Wednesday, November 06, 2013

ரேசன் கடைகள்

அவன் பெயர் மாரிமுத்து. என்னுடன் பத்தாம் வகுப்பு வரை படித்தவன். ஆண்டுறுதி பரிட்சையில் நொண்டியத்த காரணத்தால் படிப்பை நிறுத்தி விட்டான். உள்ளுருக்குள் இருந்த அரிசி ஆலைக்கு தினக்கூலிக்கு போய்க் கொண்டிருந்தவனுக்கு திடீரென்று அதிர்ஷ்டம் அடிக்க அதே தினக்கூலியாக உள்ளூரில் இருந்த ரேசன் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். 

ஊரில் இருந்த பிள்ளையார் கோவில் ஊரணிக்கரையைச் சுற்றிலும் இருந்த கடைகள் தான் முக்கியமான ஆள் நடமாட்டம் உள்ள பகுதி. கோவிலை ஓட்டியது போல ரேசன் கடை இருந்தது. கோவிலைத் தாண்டி வருபவர்கள் காலில் போட்டிருக்கும் செருப்பை முன்பே கழட்டி கையில் வைத்துக் கொண்டு அப்படியே பிள்ளையாருக்கும் ஒரு வணக்கத்தை போட்டு விட்டு வேகமாக ரேசன் கடையை நோக்கி ஓடி வருவார்கள்.  

கோவிலை ஓட்டியிருந்த ஒரு பகுதியை தடுப்பாக மாற்றி அறை போல் உருவாக்கி ரேசன் கடைக்கு வாடகைக்கு விட்டிருந்தார்கள். ஒரே ஒரு அறை. வெளியே ஒரு கூரை அமைப்பு. கடைக்கு வெளியேயும், பக்கவாட்டிலும் வந்திறங்கும் மண்ணென்ணெய் பேரல்களை நிறுத்தி வைத்திருப்பார்கள். உள்ளூருக்குள் இருப்பவர்களுக்கும் பக்கத்தில் உள்ள சில கிராமங்களுக்கும் இதுவே ஒரே கடையாக இருப்பதால் எப்போதும் கூட்டம் குவிந்திருக்கும்.

எங்கள் வீட்டிற்கு அருகே பேரூந்து நிறுத்தம் இருந்தாலும் ரூட் பஸ் மட்டுமே இங்கே நின்று செல்லும். அருகே உள்ள கிராமங்களுக்கும், அழகப்பா கல்லூரிக்குச் செல்லும் டவுன் பஸ்களும் இந்த ரேசன் கடைக்கு அருகேயுள்ள மேட்டுக்கடை நிறுத்தத்தில் தான் வந்து நிற்கும். காரணம் டவுன்பஸ் என்பது அருகே உள்ள அத்தனை கிராமங்களுக்கும் சென்று வருவதால் மீண்டும் ஊரணிக்கரையைச் சுற்றி வந்து பஸ்டாண்ட் என்ற பெயரில் இருந்த கூரைக்கூடத்திற்கு வராமலே போய் விடும். டவுன் பஸ்ஸில் பயணிக்க வேண்டிய அனைவரும் இங்கே வந்து தான் நிற்பது தான் வாடிக்கை.  குறிப்பாக அழகப்பா கல்லூரிகள் மற்றும் அது சார்ந்த பகுதிகளுக்கு டவுன் பஸ் மட்டுமே செல்லும். இதற்கு மேலாக ரூட் பஸ்க்கும் டவுன் பஸ்க்கும் உள்ள கட்டண வித்தியாசம் இருபது பைசா தான் என்றாலும் அதனை கவனத்தில் கொண்டு பயணம் செய்பவர்களும் உண்டு.

ரூட் பஸ் என்றழைக்கப்படும் எந்த பேரூந்துகளும் கல்லூரி பகுதிகளின் உள்ளே செல்லாது. இதன் காரணமாக ஊரிலிருந்து செல்லும் ஒவ்வொரு டவுன்பஸ்களும் நிறைமாத கர்ப்பிணியாகவே இருக்கும். நான் கல்லூரிக்கு செல்ல இங்கே வரும் வழியில் மாரிமுத்துவை பார்ப்பதுண்டு.  பேரல் மேல் நின்று கொண்டு என்னடா? என்று உற்சாகமாக கையசைப்பான்.  சிரித்துக் கொண்டே செல்லும் போது அங்கே கூடியிருக்கும் கூட்டத்திற்குள் நுழைந்து மெதுவாக நகர வேண்டும்.  

வீட்டில் ரேசன் அட்டையிருந்தாலும் மண்ணெண்ணெய் மட்டும் எப்போதும் வாங்குவது வாடிக்கை. வேறு எதுவும் வாங்குவார்களா? என்று தெரியாது. குறிப்பாக இது போன்ற வேலைகளுக்கு நான் சென்றதே இல்லை.  அண்ணன் முடித்து வைத்து விடுவார்.  

அன்று திடீரென்று இந்த பொறுப்பு என் வசம் வந்த போது அட்டையையும், கொண்டு போயிருந்த பெரிய கேனையும் மாரிமுத்துவிடம் ஒப்படைத்து விட்டு அருகே இருந்த ஊரணிக்கரையின் மேல் நண்பர்களுடன் இருந்து கொண்டு அங்கேயிருந்த கூட்டத்தை கவனித்தது இப்போது நினைவுக்கு வருகின்றது.  

