Sunday, April 17, 2011

மன்மதன் இல்ல மன்மதர் கடாபி

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பல்வேறு சமஸ்தானங்கள் மூலம் ஆண்டு வந்த மன்னர்களின் கதைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

இப்போது விக்கிலீக்ஸ் தந்து கொண்டிருக்கும் பரபரப்புகளைப் போலவே அப்போதும் ஒவ்வொரு மன்னர் ஆண்ட பகுதிகளிலும் சார்பாளராக செயல்பட்டுக் கொண்டிருந்த வெள்ளையர்களின் முக்கிய பணியே அந்த குறிப்பிட்ட மன்னர்களின் செயல்பாடுகள், அவர்களின் அந்தரங்க விசயங்கள், பலம் மற்றும் பலவீனமான செயல்பாடுகளை இங்கிலாந்துக்கு கடத்திக் கொண்டிருந்தார்கள். 

பெரும்பாலும் பெண் பித்தகர்களாக இருந்தவர்கள் தான் இந்த மன்னர்கள். ஒவ்வொரு மன்னர்களின் ஆட்டத்தை இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட வல்லபாய் படேல் மூலம் மென்னி முறிக்கப்பட்டு ஒரே நாடு இந்தியா என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்த போது சிறுகுழந்தைகள் போல் மூச்சா போய் அழுத மன்னர்களும் உண்டு.  

அங்கங்கே ஆண்டு கொண்டிருந்த மன்னர்களுடன் இருந்த ஆங்கிலேய பிரதிநிதிகள் தாங்கள் சேகரித்து வைத்திருந்த கோப்புகள் அத்தனையும் சர்வஜாக்கிரதையாக பல டன் காகிதங்களையும் தீயிட்டு அழித்து முடித்து தங்கள் விசுவாசத்தை மன்னர்களுக்கு காட்டினார்கள். 

ஒரு சின்ன உதாரணத்திற்கு கூச்சப்படமா இதை சொடுக்கி படித்துப் பாருங்க.

ஒரு வேளை அன்று இணையம் இருந்திருந்தால் நாம் செக்ஸ் கதைகளை படிக்க அலைய வேண்டியதில்லை.  ஆனால் சமீப காலமாக உலகத்தில் உள்ள பல தலைவர்களின் செயல்பாடுகளும் இப்படித்தான் இருக்கிறது. இந்தியாவில் இதுவொரு பிரச்சனையே இல்லை. 

இதுவும் ஒரு கௌரவமாகிப் போய்விட்டது.  

அமெரிக்கா ஏறக்குறைய 270 தூதரங்கள் மற்றும் அதனைச் சார்ந்த அலுவலகங்கள் மூலமாக அந்தந்த நாடுகளில் நடக்கும் நல்லது கெட்டதுகளை கர்மசிரத்தையாக வாஷிங்டனுக்கு அனுப்பிக் கொண்டே தான் இருக்கிறது. மற்ற நாடுகளுக்கு நம் இந்தியாவிற்கும் ஒரு வித்யாசம் உண்டு.  மற்ற நாடுகளில் அமெரிக்கர்கள் விசயங்களை கறக்க சற்று மெனக்கெட வேண்டும்.  இங்கு அந்த பிரச்சனையேயில்லை.  ஒரு குவார்ட்டர் போதும். உளற ஆரம்பித்து விடுவார்கள்.  புத்திசாலி ப. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கூட வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது தவறில்லை என்று சென்னையில் உள்ள அமெரிக்கா தூதரக மக்களிடம் உளறிக் கொட்டியதையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி உள்ளது. 

இந்த விக்கிலீக்ஸ் சேகரித்துள்ள 2 50 000 ஆவணங்களில் 11 000 ஆவணங்கள் மிக மிக ரகஸ்யமானது.  இதிலும் 9 000 ஆவணங்கள் ஒவ்வொரு நாடுகளின் டவுசர்களை கழட்டி அம்மணமாக்கும் வல்லமை உடையதாம். புண்ணியவான் அசாஞ்சே எப்போது கழட்ட போகிறாரோ?

மது பிரியராக இருப்பவர்களுக்குக்கூட சமூகம் பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவன் ஒரு குடிகாரப்பய என்று நகர்ந்து போய்விடுகிறார்கள். அதற்கு மேல் நடிகர் வடிவேல் போல அல்லக்கை சிக்கினால் சற்று கூடுதலாக கும்மி தட்ட வைக்கலாம்.  ஆனால் மாது தொடர்பு என்றால் அதுவும் தலைவர்களுக்கு இந்த தொடர்பு என்றால் கேட்கவே வேண்டாம்.  பத்திரிக்கைகளுக்கு செம கொண்டாட்டம்.  பத்தி பத்தியாக பந்தி வைத்து விட மாட்டார்களா?  

பிரான்ஸ் நாட்டு அதிபர் நிக்கோலஸ் சர்கோசியை ‘ஆடையில்லாத பேரரசர்’ என்று அமெரிக்கா அதிகார வட்டத்திற்குள் அழைக்கப்படுவாராம்..

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி இவர் ஒரு ராக்கோழி. இரவு விருந்தும் அப்போது இவரின் உழைப்பும் மகத்தானது. இது போன்ற விசயங்களில் ஓய்வில்லாமல் உழைக்கக்கூடியவர். 

ஆனால் இவர்களை விட சமீப காலமாக செய்திகளில் அடிக்கடி தென்பட்டுக் கொண்டிருப்பவர் லிபியா அதிபர் கடாபி. 

இவரின் முழு பெயர் முவாம்மர் அல் கடாபி. 

