Wednesday, April 03, 2013

05.இனக்குழுக்கள்





3000 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் நாகரிகம் உருவாகாமல் குழுவாக வாழ்ந்தது முதல் கல்லணையை கட்டி புதிய தொழில் நுட்பத்தை உலகத்திற்கு உணர்த்திக்காட்டிய கரிகாற்பெருவளத்தான் தொடங்கி, சேர சோழ பாண்டிய மன்னர்கள் இலங்கையில் ஆட்சி புரிந்தது வரைக்கும் நாம் பார்க்க வேண்டும். 

15 ஆம் நூற்றாண்டில் பேர்த்துகீசீயர்கள் வந்த போது ஆண்டு கொண்டுருந்த சங்கிலி மன்னன், பண்டார வன்னியன் போன்ற தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வாழ்ந்த அந்த இலங்கையின் சரித்திர சுவடுகளும் இன்று எங்கேயோ மறைந்து போய்விட்டது. தொடக்கம் முதல் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்த  வரலாற்றுப் பக்கங்கள் கவனமாக பதிவு செய்து உள்ளது. ஆனால் இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் இன்னமும் அங்கு வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழர்கள் சிங்களர்களிடத்தில் உயிர்ப்பிச்சையும் அதிகாரப் பிச்சைக்காகவும் வாழ வேண்டிய சூழ்நிலை.

தொடக்கத்தில் இன்று போல் பல கண்டங்களாக பிரியாத நிலையில் இருந்த போதும், கண்டத்தின் தட்டுக்கள் நகர்ந்த நகர்வில், அன்றைய காலகட்டத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இருந்தது கடந்து செல்லும் தூரம்தான்.  

இப்போது அழைக்கும் பாக், நீரிணையோ, மன்னார் வளைகுடாவோ அல்ல. பத்துலட்சம் ஆண்டுகளில் எட்டு லட்சம் ஆண்டுகள் ஒன்றிணைந்த பகுதியாகத் தான் இலங்கை இந்தியாவுடன் சேர்ந்து இருந்ததை சரித்திர சான்றுகள் மூலம் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். கடந்து செல்லும் அளவிற்கு இருந்த இந்த தீவில் குடியேறியவர்கள், தொடக்கத்தில் வேடர்களாக நாகர்களாக இறுதியாக இனக்குழுக்களாக வாழ்ந்து கொண்டுருந்தார்கள். இலங்கை தீவின் உள்ளே சென்றவர்கள் அத்தனை பேர்களுமே இந்தியாவில் இருந்து குறிப்பாக தென்னிந்தியாவின் வழியாகத்தான் சென்றார்கள் என்பது தொல்லியல் தரும் ஆதரப்பூர்வமான சான்றுகள் ஆகும். 

காலப்போக்கில் படிப்படியாக உருவான இடப்பெயர்ச்சிகளும் குடியேற்றங்களும் இலங்கையில் உருவாக ஆரம்பித்தது.. கண்டத்திட்டு நகர்வில் அப்போது பிரிந்த மாலத்தீவு தூரமாய் போனதால் அங்கு குடியேற்றம் குறைவு.  

இலங்கையின் தொடக்க கால பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித நாகரிகம் இருந்ததாக அறியப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு இடங்களில் இருந்து பெயர்ச்சியாகி உள்ளே வந்து வாழ்ந்து கொண்டுருந்த கண்டு கொள்ள முடியாத வகையில் பல்வேறு இனங்களாக பரவித் திரிந்த கூட்டத்தினர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் போதும், பின்னாளில் கால மாற்றத்தினால் தொழில் தொடர்பு வாணிகம் என்று பின்னால் வளர்ந்து புதிய பண்பாட்டு கலப்பின கலாச்சாரங்கள் தோன்றிய 3000 ஆண்டுகளுக்கு முன் தான் முழுமையான மாற்றங்களும் இனம் கண்டு கொள்ளக்கூடிய குழுக்களும் தோன்றின..

