Friday, February 14, 2014

என்றென்றும் சுஜாதா

நான் ஆறாவது படிக்கும் போது பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்புத் தொடங்கியது. கல்லூரிக்குச் சென்ற போது அறிமுகமாகியிருந்த நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களைத் தாண்டி இறுதியில் பாலகுமாரன் மற்றும் சுஜாதா மட்டுமே என்னுடைய விருப்பமான எழுத்தாளராக இருந்தார்கள். 

வெளியுலகம் குறித்து எதுவுமே தெரியாத நிலையில், வாழ்க்கை குறித்த புரிதல்கள், தேடல்கள் என்று இருவருமே வெவ்வேறு பார்வையில் மாறி மாறி எனக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். திருப்பூர் வந்து சேர்ந்து முதல் வருடம் முழுக்கப் பாலகுமாரன் தான் என்னை ஆக்ரமித்திருந்தார். அவர் சொல்லுவதே வேதம் என்கிற நிலையில் தான் இருந்தேன். ஆனால் நிஜ வாழ்க்கை சவுக்கடி போலத் தாக்கத் தொடங்க கற்பனைகளைத் தாண்டிய நிஜங்களைக் கண்டு வாசிப்பதை நிறுத்திவிட்டு தினசரி வாழ்க்கையை உற்றுக் கவனிக்கத் தொடங்கினேன். 

அதன் பிறகே எழுத்தாளர்களின் எழுத்துக்களைத்தாண்டி ஒவ்வொரு எழுத்தாளர்களின் நிஜமுகத்தைப் பலதரப்பட்ட பத்திரிக்கைகள் மூலம் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்து. 

தொடர்ந்து வந்த 15 ஆண்டுகளில் புத்தகங்களை விடத் தினசரி பத்திரிக்கைகள், பலதரப்பட்ட கட்டுரைகள் என மாறி மாறி குழப்பத்துடன் பலரின் அடையாளங்களைக் கண்டு கொள்ள முடிந்தது. அரசியல், திரைப்படம், எழுத்தாளர்கள் என்று சகலரும் சொல்லும் கருத்துக்களுக்கும், அவர்களின் நிஜ வாழ்க்கைக்கும் உண்டான வேறுபாடுகளையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவரும் திரைப்பட நடிகர்களை மிஞ்சியவர்களாக இருந்தார்கள். 

ஆனால் அன்று முதல் இன்று வரையிலும் எழுத்தாளர் சுஜாதா மேல் நான் கொண்டிருந்த மரியாதை, அபிமானம் மாறவில்லை. பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு இடங்களில் வாங்கிச் சேகரித்த சுஜாதாவின் பல புத்தகங்கள் இன்னமும் என்னிடம் உண்டு. மற்ற எழுத்தாளர்கள் போல் இல்லாமல் கதையோ, கட்டுரையோ, புனைவோ, அறிவியல் சிந்தனைகளான ஏன் எதற்கு எப்படி? போன்ற எந்தப் புத்தகமாக இருந்தாலும் அவர் நேற்று எழுதியது போலவே உள்ளது. 

காலமாற்ற இடைவெளி எதுவும் தெரியாத அளவுக்கு எந்தக் காலத்திலும் வாசிப்பவனுக்குப் பொருந்தக்கூடிய, விரும்பக்கூடிய எழுத்தாற்றல் மிக்க சுஜாதாவை நினைத்தால் ஆச்சரியமாகவே உள்ளது. 

சில வாரங்களுக்கு முன் விகடன் வெளியீடாக வந்துள்ள எழுத்தாளர் அமுதவன் எழுதியுள்ள என்றென்றும் சுஜாதா என்ற புத்தகத்தை வாசித்த போது நான் மனதில் வைத்திருந்த சுஜாதா என்ற பிம்பம் எனக்குப் பலவற்றையும் கற்றுக் கொடுத்த மரியாதைக்குரிய ஆசானாகவே தெரிந்தார். 

நான் புரிந்து வைத்துள்ள சுஜாதாவை விட அமுதவன் அவருடன் ஏறக்குறைய 38 ஆண்டுகள் பழகி அந்த அனுபவத்தை எழுத்தாக்கி கொடுத்துள்ளதை படித்து முடித்த போது உருவான தாக்கம் அடுத்த இரண்டு நாட்கள் என்னுடனே இருந்தது. கூடவே சுஜாதா மேல் நான் வைத்திருந்த மரியாதையில் ஒரு துளி கூடச் சேதாரமின்றி இருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

அமுதவனின் வலைபதிவு எனக்குத் தனிப்பட்ட முறையில் எப்படி எழுத வேண்டும்? என்பதை கற்றுக் கொடுக்கும் வலைபதிவாகும். காரணம் எளிமையும், முக்கியமாக எழுத்துப்பிழையுமின்றிச் சொல்ல வந்த விசயத்தை வாசிப்பு அனுபவம் இல்லாதவர்கள் கூட ஒரு முறை வாசித்தவுடன் உள்வாங்கிக் கொள்ள வைக்கும் நேர்த்தியுமாய் எழுதும் அவரின் எழுத்து நடை என்பது என்னைப் போல பலருக்கும் உதவக்கூடியது.  