அந்த கடையின் அமைப்பும், அங்கிருந்த அடிதடி, அவசரம், ஏழ்மை, வாங்கிய பொருட்களை தங்கம் போல பத்திரமாக எடுத்துக் கொண்டு சென்ற அத்தனை மக்களின் முகமும் சில மாதங்களுக்கு முன் என் நினைவிற்கு வந்தது.

காரணம் தொடர்ச்சியான தொந்தரவின் காரணமாக திருப்பூருக்கு ஊரிலிருந்த ரேசன் அட்டையை இங்கே மாற்றியாக வேண்டும் என்று சொல்லி அதுவும் வெற்றிகரமாக நடந்து முடிய வீட்டுக்கு அருகே இருந்த ரேசன் கடைக்கு நான் செல்ல வேண்டிய கட்டாயம் உருவானது. மாற்றி வந்த போதிலும் அருகே உள்ள ரேசன் கடையில் பதிந்து புதிய முகவரியை எழுதி சீல் வைத்து வாங்கினால் தான் ஆவணமாக சமர்ப்பிக்கப்பட முடியும். 

‘இன்று போய் நாளை வா‘ என்று இங்கே கடையில் இருப்பவர்கள் அலைக்கழிக்க நாட்டாமை பொறுப்பு இயல்பாக என்னிடம் வந்து சேர்ந்தது.

வீட்டிலிருந்து நான்கு சந்துகள் தாண்டியிருக்கும் பகுதியில் இருந்த அந்த ரேசன் கடை வழியாக பல முறை சென்றிருந்த போதிலும் இப்படியொரு கடை இங்கே இருக்கின்றது என்பதை நான் பார்த்ததே இல்லை.  வீட்டில் அழைத்துக் கொண்டு அங்கே சென்ற போது தான் வளர்ந்த மாநிலம் என்று அழைக்கப்படும் நம் தமிழ்நாடு என்னைப் பார்த்து சிரித்தது. 

ஊரில் பார்த்த ரேசன் கடைபோல அதே ஒரே அறை. கூரையால் வேயப்பட்ட அமைப்பிற்கு கீழே அடுக்கி வைக்கப்பட்ட மூட்டைகள். இருபது வருடத்திற்கு முன்னால் இருந்தே அதே ரசீது கிழிக்கும் முறை, நெருக்கடியான இருட்டான அறை, ஒரு நபருக்கு மேல் உள்ளே நிற்க முடியாத அளவுக்கு சிதறிக்கிடக்கும் மூட்டைகள், ஐந்தில் ஒரு பங்கு வீணாகிக்கிடக்கும் தானியங்கள் என்று அக்மார்க் அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் எடை போடும் எந்திரம் மட்டும் சற்று நவீனமாக மாறியுள்ளது. பருப்பு வகைகள் பாக்கெட் போட்டு வந்து விடுகின்றது. முன்பிருந்த எடை குறைவு என்ற பிரச்சனையின்றி நாம் உச்சபட்ச வளர்ச்சியை பெற்றுள்ளோம். வாங்கும் பொருட்களில் எடை குறைவு என்று குளறுபடிகளையும் உருவாக்க முடியாது என்பது மட்டுமே ஆறுதல்.

ரசீது போட்டுக் கொண்டிருப்பவர் நெருப்பில் இருப்பது போலவே பேசிக் கொண்டிருந்தார். அருகே ஒரு பெண்மணி பெற்ற ரசீதுக்கான பொருட்களை எடைபோட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். இவரின் குரலும் பேச்சும் தூள் பட சொர்ணாக்கா பாணியில் இருந்தது.  எப்போதும் போலவே கூட்டம் அதிகமாகவே இருந்தது.  ஆனால் ஊரில் பார்த்த கூட்டத்திற்கும் இங்கே பார்த்த கூட்டத்திற்கும் முற்றிலும் வித்தியாசம். 

ஆடி காரைத்தான் அங்கே பார்க்கவில்லை.  மற்றபடி பெரும்பாலான கார்களில் வந்தவர்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள்.  பெரிய விலை உள்ள அத்தனை விதமான இரண்டு சக்கர வாகனங்களும் தாறுமாறாக நிறுத்தப்பட்டு அந்த சந்தின் வழியாக கடந்து செல்ல நினைப்பவர்களுக்கு மிகுந்த சவாலை உருவாக்கியிருந்தார்கள்.

இவர்களை கவனித்துக் கொண்டே அரசாங்கத்தின் ஒவ்வொரு இலவச திட்டங்களைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தேன்.

அது குறித்து அடுத்த பதிவில்.......

தொடர்புடைய பதிவுகள்

இனிய நினைவுகள்


Monday, November 04, 2013

மொழியே உன் ஆயுள் ரேகை உச்சமா?


ஏதோவொரு சமயத்தில் குழந்தைகளின் தோழியர்கள் என் கண்ணில் படுவார்கள். வீட்டுக்கு அருகே இருப்பவர்கள் தங்களின் பிறந்த நாளுக்கு கேக் கொண்டு வருவார்கள். சிலர் சேர்ந்து விளையாடுவதற்கென வருவார்கள்.

இது போன்ற சமயங்கள் என் சோதனைகள் தொடங்கி விடும்.

தொடக்கத்தில் அவர்களுடன் ஜாலியாக அரட்டையை தொடங்கி மெதுவாக அவர்களின் கல்வி குறித்து மேலோட்டமாக கேட்டுவிட்டு கடைசியாக ஒரு கேள்வியை கேட்பேன்.  

