Tuesday, January 09, 2018

ஆன்மீக அரசியல்



ஆன்மீக அரசியல் என்றால் என்ன?

தீபம் காட்டும் அய்யருக்கு நூறு ரூபாய் போட்டு விட்டு கோவிலை விட்டு வெளியே வரும் போது அங்கே கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்களைப் பார்த்து நாடு முழுக்க சோம்பேறிகள் அதிகமாகிவிட்டார்கள் என்று நாட்டைப் பற்றி கவலைப்படுவது.

+++++++++

திருப்பூரில் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு சாயப்பட்டறைகள், சலவைப்பட்டறைகள் முழு வீச்சாக 700 க்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்கிக் கொண்டிருந்த போது திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள். கட்டுமஸ்தான தேகம் உள்ள அவர்கள் சாயப்பட்டறைகளில் பணிபுரிந்தனர். ஒடுக்கப்பட்ட, சொந்த ஊரில் வாழ வழியில்லாதவர்களின் வருமானத்திற்குத் திருப்பூர் உதவுவதாக இருந்தது. 

திருப்பூர் எல்லைப் புறத்தில் உள்ள சிறிய திரையரங்கங்களில் நிச்சயம் விஜயகாந்த் படம் தான் ஓடிக் கொண்டிருக்கும். எம்.ஜி.ஆரின் பழைய படங்களுக்கு எப்போதும் எந்த அளவுக்குக் கூட்டம் சேருமோ அதைப் போலவே விஜயகாந்த் படங்களுக்கும் மதிப்பு இருந்தது. 

இன்று வரையிலும் தொலைக்காட்சியில் விஜயகாந்த் படங்களைப் பார்க்கும் போது அவர் பேசும் நீண்ட வசனங்களையும், அவர் படிப்படியாகத் தன்னை மாற்றிக் கொண்டே வந்த வித்தைகளையும் ஆச்சரியமாகக் கவனிப்பதுண்டு. பதிவில் விஜயகாந்த் அதிர்ஷ்டக்காரர் என்று எழுதினேன். எவரும் யோசிக்க முடியாத அளவிற்குப் பா.ம.க கோட்டைக்குள் புகுந்து பிடரியை உலுக்கியது முதல் ஆச்சரியம். பத்துச் சதவிகிதம் ஓட்டு என்பது பழம் தின்று கொட்டை போட்டவர்களைப் பயப்பட வைத்தது. கடைசியில் என்ன ஆனது? 

"என் கணவன் கள்வன் அல்ல" என்று நீதி கேட்ட பெண்மணி அந்தக்காலம். "முதலமைச்சரின் மனைவி என்று என்னைச் சொல்ல வேண்டும்" என்று அண்ணியார் போராடியது, போராடிக்கொண்டிருப்பது இந்தக் கால அரசியல் அவலமாக முடிந்தது. அவரும் காரணம். அவரைச் சுற்றியுள்ளவர்கள் முக்கியக் காரணம். அதைவிட அவரின் பழக்கவழக்கங்கள் முக்கியக் காரணம். ஒருவர் வளரும் போது சிலவற்றை விட வேண்டும். சிலவற்றை ஒதுக்க வேண்டும். பலவற்றைப் பொறுத்துக் கொள்ளப் பக்குவத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

அவருக்கும் உயிர் பிழைத்திருக்கச் சிங்கப்பூர் தான் உதவிக் கொண்டிருக்கின்றது. இப்போது ஆன்மீக அரசியல் பேசுபவரை இப்படிப் பேச வைக்கக் காரணமாக இருந்ததும் சிங்கப்பூர் மருத்துவர்கள் தான். ஒன்றிரண்டு பழுதானால் ஆரோக்கியக் குறைபாடு. உடம்பு முழுக்க ஓவர் ஆயில் சர்வீஸ் செய்வது என்பது அதுவரையிலும் கற்ற வித்தைகள், காட்டிய வித்தைகளும் தந்த அன்புப்பரிசு. 

பணம் வரும் போது அது மனிதர்களின் ஆரோக்கியத்தை விலை பேசும். கூடவே பதவி வந்த பின்பு தனி மனித ஆரோக்கியம் பொதுச் சொத்தாக மாறிவிடும். சுதாரித்துக் கொண்டவர்களும், பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்களும், எதார்த்தத்தை உணர்ந்து கொண்டவர்களுக்கும் உண்டான உலகம் அரசியல் உலகம். 

கள அரசியல் என்பது வேறு. அதன் மூலம் அடையப் போகும் பதவிகள் மூலம் செய்ய வேண்டிய நிர்வாக அரசியல் வேறு. மாநில அரசியல் வேறு. அதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டிய இந்திய அரசியல் வேறு. இத்துடன் ஒவ்வொரு நிமிடமும் இப்போது வந்து சேரும் உலக அரசியல் என்பதனை புரிந்து கொள்ள நிறையவே பக்குவம் தேவை. அதிக அளவு நிதானம், சமயோசித தந்திரங்கள் தேவை? 

கலைஞரை வெறுக்க ஆயிரம் காரணங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடும். ஆனால் "தன்னைத் தக்க வைத்துக் கொள்ள" என்ற கலையை அவரிடமிருந்து தமிழக அரசியலில் இருந்து வேறு எவரும் அவரைப் போலக் கற்றுத் தந்துவிட முடியாது. அதனால் தான் செயல்படாமல் இருந்தாலும் கோவில் போலக் கோபாலபுரம் செல்கின்றார்கள். 

ரஜினியும் விதிவிலக்கல்ல. 