இந்தப் பாணியில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை இரவு ஒன்பது மணிக்கு வாங்கி வந்து நள்ளிரவு வரைக்கும் கீழே வைக்க முடியாத அளவுக்கு ஒரே மூச்சில் வாசிக்க வைத்த அமுதவனின் எழுத்தாற்றலுக்கு மிக்க நன்றி. அத்துடன் நல்ல குணம் படைத்த மனிதர்கள் இயற்கையோடு கலந்த நிகழ்வை மரணம் என்று சொன்னாலும் அவர் காலம் கடந்து நிற்பார் என்பதற்கு அத்தாட்சியாக அமுதவனின் எழுத்து சுஜாதாவுக்கு உண்மையான மானசீகமான நேர்மையான முறையில் அஞ்சலி செலுத்தி உள்ளது. 

முதன் முதலாக அமுதவன் சுஜாதாவை சந்திக்க அவர் பெங்களூருக்கு வந்த சில நாட்களில் அவர் முன்னால் போய் நின்ற போது உருவான அறிமுகத்தில் இருந்து இந்தப் புத்தகம் தொடங்குகின்றது. 

சுஜாதா வார்த்தைகளில் "என்னய்யா நான் பெங்களூருக்கு வந்து இன்னும் உட்காரக்கூட ஆரம்பிக்கலை. அதற்குள் வீட்டை கண்டுபிடித்து வந்து நிற்குறீங்க?" என்று (1970) தொடங்குகின்றது. அமுதவன் ஒரு வாசகனாகச் சுஜாதாவை சந்திக்கச் சென்றாலும் அப்போது இவரும் ஒரு எழுத்தாளர் தான். 

இவருடைய படைப்புகளும் பத்திரிக்கைகளில் வந்து கொண்டு தான் இருக்கின்றது. இருவரின் நட்பு என்பது வாசகன், எழுத்தாளர் என்பதைத் தாண்டி பலதரப்பட்ட நிகழ்வுகளில் பயணிக்கின்றது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பலதரப்பட்ட சம்பவங்கள். ஆனால் ஒவ்வொரு நிகழ்விலும் சுஜாதாவின் வெளிப்படைத்தன்மை மற்றும் அவரின் வெள்ளை மனதை அழகாக வெளிப்படுத்துகின்றது. 

ஏறக்குறைய சுஜாதா இறந்த 28.2.2008 வரைக்கும். இது போன்ற நட்பு, பரஸ்பரம் அக்கறை என்பது அமுதவன் போல எத்தனை பேர்களுக்குக் கிடைக்கும் என்பதே ஆச்சரியமாக உள்ளது. ஒரு வகையில் பார்த்தால் இதுவும் ஒரு கொடுப்பினை. அல்லது அமுதவனின் அடிப்படை குணாதிசியங்கள். 

பிரபல்யங்களோடு பழகுவது என்பது கம்பி மேல் நடக்கும் கதை தான். சிறிது விலகினாலும் பிரச்சனை தான். ஆனால் இன்று வரையிலும் அமுதவன் அந்தக் கலையில் மிக்கத் தேர்ச்சியுடையவராக இருக்கின்றார். முக்கியக் காரணம் இவர் நெருக்கமாகப் பழகிய அத்தனை பேர்களும் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாதவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். நெருக்கமான நட்பு என்பது இரண்டு பக்கமும் சரியாக இருந்தால் மட்டுமே உருவாகும் விளைவு.

வலைபதிவுகளில் 'பிரபல' என்ற வார்த்தையும் 'தோழர்' என்ற வார்த்தையும் ரூபாய்க்கு இத்தனை என்கிற ரீதியில் சர்வசாதாரணமாகப் புழங்கும் வார்த்தை. ஆனால் இந்தப் புத்தகத்தில் அமுதவனின் நட்பு என்பது வெறுமனே சுஜாதாவுடன் மட்டுமல்ல. ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரபல்யங்கள் அத்தனை பேர்களுடனும் இப்படித்தான் இருந்ததுள்ளது. 