எனது தனிப்பட்ட தொழில் வாழ்க்கையில் இந்த லிபியா என்ற நாடு மறக்க முடியாத நாடு. அதிபர் கடாபி ஏறக்குறைய 41 வருடங்களாக லிபியாவை தன் இரும்பு பிடிக்குள் வைத்திருப்பவர்.  இதையே இவர் அன்பு பிடி என்கிறார்.  ஆனால் இவரின் அன்பு பிடியில் இருக்கும் ஏராளமான பெண்கள் குறித்து நிறைய சுவராஸ்ய தகவல்கள் உண்டு. முழுமையாக எழுதினால் அது 18+ ஆகிவிடும். கையில் போட்டு இருக்கும் கையுறை மூலமே மற்றவர்களை தொடுவார். கிருமிகள் தாக்கி விடும் என்ற அச்சமே முக்கிய காரணமாம். தினந்தோறும் மூன்று உடுப்புகளுக்கு மேல் மாற்றக்கூடியவர். ஐ.நா சபையில் இவர் உளறிக் கொட்டியதைப் போல வேறு எந்த தலைவரும் உளறியதில்லை.  ஒரே விசயத்தில் மட்டும் கவனம் இருந்தால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாது போல,

இவரைப் பார்த்தாலே இவர் வில்லனா காமெடியானா என்று தெரியாமல் ஒதுங்குபவர்கள் தான் அதிகம். மொத்தத்தில் காமநெடி மனிதர். 

அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்துக்கு இதெல்லாம் முக்கியமா என்ன?  பெட்ரோல் இருக்கா?  வண்டிய கட்டு.  கூட்டுப் படையை கிளப்பு. லிபியா மக்கள் கடாபி ஆட்சியில் கஷ்டப்படுகிறார்கள் என்று உரிமையை கிளப்பு.  அது தான் இப்போது நடந்து கொண்டு இருக்கு. 

சொல்ல முடியாது.  இவரும் சதாம் உசேன் மாதிரி எந்த பொந்துக்குள் இருந்து வெளியே வரப்போறாரோ? அப்போது தனியா வருவாரா? இல்லை அப்போதும் பக்கத்தில் பெண்கள் இருப்பார்களா?

இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தா இல்லாமல் பெண்களை அதிரடி படைவீரர்களாகவும், தனக்கு அந்தரங்க காரியதரிசியாக வைத்துள்ள கடாபி என்ற 'கடப்பாறை' மனிதரின் படங்கள் உங்கள் பார்வைக்கு.   


கூட்டுப்படை தாக்குறாங்களா?  அட போங்கப்பா.... எப்பவும் நான் தான் ராஜா



நீங்க இத்தாலி.  நான் லிபியா.  ஆனா நம்ம ரெண்டு பேரையும் இணைத்தது?


என் உருவத்தைத்தான் மந்திரித்து கழுத்துல டாலரா போட்டுருக்காங்க. இதை விட ஒரு அதிபர் நாட்டு மக்களுக்கு பெரிதாக வேறென்ன செய்து விட முடியும்?




வேற வழியில்லாம இந்த மாதிரி இடங்களில் இந்த உடைகளையும் போட்டுத் தொலைக்க வேண்டியிருக்கு?

ராத்திரி பகல்ன்னு நான் சௌக்கியமாத்தான் இருக்கேன். எனகென்ன கவலை மக்களே?  நீங்க எல்லாரும் சௌக்கியம் தானே?



பாருங்க.... எந்த நாட்ல என்னை மாதிரி பெண்களுக்கு இத்தனை உரிமைங்க கொடுத்து இருக்காங்க?  சொல்லுங்க பார்க்கலாம்?



ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ பராக்கிரம தல பராக் பராக்...

                      சரி சரி அந்தஅனுபவத்தை வெளியே சொல்லிடாதே. 

Tuesday, April 12, 2011

நான் ஓட்டுப் போட்டா நாடு திருந்திடுமா?

ஏப்ரல் 13 2011 

நாளைய பொழுது இந்நேரம் பலரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துருக்கும்.  ஆனால் அத்தனையும் ஒரு சின்ன பொட்டிக்குள் இருக்கும். பாவம் இந்த மக்கள் சேகவர்கள். கடுமையான உழைப்பு.  அயராத பணி. குளிர்சாதன வண்டிக்குள் இருந்து கொண்டு சுற்றி வந்து உழைத்துக் களைத்த மக்கள் சேவகர்கள் சற்று பயத்தோடு ஓய்வு எடுக்கக்கூடும். 


தேர்தல் ஆணையத்தின் புண்ணியத்தால் அதிக அளவு வெளியே கொண்டுவர முடியாத பணமூட்டைகள் எங்கேயோ பதுங்கி பலரின் பாவத்திற்கும் ஆளாகியிருக்கும்.  மேலிடத்தில் இருந்து செலவுக்கென்று ஒதுக்கிய பணத்தைப் பெற்று தேர்தல் ஆணைய கெடுபிடிகளின் காரணமாக எங்களால் வெளியே கொண்டுவரமுடியவில்லை என்று சொல்பவர்கள் தேர்தல் முடிந்ததும் திடீர் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள். 

ஆத்துல போற தண்ணிய அய்யா கொஞ்சம் அம்மா கொஞ்சம் அள்ளிக் குடித்ததைப் போல தொண்டர்களும், நம்பியவர்களும் பிழைத்துப் போகட்டுமே?

ஆனால் நாளை அரசு மற்றும் தனியார் (எத்தனை நிறுவனங்கள் கொடுப்பார்களோ?)ஊழியர்களுக்கு சம்பளத்தோடு கூடிய விடுமுறை தினம்.  இந்த விடுமுறை தினத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே திட்டமிட்டப்பட்ட சுற்றுலா கொண்டாட்டங்கள், குறுந்தகடுகள் வாங்கி உல்லாசமாக இருக்கப்போகும் நண்பர்களுக்கும், சரக்கு தரமாட்டார்கள் என்ற இருப்பில் வைத்திருக்க சில தினங்களுக்கு முன்பே வீட்டில் வாங்கி வைத்துள்ள குடிமகன்களுக்கும் நல்வாழ்த்துகள். 