ஏ1 குற்றவாளியைத் திறமைசாலி, தைரியசாலி என்று ஊடகங்கள் தான் முன்னிறுத்தியது. இன்னமும் அந்தப் பிம்பம் உடைந்துவிடக் கூடாது என்று அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவும் செய்கின்றது. அதே போல ரஜினிக்கு சிறந்த ஆன்மீக வாதி என்று பட்டம் மூலம் பறக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றது. 

ஆன்மீகம் என்பது மக்களுக்கானது என்றால் அது கோவில், சாமி, அவரவர் மனதோடு முடிந்து விடும். அதற்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்காது. இருக்கவும் முடியாது. ஆனால் இப்போது மற்ற மதங்களில் இருந்து இந்து மதம் வரைக்கும் மதக் காப்பாளர்கள் கையில் அரசியல் சிக்கத் தொடங்கிய போதே எதைத் தொட்டால் சலசலப்பு அதிகமாகும் என்பதனை கருத்தில் கொண்டே ரஜினிக்குப் பின்னால் உள்ளவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் ரஜினி காலடி எடுத்து வைத்துள்ளார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. 

உணர்ச்சி வசப்படுபவர்கள், மற்றவர்கள் எழுதிக் கொடுத்த வசனங்களை வாசித்து, சொல்லிப் பழகியவர்களுக்கு எந்தப் பதவி எந்தக் காலத்தில் கிடைத்தாலும் அவர்களால் சிறந்த நிர்வாகியாக ஆக முடியாது என்பதனை கடந்த காலத் தமிழக அரசியல் உணர்த்தியுள்ளது. அப்படியே பதவி வந்தாலும் களத்தில் இறங்கி தன்னை மாற்றிக் கொண்டு, எதார்த்தம் புரிந்து, தன்னை மெருகேற்றிக் கொண்டவர்கள் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு உள்ளனர். 

சுகவாசி வாழ்க்கைக்கு அடிமையானவர்கள் கள எதார்த்த அரசியலுக்கு ஒத்து வர மாட்டார்கள் என்பதனையும் தமிழக அரசியலில் துண்டைக் காணோம். துணியைக் காணோம் என்று ஓடிய மற்ற நடிகர்கள் பல முன் உதாரணங்களை நமக்குக் காட்டியுள்ளனர். காரணக் காரியங்கள் அடிப்படையில் மற்றொரு அடிமையாக வேண்டுமானால் சொன்னதைச் செய்யும் கூலியாகச் செயல்பட முடியும். 

பாவம் ஆன்மீகம். 

உங்கள் ஆசைக்குப் பல கோடி மக்களின் நம்பிக்கைகளை அரசியல் மூல தனம் ஆக்காதீர்கள் ரஜினி. குடியையும், புகைப்பதையும் தமிழக இளைஞர்களுக்குக் கற்றுத் தந்தவர் நீங்கள். அரசியல்வாதிகள் கைவிட்ட அவர்களை இப்போது அவரவர் எளிய நம்பிக்கைகள் தான் அவர்களை வாழ்வதற்கான காரணங்களைப் புரிய வைத்து இயக்கிக் கொண்டிருக்கின்றது. ஆதனால் தான் இன்னமும் இந்தியா துண்டு துண்டாக உடையாமல் இருக்கின்றது. 

உங்கள் ஆன்மீக அறிவை உங்கள் வீட்டில் உள்ள மூன்று பெண்களுக்குப் புரியவைத்து அவர்களை முதலில் நல்வழிப்படுத்துவதில் இருந்து தொடங்கலாமே? உங்கள் மனைவிக்கு அரசாங்க சொத்துக்கு ஆசைப்படாத ஆன்மீகத்தைக் கற்றுக் கொடுக்கலாம். வாடகை கொடுத்தால் தான் அடுத்தவர் சொத்தை அனுபவிக்க முடியும் என்ற அடிப்படை அறிவை கற்றுக் கொடுக்கலாம். அப்பாவின் புகழையாவது கவனத்தில் எடுத்துக் கொண்டு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனமாக இருங்கள்? என்ற அறிவுரைகளை இரண்டு மகள்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம். 

ஆன்மீகம் என்பது அரசியல் அல்ல. அது ஒவ்வொரு தனிமனிதனின் அந்தரங்கம். 

அவரவர் மதம், அவரவர் நம்பிக்கைகள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு உண்டானது. 

வெளிச்சத்தில் இருந்து பழகியே வந்த உங்களுக்கு அந்தரங்க அறைகளில் வெளிச்சம் பாய்ச்சுவது தவறென்பதைக் காலம் புரிய வைக்கும். 

04/01/2018  ( முகநூல் குறிப்புகள் )

Sunday, January 07, 2018

ஆசிரியர் சம்பளம்? காவல்துறை சம்பளம்? சில குறிப்புகள்


ஒரு பக்கம் அவல முகம். 

சென்ற வாரத்தில் ஒரு நாள் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சந்தின் வழியாக வண்டியில் வந்து கொண்டிருந்தேன். திரும்ப வேண்டிய சந்தின் ஓரத்தில் பலரும் நின்று கொண்டிருந்தனர். உள்ளடங்கிய பகுதியில் ஒரு காவல் துறை வாகனமும் சில காவலர்களும் நின்று கொண்டு எப்போதும் போலச் சோதித்து அவர்கள் வருமானத்தைச் சாதித்துக் கொண்டிருந்தனர். என்னை நிறுத்து என்று அழைக்கவில்லை. ஒரு மணி நேரம் அந்த இடத்தில் நின்று இருந்தாலும் அங்கிருந்த நபர்களில் ஒருவருக்கு 300 ரூபாய் என்று கணக்கு வைத்துக் கொண்டாலும் முப்பது நபர்களின் மூலம் அவர்கள் பெற்ற தொகை பத்தாயிரம் ரூபாய்க்கு அருகே வந்திருக்கும். 