எந்த அத்தியாயத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், சந்தித்த நிகழ்வுகளை மட்டும் விவரித்து விட்டுச் சர்வசாதாரணமாகக் கடந்து சென்று கொண்டேயிருக்கின்றார். படிக்கின்றவர்களுக்கு மூச்சு முட்டும் அல்லது மனதிற்குள் பொறாமைத் தீயை மூட்டும். 

இன்று ஒரு பிரபல்யத்துடன் சந்திப்பு நடந்து விட்டால் அவருடன் புகைப்படம் எடுத்து முகநூலில் போட்டுக் கொண்டு தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பும் இளையர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும். எழுத்துலகில் சூப்பர் ஸ்டார் போலத் திகழ்ந்த சுஜாதாவின் குழந்தைத்தனத்தையும், சுஜாதா போலப் பல ஸ்டார்களுடன் பழகிய அமுதவனின் "இதுவும் கடந்து போகும்" என்ற இயல்பான மனோ நிலையையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 

ஒவ்வொரு பக்கத்திலும் இவர் சொல்லிக் கொண்டு வரும் பிரபல்யங்களைப் பற்றியும். இவர் நாகரிகம் கருதி நைஸாக நழுவி கொண்டே சென்ற வார்த்தைகளின் ஊடாகப் பலவற்றையும் என்னால் நன்றாக யூகித்துக் கொள்ள முடிந்தது. ஒவ்வொரு பக்கத்திலும் நாகரித்தை மையில் தோய்த்து எழுதியுள்ளார். பலவற்றை வாசிப்பவனை யூகிக்க வைத்து விடுகின்றார். 

இளையராசா, பாரதிராஜா என்று திரைப்படப் பிரபல்யங்கள் தொடங்கிச் சாவி முதல் சிவக்குமார் வரைக்கும் ஒவ்வொரு பெரிய ஆளுமைகளும் ஒவ்வொரு பக்கத்திலும் வந்து போனாலும் தான் சொல்ல வந்த சுஜாதா குறித்த தகவல்களுக்குப் பஞ்சமில்லை. 

இதில் குறிப்பிட்டுள்ள சுஜாதா வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட கால் வாசி தகவல்களை அவ்வப்போது நான் பத்திரிக்கையில் படித்து வந்திருந்த போதிலும், நான் கேள்விப்பட்டிராத அவரின் அப்பாவி முகத்தை, நேர்மையான மனிதரின் ஏமாளித்தனத்தைச் சரியான வார்த்தைகளில் சமயம் பார்த்துச் சொல்லியிருக்கின்றார். 

எனக்குத் தெரிந்தவரையிலும் எழுத்தாளர் சுஜாதா கடவுள் குறித்த கொள்கையில் தொடக்கத்தில் மிகப் பெரிய ஆர்வமே அக்கறையின்று தான் இருந்தார். அதைப்போலவே சாதி குறித்த எண்ணமும் அவருக்கு பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை. ஆனால் தன்னுடைய கடைசிக் காலத்தில் இரண்டும் குறித்து விரும்பியோ அல்லது நிர்ப்பந்தம் அடிப்படையில் தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டிருந்தார். சுஜாதா தன் வாழ்நாளின் கடைசிச் சில வருடங்கள் தன் உடலோடு மிகப் பெரிய போராட்டத்தையும் நடத்தியவர். 

நேர்மை என்பதைத் தன் உயிர்மூச்சாகக் கருதியவர் சுஜாதா என்பதனை தன் மகனுக்குத் தான் பணிபுரிந்த நிறுவனத்தில் கிடைக்கவிருந்த வாய்ப்பை தட்டிக்கழித்து விட்டு மற்றொரு பையனுக்குக் கொடுத்த அவரின் தைரியத்தையும், அவர் மனைவி புலம்பிய புலம்பலையும் வாசித்த போது மற்றொரு 'கர்மவீரர்' போலத்தான் சுஜாதா தெரிகின்றார். 

கர்வம், அகம்பாவம் என்ற வார்த்தைகள் யாருக்கு இருக்கிறதோ இல்லையோ கலைஞர்களிடம் அதிகம் பார்க்கலாம். தன்னைச் சந்திக்க வருபவனைத் துச்சமாக மதிப்பது என்று தொடங்கி உனக்கு ஒன்றுமே தெரியவில்லை? என்று வாழ்த்துவது வரைக்கும். ஆனால் சுஜாதா தனது வாழ்நாள் முழுக்க அடுத்தவரை வளர்ப்பதில் தான் குறியாக இருந்துள்ளார். ஆனால் தனக்கான அங்கீகாரத்தைத் தன் உழைப்பின் மூலமே அடைந்துள்ளார். 

