Tuesday, February 18, 2014

இருபதில் மூன்றாவது இடம்.

புத்தக மதிப்புரைப் போட்டி முடிவுகள்!

அன்பு நண்பர்களே,

நாம் பல நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ‘புத்தக மதிப்புரைப்’ போட்டிக்கான முடிவுகளை இதோ நம் உயர்திரு. வெங்கட் சாமிநாதன் ஐயா அவர்கள், தம் தேர்ந்த ஞானமும், நிறைந்த அனுபவமும் கொண்டு மிக ஆழ்ந்த பார்வையுடன், பாரபட்சமற்ற முறையில் மிகத் தெளிவாக அளித்துள்ளார்கள். அவருக்கு நம் மனமார்ந்த நன்றி. போட்டியில் மிக ஆர்வமாகக் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். வெ.சா. ஐயா கூறியது போன்று அத்துனை இடுகைகளும் தரம் வாய்ந்தவைகள். போட்டி என்பதால் சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் வெற்றி வாய்ப்பு சிலருக்கு மட்டும் கிடைத்திருக்கிறது என்பதே உண்மை. 

இதோ வெற்றியாளர்கள் குறித்த அவருடைய மதிப்பீடுகள் :

வெங்கட் சாமிநாதன்

என் மனதுக்குப் பட்டதைச் சொல்கிறேன்.

எந்த எழுத்தையும் முதலாவது, இரண்டாவது என்று தேர்வு செய்வது மிகவும் கஷ்டமானது. அது மிகவும் சிக்கலான விஷயம். ஏனெனில் எழுத்தே, சிறுகதையோ, நாவலோ, கவிதையோ சிருஷ்டிப்பூர்வமானது. அது எழுதுபவனின் தனி உலகம். அதை இன்னொருவன் எதிர்கொள்வது அவனின் தனி உலகம். அது அப்படித்தான் இருக்கும். 

ஷேக்ஸ்பியரை டால்ஸ்டாய் ஒப்புக்கொண்டவரில்லை. இரண்டு பேரும் இரண்டு சிகரங்கள். ஐம்பது அறுபதுகளில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு எழுத்தாளர், மாயாவி, கலைமகளில் அக்காலத்தில் நிறைய எழுதியவர், பம்பாய் வாசி, தில்லி வாசியானார். 

“எங்கே வேணாலும் எந்த கோவில்லேவேணாலும் சத்தியம் செய்யத் தயார். க.நா.சு. எழுதறதெல்லாம் எழுத்தே இல்லை. அவருக்கு இலக்கியமே என்னன்னு தெரியாது” என்று அவர் சொன்னபோது அவர் முகம் சிவந்து கிடந்தது. 

”க.நா.சு எழுதுவது அத்தனையும் உடன் கட்டை” என்று கோ.வி.மணிசேகரன் பல பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்றவர் எழுதினார். தி.ஜானகி ராமன் எழுதுவதையோ, லா.ச.ராமாமிர்தம் எழுதுவதையோ ஒப்புக்கொண்டவர் இல்லை மௌனி. புதுமைப்பித்தனிடம் தான் ஏதோ இருக்கற மாதிரி படறது” என்பார் அவர். 

பாரதி அதி முட்டாள் என்று அவர் காலத்திய புலவர்கள் சொன்னதுண்டு. திராவிடக் கழக மேடைகளில் பாரதி பாப்பான் என்று வசை பாடப்பட்ட போது, “ஐயரை ஒன்னும் சொல்லாதீங்கடா, அவரை விட்டுவிடுங்கப்பா” என்று தான் பாரதி தாசன் சொல்ல முடிந்தது. 

கோபால கிருஷ்ண பாரதிக்கு ஒழுங்கா தமிழ் எழுதவே தெரியலை” என்று அக்காலத்திய கம்பன் எனப் புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரம் பிள்ளை சொன்னார். இதெல்லாம் அவரவருக்கு ஈடுபாடு இருந்த, தெரிந்த துறையில் இன்னொருவர் எழுத்தைப் பற்றி விமர்சித்தது. 

இந்த விமர்சனங்கள் அத்தனையும் நிராகரிக்கப்பட்டு விட்டன. இன்னும் இது போன்று தொடர்பவை எல்லாம் நிராகரிக்கப்பட்டு விடும். 

இப்போதைய விஷயத்துக்கு வரலாம்.

எனக்கு முன்னர் போன வருடம் தரப்பட்டது ஒரு வருஷ காலத்துக்கு பலர் எழுதிய சிறுகதைகள். எல்லாம் சிறுகதைகள். அந்த சிறுகதைகளோடு நான் தந்திருந்த தேர்வும் எல்லோருக்கும் முன் பார்வையில் வைக்கப்பட்டவை.

இம்முறை என் முன் வைக்கப்பட்டவை 20 மதிப்புரைகள். 

பலரால் வித விதமான வேறுபட்ட ரசனை கொண்டவர்களால் தரப்பட்ட மதிப்புரைகள். மதிப்புரைகளும் ஒரே வகைப்பட்ட எழுத்துக்கள் பற்றி அல்ல. பல கவிதைகள் பற்றியவை. கவிதைகள் அல்ல. அவை பற்றிய மதிப்புரைகள். நாவல்கள் சிலவற்றைப் பற்றிய மதிப்புரைகள். சில நடந்த, பலர் அறியாத நடந்த வரலாறு சார்ந்த புனைவுகள். சில இலக்கியம் பற்றிய கட்டுரைத் தொகுப்பு பற்றிய மதிப்புரை இப்படி பல ரகங்கள். 

எல்லாமே யாரோ எழுதியதற்கு இன்னொருவர் எழுதிய மதிப்புரைகள். அந்த மதிப்புரைகளை மதிப்பிடுவது எப்படி?

நமக்குத் தெரியாத ஏதேதோ நாட்டு, மக்களின் உணவு பற்றி, வேறு யார் யாரோ நாட்டவர் எழுதும் ரசனையை மாத்திரம் வைத்துக் கொண்டு யார் ரசனை எழுத்து சிறந்தது என்று எப்படிச் சொல்வது? ஏதும் ஒரு வகைப்பட்டதாக இருக்கவேண்டுமே.

இது மிக சிக்கலான விஷயம். 

மலையாளத்து எரி சேரியைச் சாப்பிட்டு ஒரு இங்கிலீஷ்காரன் எப்படி இருந்தது என்று சொல்வான். ரஷ்யன் வோட்காவை ஒரு பர்மாக்காரன் சாப்பிட்டு எப்படி இருந்தது என்று சொல்வான். பாங்காக் தெருக்களில் கரப்பான் பூச்சியை வறுத்து வைத்திருந்ததைச் சாப்பிட்டு ஒரு சைனாக்காரன் அவன் ரசனையைச் சொல்வான். இப்படி 20 பேர் எழுத்தைப் பற்றி இன்னொரு இருபது பேர் எழுதுவதை எப்படி ஒரு சீராக மதிப்பிடுவது? 