மறு பக்கம் ஆச்சரிய முகம். 

திருப்பூரில் கடந்த ஆறேழு மாதங்களாகச் சாலை பராமரிப்புக் கேவலமாக உள்ளது. தினந்தோறும் அலைய வேண்டிய வேலையில் உள்ளவர்களின் முதுகு நிச்சயம் பெயர்ந்து விடும். தினமும் எதையும் உள்ளே ஊற்றிக் கொண்டோ அல்லது வலிக்குத் தடவிக்கொண்டோ தான் தூங்க முடியும். கவுன்சிலர் இருந்தால் கூட மக்கள் பேச முடியும். இப்போது அதற்கு வாய்ப்பும் இல்லை. ஆனால் இந்தக் கொடுமையில் பல இடங்களில் உருவாகும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் பல காவல் துறையைச் சேர்ந்த நண்பர்களைக் கவனித்துக் கொண்டே வருகின்றேன். நான்கு புறமும் காட்டாறு அருவி போல வந்து பாயத் தயாராக இருக்கும் பொது மக்களின் வேகத்தைக் குறைத்து, நிறுத்தி, சீர் செய்யும் தொடர்ச்சியான அவர்களின் பணியும், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை மனதிற்குள் போட்டுப் பார்த்தேன். 

கலைஞர் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கூட ஆசிரியரும் இன்று கோடீஸ்வராக இருக்கின்றார்கள். ஆனால் ஆசிரியர்களை விடப் போக்குவரத்துக் காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் அதே அளவுக்குச் சம்பளம் வழங்கப்பட வேண்டும். நாள் தோறும் மொத்த புகையையும் சுவாசித்து, படிப்படியாக ஆரோக்கியம் இழந்து, வேலை செய்யும் முழுமையான நேரத்தில் ஒரு துளி கூட நகர வாய்ப்பில்லாத வாழ்க்கை அது. 

+++++++++++++

ஒரு துறையைப் பற்றி எழுதும் போது அதனைப் பற்றி விமர்சனப் பார்வையில் தான் அணுக முடியும். நம் குடும்பத்தில், உறவினர்களில், நண்பர்கள் வட்டத்திலும் அதே துறையில் பணியாற்றக்கூடும். அவர்களின் தனிப்பட்ட சங்கடம் என்னை வருத்தமடையச் செய்தாலும் நான் பார்க்கும் சமூகத்தை என் பார்வையில் என் மொழியில் எழுதிவிடவே விரும்புகிறேன். 

விதிவிலக்குகள் இருக்கலாம். 

ஏன் ஆசிரியர்கள் மேல் கோபம்? இது நேற்று என்னை நோக்கி வந்த கேள்வி? 

எங்கள் குடும்பத்தில் ஒருவர் ஆசிரியராக நுழைந்து தலைமையாசிரியராக இந்த மாதம் முடிவில் பணி ஓய்வு பெறப் போகின்றார். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது அவர் பணியில் சேர்ந்தார். ஆசிரியராகப் பணியில் சேர்ந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உள்ளடங்கிய கிராமத்தில் இருந்தது. பள்ளிக்கூட, கல்லூரி விடுமுறையில் அவர் பணியாற்றிய பள்ளிக்குச் சென்றுள்ளேன். 

தமிழ்நாட்டில் மூன்று இடங்களுக்கு மாறி இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பணியாற்றி அவர் தலைமையாசிரியராக ஆசிரியர் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சகோதரி என்று நிலையைத் தாண்டி தற்போதைய கல்விச்சூழல், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று பலவற்றைப் பேசுவோம். 

அவர் இறுதியில் முடிக்கும் ஒரே விசயம் ஆசிரியர்களுக்கு "இவ்வளவு சம்பளம் தேவை இல்லை" என்பார். 

என்னுடன் இளங்கலை படித்த நண்பர் முதுகலை முடித்து அவனும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ப்ளஸ் டூ ஆசிரியராக உள்ளே நுழைந்து இப்போது திருச்சியில் உள்ள அரசுப் பள்ளியில் தான் பணியாற்றி வருகின்றார். அவர் முதுகலை, கல்வியியல் பட்டங்கள் பெற்று வேலை கிடைக்காமல் முதலில் திருப்பூர் வந்து தான் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு நான் வாங்கிக் கொடுத்த வேலையில் தான் இருந்தார். அவர் ஆசிரியர் பணியில் சேர்ந்ததும் முதலில் தனக்குக் கிடைத்த சம்பளத்தைப் பார்த்து திருப்பூர் மீண்டும் வந்து விடலாமா? என்று யோசித்தவர் தான். இப்போதும் வாரம் தோறும் உரையாடிக் கொண்டு தான் இருக்கின்றார். அவர் சென்ற வாரம் சொன்னது "நான் வாங்கும் சம்பளத்திற்கும் என் வேலைக்கும் தொடர்பே இல்லை. உண்மையிலேயே ஆசிரியர்கள் சம்பளம் மிக மிக அதிகம்". 

காரணம் அவருக்குத் தெரியும் திருப்பூரில் பத்தாயிரம் சம்பளத்திற்கு ஒருவர் எந்த அளவுக்குக் கடின உழைப்பு செலுத்த வேண்டும் என்பதனை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார். 