இன்றைய இலங்கை 7000 ஆண்டுகளுக்கு முன்னால் கூட அதுவொரு தனி நாடு அல்ல.  அதுவும் ஏறக்குறைய தமிழ்நாட்டை ஒட்டிய ஒரு நிலப்பகுதி.  இலங்கைக்கும் இன்றைய தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள குட்டித்தீவுகளையும் ஆழம் இல்லாத கடற்பகுதிகளையும் நடந்து தாண்டி சென்றடைந்துவிடாலாமென்றால் உங்களுக்கு எப்படியிருக்கும்.  

யாழ்பாண தீபகற்பத்திற்கு பாக் நீரிணையை கடந்து வருபவர்களுக்கு தலைவாசல் போல இருந்தது.

சங்கத்தமிழ் செய்யுள்களில் மாவிலங்கை தொல்மாவிலங்கை என்று காணக்கிடைக்கும் சொற்களைப் போல தொடக்கத்தில் தென்னிலங்கை என்று தான் தமிழ்நாட்டுடன் சேர்த்து அழைக்கிறார்கள்.

தொடக்க கால இலங்கையின் கடல் சார்ந்த ஒவ்வொரு வணிகம் சார்ந்த தொடர்புகளும், இன்றைய மேற்கு வங்காளம் தொடங்கி கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என்று கடற்கரை ஓட்டிய பகுதிகள், இங்கு வாழ்ந்து கொண்டுருந்த மக்களும்,  தாங்கள் உருவாக்கிய வணிகத் தொடர்பும், உருவாக்கிய வியாபார பரிவர்த்தனைகளும் என்று ஒவ்வொன்றாக கோர்த்த மாலை போல் இலங்கையின் ஒவ்வொரு பகுதியிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கப் பெற்றது தான் தொடக்க கால நாகரிக மாற்றங்களாக இருக்கின்றன..  

மன்னார் வளைகுடா முத்துக்களும், சங்கு,மணி,மீன் மற்றும் கடல் சார்ந்த அத்தனை பொருட்களுமாய் இலங்கையை தொடக்கத்தில் இரத்தினத்தீவு என்றழைக்கும் அளவிற்கு வணிக சிறப்புடன் முன்னேறத் தொடங்கியது. மத்திய, மேற்கு, வடக்கு இலங்கை என்று பிரிக்கப்படாமல் உள்ளே ஒவ்வொரு பகுதியிலும் இருந்த சிறு நகர்ப்பகுதிகளுக்குள் இந்தியாவின் கடற்பகுதியை ஒட்டியவர்கள் வணிகத்தின் வாயிலாக உள்ளே வர காலமாற்றமும்  கலப்பின மாற்றமும் நடக்கத் தொடங்கியது.  அதுவே உள்ளே இருந்தவர்கள் குழுக்களாக மாறி, ஒவ்வொரு குழுக்களும் அந்தந்த பகுதிகளை ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு வளர்ந்தது.

விஞ்ஞான அடிப்படை என்பதோடு நம்முடைய பண்டைய இலக்கிய சான்றுகள் மூலம் இந்த தென்னிலங்கை எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை நாம் உணர முடியும். ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரத்தில் இலங்கையின் வடமேற்கில் உள்ள மாதோட்ட நகரின் திருக்கேதீச்சரத்தை துதித்து பாடியுள்ளார் (தென்னிலங்கையர் குலபதி மலைநலிந்தெடுத்தவன்...................)

ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய இலங்கையில் தமிழர் சிங்களர் என்ற எந்த பிரிவும் இல்லை.  பல்வேறு இனக்குழுக்கள்.  பேசிய மொழி என்ன? வாழ்ந்த வாழ்க்கை என்ன? என்பதெல்லாம் பாலி மொழியில் சொல்லப்படும் ஒரு சில சான்றுகளை வைத்துத்தான் ஓரளவிற்கு நம்மால் ஊகித்துக்கொள்ள முடியும்.  சிங்கள மொழியொன்று அப்போது இல்லை.  மொத்தமாக பாலி மொழியில் எழுதப்பட்ட மொத்த வரலாற்று சம்பவங்களை வைத்து தான் மூன்றாம் நூற்றாண்டின் இறுதி வரைக்கும் ஒரு வரையறைக்குள் கொண்டுவர முடிகிறது. .

