்படத்தக்க வகையில் சக்தி. ஆனால் கடைசி வரைக்கும் தன் சமூகம் தன்னை ஒதுக்கிய போதும், தன் தொகுதி மக்கள் தன்னைப் புறக்கணித்த போதிலும் ப.சிதம்பரம் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. இன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் மூலம் மாநிலங்களை உறுப்பினராக இருக்கின்றார். 

இன்று கலைஞர் குடும்ப உறுப்பினர்கள் மத்திய அரசினை முழுமையாக எதிர்க்க முடியாமல் பம்மிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் இவர் போட்ட அடித்தளமே. ஆனால் உடன்பிறப்புகள் எவரும் இதைப் பற்றிப் பேசவே மாட்டார்கள் என்பது தான் முரண்நகை.