மற்றொரு உறவினர் மத்திய அரசில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார். அவர் மனைவியும் மேல் நிலைக்கல்வி ஆசிரியராக இருக்கின்றார். தினமும் நாற்பது கிலோமீட்டர் பயணித்துப் பள்ளிக்குச் செல்கின்றார். அவர் இயல்பிலேயே சுகவாசி. பணி குறித்துப் பேசும் போதெல்லாம் டார்ச்சர் அதிகம் என்கிறார். 

வாசிப்பு முதல் கண்டதும் கேட்டதும் பழகியதை வைத்துப் பார்க்கும் போது ஆசிரியர்கள் குறித்த தற்போது என் சிந்தனையில் இருப்பவை. 

1. இராமநாதபுரம், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சித் தலைவராக இருந்தவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகளால் இந்த மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளியில் புத்துணர்ச்சி பெற்றது. ஆசிரியர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைத்தது என்று கூறிவிட முடியாது. 

2. குறிப்பிட்ட வகுப்பு வரைக்கும் ஆல் பாஸ் என்ற அரசின் கொள்கை மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்கவில்லை.. அரசு மூலம் வழங்கப்படும் இலவச பொருட்கள் மாணவர்களை அரசுப் பள்ளிகள் பக்கம் இழுத்துக் கொண்டு வரவில்லை. வராக்கடன் தொகையை அரசு வெளியிடாவிட்டாலும் நாங்களே வெளியிடுவோம். முதலில் வங்கிகளைச் சீரமைக்க வராக்கடன்களை வசூலிக்க வேண்டும். என்று வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பு போராடிப் பார்த்துள்ளேன். இதுவரையில் ஆசிரியர்கள் போராடிய எந்தப் போராட்டத்திலும் மாணவர்கள் நலன் சார்ந்தோ, மாறாமல் இருக்கும் பாடத்திட்டங்கள் குறித்து அக்கறைப்பட்டுப் போராட்டம் நடத்திப் பார்த்ததாக நினைவில்லை. 

3. மாணவர்களைத் திட்டக்கூடாது. அடிக்கக்கூடாது என்ற கட்டளை ஆசிரியர் மாணவர்கள் உறவில் பெரிய விரிசலை உருவாக்கியுள்ளது. மாணவப் பருவத்தைத் திசைமாற்றியுள்ளது. ஆசிரியர்களின் அக்கறையின்மையை அதிகப்படுத்தியுள்ளது. 

4. ஆசிரியர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் பிற வேலைகள் கூடுதல் பணிச்சுமை என்றால் அதனை விட இன்னமும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள நடைமுறைகளைக் கட்டி அழுது கொண்டிருப்பது கல்வித்துறையை முன்னால் நகர முடியாத அளவுக்கு உள்ளது. கல்வித்துறையில் உள்ள ஊழல் குறித்து எவரும் அக்கறைப்பட்டுக் கொள்வதில்லை. இது அரசியல்வாதிகளை மட்டும் சார்ந்தது மட்டுமல்ல. ஆசிரியர் எடுக்கும் கடன் தொகை பெறக்கூட அதிகாரிகளுக்குக் குறிப்பிட்ட சதவிகிதம் லஞ்சம் கொடுத்த பின்பே அந்தத் தொகையைப் பெற முடியும். கீழ்நிலை வரைக்கும் நாற்றமடிக்கின்றது. 

5. இப்போது ஆசிரியர் மாணவர் உறவென்பது பாசத்துடன் அணுகுவது அல்ல. பயத்துடன் அவரவரை பாதுகாத்துக் கொள்வது போலவே உள்ளது. 

6. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளியில் ஒரே ஆசிரியர் கணிதம், அறிவியல் பாடங்களுக்குப் பாடம் எடுத்து பாதிக்கு மேற்பட்டவர்களை நூற்றுக்கு நூறு எடுக்க வைத்துள்ளார். பல இடங்களில் மாணவர்கள் குறைவாக இருந்தும் அளவுக்கு மீறி ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கின்றார்கள். அதிக மாணவர்கள் இருக்கும் இடங்களில் அரசு, ஆசிரியர்களை நியமிக்காமல் காரணங்களைச் சொல்லி தட்டிக்கழிக்கின்றது. 

7. சம்பளத்தைத்தாண்டி அர்ப்பணிப்பு உணர்வு என்பது ஆசிரியர் பணியில் தலையாயக் கொள்கை. காரணங்கள் எத்தனை இருந்தாலும் எதிர்காலச் சமூகத்தை உருவாக்குபவர்கள் ஒவ்வொரு ஆசிரியருமே. ஆனால் உங்களுடன் பணியாற்றுபவர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள் என்று அவர்களின் தரத்தை பட்டியலிட்டுப் பாருங்கள்? 

தான் வாங்கும் சம்பளத்திற்கு முழுமையாக என் உழைப்பைக் காட்டியுள்ளேன். ஒரு மாணவர் தேர்ச்சி பெறாவிட்டால் கூட என் மனம் வருந்தும். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் நான் பணியாற்றும் பள்ளியில் தான் என் மகன், மகளையும் படிக்க வைக்கின்றேன். எவரையும் தனியார் பள்ளியில் படிக்க வைப்பதில்லை? போன்ற கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். 

உங்கள் மனசாட்சி உண்மையைப் பேசும்?