எது முதல் பரிசுக்கு ஏற்றது, எது இரண்டாவது பரிசுக்கு என்று சொல்வது?

ஆக, இந்தக் காரியத்துக்கு ஏதாவது ஜகஜ்ஜாலம் செய்து தான் ஆகவேண்டும். ரொம்பவும் subjective ஆன நாவல், கவிதை, சிறுகதை இவற்றை நான் ஒதுக்கி விட்டேன். ஒதுக்கியதற்கு இன்னொரு காரணம், அந்த subjective ஆன எழுத்துக்கு இன்னொரு வேறுபட்ட ரசனையும் பார்வையும் கொண்ட இன்னொரு subjective அபிப்ராயத்தைப் பற்றி நான் என்ன சொல்லமுடியும்? ஒன்று மிகப் பரவச உணர்வோடு எழுதப்பட்டதும், இது என்னால் ஆகாது, 

மேரு மலையைப் பற்றி நான் ஒரு சிறு கரடு, நான் என்ன சொல்ல, என்ற தன்னடக்கம் கொண்டதுமாக இருந்தால். அதை மாத்திரம் வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய. இதையெல்லாம் ஒதுக்கி விட்டேன். பிட்ஸாவையும் நெத்திலி வறுவலையும் ஒப்பிடும் காரியம் என்னால் ஆகாது.

ஆனால் இன்றைய தமிழுக்கு, அது தெரியாத, அது அறியாத வளங்களைக் கொண்டு சேர்க்கும் எழுத்துக்கள், எனக்கு மிக முக்கியமானவையாகப்பட்டன. இந்த மாதிரி எழுத்துக்கள் தமிழில் வருவது இல்லையென்றும் சொல்லலாம். அல்லது, மிக மிகக் குறைவு என்றும் சொல்லலாம். அப்படிப்ப்ட்ட எழுத்துக்களின் மீது நம் கவனம் செல்ல வேண்டிய அவசியம் உண்டு. இவை முக்கியமாக, வரலாறு ஆனதால் subjective அல்ல. புற நோக்கில் மதிக்கத் தக்கவை. எனக்கு இவை எழுதப்பட்டுள்ளதும், அவை பற்றி நம் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதும். எனக்கு மிக சந்தோஷம் தந்தவை. 

எந்த தரத்தில் எழுதப்பட்டவை என்று தீர்மானிக்கமுடியாத நாவல், கவிதை, சிறு கதை பற்றிய, பக்தி பாவத்தில் புகழ்ந்து எழுதப்பட்டவையும் அல்லது இதைப் பற்றி எழுதும் தகுதி எனக்கில்லை என்று எழுதப்பட்டவையும் ஒதுக்கி விட்டால், ஒதுக்கத் தான் வேண்டும். மிஞ்சுவது இன்றைய தமிழ் வரவேற்க வேண்டிய சேர்க்கைகள், வளம் ஊட்டுபவை என்று கருதி அவற்றின் மீது நம் கவனத்தை ஈர்க்க எழுதப்பட்ட மதிப்புரைகள் என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவை.

இது நான் – என் பார்வை.

VGopalan இந்தப் பார்வையில் எனக்கு நம்மவர் எல்லாம் மிகவும் ஏதோ பேர் சொல்லி ஒதுக்கி விடும் நாகரத்தினம் அம்மாளை நினைவு கூர்ந்து அவரைப் பற்றி ஒரு புத்தகமே வெங்கட கிருஷ்ணன் ஆங்கிலத்தில் எழுத, அதை தமிழுக்கு மொழிபெயர்த்த பத்மா நாராயணன், பின் இதைத் தன் மதிப்புரைக்கு எடுத்துக்கொண்டு இந்த அரிய ஜீவனைப் பற்றிய அரிய புத்தகத்தை நம் கவனத்திற்குக் கொண்டு வந்த தஞ்சை வெ.கோபாலன் எல்லோரும் நம் மரியாதைக்குரியவர்கள். 

முதல் பரிசுக்கு என் தேர்வு தஞ்சை வெ.கோபாலனின் மதிப்புரைதான். இன்றைய தமிழ் நாட்டு மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய விஷயம். அது பெற்ற மகத்தான வரப் பிரசாதங்களைப் பற்றித் தெரியாது. பாமரத்தனமான பிரபலங்களைப் போற்றும், சிலை எழுப்பி வணங்கும் குணம் கொண்டது அது.

அடுத்து இரண்டாவதாக வரும் எனது தேர்வு மா.ராசமாணிக்கனாரின் தமிழ் வரலாற்று, இலக்கிய ஆய்வுகளைப் பற்றி இன்றைய தமிழ் பண்டித உலகம், இலக்கிய உலகம் அறியுமா அறியாதா தெரியாது. அவரது வரலாற்று ஆய்வுகளை அவரது மகனார், இரா. கலைக்கோவனே எழுதிய வரலாற்றின் வரலாறு என்னும் இன்னொரு அரிய புத்தகத்தின் மீது நம் கவனத்தை ஈர்க்கும் தேமொழியின் மதிப்புரை. வரலாறும், இலக்கிய ஆய்வும் இன்றைய தமிழ்ச் சூழலில் படும் பாடு நமக்குத் தெரியும். 

கலைக்கோவனும் அந்தப் புத்தகத்தை நம் பார்வைக்குக் கொண்டு வந்துள்ள தேமொழியும் நம் மரியாதைக்குரியவர்கள். 

இரண்டாம் பரிசு தேமொழிக்குரியது என் நோக்கில்.

மூன்றாவதாக, எத்தனை கோடி டாலர் சம்பாதிக்கிறது இந்தத் திருப்பூர் நகரம் என்று நம்மிடம் பெருமைப்பட்டுக் கொள்ளும் அதிகார வர்க்கமும், முதலாளி வர்க்கமும் ஒரு நகரத்தையும் அதன் மக்களையும் அவர்கள் வாழ்க்கையையும் என்ன நாசம் செய்து வைத்திருக்கின்றனர் என்று நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தகத்தின் மீது நம் கவனத்தை ஈர்த்துள்ள ரஞ்சனி நம் மரியாதைக்குரியவர். 

அவரது மதிப்புரை ரஞ்சனியை மூன்றாம் பரிசுக்கு உரியவராக்குகிறது என்று நான் நினைக்கிறேன்.