ஏணிப்படிகள் தேவையில்லாது தன்னையே பிறருக்கு ஏணிப்படியாகவே மாற்றிக் கொண்டவர். இதுவே மற்றவர்கள் பார்வையில் ஏமாளியாகத் தெரிந்தது ஆச்சரியமல்ல. தன்னைக்குறித்து எந்தக் கர்வமின்றி, தான் கற்றதை, தெரிந்து வைத்துள்ளதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதாக இருக்கட்டும், தொடக்க நிலையில் எழுதுபவர்கள் எப்படித் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதாக இருக்கட்டும் இனி சுஜாதா போல ஒருவரை தமிழ் எழுத்துலகம் காண்பது அரிது. 

இவரால் அடையாளம் காணப்பட்டவர்களும், வளர்ந்தவர்களும், உயர்ந்தவர்களும் இன்று வரையிலும் பண ரீதியான உறவில் மட்டுமே சுஜாதாவை பார்த்துத் தங்களை வளர்த்துக் கொண்டே போதிலும் பரவாயில்லைப்பா...... என்று கடந்து போக எத்தனை பேர்களால் முடியும்? 

ஆனால் அவரை வைத்து வளர்ந்தவர்கள் எவரும் செய்யாத சாதனையை அமுதவன் மட்டுமே தன்னை நேசித்த ஒரு நல்ல ஆத்மாவின் உண்மையான பண்புகளை, குணாதிசியங்களை, வெளியே தெரியாத பல சம்பவங்களை அவர் வாழ்ககை நிகழ்வுகளை வைத்து அடையாளப்படுத்தி எழுதியுள்ளார்.  

சுஜாதாவின் நெருக்கடியான பயண வேகத்தில் அமுதவன் திருமணத்தில் (1982) வந்து கலந்து கொண்ட விதத்தின் மூலம் இருவருக்கும் உண்டான ஆழ்ந்த நட்பைச் சொல்லுகின்றது. அமுதவனின் மனைவியிடம் "நீங்க அமுதவன் எழுத்தை வாசித்துள்ளீர்களா?" என்று சுஜாதா கேட்ட போது அவர் மையமாகப் புன்னகைத்த போது "அப்பாடா எதிரெதிர் துருவம். நிச்சயம் நல்ல ஜோடி. வாழ்த்துகள்" என்று வெளிப்படையாக மணமேடையில் அவர்களை வாழ்த்தியதில் தொங்கிய சுஜாதாவின் ஒவ்வொரு நிகழ்வும் அமுதவனின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது. 

அதே போலக் கடைசி வரைக்கும் சுஜாதா அமுதவன் மேல் கொண்டுள்ள மரியாதை என்பது "கணையாழியில் என்னுடன் பழகிய அததனை பேர்களைப் பற்றியும் எழுதி விட்டேன். அமுதவன் பற்றி மட்டும் இன்னும் எழுதவில்லை. அடுத்த வாரம் எழுதி விடுவேன் என்று அவரிடம் சொல்லிடுங்கோ" என்று தன்னைச் சந்திக்க வந்த நண்பரிடம் சொன்ன போது சுஜாதாவின் உடல் நிலைமை என்பது மிகச் சிக்கலான காலகட்டத்தில் இருந்தது என்பதை நினைத்துப் பார்க்கும் போது அவர் நட்பை எந்த அளவுக்கு மதித்துள்ளார் என்பதையும் மனித உறவுகளுக்கு எப்பேற்பட்ட மரியாதை கொடுத்துள்ளார் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 

இன்றைய பிரபல பாடகர் ஹரிகரன் திரைப்படத்திற்கு வர முக்கியக் காரணங்களில் ஒன்று அமுதவன், கமலஹாசன் சுஜாதாவை சந்திக்கப் பயன்படுத்திக் கொண்டவர் அமுதவன் என்பது போன்ற பல எண்ணற்ற ஆச்சரியமான தகவல்களைப் படிக்கும் போது நான் என்ற அகங்காரம் எந்த இடத்திலும் இல்லாமல் நழுவி கொண்டே செல்லும் வார்த்தைகளில் பலவற்றை நாசூக்காகக் குறிப்பிட்டுக் கொண்டே செல்கின்றார். 

வலைபதிவுகள், முகநூல் மூலம் அங்கீகாரம் தேடும் இளையர் கூட்டமும், ஓட்டு, லைக் காய்ச்சலில் அலையும் நண்பர்களுக்கும் இதில் ஒரு செய்தி உண்டு. 

குமுதம் சிறப்பாசிரியராக நடிகர் சிவகுமார் இருந்த போது சுஜாதவை ஒரு பேட்டி எடுத்தார். அந்த வரிகள் ஒன்றே போதும். நாம் சுஜாதாவை புரிந்து கொள்ள. 