பாலி மொழி வரலாற்றில் மிகப் பழைமை வாய்ந்த காப்பியம் தீபவங்ஸ நூல்.  அதனையொற்றி எழுதப்பட்டது மகாவங்ஸ நூல்.  இந்த நூல்களே இன்று வரைக்கும் சிங்களர்களால் போற்றி பாதுகாக்கப்படும் புனித நூலான தீபவம்சம், மகாவம்சமாகும்  

இதன் மூலம் அநுராதபுரம் அரசு பற்றிய தகவல்களும், பௌத்த சங்கம் குறித்த விபரங்களும் பெறமுடிகின்றது.  இனக்குழுவில் இருந்ததாக சொல்லப்படும் தமிழர்கள் குறித்த தகவல்கள் இதில் மிகக் குறைவு.   பின்னாளில் வந்த உயர் குழுவினர் பயன்படுத்திய பிராகிருத மொழியின் மூலம் கல்வெட்டுக்களும், மலைக்குகையில் எழுதப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு தமிழ் பௌத்தர்கள், அவர்களின் தானங்கள் குறித்து ஓரளவுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

கலாச்சார,பண்பாடுகள் தோற்றம் பெறற வணிகத் தொடர்பின் மூலம் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இலங்கையின் தோற்ற வாயிலான நாகத்தீவு, களணி, தம்பப்பண்ணி ஆகிய இடங்களில் குறுநில அரசுகளும் தோற்றம் பெற்றது.  காலப்போக்கில் அநுராதப்புரத்தில் பௌத்த சமண சிவ மதங்களின் எழுச்சியும், அசோக மன்னரது வருகைக்குப்பிறகு பிராகிருத மொழியின் எழுச்சியுமாய் மாற்றம் பெற்றது. 

அதுவே அநுராதபுரத்தை அப்போது ஆண்டு கொண்டுருந்த மன்னர் பௌத்த மதத்தை தழுவியிருந்த ஒரே காரணம் பிராகிருத மொழி ஆளுமையில் இருந்தது.  ஆனால் வணிகத் தொடர்பும் வந்து இறங்கிக்கொண்டுருந்த தமிழர்களின் தமிழ் மொழியும் கோலோச்ச இரு வேறு குழுக்களாக பிரிந்து குறிப்பிட்ட இடங்களில் ஆளுமை செய்யத் தொடங்கினர். இந்த இரு வேறு குழுக்களில் அவ்வப்போது தோன்றிய எழுச்சி என்பது இலங்கைக்கு வெளியேயிருந்து வந்துகொண்டுருந்த வணிகத் தொடர்பான சூழல் காரணமாக முன்னேறுவதும் பின்னேறுவதுமாக நடந்தேறியது.

Tuesday, April 02, 2013

தமிழாசிரியை கடிதம்


முனைவர்  சு உஷாராணி,
தமிழாசிரியை
ஸ்ரீ கே.கே. நாயுடு மேனிலைப்பள்ளி
விமானநிலைய அஞ்சல்
கோயம்புத்தூர் 641 014

வணக்கம்

பொதுவாக எந்த நூலை நான் வாசிப்புக்கு எடுத்துக் கொண்டாலும் 'அட்டை டூ அட்டை' படிப்பது எனது வழக்கம்.

சமர்ப்பணம் படிக்கும் போதே நூலாசிரியர், சாமான்ய முகம் கொண்ட சராசரி மனிதரல்ல என்பது புரிந்தது.

என் சமகால இளைஞர் ஒருவர் நாலு முழ வேஷ்டியுடன் கையில் துணிக்கடை மஞ்சள் பையோடு, பிழைப்புத் தேடி நகரம் வந்தது......பாலகுமாரன் சுஜாதா என எழுத்துக்களில் தம்மைப் புதைத்துக் கொண்டது.......  எங்கே இந்தக் கிட்டங்கி வேலையிலேயே சோம்பேறியாக மாறிக் காணாமல் போய்விடுவோமோ? எனச் சுதாரிக் கொண்டு வேற வேலை தேடி ஓடியது..... எனத் தொடக்கமே விறுவிறுப்பு.

தன் வரலாறு என்பதைக் காட்டிலும், நாவலைப் போலக் கதை சொல்லும் உத்தி, நூலின் போக்கை சுவராசியமாகக் கொண்டு செல்கிற்து.