07/01/2018  (முகநூலில் எழுதிய குறிப்புகள்)

Sunday, December 03, 2017

ஜெயலலிதா - எம்.ஜி.ஆர் - சசிகலா


வலம்புரி ஜான் எழுதிய வணக்கம் - நூல் விமர்சனம் 3

எம்.ஜி.ஆர் படங்களில் சண்டைக் காட்சி என்பது பிரசித்தமானது. வெகுஜன மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் படங்கள் திரையரங்கத்திற்கு எந்த அளவுக்கு லாபம் தரக்கூடியதோ அந்த அளவுக்கு ரசிகர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களால் நஷ்டங்களையும் சந்தித்தது. உடைந்த சேர்களும், கிழிந்த இருக்கைகளும் அதிகம்.

நல்லவன். கெட்டவன். என்ற இரண்டே விசயங்களை வைத்துக்கொண்டு சித்து விளையாட்டு காட்டியவர். இறுதியில் எம்.ஜி.ஆர் வில்லனை வெல்வார் என்பதே. ஆனால் எம்.ஜி.ஆர் வாழ்க்கை முழுக்கக் கடைசி வரையிலும் தோற்றது ஜெயலலிதாவிடம் மட்டுமே.

தான் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம் என்பது தெரிந்தே தோற்றுக் கொண்டிருந்தார். 

தான் செலுத்திய அன்பைப் புரிந்து கொள்ளாமலும், அதே சமயத்தில் அவரை விட்டுப் பிரிய மனமில்லாமலும் தனக்குத் தானே மன உளைச்சலை உருவாக்கிக் கொண்டவர் எம்.ஜி.ஆர். அவர் ஜெ மேல் வைத்திருந்தது அன்பல்ல. ஆதிக்கம் என்று வைத்துக் கொண்டாலும் ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்கு வைத்த பெயர் பெட்டை. இதன் அர்த்தத்தை விவரிக்கத் தேவையில்லை. 

இவர் முகத்தை மட்டுமே பார்ப்பதற்காக நாள் முழுக்கக் காத்திருந்த கோடிக்கணக்கான மக்களிடமிருந்த இவரின் அபரிமிதமான புகழும் செல்வாக்கும் எங்கே? ஒவ்வொருநாளும் ஜெ வுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த காட்சிகளை எல்லாம் வாசிக்கும் போது தனி மனிதனின் அந்தரங்கமாகத் தெரியவில்லை. ஒரு தலைமைப்பண்பு உள்ளவரின் இருக்கத் தேவையில்லாத குணாதிசியங்களின் அவலமாகத்தான் தெரிகின்றது. 

தனக்குச் சொந்தமானதை வேறு எவரும் சொந்தமாக்கிவிடக் கூடாது என்பது அவரின் பிடிவாத கொள்கை. ஆனால் இதற்காக அவர் பெற்றதை விட இழந்தது தான் அதிகம். அவர் வாழ்நாள் முழுக்க இதற்காகவே தன் ஆரோக்கியத்தைப் பரிசாகத் தர வேண்டியிருந்தது. மன நலத்தைப் பாதித்தது. கடைசியில் தன் முதல் அமைச்சர் பதவிக்கே வேட்டு வைக்கப் போகின்றது என்பதனை உணர்ந்து அவர் வருத்தப்பட்ட அந்தரங்க ரகசியங்கள் சிலவற்றை மட்டும் வலம்புரி ஜான் இந்தப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். 

ஜெயலலிதாவை மன்னர் பரம்பரை போல இன்னமும் சித்தரிப்பவர்கள் அவர் அம்மா வாழ்ந்த தொடக்க வாழ்க்கைப் பற்றிச் சில இடங்களில் வருகின்றது. ஆதாரங்களும், அதைக் கண்டவர்களைப் பற்றியும் குறிப்புக் கொடுத்துள்ளார். ஜெயலலிதாவின் அம்மா தமிழ்நாட்டில் தொடக்கத்தில் தேவிபட்டணத்தில் ஆயாம்மா வேலை பார்த்ததும் அதன் பிறகே அவர்களின் பூர்விகமான ஸ்ரீ ரங்கம் ஊருக்கு வந்ததைப் பற்றியும் எழுதியுள்ளார். அங்குள்ளவர் தொடர்பின் மூலமாகத்தான் சென்னையில் திரைப்பட வாய்ப்பு தேடி வந்துள்ளார், சந்தியாவின் தங்கையும் அப்போது நடிகையாக இருந்துள்ளார். 

காலப்போக்கில் எம்.ஜி.ஆர் படங்களில் கதாநாயகியாக வளரும் அளவுக்கு வாழ்க்கை மாறியுள்ளது. இடையில் வாழ்க்கையை நடத்தக் கஷ்டப்பட்ட காலத்தில் சந்தியாவும், ஜெயலலிதாவும் பணத்திற்காகச் செய்த பல காரியங்களை மேலோட்டமாகவே எழுதியுள்ளார். ஆண் துணை இல்லாத குடும்ப வாழ்க்கையில் தங்களையே உருக்கித்தான் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு உள்ளனர். 

இது ஆண் உலகம். ஆண்கள் செய்கின்ற விசயங்கள் எதுவும் பெரிதாகத் தெரியாது. ஆனால் பெண்கள் அதுவும் நடிகையாக இருப்பவர்கள் செய்த காரியங்கள் அனைத்தும் சம்மந்தப்பட்டவர்கள் எவர் மூலமாகவோ வெளியே வந்து தான் தீரும். இவர்களின் தொடக்க வாழ்க்கையை முழுமையாக அறிந்தவர் அக்னி நட்சத்திரம் படத்தில் வில்லனாக  நடித்த திரையரங்க அதிபர் ஜி. உமாபதி. தொடக்கக் கால இவர்களின் அழுக்கைப் பொருட்படுத்தாமல் எம்.ஜி.ஆர் இவருக்கு வழங்கிய வாய்ப்புகளும், உதவிகளும் கடைசியில் அவருக்கே எதிராகவே வந்து சேர்ந்துள்ளது. 