நான் இப்போதுள்ள அரசியல் களத்தை கவனித்தவரைக்கும் இந்த முறை கலைஞர் சற்று தடுமாற்றமாக இருப்பது போல் தெரிகின்றது.  தேர்தல் ஆணையத்தை (எதிர்கட்சியை ஆளுங்கட்சியாக மாற்ற முயற்சிக்கிறார்கள்), தமிழ்நாட்டு காவல்துறை (நான் இவர்களுக்கு எத்தனையோ நல்லது செய்து இருக்கின்றேன். மறந்து விட்டார்கள்) குறித்து புலம்பித் தள்ளிவிட்டார். இதற்கு மேலாக உங்கள் வீட்டு வேலைக்காரனாக செயல்பட விரும்புகின்றேன் என்று பலபடிகள் இறங்கி வந்துள்ளார்.  ஏன் இத்தனை நலத்திட்டங்கள் செய்தவர்கள் இந்த அளவுக்கு புலம்ப வேண்டுமா?  ஒரு பக்கம் வரிப்புலியே வா?  மறுபக்கம் இனமான உணர்வு மிக்க தமிழா?  கலைஞர் மேல் எத்தனை விமர்சனம் வைத்தாலும் நேற்று வந்த விஜயகாந்திற்கு தொண்டை கட்டி விட்டதாம்.  பாருங்கள்......... இவருக்கு கணீர் கணீர் தான்...............

ஆசையோ? அக்கறையோ? பயமோ?  மொத்தில் பாராட்டியே ஆக வேண்டிய அபாரமான உழைப்பாளி.  நடிகர் சிவகுமாருக்கு மார்க்கண்டேயன் என்று பட்டம் கொடுத்ததைப் போலவே இவருக்குக்கூட அந்த பட்டத்தை இரவலாக கொடுக்கலாம்.

என்னுடைய பார்வையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருகின்றதோ இல்லையோ கலைஞர் போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் திமுகவின் மற்ற வேட்பாளர்களை விட கலைஞர் மிக அதிக வித்யாசத்தில் ஜெயிக்க வேண்டும். எப்போதும் உள்ளூரில் மாடு விலைபோகாது என்பார்கள். அவ்வாறு கலைஞர் பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் ஜெயித்தால் மட்டுமே திமுக வெற்றி பெற்றதாக கருதமுடியும்.  காரணம் நான் தான் மூத்த தலைவர். பெரியார் வழியில் வந்தவன், அண்ணா பாடத்தை கற்றவன். இது எனக்கு கடைசி தேர்தல் என்று சொல்லும் கலைஞருக்கு அவர் சொந்த மண் மக்கள் எவ்விதம் மரியாதை செய்யப் போகிறார்கள்?

இத்தனை ஆண்டு காலம் பொதுவாழ்க்கை கண்டவன், தமிழ்நாட்டு மக்களுக்காகவே என்னை அர்ப்பணித்தவன் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லிக் கொண்டு வரும் கலைஞருக்கு கிடைக்கும் வாக்கு வித்யாசத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். 


காரணம் இந்த முறை நடைபெறப்போகும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த அனுதாப அலையும் இல்லை. அதற்கு மேல் அழகிரி மேல் தேர்தல் ஆணையம் வைத்துள்ள 'சிறப்புக் கண்' மொத்த அரசியல் நோக்கர்களாலும் உற்று நோக்கப்படுவதால் மொத்த உடன் பிறப்புகளுக்கும் வால் ஆப்புக்குள் சிக்கிக் கொண்ட வேதனை. 

தேர்தல் ஆணைய கெடுபிடிதனத்தால் உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் சொன்ன மாதிரி இந்த முறை தமிழ்நாட்டு அரசியல் களமென்பது எழவு வீடு போலவே உற்சாசமின்றி படு ஆச்சரியமாக இருக்கிறது.  

இதற்கெல்லாம் காரணம் புண்ணியவான் தேர்தல் ஆணைய கதாநாயகன் குரோஷியா அல்லது அவருக்கு பின்னால் இருக்கும் சக்தியா?  

மொத்தத்தில் ஆளுங்கட்சிக்கு ஏராளமான இடைஞ்சல் என்பது மட்டும் உண்மை.  தமிழ்நாட்டு காவல்துறை டம்மியாக இருக்க அந்தந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் தட்டிய கும்மிக்கு நடனமாட வேண்டிய சூழ்நிலை.  ஆனால் கலைஞர் பல களம் கண்ட வேங்கை.  நாளைய தினத்தின் ஓட்டுப் பதிவு முடியப் போகும் கடைசி ஒரு மணி நேரத்தில் 'விஞ்ஞான ரீதியான மாறுதல்' உருவானால் ஆச்சரியப்படாதீர்கள். 

காரணம் சென்ற பாராளுமன்ற தேர்தலில் நடந்த கடைசி ஒரு மணி நேர கூத்துக்களை அத்தனை உபிகளும் நன்கு அறிந்து இருப்பார்கள்.  இந்த முறை அந்த வாய்ப்பு உண்டா தெரியவில்லை?


இந்த முறை தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கெடுபிடிகள் செய்வதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆலோசனை நடத்தியவர்கள் கொடுத்தபடி நடந்து கொண்டிருக்கும் தேர்தல் ஆணைய கெடுபிடிகள் மொத்தத்தில் அரசியல் கட்சிகளுக்கு கெட்ட விசயமாக இருந்தாலும் திருவாளர் பொதுஜனத்திறகு மகா நிம்மதி. 