இவை போக இன்னும் மூன்று சிறப்புப் பரிசுகளும் உண்டு என்று வல்லமை ஆசிரியர் குழு அறிவித்துள்ளது எனக்கு மிகுந்த மன சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது. இல்லையெனில் இன்னும் பாராட்டத் தகுந்த மதிப்புரைகள் அநியாயமாக ஒதுக்கப்பட்டிருக்கும். கீழ்க்கண்ட மூன்று மதிப்புரைகள் தான் அத்தகைய சிறப்பு கவனம் பெறுபவை:

எத்தனை பேர் Bridge on the River kwai என்னும் ஒரு மகத்தான திரைப்படத்தை இன்றைய தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திருக்கிறார்களோ, பார்த்து அதன் முக்கியத்துவத்தை அறிவார்களோ தெரியாது. அந்த நினைவுதான் எனக்கு வந்தது ஷண்முகம் எழுதிய சயாம் மரண ரயில் என்னும் வரலாறு சார்ந்த புனைவு. அது பற்றி நமக்குத் தெரியத் தரும் ரிஷான் ஷெரீஃபின் மதிப்புரை.

இரண்டாவது சிங்கப்பூர் மலேசியத் தந்தை தமிழவேள் சாரங்கபாணி அவர்கள் பற்றி ஜே.எம்.சாலி எழுதிய புத்தகத்தின் மதிப்புரை தந்துள்ள பாண்டியன். ஜி. இதெல்லாம் நமக்குப் புதிய விஷயங்கள். தெரியாத விஷயங்கள். நாம் அறிய வேண்டியவை.

மூன்றாவது ஃப்ரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த காரைக்காலில் பிறந்து ஃப்ரெஞ்ச் கற்று அதன் இலக்கிய வரலாற்றை ஃப்ரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் மொழிகள் அறிந்த சொ.ஞான சம்பந்தன் எழுத, அவர் புத்தகத்துக்கு மதிப்புரை எழுதி நம் கவனத்துக்கு அதைக் கொண்டு வந்த கலையரசி அவர்களின் மதிப்புரைக்கு மூன்றாவது சிறப்புப்பரிசு தரவேண்டும்.

முன் சொன்னவாறு இவை எனதேயான பார்வையில் பட்டவை. ஏதும் objective ஆன நிலுவை, அளவைக் கருவிகள் என்னிடம் இல்லை. என் ரசனை மாத்திரமே என்னிடம் இருப்பது.

வெங்கட் சாமிநாதன்/2.2.2014

ஆகச் சிறந்த நூலத் தேர்ந்தெடுத்து, தெளிந்த நீரோடை போன்ற தம்முடைய எழுத்துக்கள் மூலம் நம் அனைவரின் உள்ளம் கவர்ந்ததோடு, ‘அடடா, நூல் உடனே கிடைத்தால் தேவலாம் போல் உள்ளதே’ என்று ஏக்கம் கொள்ளச் செய்து கொக்கி போட்டு இழுக்குமளவிற்கு தம் வல்லமையை வெளிப்படுத்தி, முதல் பரிசை தட்டிச் சென்றுள்ள திரு தஞ்சை கோபாலன் அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்!

வலிந்துத் திணிக்காமல் தெளிந்துச் செம்மையாக, தம் எளிமையான நடையில், சுருங்கச் சொல்லி விளங்கச் செய்யும் வல்லமையுடன், அருமையானதொரு வரலாற்று நூலை அறிமுகப்படுத்தி, இரண்டாம் பரிசை வென்றுள்ள திருமதி. தேமொழி அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்.

சீரான நடையில் தித்திக்கும் மொழியில் மூச்சு விடாமல் படிக்கச் செய்ததோடு, திரு ஜோதிஜி அவர்களின் இந்த ஆகச் சிறந்த நூல் எங்கு கிடைக்கும் என்று சிந்திக்கவும் வைத்து, மூன்றாம் பரிசை தட்டிச் சென்றுள்ள திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு உளம் கனிந்த பாராட்டுகள்.

நச்சென்ற வார்த்தைகளால் சுருக்கென்று நம் உள்ளம் தைக்கும் அளவிற்கு பளிச்சென்று தம் கருத்துக்களை முன் வைக்கும் வல்லமையாளர் திரு ரிஷான் ஷெரீப் அவர்கள் சிறப்புப் பரிசு பெற்றமைக்கு உளமார்ந்த பாராட்டுகள்.

மிகச் சரளமான நடையில், பிரெஞ்சிலக்கிய வரலாறு என்னும் நூலை படித்தே ஆக வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுமளவிற்கு தம் எழுத்துக்களால் நம்மைக் கவர்ந்துள்ள திருமதி.கலையரசி  சிறப்புப்     பரிசை வென்றுள்ளமைக்கு உளம் கனிந்த பாராட்டுகள்.

‘சாரங்கபாணி’ என்பார் யார், இவரைப் பற்றி இன்னும் மேலதிக தகவல்களை அறிய வேண்டுமே, அதுவும் இப்பொழுதே’, என்று நம்மை, அந்த நூல் கிடைக்குமிடம் தேடித் திரிய வைக்கும் ஆற்றலுடன், தம் கருத்துக்களை மிகச் சுவையுடன் அனைவரையும் கவரும் வகையிலான அற்புதமான நடையுடன், போட்டிக்கு முதன் முதலாகத் தம் மதிப்புரையை வழங்கி, சிறப்புப் பரிசை வென்றுள்ள திரு பாண்டியன். ஜீ அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்.

அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பர்களே. தொடர்ந்து தங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

புத்தக மதிப்புரை போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் விவரம் ;

1.சயாம் மரண ரயில்
2.டாலர் நகரம்
3.தேவதாசியும் மகானும்
4.வரலாற்றின் வரலாறு
5.மணிக்கொடி
6.கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன்
7.மழைவில் மனிதர்கள் – ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்
8.இறந்தவர்களின் நினைவுகளூடே ஒரு பயணம்
9.சிங்கப்பூர் மலேசியத்தந்தை தமிழவேள் கோ .சாரங்கபாணி
10 பிரெஞ்சிலக்கிய வரலாறு’

11. வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
12. கொய்த நன்மலர்கள்
13. தன்னாட்சி
14. சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
​15. ​இந்தியப் பெண்மணிகள்
​16. ​சாலப்பரிந்து – நாஞ்சில் நாடன்
17. ‘டார்வின் படிக்காத குருவி’
​18. ​மாதொரு பாகன் – பெருமாள் முருகன்
​19. ​இவனுக்கு அப்போது மனு என்று பெயர்
20. பட்டியும் விக்ரமாதித்தனும் ஜெயமோகனும்!