"பரவாயில்லையே? பள்ளியில் நன்றாக படிப்பாய் போல.....". என்று சொல்லிக் கொண்டே அருகே கிடக்கும் தமிழ் ஆங்கில செய்தித்தாளைக் கொடுத்து "இதை கொஞ்சம் வாசித்து காட்டு பார்க்கலாம்" என்று சொல்லுவதுண்டு. 

இனி தப்ப முடியாது என்பதை புரிந்து கொண்டு "இங்கிலீஷ் பேப்பர முதலில் வாசிக்கட்டுமா அங்கிள்?" என்பார்கள்.

"சரிம்மா" என்றால் அவர்களின் வாசிக்கும் விதத்தை வைத்து ஓரளவிற்கு அவர்களின் "நிலையை" நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.  

ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்தில் எட்டு குழந்தைகளுக்கு தமிழ் மொழி வாசிப்பு என்பது 50 வருடத்திற்கு முன்னால் உள்ள கட்டைவண்டி பயணம் தான். கடித்து துப்பி வார்த்தைகளை அரைத்து பாதியில் நிறுத்தி விடுகின்றார்கள். சிலர் தங்களால் முடியாத நிலையில் பதட்டமாகிவிடுகின்றார்கள். ஆங்கில செய்தித்தாளை தமிழ் அளவுக்கு சிரமப்படாமல் வாசிக்க முயற்சித்தாலும் வார்த்தைகள் வசப்படாமல் ஒரு சக்கரம் இல்லா வண்டி போல இழுத்துக் கொண்டே செல்லும்.  

பார்த்து வாசிக்கவே சிரமப்படும் குழந்தைகளுக்கு எப்படி மொழி வசப்படும்? வாயில் வசம்பு வைத்து தேய்த்தாலும் மொழியே உன் விலை என்ன? என்கிற கதை தான்.

ஆச்சரியம் என்னவென்றால் பெரும்பாலும் 80 சதவிகித மதிப்பெண்களை எடுப்பவர்களாக இருக்கின்றார்கள். பயிற்றுவிக்கப்பட்ட பந்தயக்குதிரைகளாக மாறியுள்ளனர். 

இது தான் நான் இங்கே பார்க்கும் தனியார் பள்ளிக்குழந்தைகளின் நிலைமை.

மொத்தத்தில் தற்போது தமிழ்மொழி தீவிர சிகிச்சை பிரிவிலும், ஆங்கிலமும் அதை நோக்கியே போய்க் கொண்டிருக்கின்றது.  தனியார் பள்ளிக்கூடங்களில் ஹிந்தி மொழி வேறு தனியாக உள்ளது. ஒரு வகுப்பில் படிக்கும் பாதிக்கும் மேற்பட்ட சராசரி குழந்தைகளுக்கு அது வீபரித மொழியாகவே தெரிகின்றது. 

இன்றைய கல்வி குறித்த குற்றச்சாட்டை விட இரண்டு சூழ்நிலைகளைப் பற்றி பேச வேண்டும். 

முதலில் தனியார் பள்ளிக்கூடங்களில் தங்கள் குழந்தைகள் படித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கருதும் நடுத்தரவர்க்க பெரும்பாலான பெற்றோர்களுக்கு மொழிப்புலமை ஒன்றும் பெரிய அளவில் இல்லை. ஆனால் நாம் உயரத் தடையாக இருந்த விசயங்கள் நம் குழந்தைகளுக்கு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தான் பலருக்கும் ஆங்கிலம் என்பது ஒரு அருமருந்தாக இருக்கின்றது. 

இன்று நடுத்தரவர்க்கத்திற்கென ஒரு கனவு.  அந்த கனவில் குழந்தைகளின் கல்வி முக்கியப் பங்கு வகிக்கின்றது. கல்வி என்பது பின்னால் லாபம் தரக்கூடிய முக்கிய மூதலீடு போலவே பார்க்கப்படுகின்றது. 

அதிக லாபம் வர வேண்டுமென்றால் ஆங்கிலமே முதன்மையானது என்ற சூழ்நிலையில் இருப்பதால் தரமில்லாத தனியார் பள்ளிக்கூடங்களில் தகுதியில்லாத ஆசிரியர்களால் மாணவர்களின் கனவுகள் வளர்க்கப் படுகின்றது. 

பெற்றோர்களின் ஆசைகளில் அள்ளித் தெளிக்கப்படும் வாக்குறுதிகளால் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயம் ஏதோவொரு வெளிநாட்டில் இருக்கக்கூடும். குறைந்தபட்சம் நல்ல சம்பளத்தில் ஏதோவொரு நிறுவனத்தில் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் அழுத்தமாக பதிய வைக்கப்படுகின்றது. 

பாத்திகளில் வளர்க்கப்படும் குரோட்டன்ஸ் செடிகள் போல அழகாக தெரிகின்றார்கள். ஆனால் எதிர்கால பிரயோஜனம் என்னவாக இருக்கும் என்பது குறித்து அதிகம் யோசிக்க வேண்டியதாக உள்ளது.

கடந்த இரண்டு வருடமாக பல குழந்தைகளைப் பார்த்து விட்டேன். பள்ளியிலும் நடக்கும் பல கூத்துக்களையும் பார்த்துக் கொண்டே வருகின்றேன். இன்றைய கல்வி மொழியை வளர்க்கவில்லை என்பதோடு தனிப்பட்ட முறையில் எந்த மாணவர்களின்  ஆளுமைத்திறனையும் வளர்க்கவில்லை.  