இது இன்னும் கூட சற்று நீட்சி அடைந்தால் நன்றாகயிருக்கும். கற்பனை காண சொல்லித்தந்த முன்னாள் ஜனாதிபதி அய்யா அப்துல்கலாமுக்கு நன்றி.

1.தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் ஆளும் அரசாங்கம் அந்த திட்டங்களையும் வெளியிடக்கூடாது என்பதைப் போலவே குறைந்த பட்சம் தேர்தல் நடப்பதற்கு ஒரு மாதம் முன்பாக முதல் அமைச்சர் முதல் அமைச்சர்களின் அதிகாரங்களை ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து காபந்து அரசாங்கம் போல் தேர்தல் ஆணையமே எடுத்துக் கொண்டு விட்டால் பாதி அதிகார துஷ்பிரயோகம் காணாமல் போய்விடும்.

2. அதிகாரத்தில் இருந்தவர்கள் மீண்டும் போட்டியிடும் போது அவர்கள் சமர்பிக்கும் சொத்து ரீதியான அத்தனை சான்றிதழ்களையும், அவர்களின் பினாமி சொத்துக்களை கட்சி பாகுபாடு இல்லாமல் கண்ணில் விளக்கெண்ய் ஊற்றிக் கொண்டு வெளியே கொண்டு வந்தாலே பாதி பேருக்கு டர் ஆகி விடும்.  பின்னங்கால் பிடறி தெறிக்க கொல்லைபுற வாசல் வழியாக நான் போட்டியிட விரும்பவில்லை என்று ஓடிவிடக்கூடும். போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரின் உண்மையான சொத்து நிலவரங்களை மிகச் சாதாரண குடிமகன்களுக்கே நன்றாக தெரிகின்றது. ஆனால் தேர்தல் ஆணையத்திற்கு இந்த சான்றிதழ்கள் சரிபார்ப்பு மட்டும் காலங்காலமாக ஒரு சடங்காகவே இருக்கிறது.  

3.  எந்த தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்களோ அந்த தொகுதியில் உள்ள பொதுமக்கள், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், பொதுநல ஆர்வலர்கள் என்ற பொதுஅமைப்பின் மூலம் சம்மந்தப்பட்ட வேட்பாளர்களிடம் குறைந்த பட்சம் அந்த தொகுதி குறித்த அடிப்படை அறிவு இருக்கிறதா? அவர்கள் பதிவிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதை கூட்டப்படும் கூட்டத்தின் முன்பாக கேட்டு அதை தொலைக்காட்சியில் கட்டாயம் நேரலை வாயிலாக அணைவரும் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்தால் இந்த மக்கள் சேகவர்களின் அறிவு குறித்து அணைவருக்கும் புரியக்கூடும்.

4.  தேர்தல் பணியில் கட்டாயம் அரசு ஊழியர்களை பயன்படுத்தவே கூடாது.  இங்கே தான் வில்லங்கம் தொடங்குகின்றது.  பிடித்தவர், பிடிக்காதவர், நமக்கு ஏன் வம்பு என்ற மூன்று ஜாதிகள் இதில் இருப்பதால் விடை ஜீரோதான்.
படித்த இளைஞர்களை பயிற்சி கொடுத்து பயன்படுத்த முடியும். 


5. ஆயிரத்தெட்டு நொள்ளை காரணங்களை சுட்டிக் காட்டும் தேர்தல் ஆணையம் முதலில் அந்த தொகுதி வாக்காளர்கள் அணைவருக்கும் பூத் சிலிப் போய் சேர்ந்துள்ளதா என்பதை பல முறை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் போன்ற எளிதில் இனம் கண்டு கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் நபர்களை அந்தந்த துறையின் அழுத்தம் காரணமாக கட்டாயமாக வாக்குச் சாவடிக்கு வரவழைக்க வேண்டும்.  இது ஜனநாயக நாடு என்ற ஈரவெங்காய புடலங்காயை ஓரமாக காய வைத்து விட்டு வாக்களிப்பது என்பது கட்டாயத்தின் தொடக்கமாக இதை கொண்டு வந்தே ஆக வேண்டும்.காரணம் இந்திய தேர்தலின் முக்கிய வாக்காளர்கள் என்பவர்களே அன்றாடங்காய்ச்சிகளே ஆவார். 

6.  ஒவ்வொரு வாக்காள அடையாள அட்டையில் இருக்கும் எண் கொண்டு தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் இருப்பவர்கள் அவர் தொகுதிக்கு வாக்களிக்கும் ஆன் லைன் முறை கொண்டு வந்து விட்டால் வாக்கு சதவிகிதம் நிச்சயம் உயரும்.  ஊருக்கு போக சோம்பேறிபடுபவர்கள், பல காரணங்களால் பயந்து கொண்டு பின்வாங்குபவர்கள் என்று ஒரு பெரிய ஜனத்தொகையே இதற்குள் அடங்கி இருக்கிறது.

7. வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர் மாற்றம், புகைப்பட மாற்றம் போன்ற நமது இந்திய ஜனநாயக கேலிக்கூத்துக்களை தவிர்க்க ஓட்டளிப்பவர்கள் கட்டாயம் தங்களது கட்டைவிரல் அடையாளத்தை வாக்களிக்கும் எந்திரத்தில் ஓற்றிவிட்டு வரும்படி செய்து விட்டால், ஒருவரே பலரின் ஓட்டுக்களை போடுவதை தவிர்க்க உதவலாம். ஏற்கனவே ஒருவர் நமக்கான அடையாள அட்டையை உருவாக்க கடந்த இரண்டு வருடங்களாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். பாவம் அரசியல்வியாதிகளிடம் சிக்கி அவருக்கு என்னவித வியாதிகள் வந்துள்ளதோ?