"கதை எழுதும் ஆற்றல் உங்களுக்கு இருப்பதை எப்போது உணர்ந்தீர்கள்?" என்று கேட்ட போது சுஜாதா சொன்ன பதில் 

"இன்று கூட அந்த ஆற்றல் எனக்கு இருக்கிறதா என்று அடிக்கடி சந்தேகம். அதனால் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றேன்"

தமிழ் எழுத்துலகில் காலத்தை வென்றவர்கள் இலக்கியவாதிகள் அல்ல. வாசிப்பவனை வெளியே துரத்தாமல் வாஞ்சையோடு அனைத்துக் கொண்டு தொடர்ந்து வாசிக்க வைப்பனே. 

அந்த வகையில் இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் சுஜாதா எழுத்துலகில் மார்கெட் இழக்காத கதாநாயகன் போலத்தான் இருப்பார். இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த போது இரண்டு விசயங்கள் மனதில் தோன்றியது. 

சுஜாதா போல வேறொருவர் வாழ்ந்து விட முடியுமா என்று? அதைப் போல அமுதவன் போலத் தான் பழகிய பிரபல்யங்களை வைத்து தனக்கென்று எதையும் ஆதாய நோக்கில் எதையும் அடையவிரும்பாமல் தன்னடக்கத்தோடு இயல்பாக வாழ முடியுமா? என்று யோசிக்க வைத்து விட்டார். தான் கற்றதையும் பெற்றதையும் சொல்லியுள்ள அமுதவன் இதே போல மற்றொரு பாகம் எழுத முடியும். 

ஆனால் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து புத்தகங்கள், பத்திரிக்கைகள் வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் இவர் எதையெல்லாம் தவிர்த்து நகர்ந்துள்ளார் (அல்லது) வெளியிட்டுள்ள நிறுவனம் எதையெல்லாம் தவிர்த்துள்ளது என்பதை எளிதாக யூகித்துக் கொள்ள முடியும். 

அமுதவன் இதில் நாகரிகம் கருதி சொல்லாத விசயங்கள் ஏராளமாக உண்டு. இன்று வரையிலும் இவரின் மென்மையான எழுத்து நடைக்கே இணையத்தில் ஏராளமான எதிரிகள் உண்டென்பதே ஆச்சரியமாக உள்ளது. குறிப்பாக இளையராஜா குறித்து இவர் வைக்கும் விமர்சனங்கள் என்பது பலருக்கும் தூக்கத்தைத் தொலைக்கக் காரணமாக இருக்கின்றது. இன்று வரையிலும் இவர் தளத்தில் இளையராஜாவை விமர்சிக்க நீ யார்? என்று அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் குஞ்சாமாமா மணி ரசிகப்பட்டாளங்கள் என்று ஏராளமானோர் உண்டு. ஆனாலும் தலைவர் அசருவதில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று நாகரிக பாணியில் ராஜபாட்டை நடை போட்டுக் கொண்டே சென்று கொண்டிருக்கின்றார். 

நமக்குள் அகங்காரமும் ஆணவமும் தலைதூக்கும் போது இந்தப் புத்தகத்தை வாசிக்க முடிந்தால் உங்களின் சப்தநாடியும் அடங்கிப் பிரபல்யம் என்பது 'கற்றுக் கொண்டதை பகிர்ந்து கொள்ள கிடைத்த ஒரு வாய்ப்பு' என்பதை நம்மால் உணர முடியும். 

இதைதான் சுஜாதா என்ற ஆளுமையின் மூலம் அமுதவன் என்றொரு தன்னடக்க மனிதர் ஒவ்வொரு வரியிலும் உணர்த்தியுள்ளார்.


தொடர்புடைய பதிவுகள்

வல்லமை விமர்சனம்- டாலர் நகரம்

வாசிக்க பகிர

(இலவச) மின் நூல் தரவிறக்கம் செய்ய

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்

( ஈழம் பற்றி அடிப்படை வரலாறு, அரசியல் வரலாற்றை தெரிந்து கொள்ள)

வெள்ளை அடிமைகள் 

( தமிழர்கள் வலியோடு புலம் பெயர்ந்த கதையைச் சொல்லும்)

22 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பலருக்கும் கொடுப்பினை உள்ளது சுஜாதா அவர்களின் எழுத்துக்களால்... அடுத்தவர்களுக்கு உதவுவது, வளர்ப்பது என்கிற ஒரே நோக்கம் கொண்டவர்கள், மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஒரு சிரிப்பு தான் பதில்...

உங்களின் செய்தியாக சொன்ன விதமும் நாசூக்காக உள்ளன... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? எது சிறந்தது? (வாசித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அண்ணே...) +

15 வருடம் முன்பு எனது ISO ஆசிரியர் - இல்லை இல்லை - குரு : "உங்களுக்கு ISO பற்றி சொல்லித் தருகிறேன்... நாம் செய்யப் போவது சம்பாதிக்க அல்ல... நிறுவனங்களுக்கு நம்மால் முடிந்த ஓர் சேவை...!"