இதில் என்ன ஆச்சரியம்? தெரிந்தது தானே என்று கேட்பீர்கள்?  

ஆனால் நமக்கு எது தேவை? என்கிற ரீதியில் மாணவர்கள் கற்றுக் கொள்ளும் விசயங்கள் தான் ஆச்சரியமாக இருக்கின்றது.

"ஆசிரியரே கேட்க விரும்பாத விசயங்களையெல்லாம் நீங்க கேட்குறீங்க? இதனால எங்களுக்கு என்ன லாபம் அங்கிள்?" என்று கேட்ட மாணவியைப் பார்த்து வியந்து போய் பார்த்தேன். சுர்.. என்று கோபம் வரவழைக்ககூடிய கேள்வி.  ஆனால் அதில் இருந்த உண்மைகள் தான் எனக்குப் பிடித்திருந்தது. 

படி.......... நினைவில் வைத்துக்கொள்..... எழுது..... ஜெயித்துவிடு....

நான்கு திசைகளைப் போல நான்கே கட்டங்கள் தான் இன்றைய கல்வி. 

ஜெயித்து வந்தால் வாய்ப்புகள் உருவாகின்றது அல்லது உருவாக்க முடியும்.

அந்த வாய்ப்புகளே வசதிகளைத் தந்துவிடும் என்ற நம்பிக்கைக்கு சமூகத்தில் பல உதாரணங்கள் மூலம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகின்றது. 

மொழியறிவு என்பதே வெறுமனே உரையாடலுடன் முடிந்துவிடக்கூடியதாக மாறியுள்ளது. உரையாடல் என்பது முக்கால்வாசி ஆங்கிலம் கால்வாசி தமிழ் என்கிற ரீதியில் உள்ள வளர்ச்சியை அடைந்துள்ளோம். 

பேசத் தெரிந்தால் போதும் என்கிற நிலைமைக்கும் தமிழ் பார்க்கப்படுகின்றது என்பதை விட அந்த அளவுக்குத் தெரிந்தாலே போதும் என்கிற புள்ளியோடு நிறுத்தப்படுகின்றது. இப்போது எதிர்காலத்தில் தமிழ் மொழியே இருக்காது. அது தேவையில்லாமல் போய்விடும் என்ற நம்பிக்கையும் நமக்கு விதைக்கப் படுகின்றது.

ஆங்கிலமோ, தமிழோ மேம்போக்கான வார்த்தைகளை எழுதச் சொன்னால் முழிபிதுங்கி போய்விடுகின்றார்கள்.  இது குழந்தைகளின் மேல் வைக்கப்பட வேண்டிய  குற்றச்சாட்டல்ல. இப்போதுள்ள கல்வி சார்ந்த சூழ்நிலைகளைப் பற்றியே யோசிக்க வேண்டியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் பத்து மற்றும் பனிரெண்டு பொதுத்தேர்வு முடிந்தவுடன் செய்தித்தாளில் வரும் முழுப்பக்க விளம்பரங்களை கவனித்துப் பாருங்கள்.  

எங்கள் பள்ளியின் சாதனை என்று நீட்டி முழங்கியிருப்பார்கள்.  இன்று ஒவ்வொரு பள்ளியின் வாசலிலும் கதாநாயகர்களுக்கு வைக்கப்படும் கட் அவுட் போல நிரந்தரமாக பெரிய ப்ளக்ஸ போர்ட்டில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களின் சாதனை விபரங்களை பார்க்க முடியும்.  

மாணவர்கள் இதைப் பார்க்கின்றார்களோ இல்லையோ பள்ளிக்கு வரும் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இதுவே உத்வேகம் அளிக்கக்கூடிய டானிக். என் பிள்ளையும் இது போல வரவேண்டும் என்பது மறைமுகமாக மனதில் விதைக்கப்படுகின்றது.

வீட்டில் குழந்தைகளை ஐந்தாம் வகுப்புக்கு மேலே சரியான பாதைக்கு நகர்த்த வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே தெளிவாக இருந்தேன். 

அதுவரைக்கும் அவர்களின் ஊக்கமென்பது எதன் மூலம் இயல்பாக பெறுகின்றார்களோ அதையே கவனித்துக் கொண்டிருந்தால் போதுமானது என்றே நினைத்திருந்தேன்.  சென்ற வருடம் வாசிப்புத் திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறியும் பொருட்டு வைத்த சோதனையில் ஒவ்வொருவரின் தரமும் ஒவ்வொருவிதமாக இருந்தது. 

இவர்கள் கற்கும் கல்வி வாசிப்பை வளர்க்க உதவாது என்பதை புரிந்து கொண்டு இதற்கென் வாங்கிப் போட்ட தமிழ் ஆங்கில புத்தகங்கள் அனைத்தும் அத்துவானக்காட்டில் எங்கேயோ கிடப்பது போல சீந்துவாரற்று கிடந்தது. 

காலையில் வீட்டுக்குள் வந்து விழும் செய்தித்தாளை கவனமாக உள்ளே எடுத்து வந்து வைத்து விட்டு நகர்ந்து விடுவார்கள். தொலைக்காட்சி ஆர்வத்தை மாற்ற முடியவில்லை. இயல்பான நாட்களில் அரைமணிநேரமே பயன்படுத்திய போதிலும் அதன் தாக்கம் விடுமுறை தினங்களில் அதிகமானதை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

கல்வியென்பது அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே என்ற கொள்கை மனதிற்குள் ஆழமாய் ஊடுருவியிருந்தது. ஆசிரியர்களும் அப்படியே சொல்லிக் கொண்டிருந்ததே முக்கிய காரணமாக இருந்தது.