8. வாக்குச் சாவடிக்குள் இருக்கும் பூத் ஏஜெண்டுகள் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தை முறியடிக்க வாக்குச் சாவடிக்குள் பொருத்தப்பட்ட புகைப்பட கருவிகள் மூலம் வாக்குப்பதிவு நடக்கும் மொத்த நேரத்தையும் நேரலை மூலம் அந்தந்த பகுதியில் வாழும் (குறைந்தபட்சம்) பொது மக்களும் கவனிக்கும்படி உருவாக்கினால் பலரும் பீதியடைந்து பின்வாங்கி விடக் விடக்கூடும்.  

9.  29 சதவிகிதம் வாங்கிய கட்சி எதிர்கட்சியாகவும் 32 சதவிகிதம் வாங்கியவர் ஆளுங்கட்சியாக அரசாங்கத்திற்கு வரும் கொடுமை இந்த இந்தியாவில் தான் உண்டு.  மீதியுள்ள சதவிகிதம்?  ஐயோ பாவம்?

10.  வெளிநாட்டில் வாழ்பவர்கள் அணைவரும் ஒவ்வொரு தேர்தல் மூலமும் தங்கள் ஜனநாயக கடமையை செய்ய கட்டாயம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு உரிய ஏற்பாடுகளை எளிதாகவே செய்ய முடியும். தபால் ஓட்டுக்களைப் போலவே முறைப்படுத்தப்பட்ட பல விசயங்களை ஒழுங்காக செயல்படுத்தினால் நிச்சயம் 80 சதவிகித வாக்கு எண்ணிக்கை இந்தியாவில் சாத்தியமே.  வாக்கு சதவிகிதம் அதிகமாகும் போது தான் உண்மையான நிலவரம் என்பது நமக்கு புரியக்கூடும்.  

இன்னும் நிறைய ஐடியாக்கள் என் கைவசம் உண்டு. நான் இப்போது சொன்னால் கலைஞர் காப்பி அடித்து விடுவார்.

நன்றி விஜயகாந்த்.

ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தல்ல.  அது கேடு கெட்டவர்கள் ஆட்சிக் வருவதால் உருவாக்கப்படும் சின்னபுள்ளத்தனமாக விளையாட்டுக்களை கண்டு நொந்து போய் நாளை ஏப்ரல் 13 2011 வாக்களிக்க மறந்து விடாதீர்கள். தலைவர் நல்லக்கண்ணு அய்யா சொன்னது போல்

 'எந்த அரசியல் அதிகாரம் ஒருவரை உயரத்திற்கு கொண்டு போய் நிறுத்தி  வைத்து அழகு பார்க்கின்றதோ அதே அதிகாரம் அவரை அதளபாதாளத்திற்கும் கொண்டு போய் தள்ளிவிடும். அது தான் அரசியல்..' 

பத்துவருடங்களுக்கு முன்பு துடிப்போடு செயல்பட்ட அரசியல்வியாதிகள் பலரும் இப்போது களத்தில் இல்லை. இப்போது நீங்க பார்த்துக் கொண்டிருக்கும் அஞ்சு கொல ஆறுமுகம் என்று சொல்லப்படும் வீரபாண்டியார் போல வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்பவர்கள் தான் இப்போது களத்தில் இருக்கிறார்கள்.  2016 தேர்தலில் இவர்களும் போக வேண்டிய இடத்திற்கு போய்ச் சேர்ந்து விடுவார்கள். கவலைப்படாதீர்கள்............


இன்றைய அமெரிக்கா பெற்றுள்ள வளர்ச்சி ஏறக்குறைய பல நிறைகுறைகளை தாண்டிய 400 வருட சரித்திர பின்ணணியைக் கொண்டது.  நாம் சுதந்திரம் பெற்று முழுமையாக 100 வருடங்கள் கூட தொடுவதற்கு இன்னும் நிறைய வருடங்கள் இருக்கிறது.  நம் இந்தியாவை, இந்திய மக்களை, இந்திய அரசியல்வாதிகளை மானாவாரியாக திட்டிப் தீர்ப்பதே தனது கொள்கையாக கொண்டிருந்த புண்ணியவான் வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது (இந்தியர்களுக்கு உண்மையான அதிகாரம் பற்றி புரிந்து கொள்ளவே 100 வருடங்கள் தேவைப்படும்) பலிக்கட்டுமே?

நாம் நல்ல விதைகளை விதைத்து விட்டு செல்வோம். பின்னால் வரும் நம் வாரிசுகளுக்கு உதவக்கூடும்.

Friday, April 08, 2011

அன்னா ஹசாரே -- ப்ளாக்மெயில் பேர்வழி

அன்னா ஹசாரே - 'இவர் ஒரு ப்ளாக்மெயில் பேர்வழி. '

இவ்வாறு திருவாய் மலர்ந்தருளியவர்கள் இரண்டு பேர்கள். அவர்களைப் பற்றி கடைசியாக பார்ககலாம். 

அதற்கு முன்னால் சில விசயங்கள்.

நம்மால் இன்றைய சூழ்நிலையில் எந்த அளவிற்கு நேர்மையாக வாழ முடியும்? அன்றாட வாழ்க்கையில் லஞ்சம் கொடுக்காமல் நம் தேவைகளை நிறைவேற்றிட முடியுமா? 

முடியாது என்று சொன்னால் நீங்க எதார்த்தவாதி. 

முடியும்..... ஆனால் என்று இழுத்துக் கொண்டு தொடர்ந்து வார்த்தையாக சொல்ல நினைத்தால் மாற்றத்திற்கான ஒரு ஏக்கம் உங்கள் ஆழ்மனதில் இருக்கிறது என்று அர்த்தம். 