ஏற்றுமதி நிறுவனத்தில் நுழைந்து, உண்மையான கடும் உழைப்பால் உயர்ந்து, உடன் பணிபுரிபவரின் ஏமாற்று வித்தையில் சிக்கி, பண இழப்புக்காகக் காரணம் சுமத்தப்பட்டு அந்நிறுவனத்தை விட்டு வெளியே நேர்ந்தது... எனச் சொல்லிச் செல்லும் போதே, ஏற்றுமதி நிறுவன வேலைகள், நடைமுறைகள், ஆட்களின் பங்களிப்பு என அழகிய ஆடையை நெய்வது போல செய்திகளை இழையோட விட்டிருக்கும் பாங்கு ரசிக்க வைக்கின்றது.

நூலாக இருக்கும் நிலையிலிருந்து ஆடையாக வடிவமைக்கப்பட்டுப் பெட்டியில் அடுக்கப்படுவது வரை மிகத் தெளிவாக விவரிக்கும் பாங்கு ... துறை சார்ந்தவர்கள் பயன் பெறப் பேருதவியாகவும், வழிகாட்டுதலாகவும் அமையும். ஏற்றுமதி அரசாங்கம் விதிக்கின்ற கட்டுப்பாடுகள், தரகர்களின் வேலை என்பதெல்லாம் துறை சார்ந்த விஷயங்களாகவே இருப்பதால் நுனரஞ்சக ரசிப்புத் தன்மை ஈர்ப்பிலிருந்து விடுபட்டு விலகியே நிற்கின்றன.

தாய்மொழி மீது கொண்ட நேசம், குழந்தை தொழிலாளர் உருவாக்கப்பபடும் சூழலியல் காரணங்கள், கொடுத்த வாக்கைக் காப்பாற்றாத மனிதர்கள் மீது, ஒரு சக மனிதனுக்கு ஏற்படும் தார்மீகக் கோபம், அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வை விவரித்தல் என நூலின் பாதை பல தளங்களின் பயணிக்கிறது.

ஒரு பக்கம் அரசின் கொள்கைகள்... மறுபக்கம் சாயக்கழிவு நீர் பிரச்சனைகள் என இரண்டுக்குமிடையே இன்றைக்குத் தடுமாறிக் கொண்டிருக்கும் திருப்பூரின் நிலையை இந்நூல் அப்பட்டமாக வெளிச்சம் போடுக் காட்டுகின்றது.

அரசின் பொருளாதார ஒப்பந்தங்களால், நம் நாட்டு உற்பத்திக்கான மூலப் பொருள் பற்றாக்குறை ஏற்படுதல், உற்பத்தித் திறன்  குறைவு, வெளிநாட்டு ஏற்றுமதி என இவர் விவரித்துள்ள செய்திகளைப் படிக்கும் போது ஒரு சராசரி இந்தியக் குடிமகனாய் நமக்கும் கூடக் கொஞ்சம் கோபமும் இயலாமை குறித்து கழிவிரக்கமும் தோன்றுகிறது.

விரும்பும் துணியின் வடிவத்தை வடிவமைத்துத் தரும் நிட்டிங் இயந்திர அமைப்பை இவ்வளவு அருமையாக விபரிக்க முடியுமா? என்ன!

வலையை விரித்தது யாராடா? தலைப்பில் பகவான கண் விழத்துப் பார்து விட்டு மறுபடியும் உறங்கத் தொடங்கினார்.   பகவான் சோம்பலுடன் எழுந்து உட்கார்ந்தார் என் இடைத் தொடர்களை அமைத்திருப்து நகைச்சுவையும் நையாண்டியும் கலந்து மாறுபட்ட உத்தி.

அமெரிக்கர்களின் வெளிப்படையான அணுகுமுறைச் சொல்லி எச்சரித்து வாழ்வில் உயர வழியும் காட்டப்பட்டுள்ளத.

உரம் போடாமல் வளர்த்த பஞ்சிலிருந்து உருவாக்கிய ஆடைகள் குறித்த இன்றைய நிலையைச் சொல்லும் போது இயற்கை வேளாண்மையை விவரிப்பது இவரின் இன்னொரு விவசாயி முகம் தெரிகிறது.