போட்டி நடத்துவதற்கான மூல காரணமாக இருக்கும் திருமதி மதுமிதா அவர்களின் பதிவை இதோ இங்கே காணலாம். மனமார்ந்த பாராட்டுகள் அன்புத்தோழி மதுமிதா.

அன்புடன்

பவள சங்கரி

தொடர்புடைய பதிவுகள்





Friday, February 14, 2014

என்றென்றும் சுஜாதா

நான் ஆறாவது படிக்கும் போது பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்புத் தொடங்கியது. கல்லூரிக்குச் சென்ற போது அறிமுகமாகியிருந்த நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களைத் தாண்டி இறுதியில் பாலகுமாரன் மற்றும் சுஜாதா மட்டுமே என்னுடைய விருப்பமான எழுத்தாளராக இருந்தார்கள். 

வெளியுலகம் குறித்து எதுவுமே தெரியாத நிலையில், வாழ்க்கை குறித்த புரிதல்கள், தேடல்கள் என்று இருவருமே வெவ்வேறு பார்வையில் மாறி மாறி எனக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். திருப்பூர் வந்து சேர்ந்து முதல் வருடம் முழுக்கப் பாலகுமாரன் தான் என்னை ஆக்ரமித்திருந்தார். அவர் சொல்லுவதே வேதம் என்கிற நிலையில் தான் இருந்தேன். ஆனால் நிஜ வாழ்க்கை சவுக்கடி போலத் தாக்கத் தொடங்க கற்பனைகளைத் தாண்டிய நிஜங்களைக் கண்டு வாசிப்பதை நிறுத்திவிட்டு தினசரி வாழ்க்கையை உற்றுக் கவனிக்கத் தொடங்கினேன். 

அதன் பிறகே எழுத்தாளர்களின் எழுத்துக்களைத்தாண்டி ஒவ்வொரு எழுத்தாளர்களின் நிஜமுகத்தைப் பலதரப்பட்ட பத்திரிக்கைகள் மூலம் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்து. 

தொடர்ந்து வந்த 15 ஆண்டுகளில் புத்தகங்களை விடத் தினசரி பத்திரிக்கைகள், பலதரப்பட்ட கட்டுரைகள் என மாறி மாறி குழப்பத்துடன் பலரின் அடையாளங்களைக் கண்டு கொள்ள முடிந்தது. அரசியல், திரைப்படம், எழுத்தாளர்கள் என்று சகலரும் சொல்லும் கருத்துக்களுக்கும், அவர்களின் நிஜ வாழ்க்கைக்கும் உண்டான வேறுபாடுகளையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவரும் திரைப்பட நடிகர்களை மிஞ்சியவர்களாக இருந்தார்கள். 

ஆனால் அன்று முதல் இன்று வரையிலும் எழுத்தாளர் சுஜாதா மேல் நான் கொண்டிருந்த மரியாதை, அபிமானம் மாறவில்லை. பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு இடங்களில் வாங்கிச் சேகரித்த சுஜாதாவின் பல புத்தகங்கள் இன்னமும் என்னிடம் உண்டு. மற்ற எழுத்தாளர்கள் போல் இல்லாமல் கதையோ, கட்டுரையோ, புனைவோ, அறிவியல் சிந்தனைகளான ஏன் எதற்கு எப்படி? போன்ற எந்தப் புத்தகமாக இருந்தாலும் அவர் நேற்று எழுதியது போலவே உள்ளது. 

காலமாற்ற இடைவெளி எதுவும் தெரியாத அளவுக்கு எந்தக் காலத்திலும் வாசிப்பவனுக்குப் பொருந்தக்கூடிய, விரும்பக்கூடிய எழுத்தாற்றல் மிக்க சுஜாதாவை நினைத்தால் ஆச்சரியமாகவே உள்ளது. 

சில வாரங்களுக்கு முன் விகடன் வெளியீடாக வந்துள்ள எழுத்தாளர் அமுதவன் எழுதியுள்ள என்றென்றும் சுஜாதா என்ற புத்தகத்தை வாசித்த போது நான் மனதில் வைத்திருந்த சுஜாதா என்ற பிம்பம் எனக்குப் பலவற்றையும் கற்றுக் கொடுத்த மரியாதைக்குரிய ஆசானாகவே தெரிந்தார். 

நான் புரிந்து வைத்துள்ள சுஜாதாவை விட அமுதவன் அவருடன் ஏறக்குறைய 38 ஆண்டுகள் பழகி அந்த அனுபவத்தை எழுத்தாக்கி கொடுத்துள்ளதை படித்து முடித்த போது உருவான தாக்கம் அடுத்த இரண்டு நாட்கள் என்னுடனே இருந்தது. கூடவே சுஜாதா மேல் நான் வைத்திருந்த மரியாதையில் ஒரு துளி கூடச் சேதாரமின்றி இருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

அமுதவனின் வலைபதிவு எனக்குத் தனிப்பட்ட முறையில் எப்படி எழுத வேண்டும்? என்பதை கற்றுக் கொடுக்கும் வலைபதிவாகும். காரணம் எளிமையும், முக்கியமாக எழுத்துப்பிழையுமின்றிச் சொல்ல வந்த விசயத்தை வாசிப்பு அனுபவம் இல்லாதவர்கள் கூட ஒரு முறை வாசித்தவுடன் உள்வாங்கிக் கொள்ள வைக்கும் நேர்த்தியுமாய் எழுதும் அவரின் எழுத்து நடை என்பது என்னைப் போல பலருக்கும் உதவக்கூடியது.  

இந்தப் பாணியில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை இரவு ஒன்பது மணிக்கு வாங்கி வந்து நள்ளிரவு வரைக்கும் கீழே வைக்க முடியாத அளவுக்கு ஒரே மூச்சில் வாசிக்க வைத்த அமுதவனின் எழுத்தாற்றலுக்கு மிக்க நன்றி. அத்துடன் நல்ல குணம் படைத்த மனிதர்கள் இயற்கையோடு கலந்த நிகழ்வை மரணம் என்று சொன்னாலும் அவர் காலம் கடந்து நிற்பார் என்பதற்கு அத்தாட்சியாக அமுதவனின் எழுத்து சுஜாதாவுக்கு உண்மையான மானசீகமான நேர்மையான முறையில் அஞ்சலி செலுத்தி உள்ளது. 

முதன் முதலாக அமுதவன் சுஜாதாவை சந்திக்க அவர் பெங்களூருக்கு வந்த சில நாட்களில் அவர் முன்னால் போய் நின்ற போது உருவான அறிமுகத்தில் இருந்து இந்தப் புத்தகம் தொடங்குகின்றது. 