இந்த முடியும் என்ற வார்த்தைக்கு இப்போது சற்று நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜீவன் தான் இந்த அனனா ஹசாரே. 72 வயது நிரம்பிய இந்த தாத்தாவை விட அதிகமான வயது உள்ள அரசியல்வாதிகள் இந்தியாவில் நிறைய உண்டு. பதவியை விட முடியாதவர்கள், வார்த்தை ஜாலத்தில் வாழ்க்கை கடத்திக் கொண்டிருப்பவர்கள், வாழ்க்கைக்குப் பிறகும் தேவைப்படும் இறவா புகழுக்காக ஆசைப்பட்டு மற்றவர்களை அவஸ்த்தை படுத்திக் கொண்டிருப்பவர்கள் என்ற இந்த பட்டியல் நீளும்.

தயை கூர்ந்து நம்முடைய அரசியல்வாதிகளை தலைவர்கள் என்று எவரும் அழைக்காதீர்கள். தலைவன் என்பவன் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாய் திகழ்பவர்கள். இப்போதுள்ளவர்கள் அரசியல்வியாதிகள். இந்த வியாதிகளுக்கு ஏராளமான ஆசைகள் உண்டு. காரணம் வியாதிகளுக்கு மட்டுமே ஓய்வு உறக்கம் இருக்காது. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று அதுபாட்டுக்கு பரவிக் கொண்டேயிருக்கும். கொள்ளுப் பேரனுக்கு தொடங்கி அதன் நீட்சியாக எள்ளுப் பேரன் வரைக்கும் தேவைப்படும் பணத்துக்காக அலையும் பிசாசுகள். கடைசியில் இறக்கும் தருவாயில் வாயில் போடும் எள்ளுகூட என்ன சுவை என்று தெரியாது முடிந்து போகும் கதைக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். தேவைப்படும் பணத்தை சம்பாரித்து வைத்தாலும் இவர்களின் ஆசைகள் அடங்குவதில்லை. இது ஒரு விதமான மனோவியாதி. 

நம்முடைய ஜனநாயக அமைப்பில் பரம்பரை பரம்பரையாக இயல்பாகவே பணக்காரர்களாக இருந்தவர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள்.  பத்து காசுக்கு லாட்டரி அடித்து அடுத்த வேளை சோற்றுக்கு சிங்கி அடித்தவர்களும் இன்று அரசியல் தலைகளாகத்தான் இருக்கிறார்கள்.  ஆனால் இந்த இருவரும் ஒரே முனையில் சேர்ந்து விடுகிறார்கள். அது தான் தன்னம்பிக்கை முனை. இந்த முனைக்கு மற்றொரு பெயரும் உண்டு. பணப்பேய் என்று பெயரிட்டும் அழைக்கலாம். 

அடுத்த நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் இறந்து எழவு விழுந்தால் கூட கவலையில்லை. ஒரு மாவட்டமே பஞ்சத்தில் மடிந்து மொத்த மக்களும் இறந்தால் கூட அது குறித்து அக்கறைபட வேண்டியதில்லை. நம் நாட்டு பணம் வெளிநாட்டில் கேட்பாராற்று கிடக்கும் லட்சம், கோடி பணத்தை கொண்டு வர இந்த கேடிகளுக்கு தோன்றாது.  ஒவ்வொரு வருடமும் அரசாங்க கஜானாவிற்கு வராத வராக்கடன்கள் குறித்து மூச்சு விட வேண்டியதில்லை. ஒவ்வொரு தாலி அறும் சப்தத்தில் இவர்களின் தலைமுறைகளின் வளர்ச்சி என்பது மேலேறிக் கொண்டிருக்கிறது.

ஆனால் நம்முடைய அரசியல்வாதிகளின் தேவைகளை விட அன்னா ஹாசரேவின் தனிப்பட்ட ஆசைகள் மிக மிகக் குறைவு. இவருடைய சிந்தனைகள் செயல்பாடுகள் அத்தனையும் இந்தியா என்ற பெரிய நாட்டின் நலன் குறித்தே இருப்பதால் இவரைச் சுற்றிய கூட்டமும் குறைவு. இவருக்கு வங்கி கணக்கு இல்லை. தங்க உருப்படியான வீடு கூட இல்லை.  தன்னுடைய உணவுத் தேவைக்கு கூட தன்னுடைய ஜோல்னா பையில் யாராவது போடும் காசு தான் உதவுகின்றது. முக்கியமாக குடும்பம் என்பது இல்லவே இல்லை. 

இவர் முன்னெடுக்கும் போராட்டங்களின் போது ஏன் பெரிசு உனக்கு தேவையில்லாத வேலை? என்று எவராவது நாலு சாத்து சாத்தினால் இறந்து போகக்கூட தயாராய் இருப்பதால் எவரும் இவர் அருகிலும் வந்து தொலைப்பதில்லை. ஒரு வேளை அடித்து தொலைத்தால் நம்முடைய மொத்த வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றித் தொலைத்து விடுவார்களோ என்று பயந்து கொண்டிருக்கும் அரசியல் தலைகள் அதிகம்.  

இது தான் அன்னா ஹாசரேவின் முக்கிய பலம்.  இந்த பலம் தான் படிப்படியாக வளர்ந்து இன்று இந்தியா முழுக்க இவர் பெயரை உச்சரிக்க வைத்துள்ளது. 