களம் தெரிகின்றது. பிரச்சனைகளும் புரிகின்றது. எங்கிருந்து தொடங்குவது என்பதை யோசித்து அன்றொரு நாள் எதிர்பாரதவிதமாக வகுப்பாசிரியர் ஒருவரை சந்திக்க பள்ளிக்கு சென்றிருந்த போது அங்கே வேறொரு அரங்கேற்றம் நடந்து கொண்டிருந்தது. 

அன்று ஒரு பெண்மணி ஒரு வகுப்பாசிரியரை சற்று அதிகமாகவே சப்தம் போட்டுக் கொண்டிருந்தார். முழுமையாக விசாரித்தபோது ஆசிரியர் அவர் மகனின் பரிட்சைத்தாளில் வரிசையாக பல பதில்களுக்கு அரை மதிப்பெண்கள் குறைத்து போட்ட காரணத்தினால் காரணத்தினால் அவனால் ஏ1 கிரேடு வரமுடியாமல் போய் விடுகின்றதாம்.

பல முறை ஆசிரியர்கள் என்னிடம் புலம்பியுள்ளனர்.  

"ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஏ1 எடுத்தால் என்ன? பி1 எடுத்தால் என்ன? ஒரு மாணவனின் மற்ற நடவடிக்கைகள் குறித்து பக்கவாட்டில் பல கட்டங்களில் தனியாக கிரேடு கொடுக்கின்றோம்.எவரும் அதைப் பார்ப்பதே இல்லை.  எல்லோருமே மதிப்பெண்களில் மட்டும் கவனம் வைத்து எங்களை படுத்தி எடுக்கின்றார்கள்" என்றார்.

மாற்றங்களை உருவாக்க நினைக்கும் சில ஆசிரியர்களுக்கு முன்னால் இருக்கும் சவால்கள் புரிந்தது. 

ஒவ்வொன்றையும் யோசித்துக் கொண்டே வீட்டில் சில காரியங்களை செய்யத் துவங்கினேன். "லஞ்சமே மிகச் சிறந்த ஆயுதம்" என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு இதைப்படித்தால் இந்த பரிசு என்று அவர்கள் அறியாமலேயே மூக்கில் மூக்காணங்கயிறு கட்ட வண்டியின் பாதை ஒரு வரையறறைக்கு வர ஆரம்பித்தது.இரவில் சொல்லப்படும் கதைகள் வார்த்தைகளை யோசிக்க வைக்க வண்டியின் பயணம் இன்னும் கொஞ்சம் இலகுவாக நகர்ந்தது. 

படிப்படியான நகர்தல் இன்று நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

வண்டியில் எத்தனை சொகுசு இருந்தாலும் பாதையில் பள்ள மேடுகள் இருந்தால் எப்படியிருக்கும்? பள்ளிக்கூடம் கொடுக்கும் தாக்கம் தான் இங்கே குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. 

பள்ளியில் "என் பையனுக்கு இன்னமும் இங்கிலீஷ் பேசத்தெரியல? என்ன இங்கிலீஷ் மீடியமோ?" என்று கத்திய ஒரு அம்மாவின் குரலைப் பார்த்து அரண்டு போயிருக்கேன்.

இது போன்ற சமயங்களில் தான் எதார்த்தம் உரைக்கின்றது. கூடவே ஒரு கேள்வியும் மனதில் உருவாகின்றது.  இன்றைய உலகளாவிய போட்டியில் ஜெயித்து வர மொழி முக்கியமெனில் ஜெயித்து வந்தபிறகு வாழ வேண்டிய வாழ்க்கைக்கு எந்த மொழி தேவை?

அடர்ந்த காடு. தூரத்தில் தெரிகின்றது வெளிச்சம். 

அது வெளிச்சமா? மின் மினி பூச்சியா?

தொடர்புடைய பதிவுகள்



Saturday, November 02, 2013

தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார்

"வீடு ரொம்ப நல்லா இருக்குடா" என்றார்.

அம்மா முதல் முறையாக வீட்டுக்கு வந்த போது சொன்ன வார்த்தைகளை விட அவரை திருப்பூருக்கு அழைத்து வந்ததே பெரிய சாதனையாக எனக்குத் தெரிந்தது.  

புதிய கார் எடுத்த ஒரு மாதத்தில் கட்டாயப்படுத்தி அழைத்து வந்தேன். ஊரிலிருந்து ஆறு மணி நேர பயணத்தில் வீட்டில் கொண்டு வந்து நிறுத்திய போது பயந்தபடி அவரின் கால் வீங்கவில்லை. காருக்குள் அளவாக வைத்திருந்த குளிர்சாதன வசதியால் பயண அலுப்பு கூட தெரியவில்லை. 

மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் நுழைந்தவர் "கார் நல்லா ஓட்டுறாண்டி" என்று மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த போது எனக்கு சற்று நம்பிக்கை வந்தது. நிச்சயம் சில மாதங்கள் இங்கே இருப்பார் என்றே நம்பினேன்?.