சுஜாதா வார்த்தைகளில் "என்னய்யா நான் பெங்களூருக்கு வந்து இன்னும் உட்காரக்கூட ஆரம்பிக்கலை. அதற்குள் வீட்டை கண்டுபிடித்து வந்து நிற்குறீங்க?" என்று (1970) தொடங்குகின்றது. அமுதவன் ஒரு வாசகனாகச் சுஜாதாவை சந்திக்கச் சென்றாலும் அப்போது இவரும் ஒரு எழுத்தாளர் தான். 

இவருடைய படைப்புகளும் பத்திரிக்கைகளில் வந்து கொண்டு தான் இருக்கின்றது. இருவரின் நட்பு என்பது வாசகன், எழுத்தாளர் என்பதைத் தாண்டி பலதரப்பட்ட நிகழ்வுகளில் பயணிக்கின்றது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பலதரப்பட்ட சம்பவங்கள். ஆனால் ஒவ்வொரு நிகழ்விலும் சுஜாதாவின் வெளிப்படைத்தன்மை மற்றும் அவரின் வெள்ளை மனதை அழகாக வெளிப்படுத்துகின்றது. 

ஏறக்குறைய சுஜாதா இறந்த 28.2.2008 வரைக்கும். இது போன்ற நட்பு, பரஸ்பரம் அக்கறை என்பது அமுதவன் போல எத்தனை பேர்களுக்குக் கிடைக்கும் என்பதே ஆச்சரியமாக உள்ளது. ஒரு வகையில் பார்த்தால் இதுவும் ஒரு கொடுப்பினை. அல்லது அமுதவனின் அடிப்படை குணாதிசியங்கள். 

பிரபல்யங்களோடு பழகுவது என்பது கம்பி மேல் நடக்கும் கதை தான். சிறிது விலகினாலும் பிரச்சனை தான். ஆனால் இன்று வரையிலும் அமுதவன் அந்தக் கலையில் மிக்கத் தேர்ச்சியுடையவராக இருக்கின்றார். முக்கியக் காரணம் இவர் நெருக்கமாகப் பழகிய அத்தனை பேர்களும் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாதவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். நெருக்கமான நட்பு என்பது இரண்டு பக்கமும் சரியாக இருந்தால் மட்டுமே உருவாகும் விளைவு.

வலைபதிவுகளில் 'பிரபல' என்ற வார்த்தையும் 'தோழர்' என்ற வார்த்தையும் ரூபாய்க்கு இத்தனை என்கிற ரீதியில் சர்வசாதாரணமாகப் புழங்கும் வார்த்தை. ஆனால் இந்தப் புத்தகத்தில் அமுதவனின் நட்பு என்பது வெறுமனே சுஜாதாவுடன் மட்டுமல்ல. ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரபல்யங்கள் அத்தனை பேர்களுடனும் இப்படித்தான் இருந்ததுள்ளது. 

எந்த அத்தியாயத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், சந்தித்த நிகழ்வுகளை மட்டும் விவரித்து விட்டுச் சர்வசாதாரணமாகக் கடந்து சென்று கொண்டேயிருக்கின்றார். படிக்கின்றவர்களுக்கு மூச்சு முட்டும் அல்லது மனதிற்குள் பொறாமைத் தீயை மூட்டும். 

இன்று ஒரு பிரபல்யத்துடன் சந்திப்பு நடந்து விட்டால் அவருடன் புகைப்படம் எடுத்து முகநூலில் போட்டுக் கொண்டு தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பும் இளையர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும். எழுத்துலகில் சூப்பர் ஸ்டார் போலத் திகழ்ந்த சுஜாதாவின் குழந்தைத்தனத்தையும், சுஜாதா போலப் பல ஸ்டார்களுடன் பழகிய அமுதவனின் "இதுவும் கடந்து போகும்" என்ற இயல்பான மனோ நிலையையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 

ஒவ்வொரு பக்கத்திலும் இவர் சொல்லிக் கொண்டு வரும் பிரபல்யங்களைப் பற்றியும். இவர் நாகரிகம் கருதி நைஸாக நழுவி கொண்டே சென்ற வார்த்தைகளின் ஊடாகப் பலவற்றையும் என்னால் நன்றாக யூகித்துக் கொள்ள முடிந்தது. ஒவ்வொரு பக்கத்திலும் நாகரித்தை மையில் தோய்த்து எழுதியுள்ளார். பலவற்றை வாசிப்பவனை யூகிக்க வைத்து விடுகின்றார். 

இளையராசா, பாரதிராஜா என்று திரைப்படப் பிரபல்யங்கள் தொடங்கிச் சாவி முதல் சிவக்குமார் வரைக்கும் ஒவ்வொரு பெரிய ஆளுமைகளும் ஒவ்வொரு பக்கத்திலும் வந்து போனாலும் தான் சொல்ல வந்த சுஜாதா குறித்த தகவல்களுக்குப் பஞ்சமில்லை. 

இதில் குறிப்பிட்டுள்ள சுஜாதா வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட கால் வாசி தகவல்களை அவ்வப்போது நான் பத்திரிக்கையில் படித்து வந்திருந்த போதிலும், நான் கேள்விப்பட்டிராத அவரின் அப்பாவி முகத்தை, நேர்மையான மனிதரின் ஏமாளித்தனத்தைச் சரியான வார்த்தைகளில் சமயம் பார்த்துச் சொல்லியிருக்கின்றார். 

எனக்குத் தெரிந்தவரையிலும் எழுத்தாளர் சுஜாதா கடவுள் குறித்த கொள்கையில் தொடக்கத்தில் மிகப் பெரிய ஆர்வமே அக்கறையின்று தான் இருந்தார். அதைப்போலவே சாதி குறித்த எண்ணமும் அவருக்கு பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை. ஆனால் தன்னுடைய கடைசிக் காலத்தில் இரண்டும் குறித்து விரும்பியோ அல்லது நிர்ப்பந்தம் அடிப்படையில் தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டிருந்தார். சுஜாதா தன் வாழ்நாளின் கடைசிச் சில வருடங்கள் தன் உடலோடு மிகப் பெரிய போராட்டத்தையும் நடத்தியவர். 

நேர்மை என்பதைத் தன் உயிர்மூச்சாகக் கருதியவர் சுஜாதா என்பதனை தன் மகனுக்குத் தான் பணிபுரிந்த நிறுவனத்தில் கிடைக்கவிருந்த வாய்ப்பை தட்டிக்கழித்து விட்டு மற்றொரு பையனுக்குக் கொடுத்த அவரின் தைரியத்தையும், அவர் மனைவி புலம்பிய புலம்பலையும் வாசித்த போது மற்றொரு 'கர்மவீரர்' போலத்தான் சுஜாதா தெரிகின்றார். 