இவரின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக 1995 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த சிவசேனா பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் இரண்டு அமைச்சர்களையே நீக்க வேண்டியதாகி விட்டது.  2003 ஆம் ஆண்டு காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த நான்கு அமைச்சர்களுக்கு எதிராக ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டியதாகி விட்டது. இவரின் அஹிம்சை போராட்டங்களைப் பார்த்து வெறுத்துப் போன ஒவ்வொரு அரசியல்வாதிகளும் பல்வேறு விதமாக விமர்சனம் செய்ய உச்சகட்டமாக இன்றைய விவசாய அமைச்சரான சரத்பவார் பால்தாக்ரே கூட்டணி தான் இவரை ப்ளாக்மெயில் பேர்வழி என்று கூறினார்கள். 

பால் தாக்கரே பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இறுதிப்பால் ஊற்றியவர். இவரைப் பற்றி இங்கே அறிமுகமே தேவையில்லை. ஆனால் சரத்பவார் பற்றி அவஸ்யம் நாம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். 

இந்தியா என்ற நாடு பெற்ற பல பாவங்களில் ஒன்று இப்போது நடந்து கொண்டிருக்கும் மத்திய அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக இருக்கும் சரத்பவார். மகாராஷ்டிர மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்ட செத்துப் போன (விதர்பா) விவசாய குடும்பங்களின் ஆத்மா சரத்பவாரின் குடும்ப வாரிசுகளை இன்னும் எத்தனை தலைமுறைக்கு கொண்டு செல்லுமோ?  


இந்தியாவில் விளைந்த பஞ்சு பொதிகளை அப்படியே பொத்துனாப்ல லவட்டி கடல் கடக்க வைத்ததில் முக்கிய பங்கி வகித்தவர். ஏற்றுமதிக்கான காலக்கெடுவை வ்வொரு முறையும் நீடிக்க வைத்து லட்சக்கணக்கான குடும்பங்களை இன்று நடுத்தெருவில் நிறுத்திய பெருமை அன்னாரையேச் சேரும். காரணம் நாம் ஏற்றுமதி செய்தால் தான் அந்நியச் செலவாணி இந்தியாவிற்ககு கிடைக்கும். அதன் மூலம் தான் இந்த வியாதிகள் நிறைய களவாணித்தனம் செய்ய முடியும்.  

அன்னா ஹசாரே வலியுறுத்தும் உழலற்ற லஞ்சமற்ற அரசாங்கம் என்பதை நாம் ஒரு கனவாக எடுத்துக் கொண்டு விடலாம்.  ஆனால் இதற்கு முன்னால் சில கேள்விகள் நம் முன்னால் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த லஞ்சம், ஊழல் என்ற வார்த்தைகள் எங்கிருந்து தோன்றுகிறது?

வேற்றுமையில் ஒற்றுமை என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு எப்படி இந்தியாவை பார்த்துக் கொண்டு இருக்கிறோமோ அதைப்போல தகுதியில்லாதவர்கள் அத்தனை பேர்களும் தான் நமக்கு அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். இது தான் மூலகாரணம். நம்முடைய இந்தியாவில் பல ஆச்சரியங்கள் உண்டு.  இவற்றில் முக்கியமானது, எவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதே தெரியாமல் அவருக்கு வழங்கப்படும் அமைச்சர் பதவி. 

காங்கிரஸ் கட்சியும், மகாராஷ்டிராவில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைந்த கூட்டணியின் காரணமாக இதன் தலைவரான சரத்பவாருக்கு விவசாயத்துறை அமைச்சர் பதவி.. விவசாயத்தை அதிக அளவு நம்பி வாழும் இந்தியாவிற்கு மன்மோகன் சிங் கொடுத்த அன்புப் பரிசு தான் விவசாய அமைச்சரான சரத்பவார். இவர் இந்த பதவிக்கு வந்த பிறகு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் ஆத்மாக்களோ, இவரால் வெளிச்சந்தை ஏற்றுமதி மூலம் கொண்டு செல்லப்பட்ட பருத்தி மற்றும் ஏனைய பொருட்களோ நமக்கு முக்கியமில்லாமல் போகலாம்.  ஆனால் இவரைப் போன்றவர்களின் கோபம் தான் இந்த தாத்தாவிற்கு மறைமுக ஆதரவை பல்முனைகளில் இருந்து வந்து கொண்டிருக்கிறது.  

ஏன் இவர்கள் இருவருக்கும் இந்த அன்னா ஹசாரே மேல் இத்தனை கோபம்?  காரணம் இவர்கள் மட்டுமல்ல. அரசியல் தலைகள் ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பின்னாலும் ஹாசரே கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் அடிவயிற்றில் அமிலம் போல சுரக்க வைக்கின்றது.
  

அப்படி என்ன மாற்றத்தை எதிர்பார்க்கிறார்?

இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் மக்களாட்சி என்றால் அதற்கு மறைமுகமான அர்த்தம் ஒன்று உண்டு. ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது. அவர்கள் நினைப்பதை எளிதாக சாதித்துக் கொள்ள வேண்டும். எவரும் கேள்வி எதுவும் கேட்கவும் கூடாது.  கொள்ளுப் பேரன் வரைக்கும் இருக்கும் அத்தனை உருப்படிகளையும் ஒன்று சேர்த்து நிற்க வைத்து சேர்த்த பணத்தை தலையில் கொட்டி தீயை வைத்து கொளுத்தினால் கூட இன்னும் பணம் சேர்க்கும் ஆசை இவர்களை விட்டு போய்விடாது.  மக்களும் கொடுக்கும் இலவச எலும்புத்துண்டுகளை சுவைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

தற்போதை அரசியல் என்பது ஒரு பெரும் தொழிலுக்கான முதலீடு. சம்பாரித்தே ஆகவேண்டும். அது தான் இப்போது இந்திய அரசியல்வாதிகளால் செயலில் காட்டிக் கொண்டிருக்கும் விசயமாகும். எண்ண முடியாத அளவில் எல்லாத் துறையிலும் லஞ்சம். எல்லாவற்றிலும் ஊழல். 