அம்மா வந்த போது குழந்தைகள் பாலர் பள்ளியை முடித்திருந்தார்கள். வீட்டுக்குள்  சுவற்றுக்குள் மாட்டியிருந்த பலவிதமான அட்டைகளை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தார். எண்கள், எழுத்துக்கள், படங்கள் என குழந்தைகளின்    கல்வி ஆர்வத்தை வளர்க்க ஒவ்வொன்றாக வாங்கி மாட்டி வைத்திருந்தேன். பலவிதமான கல்வி சார்ந்த பொம்மைகள் வீடு முழுக்க இருந்தன. ஆர்வமாய் ஒவ்வொன்றையும் பார்த்தவர், "இப்படியெல்லாம் தான் நீங்க படிச்சீங்களா?" என்று கேட்டு சிரித்தார்.

இது தவிர அவர்களின் கல்விக்கென வேறெந்த பெரிதான முயற்சியையும் செய்யவில்லை. அதிகாலைப் பொழுதில் குளிக்க உதவும் போது அவர்களுடன் பேசுவதைத் தவிர வேறெந்த சமயமும் வாய்ப்பதில்லை. பள்ளி முடியும் சமயத்தில் அவசரமாகச் சென்று அழைத்து வீட்டில் விடுவதோடு என் கடமை முடிந்து விடும்

அலுவலகம் முடிந்து நள்ளிரவில் வீட்டுக்குள் நுழையும் பொழுது தூங்கிக் கொண்டிருப்பார்கள். எனக்கும் குழந்தைகளுக்கும் உண்டான உறவும், உரையாடலும் மிகக் குறைவாகவே இருந்தது. இதன் விபரீதம் அம்மா வந்த பொழுது, அவர் குழந்தைகளுடன் உரையாடும் சமயங்களில் தான் எனக்கு முழுமையாக புரிந்தது.

அம்மாவின் திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவர் காசி பயணத்தைத் தவிர வெளியுலகத்தை பார்த்த தருணங்கள் மிக மிக குறைவு. மிகப் பெரிய கூட்டுக்குடித்தனத்தின் அச்சாணியே அவர் தான். நாள் முழுக்க உழைப்பு. அந்த உழைப்பு மட்டுமே குடும்பத்தின் ஆதாரமாக இருந்தது. அவர் உடம்பும் எண்ணமும் உழைப்பதற்கென்றே மாறிப் போன காரணத்தால் பக்கத்து ஊர்கள் குறித்து கூட தெரிந்து கொள்ள ஆர்வமின்றி நாற்பதாண்டு காலத்தை கழித்தவர். 

அவருக்கும் பயணம் என்றால் பயம் பிடிக்கும் சமாச்சாரம். கனத்த உடம்பு படுத்தி எடுப்பதால் ஆசைகள் இருந்தாலும் அவரின் உடம்பு ஒத்துழைப்பதில்லை. வெளியுலகம் என்பதே அப்பாவின் மறைவுக்குப் பிறகே அவருக்கு வாய்த்த காரணத்தால் ஒரு படபடப்பு அவருக்குள் இருந்து கொண்டேயிருக்கும்.

சாலையில் படபடக்கும் வாகனங்கள் கூட அவருக்கு பயத்தை தருகின்ற சூழ்நிலையில் வாழ்ந்த காரணத்தால்  கவனமாக காரில் அழைத்து வந்தேன். ஒருவரின் மாற்ற முடியாத விசயங்களை அப்படியே மாற்றாமல் நாம் ஏற்றுக் கொள்வதும் ஒரு வகையில் நல்லது தானே. ஆனால் அம்மாவிடம் மாறாத கொள்கை ஒன்று உண்டு. 

"பெண்ணாய் பிறக்கக்கூடாது. பெண் குழந்தைகள் என்றால் ஆகாது". 

காரணம் அவரின் துயரக்கதை சீனப் பெருஞ்சுவற்றை நீளமானது உயரமானதும் கூட.  கஷ்டப்படுவதற்கென்ற பிறப்பெடுப்பவர்கள் பெண்கள் என்ற கொள்கையை இன்று வரையிலும் அவர் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.

நான் இதனை உணர்ந்திருந்த போதிலும் பேத்திகளை விட்டுக் கொடுக்க மாட்டார் என்று நினைத்தே  அழைத்து வந்தேன். குழந்தைகள் பிறந்த போது பார்த்த முகத்தை பல வருடங்கள் கழித்து பார்த்த போது குழந்தைகளின் தோற்றத்தில் சொக்கிப் போனார். 

புது முகத்தைப் பார்த்த இருவர் விலகி நின்ற போது ஒருவர் மட்டும் எளிதாக ஒட்டிக் கொள்ள, தொடர்ந்து வந்த நாட்களில் அவர்களும் ஒன்றிப்போக இயல்பாகத்தான் போனது.  பல சமயம் விடுமுறை தினங்களில் பாட்டி பேத்திகளின் உரையாடல்களை பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தாலும் அலுவலகச் சுமையின் காரணமாக வீட்டில் இருக்க வாய்ப்புகள் அமையாது.

அந்த பெரிய வீட்டின் மற்ற இடங்களையும் விட வாசலில் அமர்ந்திருப்பதே அம்மாவுக்கு பிடிக்கும். 

வீட்டுக்கு வெளியே இருந்த பெரிய வேப்ப மரக் காற்றின் சுகமே அவருக்குப் போதுமானதாக இருந்தது. வாசலின் குறுக்கே  காலை நீட்டிக் கொண்டு வெற்றிலைப் பையை பிரித்து வைத்துக் கொண்டு மெல்லுவதும் எச்சிலை அருகே உள்ளே தோட்டத்து மண்ணில் துப்பிக்கொண்டிருப்பதும், தெருவில் செல்லும் ஆட்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் அன்றாட வாடிக்கையாக இருந்தது.