கர்வம், அகம்பாவம் என்ற வார்த்தைகள் யாருக்கு இருக்கிறதோ இல்லையோ கலைஞர்களிடம் அதிகம் பார்க்கலாம். தன்னைச் சந்திக்க வருபவனைத் துச்சமாக மதிப்பது என்று தொடங்கி உனக்கு ஒன்றுமே தெரியவில்லை? என்று வாழ்த்துவது வரைக்கும். ஆனால் சுஜாதா தனது வாழ்நாள் முழுக்க அடுத்தவரை வளர்ப்பதில் தான் குறியாக இருந்துள்ளார். ஆனால் தனக்கான அங்கீகாரத்தைத் தன் உழைப்பின் மூலமே அடைந்துள்ளார். 

ஏணிப்படிகள் தேவையில்லாது தன்னையே பிறருக்கு ஏணிப்படியாகவே மாற்றிக் கொண்டவர். இதுவே மற்றவர்கள் பார்வையில் ஏமாளியாகத் தெரிந்தது ஆச்சரியமல்ல. தன்னைக்குறித்து எந்தக் கர்வமின்றி, தான் கற்றதை, தெரிந்து வைத்துள்ளதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதாக இருக்கட்டும், தொடக்க நிலையில் எழுதுபவர்கள் எப்படித் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதாக இருக்கட்டும் இனி சுஜாதா போல ஒருவரை தமிழ் எழுத்துலகம் காண்பது அரிது. 

இவரால் அடையாளம் காணப்பட்டவர்களும், வளர்ந்தவர்களும், உயர்ந்தவர்களும் இன்று வரையிலும் பண ரீதியான உறவில் மட்டுமே சுஜாதாவை பார்த்துத் தங்களை வளர்த்துக் கொண்டே போதிலும் பரவாயில்லைப்பா...... என்று கடந்து போக எத்தனை பேர்களால் முடியும்? 

ஆனால் அவரை வைத்து வளர்ந்தவர்கள் எவரும் செய்யாத சாதனையை அமுதவன் மட்டுமே தன்னை நேசித்த ஒரு நல்ல ஆத்மாவின் உண்மையான பண்புகளை, குணாதிசியங்களை, வெளியே தெரியாத பல சம்பவங்களை அவர் வாழ்ககை நிகழ்வுகளை வைத்து அடையாளப்படுத்தி எழுதியுள்ளார்.  

சுஜாதாவின் நெருக்கடியான பயண வேகத்தில் அமுதவன் திருமணத்தில் (1982) வந்து கலந்து கொண்ட விதத்தின் மூலம் இருவருக்கும் உண்டான ஆழ்ந்த நட்பைச் சொல்லுகின்றது. அமுதவனின் மனைவியிடம் "நீங்க அமுதவன் எழுத்தை வாசித்துள்ளீர்களா?" என்று சுஜாதா கேட்ட போது அவர் மையமாகப் புன்னகைத்த போது "அப்பாடா எதிரெதிர் துருவம். நிச்சயம் நல்ல ஜோடி. வாழ்த்துகள்" என்று வெளிப்படையாக மணமேடையில் அவர்களை வாழ்த்தியதில் தொங்கிய சுஜாதாவின் ஒவ்வொரு நிகழ்வும் அமுதவனின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது. 

அதே போலக் கடைசி வரைக்கும் சுஜாதா அமுதவன் மேல் கொண்டுள்ள மரியாதை என்பது "கணையாழியில் என்னுடன் பழகிய அததனை பேர்களைப் பற்றியும் எழுதி விட்டேன். அமுதவன் பற்றி மட்டும் இன்னும் எழுதவில்லை. அடுத்த வாரம் எழுதி விடுவேன் என்று அவரிடம் சொல்லிடுங்கோ" என்று தன்னைச் சந்திக்க வந்த நண்பரிடம் சொன்ன போது சுஜாதாவின் உடல் நிலைமை என்பது மிகச் சிக்கலான காலகட்டத்தில் இருந்தது என்பதை நினைத்துப் பார்க்கும் போது அவர் நட்பை எந்த அளவுக்கு மதித்துள்ளார் என்பதையும் மனித உறவுகளுக்கு எப்பேற்பட்ட மரியாதை கொடுத்துள்ளார் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 

இன்றைய பிரபல பாடகர் ஹரிகரன் திரைப்படத்திற்கு வர முக்கியக் காரணங்களில் ஒன்று அமுதவன், கமலஹாசன் சுஜாதாவை சந்திக்கப் பயன்படுத்திக் கொண்டவர் அமுதவன் என்பது போன்ற பல எண்ணற்ற ஆச்சரியமான தகவல்களைப் படிக்கும் போது நான் என்ற அகங்காரம் எந்த இடத்திலும் இல்லாமல் நழுவி கொண்டே செல்லும் வார்த்தைகளில் பலவற்றை நாசூக்காகக் குறிப்பிட்டுக் கொண்டே செல்கின்றார். 

வலைபதிவுகள், முகநூல் மூலம் அங்கீகாரம் தேடும் இளையர் கூட்டமும், ஓட்டு, லைக் காய்ச்சலில் அலையும் நண்பர்களுக்கும் இதில் ஒரு செய்தி உண்டு. 

குமுதம் சிறப்பாசிரியராக நடிகர் சிவகுமார் இருந்த போது சுஜாதவை ஒரு பேட்டி எடுத்தார். அந்த வரிகள் ஒன்றே போதும். நாம் சுஜாதாவை புரிந்து கொள்ள. 

"கதை எழுதும் ஆற்றல் உங்களுக்கு இருப்பதை எப்போது உணர்ந்தீர்கள்?" என்று கேட்ட போது சுஜாதா சொன்ன பதில் 

"இன்று கூட அந்த ஆற்றல் எனக்கு இருக்கிறதா என்று அடிக்கடி சந்தேகம். அதனால் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றேன்"

தமிழ் எழுத்துலகில் காலத்தை வென்றவர்கள் இலக்கியவாதிகள் அல்ல. வாசிப்பவனை வெளியே துரத்தாமல் வாஞ்சையோடு அனைத்துக் கொண்டு தொடர்ந்து வாசிக்க வைப்பனே. 

அந்த வகையில் இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் சுஜாதா எழுத்துலகில் மார்கெட் இழக்காத கதாநாயகன் போலத்தான் இருப்பார். இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த போது இரண்டு விசயங்கள் மனதில் தோன்றியது. 