எம்.ஜி.ஆரின் புகழும், அவர் இருந்த பதவியும் ஜெயலலிதாவிற்கு முக்கியமாகத் தெரிந்தது. ஜெயலலிதாவின் எண்ணமும், அடுத்தடுத்து நகர்த்திய செயல்பாடுகளும் அதை நோக்கியே நகர்ந்தது. இது அரசியல் மட்டுமல்ல. பணம், புகழ் அதிகம் இருக்கும் அனைத்து துறைகளிலும் கீழ்மட்ட நிலைகளில் இருப்பவர்கள் செய்யக்கூடியதே. மன்னர்கள் காலம் முதல் படையெடுப்பாளர்கள் காலம் வரைக்கும் எவர் தமக்கு உதவி செய்தார்களோ அவர்களை முடித்துக் கட்டுவது தான் வாடிக்கையாக இருந்துள்ளது. காரணம் சொல்லத் தேவையில்லை. தன்னைப் போல மற்றவர்களுக்குச் செய்துவிடக்கூடாது என்பதே பிரதான காரணம். 

மற்றது எல்லாம் பிறகு தான். 

ஜெயலலிதா வாசித்த புத்தகங்கள் அவருக்கு அரசியல் ஆசைகளை உருவாக்கியது. அது தான் முதல் காரணம். முக்கியக் காரணம். கற்பனைகள் எல்லாமே எதார்த்தத்தில் பொருந்தி போய்விடுவதில்லை. ஆனால் உருவான இடையூறுகளைத் தாண்டி ஹைதராபாத் சென்று தங்கிவிடலாம் என்ற எண்ணத்தை மாற்றி இங்கே தங்க வைத்தவர்கள் சசிகலா மற்றும் நடராஜன். 

ஜெயலலிதாவின் ஆசைகளை முழுமையாக்கிய பெருமை சசிகலா மற்றும் நடராஜனையே சாரும். ஒரு மூளையில் இருந்து உதிக்கும் சிந்தனைகளுக்கும் அதுவே மூன்று மூளைகளில் உருவாகும் செயல்பாடுகளின் வீரியம் எந்த அளவுக்கு இருக்கும்? என்பதனை உங்களால் யூகிக்க முடிந்தால் ஏன் வெகுவிரைவில் ஜெயலலிதா முதல் அமைச்சர் பதவியில் அமர முடிந்தது என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். 

திரைப்படங்களில் காட்டப்படும் காட்சிகளும் சசிகலா வாழ்க்கையும் ஒன்றாக இருப்பது ஆச்சரியம் தான். ஒரு கிராமத்துப் பெண். கிராம வாழ்க்கையைத் தவிர வேறு எதுவும் பார்த்திராத பெண். அரசு அதிகாரியாக இருந்த நடராஜனுடன் திருமணம் நடக்கின்றது. சென்னையில் ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகின்றது. சசிகலா முதல் முறையாகச் சென்னை வருகின்றார். சென்னையில் யாரையும் தெரியாது. தங்குவதற்கு இடம் கூட இல்லை. சந்திரலேகா ஐ.ஏ.எஸ் கொடுத்த கடிதம் மட்டும் கையில் உள்ளது. காட்சிகள் மாறுகின்றது. ஆனால் கால் நூற்றாண்டு காலத்திற்குள் அகில உலகத்திற்கும் தெரிந்த நபராக மாறியுள்ளார். 

இவர் குடும்ப உறுப்பினர்களிடத்தில் உள்ள சொத்துக்களின் மொத்த அளவு என்பதனை எவராலும் இன்று வரையிலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஜெயலலிதாவிடம் சசிகலாவை அறிமுகம் செய்து வைத்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ் கடைசியில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படப் போகின்றோம் என்று நினைத்துப் பார்த்திருப்பாரா? சசிகலா அதிமுகத் தலைமைச் செயலகத்திற்குத் தான் வந்த ஆட்டோவிற்கு அதிமுகக் கழகத்தில் உள்ளவர்களிடத்தில் ஐந்தும், பத்துமாக வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தவர் என்றால் இன்று நம்பும்படியாக உள்ளதா?

ஜெயலலிதா, சசிகலா காலில் விழாத அரசியல்வாதிகளை இனி யாராவது மிச்சம் மீதி இருக்கின்றார்களா? 

சசிகலாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் நடராஜனைச் சார்ந்தது இருந்தது. நடராஜனின் ஒவ்வொரு நடவடிக்கையும் எவரும் நினைத்துப் பார்க்காத பொன் முட்டையிடும் வாத்தைப் பாதுகாக்கும் பணியைச் செய்து கொண்டிருந்தது. திட்டமிடுதலும், களப்பணியும் சரியாக இருக்க வேண்டும். அது காலச் சூழலுடன் ஒத்துப் போக வேண்டும். இதற்குச் சமகாலத்தில் மிகச் சிறந்த உதாரணம் ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கை முறை தான். 