ஊழல் துறைக்கு தலைமைப் பொறுப்புக்கு வருபவரே கேவலமான நபராக இருந்தால் மொத்த துறையும் எப்படியிருக்கும்?  அவரையும் நான் பரிந்துரை செய்தேன்.  அதன் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கின்றேன் என்று ஒரு பிரதமரே சொன்னால் மொத்த நிர்வாக லட்சணம் எப்படியிருக்கும்?

நம் இந்தியாவில் இப்போது பயன்பாட்டில் இருக்கும் இந்திய தண்டணைச் சட்டமும், ஊழல் தடுப்புச் சட்டமும் என்பது 1860 மற்றும் 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதிகாரவர்க்கத்தில் உள்ள ஊழல் கண்காணிப்புத் துறை மற்றும் இன்றைய சிபிஜ (மத்திய புலனாய்வு துறை) போன்றவர்களால் தான் முன்னெடுக்கப்படுகின்றது.  இவர்கள் மூலம் நாம் கேள்வி கேட்க முடியும். இவர்கள் பதில் தருவதற்குள் அல்லது தீர்ப்பு வருவதற்கள் நமக்கு ஆயுள் கெட்டியாக இருக்க வேண்டும். இல்லை இவர்கள் திருப்பி தரும் ஆப்பை வாங்கிக் கொள்ள நாம் தகுதியான நபராக இருக்க வேண்டும். 

இந்தியா பார்க்காத ஊழலும் இல்லை.  இதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் பெயர்கள் கூட பலருக்கும் மறந்து போயிருக்கும்.  


காரணம் பன்றிகள் வாழும் சாக்கடையில் இருக்கும் ஜீவன்களுக்கு சராசரி மனிதர்களை விட மணம் திடம் குணம் நிரம்ப இருப்பதால் எதுவும் தாக்குவதில்லை.  தாக்க தயாராய் இருப்பவர்களும் நீடீத்து இருப்பதும் இல்லை. ஏன் சாதிக் பாட்சா இறந்தார் என்றால் அதன் முனை திஹார் சிறைச்சாலை வரை போய் நிற்கும். எவராவது இத்தனை தூரம் தொடர்ந்து போய் கேள்வி கேட்க தெம்பு இருக்குமா?  

இது போன்ற ஊழல்களை தடுக்கத்தான் அன்னா ஹாசரே உருவாக்க நினைக்கும் லோக்பால் என்ற விதை உருவாகின்றது. நம்முடைய அரசியல்வியாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் மேல் கொண்டுவரப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனியாக ஒரு ஆணையம் தேவை.  அது எவரும் கட்டுப்படுத்த முடியாத அமைப்பாக இருக்க வேண்டும். 

பிரதமர், முதல் நீதிபதிகள் என்று எல்லோருமே இந்த அமைப்புக்கு கட்டுப்பட்டவர்கள்.  அடிப்படை குடிமகன்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்க கடமைப்பட்டது.  இதையெல்லாம் மீறி வழக்கு என்று வரும்பட்சத்தில் ஒரு வருடத்திற்கும் முடிக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களிடம் இருந்து மொத்த இழப்பீடுகளை பெற்று அரசாங்கத்திடம் சேர்க்க வேண்டும்.


எந்த அரசியல்வியாதிகளும் தங்களுக்கு சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வார்களா? 1968 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டம் என்பது தேவையில்லை என்பதாக தள்ளிப் போய் இன்று 2011 ல் வந்து நிற்கின்றது.  

இந்தியாவில் இப்போது தான் அன்னா ஹாசரே என்ற பெயர் இப்போது தான் மெதுவாக மேலேறி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இவரைப் பற்றி முழுமையாக தமிழ்நாட்டில் தெரியாமல் இருப்பது தமிழர்கள் செய்துள்ள மகா புண்ணியம்.  

காரணம் இது தேர்தல் சமயம். 

வாக்காளப் பெருமக்களுக்கு வேறு சில முக்கிய வேலைகள் இருக்கிறது.  எவர் பணம் தர வருவார்?  எப்போது வருவார்?  அல்லது தர வருபவர்களை தடுக்க நினைப்பவர்களை எப்படி தாக்கலாம்? போன்ற பல்வேறு எண்ணங்களில் குழப்பிப் போய் இருப்பவர்களிடம் போய் அன்னா ஹசாரே என்றால் அடிக்க வந்து விட மாட்டார்களா?  சச்சின் டெண்டுல்கர், கேப்டன் டோனி என்று உச்சரித்துக் கொண்டிருக்கும் இளையர்களுக்குத் தேவையில்லாத பெயர் அன்னா ஹாசரே. 

இன்றைய வாழ்க்கையின் சந்தோஷங்களை திகட்ட திகட்ட அனுபவிக்க விரும்புவர்களுக்கு எப்போதும் நாளைய குறித்த கவலை ஏதும் இருப்பதில்லை. சமூக அக்கறை என்றாலே சாக்கடையை தாண்டி வருவது போல கடந்து விந்து விடுவதால் இந்நாள் இனிய நாளே. எல்லோருக்கும் என்ன நடக்குமோ அதுவே நமக்கும் வந்து சேரும். நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு இளைய சமுதாயமும் ஒதுங்கிக் கொண்டேயிருக்க இவரைப் போன்ற 72 வயது இளைஞர் தான் இந்தியாவிற்கு தேவைப்படும் மாற்றத்திற்கு காரணகர்த்தாவாக இருக்கிறார்.


நம்முடைய தேவைகளும், ஆசைகளும் மிக குறைவாக இருந்தால் நம்மாலும் இந்த அன்னா ஹசாரே போலவே மாற்றத்தை உருவாக்க முடியும்.