இங்கிருந்து தான் பிரச்சனை தொடங்கியது.

உள்ளே விளையாடிக்கொண்டிருக்கும் குழ்ந்தைகள் கத்திக் கொண்டே வாசலை நோக்கி ஓடி வர, விரட்டிக் கொண்டே வருபவர் வெளிப்புற சந்தின் வழியே வாசலுக்கு வர காலை நீட்டிக் கொண்டிருக்கும் அம்மாவுக்கு ஒவ்வொரு முறையும் காலை மடக்குவதும், மீண்டும் நீட்டுவதுமென புதிய வேலையை உருவாக்கத் தொடங்கினர்.  முட்டி வலியும், முதுகு வலியையும் நிரந்தரமாக இருந்தவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. 

எரிச்சலை உருவாக்கினாலும் அவரால் வேறொரு இடத்தை தேர்ந்தெடுத்து உட்கார மனமில்லாது கத்தத் தொடங்கினார். இதற்கு மேலாக அவருக்கு பேச்சுத் துணைக்கு ஆட்கள் இல்லை. பக்கத்து வீடுகளில் இருந்தவர்களின் நாகரிக பேச்சும், கொங்கு பாஷையும் வினோதமாகத் தெரிய அதையும் விரும்பாமல் வானத்தை வெறிக்கத் தொடங்கினார்.

நாற்பது வயதுக்கு மேல் நாய்ப்புத்தி என்பதைப் போல அறுபது வயதை மீண்டும் குழந்தையாக மாறும் தருணம் என்கிறார்கள். விதிவிலக்குகளைத் தவிர்த்து நாற்பது வயதிற்குள் தனக்கான இடத்தை அடையாதவர்களின் வாழ்க்கையென்பது இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலும், அலைவதை குறைத்துக் கொள்ள முடியாமல் அவஸ்த்தைகளின் தொடக்கம் ஆரம்பித்து விடுகின்றது.  

உடல் ஆரோக்கியத்தின் சவாலும் இந்த வயதிலிருந்தே தொடங்குகின்றது. 

இதுவே அறுபது வயதில் கண் பார்வை குறைந்து, செவிப்புலன் திறன் இழந்து எரிச்சலையும் ஏக்கத்தையும் இயல்பான குணமாக மாற்றி விடுகின்றது. இயல்பான விசயங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களை பார்க்கும் பொழுது எரிச்சல் உருவாகும். மனஉளைச்சல் அதிகமாகும். தலைமுறை இடைவெளி பூதாகரமாக உருவாகும். 

இந்த வயதில் தான் ருசியை மட்டுமே உணவாக வைத்து வாழ்ந்தவர்களின் வாழ்க்கையில் வாய்க்கும் வயிற்றுக்கும் மிகப் பெரிய போராட்டமே தொடங்குகின்றது. 

ருசி தான் வேண்டும் என்ற மனமும் இதெல்லாம் இனி ஆகாது என்று வயிறும் சண்டை போட வாழ்வே நரகமாக மாற வாரிசுகள் மீதுள்ள அன்பு கூட பலசமயம் மாறிவிடுகின்றது.

சிலர் பழக்கத்தினால் தங்களை மாற்றிக் கொண்டு விடுகின்றார்கள்.  பலர் தங்கள் வாழ்க்கையை கழிவிரக்கமாக மாற்றி வைத்துக் கொண்டு உடனிருப்பவர்களை படுத்தி எடுக்கத் தொடங்கி விடுகின்றார்கள். இதற்கு மேலாக வயதானவர்களுடன் உரையாடும் தொடர்பு மொழி முக்கியமானது. அவர்களுக்கு பிடித்த அவர்கள் விரும்பும் நிலையில் இருந்து பொறுமையுடன் உரையாட வேண்டும். பலராலும் இது முடிவதில்லை.

ஒரு சமயம் "அப்பத்தா இதைக் கேளுங்க" என்று மகள் ஒரு அட்டையை எடுத்துக் கொண்டு அவர் அருகே சென்ற போது அம்மாவில் விலகல் என்னை கூர்மையாக கவனிக்க வைத்தது.  மனைவியிடம் கேட்ட போது "இவங்க பேசுறது அவங்களுக்கு புரியலையாம்" என்றார்.

எங்கேயிருந்து இந்த குழப்பம்? என்று ஆராயத் தொடங்கினேன். 

குழந்தைகள் பள்ளிக்கு சென்றார்களே தவிர அவர்களின் கல்வி குறித்தோ, அவர்களின் மற்ற செயல்பாடுகள் குறித்தோ அதிகம் கவலைப்பட்டுக் கொண்டதில்லை. குறிப்பாக தனித்தீவாக ஒதுங்கி போனதால் உறவுகள் கூட வருடத்துக்கு ஒரு முறை என்கிற ரீதியில் இருந்த காரணத்தால் வீடே வாழ்க்கை பள்ளிக்கூடமே உலகம் என்பதாக வளர்ந்து கொண்டிருந்தார்கள் 

தமிழை ஆங்கிலத்திற்கு இடையே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். பள்ளி கொடுத்திருந்த கல்விச்சூழல் அவர்களை அப்படி மாற்றியிருந்தது. புதிய மொழியும் அவர்களின் பழக்க வழக்கங்களும் அம்மாவிற்கு அதிக குழப்பத்தை உருவாக்கியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

எல்லாமே சின்னச் சின்ன விசயங்கள் தான். அதுவே ஒவ்வொரு முறையும் வினோதமான பிரச்சனைகளை உருவாக்கியது.  