ஜெயலலிதாவிற்குத் தொடக்கத்தில் 14 பேர்கள் கொண்ட பாதுகாப்புக் குழுவை அப்போது அவருடன் நெருக்கமாக இருந்த திருநாவுக்கரசு தான் தன் சொந்த செலவில் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்தப் படையை நீக்கியது முதல் ஜெயலலிதாவின் உறவு முதல் நட்பு வட்டம் வரைக்கும் பார்த்துப் பார்த்து களையெடுத்த சசிகலா நடராஜனின் ராஜதந்திர நடவடிக்கைகளைப் பல இடங்களில் வலம்புரி ஜான் அதீதமாகப் பாராட்டி எழுதியுள்ளார். ஜெயலலிதா மனதில் அரசியல் ஆசை துளிர்விட்ட காலம் முதல் அவர் முதல் முறையாக முதலமைச்சர் பதவியேற்ற நாள் வரைக்கும் எத்தனையோ பேர்கள் உதவியுள்ளார்கள். பட்டியல் நீளம். ஆனால் அவர்கள் ஒருவர் கூட அருகில் இல்லாதவாறு பார்த்த பெருமை சசிகலா நடராஜனையே சாரும். 

இந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட விசயத்தை ஜான் சுட்டிக் காட்டி எழுதுகின்றார். 

மன்னர் காலம் தொடங்கி, ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் கடந்த எழுபது ஆண்டுக் கால இந்திய சரித்திரத்தில் பிராமணர்களைத் தவிர்த்து எந்த உயர் பதவிகளும் இருந்ததே இல்லை. எல்லா இடங்களிலும் அவர்கள் தான் இருப்பார்கள். இது அவர்களின் தனித்திறமை அல்லது புத்திசாலித்தனம். ஆனால் நடராஜன் தான் இந்த லாபி வட்டத்தை உடைத்துக் காட்டியவர். "எங்காத்து பொண்ணு வந்திருக்கா" என்று சிலாகித்த எந்தப் பிரமாணர்களும் ஜெ பக்கத்தில் நெருங்க முடியாத அளவிற்கு வலைப்பின்னல் சரியாகவே உருவாக்கி வைத்திருந்த சசிகலா நடராஜன் திறமையை எப்படிப் பாராட்டுவது? 

ஜெயலலிதாவிற்கு என்ன தான் திறமையிருந்தது? என்பது குறித்து வரலாற்றில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதுவுமில்லை. எடுத்தேன்? கவிழ்த்தேன் ரீதியான நபரைப் பொம்மை போல வைத்துக் கொண்டு மொத்த அதிகாரங்களையும் தாங்கள் கையில் வைத்துக் கொண்டு வித்தைக் காட்டிய அவர்களின் திறமையைப் பல இடங்களில் வலம்புரி ஜான் சிலாகித்து எழுதியுள்ளார். 

குறிப்பாக நடராஜன் வேட்டை நாய் போலவே தொடக்கம் முதலே செயல்பட்டு வந்துள்ளார். எதிரி என்றால் அழித்து முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்கிக் கொள்ளவே இல்லை. கணவன் வெளிப்புறம். மனைவி உட்புறம் என்பது எழுதப்படாத விதியாக வைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் மொத்த விதியையும் மாற்றிய பெருமை இவர்களையே சேரும். சசிகலா நடராஜன் குறித்து அவர்களின் சகல பாகங்களையும் செய்த பாவங்களையும் பலரும் பல இடங்களில் பாகம் குறித்து எழுதிவிட்டனர். 

இவர்களைப் பற்றி வலம்புரி ஜான் எழுதிய வாசகம் பொருத்தமாக உள்ளது. 

ஜெயலலிதா செய்த வேலை எம்.ஜி.ஆரின் உண்மையான விசுவாசிகளை அழித்து ஒழித்தது. ஆனால் சசிகலா செய்தது ஜெயலலிதாவின் விசுவாசிகள் என்பது அறவே இருக்கக்கூடாது என்பதனை கர்மசிரத்தையுடன் செய்து முடித்தது.

தீபா, தீபக் போன்ற பெயர்கள் கூட ஜெயலலிதா இறப்புக்குப் பின் தானே நமக்குத் தெரிய வந்தது. ஜெயலலிதா எல்லாவற்றுக்கும் விலை வைத்திருந்தார். ஆனால் சசிகலா குடும்பத்தினரோ விலை என்பதே இல்லை. அனைத்தும் நமக்குரியது என்பதனை ஒவ்வொரு செயல்பாட்டிலும் நிரூபித்தனர். 

தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களுக்குப் பலகீனம் இருந்தால் அது எந்த அளவுக்கு நாச விளைவுகளை நாட்டுக்கு உருவாக்கும் என்பதனை தமிழ்நாட்டின் கடந்த கால அரசியல் தலைகள் ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்க்கை வழியே நமக்குப் பலவிதங்களில் உணர்த்திக் காட்டிச் சென்று உள்ளனர். 

ஆனால் ஜெயலலிதா வாசித்த புத்தக அறிவு மூலம் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட ஆளுமை எதுவும் அவரின் செயல்பாட்டில் காட்ட முடியாத அளவிற்குப் பரந்துபட்ட மனசு இல்லாமல் போனதற்கு முக்கியப் பல காரணங்களில் சசிகலா குடும்பமே முக்கியக் காரணமாக இருக்கின்றார்கள். 

காலம் ஒவ்வொரு தனி மனிதர்களுக்கும் அவரவருக்குண்டான சில அதிர்ஷ்ட வாய்ப்புகளை அவ்வப்போது வழங்கத் தான் செய்கின்றது. சிலர் சரியான சமயத்தில் பயன்படுத்தி வெற்றி கண்டு விடுகின்றார்கள். சிலர் அந்த வாய்ப்பு வந்ததை அறியாமல் கோட்டை விட்டு வாழ்நாள் முழுக்கப் புலம்பும் மனிதராக வாழ்கின்றார்கள். ஜெயலலிதாவிற்குத் தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல்வாதிகளுக்கும் உண்டான பெரிய வித்தியாசம் ஒன்று என்னவென்றால் மொத்த அதிர்ஷ்டமும் இவர் பக்கம் இருந்தது. ஆனால் இவரின் அதிர்ஷ்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் சசிகலா குடும்பத்தினர் மட்டுமே. 