சுஜாதா போல வேறொருவர் வாழ்ந்து விட முடியுமா என்று? அதைப் போல அமுதவன் போலத் தான் பழகிய பிரபல்யங்களை வைத்து தனக்கென்று எதையும் ஆதாய நோக்கில் எதையும் அடையவிரும்பாமல் தன்னடக்கத்தோடு இயல்பாக வாழ முடியுமா? என்று யோசிக்க வைத்து விட்டார். தான் கற்றதையும் பெற்றதையும் சொல்லியுள்ள அமுதவன் இதே போல மற்றொரு பாகம் எழுத முடியும். 

ஆனால் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து புத்தகங்கள், பத்திரிக்கைகள் வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் இவர் எதையெல்லாம் தவிர்த்து நகர்ந்துள்ளார் (அல்லது) வெளியிட்டுள்ள நிறுவனம் எதையெல்லாம் தவிர்த்துள்ளது என்பதை எளிதாக யூகித்துக் கொள்ள முடியும். 

அமுதவன் இதில் நாகரிகம் கருதி சொல்லாத விசயங்கள் ஏராளமாக உண்டு. இன்று வரையிலும் இவரின் மென்மையான எழுத்து நடைக்கே இணையத்தில் ஏராளமான எதிரிகள் உண்டென்பதே ஆச்சரியமாக உள்ளது. குறிப்பாக இளையராஜா குறித்து இவர் வைக்கும் விமர்சனங்கள் என்பது பலருக்கும் தூக்கத்தைத் தொலைக்கக் காரணமாக இருக்கின்றது. இன்று வரையிலும் இவர் தளத்தில் இளையராஜாவை விமர்சிக்க நீ யார்? என்று அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் குஞ்சாமாமா மணி ரசிகப்பட்டாளங்கள் என்று ஏராளமானோர் உண்டு. ஆனாலும் தலைவர் அசருவதில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று நாகரிக பாணியில் ராஜபாட்டை நடை போட்டுக் கொண்டே சென்று கொண்டிருக்கின்றார். 

நமக்குள் அகங்காரமும் ஆணவமும் தலைதூக்கும் போது இந்தப் புத்தகத்தை வாசிக்க முடிந்தால் உங்களின் சப்தநாடியும் அடங்கிப் பிரபல்யம் என்பது 'கற்றுக் கொண்டதை பகிர்ந்து கொள்ள கிடைத்த ஒரு வாய்ப்பு' என்பதை நம்மால் உணர முடியும். 

இதைதான் சுஜாதா என்ற ஆளுமையின் மூலம் அமுதவன் என்றொரு தன்னடக்க மனிதர் ஒவ்வொரு வரியிலும் உணர்த்தியுள்ளார்.


தொடர்புடைய பதிவுகள்

வல்லமை விமர்சனம்- டாலர் நகரம்

வாசிக்க பகிர

(இலவச) மின் நூல் தரவிறக்கம் செய்ய

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்

( ஈழம் பற்றி அடிப்படை வரலாறு, அரசியல் வரலாற்றை தெரிந்து கொள்ள)

வெள்ளை அடிமைகள் 

( தமிழர்கள் வலியோடு புலம் பெயர்ந்த கதையைச் சொல்லும்)

Tuesday, February 11, 2014

வல்லமை விமர்சனம்

மதிப்பு​ரை – ரஞ்சனி நாராயணன்

(மூன்றாவது பரிசு வாங்கிய விமர்சனம். அது குறித்து அடுத்த பதிவில்)

டாலர் நகரம்

எழுதியவர்: ஜோதிஜி

பதிப்பகம்: 4தமிழ்மீடியா படைப்பாய்வகம்

விலை: ரூ. 190

பக்கங்கள் : 247

வெளியான ஆண்டு: 2013

Dollar Nagaram

ஆசிரியர் குறிப்பு:

கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘தேவியர் இல்லம்’ என்ற வலைப்பதிவில் தன் மனதில் பட்டதை பட்டவர்த்தனமாகச் சொல்லி ‘நான் இப்படித்தான்; என் எழுத்து இப்படித்தான்’ என்று முத்திரை பதித்த பதிவர் திரு ஜோதி கணேசன் என்னும் ஜோதிஜி. தனது மனைவியுடனும், 3 பெண்குழந்தைகளுடனும் (இவர்களே இவரது தேவியர்கள்) திருப்பூரில் வசிக்கிறார். 4தமிழ்மீடியா இணைய தளத்தில் இவர் எழுதி வந்த ‘டாலர் நகரம்’ கட்டுரைத் தொடர் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இது இவரது முதல் புத்தகம். இவர் எழுதிய ‘ஈழம் வந்தார்கள் வென்றார்கள் சமீபத்தில் இ-புத்தகமாக வெளியிடப்பட்டு சுமார் 10,000 + தரவிறக்கங்களை எட்டிப்பிடித்துள்ளது.

புத்தகம்: டாலர் நகரம்

டாலர் தேசம் என்று அமெரிக்காவைச் சொல்லுவது உண்டு. இது என்ன டாலர் நகரம்?  இந்தியாவின் ஏற்றுமதியில் பல கோடி டாலர்களை பெறுவதில் பெரும்பங்கு வகிக்கும் திருப்பூரைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறார், ஜோதிஜி. திருப்பூர் என்றால் உடனடியாக பனியன், ஜட்டிகள் என்று உள்ளாடைகள் நினைவுக்கு வரும்; அந்தக் காலத்தவர்களுக்கு திருப்பூர் குமரன் நினைவிற்கு வருவார். அந்தத் திருப்பூரின் இன்னொரு பக்கத்தை – தொழில் நகரம் என்று பக்கத்தை தனது டாலர் நகரம் மூலம் நமக்கு காட்டுகிறார் ஆசிரியர் இந்தப் புத்தகத்தில்.

ஒரு சாதாரண தொழிலாளியாக 1992 – இல் திருப்பூர் வந்த ஜோதிஜி இப்போது திருப்பூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் பொது மேலாளர் ஆக இருக்கிறார். தனது வாழ்க்கையை சொல்லும்போதே தான் கண்ட, இப்போது காணும் திருப்பூரின் வரலாற்றையும் பதிவு செய்கிறார்.  புத்தகத்தைப் படிக்கும்போது இரண்டும் வேறல்ல என்று புரிகிறது.