"அடித்தட்டு வர்க்கமோ நடுத்தர வர்க்கமோ எவராயிருந்தாலும் தங்களை நம்பி வாழ்பவர்களுக்காகவே தங்களை வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டி கட்டாயத்தில் இருக்கிறார்கள்"

"அளவான வருமானம் வாழ்க்கை முழுக்க அமையப் பெற்ற அத்தனை பேர்களும் ஆயுள் முழுக்க ஒருவிதம ஒரு விதமான அடிமை"

நச்சென்ற வரிகள்

தொழில் நிலையில் பலமுறை ஏமாற்றங்களை எதிர்கண்ட போதும், நம்பிக்கையும் உழைப்பையும் மட்டுமே துணையாகக் கொண்டு முன்னேறிய ஒரு இளைஞனின் கதை

திருப்பூரின் முதன்மைத் தொழிலை அலசி நன்கு ஆராய்கின்ற நூல்.

வாழ்வில் உயர, தொழிலில் உயர, இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைகளை விவரிக்கும் சுய முன்னேற்ற நூல்

தொழில் முனைவோர் கடைபிடிக்க வேண்டிய சூட்சுமங்களைச் சொல்லிச் செல்கின்ற நூல்

டாலர் நகரத்தை எப்படி வேண்டுமானலம் இப்படி பெயரிட்டு அழைக்கலாம்.  

நான் இதுவரையிலும் படித்த புத்தகங்களில் இது போன்ற வடிவமைப்பில், வாசிப்பவனை மனதில் கொண்டு அழகான தாளில் தெளிவான பெரிய எழுத்துக்களில் கொண்டு வந்த 4 தமிழ் மீடியா குழுமத்திற்கு தமிழ் புத்தக உலகமும், புத்தக பிரியர்களும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றார்கள். இது போல இன்னும் பல புத்தகங்களை இது போன்ற நேர்த்தியுடன் கொண்டு என் வாழ்த்துகள்..

ஜோதிஜி உங்களுக்கு நடைமுறை எதார்த்த வாழ்க்கையை வசமாக்கத் தெரிந்ததோடு, வார்த்தைகளையும் வசப்படும் வித்தையும் வாய்த்திருக்கிறது.  

என் வாழ்த்துதுக்ள்.

அன்புடன்
சு உஷாராணி
21.3.2013

டாலர் நகரம் புத்தகம் தற்போது கோவையில் விஜயா பதிப்பகத்தில் கிடைக்கின்றது.

தொடர்புடைய பதிவுகள்

புத்தகம் வாங்க



Monday, April 01, 2013

அடித்த அடியும் மருண்ட விழியும்

சென்ற மார்ச் மாதத்தில் திருப்பூரில் உள்ள தாய்த்தமிழ்ப் பள்ளி மாணவ மாணவியரின் ஆண்டு விழாவை பார்த்த போது என் பள்ளிப் பருவத்து ஆண்டு விழா என் நினைவுக்கு வந்தது.  நான் தொடக்கப்பள்ளி படித்த சரஸ்வதி வித்தியாசாலையில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைக்கும் நான் பங்கெடுத்த பல்வேறு விழா நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக மனத்திரையில் வந்து போனது. பள்ளி வாழ்க்கையில் முதல் எட்டு வருடங்கள் எனக்கு கிடைத்த சுதந்திரம் மற்றும் அங்கீகாரம் என்பது வேறெங்கும் கிடைத்தது இல்லை.  விளையாட்டு, விருப்பங்கள் இத்துடன் படிப்பு கலந்த வாழ்க்கை.

ஒன்பதாம் வகுப்புக்காக அருகே இருந்த பெரிய மேல்நிலைப்பள்ளிக்கு மாறினோம். கடலில் கரைத்த பெருங்காயம் போல வாழ்க்கை மாறிப் போனது. எந்த விழாவிலும் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு சூழ்நிலை மாறியிருந்தது.  மீண்டும் கல்லூரி சென்ற போது தான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அமைந்தது.  