நன்றி... வணக்கம்...!

தி.தமிழ் இளங்கோ said...

நீங்கள் எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி சொல்கிறீர்களா அல்லது எழுத்தாளர் அமுதவனைப் பற்றி சொல்கிறீர்களா என்று பிரிக்க முடியாத அளவிற்கு, அமுதவனின் அனுபவங்கள் அடங்கிய நூலைப் பற்றி, ஒரு சிறப்பான விமர்சனம் செய்துள்ளீர்கள். கரையெல்லாம் செண்பகப் பூ – இன்றும் மணம் வீசிக் கொண்டு இருக்கிறது.

எம்.ஞானசேகரன் said...

சுஜாதா பற்றிய அமுதவனின் நூலை வாசிக்க ஆவல் ஏற்படுகிறது. மிகப்பெரிய ஆளுமைதான் சுஜாதா. அவரைப் பற்றிய அறியாத பல செய்திகளை இப்போது உங்கள் பதிவின் மூலம் அறிந்துகொண்டேன். அவரைப் பிடிக்காதவர்கள் மிகக் குறைவு. அவரைப் போல அறிவியல் செய்திகளைத் தரும் எழுத்தாளர்களோ இந்தியாவில் எந்த மொழியிலும் இல்லை. விரிவான தகவல்கள் அடங்கிய பதிவிற்கு நன்றி ஜோதிஜி.

Thulasidharan V Thillaiakathu said...

மிக மிக அருமையான ஒரு பதிவு! அதுவும் எக்காலாமும் எல்லார் மனதையும் கவர்ந்தவர் என்றால் அது எழுத்தாளர் சுஜாதாவாகத்தான் இருக்கும்! அற்புதமானவர்! எழுத்துக்களில் மட்டுமல்ல நடைமுறையிலும், தாங்கல் கூறியுள்ளது போல.! அவருடன் நெருக்கமாக நட்புடன் பழகும் வாய்ப்பு கிடைத்த திரு அமுதவன், திரு சுஜாதா தேசிகன் போன்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்!

//நீங்க அமுதவன் எழுத்தை வாசித்துள்ளீர்களா?" என்று சுஜாதா கேட்ட போது அவர் மையமாகப் புன்னகைத்த போது "அப்பாடா எதிரெதிர் துருவம். நிச்சயம் நல்ல ஜோடி. வாழ்த்துகள்" // இதுதான் சுஜாதா!

இப்படி பல, அவருக்கே உரித்தான வார்த்தைகள், வாக்கியங்கள், இழையோடும் நகைச்சுவை அவரது எழுத்துக்களில் நாம் பார்க்க முடியும்!

அவரைப் பற்றி எழுத வார்த்தைகளைத் தேடத்தான் வேண்டும்! தாங்கள் மிக அருமையான நடையில் , அமுதவன் எழுதி இருக்கும் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வகையில் அருமையாக விவரித்துள்ளீர்கள்!

பல வெகுஜன பத்திரிகைகள் சுஜாதாவை மறந்து விட்டனவோ என்று நினைக்கத் தோன்றும் இந்தத் தருணத்தில் தாங்கள் அவரைப் பற்றி , அமுதவன் வாயிலாக வெளிவந்ததையும் விவரித்து எழுதி உள்ளது மிக்க ம்கிழ்வைத் தருகின்றது!

இனி ஒரு சுஜாதா பிறப்பாரா?! அவரே கற்றதும் பெற்றதும் ல் கூறியிருப்பார்...மறு பிறப்பை பற்றி! ஒருவேளை பாரதியார் பிறக்க 300 வருடங்கள் ஆகலாம்...என்று....அது போல ஒரு வேளை சுஜாதா பல வருடங்கல் கழித்து நம்மிடையே பிறப்பாரோ? ஆனால் நாம் இருக்க மாட்டோமே என்ற ஏக்கம் வருகின்றது!

பல தகவல்கள் தந்துள்ளீர்கள் சுஜாதாவின் எழுத்துக்களில் சொல்வதென்றால்
"கற்றதும்(தற்கும்) பெற்றதும்(தற்கும்)" மிக்க நன்றி!

ஸ்ரீராம். said...

வாங்கி வைத்துள்ள புத்தகம் இன்னும் படிக்கவில்லை. ஒரு முன்னோட்டம் போல உங்கள் பதிவைப் படித்து விட்டேன்.

Unknown said...