தொழில் வாழ்க்கையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடிய போராட்டங்கள், சந்தித்த அவமானங்கள், தாண்டிய தூரங்கள், ஏறிய படிகள், சறுக்கிய இடங்கள் என்று பலவற்றையும் பேசும் ஜோதிஜி, கூடவே திருப்பூரின் பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஏற்றுமதி, இறக்குமதி வணிகம், அவற்றில் நிகழும் அரசியல்கள், இந்த ஊருக்கு வேலை தேடி வரும் ஆண், பெண், குழந்தைகளின் அவலங்களையும் சொல்லிக் கொண்டு போகிறார். ஒரு கட்டத்தில் ஜோதிஜி என்கிற தனிமனிதர் மறைந்து திருப்பூர் மட்டுமே தெரிய ஆரம்பிக்கிறது. இந்த மாற்றம் மிகவும் இயல்பாக நடக்கிறபடியால் கடைசியில் நம் நினைவில் நிற்பது டாலர் நகரம் மட்டுமே.

நூல் என்பது ஆடையாக மாறுவதற்கு எத்தனை எத்தனை துறைகள்? ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகம். ஒவ்வொரு துறைக்குள் நூற்றுக்கணக்கான துறைகள். நெய்யப்பட்ட துணி வண்ண வண்ண ஆடைகளாக உருமாறும் நேரம் என்பது ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தைக் காண்பது போல என்று சொல்லும் ஜோதிஜி, ஒவ்வொருதுறை பற்றியும் மிகவும் விரிவாகப் பேசுகிறார்.

திருப்பூர் என்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் என்று தோன்றும். இங்கு வந்துவிட்டால் எப்படியோ பிழைத்துக்கொள்ளலாம் என்று வந்துவிடுகிறார்கள். ஆனால் உள்ளே இருப்பவர்களுக்குத்தான் உண்மை நிலை தெரியும். தொழிலாளிகளுக்கு உழைப்பு, உழைப்பு  என்று போதை ஏற்றும் உழைப்பு. ஆனால் உழைப்பிக்கேற்ற கூலி கிடைக்காது. பெண்களின் நிலைமையை என்னவென்று சொல்ல? ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்யும் தொழில் நகரங்களில் நடக்கும் பாலியல் மீறல்கள் திருப்பூரிலும் உண்டு. இவற்றைத் தவிர ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஏற்றுமதி நிறுவனங்களில் இரவு பகல் பாராமல் வேலை செய்து கொண்டிருக்கும் குழந்தைகளை கணக்கில் கொண்டு வரமுடியாது. குடும்பத்துடன் இந்த ஊருக்கு வருபவர்களுக்கு குடும்பம் முழுவதுக்கும் வேலை கிடைக்கும், ஆனால் வாழ்க்கை?

சமச்சீரற்ற முறையில் வளர்ந்திருக்கும் திருப்பூரின் திட்டமிடாத உள்கட்டமைப்புகள், அறிவிக்கப்படாத மின்தடைகள், மூடாத சாக்கடைக்குழிகள், முடிவே இல்லாமல் தொடரும் சாலை மராமத்து பணிகள், பெருநகரங்களின் சாபக்கேடான போக்குவரத்து நெரிசல், சாயப்பட்டறை முதலாளிகளின் சமூக பொறுப்பற்ற செயல்களால் விஷமாகிப் போன நொய்யலாறு என்று பல சீரழிவுகள் நம்மை திகைக்க வைக்கின்றன. வெளியில் பளபளக்கும் டாலர் நகரம் உள்ளே டல்லடிக்கிறது.

மையத் தொழிலான ஆடை தொழிலை சார்ந்த துணைத்தொழில்களை நம்பி இங்கு நிறையப்பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் முதலீடு முதல் கோடி ரூபாய் முதலீட்டிற்கும் இங்கு வழி உண்டு. டெல்லி முதல் கன்யாகுமரி வரையுள்ள இந்தியர்கள் ஒன்று கூடி வாழும் ஊர் திருப்பூர் என்பது இந்த ஊரின் தனிச் சிறப்பு. தனது அயராத உழைப்பு என்ற மூலதனத்தை வைத்துக்கொண்டு உயர்ந்த ‘கருணா என்கிற கூலி’ பற்றிச் சொல்லும் ஆசிரியர் அப்படி உயர்ந்த வாழ்க்கையைத் தங்களது கூடா நட்பால் தொலைத்தவர்களைப் பற்றியும் சொல்லுகிறார்.

‘உலகமய பொருளாதார பாதிப்பின் நேரடி உதாரணமாக திருப்பூரைச் சொல்லலாம். தினந்தோறும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பண மதிப்பு இங்குள்ள ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களையும் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. டாலர் மதிப்பு ஏறும் என்று பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் காத்திருந்து காத்திருந்து வங்கிக் கடன் வட்டி ஏறி கடைசியில் தற்கொலைக்கும் தயாராகிறார்கள் என்று செய்தி நம்மை கதி கலங்க வைக்கிறது. நிலையில்லாத டாலர் மதிப்பு மட்டுமல்ல; வங்கிகளின் கெடுபிடிகள், அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கை என்று ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் நித்ய கண்டம், பூரண ஆயுசுதான்’.

அந்நிய முதலீடு லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்களை முடக்கி விடும் அபாயம் உள்ளது. தமிழ் நாட்டில் பல பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளூர் பேரூராட்சி நகராட்சிகளுக்கு அடிப்படை வரி கூட கட்டாமல் இருந்து வருகின்றன. சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இங்கு இருப்பதில்லை. 2012 ஆண்டு கடைசி பகுதியில் திருப்பூரில் ‘திருப்பூர் வெற்றிப்பாதையில் 2012’ என்ற கருத்தரங்கம் நடத்தப்பட்டது. பின்னலாடைத் தொழிலில் நேரிடையாக, மறைமுகமாக சம்மந்தப்பட்ட அத்தனை தொழில் முனைவோர்களும் தங்கள் குமுறல்களை கொந்தளிப்பாக அதிகாரவர்க்கத்தினரிடம் வெளிப்படுத்தினர்’.

உழைக்கத் தயாராக இருக்கும் திருப்பூர்வாசிகளுக்கு மத்திய அரசு என்ன திட்டம் தீட்டி இவர்களை காப்பாற்றபோகிறதோ? என்ற தனது ஆதங்கத்துடன் புத்தகத்தை முடிக்கிறார், ஜோதிஜி. ஒரு பரபரப்பான திரைப்படத்தைப் பார்த்த உணர்வுடன் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது நமக்குள்ளும் இதே கேள்விதான் எழுகிறது.

26 அத்தியாயங்களில் ஒன்று கூட ‘போர்’ அடிப்பதில்லை என்பது இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். 

ஆனந்த விகடன் இயர் புக் 2014 தேர்ந்தெடுத்த சிறந்த எட்டு புத்தகங்களில் இந்தப் புத்தகமும் ஒன்று. இதற்கு மேல் நான் என்ன சொல்ல?



மின் நூல்