தற்போது வருடந்தோறும் எங்கள் தேவியர்களின் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சென்று கொண்டு இருக்கின்றேன்.  வீட்டில் ஒருவர் நடனத்தில் ஆர்வத்தோடு பங்கெடுப்பதால் அவர் நிகழ்ச்சியை காண வருடந்தோறும் தகப்பன் என்ற கடமைக்காகவும், அவரின் மிரட்டலுக்கும் பயந்து கொண்டு அங்கே சென்று முதல் வரிசையில் அமர்ந்து கொள்வதுண்டு. ஏதோவொரு வருடம் சில ஆச்சரியங்கள் எனக்கு கிடைக்கும். ஆனால் தற்போது கார்ப்பரேட் தனமாக குழந்தைகள் படிக்கும் பள்ளி மாறிக் கொண்டு வருவதால் வெறும் வேடிக்கையாளனாக பார்த்து விட்டு வந்து விடுவதுண்டு.

முன்பு வருடந்தோறும் பெற்றோர்கள் கூட்டம் ஒன்றை நடத்துவார்கள். கடந்த மூன்று வருடங்களாக அதையும நிறுத்தி விட்டார்கள். 

என் சிந்தனைகள் நோக்கங்கள் எதையும் குழந்தைகளிடம் காட்டிக் கொள்வதில்லை. குறிப்பாக அவர்களின் சிந்தனைகளில் எதையும் வலிய திணிப்பதும் இல்லை. அவர்களுடன் செலவழிக்கும் நேரத்தையும் விட்டுக் கொடுப்பதில்லை.அவர்களின் புதிய சிந்தனைகள் அவர்களை வழிநடத்தட்டும்  என்று நம்பிக்கையோடு இருக்கின்றேன்.

அவர்களின் அன்றாட நிகழ்வில் உருவாகும் சிறிய தவறுகளை சுட்டிக் காட்டுவதோடு சரி.அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தவறுவதும் இல்லை.

மகள் ஆடும் நடனத்திற்கு அந்த ஒரு நாள் கூத்துக்காக உடைகள் மற்றும் அலங்காரத்திற்காக என்கிற வகையில் ரூபாய் 500 ல் தொடங்கியது. தற்போது ரூபாய் 1300 வரைக்கும் வந்து விட்டது.  காரணம் பேஷன் என்ற வார்த்தை ஒவ்வொரு பெற்றோர்களையும் படாய் படுத்திக் கொண்டிருக்கிறது. முக்கால் நிர்வாணத்தை ரசிக்கும் மனோநிலையில் பெரும்பாலன பெற்றோர்கள் வந்து விட்டதால் கண் இருந்தும் குருடனாகத் தான் இந்த வாழ்க்கை வாழ வேண்டும் போல் உள்ளது.

தமிழ் கலாச்சாரத்திற்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லாத  வாழ்க்கை வாழவே இங்கு பெரும்பாலான மக்கள் விரும்புகின்றார்கள். ஆண்டு விழாவில் குழந்தைகள் ஆடும் ஆடலுக்கு தேந்தெடுக்கப்படும் உடைகள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றது. அந்த பெருங்கொடுமையை மகளின் அதீத ஆசைக்காகவே வருடந்தோறும் தியாகம் செய்து கொண்டு வருகின்றேன்.

இந்த வருடம் என் கோபம் அளவுக்கு அதிகமாக போக வகுப்பாசிரியரிடம் குமுறித் தீர்த்த போது அவர் சொன்ன வாசகம்.  

"ஒவ்வொரு முறையும் நீங்கள் மட்டும் தான் தைரியமாக பல விசயங்களை நிர்வாகத்திடம் சொல்லி சின்னச் சின்ன மாறுதல்களை உருவாக்க காரணமாக இருக்குறீங்க. வேறு எந்த பெற்றோரும் இதை கண்டு கொள்வதே இல்லை" என்று வருத்தத்துடன் சொன்னார்.

என்னுடைய கோபம் என்னவென்றால் அந்த ஒரு நாள் போடும் உடை என்பது வேறு எந்த நிலையிலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நாகரிகம் என்ற பெயரில் உள்ளது. இதற்காக வெளி இடங்களில் (கோரியாகிராஃபர்) இருந்து நபர்களை அழைத்து வந்து கண்றாவி உடைகளை அணிவித்து ஆடச் செய்வது தான் உச்சபட்ச கோபத்தை உருவாக்கி விடுகின்றது. 