அமுதவன் அவர்களின் எழுத்தாற்றலை நான் முதலில் உணர்ந்தது ,அவர் சர்க்கரை நோயை மையப் படுத்தி எழுதிய நூல் மூலம்தான் ..ஒரு நோயைப் பற்றிக்கூட அவ்வளவு சுவாரசியமாய் எழுதி இருந்தார் ..என் பேவரிட் ரைட்டர் சுஜாதாவை பற்றி அவர் எழுதிய நூல் என்றால் படிக்காமல் விட முடியுமா ?விரைவில் வாங்கி விடுகிறேன் !
அமுதவன் பற்றிய நல்ல தகவல்களை தந்ததற்கு பாராட்டுக்கள் !

காரிகன் said...

அமுதவன் தன் எழுத்தில் மிக கவனமாகவும் எளிமையாகவும் அதே சமயம் தான் சொல்லவரும் கருத்தின் மையத்தை விட்டு விலகிச் செல்லாமலும் இருப்பவர். இத்தனை பிரபலங்களுடன் பழகிய ஒருவர் அதைவைத்து விளம்பரம் தேடாமல் இருப்பதே அமுதவனின் சிறப்பு என்று நினைக்கிறேன். மேலும் 38 வருடங்கள் நண்பராக இருந்த சுஜாதாவை நான் அமுதவன் தளத்திலேயே விமர்சனம் செய்திருக்கிறேன். இருந்தும் எந்த சந்தர்ப்பத்திலும் என் கருத்தில் தலையிடாத நாகரீகம் உடையவராக இருக்கிறார். இணையத்தில் அமுதவனின் பக்கங்கள் தளத்தை வாசித்த அனுபவம் இணைய தமிழ் பதிவர்கள் பற்றிய என் எண்ணத்தை மாற்றியமைத்தது.இளையராஜாவைப் பற்றிய அவரது விமர்சனம் நடுநிலையானது. ஏனென்றும் சுஜாதா படித்த பிறகு சுஜாதாவின் மீதான மரியாதை (ஈர்ப்பு அல்ல) கூடியுள்ளது. இதுவே அமுதவன் எழுத்தின் வெற்றி . நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

Jayadev Das said...

நான் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் அமுதவன் ஐயா இல்லத்திற்கு சென்றிருந்தபோது " என்றென்றும் சுஜாதா" புத்தகத்தை ஆட்டோகிரபுடன் பரிசாகக் கொடுத்து விமர்சனம் , சொல்லியிருந்தார் நேரமின்மை காரணமாக இன்னமும் முடியவில்லை. தங்களின் இப்பதிவை படித்த பின்னர் இதை விட சிறந்த விமர்சனம் எழுத முடியாது என்பதை உணர்கிறேன் !! அருமை...........அருமை...........

சீனு said...

//என்று வாழ்த்துவது வரைக்கும். ஆனால் சுஜாதா தனது வாழ்நாள் முழுக்க அடுத்தவரை வளர்ப்பதில் தான் குறியாக இருந்துள்ளார். ஆனால் தனக்கான அங்கீகாரத்தைத் தன் உழைப்பின் மூலமே அடைந்துள்ளார். // நிச்சயம் உண்மை ஜோதிஜி

கண்டிப்பாக நான் படிக்க புத்தகம் ஜோதிஜி

Ranjani Narayanan said...

திரு அமுதவன் சுஜாதாவின் நல்ல பக்கத்தை மட்டுமே காட்டியிருக்கிறார். இது அவரது நல்ல குணத்தைக் காட்டுகிறது. சுஜாதா தனது எல்லாக் கதைகளிலும் பெண்கள் பாத்திரத்தை கேவலப்படுத்தித் தான் காட்டியிருப்பார். மிகச்சிறந்த உதாரணம் அவரது 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்'.
சுஜாதாவின் எழுத்துக்களின் மேல் எனக்கு மிகப்பெரிய ஆர்வம் கிடையாது. ஆனால் அவரது தீவிர உழைப்பை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும்.

திரு அமுதவனுக்குப் பாராட்டுக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

சுஜாதாவின் தீவிர வாசகர்களில் நானும் ஒருவன்! அமுதவனின் இந்த நூலை வாங்கத்தூண்டுகிறது உங்கள் விமர்சனம்! விரைவில் வாங்கி படிக்கிறேன்! அருமையான பகிர்வு! நன்றி!

வருண் said...