உடல் உறுப்புகள் மொத்தமாக மாற்றி, சாவுக்கு மிக அருகே சென்று வந்தும் கூடத் தன் குணாதிசியங்களை மாற்றிக் கொள்ள முடியாத நடராஜனின் சமீப பேட்டிகளை வாசிக்கும் போது அவரின் ஆரோக்கியமான வாழ்க்கையின் போது அவரது எண்ணங்கள் எப்படியிருந்துக்கும் என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது. எம்.ஜி.ஆர் கடைசிக் காலத்தில் நோய் என்ற வலைக்குள் மாட்டிக் கொண்டார். ஆனால் அவருக்குண்டான உதவிகள் கிடைத்தது. எதுவும் மறைக்கப்படவில்லை. மறுக்கப்படவில்லை. 

ஆனால் ஜெயலலிதா வாழ்க்கையில் மொத்தமும் தலைகீழ். என்ன நடந்தது? என்ன நடந்திருக்கும்? என்பதனை இன்னமும் தமிழ்கூறும் நல்லுலகம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றது.

இது தான் சசிகலா? 

எம்.ஜி.ஆர் உடல் நலிவுற்று இருந்த போது ஜெயலலிதா இவரால் இந்தச் சூழ்நிலையில் கூடத் தமிழ்நாட்டை ஆள முடியும் என்றால் என்னால் ஏன் முடியாது? என்று கேள்வி எழுப்பியவர் என்றால் அரசியலை எந்த அளவுக்குப் பார்த்துள்ளார்? என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசியல் என்பதும் முதல் அமைச்சர் நாற்காலி என்பதும் இப்போது கூட இரண்டு வெற்றிப்படங்கள் நடித்து விட்டால் அது நமக்குச் சொந்தம் என்று கருதும் தமிழ் நடிகர்கள் சொல்லும் விளையாட்டு நாற்காலி போலத்தானே இருக்கின்றது? 

பல புத்தகங்கள் வாசித்த ஜெயலலிதா தமிழக அரசியலைப் பற்றி எப்படிப் புரிந்து வைத்திருக்கக்கூடும்? என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும். தனக்குத் தெரிந்த ஆங்கில அறிவே அனைத்துக்கும் அருமருந்தாக இருக்கும் என்று கடைசி வரைக்கும் நம்பினார். ஆங்கிலம் தெரியாதவர்கள் அவர் பார்வையில் மனிதர்களாகவே தெரியவில்லை. 

தாழ்வு மனப்பான்மை என்பது பல சமயங்களில் உயர்வு மனப்பான்மையாகத் தெரியும். தன்னுடைய காயங்கள், தன் அழுக்கு, மறைக்க முடியாத தோல்விகள், மறைத்த ஆக வேண்டிய கடந்த கால அசிங்கங்கள் அனைத்தும் தன்னுடைய அகங்கார செயல்பாடுகளால் மறைத்து விட முடியும் என்று நம்புவர்களின் வாழ்க்கைக்கு மிகச் சிறந்த உதாரணம் ஜெயலலிதாவின் வாழ்க்கை. தொடக்கம் முதலே ஜாதகம் விசயங்களில் அதீத ஈடுபாட்டுடன் இருந்துள்ளார். அதைப் போலவே மந்திர, சித்து வேளைகளில் அதே அளவுக்கு ஈடுபாட்டுடன் இருந்துள்ளார். 

வலம்புரி ஜான் தான் அதற்கும் உதவியுள்ளார். தன் உண்மையான ஜாதகத்தைப் போல மற்றொரு ஜாதகத்தையும் தயார் செய்து வைத்து மற்றவர்களைக் குழப்பும் வேலையையும் தெளிவாகவே செய்துள்ளார். பிரபல ஜோதிடர் இவரின் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லியவர் ஒரு வார்த்தையும் சேர்த்துச் சொல்லியுள்ளார். இந்த ஜாதகி போதை விவகாரங்களில் தள்ளியே இருக்க வேண்டும் என்பதே. நாம் தான் யூகித்துக் கொள்ள வேண்டும். 

அமெரிக்கா சென்றவர் இறந்தே விட்டார் என்று நம்பி செய்த காரியங்கள் எதுவும் அவர் முழுமையாகத் திரும்பி வந்ததும் நிறைவேறவே இல்லை. ராஜ ரகசியங்கள், ராஜாங்க உள்ளடி வேலைகள் அனைத்தையும் அங்கங்கே வலம்புரி ஜான் விவரித்திருப்பதைப் பார்க்கும் போது பழிவாங்கும் குணம் அதிகம் உள்ள எம்.ஜி.ஆர் எப்படி இவர்களை எல்லாம் இவ்வளவு தூரம் விட்டு வைத்திருந்தார் என்பதே ஆச்சரியமாக உள்ளது. 

காலம் சில சமயம் கழிவுகளை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். தீமைகள் தன் பேயாட்டத்தை இறுதி வரைக்கும் நிறுத்தாது. ஆனால் வரலாற்றுப் பக்கங்கள் மொத்தத்தையும் ஏதோவொரு சமயங்களில் வெளியே கொண்டு வந்து துப்பி விடும் வல்லமை கொண்டது. 

கறை நல்லது



தொடர்புடைய  பதிவுகள்

ஜெ. செய்த ஊழல்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த மின் நூல் உதவக்கூடும்.





உங்கள் வாசிப்புக்கு மின் நூல்கள்