இந்த முறை பள்ளி முதல்வரிடம் முறையிட பல மாறுதல்கள் உருவானது.  

பள்ளிக்கருகே வீடு என்ற சூழ்நிலையில் பலவிதமான விருப்பமற்ற செயல்பாடுகளுக்கு நாமும் உடந்தையாக இருக்க வேண்டிய சூழ்நிலை தான் மனதிற்கு ஒருவிதமான ஆற்றாமையை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.

ஆங்கில வழிக் கல்வி என்பது என்னைப் பொறுத்தவரையிலும் ஒரு விதமான தண்டனை தான்.

காரணம் நான் சந்திக்கும் என்பது சதவிகித பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிப் பாடங்களை சொல்லிக் கொடுக்க நேரம் இருப்பதில்லை. இருந்தாலும் அவர்கள் படிக்கும் பாடங்கள் புரிந்து கொள்ளும் அறிவும் இருப்பதில்லை.  முடிந்தால் டியூஷன் என்ற பெயரில் வேறொரு இடத்திற்கு துரத்தும் நோக்கம் தான் பெரும்பாலான வீடுகளில் நடைமுறையாக இருக்கின்றது.

சோர்ந்து போய் வரும் குழந்தைகள் மறுபடியும் சோர்வோடு செல்கின்றார்கள்.

விளையாட முடியாத சோகம், விரும்பிய காரியங்களை செய்ய முடியாத தினசரி எந்திர வாழ்க்கை என்பது ஒட்டு மொத்தமாக மனதளவில் எப்போதும் ஒரு கோபத்தோடு வாழ வேண்டிய வாழ்க்கையை அவர்களுக்கு அறிமுகப் படுத்திக் கொண்டே இருக்க பிடிவாத குணம் உள்ளவர்களாக மாறத் தொடங்குகின்றார்கள்.

பகிர்தல் இல்லாத போது பாவங்களை நோக்கியே நகர்கின்றார்கள்.

ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் ஆங்கிலக் கல்வியை பல்வேறு காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு விரும்புகின்றார்கள். குறிப்பாக ஆங்கிலம் தெரிந்து விட்டால் அகில உலகமும் நம் வசமாகிவிடும் என்ற எண்ணம் எப்படியோ இங்கே விதைக்கப்பட்டு விட்டது?

ஆனால் ஆங்கில கல்விக்கூடங்களில் ஆசிரியர்கள் பெறும் 3500 ரூபாய் சம்பளத்திற்கு என்ன விதமான அறிவை புகட்டப்படும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகின்றேன்.

முதுகு வலிக்க சுமந்து செல்லும் புத்தக பைகள் தான் மிச்சம்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள அதிமுக கட்சியைச் சேர்ந்த சிவசாமி கூட சர்வதேச தரம் என்ற பெயரில் சென்ற வருடம் ஒரு பள்ளியைத் தொடங்கினார்.  தரம் என்பது அதளபாதாளத்தில் இருப்பதாக பெற்றோர்கள் சொல்ல இப்போது விழிபிதுங்கிப் போய் இருக்கிறார்கள்.

இந்த வருடம் திருப்பூரின் சென்னை சில்க்ஸ் நிறுவனமும் தனது கல்வி நிறுவனத்தை தொடங்க இருக்கின்றார்கள். ஆலமரம் போல பல துறைகளில் விழுது பரப்பிய இந்த நிறுவனம் இப்போது கல்வித்துறையில் காலடி வைத்துள்ளார்கள். நிதானமாக வளரும் போக்கை கொண்டவர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள் என்று நம்புகின்றேன்.

இங்கு ஏற்றுமதி தொழிலில் வீழ்ந்த, வீழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை நிறுவனங்களும் உடனடியாக தேர்ந்தெடுக்கும் துறையென்பது இந்த கல்வித்துறையாக இருக்கின்றது.  குறுகிய காலத்தில் நல்ல அறுவடையை எடுத்து விடுகின்றார்கள். இங்குள்ள மற்றொரு பள்ளியில் ஆண்டு விழா என்ற பெயரில் ஒவ்வொரு மாணவரும் ரூபாய் ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கட்டாய வசூல் செய்து சாலமன் பாப்பையா வந்து அறிவுரை சொல்லப் போகின்றாராம்.  3000 குழந்தைகளுக்கு மேல் படிக்கும் பள்ளியில் ஒருவருக்கு 1000 ரூபாய் என்றால் கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளவும்.