இன்று உள்ளூரில் வேலைவாய்ப்புகள் குறைந்து மாவட்டங்கள்,. மாநிலங்கள் தாண்டி பல்வேறு நாடுகளில் வாழ வேண்டிய சூழ்நிலையில் உறவுகளுக்குண்டான மரியாதை என்பது தற்போது சில நிமிட தொலைபேசி அழைப்புகள் தான் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்த தொடர்பில் தொடர்பு மொழியே பிரச்சனை எனில் அங்கே அந்த சங்கிலியும் அறுபடத் தொடங்குகின்றது.

வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த மொழித் தொடர்பு பிரச்சனை என்றால் தற்போது இங்கே உள்ள கல்விச்சூழல் என்பது வினோத கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டிருப்பதால் மொழியின் தன்மை மாறிக் கொண்டேயிருக்கின்றது.

குழந்தைகள் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.  சிறுநீர் கழிக்கும் அவசரத்தில் அப்பத்தா ஒன் பாத் ரூம் என்று கத்திக் கொண்டே ஒடிவர இவர் குழப்பத்துடன் என்னவென்று அறியாமல் வாசலுக்கு அருகே படுத்து இருப்பார்.  எந்திரிக்காமலே தலையைத் தூக்கி பார்ப்பார். கவுனை தூக்கிக் கொண்டு அவர்கள் வரும் வேகத்தைப் பார்த்து வேகமாக எந்திரிக்க, வந்த வேகத்தில் ஒருவருடன் ஒருவர் முட்டிக் கொள்ள ரசபாசமாகத் காட்சிகள் மாறிவிடும்.   

பொழுது போகாத சமயத்தில் குழந்தைகளை அழைத்து பேசத் தொடங்குவார். 

அவர் கேட்கும் கேள்விக்கு இவர்களுக்குத் தெரியாது. இவர்கள் சொல்லும் பதில்கள் அவருக்கு புரியாது. ராஜா கதை சொல்லும் போது குறுக்கே ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக குறுக்கு கேள்விகள் எழுப்ப அவருக்கு குழப்பம் வந்துவிடும். அவர் ஒதுங்கி விடுவார். கடைசியாக இவர்கள் நாங்க உங்களுக்கு ரைம்ஸ் சொல்லட்டுமா என்பார்கள்.  பேந்த பேந்த முழித்துக் கொண்டு கேட்பார்.   மொழி புரியாது. சுவராசியம் இருக்காது. 

"ஏதாவது கதை சொல்லுங்க அப்பத்தா" என்றால் இவர் சொல்லும் வட்டார வழக்குத் தமிழ் வார்த்தைகள் அவர்களுக்குப் புரியாமல் அது குறித்து அப்டின்னா? என்று தொடர் கேள்விகளை எழுப்ப அம்மாவுக்கு அலுப்பாகி விடும்.

இரண்டு மாதம் இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டு வந்தவர் ஒரு மாதத்தில் சென்று விட்டார்.  

மனைவி மூலம் விசயங்களை புரிந்து கொண்டு உறவுச்சங்கிலிகள் உடையும் விதங்களைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன்.  அதற்கான பதில் அம்மாவை கொண்டு போய் விட்ட தம்பி வீட்டில் எனக்கு கிடைத்தது.

அம்மாவிடம் தம்பி மகன் வேகமாக வந்து "ஏய் கிழவி கீழே படு" என்றான்.

அம்மா டக்கென்று மல்லாக்க படுக்க நெஞ்சில் ஏறி தொம் தொம்ன்று குதிக்க எனக்கு பாதி உயிர் வாயில் வந்து நின்று விட்டது.  அம்மா சிரித்துக் கொண்டே "இருடா குப்புற படுக்குறேன்" என்று சொல்லிவிட அவன் ஆட்டம் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

கால்வலி, முதுகுவலி, பயணஅலுப்பு மீறி அவரின் நெருக்கமும், பேரனின் வார்த்தைகளும் அவருக்கு புதிய உற்சாகத்தை தந்ததை கவனித்துக் கொண்டே அவர்களின் உரையாடலை கவனித்துக் கொண்டே சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கூட நண்பனுடன் பேசியது அப்போது என் நினைவில் வந்து போனது. 

நண்பனின் அண்ணன் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்று இருக்கின்றார். தொடக்கத்தில் ஊருக்கு வருடத்திற்கொருமுறை வந்து கொண்டிருந்தார். கடந்த சிலவருடங்களாக வருவதில்லை.

அவனை சந்ததித்த போது "அண்ணன் வீட்டுக்கு வருவதில்லையா?" என்று கேட்டேன்.

"அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்" என்றான்.

காரணம் பேரனுக்கும் பேத்திக்கும் தாத்தா பாட்டியுடன் உரையாட தமிழ்பேச தெரியவில்லை. இவர்களுக்கு அவர்கள் பேசும் ஆங்கிலத்தை புரிந்து கொள்ளத் தெரியவில்லை.  

தொடர்புடைய பதிவுகள்




தீபாவளியை குழந்தைகளுக்காக குடும்பத்திற்காக கொண்டாடியவர்களுக்கும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள். (02.11.2013)