எதார்த்தமாக உண்மையைச் சொல்லியிருக்கீங்க ரஞ்சனி அவர்களே! என்னைப்போன்றவர்கள், குறைகளை மட்டும்தான் பூதக்கண்ணாடி போட்டுப் பார்க்க முடியும். அமுதவன் நிறைகளை மட்டுமே சொல்லியிருக்கிறார். ஜோதிஜியின் விமர்சனமும் நிறைகளை மட்டுமே சொல்லியிருக்கிறது. உங்கள் பின்னூட்டம்தான் மனசாட்சியுள்ள ஒரு நல்ல வாசகரின் தரமான விமர்சனம்! உங்கள் நேர்மைக்கு தலைவாணங்குகிறேன். உங்க பின்னூட்டம் மட்டும் இல்லையெனறால் இந்தப் பதிவே ஒருபக்கப் பதிவாக ஆகியிருக்கும். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

மகிழ்நிறை said...

சுஜாதா என்றென்றும் என் பாவரிட்.
1969ஆம் ஆண்டு ராகவேனியம்,1000 ஆண்டு வாழ்வது எப்படி ,கம்ப்யுட்டரே ஒரு கதை சொல்லு போன்ற கதைகளை எழுதியிருக்கிறார்.(நான் பிறந்திருக்கவேயில்லை)இப்போ வரை அந்த பிச்ஷன் ஒரு ஆச்சரியம் தான் ! அவரை பற்றி மேலும் அறிவது மிகுந்த மகிழ்ச்சி !

Rathnavel Natarajan said...

திரு ஜோதிஜி அவர்களின்
என்றென்றும் சுஜாதா
எனது பக்கத்தில் பகிர்கிறேன். அற்புதமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு ஜோதிஜி.

sankaramoorthi said...

இதுவும் கடந்து செல்லும் அற்புத வார்தைகள் உண்மைதான்

கரந்தை ஜெயக்குமார் said...

சிறு வயதில் சுஜாதாவின் கதைகளுக்காகவே, சாவி, குமுதம் போன்ற வார இதழ்களை வாங்கி, சேகரித்து, தொடர் நிறைவுற்றதும், சுஜாதாவின் கதையுள்ளப் பங்ககங்களைத் தனியே கிழித்து, அடுக்கி பைண்டு செய்து அழகுபார்த்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன.
நன்றி ஐயா

Unknown said...

என்னை பொறுத்தாவரை படித்து பழகும் வாசகனுக்கு சுஜாதா 5ம் கிளாஸ் பாடம்.

ரவி சேவியர் said...

அருமையான ஒரு பதிவு! அதுவும் எக்காலாமும் எல்லார் மனதையும் கவர்ந்தவர் என்றால் அது எழுத்தாளர் சுஜாதாவாகத்தான் இருக்கும்! அற்புதமானவர்! எழுத்துக்களில் மட்டுமல்ல நடைமுறையிலும்

ரவி சேவியர் said...

படிக்கும் போது பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு,
சுஜாதா மட்டுமே என்னுடைய விருப்பமான எழுத்தாளர்,
இன்று வரையிலும் எழுத்தாளர் சுஜாதா மேல் நான் கொண்டிருந்த மரியாதை, அபிமானம் மாறவில்லை.
காலமாற்ற இடைவெளி எதுவும் தெரியாத அளவுக்கு எந்தக் காலத்திலும் வாசிப்பவனுக்குப் பொருந்தக்கூடிய, விரும்பக்கூடிய எழுத்தாற்றல் மிக்க சுஜாதாவை நினைத்தால் ஆச்சரியமாகவே உள்ளது
இனி சுஜாதா போல ஒருவரை தமிழ் எழுத்துலகம் காண்பது அரிது.

அப்பாதுரை said...

நன்று ஜோதிஜி. சுஜாதாவுக்கு ஒரு கோவில் கட்டலாமா என்று தோன்றுகிறது. ஒரு நல்ல இடம் இருந்தால் சொல்லுங்களேன். இணையத்தில் இருக்கும் அத்தனை சுஜாதா பக்தர்களுக்கு இலவச அனுமதி.

//தனது வாழ்நாள் முழுக்க அடுத்தவரை வளர்ப்பதில் தான் குறியாக இருந்துள்ளார்
ம்.

சுஜாதா ஒரு சிறந்த எழுத்தாளர். அந்த வரையில் ஒப்புக் கொள்கிறேன். நான் தமிழில் எழுதக் காரணமானவர் என்ற அளவில் கூட ஒப்புக் கொள்கிறேன். (என் எழுத்தின் பிழைகளுக்கு நானே காரணம்..சுஜாதாவைப் படித்ததும் அவரைப் போல் எழுத வேண்டும் என்று தோன்றிய எண்ண வேகத்தைப் பற்றிச் சொன்னேன்)

அப்பாதுரை said...

பலே ரஞ்சனி.

உங்களுக்கு சுஜாதா கோவிலில் இலவச அனுமதி கிடையாது. என்ன செய்யறது சொல்லுங்க.. சுஜாதாவைப் பத்தி இப்படியெல்லாம் பேசலாமா?