ஆனால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. மன ரீதியாக பெற்றோர்களுக்கும் ஆங்கிலக் கல்வி  என்பது ஒரு தண்டனை போலவே இருக்கின்றது.  எவரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை. . 

இங்குள்ள அரசுப்பள்ளியின் கொடுமை வேறு விதமாக இருக்கின்றது.

ஒரு வகுப்பில் 50 முதல் 60 குழந்தைகள் வரைக்கும் அடைத்து வைத்து பாடம் போதிக்கும் அந்த ஆசிரியை நிலமையை நினைத்துப் பார்த்த போது அவருக்கு ஆறுதல் சொல்வதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை. 

சில வருடங்களாகத்தான் இங்குள்ள குறிப்பிட்ட அரசு பள்ளிக்கு வசதியான கட்டிடங்கள் உருவாகியுள்ளது. இங்குள்ள சில முதலாளிகளின் கருணைப் பார்வையினால் நல்ல வசதிகள்  உருவாகியுள்ளது. .

தற்போது திருப்பூர் மாவட்டம் என்ற பெரும் பெயரைப் பெற்றுள்ளது. ஆனால் இங்குள்ள மாவட்ட கல்வித்துறைக்கென இருக்கும் மாவட்ட கல்வி அதிகாரி வரைக்கும் பேசிப் பார்த்த போது அவர்களின் பிரச்சனைகளை அழ மாட்டாத குறையாக சொல்லி செல்பவரிடம் ஆறுதல் கேட்கும் நிலையில்  தான் அவர்கள் இருக்கின்றார்கள்.  

மாவட்ட கல்வி அதிகாரிக்கு ஒரு பள்ளியில் உள்ள வகுப்பறை ஒதுக்கி அவருக்கு அலுவலகம் அமைத்துக் கொடுத்து இருப்பதை எங்கேயாவது கேட்டு இருக்கின்றீர்களா?

குடியை வளர்க்க உதவும் அரசாங்கத்தில் குடிமக்களின் கல்வி சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி  தெரியப் போகின்றதா என்ன? காமராஜர் என்றொரு மனிதர் இங்கே தோன்றியிருக்காத பட்சத்தில் இன்று முக்கால் வாசி தமிழர்கள் முழு முட்டாளாகத்தான் வாழந்திருக்க முடியும்.

குடும்பத்தோடு திரு தங்கராசு அவர்கள் நடத்தும் திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சென்ற போது தேவியர்களை அங்குள்ள குழந்தைகளுடன், அவர்களின் செயல்பாடுகளை கவனிக்கச் சொன்னேன்.

வீட்டுக்கு வந்த போது மூவரும் சொன்ன ஒரு வாசகம்.

"நம்ம வீட்டுக்கு பக்கத்தில் இந்த பள்ளிக்கூடம் இருந்தால் இங்கேயே படிக்கலாம்". என்றார்கள்  

காரணம் தற்போது குழந்தைகள் படிக்கும் பள்ளியை விட்டு கொஞ்சம் தூரத்தில் இருந்த காரணத்தால் முதல் மூன்று வருடங்கள் நான் பட்ட அவஸ்த்தைகள் எழுத்தில் எழுத முடியாத அளவிற்கு மிகவும் சிரமப்பட்டேன்.   

டாலர் நகரம் புத்தகத்தில் வரும் ஒரு வாக்கியம்.

நடுத்தர வர்க்கமாக வாழும் போது ஒவ்வொரு சுமையையும் சுகமாகத்தான் கருதிக் கொள்ள வேண்டும்.

எனக்குப் பிடித்த பறை இசை மற்றும் எங்கள் தேவியர்கள் ரசித்த நடனக்காட்சி இது.  







தொடர்புடைய பதிவுகள்

உங்களுக்கு மனமிருந்தால் "மார்க்கம்" உண்டு